தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 செப்டம்பர் 2020

கவிதை

Spread the love

முல்லைஅமுதன்

என் வீதி அழகானதாய் இருந்தது.
அழகிய மரங்கள்
குழந்தைகளுடன்
குதுகலமாய் கதை பேசி குதூகலிக்கும்.
பதிவாய் கட்டப்பட்ட மதில்கள்
இளைஞர்களின் சொர்க்கபூமி.
சத்தமாய் பேசியபடி
சந்தைக்குப்போகும்  மனிதர்கள்.
காற்றுப்போன மிதிவண்டியை
முகம் சுழித்தபடி உருட்டிச்செல்லும் சிறுமி..
அடுத்த வீடுகளில்
தண்ணீர் அள்ளச்செல்லும் பாக்கியக்கா.
வேலியில்
தொங்கும் பூவரசம் இலையைப்
பிடுங்கி மீன் வாங்கும் மாமிகள்.
தூரத்தே மெல்லியதாய் ஒலிக்கும்
வேலாயுதம் மாஸ்டரின்
சங்கீதக் குரல்கள்.
மிதிவண்டி பழகப்போய் விழுந்தெழும்பிய
சின்ன கையொழுங்கை..மாலையில்
தண்ணியில் பாடும் மாணிக்கசாத்திரியார்.
பரியாரி வளவில் களவாக
தேங்காய் எடுத்துச்செல்லும் பூரணம் மாமி..
சண்டியன் கட்டுக்குள்
புளியம்பழம்,நாவற்பழங்கள் கடத்திய
இளைய நாட்கள்…
யாரோ ஒருத்தியின் கண்பார்வை கிடைக்காத
சோகத்தில்
தண்ணியடித்து
விழுந்துகிடந்த நாட்களிலும்
இந்த
தெருக்கள் அமைதியாய்த்தான் இருந்தது.
அழகாகத்தான் இருந்தது..
இப்போது,
விசம் தடவப்பட்ட
குளதில் குளிக்கவேண்டிருக்கிறது.
மெல்லிய காற்றிலும்,
சூறாவளியெனினும்
அலைந்த மரங்களில்
குருவிச்சைகளையே  காணமுடிகிறது.
தெருக்கள் அமைதியாய் இருப்பதாகச்சொல்லமுடியவில்லை.
இரும்புக்கவசவாகனங்களுக்கிடையேயும்,
சுடத்தயாராய் அலையும் துப்பாக்கிகளுக்கிடையேயும்,
கஞ்சாவும்,காமம் களிக்கும்
நாட்களையே என் விடுமுறை கழிகிறது..
‘யார் தவறு? நண்பன் கேட்கிறான்.
என்னிடமும் பதில் இல்லை.
அடையாள அட்டையை பதுக்கிவிட்டு
கடவுச்சீட்டையே கட்டியபடி
என் தெருக்களைக் கடக்கிறேன்..
தெருவயிரவர் இருந்த இடத்தில்
அரசமரமும் புதிதாய் முளைத்திருந்தது.
இப்போது தெரு அமைதியாய்,
மௌனமாய்
இருப்பதாகவே எனக்குப்பட்டது.
என் தெருக்கள் அழகானவை…இப்போதும்.

Series Navigationகோவர்த்தமென்னும் கொற்றக் குடைநகுலனிடமிருந்து வந்த கடிதம்

Leave a Comment

Archives