செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 2 – திறல்

This entry is part 9 of 11 in the series 13 செப்டம்பர் 2020

 

 

சித்துராஜ் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி எட்டரை என்றது. பாரில் உட்கார்ந்திருந்தான்.சித்துராஜ்.

மனோகரனிடம் அவனைச் சந்திக்க வேண்டும் என்று அன்று காலையில் கேட்டான். இருவரும் சந்தித்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகியிருக்கும். மனோகரன் சித்துராஜுவுக்கு அறிமுகமானது அவனுடைய கம்பெனிக்கு சித்துராஜுவின் பாக்டரியில் தயாரான பொருட்களை  வாங்கிய போதுதான். அந்த நட்பு நீடித்ததால் வியாபாரம் தொடர்ந்ததா அல்லது வியாபாரத் தொடர்பால் நட்பு பலமடைந்ததா என்று சித்துராஜ் அவ்வப்போது நினைத்துக் கொள்வான். 

“ராத்திரி வீட்டுக்கு வாயேன்” என்றான் மனோகரன். அவன் சித்துராஜுவிடம் எதற்காகத் தன்னைப் பார்க்க விரும்புகிறான் என்று கேட்கவில்லை. 

“எத்தினி மணிக்கு?”

“ஒம்பதரை ஒம்பதே முக்காலுக்கு?”

“அவ்வளவு லேட்டாவா?”

மனோகரன் சித்துராஜுவைப் பார்த்துச் சிரித்தபடி “லண்டன்லேந்து டைரக்டர் வந்து ரெண்டு நாளா பிழிஞ்சி எடுத்திட்டான். நாளைக்கு காலேல திரும்பிப் போறான். சரி ரெண்டு நாள் உயிரை எடுத்தமேன்னு டிரிங்சுக்கு 

கூப்ட்ருக்கான். எட்டு மணிக்கி. அதனாலதான்” என்றான்.

மனோகரனும் கடந்த ஒரு வருஷம் பயிற்சி என்று லண்டனில் அவனது தலைமை அலுவலகத்தில் இருந்து விட்டு  வந்திருந்தான்.  

தொடர்ந்து ” அப்படியே நா வர பத்துப் பதினஞ்சு  நிமிஷம்  லேட் ஆனாலும் பிரமீயோட பேசிக்கிட்டிரு. நான் வந்துருவேன்” என்றான்.மனோகரன். சித்துராஜ் மனோகரன் வீட்டில் இல்லாத போது அங்கே போக விரும்பவில்லை. அதுவும் அவன் மனோகரனின்  மனைவியைச் சந்திக்க விரும்பவில்லை.

பார் சிப்பந்தி அவன் உட்கார்ந்த இடத்துக்கு வந்த போது சித்துராஜ் அவனிடம்  இன்னொரு லார்ஜ் பேக்பைப்பர் கொண்டு வரச் சொன்னான். இன்னும் அரை மணி நேரத்தை அவன் இங்குதான் கழித்தாக 

வேண்டுமா? பாரில் ஒரே இரைச்சலாக இருந்தது. அவனைப் போல அங்கு வந்திருப்பவர்களும் அவரவர் கவலைகளையும் மனக் குரல்களையும் பார் சத்தத்தில் அமுக்க முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள் போல அவனுக்குத் தோன்றினார்கள். சித்துராஜ் இப்போது ஆர்டர் செய்தது ஐந்தாவது பெக்கிற்கு. அவன் பாக்கெட்டில் இருக்கும் பணத்துக்கு ஐந்தாறு பெக்  பேக்பைப்பர்தான் அடிக்க முடியும். சென்ற வருஷம் இதே சமயம் அவன் அடித்த விஸ்கியின் ஒரு பெக் விலை மட்டும் இந்த ஐந்தாறு  பெக்குகளின் விலையை விட அதிகமிருந்தது. ஆனால் இந்த ஒரு வருஷத்தில் விஸ்கியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் கீழ்ப் படிக்கு வந்தாகி விட்டது. 

பணியாள்  கிளாசுடன் ஒரு தட்டில் வறுத்த காரக் கடலையும் கொண்டு வந்து வைத்தான். பசிக்கின்ற வயிற்றுக்கு இலவசமாகக் கடலை தரும் கனவான்கள் என்று சிரிப்பு வந்தது. நேற்று மதியம் பனிரெண்டு மணிக்கு வருகிறேன் என்று சொல்லியிருந்த வேளைக்கு பெஞ்சமின் வராமல் ஏமாற்றி விட்டான். பெஞ்சமின் ஒரு புரோக்கர். அவன் சித்துராஜிடம் வரும் போது மணி மூன்று இருக்கும். வரும் போதே வெறுங்கையை வீசிக் கொண்டு வந்தான். பாக்டரியில் இருந்த பதினைந்து மிஷின்களில் ஏற்கனவே மூன்றை விற்றுச் சாப்பிட்டாகி விட்டது. நாலாவது மிஷினையும் ஒரு விடாக்கண்டனான கடன்காரனின் துன்புறுத்தலைச்  சமாளிக்க அடி மாட்டு விலைக்கு விற்க வேண்டியிருந்தது. அதை  வாங்க ஒத்துக் கொண்ட பார்ட்டியை பெஞ்சமின் கூட்டிக் கொண்டு வரவில்லை. 

அந்தப் பார்ட்டியின் வயசான தாத்தா திடீரென இறந்து விட்டதால் பார்ட்டி வர இன்னும் சில நாள்கள் ஆகும் என்று பெஞ்சமின் சொன்னான். போகிற கிழவன் இரண்டு நாள் கழித்துப் போயிருக்கக் கூடாதா என்று கோபம் கோபமாய் வந்தது சித்துராஜுவுக்கு. 

சித்துராஜ் பெஞ்சமினிடம் “இத பார். எனக்குப் பணக் கஷ்டமின்னு உனக்கு நல்லாவே தெரியும். இப்படி இழுத்தடிக்

கிறதெல்லாம்  என்னிடம் வச்சுக்காத. என் கையில ஒரு பைசா இல்ல. ஓம் பார்ட்டி ஒரு மாசங் கழிச்சு கூட வருவான். இதெல்லாம் வேலைக்கு ஆவாது” என்றான்.

“இப்ப என்ன பண்ணணுங்கிற?” என்று பெஞ்சமின் அலுப்புடன் கேட்டான்.

“இன்னும் அரை மணி நேரத்தில ஒரு ஐயாயிரம் ரூபாயாவது நீ கொண்டு வந்து குடு. இல்லாட்டா இந்த வியாபாரம் முறிஞ்சுச்சுன்னு போயிகிட்டே இரு” என்றான்.

பெஞ்சமின் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தான். ‘முந்தின தினம் வரை எப்படியாவது விற்றுக் கொடு’ என்று கெஞ்சியவன் திடீரென்று இப்படிப் பேச என்ன காரணம்? அவன் சித்துராஜுவை உற்றுப் பார்த்தான். அவன் முகம் வாடியிருந்தது. கண்கள் இடுங்கிக் காணப்பட்டன. துக்கத்தின் வாசலில் நின்று கொண்டிருப்பவனுக்கு அடுத்தவன் மீதல்ல தன் மீதே கூட மரியாதை இருப்பதில்லை என்று பெஞ்சமினுக்குத் தோன்றிற்று. டெஸ்பரேஷன் !  பெஞ்சமின் அவனை விநோதமாகப் பார்த்து “நானே கமிஷன் ஏஜென்ட்டு. என் கிட்ட போய் பணம் கேக்கிறியே?” என்று சிரித்தான்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. உன் பார்ட்டிகிட்ட சொல்லி வாங்கிக் குடு. அஞ்சு மணிக்கு நீ வரலேன்னா அப்புறம் எப்பவும் வர வேணாம்” என்று நிர்தாட்சண்யமாகக் கூறினான். உள்ளூர ஒரு வித பயம் இருந்தாலும் சித்துராஜ் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. நாலே முக்காலுக்கு பெஞ்சமின் அவனிடம் வந்து மூவாயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டுச் சென்றான்.

அதிலிருந்துதான் இப்போது செலவு நடந்து கொண்டிருந்தது. ஐந்தாவது பெக்கை முடித்ததும் சித்துராஜ் பாரை விட்டு வெளியே வந்தான். இன்னும் மீதமிருக்கும் நேரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. அங்கிருந்து அவன் வீடு பக்கத்தில்தான். ஆனால் அங்கே சென்றால் வாசலில் இருக்கும் தெரு நாயும், கதவைத் திறந்தால்  எதிர்ப்படும் இரு சிறிய அறைகளும் அவனுக்கு  மௌனமாக வரவேற்பு தெரிவிப்பதை அவன் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எல்லா சந்தோஷங்களும் நன்மைகளும் அமுதா அவனையும் அந்த வீட்டையும் விட்டு விட்டுக் குழந்தையை எடுத்துக் கொண்டு சென்ற போது அவளுடன் போய் விட்டன. அது கூட பிரமீளாவின் சாபமாக இருக்குமோ என்று அவன் இந்த நாட்களில் நினைத்ததுண்டு.

மனோகரனின் வீட்டுக்கு அவன் போக விரும்பாததன் காரணம் பிரமீளாதான்.  கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவன் தங்கையின் சிநேகிதியாக பிரமீளா இருந்தாள்.  அடுத்த தெருவில் குடியிருந்த அவள் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருந்ததால்  இரு குடும்பத்திற்கும் இடையே நட்பு ஏற்பட்டது. 

அவனது தங்கையைத் தேடி வரும் பிரமீளா இருவருமாக ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அவன் வெளியிலிருந்து வருவான். அவன் தலையைப் பார்த்ததும் பிரமீளா எழுந்து நின்று விடுவாள். அவர்கள் பேச்சில் அவன் கலந்து கொள்ளும் போதும் அவள் நின்று கொண்டுதான் இருப்பாள். உட்காரச் சொல்லி உபசரித்தாலும் அவள் கேட்க மாட்டாள். முதலில் அவன் இதைக் கவனிக்கவில்லை. நாலைந்து சந்திப்புகளுக்குப் பிறகு அவன் அவள் இம்மாதிரி நடந்து கொள்வதைப் பார்த்து ஆச்சரியத்துக்கு உள்ளானான்.

“ஏய் செல்வி, உன் பிரெண்டு சுத்த கிறுக்கா இருக்கே? எதுக்கு இப்பிடி நான் இங்க வந்தா அவ உட்காராம எழுந்து நின்னுக்கிட்டே இருக்கா?” என்று ஒரு நாள் தங்கையுடன் பேசும் போது கேட்டான்.

“ஏதோ உனக்கும் மரியாதை கிடைக்குதேன்னு சந்தோஷப்படுவியா !” என்று செல்வி அவனைக் கேலி செய்தாள். “நான் எவ்வளவு சொல்லியும் கேக்க மாட்டேங்கிறா !”

அவனே ஒரு தடவை பிரமீளாவிடம் “நீ எதுக்கு நான் வந்தா போகிற வரைக்கும் நின்னுக்கிட்டே இருக்கே? சீக்கிரம் போய்த் தொலைடாங்கிறியா?” என்று கேட்டான்.  

அவள் வரும் சிரிப்பைத் தடுக்க முயன்று தோற்று விட்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள். பதில் எதுவும் கொடுக்காமல்.

அதற்குப் பிறகும் அவள் தான் செய்வதையே செய்து கொண்டிருந்தாள். அதற்காக அவனால் அவளைப்  பார்க்காமல் இருக்க முடியவில்லை. காலேஜில் படிக்கிறாள். நன்றாக டிரஸ் செய்து கொள்கிறாள். பேசும் போதும் புத்திசாலித்தனம் தலை காட்டுகிறது. ஆனால் இந்த நிற்கும் கட்டுப்பெட்டித்தனத்தின் தாத்பர்யம் மட்டும் அவனுக்குப் புரிபடவில்லை.

அவனுடைய வீட்டில் அவனுக்குப் பிரமீளாவைப் பார்க்கலாமா என்ற பேச்சு கூட இருந்தது. அவன் அப்போதுதான் சொந்த பிசினஸ் ஆரம்பித்திருந்தான்.செல்வியின் படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் இருந்தது. அப்போது கூடவே பிரமீளாவும் படிப்பை முடித்து விடுவாள். ஒரு நாள் வழியில் பிரமீளாவின் அம்மாவைப் சித்துராஜுவின் அம்மா பார்த்தாள். அப்போது பிரமீளாவைப் பற்றித் தங்கள் குடும்பத்தில் பேசிக் கொண்டதாய் அவளிடம் சொன்னதாக அவனுடைய அம்மா அவனிடம் சொன்னாள். அவன் எல்லாப் பிள்ளைகளையும் போல “கலியாணத்துக்கு இப்ப என்ன அவசரம்?” என்று அம்மாவிடம் கேட்டான்.

“இப்பிடி நீ சொன்னாலே அவசரம்னுதான் நினைக்கிறதா அர்த்தம்” என்று செல்வி சிரித்தாள். அவன் பொய்யாக அவளை அடிக்க வருவது போலக்  கையை உயர்த்தினான்.  

திடீரென்று ஒரு நாள் அவனுடைய பெரியப்பா வீட்டுக்கு வந்தார். அவரது நெருங்கிய சிநேகிதன் பெரிய பணக்காரன் என்றும் அவனுடைய பெண்ணுக்கு சித்துராஜுவைக் கொடுத்து விடலாம் என்றும் சொன்னார். நண்பனுக்கு ஒரே பெண் என்றும் அதனால் நண்பனின் சொத்து சித்துராஜுவின் வியாபாரத்தைப் பெருக்கவும் அவன் தொழிலில் முன்னேற்றமடையவும் உதவியாக இருக்கும் என்றார். அவர் அமுதாவின் போட்டோவைக் காட்டிய போது  அவள் அழகு எல்லோருக்கும் பிடித்துப் போயிற்று. 

இது நடந்து இரு வாரமிருக்கும். அவனை மந்திரி மாலில் பார்க்க வருகிறேன் என்று அவனது ஆடிட்டர் சொன்னதைக் கேட்டு அவன் அங்கு வந்து காத்திருந்தான். அப்போது ஆடிட்டர் போன் செய்து தான் வருவதற்கு இன்னும் அரைமணி ஆகும் என்று காத்திருக்கச் சொல்லி விட்டார். அதுவரைக்கும் பொழுதைக் கழிக்க சித்துராஜ் மந்திரி மால் எதிரே இருந்த பாஷ்யம் பார்க்கில் உட்காரச் சென்றான். அப்போது பிரமீளா எதிர்ப்பட்டாள். அங்கிருந்த கல் இருக்கை ஒன்றில்  உட்கார்ந்திருந்த அவள் அவனைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து நின்றாள். அவன் சிரித்தபடி அவளருகே சென்று “உட்கார்  உட்கார்” என்று சொல்லியபடி உட்கார்ந்து கொண்டான்.ஆனால் அவள் உட்காரவில்லை. 

“கொஞ்ச நாளா நீ எங்க வீட்டுப் பக்கம் வரலியே? இல்ல நான்தான் உன்னை மிஸ் பண்ணிட்டேனா?” என்று கேட்டான்.

அவள் அவனை உற்றுப் பார்த்தாள். 

“என்ன அப்படிப் பாக்கறே?” என்று கேட்டான்.

அவள் வாய்விட்டுச் சிரித்தாள். அவன் ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்தான்.

“இல்ல. பணம் எப்படியெல்லாம் மனுஷங்களை மாத்திடுதுன்னு நினைச்சேன்” என்றாள்.

“என்னது?”

“பணக்கார வீட்டுலேர்ந்து பொண்ணு குடுக்கிறேன்னு வந்திருக்காங்கன்னு செல்வி சொன்னா.”

“ஓ, அதுவா? அதெல்லாம் பெரியவங்க பாத்து செய்யிற விஷயமாச்சே?” என்றான் சித்துராஜ். சொன்ன மறு  வினாடியே காலில் மிதித்து உதறியது வாய்க்குள் விழுந்து விட்டது போல இருந்தது அவனுக்கு.

அவள் விடவில்லை.

“இன்னொரு வாட்டி என்னயப் பாத்து சொல்லுங்க. கொஞ்ச நாளைக்கு முன்னால வரைக்கும் எங்க வீட்டுல பொண்ணு எடுக்கலாம்னு உங்க வீட்டுல பேசிக்கலே?”

அவன் பதிலளிக்காது இருந்தான். 

“செல்வி சொன்னா. . உங்க கிட்ட கேட்டப்ப  நீங்களும் ஒத்துக்கிட்டதா.”

அவனுக்கு செல்வியின் மீது கோபம் ஏற்பட்டது.

“அழகு இருக்கு, பணம் இருக்குன்னு போறீங்களாம். எங்க இருந்தாலும் நல்லா இருங்க” என்றாள் அவள்.

“இத பாரு.முதல்ல கொஞ்ச நேரம் உக்காரு. நீயா எதையாவது நினைச்சுகிட்டு..” என்றான் இறைஞ்சும் குரலில்.

“சரி. அப்படீன்னா ஒரே வார்த்தைல பதில் சொல்லுங்க. வெக்கத்த விட்டு கேக்கறேன்.நீங்க என்னைக்  கலியாணம் செஞ்சுக்கிறீங்களா?”

நெஞ்சுக்கு நேராகக் கத்தியைச் செருகுவது போலிருந்தது அவனுக்கு. இவ்வளவுக்கும் அவள் குரலைச் சற்றும்  உயர்த்தாமல் மெல்லிய குரலில்தான் பேசினாள்.

அரை நிமிடம் மௌனத்தில் கழிந்திருக்கும். அவள் பார்க்கின் வாசலை நோக்கிச் சென்றாள். இமைக்கும் நேரத்தில் அவன் பார்வையிலிருந்து மறைந்து விட்டாள். பார்க்கில் இருந்த செடி கொடிகளுடன் சிறு மரங்களில் இருந்த குருவிகளும், வண்டுகளும், வண்ணாத்திப் பூச்சிகளும்  சேர்ந்து அவனைப் பார்த்து  ‘இப்பிடிச் செய்து விட்டாயே !” என்று கேட்டன….. 

                                                                                                      &&&&&   

வனது சிந்தனையைக் கலைத்து அவனது கைபேசி ஒலித்தது. சட்டைப் பையிலிருந்து எடுத்துப் பார்த்தான். மனோகரன்.

“சித்து, நீ எங்க இருக்கே?”

“எய்த் மெயின் பிள்ளையார் கோயில் கிட்ட” என்றான் சித்துராஜ்.

“சரி அப்ப நீ வைக்கிங்குக்கு வந்துர்றியா? டைரக்டர் சீக்கிரமா விட்டுட்டான். ஐம் ஆன் தி வே. சேஷாத்ரிபுரம் கிட்ட இருக்கேன். மந்திரி மால் கிட்ட ராட்சசக் கூட்டம் இல்லேன்னா பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்” என்றான். இவன் பதிலுக்குக் காத்திராமல் போனை அணைத்து  விட்டான். 

சித்துராஜ் பதினைந்தாம்  கிராஸை நோக்கி நடந்தான். பதினைந்துக்கும்  பதினேழுக்கும்  நடுவில் வைக்கிங் பாரும் ரெஸ்ட்டாரெண்டும் அடங்கிய கட்டிடம் இருக்கிறது. மனோகரன் இப்போது இரவுச் சாப்பாட்டை ஓட்டலில் வைத்து முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டானா? அதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான். அவன் வீட்டுக்குப் போக வேண்டியதில்லை என்று நிம்மதியுடன் பெருமூச்சு விட்டான் சித்துராஜ்

பதினாறாவது கிராஸ் திருப்பத்தில் ஒரு சைக்கிள் வண்டியில் அந்த நேரத்திலும் கீரைகளை வைத்து ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனது வண்டிக்குப் பக்கத்தில் ஒரு நாய் வாலை ஆட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தது எஜமானனின் நம்பிக்கைக்குத் துணையைப் போல். அவனுக்காவது ஒரு நாய் கூடவே  இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே நடந்தான் சித்துராஜ்.  

அவன் ஓட்டலை அடைந்து சில நிமிஷங்களுக்குள் மனோகரனின் கார் வந்து விட்டது. இருவரும் ஓட்டலின் உள்ளே சென்றார்கள். மனோகரனைச் சென்ற முறை பார்த்ததற்கு இப்போது நாலைந்து வயது குறைந்து வாழ்க்கையின் செழிப்பு தந்த உபசாரமாகக் காணப்பட்டான். 

அவர்களை ஒரு சர்வர் நெருங்கியதும் “என்ன சாப்பிடறே? விஸ்கியா? ஜின்னா?” என்று கேட்டான் மனோகரன். ஆர்டர் கொடுத்துவிட்டு மனோகரன் அவனிடம் “வீட்டில எப்படியிருக்காங்க? குழந்தைக்கு இப்ப ரெண்டு வயசு ஆயிருக்கும்ல?” என்று விசாரித்தான்.

சித்துராஜ் ஒரு நிமிடம் உண்மை நிலையைச் சொல்ல வேண்டுமா என்று நினைத்தான். ஆனால் ஒரு வேளை  அவனுடனான சந்திப்புகள் இனிமேல் அடிக்கடி நிகழ்ந்தால், இப்போது சொல்லப்படாத உண்மை மனோகரன் அவன் மீது கொண்டுள்ள நம்பகத் தன்மையைப் பாதிக்கும். அது தவிர மனோகரனுக்கு  அமுதாவைத் தெரியும். தொழில் முறையில் அமுதாவின் தந்தையும் அவனுக்குத் தெரிந்தவர்தான். 

சித்துராஜ் நண்பனின் மீது ஒரு களைப்பான புன்னகையை எறிந்தபடி “நான் இப்ப தனியாத்தான் இருக்கேன்” 

என்றான். 

“என்னது?”

“சுத்தி வளைக்காம சொல்லணும்னா, ஒரு சின்ன விஷயத்துக்கு கோவிச்சுக்கிட்டு அப்பா பொண்ணு அப்பாகிட்டயே போயிட்டா” என்றான் சித்துராஜ்.

அவன் பேசட்டும் என்று காத்திருப்பவன் போல மனோகரன் அவனைப் பார்த்தபடி இருந்தான்.

“நாலஞ்சு மாசத்துக்கு முன்னால நான் கொஞ்சம் ஜாஸ்தி ஸ்டாக் வாங்கினா எக்ஸ்ட்ரா டிஸ்கவுண்ட் தரேன்னு சொன்ன ஒரு சப்ளையர் கிட்ட பேசி வச்சிருந்தேன். காலேல பணத்தை எடுக்க பீரோவைத் திறந்தா அம்பதினாயிரம் குறையுது. அமுதாவைக் கூப்பிட்டுக் கேட்டா அவ அதுக்கு முத நாதான் ஒரு நெக்லஸ் வாங்க எடுத்துகிட்டேன்னு சொல்றா. எனக்கு படபடன்னு வந்திருச்சு. எதுக்கு என்  கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம இப்பிடி செஞ்சேன்னு சத்தம் போட்டேன். உங்க பணத்துல எங்க அப்பா பணம் எவ்வளவோ இருக்கே ! அதுலேந்துதானே எடுத்தேன்னு திமிரா பதில் சொன்னா. அவ ஒண்ணும் என்கிட்டே மன்னிப்பு கேக்க வேணாம். ஆனா  திமிரத்தான் என்னால பொறுத்துக்க முடியல. கை நீட்டிட்டேன். உடனே கொழந்தையையும் தூக்கிட்டு அவங்கப்பா வீட்டுக்கு போயிட்டா. அவரும் ஒரு வார்த்தை என்கிட்டே பேசல அதுக்கப்புறம்” என்றான் சித்துராஜ்.

“ஐ’ம்  ஸோ சாரி” என்றான் மனோகரன், மேஜை மீது இருந்த சித்துராஜின் கையைப் பற்றியபடி. “ஆனா நீ கை நீட்டிருக்க வேணாம். அதுவும் பெண்பிள்ளை கிட்ட.”

சித்துராஜ் தன்னைக் குற்றவாளி போல் உணர்ந்தான். அவனுக்கு மனோகரன் மேல் வெறுப்பு ஏற்பட்டது. இவன் யார் சொல்வதற்கு? அது உண்மையாக இருந்தாலும் கூட? ஆனால் அடக்கிக் கொண்டான்.

அவர்கள் ஆர்டர் செய்த விஸ்கி வந்தது. 

“நான் வேணும்னா அமுதா கிட்ட போய் பேசட்டுமா” என்று கேட்டான் மனோகரன். “யாராவது ஒருத்தர் சமாதானத்துக்கு உள்ளார நுழைஞ்சாதானே சரியாகும்?” என்றான். 

“உள்ளே யாரும் நுழையக் கூடாதுன்னு அவங்க எல்லாக் கதவையும் அடைச்சு வச்சாச்சு.”

“புரியலையே” என்றான் மனோகரன்.

“என் மாமனார் பணம் குடுத்து பிசினசுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருந்தாருல்ல. அதை நிறுத்திட்டாரு. போதாதுக்கு முன்னால குடுத்த பணத்தையெல்லாம் திரும்பக் கேக்கறாரு” என்று வறட்சியாகச் சிரித்தான். பின்னர் கிளாசில் இருந்த மிச்ச திரவத்தை ஒரே மூச்சில் குடித்தான்.

“அப்படீன்னா இப்ப பிசினசு?”

“ரொடேஷனுக்கு பணமில்ல. அதனால வர்ற ஆர்டர்லாம் பண்ணிக் குடுக்க முடியாம கேன்சல் ஆயிடுது. பாதி, கடனை அடைக்கவும் மீதி சாப்பாட்டு செலவுக்காகவும்னு இது வரைக்கும் மூணு மிஷின  வித்துட்டேன். நேத்திக்கு நாலாவது வித்திருக்கணும். வாங்கிக்கிறேன்னு சொன்னவன் கடசீல கால வாரிவுட்டான். கொஞ்ச நாள் கழிச்சுத்தான் அவன் கிட்டேர்ந்து பணம் வரும் ” 

“நீ என்னைய இதுக்காகத்தான் இன்னிக்கி பாக்கணும்னியா? எவ்வளவு வேணும்?” என்று கேட்டான் மனோகரன்.

தன்  வாயிலிருந்து கோரிக்கை வர வேண்டும் என்று நினைக்காமல் தன்னைப் புரிந்து கொண்டு பேசிய நண்பனை நன்றியுடன் பார்த்தான் சித்துராஜ். 

“ஒரு லகரம் வேணும். மிஷின் வித்த பணம் வந்ததும்  திருப்பிக் குடுத்திடறேன்” என்றான் சித்துராஜ்.

“சரி வா. போகலாம். திருப்பிக் குடுக்கறதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். இப்ப சாப்பிடறதுக்கு வீட்டுக்குத்தான் போறோம். காலேலயே நீ வரதப் பத்தி பிரமீட்ட சொல்லிட்டேன்” என்று எழுந்தான். மனோகரன். “வீட்டுல எவ்வளவு கேஷ் இருக்குன்னு பாக்கறேன். இல்லாட்டா நாளைக்கி மொத வேலையா பேங்க்லேந்து எடுத்துறலாம்.”

சித்துராஜ் நண்பனுடன் கிளம்பினான். ‘அவனும் பிரமீளாவும் ஒரே ஊர்க்காரர்கள், ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள்’ என்று மனோகரனுக்குத் தெரியும். அமுதாவுடன் மனோகரனின் வீட்டுக்கு முதல் தடவையாக விருந்துக்குப் போன போதுதான் பிரமீளா மனோகரனின் மனைவி என்று அதிர்ச்சியுடன் சித்துராஜ் அறிய நேர்ந்தது. 

அவள் வந்ததற்குப் பின்புதான் தன் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டதால் பிரமீளா மீது தனக்கு மிகுந்த பிரியம் மரியாதை எல்லாம் என்று இரு குடும்பங்களின் முதல் சந்திப்பிலேயே மனோகரன் கூறினான்.

அவர்கள் இருவரும் மனோகரனின் வீட்டை அடைந்ததும் சித்துராஜ் ஹாலிலிருந்த சோஃபாவில்  உட்கார்ந்தான். பிரமீளா அவனைப் பார்த்துப் புன்னகை செய்து விட்டு உள்ளே சென்றாள். மனோகரன் அவளைப் பின்பற்றினான். சித்துராஜ் சுற்றிலும் பார்வையைச் செலுத்தினான். செல்வம் அமைதியாகத் தன்னைப் பறையறிவிக்கும் தோற்றம் எங்கும் பரவியிருந்தது.பிரமீளா அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்தவள் என்று  மனோகரன் சொன்னது உண்மைதான். அவளும் செல்வச் செழிப்பில் மிதந்து இப்போது முன்பை விடவும் அழகாயிருக்கிறாள் என்று சித்துராஜ் நினைத்தான்.    

உள்ளே மனோகரனும் பிரமீளாவும் பேசுவது அவனுக்கு கேட்டது. 

“உள்ள பணம் எவ்வளவு இருக்கு பிரமீ?” என்றான் மனோகரன்.

“தெரியலையே. பாக்கணும்” என்றாள் அவள். தொடர்ந்து “எவ்வளவு வேணும்?” என்று கேட்டாள்.

“ஒரு லட்சம்.”

“என்னது ! அவ்வளவா?”  

 “பாவம் ரொம்ப ஒடிஞ்சு போயிருக்கான். பாத்தா பரிதாபமா இருக்கு. குடும்பத்துலயும் பெரிய பிரச்சினை போல.  ஒய்ஃபும் குழந்தையும் கூட இல்லியாம். அதப் பத்தி அப்புறஞ் சொல்றேன். படுத்திருக்கிற பிசினச எழுப்பி நிறுத்தணும். இப்போதைக்கு இங்க எவ்வளவு இருக்குதோ அதக் குடுக்கறேன்னேன். சரி, நா உள்ள சேஃப்ல எவ்வளவு இருக்குன்னு பாத்து எடுத்திட்டு வரேன். நீ ஹால்ல போயி பேசிக்கிட்டிரு. லெட் ஹிம் நாட் ஃபீல் அலோன்” என்றான் மனோகரன். 

சில வினாடிகளில் பிரமீளா நடந்து வரும் சப்தம் கேட்டது. 

வந்தவள் சித்துராஜுக்கு எதிரில் இருந்த சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். 

——————————————————

Series Navigationநாம்தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 11 – பத்து செட்டி
author

ஸிந்துஜா

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    திரு .சிந்துஜா எழுதிய திறல் கதை வாசித்தேன். காலில் மிதித்து உதறியது வாயில் விழுந்தது மாதிரி -என்பது கதைச் சூழலுக்கு பொருத்தமான உவமை . வாழ்த்துகள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *