செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்

This entry is part 11 of 16 in the series 20 செப்டம்பர் 2020

வனது அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த மீரா “சார், உங்களுக்கு போன் வந்திருக்கு, கொடுக்கட்டான்னு ரிசப்ஷன்லேந்து  அமலா கேக்கறாங்க” என்றாள்.

மீரா அவனுடைய பி.ஏ.  அவனிடம் கைபேசி தவிர அவனுக்கென்று தனிப்பட்ட தொலைபேசி இணைப்பும் இருக்கிறது. தனிப்பட்ட தொலைபேசியின் இன்டெர்காம் இணைப்பு மீராவிடம் உள்ளது. இந்த இரண்டையும் விட்டு விட்டு அலுவலகத்தின் பொது எண்ணில் அழைப்பது யார் என்று முத்துக்குமாருக்கு ஆச்சரியமாக இருந்தது.  

“யாராம்?” என்று அவளிடம் கேட்டான்.

“பெயர் சொல்லலையாம். மதுரேலேர்ந்து கால்னு அமலா சொன்னாங்க” என்றாள் மீரா.

முத்துக்குமார் திடுக்கிட்டான். ஒரு நொடியில் சமாளித்துக் கொண்டு ” சரி, கொடுக்கச் சொல்லு” என்றான்.

மதுரையில் இருந்தா? அங்கிருந்து வெட்டிக் கொண்டு வந்த இந்த எட்டு வருஷங்களில் அவன் யாருடைய மதுரைக் குரலையும் கேட்டதில்லை.  இப்போது இது யார்? ஒரு க்ஷணம்  வரப்போகிற அந்த அழைப்பைத் துண்டித்து விடலாமா என்று தோன்றிற்று. 

அப்போது டெலிபோன் மணி அடித்தது. எடுத்தான்.

“ஹலோ, முத்துக்குமார் ஹியர்.”

“குமாரு, நாந்தாம்பா கருணா பேசறேன். கியாபகம் இருக்கா? நல்லா இருக்கியா?  உன்னைப் பாத்து ஏழெட்டு வருசம்  

இருக்குமா?” என்று கேள்விகள் மறுமுனையிலிருந்து பொரிந்து கொண்டு வந்தன. 

கருணாகரன் மதுரையில் அவனுடைய எதிர் வீட்டுக்காரர். அவருக்கு அவனது அப்பாவின் வயது இருக்கும். குடும்ப சிநேகிதரும் கூட. அவர் கடைசியாகப் பேசியது அவர் பெண் அலமுவுக்கு நடக்கவிருந்த கல்யாணத்துக்கு அவனை அழைத்த போதுதான். ஆனால் அவன் அலமுவின் கலியாணத்துக்குச் செல்லவில்லை. அவர் எதற்கு இப்போது போன் செய்கிறார்?

“நான் சவுக்கியம் மாமா. நீங்க நல்லா இருக்கீங்களா? அத்தை எப்படி இருக்காங்க? அலமு  அவ ஹஸ்பன்ட்,  சௌக்கியமா? அலமுவுக்கு குழந்தை? என்று கேட்டான் முத்துக்குமார்.

“ஓ, நான் உன்கூட இவ்வளவு நாளா பேசவேயில்லியே. அலமுவை அவ புருஷன் தள்ளி வச்சிட்டான், அவன் கேட்ட வரதட்சிணை நகை பாக்கியை நாங்க கொடுக்கலேன்னு. அது  இப்போ குருகுலம் ஸ்கூல்ல டீச்சர வேல பாக்குது. எங்க கூடதான் இருக்கு.”

“ஐயய்யோ , சாரி மாமா. அவ எவ்வளவு நல்ல பொண்ணு. சே சே. கடவுளுக்குக் கொஞ்சம் கூட கண்ணு இல்லியே.” என்றான் முத்துக்குமார்.  ஆனால் உள்மனது எதற்கு இந்தப் போன் என்று அரற்றிய வண்ணமாக இருந்தது.

“ஆமாமா. நான் இப்ப எதுக்கு போன் செஞ்சேன்னா ….” அவர் குரல் தயங்கியது.

முத்துக்குமார் ஒன்றும் பதில் அளிக்காமல் மௌனம் சாதித்தான்.

அவர் “அலோ, அலோ” என்றார்.

“ம். சொல்லுங்க. நான் லைன்லதான் இருக்கேன்” என்றான் முத்துக்குமார்.

“இப்பிடி உன்னைக் கூப்பிட்டுப் பேசறது சரியான்னு எனக்கே ரெண்டு நாளா குழப்பம்தான் தம்பி. சரி, நேர போட்டு உடைச்சிடறேன். உங்கப்பாவுக்கு ரொம்ப உடம்பு முடியலே. ரொம்பன்னா ரொம்ப ரொம்ப” என்றார் கருணாகரன்.

முத்துக்குமார் இதை எதிர்பார்க்கவில்லை.

“ஏன், என்ன ஆச்சு?”

“பதினஞ்சு நாளா படுத்த படுக்கையா இருக்காரு, உங்கண்ணன், தங்கச்சி எல்லாரும் நாலு நாளா இங்கதான் இருக்காங்க” என்றார் கருணாகரன்.

ஆயிரத்தி அறுநூறு மைல் தள்ளி தில்லியில் இருப்பவனும், இரண்டாயிரம் மைல் தள்ளி கௌஹாத்தியில் இருப்பவளும் வந்து விட்டார்கள். முன்னூறு மைல் தொலைவு கூட இல்லாதவனுக்குச் செய்தி ஒன்றும் இல்லை.  இப்போது அதுவும் மூன்றாம் மனிதன் மூலம் வருகிறது. அவனுக்கு எரிச்சல் உண்டாயிற்று.

“குமாரு, நானும் எல்லாத்தையும் பாத்துட்டு இருந்தவன்தானே? பழசையெல்லாம் மறந்திட்டு நீ கிளம்புப்பா . நான் இப்ப உனக்கு போன் பண்ணது கூட உங்க வீட்டுல யாருக்கும் தெரியாது. ஆனா நீ கண்டிப்பா வந்துரு தம்பி.” அவர் குரல் உடைந்து கொண்டே வந்தது.

“சரி, நான் பாத்துக்கிறேன்” என்றான் முத்துக்குமார்.

“இன்னிக்கே கிளம்பிடறியா? நாளைக்குக் காலேல நான் பஸ் ஸ்டாண்டுக்கோ ஸ்டேஷனுக்கோ வந்துரட்டுமா?”என்று கேட்டார்.

அவரது ஆதங்கம் அவனை நெகிழ வைத்தது. “சே, சே, அதெல்லாம் எதுக்கு? நான் பாத்துக்கிறேன்” என்றான் அவன்.

“வரேன்னு நீ இன்னும் சொல்லலியே” என்றார் கருணாகரன். விடமாட்டார் போலிருக்கிறதே என்று சற்று எரிச்சலுடன் நினைத்தான்.  அவனுடைய சொந்தத் தந்தைக்கும் அண்ணனுக்கும் தங்கைக்கும் இல்லாத ஓட்டுதல் இந்த மூன்றாம் மனிதனிடமிருந்து வருகிறதே என்று அவனுக்கு வெட்கமாகவும் அதனாலேயே கோபமாகவும் இருந்தது.

“வரேன், வரேன். ஆனாலும் மாமா நீங்க இவ்வளவு சிரமம் எடுத்துட்டதுக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியலே” என்றான்.

“எதுக்கு எனக்கு நன்னி கின்னி எல்லாம்? ஆளாளாய் அவ்வளவு வருஷம் ஒரு குடும்பமா நாமெல்லாம் பழகிட்டு… என்னமோ விஷக் கண்ணு பட்டு உங்க குடும்பத்துக்குள்ள எல்லாரையும் பிரிச்சி வச்சிருச்சு. நான் போனைக் கீழ வச்சிடட்டா? ஆனா எதுக்கும்  நீ உன்னோட மொபைல் நம்பரை என் கிட்டக்  கொடுத்துரு” என்றார் அவர். அவன் சொன்னான். அவர் போனைக் கீழே வைத்து விட்டு  அரை நிமிஷத்தில் அவரது கைபேசியிலிருந்து அவனது கைபேசிக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்து விட்டார்.

முத்துக்குமார் அயர்ச்சியுடன் நாற்காலியில் சாய்ந்து கொண்டான். மனம் ஒரு கட்டுக்குள் அடங்க மறுத்த காளை போல் சிலிர்த்து எழுந்து உறுமிற்று.  எட்டு வருஷங்கள் !  அவனது தந்தை நடமாட்டத்துடன் இருந்த நாட்களில் கொண்ட மனக்கசப்பு படுத்த படுக்கையாக ஆன  பின்னும் மாறவில்லை என்பது எதைக் குறிக்கிறது?  

கருணா மாமா என்ன சொன்னார்? ‘உங்க வீட்டுக்குத் தெரியாமத்தான் போன் பண்ணுறேன்.’ அவ்வளவு வெறுப்பா? தொலைத்துத் தலை முழுகி விட்டார்களா? இந்த அண்ணனுக்கும் தங்கைக்கும் என்ன கொழுப்பு இருந்தால் அவனை வரச் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் கூட இல்லாமல் இருக்க முடியும்? அவர்கள் மனதில் என்ன மாதிரியான எண்ணம் ஓடுகின்றது? ஆனால் அவர்கள் அப்பாவின் கண்மணிகள் ஆயிற்றே?

முத்துக்குமார் கைக்கடிகாரத்தை நோக்கினான். ஆறு மணி. இரவு நேர ஊர்திகளில் அல்லல்பட்டுச் செல்வதை விட காரை எடுத்துக் கொண்டு போய் விடுவது உசிதம் என்று தோன்றிற்று.  அவன் மீராவை அழைத்தான்.

“மீரா, நான் அவசரமா ஊருக்குப் போகணும். எங்கப்பாவுக்கு ரொம்ப உடம்புக்கு முடியாம இருக்காம். கார்லேயே போயிடலாம்னு பாக்கறேன். டிரைவரைக் கூப்பிட்டு ,பெட்ரோல் போட்டுட்டு வரச் சொல்லு ” என்றான்.

“ஒரு வாரமா காய்ச்சல்னு படுத்திருந்திட்டு இன்னிக்குதானே ஆபீசுக்கே வந்தீங்க?  இந்த ராத்திரிலே அவ்வளவு தூரம் கார்ல போக முடியுமா?” என்று கேட்டாள் மீரா.

“வேற வழி? பெண்டிங்கா இருக்கற ஃபைல்களைப் பாத்துட்டுக் கிளம்பறேன்” என்றான். மேஜை மீது வண்ணான் துணிகள் போலக் கோப்புகள் கட்டப்பட்டுக் கிடந்தன. அரசாங்க அலுவலர்கள் கழுதையாகி விட்டார்கள் என்பது உண்மையாகி விட்டது. அவன் வேலைகளை முடித்து விட்டுக் கிளம்பும் போது ஏழு மணி. 

டிரைவருடன் காரில் செல்கையில் “சேகர்,  என்னை வீட்டில் டிராப் பண்ணினதுக்கு அப்புறம்  நீ உன் வீட்டுக்குப் போயி சொல்லிட்டு நாலஞ்சு நாளுக்கு வேணுங்கிற டிரஸ் எடுத்துட்டு எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ வந்திரு.  நீ வந்ததும் நாம கிளம்ப வேண்டியதுதான்” என்றான்.

முத்துக்குமார் வீட்டை அடைந்து தன்னறைக்குச் சென்றான். துணிகளை மற்றும் தினப்படித் தேவைகளை ஒரு சூட் கேசுக்குள் திணித்தான். அவன் வீட்டுக்கு வந்ததும் இன்முகமாய்ப் பேச ஒரு ஆள் கிடையாது. அம்மா உயிருடன் இருந்திருந்தால் இந்த மாதிரி தன்னைத் தன்னந்தனியனாக இருக்க விட்டிருக்க மாட்டாள். அவள் சென்ற பின் ஒரு மாதத்துக்குளேயே  அவன் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டான். எல்லாம் அப்பாவினால்தான். அவனுக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம். ‘தான் சொல்வது எதையும் அவன் மதித்ததில்லை’ என்று அவர் கட்சி கட்டிக் கொண்டு அலைவார். அவர் சொன்னதைச் செய்ய அவனுக்கு மனம் இடம் தராது. அவர் அவன் மேல், அவனது இஷ்டங்கள் மேல் ஆட்சி செய்கிறார் என்றே அவன் அவர் சொல்லுவதைக் காது கொடுத்துக் கேட்க மாட்டான்…

சேகர் திரும்பி வந்த போது மணி எட்டரை. அதற்குள் முத்துக்குமார் ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்து சங்கம் ரெஸ்டாரன்டிலிருந்து வந்திருந்த இரவுச் சாப்பாட்டை முடித்திருந்தான். இருவரும் கிளம்பினார்கள்.

“”காலேல மூணு  மணிக்குப்  போயிருவமா?” என்று முத்து கேட்டான்.

“வழியிலே ஒண்ணும் பிரச்சினை இல்லேன்னா போயிடலாம் சார்” என்றான் சேகர்.

அவன் சொன்ன முகூர்த்தமோ என்னவோ ஓசூர் செக்போஸ்ட்டைத் தாண்டி பாலம் ஏறிச் சற்றுத் தூரம் போனதும் காரை நிறுத்த வேண்டியதாகி விட்டது.முன்னால்  கண்ணுக்கு எட்டிய தூரம் சிவப்பும் மஞ்சளுமாக வண்டிகளின் பின்புற  விளக்குகள் மின்னின.  சேகர் என்னவென்று விசாரிக்கக் கீழே இறங்கி முன்னே சென்றான். பத்து நிமிஷம் கழித்து அவன் திரும்பி வந்தான்.

“பாலத்துக்கு  அந்தாண்டைக் கோடிக்குக் கொஞ்சம் முன்னால ஒரு லாரியும் காரும் மோதி ஆக்சிடென்ட்டாம். முழு ரோடையும் அடச்சுகிட்டு ரெண்டு வண்டியும் படுத்துக் கிடக்குன்னு சொல்றாங்க. அரை மணி ஒரு மணியாவது ஆகும் போல, ரோடு கிளீயர் ஆவுறதுக்கு” என்றான் சேகர்.

“அப்ப நாளைக்கு காலேல வரைக்கும் கார்லதான் குடித்தனமா?” என்று கேட்டபடி முத்துக்குமார் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். சேகர் சற்று முன்னால் நின்றிருந்த ஒரு கூட்டத்தோடு போய் நின்று கொண்டான்.

முத்துக்குமார் தன் சீட்டைப் பின்னால் தள்ளி விட்டுக் காலை நீட்டிக் கொண்டான். காய்ச்சலிலிருந்து மீண்ட  உடம்பு சற்றுத் தளர்வைத்தான் உடல் மீது பதிய விட்டிருக்கிறது. அப்பாவின் உடல் நிலை இப்போது எப்படி இருக்கிறதோ என்ற எண்ணம் சட்டென்று எழுந்தது. இந்த எட்டு வருஷங்களில் அவன் தானாகவே அவரைப் பற்றி எண்ணிப் பார்ப்பது இதுதான் முதல் தடவை. அவ்வப்போது  அவரைப் பற்றிப் பிறர் அவனிடம் பேசத் தொடங்கி, தவறை உணர்ந்து விட்டவர்கள் போல உடனே பேச்சின் திசையை மாற்றி விடுபவர்களாய்த்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது. 

அவர் அவனை சாதாரணப் பள்ளியில்தான் படிக்க வைத்தார்.  அவனுக்குப் பின் பிறந்த தங்கையை ஆங்கிலம் கற்பிக்கும் கான்வென்ட்டில் சேர்த்தார். அந்த வருடங்களின் இடைவெளிக்குள் உலகமே தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாறி விட்டது போன்ற பிரமையை எழுப்பினார். அதனால் அம்மா முத்துக்குமாரையும் கான்வென்டில் சேர்க்கச் சொன்னாள்.

“சே, சே. இப்ப நடுவுல போயி இங்கிலீஷிலே ஆரம்பிடான்னா தடுமாறிடுவான். அவன் இருக்கற இடத்திலேயே இருக்கட்டும்” என்றார்.

“இவன மாதிரிதான மாணிக்கமும். இவன் கூடப் படிச்சுக்கிட்டு இருந்தவன்தானே இப்ப கான்வென்டுக்கு போயிட்டான்?” என்றாள் அம்மா 

அவர் கோபத்துடன் “ஒண்ணும் சரியாத் தெரிஞ்சுக்காம  உளறாதே. அந்த மாணிக்கம் பய ரொம்ப சூட்டிகை. போதாக் குறைக்கு பிள்ளை படிக்கிறதுக்கு அவன்  அப்பன் ட்யூஷன் வேற வச்சிருக்கான்.அதெல்லாம் எனக்குக் கட்டுப்படியாகுமா?” என்றார்.

ஆனால் முத்துக்குமார் பள்ளி இறுதிப் பரிட்சையில் பள்ளியிலேயே முதல்வனாக வந்த போது, மாணிக்கம் அவனது பள்ளியில் சாதாரண வகுப்பில் தேர்வு பெற்றிருந்தான். அதை அம்மா சுட்டிக் காட்டிய போது “இவனும் அப்பிடிப் போயி அங்க கீழே விழுந்து கிடக்க வேணாம்னுதான் நான் அனுப்பலே” என்று பிளேட்டை மாற்றி விட்டார். 

அவனுக்கும் அவர் மீது இருந்த கோபத்தைக் காட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவன் என்ஜினீயர் ஆக வேண்டும் என்று அவர் அவனைப்  பி.யூ.சி.யில் சயன்ஸ் குரூப் எடுக்கச் சொன்னார். . ஆனால் அவன் ஆர்ட்ஸ் குரூப்பில் போய்ச் சேர்ந்தான். காலேஜுக்குப் போக சைக்கிள் வேண்டும் என்று அவன் கேட்ட போது பஸ் பாஸ் வாங்கினார். அவன் அதை உபயோகப்படுத்தாமல் தினமும் கல்லூரிக்கு நடந்து சென்றான்.

“இவன் நான் சொல்ற எதையும் கேக்கக்  கூடாதுன்னு வச்சிருக்கான். எப்படியாவது ஒழிஞ்சு தொலையட்டும்” என்று அம்மாவிடம் கத்தினார். ஆனாலும் அவனுக்கு சைக்கிள் வாங்கித் தரவில்லை.

“அவருக்கு எம் மேல ஆசை கிடையாது. அண்ணனும் தங்கச்சியுந்தான் அவருக்கு செல்லம்” என்று முத்துக்குமார் ஒரு நாள் அம்மாவிடம் சொன்னான்.

“நீ இப்பிடிச்  சொல்றே. அதுக  ரெண்டும் வந்து உனக்கு முத்துதான் ரொம்ப வேண்டியவன்னு என்னைக் கத்துதுங்க” என்று அம்மா சிரித்தாள். அந்த சிரிப்பில் இருந்த கனிவு அவனை மேலே எதுவும் பேசவொட்டாமல் அடித்து விட்டது.

“அது அப்பா அவங்களுக்கு சொல்லிக் கொடுத்து அதை  ரெண்டு பேரும் உன்கிட்ட வந்து கக்கிருப்பாங்க” என்று முத்துக்குமாரும் சிரித்தான்.

ஆனால் விளையாட்டாகச் சொல்ல ஆரம்பித்தது உறுதியாக அது நம்பும் எண்ணமாக மாறிவிட்டது என்பதுதான் உண்மை. முத்துக்குமார் விரும்பும் ஒரு பொருளை அல்லது செயலை அவர் மறுக்கும் போது ‘சின்னப் பையன்தானே எடுத்துக்கட்டுமே’ என்றோ  ‘செஞ்சிட்டுப் போகட்டுமே” என்றோ அம்மா வந்து நின்றால் “நீதான் அவனைக் கெடுத்து வச்சிருக்கே. ரெண்டு பேரும் என்ன வேணும்னாலும் செய்யுங்க.  உம் பாடு, உம் பிள்ள  பாடு.  யாரு கண்டா? ரெண்டு பேரும் பேசி வச்சிகிட்டுதான் சும்மா என் கிட்ட பார்மாலிட்டிக்கு வந்து நிக்கிறீங்களோ என்னவோ? ” என்று அலுத்துக் கொள்வார். என்றாவது தன்னைத் தோளில்  தூக்கிக் கொண்டு வளர்த்தவராக அவர் இருந்திருக்கிறாரா என்று முத்துக்குமார் நினைத்தான். 

அவருக்கு அவன் மீது முதலில் வெறுப்பு ஏற்பட்டதா அல்லது அவர் மீது அவனுக்குப் பிடித்தம் இல்லாமல் போய் விட்டதா என்று பலமுறை யோசித்திருக்கிறான். அவன் பிறந்த ஒரு மாதத்தில் அவருக்குத் திடீரென்று வேலை போய் விட்டது. அவன் துரதிர்ஷ்டம் பிடித்தவன் என்று அவர் நினைத்து விட்டாரா? ஆனால்  சில மாதங்கள் கழித்துப் புதிய வேலையில் சேர்ந்து விட்டார்.   

அவர் அவன் மீது தன்னைச் செலுத்திக் கொண்டு வந்ததுதான் அவனுக்குப் பிடிக்காமல் போய் விட்டது என்று முத்துக்குமார் நினைத்தான். அவனுடைய அண்ணன் அவரைத் தேவனாக வழிபட்டான். அனு குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை என்று சீராட்டப்பட்டதில் அவள் அவர் வார்த்தைகளின் நிழல் போலக் கூடவே நடந்து சென்றாள். அவர்கள் இருவரையும் போல அவன் இல்லை என்பதில் அவருக்கு ஏமாற்றம்  உண்டாகி இருக்க வேண்டும்……

..                                           * * *

கார்க் கதவு திறக்கும் சத்தம் கேட்டு முத்துக்குமார் நினைவுகளிலிருந்து மீண்டான். சேகர் வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டான். முன்னால் கார்கள் மெல்ல ஊர்வதை முத்துக்குமார் பார்த்தான். கடிகாரத்தைப் பார்த்த போது ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வழி அடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. 

“இனிமே ஒவ்வொரு  டோல் கேட்லயும் ஜாஸ்தி நேரம் நின்னு நின்னுதான் போகணும்” என்றான் சேகர். வண்டியைக் கிளப்பியபடி    காற்று வரட்டும் என்று ஏ.சியை அணைக்கச் சொல்லி விட்டு முத்துக்குமார் ஜன்னலைத் திறந்தான். அவனைக் கட்டிக் கொள்ள விரும்புவது போல வேகத்துடன் காற்று உள்ளே புகுந்தது. இரவின் பனி கலந்திருந்த காற்று சில்லென்

றிருந்தது. விரையும் வண்டிக்கு எதிரே வந்த மரங்களும் வீடுகளும் அவனைப் பார்த்து விட்டு விடை பெற்றுச் செல்வது போல் மறைந்தன. தூரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எரிந்து கொண்டிருந்த சாலை விளக்குகள் மனதில் புரியாத ஏக்கத்தை எழுப்புவன போல முத்துக்குமாருக்குத் தோன்றியது. தனிமையின் பிடியில் இறுகியபடியே கடமையைச் செய்து நிற்கும் அவைகளைப் போலத்தான் அவனும் ஆகிவிட்டானோ?  எப்போதையும் விட இன்று இந்த நேரம் மனதில் உருவாக்கும் உணர்ச்சிகளை அவன் ஆச்சரியத்துடன் உணர்ந்தான். அப்பாவின் சரியும் உடல்நிலை அவனது உள்மனதில் அவனுக்கே தெரியாது ஊன்றியிருக்கும் பாச வேர்களைத் தொட்டுப் பார்க்க முயலுகிறதா?

முத்துக்குமார் பின்சீட்டுக்குப் போய் வாகாகச் சாய்ந்து படுத்துக் கொண்டான். கண்களை மூடி ஓய்வெடுக்க நினைத்தாலும் பழம் நினைவுகள் அவனைத் தூங்க விடவில்லை.  

முத்துக்குமார் கல்லூரிப் படிப்பை முடித்ததும் மேலே சட்டம் படிக்க வேண்டும் என்றான்.

“வேலைக்கிப் போடா நீ. மேலே படிக்க வைக்க யாரு கிட்ட காசு இருக்கு? பெரியவனுக்கு வாங்கின படிப்புக் கடனே இன்னும் தலை மேல கிடக்கு. இப்ப இந்த பொம்பளைப் பிள்ளையையும் கட்டிக் குடுக்கணும். என்கிட்டே பணம் எங்க இருக்கு?” என்று முகத்தில் அடித்தாற் போலச் சொல்லி விட்டார் அப்பா.

தொடர்ந்து “அன்னிக்கே சொன்னேன் இன்ஜினியருக்குப் படிடான்னு. இப்ப ஒவ்வொருத்தனும் சாப்டுவேர் கம்பனில வேலைன்னு எப்பிடிச் சம்பாதிக்கிறான்?. மாசத்துல ரெண்டு தடவ அமெரிக்க போறான். நீ லாயருக்குப் படிச்சிட்டு கோர்ட்டு வாசல்ல போயி கறுப்பு கவுனைப் போட்டுக்கிட்டு பீசுன்னு நானூறும் ஐநூறும் வாங்கறதுக்குதான் லாயக்குன்னு நினைச்சேல்ல. போ, போயி சாதிச்சுக்க” என்றார். 

அவர் தன் கருத்தை அவனிடம் இங்கிதமாகச் சொல்லியிருக்க வேண்டும் என்று முத்துக்குமார் நினைத்தான். குடும்ப பாரத்தைத் தாங்குவதற்குத் தானும் உதவ வேண்டும் என்பதில் அவன் பின் வாங்க விரும்பவில்லை. ஆனால் முதல் பையனுக்கு நல்ல படிப்பையும் பெண்ணுக்கு நல்ல இடத்தில் வாழ்க்கையையும்  அமைத்துக் கொடுக்கத் திட்டமிடும் அவர் அவனிடம் வரும் போது கையைச் சுருக்கிக் கொள்வதையும் அடாவடி வார்த்தைகளை வாயில் அடைத்துக் கொண்டு துப்புவதையும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

அவன் மனதைச் சமநிலையில் வைத்துக் கொள்ள அம்மாதான் காரணமாக இருந்தாள். வீட்டில் மட்டுமில்லை, அவன் மேல் படிப்பு படிக்கும் போது அவனுக்கு ஏற்பட்ட பொருளாதாரத் தடங்கல்களை அவள்தான் சரியாகப் புரிந்து கொண்டு அவனுக்கு உதவ முன் வந்தாள். பணம் வைத்திருந்த வீட்டின் இரண்டு ஆண்களும்   உதவிக் கரம் நீட்டுவதற்குப் பதிலாக முனகிக் கொண்டிருந்த போது தனது நகைகளைக் கழற்றிக் கொடுத்தாள்.   

அம்மா அவனைத் தன் சிநேகிதன் போல நடத்தியதால்தான் ஒரு நாள் அவன் தன் மனத்தைத் திறந்து அலமுவைப் பற்றிக் கூறினான். 

“இது என்னடா புதுக் கதையா இருக்கு?” என்று அம்மா திகைத்தாள். அவள் கோபப்படாதது அவனுக்கு ஆச்வாசத்தை அளித்தது.

“எவ்வளவு நாளா நடக்குது?”

அவன் தயங்கியவாறே “ஸ்கூல்ல படிக்கும் போதே” என்றான்.

“அடேயப்பா!  அந்த அலமுவைப் பாத்தா சின்னக் கிளியாட்டாம் அசைஞ்சிகிட்டு ஒண்ணுமே தெரியாத மூஞ்சியை வச்சிக்கிட்டுல்ல இருக்கா.  எந்த புத்துல எந்தப் பாம்பு இருக்குமோன்னு தெரியாமலா சொன்னாங்க? ரெண்டு பேரும் கவனம் சிதறாம படிச்சுக்கிட்டு, இந்த லவ்வையும் பண்ணிக்கிட்டு..” என்று அவள் சிரித்தாள். “லவ்வுன்னு சொல்லுறப்பவே எனக்கு சிரிப்பா வருது” என்று சொல்லி மறுபடியும் சிரித்தாள்.

முத்துக்குமாரும் புன்னகை செய்தான்.

“இந்த சினிமால காமிக்கிற மாதிரி, புஸ்தகத்துல கதைல வர்ற மாதிரி எல்லாம் நீங்க ரெண்டு பேரும்  அங்க இங்க போயி அலைஞ்சி திரிஞ்சி மத்தவங்க என்கிட்டே வந்து இவங்கள அங்க பார்த்தேன் ஜோடியான்னு ஒரு ஆளு ஒரு பொழுது வந்து சொல்லலியே  ரெண்டு பேரும் மகா அழுத்தம் பிடிச்ச சனியங்களா  இருந்திருக்கீங்க….”

அம்மாவின் குரலில் பெருமை தெரிகிறதா என்று முத்துக்குமார் தேடினான். 

“சரி படிப்பை முதல்ல முடி. அடுத்தாப்ல ஆக வேண்டிய காரியங்களைப் பாக்கலாம்” என்று எழுந்தவள், மறுபடியும் அவனிடம் “இப்போதைக்கு இது நம்ம கிட்ட மட்டும் இருக்கட்டும்” என்றாள் .

அவனுக்கு சட்டம் படித்த கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்புக்கான நேர்காணலில் அவன் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலையும் உடனடியாகக் கிடைத்து விட்டது. வேலைக்குச் சேர்ந்த இரண்டு மாதம் கழித்து அம்மாவிற்கு சிறுநீரகத்தில் பிரச்சினை என்று தெரிய வந்தது. ஆனால் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு முன்பே மரணம் வந்து அவளைத் தழுவியது.

அம்மா இறப்பதற்கு முன் ஆஸ்பத்திரியில் அப்பாவிடம் முத்துக்குமாருக்கும் அலமுவுக்கும் உள்ள காதலைப் பற்றிச் சொல்லி விட்டாள். 

“அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க. கட்டி வச்சிரலாம். அதை பாக்க நான் இருப்பேனோ இல்லையோ, அதுக்குத்தான் உங்க கிட்ட இப்ப சொன்னேன்” என்றாள். அப்போது முத்துக்குமாரும் அவள் கூடவே இருந்தான்.

அப்பா அவனை அலட்சியமாகப் பார்த்தார். அந்தப் பார்வையில் தெரிந்த வெறுப்பைக் கண்டு அவன் ஒரு நிமிடம் அதிர்ந்து போனான். 

மனைவி மரணப் படுக்கையில் இருந்தது கூட அவரை அசைக்க முடியாதபடி அவரது ஈகோ அவரைத் தடுத்தது.

“உனக்கு எவ்வளவு வருஷமா இதெல்லாம் தெரியும்?” என்று கேட்டார்.

அம்மா பதிலளிக்க விரும்பாது கண்களை மூடிக் கொண்டாள். 

“நாடகமா ஆடறீங்க அம்மாவும் பிள்ளையுமா சேந்துக்கிட்டு? அவங்க ஜாதி என்ன, நாம்ப ஜாதி என்ன? அந்தக் கருணாகரன் பயல் இவனை வளைச்சிப்  போட்டிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி இன்னிக்கி காலேல கூட நைச்சியமா எங்கிட்ட சிரிச்சு பேசிட்டு போனானே, அயோக்கிய ராஸ்கல். என்னை என்ன இளிச்சவாயன்னு நினைச்சுகிட்டு இருக்கீங்களா?”  ஆஸ்பத்திரி என்றும் பாராமல் என்று கத்தி விட்டு வெளியே போய் விட்டார்.

அம்மா முத்துக்குமாரை அவர் பின்னால் சென்று சமாதானப்படுத்தும்படி சொன்னாள். அவன் மனமில்லாமல் வாசலுக்குச் சென்றான். அவர் அதற்குள் ஒரு ஆட்டோவைப் பிடித்து ஏறிக் கொண்டிருந்தார்.

அடுத்த ஒரு வாரத்தில் அம்மா இறந்து விட்டாள். அவனது திருமணப் பேச்சை அந்தச் சூழ்நிலையில் எடுக்க முடியவில்லை. அம்மா இறந்ததற்குத் துக்கம் கேட்க வந்த கருணாகரனைப் பார்த்து அப்பா முகத்தைத் திருப்பிக் கொண்டார். அவருக்கு விஷயம் புரியவில்லை.. அதற்கு மறுநாள் முத்துக்குமார் ஆஸ்பத்திரியில் நடந்தவற்றை கருணாகரனிடம் கூறினான். அவர் பதறி விட்டார்.

“இப்பவே நான் அவர் கிட்ட போயி எனக்கு இது பத்தி ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லணும்” என்று உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்தார்.

அவர் அம்மாதிரி நடந்து கொண்டது முத்துக்குமாரை ஆச்சரியத்தில் ஆழ்த்திற்று. பெண்ணிடம் அவன்  சொன்ன

வற்றை உறுதிப்படுத்திக் கொள்ளக் கூடத் தோன்றவில்லையா இவருக்கு?  

முத்துக்குமார் “நீங்க சொன்னதும் அவர் உங்களை நம்பிடுவாரா?” என்று கேட்டான். 

அவர் அவனைப் பரிதாபமாகப் பார்த்தார்.

“மாமா,உங்களுக்கு ஜாதி முக்கியமில்லேன்னா, எனக்கும் இல்ல. எங்க  ரெண்டு பேருக்கும் கலியாணம் பண்ணி வைங்க” என்றான் முத்துக்குமார்.

“அது எப்படிப்பா? சின்னஞ் சிறுசுக நீங்க ரெண்டு பேரும்.. உலக அனுபவம் பத்தாமா பேசறீங்க. உங்கப்பா எங்களை ஒத்துக்குவாரா? நாளைக்கு அவர் வெளியில தலை காட்டா முடியாமப் போனா அதுக்கு நாம காரணமா இருக்கக் கூடாதுப்பா. என்ன ஆனாலும் சரி, அவர் ஒத்துக்காம  கலியாணம் எல்லாம் நடக்காது” என்றார் அவர்.

“மாமா, மானத்த வில்லா வளைக்கணும்கிறீங்க. இந்த ஜென்மத்தில நடக்காததைப் பேசுறீங்க. சரி அலமுவுக்கு ஒரு நல்ல இடத்தில் கலியாணம் செஞ்சு வைங்க” என்று அவன் மதுரையை விட்டுக் கிளம்பி விட்டான். 

                                            * * *

முத்துக்குமார் ஹோட்டலிலிருந்து கிளம்பிய போது காலை எட்டு மணி இருக்கும். அவன் மதுரையை வந்தடைந்த போது ஐந்தரை. காலேஜ் ஹவுஸில்தான் சென்று தங்கினான். அவன் தாத்தா அவர் அவனைப் போலிருந்த போது அந்த ஓட்டலில் சாப்பிட்ட தூள் பஜ்ஜியைச் சிலாகித்துச் சொல்வார். அந்த அதிகாலையில் ஜனங்கள் சுறுசுறுப்பாக போய் வந்து கொண்டிருந்தார்கள். உறங்கா நகரம் என்று அலமு ஒருதடவை சொன்னது எவ்வளவு பொருத்தம் ! 

டவுன் ஹால் ரோடிலிருந்து வசந்தநகர் அவ்வளவு தூரமில்லை. எட்டு வருஷங்கள் கழித்துப் பார்க்கும் நகரம், இவ்வளவு அடைசலாக, தனது  ஒரிஜினல் அழகை இழந்து அலங்கோலமாக மாறும் என்று அவன் கனவில் கூட நினைத்ததில்லை.

அழகுணர்ச்சி சிறிதுமற்ற கட்டிடங்கள் கண்ணை உறுத்தி வலியேற்படுத்தின. சாலைகளை மாடுகளும் நாய்களும் அலைந்து திரிந்து  ஆட்கொண்டிருந்தன. அவற்றுக்குப் போக என்று மிச்சமிருந்த இடத்தில் மனிதர்களும் மற்ற   போக்குவரத்துகளும் நடந்து கொண்டிருந்தன.   

வீட்டின் முன் நிறுத்தினால் பக்கத்து வீடுகளிலிருந்து முகங்கள் முளைத்துப் பார்க்கும்; கூட்டம் கூடும் என்று தெருக் கோடியிலேயே முத்துக்குமார் காரை நிறுத்தச் சொல்லி விட்டான். டிரைவரைக் காரிலேயே இருக்கச் சொல்லி விட்டுக்   காரை விட்டிறங்கித் தெருவில் நடந்தான். தெரிந்த முகங்கள் எதுவும் கண்ணுக்குப் படவில்லை. முன்பு நாடார் பலசரக்கு கடை இருந்த இடத்தில் இப்போது சுயராஜியா ஜவுளிக் கடல் என்ற பெயர்ப் பலகை காணப்பட்டது.தெருவில் முன்பு எப்போதோ கண்ட நாய்களின் வாரிசுகளெனச் சில தெருவில் குறுக்கும் நெடுக்கும் ஓடின. அதில் ஒன்று இவனைப் பார்த்துப் புதுமுகம் என்று கண்டு கொண்டு உறுமி விட்டு ஓடியது. 

அவன் தன் வீட்டுக்கு எதிரே இருந்த வீட்டுக்குள் திறந்திருந்த வாசல் வழியே நுழைந்தான். அவனை முதலில் எதிர் கொண்டது அலமுதான். அவனைப் பார்த்துத் திடுக்கிட்டுப் பிறகு முகத்தில் புன்னகை மலர “வாங்க, வாங்க” என்றாள். எட்டு வருஷப் பிரிவோ என்னவோ முந்திய ‘வா’ இப்போது ‘வாங்க’ ஆகிவிட்டது என்று நினைத்தபடியே அவனும் புன்னகை புரிந்தான். 

“சவுக்கியமா?, இருங்க அப்பாவக் கூப்பிடறேன்” என்று சுருக்கமாகப் பேசி விட்டு உள்ளே சென்று மறைந்தாள். 

முத்துக்குமார் வீட்டைச் சுற்றி பார்வையைச் செலுத்தினான். வழக்கம் போல ஒழுங்கும் சீருமாய் ஹால் பளிச்சிட்டது. தரையில் முகம் பார்க்கலாம் போலிருந்தது. எல்லாம் அலமுவின் கைத்திறன் என்றன.  எங்கோ இருக்க வேண்டியவள்! இங்கே தடுமாறிக் கொண்டு நிற்க வேண்டிய துரதிர்ஷ்டம். அன்று மட்டும் கருணாகரன் அவனது பேச்சைக் கேட்டிருந்தால்..? .அவன் தன் சிந்தனை சென்ற வழியைத் தொடர விரும்பாமல் ஹால் சுவரைப் பார்த்தான்.

“அடடே, வந்திட்டியா? நான் நாலு மணிக்கு போன் பண்ணிப் பாத்தேன்.எங்க இருக்கேன்னு கேட்கலாமின்னு. சுவிட்சுடு ஆஃப்னு வந்திச்சு.”என்றபடியே கருணாகரன் உள்ளேயிருந்து வந்தார். வெள்ளை வேஷ்டியும் முண்டா பனியனும் அணிந்து நெற்றியில் திருநீறு பளபளக்க வந்து உட்கார்ந்தார். உள்ளே பார்த்து “தம்பிக்கு காப்பி கொண்டா” என்று குரல் கொடுத்தார்.

“சார்ஜ் தீர்ந்திருச்சின்னு நான் இங்க வந்தப்பறம்தான் பாத்தேன்” என்றான் முத்துக்குமார். “அப்பா எங்க  இருக்காங்க? வீட்டிலதானா இல்லே ஆஸ்பத்திரிலயா?”” என்று கேட்டான்.

“இங்கதான். வீட்டுலதான்.இருக்காருன்னாங்க” என்று மேலே எதுவும் சொல்லாமல் நிறுத்தினார்.

“அப்படின்னா? 

“இல்ல. நான் தினமும் போயி அவர்கிட்ட உக்காந்துகிட்டு இருக்கிறவந்தான். நேத்திக்கு உனக்கு போன் போட்டத  ராம்குமார் கிட்ட சொன்னேன்” என்றார். 

ராம்குமார் முத்துவின் அண்ணன். 

“அவன் நேரே போயி உங்கப்பா கிட்ட சொல்லிருக்கான். இவன் எதுக்குடா நம்ம குடும்பத்துல எப்பப்பாத்தாலும் மூக்கை நீட்டிக்கிட்டு இருக்கான்னு கண்டபடி சத்தம் போட்டாராம். அப்ப  அதை அங்க இருந்த நம்ம பக்கத்து வீட்டுக்காரர் கேட்டிட்டு  ராத்திரி என்கிட்டே வந்து சொன்னாரு” என்றார் கருணாகரன்.

அலமு இருவருக்கும் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள்.

“அப்ப நான் அவரைப் பாக்க வேண்டாம்னு நினைக்கிறீங்களா?” என்று சற்றுக் கோபத்துடன் முத்துக்குமார் கேட்டான். 

கருணாகரன் பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாய் இருந்தார்.

அலமு  முத்துவிடம் “நல்லா இருக்கே, நீங்க சொல்லுறது. இன்னிக்கோ நாளைக்கோன்னு கெடக்காரு அவரு. அங்கேர்ந்து இவ்வளவு தூரம் வாசல் வரைக்கும் வந்திருக்கீங்க. பாக்காம போறதாவுது? நாளைப் பின்னைக்கு ஊரு என்ன சொல்லும்? உங்களை நேரே பாத்தா மாமாவுக்கும் மனசு மாறும்ல?” என்றாள்

கருணாகரன் “அலமு சொல்லுறதும் சரியாத்தான் இருக்கு” என்றார்.

அவன் கைகளை நெஞ்சின் மீது கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். சில நிமிஷங்கள் மௌனத்தில் ஊர்ந்தன.

“சரி, நான் போய்ப் பாக்கறேன்” என்று எழுந்தான். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து சாலையைக் கடந்து எதிர்வீட்டுப் படிகளில் ஏறினான். திண்ணையைக் கடந்து உள்ளே நுழையப் போகும் சமயம் அவன் பெயர் அடிபடுவது கேட்டது. நின்றான். அப்பாவின் குரல்தான்.

“நேத்திக்கு  சாயந்திரமே முத்துக்குமாரக் கூப்பிட்டுச் சொன்னேன்னுதானே கருணாகரன் வந்து உங்கிட்ட 

சொன்னான்? இதுவரைக்கும் அவன் ஒரு போன் போட்டு இங்க யார்கிட்டயாவது பேசினானா? பெங்களூர்லேந்து ரெண்டு தடவ இந்த நேரத்துக்கு வந்திட்டு போயிருக்கலாம். காசு கணக்கு பாக்காம இருந்தான்னா, ஒரு பிளைட்டை பிடிச்சி வர எவ்வளவு நேரமாகும்? அவன்லாம் வரமாட்டான். அவன் என்னிக்கி என் பேச்சைக் கேட்டிருக்கான்?  தலைக்கனம் பிடிச்ச பய. என் பேச்சுக்கு மரியாதை தராத  பயடா அவன். ஒண்ணைப் பண்ணுடான்னா பண்ண மாட்டான். பண்ணாதேடான்னா வரிஞ்சி கட்டிக்கிட்டு போயி பண்ணிட்டு வருவான். இப்பவும் சொல்றேன். அவன் வர மாட்டான்” என்று சத்தமிட்டார்.

வாழ்க்கை முழுதும் நம்பிக்கையின்மையைத் தோள்களில் சுமந்து கொண்டிருப்பவரின் குரல் அவனுக்கு ஆயாசத்தை அளித்தது. முத்துக்குமார் ஏறி வந்த படிகளிலிருந்து கீழே இறங்கித் தெருவில் நடந்தான். காரை அடைந்ததும் டிரைவரைப் பார்த்து “சேகர், வண்டியை எடு. பெங்களூருக்குப் போகலாம்” என்று ஏறி உட்கார்ந்தான். 

—————————

   .  

Series Navigationஜானகிராமனின் மரப்பசு என்ற நாவல்….தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 12
author

ஸிந்துஜா

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    திரு . சிந்துஜா எழுதிய தோள் கதை வாசித்தேன். தந்தை மகனுக்குமான புரிதல் சிக்கலை நெகிழ்வாய்ச் சொல்லி இருக்கிறார். வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *