திரைப்பட வாழ்க்கை

This entry is part 3 of 17 in the series 11 அக்டோபர் 2020

ஆர்யா. கட்டுமானத்துறையில் பொறியியல் பட்டம் பெற்ற புதுமுகம். வேலைச் சந்தைக்குள் நுழையுமுன் ஓர் அரசு வேலையை ஒப்பந்த அடிப்படையில் செய்ய ஆசைப்பட்டார். அறந்தாங்கி முக்கியச் சாலையிலிருந்து காட்டுப் பிராமண வயல் செல்லும் சாலையின் குறுக்கே சிமெண்ட் குழாய் பதிக்கும் வேலையை எடுத்தார். சிறிய வேலைதான். நுணுக்கமாகச் செய்தார். அவரிடம் வேலை பார்த்த ஒரு மூத்த தொழிலாளி சொன்னார்.

‘திட்டமிட்டு கச்சிதமா முடிச்சுட்டீங்க தம்பீ’

வேலையை மேற்பார்வை யிடவந்த மேலதிகாரி ‘வெரிகுட்’ என்று குறிப்பு எழுதிவிட்டுச் சென்றார். காசு வாங்கத்தான் ஆர்யா படாதபாடுபட்டார். அதற்காக அவர் நடந்த தூரத்தில் அறந்தாங்கியிலிருந்து சென்னைக்கு கால்நடையாகவே  சென்றிருக்கலாம். ஒருவழியாக காசோலை கைக்கு வரும்போது அந்த அதிகாரி சொன்னார்.

‘இதில் முப்பது பர்சன்டை நாளை கொண்டு வந்து தந்துவிடுங்கள்’

உடம்பு முழுவதும் ஆணி அடிப்பதுபோல் உணர்ந்தார் ஆர்யா. ‘கோபம் வரும்போது மௌனமாகிவிடு’ என்று அவர் குரு அடிக்கடி சொல்வது ஞாபகத்துக்கு வந்தது. பேசாமல் சென்றுவிட்டார். சிங்கப்பூரிலிருந்து பாக்யா என்பவர் அறந்தாங்கி வந்திருந்தார்.  ஆர்யாவின் நெருங்கிய நண்பரின் தகப்பனார் அவர். மூன்று ஆண்டுகள் இங்கே வேலை பார்த்துவிட்டு படாதபாடு பட்டுப் போய் சிங்கை சென்று கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தில் கணக்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் சொன்னார்.

‘எல்லாவற்றையும் போட்டுவிட்டு சிங்கப்பூர் சென்றுவிடுங்கள். உங்கள் உறவினர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். தங்கிக் கொள்ளலாம். வேலை அனுமதிக்கு யாரிடமாவது விண்ணப்பித்துவிட்டு வந்துவிடுங்கள். நிச்சயம் உங்களுக்கு வேலை கிடைக்கும்’

ஆர்யா சிங்கப்பூர் வந்துவிட்டார். நார்த் பிரிட்ஜ் சாலையில் நகைக்கடை வைத்திருக்கும் ராம்குமாரை சந்தித்தார். அவர் பெரிய அளவில் தொழில் செய்வதுடன் நாணய மாற்று வியாபாரமும் கூடவே செய்கிறார். துபாயில் ‘ராம்குமார் டிரஸ்ஸஸ்’ என்ற ஆயத்த ஆடைக் கடையும் அவருக்கு உண்டு. கொழும்பில் இருக்கும் ஒரு அரசு வங்கியிடமிருந்து புதிதாக ஓர் வியாபாரம் கிடைத்தது. வாரத்திற்கு 20 கிலோ தங்கம் அவர்களுக்கு அனுப்பவேண்டும். அனுப்புவதற்கு மிகவும் சிக்கனமான பாதுகாப்பான வழி ஓர் ஆளை தங்கத்துடன் அனுப்புவதுதான். அதற்கான ஆளைத் தேடிக் கொண்டிருக்கும்போதுதான் ஆர்யா வருகிறார். உடனே வேலை அனுமதிக்கு விண்ணப்பித்து விட்டார் ராம்குமார்.

ஆர்யா இப்போது ராம்குமாரின் நிறுவனத்தில் முறையாக இணைந்துவிட்டார். 20 கிலோ தங்கம். 100 கிராம் எடையுள்ள 20 பிஸ்கட்டுகளை தோள்பையில் தூக்கிக் கொண்டு கொழும்புக்கு பறந்து கொண்டிருக்கிறார். சரிந்து விட்ட தோள்பட்டையை நேராக்க அடுத்த தோளுக்கு பையை மாற்றுகிறார். கொழும்பில் இறங்கியதும் குடிநுழைவு, சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அந்த வங்கியின் உயர் அதிகாரி அங்கே காத்திருக்கிறார். தங்கம் முறைப்படி கைமாறுகிறது. இனி அடுத்த விமானத்தில் கூட ஆர்யா திரும்பி விடலாம்.  நகருக்குள் செல்லும் அவசியமே இல்லை. ஆரம்பத்தில் வேலை அருமையான திரைப்படம் பார்க்கும்  சுகமாக இருந்தது. போகப் போக தெவிட்டியது. விமானமே வெறுத்துவிட்டது. வேறு வழி? ஆர்யா தொடர்கிறார். அவருக்கிருந்த ஒரே ஆறுதல் ஊரில் அவர் வங்கிக் கணக்கில் காசு சேர்ந்து கொண்டிருக்கிறது. வாரத்தின் மற்ற நாட்களில் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை கடையில் இருந்தே ஆகவேண்டும். காலையிலும் மாலையிலும் காப்பி டீ தயாரிப்பது, மதியம் மற்ற ஊழியர்களுக்கு சாப்பாடு வாங்கித் தருவது ஆக எடுபிடி வேலைதான். ஒரு பொறியாளருக்கு எடுபிடி வேலையா? ‘விரும்பிச் செய்தால் எந்த வேலையிலும் அவமானமில்லை. செய்யும் வேலையை விரும்பு’ என்று அவர் குரு சொன்னதை ஞாபகப்படுத்திக் கொண்டார் ஆர்யா.  பாக்யாவும் ஆறுதல் சொன்னார். நகை வியாபாரத்திலோ நாணய மாற்று வியாபாரத்திலோ ஆர்யா நுழையவே முடியாது. ஓர் தனி ஆளாக வெளியில் அமர்ந்திருக்க வேண்டும். அவருக்கிருந்த ஆறுதல் கிருஷ்ணமூர்த்தி. அவர் மட்டும்தான் ஊரில் இளங்கலை பொருளாதாரம் படித்துவிட்டு 10 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் வந்தவர். மற்ற எல்லாரும் நாலைந்து வயதிலிருந்தே சிங்கப்பூரில் வசிப்பவர்கள். பல ஆண்டுகள் கழித்துத்தான் கிருஷணமூர்த்தியை நாணய மாற்று வியாபாரத்தில் நுழையவிட்டார்கள். அவர் சொன்னார் ‘பொறுமையாக இருங்கள்’

ஒரு நாள் பணமாற்று தடுப்பின் உட்புறத்தில் கிருஷ்ணமூர்த்தியோடு பேசிக்கொண்டிருந்தார் ஆர்யா. ராம்குமாரின் நிறுவனத்தில் பணமாற்று வியாபாரம் அவருடைய மருமகன் ஜெகாவிடமும் தங்கவியாபாரம் மற்றும் துபாய் வியாபாரம் அவருடைய மகன் சோமாவிடமும் இருந்தது. ராம்குமார் மேற்பார்வை மட்டுமே. ஆர்யா பேசிக்கொண்டிருக்கும்போது ஜெகா உள்ளே வந்தார். சிறிது நேரத்தில் ஒரு பெண் ஊழியர் ஆர்யாவிடம் வந்து வெளியே உட்காரும்படி சொல்லிப் போய்விட்டார். ஆர்யாவுக்கு அவமானமாக இருந்தது. மான அவமானங்களை நினைக்கவே கூடாது என்று அப்போதுதான் கிருஷ்ணமூர்த்தி சொல்லிக் கொண்டிருந்தார். இரண்டு ஆண்டுகள் அங்கே ஓடியது ஆர்யாவுக்கு எட்டாவது அதிசயமாகத் தெரிந்தது. ‘இன்னும் ஏன் இத்தனை நெருக்கடி. இவர்கள் என்னை நம்புவதற்கு நான் என்னதான் செய்ய வேண்டும்’ ஆர்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிக்கு ராம்குமாரின் வீட்டுத் தொலைபேசி எண் அவருடைய பேஜரில் சத்தம் போட்டது. உடனே வீட்டுக்கு தொடர்பு கொண்டார். சோமா பேசினார். ‘உடனே வீட்டுக்கு வாருங்கள்’. இவர் இருப்பது தேக்காவில். அவர்கள் வீடு மௌண்ட்பேட்டன் சாலையிலுள்ள ஒரு தரைவீடு. உடனே ஒரு வாடகை மகிழ்வூர்தியில் புறப்பட்டார் ஆர்யா. வீட்டுக் கூடத்தில் இரண்டு பெரிய பெட்டிகள் தயாராக இருந்தன. சோமா சொன்னார்.

‘இன்று 12 மணிக்கு நானும் அப்பாவும் துபாய் செல்கிறோம். மெய்டுக்கு வேறு வேலை இருக்கிறது. நீங்கள் காரை கழுவிவிட்டுப் போய்விடுங்கள்’

சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். பணிப்பெண் வாளி, நுரைரப்பர், சோப்புடன் வந்தார். வாளி கைமாறியது. வாளியை எடுத்துக் கொண்டு காரை நெருங்கியபோது. ‘மான அவமானங்களைச் சகித்துக் கொள்ளலாம். இது அந்த எல்லைக்குள் வருமா?‘ காருக்குப் பக்கத்திலேயே குழாய் இருக்கிறது. தண்ணீர் பிடித்துக் கொள்ள வேண்டியதுதான். ‘அரைமணி நேரம் கழுவுவதற்குக் கூட முடியாதபடி பணிப்பெண்ணுக்கு அப்படி என்ன வேலை இருக்கும்? இருக்கட்டுமே. அதற்கு வேறு ஏற்பாடு செய்யக் கூடாதா? இதற்காக வாடகை வண்டியில் வரும் அளவுக்கு என்னை ஏன் விரட்ட வேண்டும்? சிந்தித்தால் கோபம் கொப்பளிக்கிறது. இதையும் சகிப்போம்.’ கழுவி முடித்தார்.  அந்தப் பெண் ஒரு தட்டில் இரண்டு இட்லியும் ஒரு வடையும் கொண்டு வந்தார். பக்கத்திலேயே இருந்த சிறிய வட்ட மேசையில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினார். இன்னும் இரண்டு இட்லி யாரிடம் கேட்பது? அப்போது ஒரு துண்டு கேசரியுடன் பணிப்பெண் வந்தார். ‘கொடுப்பதா வேண்டாமா’ என்ற விவாதம் உள்ளே நடந்திருக்க வேண்டும். இரண்டு பெட்டிகளும் வண்டியில் ஏற்றப்பட்டன. ஒரு மணிநேரத்தில் சோமாவும் ராம்குமாரும் வந்தார்கள். கைப்பிடியை தொட்ட சோமா சொன்னார்

‘என்ன ஆர்யா பிசுபிசுப்பு அப்புடியே இருக்கு. ஒங்க எஞ்ஜினியரிங் படிப்பில காரு கழுவச் சொல்லித் தரலியா? .. ஹ ஹ..ஹா’

அன்று இரவு பாக்யா ஆறுதல் சொன்னார்.

‘பெரிய பணக்காரர்கள் சிலர் தங்கள் காரை தாங்களே கழுவிக் கொள்வார்கள். சிலர் கார் கழுவியே பட்டப்படிப்பு கூட படிக்கிறார்கள். இங்கே கார் கழுவுவது கேவலமல்ல’

பாக்யா இப்படிச் சொன்னாலும் சோமா செய்ததில் ஓர் உள்நோக்கம் இருப்பதாகவே உணர்ந்தார். அதை ஆர்யாவிடம் அவர் மறைத்துவிட்டார்.

கொழும்புக்குச் செல்லும் வேலையும் தொடர்ந்தது. சில இரவுகளில் கிருஷ்ணமூர்த்தியிடம் ஆர்யா பேசுவது உண்டு. கிருஷ்ணமூர்த்தி தங்கையின் திருமணம் சென்ற மாதம் நடந்தபோது, ஆர்யாதான் ஒரு லட்சம் கொடுத்து உதவினார். அந்த வகையில் ஆர்யாவுக்கு கிருஷ்ணமூர்த்தி மானசீகமாக உதவவே நினைக்கிறார். அவர் உறுதியாகச் சொன்னார்.

‘ராம்குமார் நிர்வாகத்தில் எந்தக் கெடுபிடியும் இருந்ததில்லை. சோமாவும் ஜெகாவும் பொறுப்புக்கு வந்ததிலிருந்துதான் வேலையாட்களுக்கு இத்தகைய நெருக்கடி. யாருமே திருப்தியாக இல்லை. அவர்கள் பணக்காரனாகவே வாழ்க்கையைத் தொடங்கியவர்கள். ராம் குமார் அடிமட்டத்திலிருந்து வந்தவர். இவர்களுக்கு நம் பிரச்சினைகள் புரியாது. இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு ஒரு நல்ல வேலையை அவர்கள் நிச்சயமாகத் தருவார்கள்’

இதுகூட ஆர்யாவை சமாதானப்படுத்த சொன்னதுதான். என்ன செய்வது. ஆர்யாவை சமாதானப்படுத்த வேண்டுமென்றால் அவர் உணர்வுகளுக்கு ஒத்தடம் கொடுக்கத்தானே வேண்டும். அந்த வாரம் கொழும்பிலிருந்து ஒரு தகவல் வந்தது. அந்த வாரம் தங்கம் அனுப்பவேண்டாமாம். அடுத்த வாரம் அனுப்ப வேண்டுமாம். ஒரு திங்கட் கிழமை இரவு சோமாதான் ஆர்யாவை அழைத்தார். உடனே வீட்டுக்கு வரவேண்டுமாம். சென்றார். ஒரு மணிநேரம் காத்திருப்பு. ஜெகாவும் சோமாவும் வந்தார்கள்.

‘நாளைக் காலை 11 மணிக்கு நீங்கள் துபாய் செல்கிறீர்கள். நம்ம கடைக்கு இந்த சாமான்களை கொண்டுபோக வேண்டும். இதுதான் நீங்கள் கொண்டு செல்லும் பெட்டி. இரண்டு மூன்று நாட்கள் அங்கே தங்கியிருக்க வேண்டும். ஏற்பாட்டுடன் நாளைக்காலை 7 மணிக்கெல்லாம் இங்கு வந்துவிடுங்கள்.’

தன் அறைக்கு வந்ததும் கிருஷ்ணமூர்த்தியிடம்  பேசினார் ஆர்யா. கிருஷ்ணமூர்த்தியும் அதுபோல் போயிருக்கிறாராம்.

‘தைரியமாகப் போய் வாருங்கள். ஒரு பிரச்சினையும் வராது’

ஆர்யா இப்போது துபாய்க்கு பறந்துகொண்டிருக்கிறார். விமானப் பயணம் பேருந்துப் பயணம்போல் ஆகிவிட்டது. ஆர்யாவுக்கு அந்தப் பெட்டியில் என்னென்ன இருக்கிறது என்பதெல்லாம் தெரியாது. யார் அழைக்க வருவார்கள்? யாரும் வராவிட்டால் என்ன செய்வது? எதுவுமே தெரியாது. கேட்கவும் பயம். அனுப்புகிறவர்கள் அதற்கான ஏற்பாடுகளெல்லாம் செய்யாமலா அனுப்புவார்கள்? துபாயில் தரையிறங்கியது விமானம். தன் பெட்டியை இழுத்துக் கொண்டு குடிநுழைவைக் கடந்தபோது தடுக்கப்பட்டார்.

‘அந்தப் பெட்டிக்குள் ஒரு எலக்ட்ரானிக் டிவைஸ் இருக்கிறது. அது என்ன?’

‘தெரியாது. முதலாளி கடைக்கு கொண்டு செல்கிறேன். ராம்குமார் டிரஸ்ஸஸ்’

‘அங்கிருந்து யாரையாவது வரச் சொல்லுங்கள்’

அவர்கள் தந்த தொலைபேசியில் கடைக்கு தொடர்பு கொண்டார். யாரும் எடுக்கவில்லை. உடனே சிங்கைக்குத் தொடர்பு கொண்டார். அங்கேயும் யாரும் எடுக்கவில்லை.

‘மறுபடியும் பேசுங்க. ஏதாச்சும் வேலையாக இருப்பார்கள்’

பேசினார். யாரும் எடுக்கவில்லை. அன்று இரவு ஆர்யா ரிமாண்ட் கைதியாக வைக்கப்பட்டார்.

‘நாளைக் காலை பேசலாம். நாளையும் வராவிட்டால் பெரிய சிக்கல்தான்.’

அந்த இரவு ஆர்யாவுக்கு மிகப் பயங்கரமான மர்மமான இரவானது. அந்த இடமே ஆளை விழுங்கும் மௌனம். பெரிய இடம். ஒரே ஆள்.

மறுநாள் கம்பெனியிலிருந்து நிர்வாகி வந்துவிட்டார். ஆர்யாவும் அழைத்துவரப் பட்டார். பல தாள்களில் இருவரும் கையெழுத்துப் போட்டார்கள். அந்த நிர்வாகி பெட்டியைச் சரிபார்த்தார். ஆர்யா இழுத்துக்கொண்டு அந்த நிர்வாகியைத் தொடர்ந்தார். நேற்று வராததற்கு எந்தக் காரணமும் சொல்லவில்லை. ஏற்பட்டுவிட்ட சிரமங்களுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம். அவர் பேசாமல் சென்று கொண்டிருக்கிறார். ஆர்யா தொடர்கிறார்.

‘ராம்குமார் டிரஸ்ஸஸ்’ துபாயில் பலரும் அறிந்த பெரிய கம்பெனி. அதன் கிளையாக சென்னையில் ஒரு கடையைத் திறக்கப் போகிறார்களாம். அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறார்கள். சென்னையிலிருந்து இயக்குநர் பாரதிக்குமார், பால்வண்ணன், கவிஞர் ஆளவந்தான் எல்லாரும் வந்திருக்கிறார்கள் சிங்கைக்கு. அவர்கள் அனைவரும் திறப்புவிழாவுக்கு வருகிறார்களாம். ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அதன் தொடர்பாக துபாய் நிர்வாகமும் சிங்கப்பூர் நிர்வாகமும் நேற்று முழுதும் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஆர்யா தடுக்கப்பட்டதை ஏதோ கண்ணில் சின்னத் தூசு விழுந்தது மாதிரிகூட அவர்கள் கருதவில்லை. ஆர்யாவுக்குத்தான் அது மிகப்பெரிய போராட்டமாக இருந்திருக்கிறது.

இரண்டு நாட்கள் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கும் இடத்தில் ஆர்யா தங்கிக் கொண்டார். ‘இவர்கள் எல்லாம் மனிதர்களா? இல்லை வேறு எதுவுமா? ஒரு புதியவன் வந்திருக்கிறேன். என்னோடு ஏன் யாருமே பேசவில்லை? ஒரு வேளை அவர்கள் பேசுகின்ற அளவுக்கு தகுதி எனக்கில்லையா? மனிதாபிமானமே இல்லாத ஜென்மங்கள். சே!’  ‘நடக்கும் எதையும் கேள்வி கேட்காதே? அதோடு இருக்கப் பழகு’ தன் குரு சொன்னதை நினைத்துக் கொண்டார் ஆர்யா.

சிங்கப்பூர் திரும்பி நேராக தன் அறைக்குச் சென்றார். ராம்குமார் வீட்டுக்கு தொடர்பு கொண்டார். ஜெகா எடுத்தார்.

‘வாங்க ஆர்யா. எப்ப வந்தீங்க? என்ன் துபாயில நிக்க வச்சுட்டாங்களா? ராத்திரி பிரியாணி குடுத்தாங்களா? ஹெ. ஹெ.. நாளக்கி ஆபீஸ்ல பேசுவோம்’

இனிமேலும் தொடர்வது சரியாக வருமா? அன்று இரவு கிருஷ்ணமூர்த்தியோடு வெகுநேரம் பேசினார். அவர் சொன்ன சில செய்திகள் நெருப்பை விழுங்குவதுபோல் இருந்தது.

‘பெரிய பெரிய ஆட்களெல்லாம் நமக்கிட்ட காசு மாத்துறாங்க. அதெ ஜெகா தனிப்பட்ட முறையில செய்றார். அது மிகப் பெரிய காசு. எங்களுக்கு உள்விபரம் தெரியாது. நீங்க யாருக்காகவோ இங்கெ வேவு பாக்குறிங்கன்னு ஜெகா சந்தேகப்பர்றார். நீங்க  நம்ம  கம்பெனி விஷயங்களெ வெளிய சொல்லிடுவீங்கன்னு நெனெக்கிறார். சோமா அப்புடி நெனெக்கலெ. ஆனா ஜெகா நம்ப வச்சுர்றார். இப்ப ஒங்க கணக்கெ முடிச்சு ஊருக்கு அனுப்பனும்னு பேசிக்கிறாங்க.’

ஆர்யா அதைத்தானே விரும்புகிறார். ஆனால் கொஞ்சம் மரியாதையாக அனுப்பவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வளவுதான்.

‘நீங்க கவலப்படக்கூடாது. விஷயம் முத்துனா சொல்லுவோம்னுதான் இருந்தேன். இப்ப முத்திருச்சு. நீங்க ஊருக்குப் போறதுதான் நல்லது. நானும் போகப்போறேன். எல்லாரையுமே திருடனாப் பாக்கிற திருடங்களோட எப்புடு வேலெ செய்றது?’

வழக்கம்போல் ஒரு நாள் ஆர்யா வீட்டுக்கு அழைக்கப்பட்டார். பார்வையாளர்களை சந்திக்கும் அறைக்கு வரச்சொல்லி கௌரவமாக உட்கார வைத்தார்கள். ராம்குமார், ஜெகா, சோமா மூவரும் வந்தார்கள். எழுந்து நிற்க முயன்றார் ஆர்யா. தோளில் கைவைத்து உட்கார வைத்தார் ராம்குமார். ஜெகா சொன்னார்.

‘கம்பெனி நஷ்டத்தில் ஓடுது. கொழும்பு வியாபாரம் நின்றுவிடலாம். உங்கள் வேலை அனுமதியை கான்சல் செய்யப்போகிறோம். நீங்கள் ஊருக்குப் போகத் தயாராக இருங்கள். அடுத்த வாரம் உங்கள் கணக்கை முடித்துக் கொண்டு புறப்படுவதுபோல் இருக்கும். விமானம் ஏறும்வரை கடைக்கு நீங்கள் வழக்கம்போல் வரவும். யாரிடமும் இதுபற்றி பேசவேண்டாம்.’

ராம்குமாரும், சோமாவும் மௌனமாகவே இருந்தார்கள். ராம்குமார் கேட்டார்.

‘நீங்க எதுவும் சொல்றீங்களா? ஒங்களுக்கு சம்மதந்தானே?’

‘சம்மதம்’

ஆர்யா இந்தியாவுக்குப் பறந்துகொண்டிருக்கிறார். சிங்கப்பூர் அத்தியாயம் முடிந்தது. அடுத்த அத்தியாயம் எப்போது எப்படி எழுதப் போகிறார் ஆர்யா. ஆர்யாவின் பள்ளி நண்பன் சூர்யா கேட்டரிங் முடித்துவிட்டு சென்னையில் ஒரு பேக்கரியில் வேலை செய்கிறார். இப்போது அறந்தாங்கி வந்திருக்கிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் சூர்யாவை சந்திக்கிறார். ஆர்யாதான் பேசினார்.

‘மீண்டும் சிங்கைக்குப் போகும் உத்தேசம் இல்லை. இங்குதான் ஏதாவது செய்யவேண்டும்.’

‘பேக்கரி தொழில் ஏ டு இஸட் எனக்குத் தெரியும். தஞசாவூரில் பழைய பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் ஒரு பேக்கரி இடம் இப்போது சும்மாதான் இருக்கிறது. சொற்ப வாடகைக்குக் கொடுப்பார்கள். அங்கே ஆரம்பிப்போம். அருமையான தொழில். காசுதான் வேண்டும். அது இருந்தால் வேறு எதையும் யோசிக்க  வேண்டியதில்லை.’

ஆர்யா பேக்கரி துவங்கப்பட்டது.

‘ஆர்யா ஆஹா!’ 

‘ஒரே ரூபாயில் ஒரு வேளை உணவு’

விளம்பரங்கள் பறந்தன. பேருந்து நிலையத்துக்கு சுற்றியுள்ள இடங்களில் விநியோகம் நடந்தது. வாங்கியவர்கள் மீண்டும் இரண்டு மடங்கு கேட்கிறார்கள். தொழில் விரிகிறது. தஞ்சாவூர் நகரம் முழுக்க ப்ரட் என்றால் ஆர்யாதான் என்று பேராகிவிட்டது. வெளியூரிலிருந்து வருகிறவர்கள்  ஆர்யா ப்ரட் வாங்காமல் ஊருக்குத் திரும்புவதில்லை.  வெற்றிநடை போடுகிறான் ஆர்யா. ஓராண்டு முடியப்போகிறது.

அன்று ஆர்யாவைத் தேடி ஒருவர் வந்தார். கையில் கடிகாரத்துக்குப் பதில் ஒரு கருப்புக் கயிறு கட்டியிருந்தார். பார்த்தவுடன் ஆர்யாவுக்கு சட்டென்று புரிந்துவிட்டது. 30 பர்சன்ட் கமிஷன் கேட்ட அந்த அதிகாரிதான். ஊழல் வழக்கில் உள்ளே இருந்துவிட்டு இப்போதுதான் வந்திருக்கிறார். பெரிய அதிகாரிகள் கெடுபிடியாம். அதனால்தான் கேட்டாராம். காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க தயாராக இருந்தார். ஊர் திருவையாறாம். திருவையாறு விநியோகத்தை அவருக்குக் கொடுத்தார் ஆர்யா. ‘10 பர்ஸன்ட்தான் கமிஷன். 30 பர்ஷன்ட் தரமுடியாது’ என்று சிரித்தார். தஞ்சாவூர் தாண்டி மற்ற மாவட்டங்களுக்கும் தொழிலை விரிவுபடுத்த பல இடங்களிலிருந்தும் அழைப்பு வருகிறது. பெரிய முன்பணம் தரவும் தயாராக இருக்கிறார்கள். அதற்கான மெஷின்கள் இத்தாலியிலும் ஜெர்மனியிலும்தான் வாங்க  முடியும்.அதற்கான ஏஜண்டுகள் சிங்கப்பூரில் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக நாம் வாங்குவதுதான் பாதுகாப்பு என்ற முடிவுக்கு வந்தார்கள். சிங்கப்பூர் செல்லுமுன் அந்த ஏஜண்ட்களிடம் பேசியாகிவிட்டது. கிட்டத்தட்ட 7ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்யா, சூர்யாவுடன் சிங்கப்பூர் புறப்படுகிறார்.

இதோ இருவரும் சிங்கப்பூரில் இறங்கிவிட்டார்கள். கிச்சனர் சாலையில் இருக்கும் ஹோட்டலில் தங்கினார்கள். ராம்குமார் கிட்டத்தட்ட சிங்கப்பூரில் காணாமலே போய்விட்டார். அவர்களின் சிங்கப்பூர் மற்றும் துபாய் கம்பெனிகள் தொலைந்துவிட்டன. அங்கிருந்தவர்களெல்லாம் பல இடங்களுக்கு சிதறிவிட்டார்கள். கடுமையான வயிற்றுவலியால் தன் மனைவி மகளுடன் மதுரைக்குச் சென்ற ராம்குமார் அங்கேயே இறந்துவிட்டார். கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்ற முயற்சித்த ஜெகா சட்டத்தின் கொக்கிப் பிடியில் சிக்கி இப்போது சிறையில் இருக்கிறார். சோமா மட்டும் தான் இருக்கிறாராம். வீராசாமி ரோடில் 641 வீட்டுத் தொகுதியில் இருப்பதாகக் கேள்வி. வீட்டு எண் தெரியவில்லை. ராம்குமாரின் மகன் என்றால் யாரும் சொல்வார்கள்தானே. அன்று காலை எப்படியும் சோமாவைப் பார்த்துவிடவேண்டும் என்று அந்த வீட்டுத் தொகுதிக்கு ஆர்யா வரும்போது மணி 8. கார் நிறுத்துமிடத்தில் ஒரு வாடகை மகிழ்வூர்தியை ஒருவர் கழுவிக் கொண்டிருந்தார்.

‘அட! சோமா! சோமாவேதான்!

விசாரித்ததில் தெரிந்தது. டாக்‌ஸி ஓட்டுகிறாராம்.

பார்த்துவிடலாமா? வேண்டாம்.  ‘எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துகொள். எதையும் அனுபவித்துக் கொள். அதற்கான விலையைக் கொடுக்காமல் எவனும் தப்பிவிட முடியாது’ என்று தன் குரு சொன்னதை ஆர்யா நினைத்துக் கொண்டார்.  வாழ்க்கையே ஒரு திரைப்படம் தானோ? இடைவேளைக்கு முன் ஒரு வாழ்க்கை. இடைவேளைக்குப் பின் ஒரு வாழ்க்கை.

யூசுப் ராவுத்தர் ரஜித்   

Series Navigationதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 16 -23இ பேருந்தில்பாதி முடிந்த கவிதை
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *