சீனா

author
0 minutes, 9 seconds Read
This entry is part 6 of 8 in the series 29 நவம்பர் 2020

ரமணி

ஜெய்ஷங்கர் படம் என்றால் சீனாவிற்கு உயிர். தலைமுடியை கோபுரம் மாதிரி மேலெழும்ப வாரிவிட்டுப் பின் நுனியை மெல்லச் சுருட்டிக் கீழிழுத்து நெற்றியின் நடுவில் விட்டுக்கொள்வான். அது காற்றில் ஆடாவிட்டாலும் சும்மாவாவது தலையை அடிக்கடி தள்ளிவிட்டுக்கொண்டு, இடது தோள் சற்றே சாய கையை வீசி அவன் நடந்து வருவது, அப்படியே ஜெய்ஷங்கர் நடந்து வருவது போலவே இருக்கும். பெரியவனான பின், உதட்டின் மேல் மிகக் குறைந்தபட்ச தூரத்தில், மூக்கின் கீழ்க் கரையில் மிக தூரத்தில்  நாணல் வரைந்தது மாதிரி மீசைகூட ஜெய்ஷங்கர் போலவே வைத்திருந்தான்.

” உனக்கு ஒண்ணும் மூக்கு சப்பையா இல்லையே… பின்ன எதுக்கு பேரை சீனான்னு வச்சிருக்கு ..? ” என்று ஊரிலிருந்து வந்த சுரேஷ் முன்பு ஒரு தடவைக் கேட்டபோது, அவனைச் சின்னவனென்றும் பாராமல், ஜெய்ஷங்கர் சினிமாவில் சண்டை போடுவது போலவே தேவையே இல்லாமல், பக்கத்தில் இருந்த ஸ்டூல் மேலெல்லாம் ஏறி, கீழே குதித்து எம்பி சுவற்றில் கால்வைத்து கீழேயெல்லாம் விழுந்து புரண்டு  அவனை அடித்ததில், சுரேஷைவிடச் சீனாவிற்குத்தான் வலி அதிகம் இருந்தது.

எங்கள் குடும்பத்தில், பெரியம்மா சித்தி என எல்லாக் குடும்பத்திலும் சீனிவாசன் என்ற பெயர் யாரோ ஒரு குழந்தைக்கு வைத்திருந்தார்கள்.  அது அம்மாவின் அப்பா பெயர். கோடை விடுமுறையிலோ அல்லது அடிக்கடி எங்கள் குடும்பங்களில் நடக்கும் விசேஷங்களுக்கோ எல்லோரும் கூடும்போது, சீனிவாசா என்று கூப்பிட்டால், ஒன்பது டிக்கெட்டுகள் ஓ வென்று ஓடிவந்து,  ” என்ன ?” எனக் கேட்டு நிற்கும். அதற்காகவே எங்கள் தாத்தா உயிரோடு இருக்கும்போதே, யாரை எப்படிக் கூப்பிட வேண்டும் என்று உயில் எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார். சீனு, சீனி, சீமாச்சு…. இந்த வரிசையில், இவனுக்கு   சீனா என்ற நாமகரணம் வாய்த்தது.

இவனும், சிறு வயதிலேயே பக்கத்து வீடுகளிலும் ஸ்கூலிலும் அடுத்தவர்களுடைய பொருளை அபகரித்து அவர்களைத் தேவையில்லாமல் வம்பிக்கிழுத்துச் சண்டை போட்டு வந்ததும்,  எங்கள் தாத்தா ஒரு தீர்க்கதரிசியாய் அவனுக்கு அப்படிப் பெயர் வைத்ததை எண்ணி நாங்களெல்லாம் அவன் மூக்கிலேயே விரலை வைத்து வியந்திருக்கிறோம்.

என்னதான் சீனா குறும்புக்காரனாய் இருந்தாலும், அவன் ஒரு வசீகரன். எங்களைத் தகாத இடத்தில்  அடிப்பதையும் கிள்ளுவதையும் தவிர்த்து அவன் சாகசமாய் செய்யும் எல்லா வேலைகளும் சீனி,சீனு,சீமாச்சு மற்றும் என் போன்ற பசங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால் அவன் கூடவே இருப்போம். அவன் பக்கத்தில் இருந்தால் நாங்களும் மற்ற பசங்களிடம் சண்டியர் போல நடந்துகொள்வோம்.

அம்மாவிற்கு நான் சீனாவிடவிடம் ஒட்டிக்கொண்டிருப்பது அவ்வளவாகப் பிடிக்காது. , நான் சீனாவிடம் ரொம்ப ஈஷிக் கொண்டிருந்தால், ”  இங்க வாடா ” என்று கூப்பிட்டு முதுகில் ஓங்கி ஒன்று வைத்து ” படிப்பு எழுத்து ஒண்ணும் கெடையாதா ஒனக்கு ..? போடா அந்தண்டை ” என்று சம்பந்தமில்லாமல் அடித்து அனுப்புவாள். ” இன்னும் ரெண்டு போடுங்கோ சித்தி…. கணக்குல கேள்வி கேட்டா ஒண்ணும் தெரியல அவனுக்கு …முழிக்கறான்  ” என்று அவன் முட்டைக்கண்ணை  விரித்து எரியும் கொள்ளியில் இன்னும் எண்ணையை ஊற்றி சீனா தன்னை  ரொம்ப நல்ல பிள்ளையாகக்  காண்பித்துக் கொள்வான். நான் அழுவதை மறந்து,  இவன் எப்போது கணக்கில் கேள்வி கேட்டான் என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவேன்.

ஆனால், அப்படியெல்லாம் சீனாவோடு சேரக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்த அம்மா, அவன் எஸ் எஸ் எல் சி யில் நல்ல மார்க் வாங்கி காமர்ஸ் படித்து பின், சி.ஏ சேர்ந்த போது, ” சீனாவைப் பாரு. எப்படி வெளயாட்டுத் தனத்தையெல்லாம் விட்டுட்டு… பொறுப்பா படிச்சு மேல வந்துண்டிருக்காம் பாரு. அவனப் பாத்துக் கத்த்த்த்துக்கோ… ” என்று அழுத்திச் சொன்னது கடவுள் இல்லை இல்லவே இல்லை… என்றிருந்த கொள்கை சட்டென்று மாறி, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என ஆன வித்தை மாதிரி இருந்தது. சரி..! எப்படி இருந்தால் என்ன…? சீனாவோட சுத்தறது  படிப்பு சம்பந்தமாத்தான்னு சொல்லிக்கலாமே என்று நானும் அதை சாதகமாக்கிக் கொண்டேன்.

நான் அப்போது ஜமால் முகம்மது காலேஜில் பி.யூ.சி என்ற கல்லூரி இடை நிலைப் படிப்பில் மூழ்கி இருந்ததைப் போல நடித்துக் கொண்டிருந்தேன். தொடை இறுகப் பேண்டைப் போட்டு அலைந்து கொண்டிருந்த  காலம் முட்டிக்குக் கீழ் அப்போதுதான் தளர ஆரம்பித்திருந்தது. சின்ன புஸ்தகங்களையும் பெரிய பயத்தையும் சுமந்துகொண்டிருந்த காலம் போய், பெரிய புஸ்தகங்களையும் சின்ன பயங்களையும் சுமந்து அலைந்துகொண்டிருந்தேன்.  பெளதிக ரசாயனங்கள் உள்ளுக்குள் ஏற்பட்டுக்கொண்டிருக்க…. படிப்பில் பெளதிகத்தையும் ரசாயனத்தையும் துறந்து சீனாவின் வழியில் வர்த்தகத்தையும் பொருளாதாரத்தையும் தெரிந்துகொள்ள  பகீரதப் ப்ரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தேன். சில சமயம் சரியாக இருந்தது போலவும் பல சமயங்களில் சரியில்லாதது போலவும் பட்டது.

சீனா, பி.காம் முடித்தவுடன், திருச்சியிலேயே அப்போது ப்ரபலமாய் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்த  சந்தானம் என்ற சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்டிடம் ஆர்ட்டிக்கிள்ஷிப்பில் சேர்ந்திருந்தான்.  வெளியிலிருக்கும் நிறைய பேர், சீனாவைத்தான் ஆடிட்டர் சந்தானம் என்று நினைக்கும் அளவுக்கு ஆர்ப்பாட்டமாயிருந்தான். இரண்டு மூணு தடவை ஆஃபீசில் நிறைய வேலையிருந்தபோதும், வெளி ஊர்களுக்கு பேங்க் ஆடிட் போன போதும், சீனாவை ஆடிட்டரின் காரே வந்து அழைத்துப் போனதில் அவன் இருந்த ஒண்டுடிக்குடித்தனக்காரர்கள் அவன் சாதாரணமாக அப்படி இப்படிப் போய்வரும்போதெல்லாம்கூட , எழுந்திருந்து ஒதுங்கி நின்றார்கள்.

ஆனால், என் படிப்புக்கு மட்டும் இல்லை….என் புஸ்தகத்துக்கே சீனாவால் ஒரு சோதனை வந்துவிட்டது. அப்போது, சீனாவின் கனவு நாயகனான ஜெய்ஷங்கரின் துணிவே துணை என்ற படம் ரிலீஸ் ஆகி சக்கைப் போடு போட்டுக்கொண்டிருந்தது. அந்தப்படத்துக்கு துணியே துணை என்ற மெஸ்ஸேஜ் போடவேண்டிய அளவிற்கு கதா நாயகி பட போஸ்ட்டரில் மிக சிக்கன ஆடையுடன் அஷ்ட கோணலாக ஆடிக்கொண்டிருந்தாள். ஜெய்ஷங்கர், மூஞ்சிக்கு ஒத்துவராத ஒரு பெரிய கௌபாய் தொப்பியைப் போட்டுக்கொண்டு துப்பாக்கியை அவள் பக்கம் காட்டிக்கொண்டிருந்தான். நம் எதிர்கால சார்ட்டர்ட் அக்க்வுண்டண்டிற்கு அந்தப் படத்தை அன்றே பார்த்துவிட வேண்டும் என்ற அகால ஆசையை என்னிடம் சொல்லி, அதை நிறைவேற்றுவதற்கான கதை வசனத்தை என்னிடம் கொடுத்துவிட்டான்.

அதன்படி, நான் வழக்கம்போல காலையில் என் புஸ்தகங்களை எடுத்துக்கொண்டு, காலேஜிற்கு என்று சொல்லிவிட்டுக் கிளம்பி, நேராக டவுனிற்குப் போய்… சரியாக 11 மணிக்கு பக்கத்திலிருக்கும் ஒரு டெலிஃபோன் பூத்திலிருந்து, சீனாவின் ஆஃபிசிற்குப் ஃபோன் செய்தேன். ரிங்க் போய்க்கொண்டேயிருந்து, கடைசியில் அதன் மூச்சு நிற்கும் சமயத்தில்… ரிசீவர் எடுக்கப்பட்டு ஒரு பூஞ்சையான குரல் ஹலோ என்றது. நான் சந்தேகப்பட்டு, ” இது சந்தானம் ஆடிட்டர் ஆஃபிஸ்தானே…எனக் கேட்டு முடிக்குமுன்னரே ….ஹான்..ஹான்… என்ன வேணும் என்று முனகியது அந்தப் பூஞ்சை. ” நான், சீனா எழுதிக் கொடுத்த வசனப்படி, குரல் தழுதழுத்து நடுங்க… சீனா இருக்காரா..? நான் அவர் கஸின் பேசறேன்…. அவரோடு மாமா வீட்டுல வழுக்கி விழுந்துட்டார்னு ….” சொல்லி என் நடிப்பை முடிப்பதற்கு முன்னாலேயே, சீனா கையை ஆட்டிக்கொண்டே ஆஃபிசிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தான்.

இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது படம் ஆரம்பிக்க. சீனா அவன் சட்டைப் பாக்கெட்டைத் தடவிக்கொண்டே, ” ஒங்கிட்ட எவ்வளவு பனம் இருக்கு? ” என்று கேட்டான். என்னிடம் பணமா….? எவ்ளோ சில்லறைக் காசு இருக்குன்னு கேட்டிருந்தா அது நியாயம்.  இவன் எப்படி பணமே இல்லாமல், புதுப்படத்தின் முதல் நாள் ஷோவிற்கு வர ஆசைப்பட்டான் என்று தெரியவில்லை. யோசித்துக்கொண்டே உச்சிப்பிள்ளையார் கோவிலின் நேரடிப் பார்வையில் எதிர்புறத்தில் நீண்டு விரிந்திருந்து ஓடும் சின்னக்கடைவீதியில், உருகி வழிந்துகொண்டிருந்த செப்டம்பர் வெய்யில் உடம்பை எரிக்க chowk என்னும் புஸ்தகக் கடைப் பக்கம் போய்க்கொண்டிருந்தோம்.

Chowk ஒரு ஸ்வாரஸ்யமான இடம். கல்லூரிப் பாடப் புத்தகங்கள் செகண்ட் ஹாண்ட் சேல்ஸில்  கிடைக்கும்.  இங்கிருக்கும் கடைக்காரர்கள் வாயில் பீடியோடு, லுங்கியும் பனியனும் அணிந்து எரிக்கா யங்கையும் ஜான் பன்யனையும், இன்னும் மற்ற எல்லா ஆங்கில இலக்கிய ஜாம்பவான் படைப்புகளையும் கரைத்துக் குடித்தவர்கள் போலப் பேசி புத்தக வியாபாரம் செய்வார்கள். இலக்கியம் மட்டுமல்ல…. பௌதிகம், ரசாயனம். பொருளாதாரம் என அனைத்துத் துறைகளின் புத்தகங்களையும் அதனதன் ஆசிரியர் மற்றும் உள்ளடக்கம் முதற்கொண்டு அந்தத் துறைப் பேராசிரியர்களை விட அதிகம் தெரிந்தவர்களாய் இருப்பார்கள். நிறைய கல்லூரி மாணவர்கள் அந்த செமெஸ்டரில் அவர்கள் சப்ஜெக்டில்  என்ன கேள்வி வரும் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கடைக்காரர்களிடம் வருவார்கள் எனக் கேள்விப்பட்டதாக இந்தச் சீனா என்னிடம் சொல்லியிருக்கிறான். அதைவிட, சில யுனிவர்சிடிகளுக்கே இவர்கள்தான் கேள்வித்தாள்கள் தயாரித்துத் தருவதாகவும் அவன் சொன்னதை நான் நம்பலாமா என யோசிக்க வேண்டியதாயிருந்தது.

அந்தக் கடைகள் பக்கம் போய்க்கொண்டிருக்கும்போது, சீனா சட்டென்று என் கையிலிருந்த எகானாமிக்ஸ் மற்றும் பேங்கிங்க் புத்தகங்களை வெடுக்கென்று பிடுங்கி, அங்கிருந்த கடைக்காரரிடம், ”  இதுக்கு எவ்ளோ தருவீங்க ” என்று விசிறி எறிந்தான். நான் பதறிப்போய், மூன்று மாதங்களுக்கு முன்தான் வாங்கியிருந்த அந்தப் புத்தகங்களை மீண்டும் பறிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன். புத்தம் புது புத்தகங்கள்…. அதன் பக்கங்களூடே கமழும் இனம் புரியாத பெப்பர்மிண்ட் வாசம் கூடப் பிரிந்திராத … இன்னும் சில பக்கங்கள்கூட வாசித்திராத… கன்னிமை கழியாத புத்தகங்கள்…. என் கல்லூரிக் காலத்தின் இளமை நிஜம் வழிய  பெருமிதத்தோடு இடது கையிலும் வலது கையிலும் மாற்றி மாற்றிச் சுமந்த கணங்கள்…   இவ்வளவு சடுதியில் என் கண் முன்னே ஒரு பழைய புத்தகக் கடையின் இரண்டாம் கை விற்பனைக்குத் தள்ளப்படுவதை … கல்கத்தாவின் பலான வீதிக்குள் தன் மகளைக் கண்டெடுத்த மகாநதி கமலின் உணர்விற்கு எந்த விதத்திலும் குறையாதத் தவிப்போடு ஒரு கையறு நிலையில் அந்தக் கடைக்காரன் கொடுத்துக் கொண்டிருந்த ஐம்பது ரூபாயைக் கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டிருந்தேன்.

சீனாவிற்கு இந்த செண்டிமெண்டெல்லாம் இல்லை. அவன்தான் சீனாவாயிற்றே….! அவனிடம் இதையெல்லாம் எப்படி எதிர்பார்க்க முடியும்…? என்னிடம் மிகவும் கேஷுவலாக , ” டேய்..!  நம்ம அவசரத் தேவைக்குன்னு சொன்னா, எதை வேணா செய்யலாம் …! நோக்கம்தான் முக்கியம்.. செயல் இல்லை… நோக்கம் மூலவர்… செயல் உற்சவர் … என எதோ பாலகுமாரன் வசனம் மாதிரி அவன் செய்ததை நியாயப் படுத்தி என்னை அப்போதைக்கு சமாதானப் படுத்த, ” உன் கைக்கு அந்தப் புஸ்தமெல்லாம் அடுத்த வாரத்தில வந்து சேரும் … கவலைப் படாதே… துணிவே துணை… அப்படி இப்படீன்னு என்னெனமோ சொல்லி… சினிமாவிற்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டான்.

நானும் ஒரு வாரத்திற்கு, சீனாவை விடாமல் நட்சத்திரேயன் போல அரிக்க, ஒரு நாள், மிகவும் பழசான ரெண்டு புத்தகங்களை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தான். அவை மெடிக்கல் ஷாப்புகளில் நாம் கேட்கும் மருந்திற்குப் பதிலாகக் கொடுக்கும் ” அதோட ஈக்விவலெண்டாக ” இருந்தன. சரி எதோ ஒண்ணைக் கொடுத்தானே என்று வீட்டிற்கு வந்து அதைப் பிரித்துப் பார்த்தேன். முன் பக்கத்தில் ஒரு ஓரமாய் அவ்வையார் காலத்து ஓலைக் கிறுக்கலாக ” சந்தானம்..பி.யூ.சீ, நேஷனல் காலேஜ் 16.07.1952 ” என்று இருந்ததின் மேல்  ” சந்தானம் அசோஸியேட்ஸ் … சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் ” என்று சீல் குத்தியிருந்தது.

Series Navigationதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 21 – மரமும் செடியும்தெளிவு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *