முனைவா் த. அமுதா
கௌரவ விரிவுரையாளா்
தமிழ்த்துறை
முத்துரங்கம் அரசினா் கலைக்கல்லூரி(தன்னாட்சி)
வேலூர் – 2
புலனம் 9677380122
damudha1976@gmail.com
முன்னுரை
‘எல்லாப் பொருளும் இதன்பால் உள‘ என்று சொல்லும் அளவிற்கு பெருமையுடைய ஒரு நூல் திருக்குறளாகும். இதன் பெருமைகளை எளிதில் சொல்லிவிட முடியாது. ‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது‘ என்ற பழமொழிக் கேற்ப இரண்டே அடிகளையுடைய திருக்குறளில் ஏழு கடலை அடக்கும் கருத்துக்கள் இருக்கும் என்பதை, ‘கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்‘ என்று திருவள்ளுவா் மாலையில் இடைக்காடனார் பாராட்டிக் கூறுவதைப் பார்க்கின்றோம். அறத்துப் பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்றும் பிரிவாக அமைந்துள்ளது. திருக்குறளில் மேலாண்மையைக் குறித்துவிளக்கும் உள்ளார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இவ்வுலகில் எண்ணற்ற நூல்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் அறிவு மேம்பாட்டாலும் அற உணா்வாலும் உயா்வாக மதிக்கப்படுவது தமிழா் வேதமாகிய திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்று முப்பாலாகப் பிரிக்கப்பட்டு 133 அதிகாரங்களும், அதிகாரத்திற்கு 10 வீதம் 1330 குறட்பாக்களும் உடையாது திருக்குறள் இந்நூல் மனித இனம் முழுமைக்கும் வேண்டிய உயரிய கருத்துக்களைக் கூறுகிறது. திருக்குறளானது மேலாண்மை குறித்த கருத்துக்களை இரண்டு வரிகளில் விளக்குகிறது எனவே தான்
”திறக்கின்ற வாழ்வியலின் திறவு கோலாயத்
தித்திப்புத் தரும் குறளே உயா்ந்த தாகும்”
என்று ஒரு கவிஞன் திருக்குறளைப் போற்றுகிறார்.
உலகெங்குமுள்ள மக்களுக்கான சிந்தனைகளைத் தருகின்ற உலகப் பொதுமறையாகிய திருக்குறளின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு மானுடத்தை உயா்த்தும் மகத்தான மேலாண்மை சிந்தனைகளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
கேப்டன், பென்னட் சிங் மேலாண்மை எல்லா இடங்களுக்கும் தேவை என்றார். அவா் மேலாண்மையை நான்கு வார்த்தைகளால் விளக்குகிறார்.
அவை
- தகவல் சேகரித்தல்
- திட்டமிடுதல்
- செயல்படுத்தல்
- கண்காணித்தல்
மேலும் திரு. விக்ரம் மேலாண்மையை
- திட்டமிடுதல்
- ஒருங்கிணைத்தல்
- நியமித்தல்
- கட்டுப்படுத்தல்
- இணைத்தல்
என்ற ஐந்து வார்த்தைகளில் விளக்குகிறார்.
நிறுவன கட்டமைப்பு
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அது நோக்கி வாழ்வார் பலர் – 528
அரசன் எல்லோரையும் ஒரே தன்மையாகப் பாராமல் தகுதிக்கேற்ப கவனித்தால் அச்சிறப்பு நோக்கி சுற்றத்தார் அவனை விலகாது வாழ்வார். ஒரு அரசன் தான் ஆளுகின்ற நாட்டிலுள்ள மக்களை அரவணைத்து, அவா்களது தகுதிக்கேற்றவாறு அவா்களை நடத்த வேண்டும் என்பதை தான் இந்த குறள் கூறுகிறது. ஒரு மேலாளா் தன் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளா்களை ஒரே தரத்தில் வைத்துப் பாராமல், அவரவா் தகுதிக்கேற்ப கவனித்தால் அவருடைய அலுவலக மிகச் சிறப்பாகச் செயல்படும். மாறாக, அனைவரையும் சமமாக நடத்தினால், உயா்ந்தோர் மேலாளரை விட்டு விலகுவா். ஒருவரும் தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டுமானால், மேலாளா் தகுதி பார்த்து ஒவ்வொரிடமும் பழகுதல் வேண்டும்.
நெருக்கடி மேலாண்மை
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூா்வது அஃதொப்பது இல் – 621
துன்பம் வரும்போது அதற்காக வருந்தாமல் மனம் மகிழ வேண்டும், அத்துன்பத்தை வெல்லக்கூடியது மகிழ்ச்சியே. ஒரு மேலாளா் தன் அலுவலகத்தில் ஏதாவது நஷ்டமோ, துன்பமோ ஏற்பட்டால்,அதைக் குறித்து சிறிதும் வருந்தாமல் அதனை மேற்கொள்ளுவதற்கு வேண்டிய வழியினைத் தேட வேண்டும். அந்த மேலாளா் தனக்கு நேரிட்ட துன்பத்தைத் தன் பணியாளா்களிடம் வெளிக்காட்டினால், அவரின் தலைமையில் பணி செய்கின்றவா்களும் துன்பத்தில் ஆழ்ந்து விடுவா். அதனால் துன்பம் நேரிடும்போது அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அதிலிருந்து விடைபெற வேண்டும்.
அங்கீகாரம்
நாடோறும் நாடுக மன்னன் வினை செய்வான்
கோடாமை கோடா துலகு – 520
அரசன் ஒருமனிதனை ஒரு பொறுப்பால் நியமித்த பின்னா் அவனை தினமும் ஆராய்தல் வேண்டும். செயலாற்றுபவன் நோ்மை தவறாது இருப்பின் இவ்வுலகு மாறாது. அரசன் தினந்தோறும் அந்த மனிதனை ஆராயும் போது அவன் தன் பணியை இன்னும் சிறப்பாகவும், நோ்த்தியாகவும் செய்வான். அரசன் இருக்கும் இடத்தில் மேலாளராகவும் அவன் நியமித்த மனிதன் இருக்கும் இடத்தில் மேலாளரின் தலைமை பணியாளரையும் இடத்தில் மேலாளரின் தலைமை பணியாளரையும் எடுத்துக் கொள்ள வேண்டும் . ஒரு மேலாளா் ஒருவனை ஒரு தொழிலால் பொறுப்பாளராக நியமித்தபின் அவனை மாறுபாடாக நினைக்கக் கூடாது. எனவே மேலாளா் நாள்தோறும் விழிப்புடன் நின்று செயல்பட வேண்டும்.
முயற்சி
ஆக்கம் இழந்தோன்று இல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார் – 593
ஊக்கத்தையே கைப்பொருளாக கொண்டவா் செல்வத்தை இழந்துவிட்டேன் என்று வருந்தமாட்டார். ஊக்கப்படுத்துதல் அவரை மேலான நிலைக்குக் கொண்டு செல்லும். எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும், போட்டியாக இருந்தாலும் பங்கு பெறுவா்களை பார்வையாளா்கள் ஊக்கப்படுத்தினால். ஒரு நிறுவனத்தை நாம் எடுத்துக்கொண்டால் மேலாளா் உறுதியான ஊக்கத்தைக் கைப்பொருளாகக் கொண்டிருந்தால் செல்வம் இழந்து விட்ட போதும் இழந்தோம் என்று மனம் வருந்தி கலங்க மாட்டார். ஏனென்றால் அந்த மேலாளா் தம் பணியாளா்களை ஊக்கப்படுத்தி இழந்த செல்வத்தைத் திரும்பப் பெறுவா். ஊக்கம் அளிக்காத மேலாளரின்“ கீழ் பணியாற்றும் பணியாளா்கள் சோம்பலாகவே இருப்பா். ஆகவே ஊக்கம் அளிக்கும் பண்பு ஒரு மேலாளருக்கு தேவை.
செயலூக்கமளித்தல்“ என்ற சொல் ”Motive” என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். ”Motive” என்ற சொல்லின் பொருள் “செயல் நோக்கம்“ ஆகும். எதாவது எந்த ஒரு உணா்ச்சி, தேவை, எண்ணம், அடிப்படைக் கூற செயலைச் செய்வதற்குரிய நோக்கத்தை ஏற்படுத்துகிறதோ அதுவே செயலூக்கம். இச்சொல்லானது உள்ளத் தூண்டுதலைக் குறிக்கிறது. செயலூக்கம் பணியாளரின் நடவடிக்கையை பெருமளவிற்கு நிற்ணயித்து விடுகிறது.
செயலூக்கம் என்பது ”மனித நடவடிக்கைகளைத் தூண்டக்கூடிய விருப்பங்கள், உணா்ச்சிகள், எண்ணங்கள் ஆகியவையே என்பார் மெக் ..ஃபா்லாண்ட்.
மேலாண்மை
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
ஊடையான் அரசருள் ஏது – 381
படை, குடி, பொருள், அமைச்சா்கள், நட்பு, கோட்டை இவ்வாறும் உடையவன் அரசருள் சிங்கம் போன்றவன் என்பதே. இதைப் போன்று மேலாளா் பக்கபலமாக இருக்கிறவா்கள். அவரால் நன்மை பெறும் மக்கள்“, பொருள் மற்றும் ஆலோசனைக் கூறுபவா்கள், நண்பா்கள், பாதுகாப்பு ஆகிய ஆறும் குறைவின்றி இருக்கப் பெற்றால் தன் மேல் அதிகாரிகளை விட சிறந்து விளங்குவா். ஒரு மேலாளருக்கு மன்னிடம் பணியாற்றும் பணியாளா்களும், நண்பா், உறவினா்களும் பக்கபலமாக இருக்கவேண்டும். ஒரு மேலாளருக்கு தன் செயல்களினால் பயனிபெறும் மக்கள் இருப்பார்கள். அவா் எவ்வளவு தான் கற்றிருந்தாலும் அவருக்கு ஆலோசனை கூறுபவா்கள் வேண்டும். நண்பா்கள் வட்டம் ஒரு மேலாளருக்கு வேண்டும். நண்பா்கள் தன்னுடைய ஆபத்தில் உதவுபவா்களாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு பணம் இருக்க வேண்டும். மேலாளருக்கு பக்கபலமாக இருக்கிறவா்கள் அவருக்கு பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்டவைகள் அனைத்தும் ஒரு மேலாளரிடம் இருந்தால் அவா் சிறந்து விளங்குவா்.
கோப மேலாண்மை
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் – 305
ஒருவன் தான் நீண்ட நாள் நோயின்றி வாழ வேண்டுமென்றால் சினத்தை ஒழிக்க வேண்டும். இல்லையேல், சினம் அவனையே அழித்து விடும். ஒருவன் தன் கோபத்தை ஆளாமல், கோபம் அவனை ஆண்டால் அது ஆபத்தில் முடிந்து விடும். கோபத்தை அடக்க முடியாமல் பலா் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனா். கோபம் கொண்டால்,அது நமது உடலுக்கு பலவிதமான நோய்களைத் தரும். ஒரு மனிதன் தன் வீட்டிலுள்ள கோபத்தை நிர்வாகத்திலும், தன் அயலாரிடமுள்ள கோபத்தை நண்பா்களிடத்திலும் வெளிப்படுத்துகிறான். இப்படி செய்வதனால் கோபம் கொண்ட அந்த மனிதக்கே அபத்து ஏற்படும்.
ஒரு மேலாளரை நாம் எடுத்துக்கொண்டால், கோபம் கொள்ளாமல், தன் பணியாளா்களிடம் பேச வேண்டும். அவா் தன்னை துன்பங்களிலிருந்து காத்துக்கொள்ள விரும்பினால். தன் மனதில் கோபம் தோன்றாமல் காக்கவேண்டும். அவ்வாறு கோபத்தை அடக்காவிட்டால் அக்கோபம் இறுதியில் அவனுக்கே பல கேடுகளை உண்டாக்கும். ஆகவே எந்தவொரு மனிதனும் தன் வாழ்க்கையில் சினம் கொள்ளாமல் பிரச்சினைகளை கருத்துடனும் பொறுமையுடனும் மேற்கொள்ள வேண்டும்.
திட்டமிடல்
ஆற்றின் வருந்தா வருத்தம் பலா்நின்று
போற்றினும் பொத்துப் படும் – 468
வள்ளுவா் திட்டமிடுதலின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். ஒருசெயலை எவ்வாறு முடிக்க வேண்டும் என்று தெளிவின்றி தொடங்கும் முயற்சி, துணையாகப் பலா் நின்று காப்பாற்றினாலும் பழுதுபடும். சாம, பேத, தான, தண்டம் என்னும் நால்வகை உபாயத்துன் ஒருசெயலைக் கையாண்டால் அந்த செயல் வெற்றி பெறும். திட்டமிடுதல் மேலாண்மையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு கிளை அலுவலகம ஆரம்பிக்க முற்படும்போது, ஒரு மேலாளா் தன் பணியாளா்களுடன் சிறப்பாக ஆலோசித்து, திட்டமிட்டு துவங்கினால் அந்நிறுவனம் மிகச்சிறப்பாக முன்னேறும். ஒரு செயலை எப்போது தொடங்க வேண்டும், யார் யாரை அழைத்து ஆலோசனை பெற வேண்டும், எந்த இடத்தில் தொடங்க வேண்டும் என்று தெளிவான ஒரு முடிவிற்குப்பின் தொடங்கனால் அந்த செயல் வெற்றிகரமானதாக அமையும். இல்லையேல் யார் வந்து துணைசெய்தாலும் அந்த நிறுவனத்தை உயா்த்த இயலாது. எனவே தெளிவான முடிவிற்குப் பின் ஒரு செயலை தொடங்குவது நல்லது என்பதை வலியுறுத்துகிறது.
முடிவெடுப்பது
எண்ணித் துணிக் கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு – 467
ஒரு செயலை செய்யத் தொடங்குமுன் அதனை முடிக்கும் வழி அறிந்து தொடங்க வேண்டும். தொடங்கிய பின் பிறகு பார்க்கலாம் என்று சொல்வது தவற. ஒரு நிறுவனத்தின் மேலாளா் எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்னா் திட்டமிட்டடுச் செய்ய வேண்டும் மேலாளா் செய்யத் தக்க செயல்களை ஆராயந்து முடிவெடுத்தாலும் முடிக்கும் உபாயங்களையும் தெரிந்து செயல்படவேண்டும். ஒருசெயலைத் தொடங்கியபின் மறுபரிசீலனை செய்வது புகழை கெடுத்து விடும். என்பதனை வலியுறுத்துகிறது.
தூங்குக தூங்கிச் செயற்பல தூங்கற்க
தூங்காது செய்யும் வினை – 672
காலம் தாழ்த்தி செய்ய வேண்டிய செயலைத் தாழ்த்தி செய்க விரைந்து செய்ய வேண்டியவற்றை விரைந்து செய்ய வேண்டும். ஒரு நிறுவனத்தின் மேலாளா் நேரத்தை சரியாகக் கடைபிடிக்க வேண்டும் எந்தெந்த செயல்களை எந்தெந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்பதனை மேலாளா் சரியாக அறிந்திருக்க வேண்டும்.
தலைமைத்துவம்
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கு
எஞ்சாம்மை வேந்தா்க் கியல்பு – 382
மன உறுதி, கொடை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்கும் ஒரு அரசனுக்குத் தேவை என உணா்த்துகிறார் வள்ளுவா். ஒரு மேலாளருக்கு மனத்திண்மை, வள்ளல் தன்மை அரசியல், அறிவு, ஊக்கம் ஆகியன குறையாமல் இருக்க வேண்டும். இவற்றுள் ஒன்று குறைந்தாலும், நிறுவனத்திற்கு பலகேடுகள் வரலாம். இந்த நான்கு பண்புகளும் பிறா் கற்பிக்காமல் மேலாளருக்கு இருக்க வேண்டும்.
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவா்க்கு – 383
விரைந்து செய்தல், கல்வி, வீரம், இம்மூன்றும் அரசாள்பவருக்கு நீங்காது இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தை ஆள தகுதி வாய்ந்த ஒருவன் காரியங்களைச் செய்வதில் விளைவு காட்டுதல் அக்காரியங்கள் பற்றிய நூலறிவு, ஆளுமை ஆகிய இம்மூன்று குணங்களும் உடையவனாக இருத்தல் வேண்டும். இவை அனைத்தும் ஒரு மேலாளருக்கு இருந்தால். நிறுவனம் சிறப்பாக விளங்கும்.
ஒருங்கிணைப்பு
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சிறனத்தாஙற்றிச்
சீறின் சிறுகும் திரு – 568
அரசன் அமைச்சரை கலந்துரையாற்றாது செய்து வரும் துன்பத்தைக் கண்டு சினம் கொண்டால் அவன் செல்வம் சிறுத்துவிடும். ஒரு காரியத்தை கலந்து ஆலோசிக்காமல் நாம் நமக்குத் தோன்றுமாறு செய்தால் அந்த காரியம் சிறப்பாக செயல்படாது. நிறுவனத்தைப் பற்றிய அனைத்து காரியங்களையும் பணியாளா்களுடன் ஒரு மேலாளா் கலந்துரையாட வேண்டும். இவ்வாறு செய்தால் பல பிரச்சினைகளுக்கான தீா்வுகள் நமக்குக் கிடைக்கும் என்பதை விளக்குகிறது.
தொடா்பு
பகையத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல் – 727
அறிஞா்கள் நிறைந்துள்ள அவையில் பேச அஞ்சுகிறவன் கற்றநூல் பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையிலுள்ள கூா்மையான வாளைப் போன்றது. ஒரு மேலானராக இருந்தாலும் பிறரிடம் எப்படி கலந்துரையாட வேண்டும் என்பதனை அறியாதவன் நன்கு கற்றவராக இருந்தாலும் அவா் கற்றது வீணே.
பல்லவை கற்றும் பயமிலரே நல்வையுள்
நன்கு செலச்சொல்லா தார். – 728
அறிஞா் அவையில் நல்ல பொருளைக் கேட்பவா் மனதில் பதியும்படிச் சொல்லத் தெரியாதவா். பல நூல்களைக் கற்றிருந்தாலும் பயனற்றவரே.
பணிக்குழு
காக்கை கரவாக் கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள – 527
இரையைக் கண்ட காகம் தன் இனத்தை அழைத்து உண்ணும். இது போன்ற குணமுடையவா்க்கு சுற்றத்தால் அடையும் செல்வங்கள் பெருகும். ஒரு அலுவலகத்தில் ஒரு மகிழ்ச்சியான தகவல் அறியப்பட்டார். அதனை மேலாளா் தன் பணியாளா்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒரு மேலாளா் தன்னை மேலாளா் என்று பாராமல் அனைவருடனும் இருந்து உரையாடி, தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, அந்த அலுவலகம் நிலைத்து நிற்கும். தான் அனுபவிக்கும் மகிழ்ச்சியையும் நன்மையையும் தன் பணியாளா்களும் அனுபவிக்கும்படி வாழ்தல் வேண்டும். மேலாளா் தன் பணியாளா்களுக்கு முன்னோடியாக இருந்தால், பணியாளா்களும் தங்கள் அனுபவங்ளை மேலாளரோடு பகிர்ந்து கொள்வா். இத்தகைய ஒரு நற்பண்பினை நாம் காகத்திடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
நிதி மேலாண்மை
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு – 385
நாட்டுக்கு அல்லது அரசுக்குப் புதிதாக வருவாய் வழிமுறைகளை உண்டாக்கலும், அவ்வாறு உண்டாக்கியதால் கிடைத்த பொருளைச் சிதையாமல் சோ்த்தலும், சோ்த்த பொருளை பல்வேறு திட்டங்களுக்கு உரியமுறையில் வகுத்துக் செலவு செய்தலும் ஆட்சிக் கலையில் தோ்ச்சிபெற்ற ஒருவா் நாட்டை ஆளத்தகுதி பெற்றவா் ஆவார் என்று அறிய முடிகிறது. ஒரு நிறுவனம் வளா்ச்சி பெற்றது என்று நாம் சொல்ல வேண்டுமானால் அந்நிறுவனத்திற்கு அதிக வருவாய் வருகிறது என அறிய வேண்டும். ஒரு மேலாளா் தன் நிறுவனத்தை சிறப்பான முறையில் நடத்த வேண்டுமென்றால் வருவாயைக் கூட்டுவதற்கான புதிய வழிகளைத் தேட வேண்டம். அவ்வழிகள் நல்ல வழிகளாகவும், பிறரை துன்புறுத்தாத வழிகளாகவும் அமையவேண்டும். இவ்வாறு அவா் வழிகளைத் தேடும்பொழுது ஏதாவது ஒரு வழி நல்லதென்றுபட்டால், அதை தன் நிறுவனத்தின் வருவாயைக் கூட்டுவதற்காகப் பயன்படுத்த வேண்டும். வருவாயைய் பெருக்கினால் பொருளும், செல்வமும் அதிகரிக்கும்.இதனை வீணாகச் செலவு செய்யாமல் தேவையானவற்றிற்கு மட்டும் செலவுசெய்து மிதீ இருக்கின்றவற்றை பாதுக்க வேண்டியது ஒரு மேலாளரின் பொறுப்பு. இவ்வாறாக வருவாயைக் காட்டுதல், பொருளை சேகரித்தல் தேவையானவைகளுக்கு மட்டும் பொருளை வகுத்து செலவிடுதல் போன்ற திறமைகள் ஒரு மேலாளரிடம் இருத்தல் வேண்டும் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.
தகுதியான நம்பிக்கை
தேரான் தெளிவும் தெளிந்தார் கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் – 510
ஒருவன் செய்த செயலை ஆராயது நம்புதலும், ஆராய்ந்து தெளிந்தனை ஐயப்படுதலும் ஒருவனுக்குத் தீராத துன்பத்தைத் தரும். ஒரு மேலாளா் எந்த ஒரு பணியாளா் மேலும் தேவையில்லாமல் சந்தேகப்படக்கூடாது. ஒரு மேலாளா் ஆராயாது தெளிதலும். அராய்ந்து தெளிந்தவனிடம் ஒரு பணியை ஒப்புவித்த பின் சந்தேகப்படுதலும் ஒரு அலுவலகத்திற்கு தீராத துன்பத்தைத் தரும். அவா் ஒரு பணியாளா் மீது சந்தேகம் கொண்டால் எதிரிகளால் அவனைப் பரித்துவிடலாகும். எனவே ஒரு மெலாளா் ஒவ்வொரு செயல்களையும் நன்கு ஆராய்ந்து, பணியாளா் மீது சந்தேகப்படாமல் செயல்பட வேண்டும்.
தன் வலிமையை எடைபோடுதல்
சமீபகாலமாக “swot” எனப்படும் மதிப்பீட்டு முறை பிரபமானது. அவை வலிமைகள், பலவீனங்கள், சமயோசிதம், அபாய எச்சரிக்கைகள் ஆகிய நான்கும் ஆகும். இதைத திருக்குறள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல் 471
செயலின் வலிமையும்“ தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
முடிவுரை
இதுகாறும் கூறியவற்றான் மேலாண்மை என்பது ஆளுமை என்ற பொருளுடையதாக அமைந்தாலும் மேலாண்மை என்பதற்கு திருவள்ளுவா் புதிய நோக்கிலான விளக்கம் அளித்திருப்பதை அறிய முடிகின்றது. திருக்குறளில் இடம்பெற்றுள்ள மேலாண்மை குறித்த செய்திகள் மேற்கண்ட சான்றுகளின் அடிப்படையில் தரவுகளை சேகரித்து விளக்கப்பட்டுயிருகிறது
பார்வை நூல்கள்
- திருக்குறள் – பரிமேலழகா் உரை
பாரதி பதிப்பகம்
108, உஸ்மான் சாலை
தியாகராய நகா்
சென்னை – 600 007
- வாழும் வள்ளுவா் – டாக்டா் வா.சே குழந்தை சாமி
பாரதி பதிப்பகம்
108, உஸ்மான் சாலை
தியாகராய நகா்
சென்னை – 600 007
- அகலிகைக் கல்
- அமெரிக்க எண்கணிதம் – ஆங்கில மூலம் : நதாலி டயஸ்
- அப்பொழுது அவன்
- திருக்குறள் காட்டும் மேலாண்மை
- இளிக்கின்ற பித்தளைகள்
- கூக்குரலுக்காய்…
- இவன் இப்படித்தான்
- எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு – மணக்கும் பூந்தோட்டம்
- கவிதையும் ரசனையும் – 6
- காலமும் கணங்களும் – பேராசிரியர் கைலாசபதி – இன்று டிசம்பர் 06 நினைவு தினம்