மு.கவியரசன்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
தூய சவேரியார் கல்லூரி – தன்னாட்சி
பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
7397164133
எழுத்து பல வகைப்படும். ஒவ்வொரு எழுத்தும் தனித்துவமாக விளங்குவதற்கு தனித்துவமான தன்மைகள் அதற்குள் இருந்தாக வேண்டும். அப்போதுதான் அவ்வெழுத்து உயிர்ப்பெற்று சமூகம் எனும் நிலப்பரப்பிற்குள் அலைந்து திரியும். முன்னாள் துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி அவர்களின் எழுத்தும் அலைந்து திரிகிறது. முட்டி மோதிக்கொள்கிறது. இம்மோதல் எங்கிருந்து தொடங்குகிறது என்பதுதான் கேள்வி. கல்விப்புலத்தில் இருப்பவர்களின் மனநிலை என்பது வேறு. கல்விப்புலம் இல்லாதவர்களின் மனநிலை என்பது வேறு. ஆனால் இவ்விருவர்களின் எழுத்து நோக்கம் மனிதச் சமூகத்தில் தேங்கிக்கிடக்கும் சகதிகளையும், படிந்திருக்கும் அழுக்குகளையும், மேடுபள்ளங்களையும் குறிப்பது. அப்படி பார்க்கையில் எழுத்துக்கள் மாறுபடுமே தவிர பொருள் ஒன்றுதான். இந்நூலாசிரியரின் எழுத்து பழைய நினைவுகளை எழுத்தின் வழியாக முன்தள்ளி, தற்போது நடந்து முடிந்த – நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, முன்வைத்து தொடங்கிச் செல்கிறது.
எழுத்தின் உரசல்கள்:
மனித வாழ்க்கையை மனிதன் என்றோ மறந்துவிட்டான். ஆசைகள் ஒருபுறம் இருந்தாலும், அவ்வாசையே அவனின் வாழ்க்கையாக மாறும்போது அங்கே நிலையான, அமைதியான, நிம்மதியான கேள்விகளுக்கு பதில் இல்லாமல் போய்விடும். ஆசைகளெல்லாம் இன்று பணமுடிச்சுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றன. அம்முடிச்சுகளை வேகமாக அவிழ்க்க வேண்டும் என்னும் எண்ணம் தோன்றும் போது எல்லாம் அரக்கப்பறக்கத்தான் நடைபெறும். வாழ்க்கையும் அப்படித்தான். காசிற்கு கல்வி வியாபாரம் பெரும் தலைகளுக்கு நல்ல வருமானத்தைக் கொடுக்கிறது. ஆனால் பேச்சளவில் தலைகீழாக பேசிக்கொள்கிறார்கள். இது ஒருவகை என்றாலும், செல்லம்பாளையம் பெருந்தகை நல்லமுத்துக்கவுண்டர், நா.மகாலிங்கம், வித்யாசாகர் இவர்களின் ஆளுமைகள் பற்றிய செய்திகள் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
கல்வியைச் சம்மாகவும், அதற்காகத்தான் பணத்தைச் சேர்த்தார் என்கிற செய்தியும் முக்கியமாக பார்க்க வைத்திருக்கிறது. எந்தச் செயலையும் சொல்வது சுலபம். நடைமுறையில் செய்துகாட்டுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதைத் தொடர்ந்த அவர் விதைத்த கல்வி விதை கிராமப்புற வளர்ச்சிக்கும் எடுத்துக்காட்டாக ஔர்கின்றது என்று குறிப்பிடுகிறார். தற்போது சிலபேர் கிராமம் நகரமாக மாற்றப்பட வேண்டும் என்று கூச்சலிடுகிறார்கள். கிராமம் கிராமமாக இருப்பதுதான் நல்லது. கல்வி, கல்விக்கான நிலைப்பாடுகள், அதற்கு ஆற்றியவர்களின் ஆளுமைகள் முன்னெடுப்பதும், எப்போதும் நினைவிற்குள் அகற்றப்படாமல் இருப்பதே நல்லது.
இரண்டு தீபாவளிகள் என்னும் கட்டுரையில் ஆழ்துளைக் கிணறு விழுங்கிய இரண்டு உயிர்களைப் பற்றிய வருத்தங்களை முன்வைக்கிறார். அதற்கு முன் சொல்லுதலாக வண்ணத்துப் பூச்சியை வைத்துத் தொடங்குகிறார். இக்கட்டுரையின் முடிவில் ‘சமூகம் கண்விழிக்க வேண்டும்’ என்கிறார். ஆழ்துளைக் கிணறு ஏன் வருகிறது. தண்ணீர் சிக்கல் வரும்போது. அப்போது நாம் நீர்மேலாண்மைக்குள் சென்றாக வேண்டிய கட்டாயம் பிறக்கிறது. நீர் வற்றிப்போனால் வாழ்க்கையே வற்றிப்போகும். அதைப் பற்றிய சிந்தனையை விதைத்துக்கொண்டே வரவேண்டும். என்றாவது ஒருநாள் விதை வளரும். இல்லையென்றால் சமூகம் கண்விழிப்பது கடினம்தான்.
நாணயவியல்கார்ர் ஆர்.கே எனும் கட்டுரையிலும் இரா.கி அவர்களின் சிறப்புக்களையும், தொண்டுகளையும் நினைவுக்கூர்கிறார். தமிழுக்கும், தமிழ் மொழிக்கும் சிறப்பான பயன்களைப் பெரும் அளவிற்கு நாளிதழ் துறையில் விளங்குகிறார். பலத் தகவல்கள் அடுக்கடுக்காகக் குறிப்பிடுகிறார். ‘தன்னால் முடியாத்தைத் தனக்குத் தெரிந்த மற்றவர்கள் செய்துவிடக்கூடாது என்ற உள்ளெண்ணம் உயர்நிலை ஆய்வாளர்களுக்கும் உயரளவில் உண்டு’ (ப.38). இவ்வார்த்தை எல்லாத் துறைக்கும், இடத்திற்கும் பொருந்தும் படியாக அமைகிறது.
பாலில் சர்க்கரை பழுதாகலாமோ? என்னும் கட்டுரையில் சிறுபான்மை, பெரும்பான்மை எனும் சொல்லாடல்கள் – அதன் வரையறையை விவரித்துச் சொல்லும் பாணி முக்கியத்துவம் வாய்ந்த்தாக அமைகிறது. முன்னும், தற்போதும் வர்க்கப் போராட்டம், அதுசார்ந்த இயங்கு நிலைகளைத்தான் முன்னெடுத்து விவாதங்களும், போராட்டங்களும் நடைபெறுகின்றன. முதலாளி – அவரின் கீழ் வேலைப்பார்க்கும் மனிதர்கள் என இருநிலைப்போக்கு என்பது தொடர்ந்து தொடர்கிறது. அடிப்படையில் இவ்வியங்கியல் பொருத்தப்பட்டிருக்கும் சூழ்ச்சியை முதலில் புரிந்துகொள்ளுதல் அவசியம். ஒரு வேலையாள் திடீரென்று தொழில் ரீதியாக முன்னேறிவிட்டால் அவன் முதலாளி அந்தஸ்த்தைப் பெறுகிறான். பின் அவனும் வர்க்கத்தின் சுழலுக்குள் வரும்போது, அவனுக்குக் கீழும் வேலையாட்கள் நிர்வகிக்கப்படுகிறார்கள். இது ஒருவிதமான சுற்றக்காரணிகளாக திரும்பத்திரும்ப வருகின்றது. இந்த அடிப்படையில்தான் பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற முறையிலும் பின்னப்பட்டிருக்கிறது. அந்தஸ்தும், பணப்பெருக்கமும் இதை உறுதிசெய்கின்றன.
இருப்பினும், சீக்கிய மதம், இந்து – இஸ்லாமிய இணக்கங்களையும், ஒற்றுமைத் தன்மையும், தனித்து சிறந்து விளங்கியதைப் பற்றியும் விவரிக்கிறார். எல்லாம் இருந்தாலும் மதம், சாதி, அரசியல் இவைகளைத் தாண்டிய பண்பாட்டு நெறிகள் பலவகை உண்டு. இன்றையக் காலத்தில் பாலும் கலப்படம். சர்க்கரையும் கலப்படம். பழுதுகளும் இருக்கத்தான் செய்கிறது.
பிரிவின் வழியும் – தவிப்பும்:
ஜானி, நாய் – பூனை – நான், என்னும் இவ்விரண்டும் கட்டுரைகளாக அல்லாமல் சிறுகதைகளாக வெளிப்பட்டிருக்கிறது. ஜானி எனும் உயிர்தான் திரும்பத்திரும்ப எழுதியவரின் நினைவிற்குள் வந்துபோகிறது. இது ஓர் பிரிவின் துயரமாக அவருக்கு கொடுத்திருக்கிறது. இதன் வழியாக மனிதனை ஒப்பிடும் நிலை முறையினையும் எழுத்திற்குள் கொண்டு வருகிறார். ‘பொதுவில் அலுவலகத்தில் எனக்கு வேறு விதமாகப் பாராட்டுக் கிடைக்கும்! அங்கு சில சமயங்களில் என் குரல் உரத்திருக்கும். என் குரலை அப்படி ஏற்றியவர் வெளியில் போய் என்னை, ‘அது கத்துது!’ என்றுதான் சொல்லியிருப்பார்’ (ப.22). இவ்வாக்கியங்கள் நடைமுறையில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கை மனிதனுக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறது. ஆனால் இங்கே முரண்பாடுகளே முன்வருகிறது. ஜானி எனும் நாயை முன்வைத்து தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைப் பதிவுசெய்கிறார். இரண்டுமுறை நாய் வளர்த்தும் அவ்வுயிர் தங்காத நிலை. முதல் உயிர் நோயுற்று இறந்துவிடுகிறது. சில காலங்கள் கழித்து திரும்பவும் மற்றொரு உயிரை வாங்கி அதற்கும் ஜானி என்றே பெயர்சூட்டி வளர்க்கிறார். காலக்கொடுமை அதற்கும் நோய் வருகிறது. அதன்பின் அவர் குறிப்பிடும் செய்தி மருத்துவம் சார்ந்து நிலைபெறுகிறது. இரண்டு மருத்துவரை அறிமுகப்படுத்துகிறார். ஒருவர் அப்படி சொல்லுகிறார். மற்றொருவர் இப்படி சொல்கிறார். எது எப்படியோ நாயின் உயிர்தான் பரிதாபத்தில் முடிந்துவிட்டது. நாயின் உயிராக இருந்த்தால் மேல்முறையீடு இல்லை. மனித உயிராக இருந்தால், நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
அதைத்தொடர்ந்து பூனைக்குட்டி வருகிறது. எவ்வளவுதான் துரத்திவிட்டாலும், ஒரு இடம் பிடித்துவிட்டதென்றால் அதன் மனதிலிருந்து அவ்விடத்தை விரட்டியடிப்பது கடினம் தான். மனிதனைக் காட்டிலும் மற்ற உயிர்கள் எப்போதும் பாசத்தோடு இருக்கும். பூனைக்குட்டியும், நாயும் ஒரு குறியீடு. அனுபவங்கள் பரிதவிப்பைச் சொன்னாலும், அதற்குள் ஒளிந்திருக்கும் அன்பும், அக்கறையும் முக்கியமானதுதானே.
அந்த 22 நாள்கள் எனும் கட்டுரையில் மருத்துவர்களின் மனநிலை பேசப்பட்டிருக்கிறது. இதில் முக்கியமாக ‘நீங்கள் அறிவியல் பேராசிரியர் – வகுப்பறைக்குச் சென்று பாடம் எடுக்கப் பயந்து கொண்டீர்களா? நாங்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததும் முதல் வகுப்பில் எங்கள் ஆசிரியர்கள் சொன்னது, ‘இனி மேல் உங்களின் பணி, நோயாளிகளைக் காப்பது – மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்’ என்ற உணர்த்துதல் தான்! எனக்கும் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அந்தப் பயமெல்லாம் வரக்குடாது!’ (ப.34). இவ்வார்த்தைகள் முக்கியம். கொரனோ தாக்கத்தில் மருத்துவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது. டாக்டர் நல்ல பழனிசாமிக்கு இறுதியில் தொற்று ஏற்படுகிறது. மற்றவர்களைக் கவனித்துக் கொண்டாலும், ஜானி இறப்பதற்கு மருத்துவத்தின் செயல்முறை வித்யாசம் ஒன்றென்றால், மருந்து கண்டுபிடிக்காத நேரத்தில் இந்நோயினால் பாதிக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்களின் நிலையையும் மதிப்புக்கொடுக்க அவர்களின் நிலையினை உணரும்படியான எழுத்துக்கள் இருக்கின்றன.
எண்ணிக்கையா? தரமா?:
பல விதைகள் இருந்தாலும் சிறந்ததே சிறப்பாக வளரும். நல்ல சமயமிது நழுவ விடலாமோ? என்னும் கட்டுரையில் இதைத்தான் வழியுறுத்துகிறார். ஆராய்ச்சிகளும், ஆய்வுகளும் எண்ணிக்கையில் அதிகமாக இருந்து என்ன பிரயோஜனம். தரம் என்பவையே தனித்த நிற்கும். இந்தியாவில் ஆய்வுக் கட்டுரைகள் அதிகம் வெளிவந்தாலும், அதில் குறைவான தரம் மட்டுமே இருப்பது, ஆய்வுத்தளங்களில் தலைகீழ் மாற்றமாக இருக்கிறது.
பதவிகள், அதற்கான குளறுபுடிகள் இருப்பதனால் ஆய்வுகள், கட்டுரைகளின் தரம் குறைகின்றன. தகுதியானவர்கள் குறைவு என்றும் ‘வெறும் எண்ணிக்கைக்குள் முன்னிறுத்தப்பட்டு, தரம் பின்னுக்குத் தள்ளப்படும் வகையிலிருக்கும் சட்டதிட்டங்கள் திருத்தப்பட வேண்டும். மாண்பமை அரசும், மேதகு ஆளுமை அவர்களும் இதற்கு வழிவகுக்க வேண்டும்’ (ப.51). இவ்வாக்கியங்கள் ஒன்னே போதும். சீர்படுத்திக் கொள்ளக்கூடிய அறிவும், தெளிவும் இங்கு குறைவுதான். வாய்ப்புகள் சிலரால் தன்வசப் பட்டிருக்கிறது. என்பதுதான் உண்மை.
சவால்களுக்குள் பிணங்கிப் போனவைகள்:
புதிய கல்விக் கொள்கை 2020 – சார்ந்த கட்டுரைகள் மற்றவையைப் போன்று முக்கியமானதே. தரமதிப்பீடு தேவையான ஒன்று. ஆனால் அதற்கான பண உதவிகளும் மறுக்க முடியாத ஒன்று. தேசிய மதிப்பீடு தர நிர்ணயம் சில கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் எடுத்துச்சொல்லி அவற்றை நடைமுறைப்படுத்தக் கட்டாயப்படுத்துகிறது. அத்தகுதி இல்லாத கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் கிராமத்தில் அமைந்திருப்பவை. மேம்பாட்டிற்கான வழிமுறைகளை முன்னெடுத்து வைக்காமல், கல்லூரிகளைப் புறம் தள்ளினால் பாதிக்கப்படுவது கிராமப்புற மாணவர்களே. என்பதை சான்றுகளுடன் கட்டுரை அமைந்திருந்தாலும், அடுத்தக் கட்டுரையில் மொழி சார்ந்த தேவையை முன் வைக்கிறார்.
உயர் கல்வியில் வட்டார மொழிகளுக்கு முன்னுரிமை எனும் மாய பிம்பத்தை அவர்கள் புகுத்துகிறார்கள். “உயர்கல்வி அமைப்புக்களில் வட்டார மொழிகளில் பயிற்றுவிக்க வேண்டுமென்ற திட்டமும் நடைமுறையில் இருக்கவே செய்கிறது. தன்னாட்சிக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்பது புதிய கல்விக் கொள்கையின் குறிக்கோளும் புதுமையானதல்ல. சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் அமைந்திருக்கும் பெரும் எண்ணிக்கையிலான கல்லூரிகள் உரிய தகதிகள் இல்லாத்தாலேயே இப்போது தன்னாட்சி பெற முடியாமல் இருக்கின்றன” (ப.60). கல்வி நிலையங்கள் இப்படி தடுமாறும்போது ஏற்புடைய மனங்கள் வருவது சந்தேகமே. அந்த மொழி சார்ந்த தேவைக்கு அந்தந்த மொழியே சரியானதாக இருக்கும். ஆங்கிலம் முக்கியம் என்றாலும், அவற்றின் வழியாக கிடைக்கப்பெறும், அதுசார்ந்த அறிவியல் – தொழில்நுட்ப துறைகளுக்கு நிதி என்பது தடைபடாமல் கிடைக்கும். ஆனால் வட்டார மொழிகளுக்கு முக்கியம் என்று வரும்போது, இதற்கான நிதியும், காலமும் தனிப்பிரிவுக்குள் கொண்டுவர வேண்டும். நடைமுறை சாத்தியங்கள் என்பதும் சவாலுக்குள் பிணங்கிப் போகுமா? இல்லை மாறுமா என்பது, அக்கறைக் கொண்டவர்களின் மனநிலையில்தான் உள்ளது.
முன்னாள் துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி அவர்களின் கட்டுரைகள் அறிவு எச்சரிக்கை – அக்கறைக்கொண்ட வகைக்குள் அடக்கம் பெறுகின்றன. ஆதங்கமாக இருக்கட்டும் – எப்போது மாற்றம் காணும், கல்விக்காக தங்களின் பயணத்தை முன்னெடுத்தவர்கள், கிருமிகள் பற்றிய தகவல்கள் போன்ற நிறைய அனுபவ நுணுக்கங்கள் கிடைக்கின்றன, அச்சாகியுள்ள 14 கட்டுரைகளிலும்.
- சுவேதா
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 22 – பாரிமுனை டு பட்ணபாக்கம்
- ஆல்- இன் – வொன் அலமேலு
- ஒரு கதை ஒரு கருத்து – பாரதியாரின் ஸ்வர்ண குமாரி
- வரலாற்றில் வளவனூர்
- இஸுரு சாமர சோமவீர – ‘திருமதி. பெரேரா’ எனும் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு
- எழுத்தின் உரசல்களும் பழுதின் காரணங்களும் – ப.க.பொன்னுசாமி அவர்களின் எழுத்து
- வார்த்தை தவறிவிட்டாய் ட..டீ..ய்..!
- என் செல்லக்குட்டி கண்ணணுக்கு..!
- தோள்வலியும் தோளழகும் – இலக்குவன்
- சொல்வனம் இணைய இதழின் 236 ஆம் இதழ்
- பதிவுகள்
- அனார் கவிதைகள்- ஒரு சுருக்கமான அறிமுகம்
- அமரர் “கலைஞன்” மாசிலாமணி – கலைஞன் பதிப்பகம்
- மொழிபெயர்ப்புக் கவிதைகள்