அனார் கவிதைகள்- ஒரு சுருக்கமான அறிமுகம்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 13 of 15 in the series 13 டிசம்பர் 2020
(அனார்)

                              பேராசிரியர் எம். ஏ. நுஃமான்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய  கலைச்சங்கம் நடத்தும் அனார் கவிதைகள் பற்றிய கலந்துரையாடலைத் தொடக்கிவைக்கும் முகமாக அனாரை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு சிறு குறிப்பை அனுப்பிவைக்குமாறு நண்பர் நடேசன் என்னைக் கேட்டுக்கொண்டார். அனாருக்கு புதிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை எனினும், கருத்தரங்கச் சம்பிரதாயத்துக்காக நான் இந்தச் சிறிய அறிமுகக் குறிப்பை உங்கள் முன்வைக்கின்றேன்.

அனார் 1990 களின் நடுப்பகுதியில் கவிதை எழுதத் தொடங்கினார் என்று நினைக்கிறேன். எனினும் அவருடைய ஆரம்ப காலத்திலேயே, 2004  இல் வெளிவந்த அவருடைய முதலாவது கவிதைத் தொகுதி ஓவியம் வரையாத துரிகை இலங்கை சாகித்திய விருதும், மாகாண இலக்கிய விருதும் பெற்றது.


கடந்த சுமார் பதினைந்து ஆண்டுகளில் ஓவியம் வரையாத தூரிகை உட்பட அவரது ஐந்து கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. எனக்குக் கவிதை முகம் (2007), உடல் பச்சை வானம் (2008 ), பெருங்கடல் போடுகிறேன் (2013), ஜின்னின் இரு தோகை (2017) என்பன அவை. இந்த ஐந்து தொகுதிகளிலும் மொத்தம் 151 கவிதைகள்தான் உள்ளன.


அவர் எழுதத் தொடங்கி கடந்த சுமார் இருபத்தைந்து ஆண்டுகளில் அவர் எழுதியவை அதிகம் இல்லை. ஆயினும், இன்று அவர் இலங்கையில் மட்டுமன்றி ”தமிழ் கூறும் நல்லுலகு“ எங்கும் நன்கு அறியப்பட்டவராக, ஈழத்து முன்னணிக் கவிஞர்களுள் ஒருவராக அங்கீகாரம் பெற்றிருக்கிறார். கவிதைக்கான கனேடிய இயல்விருது, விஜய் தொலைக்காட்சியின் இலக்கியத் துறைக்கான சாதனைப் பெண் விருது, கவிஞர் ஆத்மாநாம் விருது, ஸ்காபரோ இலக்கிய விருது என பல விருதுகள் பெற்றிருக்கிறார்.

அவருடைய கவிதைகளைப் பற்றி பல கட்டுரைகளும், மதிப்புரைகளும், ரசனைக் குறிப்புகளும் வெளிவந்துள்ளன. சேரன், சுகுமாரன் ஆகிய இன்றைய முக்கியமான கவிஞர்கள் அவரைப் பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறார்கள்.


இப்பின்னணியில், அனாரின் கவிதைகள் பற்றிய ஒரு விரிவான விமர்சன மதிப்பீட்டுக்கான தேவை உள்ளது. இந்தக் கருத்தரங்கில் பேச உள்ளவர்கள் அதைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன். எனினும் ஒரு அறிமுக உரை என்ற வகையில் அவரின் கவிதைகளில் நான் காணும் சில அம்சங்களை  மிகச் சுருக்கமாக முன்வைக்க முயல்கின்றேன்.

அனாரின் கவிதைகள் பெரும்பாலும் தன்னுணர்ச்சி வெளிப்பாடுகளாகவே உள்ளன. அவரைப் பொதுவாக ஒரு தன்னுணர்ச்சிக் கவிஞர் (lyrical poet) என்று சொல்வதில் தவறில்லை. சமூகம் தன்மீது சுமத்தியுள்ள பெண் என்ற வரையறையை மீறும் குரல் அவருடைய கவிதைகளில் ஒலிக்கின்றது. இது கோபம், விரக்தி, பெருமிதம், சோகம், காதல், வேட்கை, தனிமை என பல வகைகளில் வெளிப்படுகின்றது. ஒரு வகையில் இதை பெண் அல்லது பெண்ணிய அரசியல் எனலாம். அவ்வகையில் பெண் உடலும், பெண் மனமும் இவரது கவிதைகளின் மையம் எனலாம்.

அனாரின் கவிதைகளைப் பொருள் அடிப்படையில் வகைப்படுத்திப் பேசுவது சாத்தியம் அல்ல. அவரது பெரும்பாலான கவிதைகள் நான் முன்சொன்னதுபோல் ஒரே மையத்தின் வெவ்வேறு முகங்களாக, வெவ்வேறு வடிவங்களாக இருப்பதே அதற்குக் காரணம். ஏனைய சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு இவரது கவிதையில் இடம் இல்லை என்பது இதன் பொருளல்ல.


அத்தகைய கவிதைகள் எண்ணிக்கையில் குறைவே. அதிகம் பேசப்பட்ட அவருடைய “மேலும்சில இரத்தக் குறிப்புகள்“ இத்தகையது. “நிருபரின் அறிக்கை“, “முந்திரிமரத்தில் மழைத்துளிகள்“ போன்ற வேறு சில கவிதைகளையும் இவ்வகையில் சேர்க்கலாம். எனினும், பொதுவாக அனாரின் பெரும்பாலான கவிதைகள் பெண் என்ற தன்னிலை பற்றியவை என்றே கூறலாம். இவ்வகையில் “சுலைஹா“ அவருடைய மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்று என்பது என் கருத்து.

கவிதையின் மொழியைப் பொறுத்தவரை அனார் எளிமையில் இருந்த இருண்மையை நோக்கி நகர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். எளிமை என்பதன் மூலம் கவிதையின் பொருளும் உணர்வும் வாசகருக்கு எளிதில் எட்டக்கூடியதாக இருப்பதையும், இருண்மை என்பதன் மூலம் அவ்வாறு எளிதில் எட்ட முடியாதிருப்பதையும் நான் குறிப்பிடுகின்றேன். இதில் ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்ற கருத்தில் அல்ல. இரண்டும் கவிதையின் வெவ்வேறு வகைகள், வெவ்வேறு முகங்கள், கவிதையின் வெவ்வேறு அழகியல் போக்குககள் என்றே கொள்ள வேண்டும்.

அனாரின் ஓவியம் வரையாத தூரிகை தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளை முதல் வகைக்கும் ஏனை தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகளை இரண்டாம் வகைக்கும் உதாரணமாகக் காட்டலாம்.

வனாந்தரத்து
விருட்சமொன்றில் குந்தி
வீரிட்டுப் பாடும்
தனித்த பறவையின்
பாட்டினில் கசியும் என் உணர்வு

என்ற வரிகளை எளிமையின் அழகியலுக்கும்

மெழுகுக் கனாத் தூண்களில் சாய்ந்திருக்கிறேன்
கண்களே தியான மண்டபம்
இமைகள் சுமந்தாடுகிற கடலின்
நீர் ஊஞ்சல்களில் தாவி ஆடுகிறோம்

என்ற வரிகளை இருண்மையின் அழகியலுக்கும் எடுத்துக்காட்டாகத் தரலாம்.

இயற்கை உலகிலிருந்து நமக்குப் பரிச்சயமான படிமங்களைப் பயன்படுத்தும்போது எளிமையும், இயற்கை உலகில் நமக்குப் பரிசயமில்லாத இல்பொருட் படிமங்களைப் பயன்படுத்தும்போது ஒருவகை இருண்மையும் கிடைக்கின்றது.

புதிய தலைமுறையைச் சேர்ந்த சில கவிஞர்கள் இருண்மையின் அழகியலைக் கவிதையின் அடுத்த கட்ட வளர்ச்சி என்றும் கருதுகிறார்கள். இது விவாதிக்கப்பட வேண்டியது என்றாலும் கவிதையில் இருண்மையின் அழகியலுக்கும் முக்கிய இடம் உண்டு என்பதை மறுக்க முடியாது.


கவிதையில் எளிமை, இருண்மை ஆகிய எண்ணக் கருக்கள் சிக்கலானவை. அதுபற்றித் தனியாகப் பேசவேண்டும். இந்த அறிமுகக் குறிப்பில் அது அவசியம் இல்லை.

என்னுடைய அனுபவத்தைப் பொறுத்தவரை, அனாரின் பெரும்பாலான கவிதைகள் இருண்மையின் மயக்கும் வசீகரம் உடையவை என்பதைமட்டும் நான் இங்கு சொல்ல விரும்புகிறன். உடல் பச்சை வானம், பெருங்கடல் போடுகிறேன், ஜின்னின் இரு தோகை முதலிய தலைப்புகளே இத்தகையவைதான்.

அனார் தன் கவிதையில் வெளிப்படுத்தும் உணர்வுகளை, “காலை வெயிலின் வெம்மைக்குள் இசையில் நீர் உறிஞ்சும் வண்ணத்துப் பூச்சி, அவள் கண்களில் நீல விஷத்தின் கனவுகள்” போன்ற புதிய புதிய இல்பொருட் படிமங்களால் ஆன இருண்மைத் திரைகளால் போர்த்திவிடுகிறார். அது அவரது கவிதைகளுக்கு ஒரு வசீகரத்தைத் தருவதோடு என்போன்ற வாசகர்களுக்கு ஒரு சவாலாகவும் அமைந்து விடுகின்றது.

இந்தக் கருத்தரங்கு அனாரின் கவிதைகளைப் புரிந்துகொள்வதற்கான வாயில்களைத் திறந்துவிடும் என்று நம்புகின்றேன். இக்கருத்தரங்கில் அனாரின் கவிதைகளைப் பற்றிப் பேச இருப்பவர்கள் முக்கியமான படைப்பாளுமைகள். அவ்வகையில் இக்கருத்தரங்கு பயனுடையதாக அமையும் என்று நம்புகின்றேன்.

ஆனாருக்கு எப்போதும்போல் என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

(  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய  அனார் கவிதைகள் பற்றிய இணையவழி காணொளி அரங்கில் சமர்பிக்கப்பட்ட அறிமுகம் )

—0—

Series Navigationபதிவுகள்அமரர் “கலைஞன்” மாசிலாமணி – கலைஞன் பதிப்பகம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *