வெற்றிடம்

author
0 minutes, 30 seconds Read
This entry is part 10 of 10 in the series 22 நவம்பர் 2020


கௌசல்யா ரங்கநாதன்
     ———
-1-
தினம் இருமுறைகளாவது, பிரும்மாண்டமான, பிரபலங்கள் வசித்திடும், அந்த தெருவில் உள்ள “கிளி கொஞ்சும்” என்ற வாக்கியத்துக்கொப்ப, கட்டப்பட்டிருக்கும் அந்த லேடஸ்ட் மாடல் பங்களாவையும், அங்கு முகப்பு வாயிற் படிக்கட்டில் அமர்ந்து எங்கோ வெறிக்க பார்த்தவாறு, சோகம் கப்பிய முகத்துடன் காணப்படும் அந்த முதியவரையும்  (அகவை 80 கடந்தவராய் இருக்கலாம்)பார்த்தவாறே போய்,வருவது என் வழக்கம்.. பங்களா வாயிற் கேட்டிலிருந்து முகப்பு வாயிலேகூட அரை  கி.மீ. இருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றும்..தவிர அப்போதுதான் புதிதாய்,
வண்ணம் பூசப்பட்டது போன்றே தோன்றும் ஆளுயர இரும்பு கேட்டும், பளிச்சென, மழிக்கப்பட்ட முகத்துடன் சீருடை அணிந்து 24 மணி நேரமும் காவல் காத்திடும் காவலரும், என்றாவது மட்டும் சில கார்கள் வந்து போவதையும், பெரும்பாலான நேரம் யாராவது பங்களா உள்ளே வசிக்கிறார்களா, இல்லையா, என்பது கூட விளங்காத அளவுக்கு  அமைதியுடன் காணப்படுவதையும் பார்த்திருக்கிறேன்..


எப்போதாவது முகப்பு கேட் திறந்திருக்கும் போது பார்வையை உள்ளே செலுத்தினால் ஒரு தூசு,தும்பு கூட இல்லாமல் பளிச்சென இருக்கும் அந்தப்பகுதி பூரா, ஒருவித நறுமணத்துடன்..அப்போதெல்லாம் ஒரு பெருமூச்சுத்தான் வரும் என்போன்ற மிடில் கிளாஸ் மாதவன்களுக்கு இப்படியொரு வாழ்க்கை நமக்கு ஏன் அமையாமல் போயிற்று என்று..மேற்கொண்டு விஷயத்துக்கு வருவோமே!


என் பார்வை அந்த முதியவரை நோக்கி மறுபடி,மறுபடி செல்வதை தவிர்த்திட முடியவில்லை..ஒரு நாளா, இரண்டு நாட்களா..!தினமும் அவர் என் பார்வையில் பட்டுகொண்டேதான் இருக்கிறார், அதே சோக முகம்,மழிக்கப்படாத தாடி,மீசையுடன், அதுவும் எங்கோ வெறிக்கப் பார்த்தவாறே, லோக சிந்தையே இல்லாமல் என்றே தோன்றியது..ஒருவித பச்சாத்தாப உணர்வே எனக்கு மேலோங்கி நின்றது.. அனேகமாய் இது போன்ற பங்களாக்களில் வசிப்பவர்கள் எவருமே பிறர் பார்வையில் பட விரும்பாதவர்களாகவும்,சுலபத்தில் அணுகிட முடியாதவர்களாகவும் ஒரு செயற்கை முகமூடியை அணிந்தவர்களாகவே இருப்பார்கள்.. ஆனால் எப்படி அந்த முதியவரை மட்டும் வீட்டு நுழை வாயிலில் அமர்ந்திருக்க அனுமதித்திருப்பார் அந்த பங்களா ஓனராகட்டும், அவரது உறவினர்களாகட்டும்..ஒருகால் இவர் அந்த ஓனருக்கு உறவினரோ! அப்படியே இருந்தாலும் தங்கள் கௌரவம் கெட்டுவிடும் இதுபோல் வீட்டு முகப்பில் ஒருவர் உட்கார்ந்திருந்தால் என்று சொல்லி வீட்டின் உள்ளே அல்லவா இருக்கச் சொல்லியிருப்பார்கள், அதுவும் “வீட்டு உள்ளே ஏசி இருக்கு, டிவி இருக்கு..நெட்கூட இருக்கு.. இன்டர்காமில் அழைச்சா, வேலைக்காரங்க ஓடோடி வந்து வேணும்கிறதை செய்வாங்க..ஏன் இப்படி வாயிற்படிக்கட்டில், கொளுத்தும் வெயிலில், நீங்க,வியர்வை ஒழுகிட, உட்காரணும்..பார்க்கிறவங்க என்னைல தப்பா னைப்பாங்க..பிளீஸ்..பிளீஸ்..உள்ளே வந்து ஏசி போட்டுக்கிட்டு டிவி பாருங்க..ரெஸ்ட் தேவைப்படறப்ப எடுத்துக்கலாம்” என்பார்கள் அன்பொழுக..அதுவும் அவர்களால் ஏதாவது வேலை ஆக வேண்டுமென்ற போது மட்டுமே..


அப்படி கௌரவம் பார்ப்பவர்கள் வீட்டு முகப்பில் ஏன் இந்த முதியவர், நான் போய்,வரும்போதெல்லாம் கற்சிலை போலவே அமர்ந்திருக்க வேண்டும் என்றே தோன்றினாலும், அவர் என்ன நமக்கு ஒட்டா,உறவா? ஏன் அவரைப்பற்றியே நாம் சிந்திக்க வேண்டும் என்றே தோன்றியது.


ஒரு நாளாவது அவ்வழியாய் போகும் போதெல்லாம் வாயிற்காவலர்  உள்பட யாரும் அவருடன் ஓரு வார்த்தை கூட பேசிப் பார்த்ததில்லை நான்.. யார் அந்த பங்களா ஓனர்? என்ன செய்கிறார்? பிசினஸா,ஏதாவது நிறுவனத்தில் உயர் பதவி வகிப்பவரா?இந்தியாவில் இருக்கிறரா? அல்லது வெளிநாட்டில் வசிப்பவரா?குடும்பம் இருக்கிறதா? அப்படி இருந்தால் அவர்கள் எங்கிருக்கிறார்கள்?..இப்படி விடை காண முடியாத  பல கேள்விகள் ஏனோ என் மனத்தை ஆலவட்டம் போட்ட வண்ணமே இருந்தது என்பதே நிஜம்..


 இப்படி குழம்பிய மனத்துடன் நான் அந்த வழியாய் தினமும் போய்,வந்து கொண்டிருந்தபோது, ஒரு விடுமுறை நாள் அன்று, அவரை, நான் தினமும் மாலைப்பொழுதில் சற்றே ஓய்வெடுக்க வேண்டி போய்வரும் பூங்காவில் பார்த்தபோது, அவரும் என்னைப் பார்த்து ஒரு புன்முறுவல் பூத்திட்டதுடன் அங்குள்ள இருக்கையொன்றில் அமர்ந்துகொண்டு, அங்கும் எதையோ வெறிக்கப் பார்த்தவாறே இருந்தார்.அவர் அப்படி எதை வெறிக்கப் பார்க்கிறார் என்று பார்த்தால் அங்கு எதுவும் என் கண்களுக்கு விளங்கவில்லை..ஆனால் அவர் எதையோ மறக்க எண்ணித்தான் பார்வையை எங்கோ செலுத்துகிறார் என்றே தோன்றியது..

நான் வீட்டுக்கு கிளம்பும் வரை அவர் தன் இருக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை. என்னுடனும் ஒரு வார்த்தை, சம்பிராதாய நிமித்தம் கூட பேசவில்லைதான்..இன்றுதான் அவரை முதன்முதலாய் நான் நேருக்குநேர் பார்க்கிறேன்..அவர் உடனே கடகடவென எல்லாவற்றையும்,என்னிடம் கொட்டி விட வேண்டுமென எதிர்பார்ப்பதும் தவறுதானே என்று என் ஆழ் மனம் சொல்லியது..

மறு நாளும் நான் பூங்கா செல்வதற்கு முன்பே அவர் வந்து காத்திருந்தார்..

“குட் ஈவினிங் ஜென்டில்மென்”  என்றார் புன்னகை தவழ..பிறகு நாளடைவில் எங்களுக்குள் ஓரளவு நெருக்கம் ஏற்பட்டிருந்தாலும், நானும் அவரை பற்றி,அவர் குடும்பத்தாரை பற்றி, ஏன் அந்த பங்களா முகப்பிலயே தினமும் உட்கார்ந்திருக்கிறார் என்பது பற்றி, மறந்தும்கூட கேட்டதில்லை..


எப்போதாவது ஓன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே என்னிடம் பேசுவார், பொதுப்படையாய், யார் மனமும் புண்படாதவாறு..நானும் சம்பிராதயம் கருதி சில கேள்விகள் கேட்டால், பல சமயம் மௌனம் சாதிப்பார்.. சில சமயங்களில், ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே
உதிர்த்திடுவார்..பெரும்பாலான சமயங்களில் தலை குனிந்தவாறே எதுவும் பேசமால் இருந்து விடும்போதெல்லாம்  எனக்கு “ஏன், பாவம் அவர் மனதை நோகடித்தேனோ என்று கூட தோன்றியதுண்டு..கண்களிலிருந்து வழியும் கண்ணீரை பிறர் அறியாமல் துடைத்துக் கொள்வார்..


நான் தினம் மாலை 5 மணிக்கு பூங்காவுக்குள் அடியெடுத்து வைக்கும் முன்பே அவர் அங்கு ஆஜராகி இருப்பார்..அவர் ஒருநாள் பூங்காவுக்கு வராமல் போனாலும் என்  மனம் கிடந்து அடித்துக் கொள்ளும், என்னவாயிற்றோ அவருக்கென்று.. மறுநாளோ, அதற்கடுத்த நாளோ அவர் பூங்காவுக்கு வரும்போது இது பற்றி  கேட்டால் என்னவென்று ஒரு மனம் சொன்னாலும், ஏதாவதொரு கசப்பான நிகழ்வு அவர் வீட்டிலோ, வெளியிலோ நடந்து அதனால் அவர் வராமல் இருந்து, இப்போது ஏன் மறுபடி அவர் சோகத்தை கிளற வேண்டும் என்றே எண்ணத் தோன்றும்..

அன்றொரு நாள் மாலை நாங்கள் பூங்காவில் அமர்ந்திருந்தபோது, திடீரென வானம் கருத்துப்போய், மழை பிய்த்து ஊற்றும் போலிருக்கவே, அங்கு கூடியிருந்தவர்களும் அவசர,அவசரமாய் தத்தம் வீடுகளுக்கு செல்ல ஆயத்தமானபோது, என்னருகில் அமர்ந்திருந்த அவர் எப்படி, அந்த மழை கும்மிருட்டில் தட்டு,தடுமாறிக்கொண்டு வீட்டுக்கு போய்ச்சேர்வார் என்றதொரு பச்சாத்தாப உணர்வு என் மனதில் தோன்றிடவே,
“அங்கிள்..வாங்க..நாம இரண்டு பேர்களும் ஒரு ஆட்டோ பிடிச்சுக்கிட்டு போயிடலாம்..  உங்க வீட்டில் ட்ராப் பண்ணிட்டு நான் போய்க்கிறேன்..எப்படி நெருக்கியடிச்சுக்கிட்டு பஸ்ல போவீங்க” என்ற என்னைப் பார்த்து அவர், “நான் பஸ்ல போறேன் தினமும்னு யார்
சொன்னாங்க? அதான் எப்பவும், எந்த சந்தர்ப்பத்திலும், என்னைவிட்டு அகலாத, என்னருமை டூ வீலர் இருக்கே எங்கிட்ட..அதிலதான் நான் தினமும் போய் வரேன் எல்லா இடங்களுக்கும்” என்றவர் தன்னம்பிக்கையை நினைத்து பெருமையாய் இருந்தது எனக்கு..

“ஆனாலும், இந்த மழையில டூ வீலரை எப்படி ஸ்டார்ட் பண்ணி, பத்திரமா வீடு போய் சேர்வீங்க?” என்ற போது, “நோ பிராபிளம்..என் டூ வீலர் எனக்கு எப்பவுமே பிரச்சினை கொடுத்ததே இல்லை இந்த 50 வருடங்களில்..ஒரு விசுவாசமான நாய் போலனு கூட சொல்லலாம்..அந்தக் காலத்தில் கூப்பிடு தூரமேயானாலும் இந்த என் செல்ல டூ வீலர்லதான் போய் வருவேன்பா..ஆனா ஒண்ணு..இதை யாருக்கும் இரவல் மட்டும் நான்
கொடுத்ததில்லை” என்றவர், “மழை வலுக்கும் போல இருக்கு..நீ பத்திரமா வீடு போய்ச்சேர்ரதை பாரு..நானும் என் வண்டியில் கிளம்பறேன்” என்றவர், அங்கே நாங்கள் வழக்கமாய் அமரும் இருக்கைக்கு எதிர்பக்கமுள்ள  ஒரு மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லொட, லொட்டா, அரதப்பழசான, துருவேறிக்கிடந்த, கையால் தொட்டாலே துரு பொலபொலவென கொட்டிவிடும்போல இருந்த சைக்கிளை மெல்ல,
தள்ளிக் கொண்டு வந்தவர், “இதுதாம்பா என் “புஷ்பக விமானம்”.நான் ஏற்கனவே சொன்னேனே, இது என் கூட கடந்த 50 வருஷங்களா பயணிக்குது, கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும்..பெத்த பிள்ளைகளோ, ஒரு விசுவாசமான வேலைக்காரனோ கூட இப்படி ஒரு சேவையை செய்யமாட்டான்..இதை நானும் அசேதனப்பொருளா, சைக்கிளா என்னைக்குமே நினைச்சதில்லை..பகவான் என்ன சொல்லியிருக்கார் “பகவத் கீதையில்”?..”சேதன”, “அசேதன”, “சேதனம்னா”, அசையும் பொருள்..”அசேதனம்னா”, கல்,மண் போன்ற பொருள்களிலெல்லாம்கூட நான் இருக்கேன்னு..அப்ப இந்த என் சைக்கிளிலும் பகவான் இருக்கார்தானே..இதை விட்டு நான் ஒருக்கணமும் இருந்தது கிடையாது, இரவு தூங்கற சமயத்தை தவிர..மற்ற நேரங்களில் எல்லாம் நான் எங்க வீட்டு முகப்பில் உட்கார்ந்துக்கிட்டு இதையே வெறிக்கப் பார்த்துக்கிட்டிருப்பதை நீ கவனிச்சிருப்பேனு நினைக்கிறேன்..மழை பெய்யுதுன்றதுக்காக என் செல்லத்தை இங்கே நனைய விட்டு நான் மட்டும் எப்படி நிம்மதியாய் உன் கூட வர முடியும்னு சொல்லு” என்றவர் கண்களில் கண்ணீர் தளும்பி நிற்பதை பார்த்தேன்..


பிறகு அவரை நான் வெகுவாய் சமாதானப்படுத்தி, “இங்கே என் நண்பன் கடையொண்ணு பக்கத்தில்தான் இருக்கு அங்கிள்.அவன் கடையில்  இன்னைக்கொரு இரவு மட்டும் உங்க செல்லத்தை பத்திரமாய் விட்டுவச்சுட்டு, நாளை காலை முதல் வேலையாய் நானே இதை உங்க வீட்டில் கொணாந்து தரேன்” என்ற போது, அவர் லேசில் சமாதானமடையவில்லை. .ஒரு அரதப்பழசான, தொட்டாலே துரு பொலபொலவென, கொட்டும் ஒரு சைக்கிள் மீது இவ்வளவு பாசமா இந்த அங்கிளுக்கு” என்று னைத்துக் கொண்டிருக்கையில், மழை மேலும் வலுத்து, இடி, மின்னலுடன் வானமே பிளந்திடும் வகையில் கொட்டித்தீர்த்திட, அங்கு ஒதுங்கவும் இடமில்லாமல் போக, என்னுடன் ஆட்டோவில் வர அரை மனத்துடன் ஒப்புக் கொண்டார்..

அந்த சைக்கிளையும், அவரே தள்ளிக் கொண்டு என் நண்பன் கடை வரை வந்து, அங்கும், அதன்மீது  மழை தூரலோ,  மேற்கூரையிலிருந்து ஒரு சொட்டு தண்ணீரோகூட அதன்மீது விழாத ஒரு இடமாய் பார்த்து வைத்த, பிறகும், திரும்பி,திரும்பி,
 அந்த சைக்கிளைப் பார்த்தவாறே என்னுடன் ஆட்டோ பிடிக்க வந்தவர், மறுபடி அந்த சைக்கிள் அருகில் போய் மேல்துண்டால் போர்த்தினார்.


வழி நெடுகிலும், ” என் செல்லம் அங்கே பத்திரமாய் இருக்குமாப்பா?” என்று நொடிக்கு,நொடி கேட்டவாறே வந்ததை ஆட்டோ டிரைவரும்  ரசிக்கவில்லை என்றே தோன்றியது..பிறகு சற்றே மௌனம் நிலவியது.

அவர் கவனத்தை வேறெங்கோ திசை  திருப்ப எண்ணி, நான் ” கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே அங்கிள்” என்றபோது தலையை அசைத்திடவே, “இப்படியொரு கேள்வியை நான் உங்ககிட்ட கேட்கக்கூடாது அங்கிள்..உங்க வீட்டிலிருந்து யாரும் உங்களை அழைச்சுக்கிட்டு போக வர மாட்டாங்களா” என்றபோது, “நான் தினமும் சைக்கிள்ள சுத்தாத இடமில்லை..அதனால் யாரும் என்னைப்பற்றி கவலைப் பட மாட்டாங்க” என்று அவர் சொன்னது பொய் என்று தோன்றியது..

மறுநாள் காலை எழுந்தவுடன்,  நண்பன் கடைக்கு சென்று, அந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் அங்கிளிடம் ஒப்படைத்தபோது, ஒரு குழந்தையை அதன் பெற்றோர் தூக்கி முத்தமிட்டு, செல்லம் கொஞ்சுவதுபோல் கொஞ்சியவர் “நேத்து நீ  
நனைஞ்சிட்டியாடா செல்லம்..மழை ஒழுகிச்சா உன்மேல” என்றவர், அந்த சைக்கிள் முழுவதையும், ஒரு இண்டு,இடுக்கு விடாமல் தன் டர்கி டவல் கொண்டு துடைத்தார்.

ஒரு புன்னகையை மட்டுமே உதிர்த்தார்..இவர் என்ன மனநிலை பிறழ்ந்தவரா என்றே அவரது செய்கைகள் பார்த்து எனக்கு நினைக்க தோன்றியது..பிறகு என்மீது ஒரு பார்வையை படர விட்டவர், “என்னைப் பார்த்தா பைத்தியமாட்டம் தோணுதா உனக்கு?பரவாயில்லை அப்படித்தோணினாலும் கூட.. ஆனானப்பட்ட கடவுளையே கூட, பக்தர்கள் “பித்தா,பிறைசூடி, பெம்மானே அருளாளானு” பாடி வைக்கலையா என்ன? “என்றபோது மெய்சிலிர்த்து போயிற்று.


அவர் மனோதிடமும் என்னை வியக்க வைத்தது..இப்பேற்பட்டவரை காணவில்லையே என்று அவர் சொந்த,பந்தம் ஓடி அல்லவா வந்திருக்க வேண்டும், நேற்று மாலை கொட்டித் தீர்த்த அந்த மழைப் பொழுதினில்..ஆனால் அவரது பங்களா வாயிலில் நான் அவரை இறக்கி விட்டு,கால் பெல்லை ஒலித்திடச்செய்தபோது, எந்தவித முக பாவமும் காட்டாமல் அல்லவாஅந்த பங்களா வாட்ச் மேன், தூக்க கலக்கத்துடன்,மெதுவாய்,  வாயிற்கதவை திறந்து வைத்துக் கொண்டு நின்றார்.

பிறகு, அக்கம்,பக்கம் பார்த்தவாறே,”ஐயாவும்,அம்மாவும் உங்கமேல ரொம்ப கோபமாய்
இருக்காங்க..நீங்க இப்படி தன்னம்தனியா, நேரம்,காலம் பார்க்காம, இந்த லொடலொட்ட சைக்கிள்ள, மன்னிச்சுக்குங்க ஐயா சைக்கிள்னு சொன்னதுக்கு, உங்க செல்லத்தோட வெளியில் நீங்க அடிக்கடி  போய்,வரது அவங்களுக்கு பிடிக்கலை..ஐயாவும்,அம்மாவும் என்னமா துடிச்சுப் போயிட்டாங்க? நம்ம கிட்ட 4 கார்கள் இருக்கச்சொல்ல, இவர் ஏன் இந்த அரதப்பழசான சைக்கிள்ள போய்வரணும்பா, அதுவும் இந்த தள்ளாத வயசிலனு கேட்கிறாங்க ஐயா..பாவம் அவங்களுக்குத்தான் உங்க மேல எவ்வளவு பாசம்..அதை நீங்க உணராம இப்படி செய்யலாமா ஐயா”? எப்படி உங்களை கேட்கிறதுனு தயக்கமாயும் இருக்குனு, ஐயாவும்,அம்மாவும் குமைஞ்சுக்கிட்டிருக்காங்க..நீங்க எதுவும் பேசி அவங்க மனசை மேலும் புண்படுத்திடாதீங்க ஐயா.. தயவு பண்ணி அவங்களை கோபிக்காதீங்க ஐயா,”என்றெல்லாம்,  சொல்லி ஆதங்கப்படுவார் நேற்று என்று எதிர்பார்த்திருந்ததற்கு மாறாய், அவர் எதுவுமே பேசாமல் கேட்டை மூடிக்கொண்டு தன் இருக்கைக்கு
போவதிலேயே குறியாய் இருந்தார்..

சில அடிகள் எடுத்து வைத்த அங்கிள், திரும்பவும் வாயிலுக்கு வரவும், வாட்ச்மேனும் கதவை திறந்து கொண்டு நிற்கவும், நான் அவரைப் பார்த்து “என்னாச்சு அங்கிள்?எதையாச்சும் மறந்து வச்சிட்டீங்களா ஆட்டோவில” என்றபோது அவர், “என் மானம்,செல்ஃப் ரெஸ்பெக்ட், பாச, பந்தம் எல்லாத்தையும்தான் எங்கேயோ தொலைச்சிட்டு தேடிக்கிட்டு நிற்கிறேன்” என்றவர், கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது..

“அது என்ன விட்ட குறை,தொட்ட குறையோ உனக்கும், எனக்கும்..இல்லாட்டி எந்த பாச, பந்தமும் இல்லாதப்ப நீ ஏன் என் மேலே இவ்வளவு அன்பை அள்ளிக் கொட்டணும்..” என்றவர், காவலரை சற்றே விலகி இருக்கப் பணித்து விட்டு,”என் செல்லம் அங்கே ” என்று மறுபடி கேட்க வாயெடுத்தவர்”, என்னைப் பார்த்து, கலங்கிய கண்களுடன், எனக்கு இன்னைக்கு உங்கிட்ட மனசு விட்டு பேசணும் போல இருக்கு, உனக்கொண்ணும் அவசர ஜோலி இல்லைனா” என்றபோது, “அதெல்லாம் ஒண்ணுமில்லை அங்கிள்.
நீங்க எத்தனை நேரம் வேணா எங்கிட்ட பேசலாம்..ஆனா இப்ப மழையில் நனைஞ்சிருக்கீங்க.. சோர்வாயும் இருக்கீங்கனு தோணுது..அதனால, நாளைக்கு, இல்லைனா, நாளை மறுநாள், நிறைய பேசலாமே நாம்”என்றபோது அவர் “இன்னொரு சந்தர்பம் எனக்கு மறுபடியும் வாய்க்குமானு.. ஊஹூம்..பரவாயில்லை.அப்புறமா பேசலாம்” என்றவரை பார்க்க பாவமாய் இருந்ததால்,  அங்கிளிடம் சொன்னேன்..  

“அங்கிள் உங்களைப்போல உள்ளவங்க இன்னம் சில வருஷங்களாவது இருந்து எங்களைபோல உள்ளவங்களை வழி நடத்திச்செல்லணும்..அதுக்கு நீங்க மனத்தளவிலும், உடலளவிலும் ஆரோக்கியமா இருக்கணும்” என்றபோது, அவர் என்னை இறுகக் கட்டித் தழுவிக் கொண்டார்.


அவர் கண்களிலிருந்து கண்ணீர் தாரை,தாரையாய் வழிந்தோடியது.. இப்ப என்னோட முதல் குழந்தையே இந்த சைக்கிள்தான்பா.என்னை உணர்ந்து, எனக்கு சகல விதங்களிலும் ஒத்துழைப்பு கொடுத்த என் மனைவி சில வருடங்களுக்கு முன்னால போயிட்டா..அப்புறம் எல்லாமே எனக்கு இந்த செல்லம்தான்..இன்னைக்கு வெளில போகலாமாப்பானுகூட, இதுகிட்ட, இது ஒரு அசேதனப் பொருளா இருந்தாலும், கேட்டுட்டுத்தான் போவேன்..இது எப்படி பேசும்? நீங்க என்ன லூசானு கூட நீ கேட்கலாம்..ஆனா, என் தேவைகள், என்ன, உடல்நலம் எப்படி இருக்கு, சாப்பிட்டீங்களா?ஏன் எப்பவும் இந்த சைக்கிள்ளய தட்டுதடுமாறி வெளியில் போய் வரணும், அதுவும் இன்னைய ஹெவி டிராஃபிக்கில்?நம்ம வீட்டில ஒண்ணுக்கு, நாலு கார்கள் இருக்குல்ல..எங்கேயாச்சும் வெளியே போய்வரணும்னா, டிரைவரை கூப்பிட்டுக்கிட்டு போய் வரலாம்ல..ஏன் இந்த ஹைதர் காலத்து சைக்கிளை கட்டிக்கிட்டு மாரடிக்கணும்னு…ஊஹூம்..ஒரு வார்த்தை..என் வாழ்க்கையில் நான் பொக்கிஷமா நினைச்சு அன்பு செலுத்தினது முதல்ல என் மனைவி..அப்புறம் இந்த சைக்கிள்தான்..அவளும் போயிட்டா சில வருஷங்களுக்கு முன்னாலனு ஏற்கனவே உங்கிட்ட சொன்ன ஞாபகம்….மறுபடி, திரும்ப,திரும்ப அதையே சொல்லி உன்னை போரடிக்கிறேன் போலிருக்கு..அப்பவே நான் இடிஞ்சு போயிட்டேன்பா.. என் பிள்ளை சதா காலில் சக்கரம் கட்டாத குறையாய் ஓடிக்கிட்டு இருக்கிற  பிசினஸ்மேன்.  டெல்லி,மும்பை,கோல்கட்டானு சுத்திக்கிட்டே இருக்கிறவன்..மருமகளும் ஒரு மல்டிநேஷனில் தலைமைப் பதவில இருக்கிறவ.  ” ஐயாவை பத்திரமா பார்த்துக்குங்க..ஏதாவது பிராபிளம்னா நம்ம டாக்டருக்கு போன் பண்ணுங்க..கூடவே எனக்கும்தான்னு அவளும் சொன்னதில்லை..
நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பலை..எத்தனை நேரம்தான் வீட்டுக்குள்ளாறவே பித்து பிடிச்சாப்பலவே நாலு சுவர்களுக்குள்ளாறவே நான் அடைஞ்சு கிடக்கிறது? அதான் வீட்டு வாயில் படிக்கட்டில் உட்கார்ந்திருப்பேன் என்கூடவே பயணிக்கும் இந்த செல்லத்தோட..என் மனக் குறையை, ஆதங்கத்தை, அதுகிட்ட பகிர்ந்துக்கிட்டு..இதனால் என்னை பார்க்கிற சிலர் பைத்தியக்காரன்னு கூட சொல்லலாம்தான்..அப்படி பார்த்தா நாம் எல்லாருமே ஒரு விதத்தில் பைத்தியக்காரங்கதான்னு சொல்வேன்..நம் கஷ்ட,நஷ்டங்களை கண்ணுக்கு புலப்படாத, நமக்கு பிடிச்ச கடவுளிடம் தானே கொட்டியழறம்..இப்ப சமீப காலமாய்த்தான் நீ எனக்கு அறிமுகமாகி என் மனைவி விட்டுப்போன  வெற்றிடத்தை ஓரளவுக்கு பூர்த்தி பண்ணிக்கிட்டு வரே..அன்பால கட்டிப்போட்டுட்டே ஒரு பெத்த பிள்ளையாட்டம்..இப்பவும் என் முதல் குழந்தையே இந்த செல்லம்தான்..அப்புறம் நீ..இதுக்கு மட்டும் ஏதாவதொண்ணு ஆயிருச்சுனு வச்சுக்க, நான் உயிரோடவே இருக்க மாட்டேன்..” என்றவர் சற்றே  ஆசுவாசப்படுத்திக்கொண்டு, மூச்சு வாங்க,வாங்க,”மன்னிச்சுருப்பா என்னை. எல்லாத்தையும் உங்கிட்ட இன்னைக்கே கொட்டிடணும் போல இருக்கு..இதையே மறுபடி, சொல்றேனோ உங்கிட்ட..வயசானலே இப்படித்தான்பா, ” சொன்னதையே,திரும்ப,திரும்ப சொல்வாங்க”என்றவர் தொடர்ந்து, “எங்களுக்கு கொஞ்சம் பூர்வீக சொத்து உண்டு..வேலையிலும் இருந்து, பென்ஷனும் இன்னையவரை வருது..இது போஷ் லொகாலிடின்றதால யாரும்,யார்கூடவும் பேச மாட்டாங்க..என் பிள்ளையை தேடி வரவங்களும் கூட அவனிடமோ, மருமக கிட்டவோ “இது உங்க அப்பாவா சார்?
இப்படி பழுத்த பழமா ஒருத்தர் வீட்டில் இருந்துக்கிட்டு நம்மை வழி நடத்தற பாக்கியம் எத்தனை பேர்களுக்கு கிடைக்கும்..இந்த ரெஸ்பெக்ட்ல நீங்க கொடுத்து வச்சவர்னு..” ஊஹூம்..எனக்கும் இந்த தனிமை பிடிச்சு போச்சு..காலையில் எழுந்ததும் வீட்டு வாயிலில் வந்து என் செல்லம் பத்திரமா இருக்கானு பார்த்தப்புறம்தான் நான் பல் துலக்கவே போவேன்..வாரம் ஒருமுறையாச்சும் நல்லா தண்ணீர் விட்டு, இதைக்கழுவி,சுத்தமா துடைச்சு,கொர,கொர, சத்தம் வராம இதை அழகு பார்த்தாத்தான் என் மனசில் நிம்மதியே பிறக்கும்..வருடா,வருடம் ஆயுத பூஜையின்போது என் செல்லத்துக்கு, விசேஷமாய், பூமாலை அணிவித்து, சர்க்கரைபொங்கல் நிவேதனம் பண்ணி கற்பூர ஆரத்தி
காட்டினாதான் எனக்கு மன நிம்மதியே கிடைக்கும்..எங்களுக்கு கலியாணமான புதிசில என் மனைவியை பின்னால உட்கார்த்தி வச்சுக்கிட்டு நான் இந்த சென்னை பூரா இதில் வலம்வந்த நாட்கள் நிறையவே..இதுவும் எனக்கு ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்திருக்கு..இப்ப எனக்கும் வயசாயிருச்சு..இதுக்கும்தான்..நான் உன்னை வளவளக்கிறேனோ? என் பையன் இப்ப தேர்தலில் நிற்கப்போறதா பேச்சு அடிபடுது..இதனால் பலரும் இந்த பங்களாவுக்கு, கால நேரம் பார்க்காம வந்து போய்க்கிட்டிருக்காங்க..அதில் சிலர் வெளிப்படையாகவே என் பிள்ளையிடம்
“இப்படி கிளி கொஞ்சறாப்பல இருக்கிற இந்த பங்களா வாசல்ல ஏன் சார் இப்படியொரு துருப்பிடிச்ச சைக்கிளை, திருஷ்டி பா¢காரம் போல வச்சிருக்கீங்க..தூக்கி எறிய வேண்டியதுதானேனு கேட்கிறப்ப,  என் மனசு கிடந்து அடிச்சுக்கும்னு யாரும் உணரலை..நான் கூடத் தான் இப்ப எதுக்கும் உபயோகமில்லாம போயிட்டேன்..என்னையும் ஒரு நாள் இவங்க யார் பேச்சையாவது கேட்டுக்கிட்டு ஏதாவதொரு முதியோர் இல்லத்தில் கொண்டு விட மாட்டாங்கன்றது என்ன நிச்சயம்..?அதனால்தான் ஒருநாள் நான் என் மகன்கிட்ட கெஞ்சி கேட்டுக் கிட்டேன் என் உயிர் உள்ளவரையாவது இந்த சைக்கிளை இங்கேயிருந்து நீ எடுத்து தூர எறியக்கூடாதுனு..அன்னைக்கு அவன் ஏனோ எதுவும்
சொல்லலை.ஆனா என்னைக்காச்சும் ஒரு நாள் இதை….”அங்கிளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது..அப்போது வாட்ச்மேனும் அங்கே வந்து “ஐயா கேட்டை பூட்டணும்ங்க” என்று சொன்னபோது நான் “இதோ கிளம்பிட்டேன்பா..அங்கிள் சாப்பிட்டுட்டு படுத்து, நல்லா,
எதையும் மனசில போட்டு உழப்பிக்காம தூங்குங்க, “குட்நைட்” என்று சொல்லி விடை பெற்றேன்..மறுநாள் காலை நண்பன் கடைக்கும் அதி காலையிலேயே போய், அவர் செல்லத்தை, அதில் ஏறிப் பயணிக்கக்கூட (ஒரு மா¢யாதை நிமித்தம்) விரும்பாமல், மெல்ல தள்ளிக்கொண்டே, அவரது பங்களாவரை போனால், அவர் வாயிலிலேயே நின்று தவித்துக்கொண்டிருந்தார்..என்னையும், தன் செல்லத்தையும் பார்த்த பிறகுதான்,
 அவர் முகத்தில் ஒரு மலர்ச்சியே தென்பட்டது.. என்னை வாழ்த்தி, வழியனுப்பினார்.

ஆனால் ஏனோ விளங்கவில்லை அன்று இரவு முதல்,  எனக்கு தொடர் விஷக்காய்ச்சல் சில நாட்கள்வரை ஆட்டிப் படைத்ததால், அவரை பிறகு போய்ர்க்கவே  முடியவில்லை..

“உன்னை என் பெத்த பிள்ளைபோலனு சொன்னேனே, நீ இப்படி என்னை வந்து பார்க்காம இருந்தது என்ன நியாயம்பா? என்று அவர் கேட்பதுபோல் உணர்ந்தேன்.. ஓரளவுக்கு காய்ச்சல் மட்டுப்பட்டதும், மெல்ல சமாளித்துக்  ண்டு அன்று அவரைப்போய் பார்த்து என் உடல்நிலை பற்றி சொல்ல வேண்டுமென்று நினைத்து வழக்கமாய் நாங்கள் போகும் பூங்காவுக்கு போய் தேடிப் பார்த்தால் அவர் சில நாட்களாகவே அங்கு வரவில்லை என்று ஒருவர் சொன்னார்.  பதறியடித்துக் கொண்டு அவர் பங்களா வாயிலுக்கு போய், வாட்ச்மேனிடம், கேட்ட போது, அவரும் மௌனத்தையே பதிலாக்கினார்..

“நான் என்ன உங்ககிட்ட கேட்ககூடாத கேள்வியையா கேட்டேன்..ஐயா பத்தி
தானே கேட்டேன்” என்றபோதும் பதில் சொல்லாதவர், பிறகு என்ன நினைத்துக் கொண்டாரோ என்னவோ, “என்னை மன்னிச்சிருங்க சார். நான் யாரண்டயும், எதுவும் பேசக்கூடாதுன்றது ஐயா,அம்மாவோட ஆர்டர்..ரொம்ப தலைபோற விஷயமாய் இருந்தாக்கூட, அவங்களை இன்டர்காமில் மெல்ல,பிறர் காதுகளில் விழாம, கன்சல்ட் பண்ணிட்டு, பிறவுதான்யா வந்தவங்களுக்கே பதில் சொல்லணும்னு..நினைச்சாலே
அழுகை,அழுகையாய் வருது சார்..அனுபவமுள்ள, வயசானவங்களுக்கு, இன்னைக்கு யார் சார் மதிப்பு கொடுக்கிறாங்க? சினிமால சொல்வாங்களே “set property”னு, அப்படித்தான் இருந்துச்சுங்க  ஐயா நிலைமை கடோசிவரை.. இந்த பங்களாவும் ஐயா பேர்ல இருந்ததால,
 எதுவும் பேச முடியலை, பிள்ளை,மருமகளால..முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விடவும் முடியலை..தவிரவும் சின்ன எசமான் இப்ப எலெக்க்ஷன்ல வேற நிற்கிறதால, பேர் கெட்டுடும்னுகூட நினைச்சிருக்கலாம்..” என்றவர், கண்களில் வழியும் கண்ணீருடன்,தயங்கி, பிறகு மெல்ல,மெல்ல, அக்கம்,பக்கம் பார்த்தவாறு,” ஐயா போய் இன்னையோட 10 நாட்களாச்சுங்க”என்றபோது திடுக்கிட்டுப் போனேன்..

“ஐயாவா,  யா, நல்லா ஹேல் அண்ட் ஹெல்தியாய்த்தானே இருந்தார், அன்னைக்கு நான் பார்த்தப்பக்கூட..ரொம்ப நேரம் எங்கூட அவர் பேசிக்கிட்டிருந்தப்ப, நீங்களும் அங்கு வந்து “நேரமாகுது ஐயா..கேட்டை பூட்டணும்னு சொன்னீங்களே? திடீர்னு என்னாச்சு ஐயாவுக்கு?” என்ற என்னைப் பார்த்து, ” எதுவும் துறுவி,துறுவி கேட்காதீங்க சார்”, என்றவனிடம், “அவர் குழந்தைபோல பாவிச்சிக்கிட்டிருந்த சைக்கிள், அதாவது அவர் “செல்லம்” எங்கேப்பா?அவர் ஞாபகார்த்தமா நான் அதை வச்சுக்க, உங்க முதலாளி அனுமதி கொடுப்பாரா “என்ற போது,அழுகையை அடக்க முடியாமல் அவர், “இங்கே பங்களா காம்பவுண்டுக்குள்ளாற ஏன் இந்த துருப்பிடிச்ச, அசிங்கமான சைக்கிளை, வச்சிருக்கீங்க,அதுவும், நாளைக்கு அமைச்சர், உங்களை பார்க்க தன் தொண்டர்களோடகளோட நம்ம பங்களாவுக்கு வர இருக்கிறப்பனு”  சிலர் முகம் சுழித்ததும், ஐயா என்ன கதறியும் கேட்காமல் அவர் முன்னாலேயே, அந்த சைக்கிளை சுக்கு நூறாய் உடைச்சு குப்பைத் தொட்டியில்
 போட்டுட்டாங்க..அன்னைக்கு இரவே  ஐயாவும் இந்த உலகத்தை விட்டு”… என்றவர் நா தழுதழுத்து, மேலே பேச முடியாமல் தவித்தார்..


என்னாலும்கூட பொங்கிவரும் அழுகையை அடக்க முடியவில்லை..இனி இந்த வெற்றிடம்  வழியாய் போய், வீண் மன உளைச்சலுக்கு உள்ளாக நானும் விரும்பவில்லை என்றாலும், இப்போதெல்லாம் இரவு வேளைகளில் அவர் நினைப்பு வரும்போதெல்லாம் நான் தூக்கம் தொலைத்து நிற்கிறேன் என்பதே நிசம்..
                                                                                     ———               

Series Navigation‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இன் கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *