தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜனவரி 2021

இந்தியாவில் ‘முப்பெரும் விழா’ நிகழ்வில் இலங்கை எழுத்தாளருக்கு விருது

Spread the love

      இந்தியாவின் வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ‘முப்பெரும் விழா’ மேடையில் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த கட்டுரைத் தொகுப்பு, சிறந்த நாவல், சிறந்த சிறுகதைத் தொகுப்பு, சிறந்த அறிமுக எழுத்தாளர், சிறந்த சிறார் இலக்கியம், சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு ஆகிய எட்டு பிரிவுகளிலும் பல நூல்கள் திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்படும் நூல்களுக்கு உரிய எழுத்தாளர்களுக்கு இந்த விழாவில் விருதோடு பணமுடிப்பும் வழங்கப்பட்டு வருகின்றன.

      அந்த விதத்தில் இந்த வருடமும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள ‘முப்பெரும் விழா’ மேடையில், இந்த வருடத்திற்கான ‘தமிழ் இலக்கிய விருதுகள்’ வழங்கப்படவுள்ளன. இந்த வருட ‘முப்பெரும் விழா’ மேடையில் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கான விருதையும், பணமுடிப்பையும் இலங்கை எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப், வம்சி பதிப்பக வெளியீடான அவரது ‘அயல் பெண்களின் கதைகள்’ எனும் மொழிபெயர்ப்பு சிறுகதை நூலுக்காக பெற்றுக் கொள்ளவிருக்கிறார். ‘முப்பெரும் விழா’ மேடையில்  இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் எழுத்தாளர் ஒருவர் சாகித்திய விருதினைப் பெறுவது, ‘முப்பெரும் விழா’ வரலாற்றில் இது முதல் தடவையாகும். இலங்கையில், மாவனல்லையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப், தனது நூல்களுக்காக ஏற்கெனவே இலங்கை அரச சாகித்திய விருது, கனடா இயல் விருது, இந்தியா வம்சி விருது போன்றவற்றை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Series Navigationகைக்கட்டு வித்தை‘ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

Leave a Comment

Archives