கைக்கெடிகாரத்தைப் பார்த்தார் கந்தாடை. ஆறு அடிக்க இன்னும் ஒரு நிமிஷம் இருந்தது. சூரியன் மேற்கே விழுந்து கொண்டிருந்தான். அவர் தான் உட்கார்ந்திருந்த பார்க் பெஞ்சிலிருந்து எழுந்து நின்று கால்களை உதறிக் கொண்டார். ரத்த ஓட்டம் சமநிலைக்கு வர சில நிமிஷங்கள் ஆகும். வயதாவதை இது போன்றவற்றை அல்லாமல் வேறு எப்படித்தான் இயற்கை மனுஷனுக்கு உணர்த்துவதாம்? இருட்ட இன்னும் ஒரு கால் மணி, அரை மணியாகும். ஆனால் அவர் இப்போது கிளம்பினால்தான் பதினேழாவது கிராஸில் உள்ள வீட்டைத் தெரு விளக்குகள் எரியத் தொடங்குமுன் அடைய முடியும். சற்று நேரமானாலும் செல்லப்பட்டு அவருக்குப் போன் செய்து படுத்தி எடுத்து விடுவாள்.
கந்தாடை பார்க்கை விட்டு வெளியே வரும் போது அவருடைய நண்பர் டாக்டர் சடகோபன் எதிர்ப்பட்டார். கந்தாடையைப் பார்த்ததும் சிரித்தபடி “டாண்னு ஆறு மணியா? பிக் பென் கெட்டது போ !” என்றார்.
கந்தாடையும் சிரித்தபடி “இன்னிக்கி சனிக்கிழமை கிளினிக் அரை நாள்தானே ? ஏன் வாக்கிங்குக்கு மட்டம் போட்டே?” என்று கேட்டார்..
“மந்திரி மால்லே வாட்சை ரிப்பேருக்குக் கொடுத்தேன். அஞ்சு மணிக்குப் போனா அங்கேயே முக்கா மண்னேரம் காக்க வச்சுட்டான்” என்றார்.
இருவரும் சேர்ந்து நடந்தார்கள். போகிற வழியில் சடகோபனின் வீடு இருந்தது.
“வாக்கிங்குக்கு தனியா வரது ரொம்ப போர்” என்றார் கந்தாடை
“ஆமா. என் ஆம்படையாளைக் கூட வான்னு கூப்பிட்டா, ஆத்துலேந்து பார்க் வரைக்கும் கார்லே போயிடலாங்கறா” என்றார் சடகோபன். “நல்ல வேளை. பார்க்குக்கு உள்ளே சார் சவாரி வேணும்னு சொல்லலே.”
“”மின்னாலே கப்பன் பார்க் உள்ளே சைக்கிளிங் இருந்தது. ஆனா அது காலங் கார்த்தாலே மாத்திரம்தான்.”
“வாக்கிங்ன்னு சொல்லிண்டு நடக்கறதைத் தவிர எல்லாத்தையும் பண்ணனும்னு இப்ப நினைக்க ஆரமிச்சிட்டா இல்லே” என்றார் சடகோபன்.
சம்பிகே ரோடு வாகன நெரிசலில் முழி பிதுங்கிக் கொண்டிருந்தது. சிக்னலுக்காக நின்ற ஒரு காரிலிருந்து கொழுத்த நாய் ஒன்று அவர்களைப் பார்த்தது.
“மனுஷன் நடந்து தேயறான். நாய்க்கு கார் சவாரி கேக்கறது. இந்தியா முன்னேறலேன்னு யார் சொன்னா?” என்றார் கந்தாடை.
“நீரும் ஒரு நாய் வச்சிண்டிருந்தீர்னா வாக்கிங்குக்காவது கூட்டிண்டு வரலாம்” என்றார் சடகோபன்.
கந்தாடை நண்பரைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்தபடியே நடந்தார்.
“எப்படியிருக்கா அவ?” என்று கேட்டார் சடகோபன்.
“நன்னாதான் இருக்கு, என்னை மாதிரி.”
சடகோபனின் வீடு வந்து விட்டது. விடைபெற்றுக் கொண்டு சென்றார்.
சடகோபன் அவர் நாய் வைத்துக் கொண்டிருக்கலாம் என்று சொன்னதை நினைத்துக் கொண்டு கந்தாடை நடந்து சென்றார். வாக்கிங் போவதற்கு நாய் என்ற விலங்கைத்தான் கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று நிர்ணயித்தவன் யார்? தோற்றம் தரும் பிழையாக அல்லவா இது இருக்கிறது? சடகோபன் மற்றவர்களைப் போலக் குரலில் எக்காளத்தையும் வார்த்தைகளில் விஷத்தையும் வைத்துக் கொண்டு திரியும் ஆளல்ல. ஆனால் சடகோபனாலும் கூட ஜீரணித்துக் கொள்ள முடியாத விஷயமாகத்தான் இருக்கிறது அவர் குரங்கிடம் கொண்டுள்ள நட்பையும் அன்பையும் கண்டு. மற்றவர்களிடம் அவர் அந்தக் குரங்குக்கு ஜிங்கிலி என்று பெயர் வைத்திருப்பதைக் கூடச் சொல்லவில்லை. அவர் மனைவிக்கு மட்டும்தான் அது தெரியும்.
ஆரம்பத்தில் அவளுக்கும் மற்றவர்களைப் போலத் திகைப்பும், கேலியும், கோபமும் உள்ள பார்வைதான், பேச்சுதான் இருந்தது: ‘இது என்ன கண்ணராவி, யாராவது குரங்கைக் கட்டிக் கொண்டு அழுவார்களா?’
ஒரு குரங்காட்டி செய்தால் அது வயிற்றுப் பிழைப்புக்கு என்றொரு நியாயம் இருக்கிறது. ஆனால் மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்து ஒய்வு பெற்ற மனிதன் இப்படிச் செய்வதென்றால்? ‘ஏதோ பிள்ளையில்லாதவன் வீட்டிலே கிழவன் துள்ளி விளையாடற மாதிரின்னா இருக்கு?” என்று செல்லப்பட்டு அவரிடம் ஒரு நாள் சொல்லவும் சொல்லி விட்டாள். ஆனால் அவர் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. இருக்கும் ஒரே பையனும் அமெரிக்காவுக்குப் படிக்கப் போய் ஒரு வேலையையும் ஒரு எலினார் ஸ்டூவர்ட்டையும் தேர்ந்தெடுத்து அங்கேயே இருந்து விட்டான். அதனால் பிள்ளையில்லாத வீட்டில் என்பது ஓரளவுக்குப் பொருத்தம்தான்; கிழவனும் கூட என அவர் அன்று தனக்குள் சிரித்துக் கொண்டார்.
மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவருக்கு ஜில்லியுடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரு நாள் வாசலில் வந்த பழக்காரனிடம் வாழைப்பழம் வாங்கிக் கொண்டிருந்தார். பணத்தைக் கொடுத்து விட்டு அவர் வாழைப் பழத்தைக் கையில் வாங்கிக் கொண்ட போது ஒரு குரங்கு வந்து அவரருகில் நின்றது.
“சாமி பத்திரம், கையிலேந்து பிடிங்கிட்டு ஓடிரும் சாமி” என்று பழக்காரன் அவரை எச்சரித்தபடி “சூ, சூ” என்று அதை விரட்டினான். அது இடத்தை விட்டு நகரவில்லை. அவனையும் லட்சியம் பண்ணவில்லை. அப்போது யதேச்சையாக அவர் கையிலிருந்து இரண்டு வாழைப் பழங்கள் கீழே விழுந்தன. அவர் சற்றுப் பதற்றத்துடன் அவற்றை எடுக்கக் குனிந்தார். எடுத்துக் கொண்டு அவர் நிமிர்ந்து பார்த்த போது அந்தக் குரங்கு அது இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு அவரைப் பார்த்தபடி நின்றது.
அவர் மனதில் ஓடுவதைப் பிரதிபலிப்பது போல் “ரொம்ப ஆச்சரியமா இருக்கே !” என்று பழக்காரன் வியப்புடன் குரங்கைப் பார்த்தான். அவர் தாள முடியாதவர் போல ஒரு பழத்தை எடுத்து அந்தக் குரங்கிடம் நீட்டினார். அது நிதானமாக நடந்து வந்து அவர் கையிலிருந்து வாங்கிக் கொண்டது.
“கால்லே அடிபட்டிருக்கும் போல ” என்றான் பழக்காரன்.
அன்று மாலை அவர் வாசலில் வந்து நின்ற போது எதிர்சாரியில் இருந்த மரத்தில் உட்கார்ந்திருந்த குரங்கு அவரைப் பார்த்தபடி இருந்தது. அவர் அதைப் பார்த்துச் சிரித்தார். அது அவரை உற்றுப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தது. அவர் வழக்கம் போலப் பார்க்குக்குப் போய்விட்டு வீடு திரும்புகையில் அவர் பார்வை மரத்தடியை நோக்கிச் சென்றது. அந்தக் குரங்கு கையில் எதையோ வைத்து வாயில் போட்டுக் கடித்துக் கொண்டு இருந்தது. அவர் வரும் வழியில் பதினாறாவது கிராஸில் இருந்த பஜ்ஜிக் கடையில் உருளைக் கிழங்கு போண்டா வாங்கிக் கொண்டு வந்திருந்தார். வீட்டு வாசலில் நின்று பொட்டலத்தைப் பிரித்து ஒரு போண்டாவை நீட்டி குரங்கைப் பார்த்து “ஏய் ஜிங்கிலி, ஏய்” என்று கூப்பிட்டார். அது அவரைப் பார்த்த போது அவர் கையை அசைத்துக் கூப்பிட்டார்.
அது காலை சற்று நொண்டிக் கொண்டு வந்தது. பழக்காரன் சொன்னது உண்மைதான். அவர் கொடுத்த போண்டாவை வாங்கி லபக்கென்று வாயில் போட்டுக்கொண்டது. பிறகு கையை நீட்டியது. அவர் இன்னொன்றைக் கொடுத்தார். பழையபடி வாயில் போட்டுக் கொண்டு கையை நீட்டியது. அவர் சிரித்துக்கொண்டே இன்னொன்று, இன்னொன்று இன்னொன்று…. அவர் வாங்கி வந்த ஆறு போண்டாக்களும் காலி. அவர் எண்ணெய் பட்டிருந்த கை விரல்களைப்
பார்சல் காகிதத்தில் துடைத்து விட்டுக் காகிதத்தைக் கசக்கி வாசல் குப்பைத் தொட்டியில் போட்டார்.
அவர் உள்ளே சென்றதும் செல்லப்பட்டு “என்ன போண்டா வாசனை அப்படி அடிக்கிறது !” என்றாள். பிறகு அவரது வெறுங் கையைப் பார்த்து “நீங்களே வரப்போ வழியிலே எல்லாத்தையும் காலி பண்ணிட்டேளா?” என்று சிரித்தாள். அவர் ஒரு நிமிஷம் அவளைப் பார்த்தார். அதன் பின் வாசலில் நடந்த கூத்தைச் சொன்னார்.
“இனிமே மூணு வேளையும் ஆத்துக்குள்ளே கூட்டி வச்சுண்டு சாப்பாடு போடறது ஒண்ணுதான் பாக்கி” என்றாள் செல்லப்பட்டு. கந்தாடை மனைவியின் முகத்தைப் பார்த்தார். அவள் முகத்தில் கோபத்தின் சாயை எதுவும் இருக்கவில்லை.
ஆனால் அப்படித்தான் நடந்தது. வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு வரவில்லையே தவிர அதன் பசியை ஆற்றும் செயலை அவர் விடாமல் செய்தார். தினமும் வாசலுக்கு வந்து காலையிலும் ,மாலையிலும் அது சாப்பிடுவதற்குத் தருவார். சில தினங்களில் அக்கம் பக்கத்தில் செய்தி பரவி அவர் அவர்களின் பார்வைகளுக்கு உள்ளானார். கேலியான, ஆச்சரியம் நிரம்பிய, தூஷணை காட்டும், இரக்கம் கொண்ட, கோபத்தை எறியும், பாராட்டைத் தெரிவிக்கும் என்று விதவிதமாய்ப் பார்வைகள். அவர் யாருக்கும் எந்தவித பதிலும் அளிக்காமல் இருப்பதே தனது பதில் என்றவராக இருந்தார்.
அவரது பக்கத்து வீட்டில் இருந்த கவர்மென்ட் செகரட்டரி தாமோதரன் நாயரின் டிரைவர் ஒரு நாள் காரைத் துடைத்துக் கொண்டே கந்தாடையிடம் “சாமியவங்க வீட்டுச் சாப்பாட்டுக்குத் தளதளன்னு ஆயிருச்சே” என்று குரங்கைக் காட்டிச் சிரித்தான். அதற்குப் பதில் சொல்வது போல அப்போது அந்தப் பக்கம் வந்த எதிர் வீட்டு வேலைக்காரி பொன்னம்மா “ராமர் கைபட்ட அனுமார் மாதிரி ஆயிருச்சு பாரு” என்றாள். கந்தாடை இருவரையும் பார்த்துப் புன்முறுவல் பூத்தார்.
ஒரு நாள் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த வெங்கிட்டு சாஸ்திரிகள் வழியில் வண்டியை நிறுத்தி ” ஏய் கந்தா !கிச்சாமி ஆத்துலே சரஸ்வதி பூஜைன்னு கூப்பிட்டிருந்தா. அப்போ ஏதோ பேசிண்டு இருக்கறச்சே சொன்னா, இந்த மாதிரி ஒரு வானரத்தை நீ வச்சிண்டு சீராட்றேன்னு. போகட்டும் போ. அதுக்கு உபநயனம் அது இதுன்னு ஏதாவது பண்ணி வச்சிடாதே” என்று சிரித்தார்.
கந்தாடையும் சிரித்தபடி தன் சட்டையில் இரண்டு பட்டன்களைக் கழற்றி நெஞ்சுக்குக் கீழே காண்பித்தார். முப்புரியற்ற நெஞ்சு. “ஓய் சாஸ்திரிகளே, அது பொண் கொரங்கு !”
சாஸ்திரிகள் ஒரு நிமிடம் திடுக்கிட்டு “ஓ, அப்படியா?” என்று கந்தாடையைப் பார்த்துச் சிரிக்காமல் சொன்னார்.
உலகம் அவரைப் பார்த்துச் சிரித்ததை விட அவர் அதிகமாக உலகத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் ஒரு மாதம் முன்பு ஒரு வினோதமான காரியம் நடந்தது. அன்று காலை எழுந்தது முதல் அவருக்குத் தலைவலி. அந்தத் தலைவலி அலோபதி, ஓமியோபதி, ஆயுர்வேதம் என்று எந்த முறைக்கும் கட்டுப்பட மறுத்து சண்டித்தனம் செய்து ஆறு மாதத்துக்கு ஒரு முறை மண்டையைப் பிளக்க வந்து விடும். கண்ணாடி போட்டுப் பார்த்தும் படுத்துவதை நிறுத்தவில்லை அது. அன்றும் அதிகாலையில் லேசாக ஆரம்பித்த தலைவலி நேரம் ஆக ஆகக் கூடிக் கொண்டே போயிற்று. அவரால் பொறுக்க முடியாது போய் வாசலில் சென்று நின்றால் வீசும் காற்றும், நிறைந்த வெட்ட வெளியும் ஓரளவு இதம் தரும் என்று வாசலுக்கு வந்தார்.
அப்போது அவர் பார்வை எதிரில் இருந்த மரத்தின் மீது விழுந்தது. மரத்தின் அடியில் ஜில்லி அதனுடைய இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு துள்ளிக் கொண்டிருந்தது. ஒரு சமயம் கைகளை எடுத்து விட்டுப் பலமாக இடமும் வலமுமாய்த் தலையைத் திருப்பிப் திருப்பிப் போட்டு கத்தியது. குட்டிக்கரணம் அடித்து மறுபடியும் தலையைக் கைகளால் பிடித்துக் கொண்டது. அதன் அசைவுகளிலிருந்து தாங்க முடியாத வலியில் அது துடித்துக் கொண்டிருப்பது போல இருந்தது. அவரை ஒரு முறை அது பார்த்த போது தன் அசைவை நிறுத்திற்று. அந்தத் தருணத்தில் அவர் தன் கைகளால் தலையை அழுத்தமாகப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். அது அவர் செய்வது போலத் தன் தலையை இரு கைகளாலும் பிடித்து விட்டுக் கொண்டது.
கந்தாடை உள்ளே சென்று மனைவியை அழைத்து “வாசலுக்கு வந்து பார்” என்று கூட்டிக் கொண்டு வந்தார். அவள் ஜிங்கிலியைப் பார்த்து விட்டு “என்ன இது?” என்றாள்.
“என்னை மாதிரி அதுக்கும் தலை வலிக்கிறது” என்றார்.
செல்லப்பட்டு அவரை விநோதமாகப் பார்த்து விட்டு ஜிங்கிலியை இமைக்காமல் பார்த்தாள் . பிறகு “ஆமா, தலையிலே வலி பொறுக்க முடியாமத்தான் எல்லாம் பண்ணறது. இது என்ன கண்ணராவி !” என்று அவரைப் பார்த்தாள். நம்ப முடியாதவளாக, ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியாதவள் போல அவள் முகம் தோற்றம் காண்பித்தது.
செல்லப்பட்டு அவரிடம் “ஏதோ ரெட்டைக் குழந்தைகளுக்குத்தான் இதுமாதிரி ஒண்ணுக்கு ஒரு ஜொரம் தலைவலின்னு வந்தா இன்னொத்துக்கும் வந்துடும்னு சொல்லுவா. இது எப்படி?” என்று கண்களை அகல விரித்துக் கொண்டு கேட்டாள்.
அவ்வளவு வலியிலும் கந்தாடையால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “பேஷ் பேஷ். கொரங்குலேந்து மனுஷன் பொறந்தான்னு சொன்னான்கள். இங்க என்னடான்னா ஜிங்கிலி மனுஷியா இல்லே நான்தான் குரங்கான்னு திண்டாட்டமா இருக்கு, இல்லே?”
அவர்கள் இருவரும் வீட்டின் உள்ளே சென்றார்கள். அவர் படுக்கை அறையில் படுத்துக் கொண்டு தலைக்கு அரவணைப்பாகத் தலையணையை முகத்தின் மீது வைத்து அழுத்திக் கொண்டார். இந்த மாதிரி சௌகர்யம் ஜிங்கிலி க்குக் கிடைக்காதே என்று மனதில் ஓர் எண்ணம் ஓடிற்று. சற்றுக் கழித்து நோவு தந்த களைப்பில் அப்படியே உறங்கி விட்டார்.
மத்தியானம் சாப்பிட்ட பின் ஆவல் உந்த மரத்தடியில் என்ன நடக்கிறது என்று அவர் பார்க்கச் சென்றார். அங்கே ஜிங்கிலியைக் காணவில்லை. எங்கே போயிருக்கும் என்று யோசித்தபடி மறுபடியும் வீட்டுக்குள் வந்து படுத்துக் கொண்டார். திரும்பத் திரும்ப ஜிங்கிலி தன்னுடைய தலையைப் பிடித்துக் கொண்டு தவித்தது அவர் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. தனது தலைவலிக்குத் தடவிக் கொண்ட தைலத்தை அதற்குத் தடவி விடலாமா என்று நினைத்தார்.ஆனால் அதை அவர் செய்ய அனுமதிக்குமா என்று திடீரென்று சந்தேகம் வந்தது. அவர் செய்கையைத் தவறாகப் புரிந்து கொண்டு அது அவரைத் தாக்க முயன்றால்? அப்போதுதான் அவருக்குத் தோன்றியது, இதுவரை தான் ஜிங்கிலியை ஒரு தடவை கூடத் தொட்டுப் பார்த்ததில்லை என்று.
அன்று மாலை பார்க்கில் சடகோபனைச் சந்தித்த போது நடந்ததைக் கூறினார். டாக்டர் நண்பன் இதை மருத்துவ ரீதியாகப் பார்க்கக் கூடும் என்று அவருக்குத் தோன்றியதால் சொன்னார். சடகோபன் கந்தாடை சொன்னதைக் கேட்டு உடனடியாகப் பதிலளிக்கவில்லை. சிறிய மௌனத்திற்குப் பிறகு “நீ சொல்றது லாஜிக்குக்கு சரியா வரலைன்னாலும், உலகத்திலே எவ்வளவோ விஷயங்கள் லாஜிக் இல்லாம, இல்லேன்னா அதையும் மீறி நடந்துண்டேதான் இருக்கு. ரெண்டு பேருக்கும் எதேச்சையா. ஒரே நேரத்திலே தலைவலி வந்திருக்கலாம். திஸ் இஸ் ஜஸ்ட் பாஸிபிள்.
இல்லேன்னா ஒரு வேளை அந்தப் பிராணி மேலே உனக்கு இருக்கற அக்கறையினாலே , அன்பாலே அதுக்குத் தலைவலின்னு நீ நம்பிண்டு பாத்திருக்கலாம்” என்றார்.
கந்தாடை சடகோபனுக்குப் பதில் எதுவும் அளிக்கவில்லை. ‘இது உனது கற்பனை’ என்று நண்பன் சொல்வதை ஒத்துக் கொள்வது போல முகத்தை வைத்துக் கொண்டார். இது பேச்சு வளருவதையோ, மனக்கஷ்டம் ஏற்படுத்துவதையோ தடுத்து விடுகிறது என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டார். அதற்குப் பிறகு ஒரு கிலோ வெங்காயத்தின் விலை நூறு ரூபாயை நோக்கிப் போவது, தமிழ்நாட்டில் இந்தத் தடவை பிஜேபிக்கு எவ்வளவு சீட்டு வரும், அமெரிக்காவில் நீக்ரோவுக்கும் இந்தியாவில் தலித்துக்கும் ஏற்படும் கஷ்டங்கள் ஒரே மாதிரியாக எப்படி அமைகின்றன, புக்கர் பரிசு கிடைத்த ஷக்கி பெயினின் தரம் என்றெல்லாம் அலசிவிட்டுப் பிரிந்தார்கள்..
மறுநாள் ஞாயிற்றுக் கிழமை கந்தாடை மாலை நடைப்பயிற்சிக்குப் போகவில்லை. அவருக்கும் சடகோபனுக்கும் மிகவும் பிடித்த நக்ஷத்திரமான சரோஜா தேவி நடித்த இருவர் உள்ளம் படத்தை டிவியில் காண்பிப்பதால் அன்று மாலை சடகோபன் வீட்டுக்குச் சென்றார். படம் பார்த்ததுக் கொண்டே சடகோபனின் மனைவி ஜானகி கொண்டு வந்து கொடுத்த ஆமவடைகளை இருவரும் ஒரு கை பார்த்தார்கள். படம் முடியும் போது அங்கேயே சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று சடகோபன் சொன்னார். அவருக்குப் பிடித்தமான அடை அவியல் என்பதால் கந்தாடை உடனே ஒப்புக் கொண்டு விட்டார்.
கந்தாடை வீட்டுக்கு வரும் போது ஒன்பது மணி இருக்கும் . ரிபப்ளிக் டிவி வழக்கமான இடிமுழக்கமின்றி சாதுவாக ஓடிக் கொண்டிருந்தது. அர்னாப் இன்னும் சிறையில் இருந்து விடுதலையாகவில்லை போல என்று நினைத்தபடி பாத்ரூமை நோக்கிச் சென்றார். வரும் போதே வழியில் வயிறு ‘கடமுடா’ என்றது. அடுத்த அரைமணியில் அவர் மூன்று தடவை பாத்ரூம் போய்விட்டு வந்துவிட்டார்.
செல்லப்பட்டு அவரைப் பார்த்து “என்ன வயத்தாலையா?” என்று கேட்டாள்
“ஆமா, லூஸ் மோஷன்தான்” என்றார் அவர். உள்ளறைக்குச் சென்று ஒரு லோபெராமைடை எடுத்துச் சாப்பிட்டார். பிறகு செல்லப்பட்டுவிடம் “கொஞ்சம் மெந்தயத்தை தயிர்லே ஊறப் போட்டு வையேன்” என்றார்.
அவர் சொன்னதைச் செய்தபடி “எங்கே வெளியிலே என்னத்தை வாங்கிச் சாப்பிட்டேள்? வயசானாலும் நாக்கு கேக்க மாட்டேங்கிறதே? கண்ட எண்ணையையும் சாப்பிட்டுண்டு…” என்று செல்லப்பட்டு அவரைத் திட்டினாள்.
கந்தாடை ஆமவடையும் அடையும் சாப்பிட்டதைச் சொன்னார்.
செல்லப்பட்டு “இந்த ஜானகிக்கு சமத்துப் பத்தாது. ஒரே நாள்லே பருப்பையும் எண்ணையையும் போட்டு ரொப்பினா இது வயிறா வண்ணான் சாலா?” என்று சடகோபனின் மனைவியைத் திட்டினாள்.
ஆனால் இரவு நிம்மதியாக அவரால் தூங்க முடியவில்லை. இன்னும் சில தடவைகள் பாத்ரூம் போக வேண்டிய
தாயிருந்தது. வலி குறைந்து மறுபடியும் எழுந்து வந்தது. காலையில் சடகோபனைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். இறுதியில் வலி உண்டாக்கிய அசதியில் ஐந்து மணி வாக்கில் உறக்கம் அவரை வந்து தழுவிக் கொண்டது.
ஆறரை மணி சுமாருக்கு அவர் படுக்கையை விட்டு எழுந்தார். எழுந்ததுமே வயிற்றிலிருந்து சுருட்டிக் கொண்டு வலி வந்தது. பொறுக்க முடியாத வலி. அவர் கைபேசியை எடுத்து சடகோபனைக் கூப்பிட்டார்.
“என்னப்பா, காலங்கார்த்தாலே?” என்றார் டாக்டர்.
“ராத்திரி பூரா ஒரே வயித்து வலி. அஞ்சு மணி வரைக்கும் ஒரு பொட்டுத் தூக்கம் இல்லே. அப்புறமா கொஞ்சம்
கண்ணை அசத்தினது.இப்போ எழுந்தா மறுபடியும் சுருட்டிண்டு வலிக்கிறது” என்றார் கந்தாடை.
“ஜுரம் கிரம் ஏதாவது இருக்கா?”
“இல்லேன்னுதான் நினைக்கிறேன். ராத்திரி பூரா தூங்காம இருந்ததாலே கண்ணு எரிஞ்சு தள்ளறது.”
“சரி, நான் அஞ்சு நிமிஷத்திலே கிளம்பி ஆத்துக்கு வரேன்” என்றார் சடகோபன். “எதுக்கும் ரெண்டாளுக்கு வேணுங்கற மாதிரி மருந்து எடுத்துண்டு வரேன்.”
“ரெண்டாளுக்கா?” என்றார் கந்தாடை திகைப்புடன்.
எதிர்முனையில் டாக்டர் சிரிக்கும் ஒலி கேட்டது.