தடகளம் 

author
0 minutes, 0 seconds Read
This entry is part 10 of 13 in the series 14 பெப்ருவரி 2021

குணா (எ) குணசேகரன்

 

இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி

நீல் நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு

மீன் ஏறி பரதவர் மகளே; நீயே

நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்

கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே;

நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி

இனப்புல் ஓப்பும் எமக்கு நலன் எவனோ?

புலவு நாறுதும், செல நின்றீமோ!

பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை

நும்மோடு புரைவதே அன்றே;

எம்மனோரில் செம்மலும் உடைத்தே

 

தடகளம்

 

அங்கங்கே சிறு சிறு தரை தட்டிய… இல்லை வேண்டாமென்று ஓரங்கட்டப்பட்ட… மண்ணில் பாதி புதைந்த படகுகள். ஒவ்வொன்றும் தன்னகத்தே கொண்டு நிற்கும் ஒரு கதை. எப்பொழுதும் ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கும் அலை கடல் ஓரம். காலம் காலமாய் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அவ்வப்பொழுது சில மாற்றங்கள். ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் புது பரிமாணமாய் புதிய கதைக்கு நான் தயார் என்று சொல்வது போலிருந்தது.

 

புது கட்டிடங்களுடன் அந்த நகரியம் வருவதற்கு முன்பே நகரியத்தையொட்டி… நீண்ட நெடுங்காலமாய் இருக்கும் மீனவர் குப்பம். வாழ்வாதாரம் இந்த கடல் மட்டும் தான். இப்பொழுது மட்டுமென்ன அவர்கள் வழி தனி வழி… என்ன அன்றாட வாழ்க்கையில் நகரிய வாழ்க்கையின் சிறு தாக்கம். மத்திய அரசின் திட்டப்படி, நகரிய பள்ளியில் இந்த குப்பத்திலிருந்தும் படிக்கிறார்கள்.

 

நகரியத்தில் உள்ளவர்களும் பொறாமை கொள்ளக்கூடிய வாழ்க்கைத்தரம் குப்பத்து மேட்டுக்குடி மக்களுக்கு.

 

மீனாட்சி… ஒரு மேட்டுக்குடியைச் சார்ந்தவள். குப்பத்திலிருந்து அந்த பள்ளியில் படிக்கிறாள். அப்படி ஓர் அழகு. பார்ப்பவரைச் சட்டென்று நின்று பார்க்க வைக்கும் தாக்கத்தை உண்டு பண்ணக்கூடியவள். பயிற்சியால் வரும் தேகமுதிர்ச்சி இல்லாத அழகு. பள்ளி மைதானத்தில் ஓட்டப் பயிற்சி செய்து கொண்டிருந்தாள்.

 

“ப்பா… என்ன வேகம்?” பயிற்சியாளர் சொடுக்கியதும்… பட்டென்று மின்னலாய்… அவள் செல்லும் வேகம்… நிச்சயம் தங்கம் என்று பேசிக்கொண்டார்கள்.

 

பிரமித்து பார்த்துக்கொண்டிருந்தான் மிதுன். ஆடவர் பிரிவுக்கான பள்ளியின் தேர்வு. நகரியத்து மேல் மட்ட அலுவலரின் ஒரே மகன். பயிற்சி செய்து உருவாக்கிய கட்டுமஸ்தான பஞ்சாப் தேகம். பார்த்த மாத்திரத்தில் எதிர் பாலினத்தவருக்கு சிறு சலனமேனும் வரும்.

 

அவனும் முயற்சி செய்கிறான். மீனாட்சியின் ஓடு நேரத்தை தொட்ட பாடில்லை. தொட்டால் மறுநாள் புதிய நேரம். அசந்து போகிறான். எப்படி…?

 

“என்ன… எப்படின்னு தோணுதா… கடற்கரைல ஓடு… இருந்தாலும் சந்தேகம் தான்… இது ஜீன்ல இருக்கணும். முயற்சி செய்…“ – பயிற்சியாளர் ஜான்.

 

நிஜம் தானோ… முயற்சி செய்வோமென்று… மறுநாள் கடற்கறையில்…

 

அவன் வருவதற்கு முன்னமே அங்கு மீனாட்சியும் அவள் தோழியும்… ஓடிக்கொண்டிருந்தார்கள்.

 

என்னைப் பார்த்ததும் மீனட்சியிடம் ஓர் ஆச்சர்யம். சிறு புன்முறுவல்… ஓடிக்கொண்டிருந்தாள்.

 

எதிர் முனையில் ஓடத் தலைப்பட்டேன். சற்று கடினமாயிருந்தது. அவர்கள் எப்படி ஒடுகிறார்கள்? அவரகள் திரும்பி பார்த்து ஓடிக்கொண்டிருந்தார்கள். திரும்பிப்பார்த்த எனக்குள் சிறு சங்கடம்.

 

“மிதுன்… ஷூவை கழட்டிட்டு ஓடு. மணல்ல ஓடாதே… தண்ணிபக்கத்துல ஓடு” – திரும்ப வந்து மீனாட்சியின் தோழி சொல்லிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தாள்.

 

முயற்சித்தேன்… முன்னால் ஓடிய அவர்களின் அடிச்சுவடு தெரியவில்லை… எனக்குள் ஒரு உத்வேகம். நீரை ஒட்டிய மணல் இறுகியிருந்தது. பாதத்திற்கு இதமாய்… ஓடும் சுவடு தெரியாமல்… ஓடியதில் சீக்கிரம் தளர்ந்ததாய் உணர்ந்தேன்.

 

மறுநாள் தடகளத்தில்… ஒரு புது உணர்ச்சி… கலைப்பில்லை. நெடு நேரம் ஓடியும் அலுப்பு தெரியவில்லை. கடற்கரை ஓட்டம் சிறுகச் சிறுக என் ஓட்டத்தில் மாற்றம் கொடுத்தது.

 

ஆனால், ஒன்று மட்டும் புரியவில்லை. அவள் ஏன் சொல்லவில்லை. தோழியை விட்டு சொல்வதென்ன… தூதா?

 

தினமும் பயிற்சிக்கு வரும் போது ஒரு ‘ஹாய்’…. அவளும்… அத்துடன் சரி. வேறு ஒரு சலனமும் இருக்காது மீனாட்சியிடம். பல நாள் பார்த்திருக்கிறான். அடுத்து பேச முற்பட்ட போதெல்லாம் பலனேதும் இல்லை. செருக்கென்று சொல்ல முடியாது. தயக்கம் தெரியவில்லை. உன்னிடம் பேச எனக்கு ஏதுமில்லை… ஏன் முயற்சிக்கிறாய் என்றா? இல்லை என்னை கவனிக்கிறாளா.. அப்படியும் தெரியவில்லை. எந்த ஒரு தருணத்திலும்  அவள் பார்க்காது நான் பார்த்த போதெல்லாம் அவள் இம்மியளவும் பார்த்ததாய் தோன்றியதில்லை.

 

இத்தனைக்கும் இருவரும் ஒரே வகுப்பு. இருவரும் படிப்பிலும் சுட்டி. இட்ட குறை தொட்ட குறையாய்… இருவருக்கும் தான் முதலிடத்திற்கு.  போட்டி. ஒரு சாதாரண சக தோழியாய்… சக மாணவியாய்… பேசலாமே… ஒரு போதும் பேசியதில்லை.

 

வீட்டில் தெரிந்து விடுமோ என்ற தயக்கமா? தெரிந்தால் என்ன? நம் பழக்க வழக்கத்திற்கு ஒன்றுமில்லை. இந்த பருவத்தில் பேசிக்கொண்டால் எதுவும் சொல்ல மாட்டார்கள். அந்த கிராமத்து சூழ்நிலையில் அவர்களுக்கு…? அந்த தயக்கம் தான் காரணமா? எல்லோரிடமும் அவள் சகஜமாய் பேசுவதில்லை… மற்றவர்களைப்போல… வேறு ஏதேனும்…? கேட்டுப்பார்ப்போமா? யாரிடம்… தோழியிடமா… என்னவென்று… எதற்காக… அப்படியென்ன எனக்குள்…

 

தொடர்ந்து ஒரே பொருளை… ஒருவரை… பார்த்துக் கொண்டே இருந்தால்…அதனால் வரும் தாக்கமா… ஈர்ப்பா… பார்த்தவை… செய்யும் சாகசங்கள்… அவை என்னவை… எனக்கானவை… என்று ஆட்கொள்ள நினைக்கும் மனுஷ குணங்களா… என்னவாகவும் இருக்கட்டும்… ஆனால் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது… தாக்கிக் கொண்டே இருக்கிறது.

 

ஒரு வேளை காதல் என்றால்… ஒத்துக்கொள்வார்களா…? இவ்வளவு முன்னேற்றங்கள்… மாற்றங்கள்… இந்த காலத்திலுமா… ஒத்துக்கொள்ள மாட்டார்களா என்ன? அது அடுத்த பட்சம். சகியே… முதலில் உனக்கு இஷ்டம் தானே? இல்லையென்று சொல்வதற்கு என்னிடம் என்ன குறை கண்டாய்… உன்னை விட ஓட்ட வேகம் குறைவென்றா? அது மட்டும் தானே… உன்னை ஒத்து உன்னில் சிறந்தவனை எங்கு தேடுவாய்.. நான் தான் அந்த தேர்வு… நான் மட்டும் தான்…  

 

அந்தந்த கால கட்டத்தில்… தேவையான ஒவ்வொன்றும் நம் கண் முன் வந்து நிற்குமாம். அது போல் நீ வந்தாய். என் மனக் கதவைத் தட்டி விட்டாய்… உனக்குத் தெரியவில்லையா… தெரிந்தும் மறுக்கிறாயா, இல்லை மறைக்கிறாயா?

 

எனக்குள் ஏன் பிதற்றம். முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்… இஷ்டமாவென்று. எப்படி… பேச முற்படின் பேசாமல் தவிர்த்து… எத்தனிக்கும் நேரங்களில் எதிர்மறை செய்து… என்ன தான் வழி… தோழி?

மறுநாள், வழக்கம் போல மைதானத்தில்… ஒடு பயிற்சிக்காக வந்த போது… அவளைக்காணவில்லை… தோழி மட்டும்… உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாள்.

 

ஆயத்தமாகி அருகில் சென்றேன்.

 

“எங்கே காணோம்?”

 

உடற்பயிற்சி செய்தவள் சற்றே நிறுத்தி என்னைப் பார்த்தாள்.

 

“என்னத்த..?”

 

“உன் தோழியை?”

 

சுற்றும் முற்றும் பார்த்தாள். உடற்பயிற்சி செய்து கொண்டே தொடர்ந்தாள்.

 

“காதலா…?

 

சுருக்கென்றது. என்ன இவள். தயக்கமின்றி. சட்டென்று கேட்டுவிட்டாள். இவளுக்கும் தெரிந்திருக்குமோ… எனக்குள்ளும் ஒரு பிரவாகம் என்று. என்றால் மீனாட்சிக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். தெரிந்தே இருக்கிறார்கள். நான் சொல்ல வேண்டுமென்று. சொல்ல காத்திருக்கிறார்கள்.

 

மிதுன் அவளையே பார்த்தான்.

 

“தினமும் பார்த்த பழக்கம்… இன்று காணவில்லையே என்று.”

 

“நிச்சயம் அது மட்டும் தானே… வேறொன்றும் இல்லையே?”

 

ஓட தொடங்கினாள்… நானும்… சற்று நேரம் வேகமாக ஓடிவிட்டு… மூச்சிறைக்க… நின்றோம்.

 

“இல்லைன்னும் சொல்ல முடியாது. அப்படின்னும் வெச்சுக்கலாம்.”

 

“நெனச்சேன். அதெல்லாம் செட் ஆகாது நண்பா… மறந்துட்டு ஏதாவது வேற வேலை இருந்தா பாரு. அதுவும் இந்த வயசுல… நல்லா படிக்கிற… உன் பெற்றோருக்கும் ஆயிரம் கனவுகள் இருக்கும்… உன் மேலே, உன்னைப்பற்றி. அத்தோட ஒத்து போ. யாருக்கும் எந்தவித சங்கடமும் இல்லாமல். நேரம் பார்த்து வருவாள் ஒருத்தி உன் வாழ்வில். அவளோடு ஒத்து, ஒரு வாழ்வு அமைத்து, அன்னிய தேசம் கண்டு, அனேகம் கொண்டு…” – அவள் என்னையே பார்த்தாள்.

 

“உனக்கானவள் அவளில்லை.”

 

இவள் என்ன தடங்கலா. இல்லை என்று சொல்வதற்கு. இவளுக்குள் ஏதும்… அதனால் தான் சொல்கிறாளோ…

 

என் எண்ண ஓட்டங்கள் புரிந்திருக்க வேண்டும்.

 

“இவ யாரு சொல்றதுக்குன்னு பாக்கறயா… சொல்லணும்னு தோணுச்சு, அவ்வளவு தான். இதெல்லாம் சகஜம் இந்த வயசுல. இதைக் கடந்து போகாதவர் யார்? இப்போ உனக்கு தோணியிருக்கு. ஆனா தோணுன இடம் ஒத்து போகாது. எதுக்குன்னு பாக்கறயா… அவளுக்கானவன் ஒருத்தன் இருக்கான். பிறந்த நாள் முதல்… இவன் இவளுக்கென்று, தீர்மானிக்கப் பட்டவர்கள். இன்னைக்கு வந்திருக்கான். அதனாலத்தான் வரல” – அவள் சொன்னதும் எனக்குள் சிறு அதிர்ச்சி.

 

இருக்கட்டுமே. ஏன் மாறக்கூடாது. என்னைப் பற்றிய சிறு கிளேசமேனும் உண்டாகாதா என்ன. அது காதலாகாதா… என் வாழ்க்கை இவளோடாகாதா. படிப்பதிருக்கட்டும். படித்து முடித்தபின் அமைத்துக் கொள்ளலாமே… இவள் சொல்வதிருக்கட்டும். மீனட்சியிடமே கேட்டுவிட வேண்டும்.

 

மறுநாள் பயிற்சிக்கு முன்னமே செல்ல பரபரப்பு. நான் போவதற்கு முன்பே அவர்கள் வந்திருந்தார்கள். ஓடிக்கொண்டிருந்தார்கள்.

 

ஓடிவிட்டு வந்தார்கள் என்னை நோக்கி…

 

“ஹாய்” – நான் சொல்வதற்கு முன்னமே சொன்னாள் மீனாட்சி. அவள் முகத்தில் தெளிவு கலந்த மகிழ்ச்சி தெரிந்தது.

 

இவள் சொல்லியிருப்பாளோ… அதனால் தான் இந்த மாற்றமோ? அப்படியென்றால் கேட்டு விடலாமா… இப்பொழுதே, இங்கேயே…

 

“நாளைக்கு ஈவ்னிங் ஃப்ரியா…? இருந்தா… இதயம் ரெஸ்ட்டாரண்டில் பார்க்கலாமா?” – மீனாட்சி கேட்டதும் எனக்குள் ஏதோ பறந்தது போலிருந்தது. ஏன் நாளை… இன்றே கூடாதா என்னவளே…

 

“ஷ்யூர்” – என்றேன்.

 

அவள் சொல்லியிருப்பளோ… அதனால் தான் இந்த மாற்றம் போலும். சொல்லத் தயக்கம். எப்படி தொடங்குவது… சட்டென சொல்லாமல்… மெல்ல மெல்ல… எப்படி எதிர் கொள்வாள்.. உன்னை மெல்ல அணைத்து.. காதோரம் கிசு கிசுப்பாய்.. சொல்லி… என் பெற்றோரிடம் கூட்டிச்சென்று… அவர்களுக்கு உன்னை நிச்சயம் பிடிக்கும். படித்து முடித்து… நமக்கென சிறு குடும்பம்… இரு மக்கள்.. நாம் உருவாக்குவோம் அடுத்த தலைமுறையின் ஓட்ட வீரர், வீராங்கனைகளை.

 

அது சரி. எப்படி எதிர் கொள்வது. முதல் சந்திப்பில் என்ன கொடுப்பது… முதல் சந்திப்பா… இல்லையே… இருந்தாலும் தனிமையில் சந்திக்கும் முதல் சந்திப்பு. அவள் வருவாளா… தடங்கலாய்… உறுதுணையாய்… வந்தால் நல்லது என்று தோன்றியது. நான் ஏதேனும் சொதப்பாமல் இருக்க…

 

எண்ண ஒட்டங்களுடன்… எண்ணற்ற நினைவுகளுடன்… அன்றிரவு எப்படியோ தூங்கிப் போனேன்.

 

மறுநாள் காலையில் எப்பொழுதுமில்லாமல் முன்னமே எழுந்து விட்டேன். என் அன்னை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

 

“க்யா பேட்டா…காம் ஹை க்யா… இத்னா ஜரூர்” – காலை நடைக்கு தயாரகிக் கொண்டிருந்தார்கள்.

 

“நஹிம் மம்.. ஜைசா…”

 

எனது தந்தை வினோதமாக பார்த்தார்.

 

அந்த நாள் மிகவும் மெதுவாக நகர்வதாய் தோன்றியது. அந்த மாலை நேரம் எப்பொழுது வரும் என்றிருந்தது. அவசர அவசரமாய் கிளம்பி போனேன். ஏதாவது வாங்கிச் செல்ல வேண்டும்.

 

அங்கு சென்ற போது அதற்கான நேரமில்லை. முன்னமேயே அவள் வந்திருந்தாள். வெளியில் காத்திருந்தாள். தோழி வரவில்லை. அது யார் புதிதாய்? யோசித்துக் கொண்டே அவர்களருகில் போனேன். அவள் அருகிலிருந்தவனிடம் ஏதோ சொல்வது போலிருந்தது. அருகில் போனதும்…

 

“ஹாய் மிதுன்… நான்… நானும் மிதுன். மீனாட்சி சொன்னாள். உனக்கும் நிச்சயம் தங்கம் என்று சொன்னாள்.” – அவனை அறிமுகப்படுத்திக் கொண்டு… கையை உள்புறம் காட்டியவாறு…

 

“உட்கார்ந்து பேசுவோம்”

 

உள் சென்றோம். யாரிவன்… எங்களுக்கு தூதா… இல்லை வில்லனா.. எனக்குள் ஏன் இப்படி…?

 

“மீனாட்சி இடத்தில் நான் இருந்தால் நிச்சயம் என் சாய்ஸ் நீ தான்” – அவன் சொல்லும் போது மீனாட்சி அவனை முறைத்தாள்.

 

“சொன்னாள். ஒரு நல்ல மாணவன். படிப்பிலும் கெட்டி. ஒரே பையன். பெருந்தனக்காரன். சட்டென ஈர்க்கும் தேகம். வேறென்ன வேண்டும்.”

 

“என்ன சாப்பிடலாம்…” – சைகையால் பட்டியலைக் கேட்டான்.

 

வேண்டியதை சொல்லி விட்டு… பேச்சு தொடர்ந்தது. அவன் என்னை விட சற்று மூத்தவன் போலிருந்தான். எனக்கு சகஜமாய் பேச கஷ்டமாயிருந்தது.

 

அவன் பேச்சினிடையில் சாதாரணமாய் கேட்டான். அவள் மாட்டேனென்று சொன்னால் என்ன செய்வேனென்று… எனக்கு சொல்லத் தெரியவில்லை. அவனே தொடர்ந்தான்.

 

“இந்த கால கட்டம் அப்படி. இரு பாலாருக்கும் வரும் ஈர்ப்பு. தவறு என்றில்லை. அமைய வேண்டும். நீ மறுத்து சொல்லப்பட வேண்டியவனில்லை. உன்னிடம் மறுப்பதற்கு பதில் விலகிச் சென்றுள்ளாள். அவள் உன்னிடம் சொல்லும் சூழ்நிலையில் இல்லை. இதையும் சொல்ல என்னை தூது விடுகிறாள்.” – சொல்லிக் கொண்டிருந்தவன் நிறுத்தி சற்று உற்றுப் பார்த்தான்.

 

“இவ்வளவு பேசும் நான் யாரென்றா…? சிறு வயது முதல்… ஏன் இவள் பிறந்தது முதல் எனக்கு இவளென்றும்… இவளுக்கு நானென்றும்… நாங்களும் வளர்ந்து விட்டோம். யோசித்துப் பார்.  எத்தனை நாளாய் உனக்குள் இந்த ஈர்ப்பு… ஓடத் தொடங்கிய… ஓட்டப் பயிற்சி காலமாய்…?”

 

அவன் சொல்லச் சொல்ல… எனக்கு விகாரமாய்த் தெரியவில்லை. எதையோ இழந்ததாய் தோன்றவில்லை. இவர்களுக்குள் நுழைய நான் யார் என்று தான் தோன்றியது. ஏதிர்த்து… மிரட்டி பேசியிருந்தால்… நீயா… நானா… கேட்டிருக்கலாம். மல்லு கட்டியிருக்கலாம். ஆனால் அவன் சொன்ன விதம் எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சியைத்தான் உண்டாக்கியது.

 

“ஸாரி” – என்றேன். அவன் என் கையைப் பிடித்து இறுக்கி கொண்டான். அதில் நான் என்றும் உன் தோழன்… நாங்கள் நண்பர்கள் என்று சொல்வதாயிருந்தது.

 

– குணா (எ) குணசேகரன்

 

 

 

 

 

Series Navigationஎம்.வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் – 2 – பூமத்திய ரேகை கணக்கு வாத்தியார்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *