‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 13 in the series 11 ஏப்ரல் 2021

 

 

  1. யார் நீ?

ஓர் அதி அழகிய பசும் இலை

அதைப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே

வதங்கிச் சுருங்கி நிறம் மங்கி இறந்துவிழுவதைப் போல் _

அத்தனை இனிமையான பாடல்

அதைக் கேட்டு மனம் நெக்குருகிக்கொண்டிருக்கை யிலேயே

அபஸ்வரமாக ஒலிக்கத் தொடங்குவதைப் போல் _

பட்டுப்போன்ற குட்டிப்பாப்பா மளமளவென்று வளர்ந்து

பொறுக்கியாகி அலையத் தொடங்குவதுபோல் _

கட்டித் தொடுத்த மல்லிகைகள் கணத்தில்

கொட்டும் தேள்கொடுக்குகளெனக் கூர்த்துக் கருத்துவிடு வதைப்பொல் _

சாலையோர நிழலின் கீழ் பாதுகாப்பாய் நடந்துகொண்டிருக்கும்போதே

நேர்மேலே நிமிர்ந்திருக்கும் மரமொன்று இரண்டாகப் பிளந்து உச்சிமண்டையில் விழுவதைப்போல் _

இன்னும் என்னென்னவோபோல்

உன் கவிதைவரிகளின் நுட்பத்தோடு கூடவே வரும்

வன்மம் நிறை உரைநடையில்

கொச்சைப் பேச்சில்

கோணல்வாய்ச் சிரிப்பில்

அரசியல் சார்ந்த பொய்ப்பித்தலாட்ட வரிகள்

பேசப்படுவதும் எழுதப்படுவதுமாய் _

அய்யோ…..

  •  
  1. ஆழிசூழ் உலகும் ஆயிரமாயிரம் அனர்த்தங்களும்

‘மந்திரமாவது சொல்’ என்றேன்

’மனப்பாடமாகத் தெரியாதே’ என்கிறார்கள்.

’கற்றது கையளவு’ என்றேன்

’சற்றே பெரிதாயிருக்கும் என் புத்தகம்’

என்கிறார்கள்.

’இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்றேன்

’நாளை உனக்கு அறுபத்திநான்கு வயதாகப்போகிறது

– மறந்துவிடாதே’

என்கிறார்கள்.

’வானம் வசப்படும்’ என்றேன்

’வேணாம் விலைபோகாது’

என்கிறார்கள்.

’உடுக்கை இழந்தவன் கைபோல’ என்றேன்

’படுக்கை என்று தொடங்கவேண்டுமல்லவா

அடுத்த வரி’

என்கிறார்கள்.

’மாங்காய் மடையா’ என்றேன்

’இல்லை, மூலைக்கடையில் கிடைக்கும் காய் –

இது கூடவா தெரியாது’

என்கிறார்கள்

இதற்குமேல் தாங்காது என்று

வாய்மூடி

வழிசென்றவாறு.

ஆழிசூழ் உலகென்றானபின்

நீரைக்கண்டு பயந்தழுது

ஆவதென்ன? கூறு……

 

 

  •  

 

 

  1. உறைந்த புன்னகைகளும் மறைந்த முகக்கவசங்களும்

 

அவர்கள் ஆறேழு பேரிருப்பார்கள்

கூட்டலும் பெருக்கலுமாக.

அத்தனை பேர் முகங்களிலும் ஒரு சிரிப்பின்

அல்லது சிறு புன்னகையின் பிரதிகள்

கச்சிதமான அளவுகளில் பொருந்தியிருந்தன.

சொல்லிவைத்தாற்போல் அவர்களனைவரும்

ஆளுக்கொரு புத்தகத்தை

ஏந்திக்கொண்டிருந்தார்கள்.

நூல் முகம் துல்லியமாய்த் தெரிந்து

ஆள் முகம் மங்கலாகிவிடுமோ

என்று அவர்களுக்கும்

ஆள் முகம் தெரிந்து

நூல் முகம் மறைந்துவிடுமோ

என்று புத்தகங்களுக்கும் இருக்கும்

மன அவசம்

கவனமாகப் பார்த்தால் புலப்படக்கூடும் புகைப்படங்களில்.

புகைப்படங்களில் காணக்கிடைக்காத

முகக்கவசங்கள்

கொரோனா பரவினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று

முணுமுணுத்துக்கொண்டிருக்கின்றன

 

 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகை 244 ஆம் இதழ் வெளியீடு அறிக்கைதிருவளர் என்றாலும்… திருநிறை என்றாலும்…
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *