உயிர்

author
0 minutes, 10 seconds Read
This entry is part 7 of 8 in the series 9 மே 2021

முகுந்தன் கந்தசாமி

திடீர் என்று புழுக்கம் அதிகமானது

செல்வம் அடுக்கிவைக்கப் பட்டவைகளை எண்ணி பட்டியலை சரி பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் எந்த சலனமும் இல்லை. அவனை உற்று பார்த்துக் கொண்டே, எப்படி இது சாத்தியம் என மனதுக்குள் நான் கேட்டது அவனுக்கு எட்டியது போல….

“ஸார் எப்ப ஜாயின் பண்ணீங்க?”

“இன்னிக்கி தான்”

“அப்ப சிரமம் தான். நான் ஒரு வருஷமா இருக்கேன்….ஆரம்பத்தில வேலை பளு அதிகம் இல்ல. செஞ்ச வேலையப் பத்தி யோசிச்சு ஒரு நிதானத்துக்கு வர நெறைய நேரம் இருந்திச்சு. அதனால தான் இப்ப இது ஈஸியா இருக்கு”

கையிலிருக்கும் காகிதத்தில் இருந்து பார்வையை எடுக்காமலே பேசினான். நான் அவனையே வெறித்துக் கொண்டிருந்தேன்.

“வேற வேலை…”

கேள்வியை முடிக்கும் முன் பதில் வந்தது…

“நல்லா கேட்டீங்க…மூணு வருஷமா தேடி இப்பதான் ஒன்னு கெடச்சிருக்கு. இதுவும் எத்தனை நாளோ.?!”

காகிதத்தில் கையெழுத்து போட்டு வண்டியின் முன் பக்கம் சென்று டேஷ் போர்ட் மீது அதனை வைத்தான். நானும் மெள்ள பக்கவாட்டுக்குச் சென்று நின்றேன். கைபேசி எடுத்து நேரம் பார்த்துவிட்டு மீண்டும் சட்டையினுள் திணித்துக் கொண்டான். நிமிர்ந்து என்னைப் பார்த்து…

“ஒரு வகையில இது வசதி தான் ஸார். நாளைக்கு எந்த வேலை வந்தாலும் செய்ய முடியும்ல…”

நான் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தேன். உலகத்தில் நாங்கள் இருவர் மட்டுமே இருப்பது போன்ற ஒரு உணர்வு.

“கெளம்ப ரெடியா?” என கேட்டபடி விக்டர் வந்தார். அவர் அங்கு என்னவாக இருக்கிறார் என்பது பிடிபடவில்லை. கேட்கவும் ஒரு பயம்.

“மொத்தம் எத்தனை?”

“இருவத்தி இரண்டு”. செல்வம் தான் பதில் சொன்னான்.

“வண்டி?”

“ரெண்டு”

“அதை யார் ஓட்டுறது?”

“கணேசன். டீ குடிக்க போயிருக்கார்…இப்ப வந்துடுவார்”

விகடர் செல்வத்திடம் இருந்து காகிதங்களை வாங்கி சரி பார்த்துக் கொண்டார்.

“ஸார்! யாராவது தேடி வந்திருக்காங்களா?”

பெருமூச்சு விட்டபடி விகடர் சொன்னார்…

“அஞ்சு பேருக்கும் வந்திருக்காங்க. ஆனா அவங்களுக்கு எதுவும் சொல்லல. நேரம் இல்ல.”  

“சரியில்லையே ஸார்”

“எல்லாம் நமக்கு பிடிச்ச மாதிரியா நடக்குது செல்வம்? கடமையா செஞ்சுட்டு போக வேண்டியது தான். ஆனா சிரத்தையா செய்யனும். அது மட்டும் தான் நம்ம கையில இருக்கு.”

“எந்த நம்பருக்கு என்ன முறை ஸார் ? லிஸ்ட்ல இல்லியே”

“தெரியும். ஆனா முறை எல்லாம் முடிவு பண்ண நேரம் இல்ல. அதனால தான் சொன்னேன் செய்யறத சிரத்தையா செய்யனும்னு.”

அதுவரை எதுவும் பேசாமல் அவர்கள் பேசியதை கேட்டபடி நின்ற என்னை திரும்பி பார்த்த விக்டர்…

“நீங்க இன்னிக்கி தான் வேலைக்கு சேந்தீங்க இல்ல ? எதிர்பார்த்திருக்க மாட்டீங்க முதல் நாளே இப்படி விடியும்னு. எதுவும் நம்ம கையில இல்ல. பொம்மலாட்டம் நடக்குது….நமக்கு இப்போதைக்கு பொம்மை ரோல் தான்.”

எனது பதிலோ, கருத்தோ எதிர்பார்க்காமல் அவர் மட்டும் பேசிக் கொண்டிருந்தார். டீ குடித்துவிட்டு கணேசன் வந்தான்.

“கெளம்பலாமா செல்வம்? அவுட்டர்க்கு போகணும். எல்லாம் ரெடியா இருக்கு அங்க”.  இருவரும் வண்டியை ஓட்டுவதற்காக ஏறி அமர்ந்தார்கள். விக்டர் என் அருகில் வந்து…

“பணம் பத்திரமா இருக்கு இல்லியா?”. நான் குழப்பமாக…

“யெஸ் ஸார். ஒரு அறுநூறு ரூபாய் இருக்கு.”

“அறுநூறா? வவுச்சர் போடலியா? என்ன ஸார் இது?! சரி உள்ள வாங்க” என்று வேகமாக திரும்பியவர் இரண்டு அடி எடுத்து வைத்து பின் திரும்பி எனைப் பார்த்து, இரண்டு இரண்டாயிரம் தாள்களை திணித்தார்.

“யோசிக்காம செலவு செய்யயுங்க” என்றார்.

“ஸாரி ஸார். நான் திரும்ப வந்து வவுச்சர்…”

“வெண்டாம். இது நான் கொடுத்ததாகவே இருக்கட்டும்” 

சொல்லிவிட்டு திரும்பி வேகமாக சென்றார். செல்வமும், கணேசனும் வண்டியை எடுத்தார்கள். வண்டியிலிருந்த படியே செல்வம் கத்தினான். “அண்ணே…நீங்க முன்னாடி போங்க…நான் பாலோ செய்யறேன்”

வண்டி மெதுவாக கிளம்பியது. நகரம் பின்னோக்கி நகர்ந்தது. ஊர்ந்து செல்ல வேண்டிய இடங்களில் போகும் போது, பக்கத்தில் இருந்த மனிதர்கள் எங்களை வித்தியாசமாக பார்த்ததாகவே தோன்றவில்லை. செல்வம் சொனது போல, பழகியிருப்பார்கள். நமக்கு தான் சில காலம் தேவைப்படும். வேலைக்கு சேர்ந்த நேரத்தில் இருந்து நடந்தவைகளை மெள்ள அசை போட்டேன்.

“நீங்கள் எதிர்பார்த்த வேலை கொடுக்க சில நாட்களாகும்” என்ற வார்த்தைகள் – வெளியிலிருந்து கேட்ட கூக்குரல்கள் – விகடரின் வெற்று முகத்தில் இருந்த வாயின் மூலமாக கேட்ட உத்தரவுகள் – கேண்டீனில் பாத்திரங்கள் எழுப்பிய ஒலி – இவைகள் தவிர பெரும்பாலும் விக்டருக்கு உதவியாகவும், தனியாகவும் நின்று வேடிக்கை பார்த்தது, போன்ற எல்லாம் நினைவுக்குள் வந்து போயின. சுற்றம் எல்லாம் சூனியமாக தோன்றியது. கண்களில் திரண்ட நீர்த் துளிகளை துடைக்கும் பொருட்டு கண்ணாடியைப் கழட்டினேன். செல்வம் திரும்பி என்னை பார்த்தான், பின் கணேசனின் வண்டியின் மீதும் என் மீதும் மாறி மாறி பார்வைகளை செலுத்தியபடி பேசினான்.

“+2 முடிச்சு அஞ்சு வருஷம் ஆச்சு. அம்மாவின் ஆசைக்காக ரெண்டு தடவை நீட் எழுதினேன். இரண்டு முறையும் முந்நூற்று அருவதுக்கு மேல. நான் பாஸாக இருநூத்தி தொன்னூரு போதும். ஆனாலும் என்ன….கவர்ன்மெண்ட் கோட்டாவுல சீட் கெடைக்கல. கொஞ்ச நாள் B.Sc படிச்சேன். பிடிக்கல. வேலை தேடி மெட்ராஸுக்கு வந்தேன். என்னென்னவோ வேலை செஞ்சி இப்போ இங்க. காண்டிராக்ட் தான்…ஆனா விகடர் ஸார் பெர்மணென்ட் ஆக்கறேனு சொல்லியிருக்கார். ஆச்சுன்னா, அம்மாவ இங்க கூட்டியாரணும்…”

என் கவனத்தை மடை மாற்றும் முயற்சி என்பது தெரிந்தது. ஆனால் என் ஆற்றாமை மேலும் அதிகமானது.

“+2 என்ன மீடியம்?”

“இங்கிலீஷ் தான் ஸார். இல்லாட்டி நானாவது…நீட்டாவது. ஏதோ எங்க அய்யா காப்பாத்தி வச்சிருந்த நல்ல பேரு எனக்கு பிரைவேட் ஸ்கூல்ல இங்கிலீஷ் மீடியம் கெடைச்சுது”

திடீரென்று சாலையில் நெரிசல் குறைந்தது பொண்ற ஒர் எண்ணம். விமானங்கள் எல்லாம் ரத்து செய்தது காரணமாக இருக்கலாம்.

“இன்னும் எவ்வளவு நேரமாகும்?” 

“ஒரு அரைமணி ஆகும் ஸார். இது ரெகுலர் ஸ்பாட் இல்ல. ஆனா நமக்காக வழியெல்லாம் சரி பண்ணி வச்சிருக்காங்க…சீக்கிரம் போயிடலாம்”

டேஷ் போர்ட் மீதிருந்த காகிதங்களை எடுத்து படித்துக் ககொண்டிருந்தேன் – இல்லை பார்த்துக் கொண்டிருந்தேன். மனம் லயிக்கவில்லை. மனதின் கனம் கொடுத்த அழுத்தம் நிறைய வலித்தது. கண்ணதாசனின் “உனக்கு கீழே உள்ளவர் கோடி….நினைத்து பார்த்து நிம்மதி நாடு…” என்ற வரிகள் தோன்றியது. அரை மணிநேரம் எப்போது முடியும் என காத்திருந்தேன்.

“அங்க ரைட்ல ஒரு கட் இருக்கே ஸார்…அதுல திரும்பி நேரே போனா ஏரிக்கரை வரும்….அதுக்கு அந்த பக்கம் தான் போகணும். புதர்காடா இருந்தத சரி செஞ்சிருக்காங்க. டெம்பரரியா ஒரு சின்ன ஷெட் கூட இருக்கு”

இப்போது மனம் சற்று லேசானது போன்ற ஒரு எண்ணம். வந்த வேலை முடியப் போகிறது. பெருத்த நிம்மதி கிடைக்கும். மற்றதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்.

வண்டி ஏரிக்கரையைத் தாண்டி செல்வம் சொன்ன இடத்திற்கு சென்று சேர்ந்தது. அந்த ஷெட் அவன் சொன்னது போல சின்னதாக இல்லை…பெரியதாகவே இருந்தது. அருகில் போனதும் மூன்று பேரும் இறங்கினோம். ஐந்து பேர் காதிருந்தனர். அவற்றில் பெரியவர் ஒருவர் கணேசனிடம் சென்று தகவல்களைக் கேட்டுக் கொண்டார். பின் திரும்பி மற்றவர்களுக்கு கை காட்ட….அவர்கள் வந்து வண்டியில் இருந்து ஒவ்வொன்றாக இறக்கினார்கள். செல்வமும், கணேசனும் சேர்ந்து கொண்டார்கள். நானும் என் பங்குக்கு அருகே செல்ல…

“நீங்க வெயிட் பண்ணுங்க ஸார்” என்றார் பெரியவர். பின் ஏதோ தோன்றிவராக…

“நுழையும் பொது கற்பூரம் ஏத்தினீங்க இல்ல?” என்றார்

“கற்பூரமா?”

செல்வம் இடைமறித்து, “அவருக்கு தெரியாது…அதுவும் இல்லாம பழக்கமும் இருந்திருக்காது….நான் போறேன்” என்றான்.

எங்கிருந்தோ வந்த குற்ற உணர்ச்சி என்னை உசுப்ப…

“இல்லை செல்வம்…நானே ஏத்தறேன்…எங்க ஏத்தனும்?”

பெரியவர் கைகாட்டிய இடத்தில் ஒரு கருப்புக் கல் இருந்தது. சுற்றி வரிசையாக அடுக்கப் பட்ட செங்கல்கள். ஒரு விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. கண்ணை மூடி மனதுக்குள் பேசிய நான், பக்கத்தில் இருந்த ஒரு குச்சியை எடுத்து விளக்கில் நெருப்பு பற்ற வைத்து, கற்பூரம் ஏற்றினேன். சரியாக அதே நேரத்தில், “ஓம் குருவே சாமிகுருவே…அடியேன் ஒரு விண்ணப்பம் சொல்கிறேன்…” என தொடங்கி பெரியவர் உச்சத்தில் கத்தத் தொடங்க…உடன் இருந்தவர்கள் அவருக்கு பின்பாட்டு பாடினார்கள். கொஞ்ச நேரம் அசையாமல் இருந்த நான்…மெள்ள அவர் பாடியதை கவனமாக கேட்டேன். இதுவரை கேட்டதில்லை. அது தமிழில் இருந்தது என்பதை உணரவே சில நேரம் பிடித்தது. அவர்கள் வசனமாக அதனைப் பாடிக் கொண்டே நாங்கள் கொண்டு வந்த சடலங்களை வரிசையாக் அடுக்கினார்கள். செல்வமும், கணேசனும் தங்கள் பங்குக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள். ஏதோ ஒன்று என்னை உந்த நானும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வேகமாக சென்றேன். இந்த முறை கணேசன் என்னைப் பார்த்து, சற்று தள்ளியே இருக்குமாறு சைகை செய்தான். சடலங்களை அடுக்கி முடிக்கவும் அரவர்களின் பாடி முடியவும் சரியாக இருந்தது. ஓரமாக இருந்த விறகு கட்டைகளை அடுக்கினார்கள். செல்வம் என் பக்கத்தில் வந்து நின்றான்.

“இன்னும் கொஞ்ச நேரம் ஸார்…கொளுத்தின உடனே கெளம்பலாம்” என்றான்.

அப்போது தான் கிட்டத்தட்ட சுயநினைவுக்கு வந்து அங்கு நடப்பதை கிரகிக்கத் தொடங்கினேன். மெள்ள மின்சாரம் எனைத் தாக்கியது போன்று இருந்தது. இதுவரை இது போன்ற நிகழ்வுகளில் நான் பங்கு கொண்டதில்லை. எங்களுக்கு புதைக்கும் வழக்கம். இருந்தும் கூட இடுகாடு வரை சென்ற நினைவு இல்லை. ஏதோ, வந்தோமோ, எல்லா வற்றையும் இறக்கி வைத்தோமோ, சென்றோமோ என்றில்லாமல் ஏன் இவ்வளவு நேரம் இருக்க வேண்டும்? முதல் முறையாக செல்வம் மீதும் கனேசன் மீதும் கோபம் வந்தது. முகம் கூட தெரியாத நிலையில் கட்டி கொண்டு வரப்பட்ட சடலங்களுக்கு சொந்தம் கொண்டாட நினைக்கும் இவர்கள் செயல் மிக அதிகப் பிரசங்கிதனமாகப் பட்டது. நமக்கென்று ஒரு வரையறை வேண்டாமா ? ஏன் இந்த பணிக்கு ஒப்புக் கொண்டோம் ? திரும்பச் சென்றதும், விக்டரிடம் தெளிவாக சொல்லிவிட வேண்டும், இது எல்லாம் முடியாது என்று. அவர் இது போன்று செய்வாரா ? முதலில் என்னை ஏன் அனுப்ப வேண்டும் ? இந்த வேலைக்கு செல்வமும், கணேசனும் போதாதா ? நான் எதற்கு கூடுதலாக ? படித்ததெல்லாம் இதற்காகவா ? ச்சே…அவமானம். கோபம் என் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தலைக்கு ஏறி உடல் மெள்ள நடுங்கிற்று. அப்படியே விட்டு விட்டு உடனே கிளம்பலாம் என் எண்ணி செல்வத்திடம் “போகலாமா?” என்றேன். அவன் அதனை சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாமல், நேரே பெரியவரிடம் சென்றான். அவர் தீயுடன் கூடிய ஒரு விறகை அவன் கையில் கொடுத்தார். அவன் முன் சென்று, சடலங்களின் மீது வரட்டி வைத்து அதன் மீது இருந்த கற்பூரத்தை கொளுத்தினான். எத்தனை சடலங்களுக்கு அவன் தீ வைத்தான் என கவனிக்க வில்லை. மீதியை கணேசன் செய்தான், குலுங்கி அழுதவாறே. எனக்கு எரிச்சலாக வந்தது.

இப்போது பெரியவர் வேறு பாடல் பாடினார்…

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்

கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் 

மெள்ள முகமேல் முகம் வைத்து முத்தாடி என்றன்

மகனே எனஅழைத்த வாய்க்கு 

முன் பாடியதை விட இந்த தமிழ் சற்று நன்றாக இருந்தது…ஆனாலும் கோபத்தின் உச்சத்தில் இருந்ததால், அதனை இரசிக்க பொறுமையில்லை.

 முன்னை இட்ட தீ முப்புரத்திலே

பின்னை இட்ட தீ தென் இலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

பெரியவரும் அவர்கள் உதவிக்கு வந்தவர்களும் ஆளுக்கு ஒரு நீள கம்பை வைத்து சடலங்களின் மீதான விறகுகளை சீர் செய்தனர். பெரியவர் தொடர்ந்தார்….

 வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்

ஆகுதே பாவியேன் ஐயகோ 

மாக குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்

கருதி வளர்த்தெடுத்த கை 

பாடியபடியே என்னைப் பார்த்தார். எனது உடல் மொழி சரியில்லாததைக் கண்டு, பாடுவதை நிறுத்திவிட்டு, வேலையைத் தொடர்ந்தார். எப்போது பக்கத்தில் வந்து நின்றான் செல்வம் என்று தெரியவில்லை. திடீரென்று பேசத் தொடங்கினான். 

“கொள்ளி போடவும் ஒரு கொடுப்பினை வேணும் ஸார். இங்க எரியறவங்க என்ன யாரும் இல்லாதவங்களா ? ஆனா விதி ?”

இவன் என்ன சொல்லுகிறான் ?

“இதுவாவது பரவாயில்ல கொரொணானு ஒரு காரணம் சொல்லிக்கலாம். ஆனா நான் செஞ்சது ? மன்னிப்பே கெடயாதுங்க ஸார்”

அழுகிறானா என்று திரும்பி பார்த்தேன். அவன் முகத்தில் ஒரு மெல்லிய புண்ணகை. தன்னைத் தானே நையாண்டி செய்துக் கொண்ட புண்ணகை.

“ஏன் உன…உங்களுக்கு என்ன ?”

எனை அழுத்தமாக பார்த்து விட்டு பேசத்தொடங்கினான். 

“மெட்ராஸுக்கு வந்த புதிது. இங்க பிரண்ட்ஸ் ஜாஸ்தி. வேலையில்லாத எனக்கு என் பிரண்டோட ரூம் தான் சொர்க்கம். அங்க கெடைக்கிற சரக்குதான் எல்லாமே. எப்போ தெளிவா இருப்பேனு என்னாலயே சொல்ல முடியாது. என் பொறந்த நாள் காலைல முழிச்சதே சரக்குலதான். ஆபீஸ் போகும் போது எல்லாரும் சொல்லிட்டு போனாங்க…’டேய் வர்ற வரைக்குமாவது தெளிவா இருடா…சாயந்திரம் நல்லா செலிபிரேட் பண்ணலாம்னு’. என்னாத்த கேட்டேன். நாள் முழுக்க குடி, போதா குறைக்கு சாயந்திரம் மத்தவங்களோட. கண்ணு மண்ணு தெரியாம குடிச்சு, சோறு திங்காம அப்படியே படுத்து கெடந்தேன். எத்தனை நாளுனு கூட தெரியாது….ஒரு வழியா தெளிவாயிட்டு, என் செல்ல தேடினேன் கெடைக்கல. மொத்த ரூமையும் பொரட்டிப் போட்டு பாத்தா ஒரு மூலையில கெடந்தது. எடுத்து சார்ஜ் போடுட்டு, சாப்பிட போனேன். வந்து ஆன் பண்ணா ஏகப்பட்ட மெஸேஜ். ஒரு பதினஞ்சு மெஸேஜ் தாண்டிய பின்னாடி தான் தெரிஞ்சுது, எங்க அய்யா தவறி ரெண்டு நாளைக்கு மேல ஆச்சுன்னு”

எனக்கு மொத்தமாக உலுக்கிப் போட்டது. என்ன மனுஷன் இவன்…அப்பாவின் மரணத்தை ரொம்ப சாதாரணமா சொல்றான் ? ஒரு வேளை நெறைய பேர் கிட்ட சொல்லி பழகியிருப்பானோ ? அப்போது பேச்சை நிறுத்திய செல்வம் என்னிடம் திரும்பி.

“அட, இதெல்லாம் ஏன் நான் உங்க கிட்ட சொல்றேன். நீங்களே பாவம் ரொம்ப சங்கடத்தில இருக்கீங்க. உண்மையில இதெல்லாம் யாருக்கும் தெரியாது. விக்டர் ஸார் கிட்ட மட்டும் சொன்னேன், அய்யா சாகும் போது கூட இல்ல, கொள்ளி வைக்க கொடுப்பினை இல்லனு. அவரு எதையும் சொல்லாம கேட்டுகிட்டாரு. அதான் இது மாதிரி சந்தர்ப்பம் கெடைக்கும் போது இந்த வேலைய பாத்து என்ன தேத்திக்கிறேன். எனக்கு வேற வழி தெரியல” என்று எந்தவித சங்கட உணர்வும் இல்லாமலே சொன்னான்.

“என்ன மண்னண்ணே…போலாமா?” பெரியவரை பார்த்து  கேட்டான்.

“ஸாருக்கு சரின்னா ஒரு பத்து நிமிஷம்” என்றார் பெரியவர். நான் சரி என்பது போல தலையாட்டினேன். செல்வத்தை ஊடுறுவி பார்த்தபடி கேட்டேன்.

“அப்ப கணேசன்?”

நன்றாக சிரித்தபடி சொன்னான் செல்வம்.

“அதே தான். எனக்கு அய்யா அண்ணனுக்கு அம்மா. அவ்வளவுதான் வித்தியாசம்”

“சடலத்த எரிக்கும் போது, நான் எங்க அய்யாவ மட்டும் நெனச்சுக்க மாட்டேன். மூடி வச்சிருக்கிறது ஆணோ, பெண்ணொ, யாரோ யவரோ, ஆனா நான் ஒரு புள்ள மாதிரி, அண்ணன் தம்பி மாதிரி இருந்து இந்த வேலைய செய்யறேன் அப்படீனு மனசுக்குள்ள நெனச்சுக்குவேன். ஒரு நிம்மதி மனசுக்கு வரும்”

பெரியவர் பக்கத்தில் வந்து நின்று பீடி ஒன்றைப் பற்ற வைத்தார். அவரிடம் இருந்து வந்த சாராய நெடி சற்று தூக்கலாக இருந்தது.

“ஸாருக்கு, இதெல்லாம் பிடிக்கல போல” என்றார்.

என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவர் தொடர்ந்தார்.

நீங்க கேட்டீங்களே பாட்டு, அதை கேக்குற பொறுமை இப்ப யாருக்கும் இருக்கறதில்ல. இங்க தான் அத மனசு ஒப்ப பாட முடியும். அதான் பாடினேன்.  நீங்க தப்பா நெனச்சுக்காதீங்க. இனிமே நீங்க வந்தா இதெல்லாம் இருக்காது”

செருப்பால் அறைந்தது போல் இருந்தது எனக்கு. 

பெரியவர் செல்வம், கணேசன் இருவரையும் பார்த்து…

“என்ன பய புள்ளைகளா, ரெண்டு பேரும் தயாராவறீங்க இல்ல?”

மீசையை முறுக்கியபடி கணேசன் சொன்னான்.

“பின்ன..? விடமாட்டோம்ல”

“அட போங்கண்ணே…போட்டிய மாத்துங்க. இதுல போயி நான் எப்படி அண்ணனோட போட்டி போடறது?”

“அப்ப நீயே சொல்லு…”

“வேணா கிரிக்கெட்டு வச்சுக்கலாம். நான் ரெடி” என்றான் சொல்வம்.

“அட போடா போக்கத்தவனே….அதெல்லாம் காசு சமாச்சாரம்டா…நமக்கு எப்படி எட்டும். ஒழுங்கா நான் சொன்னதுக்கு தயார் ஆவு. எப்படியும் ஒரு பத்து வருஷம் டயம் தர்றேன்”

“என்னது, பத்து வருஷமா ? அப்ப நீ தான் எனக்கு கொள்ளி போடணும்” பலமாக சிரித்தபடி கணேசன் சொன்னான்.

அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்று புரியவில்லை. குழப்பமாக இருந்தது. பெரியவர் தான் சொன்னார்,

“அது ஒன்னும் இல்ல ஸார். எனக்கோ யாரும் இல்ல. கொள்ளி வைக்கறது யாருனு ரெண்டு பேருக்கும் போட்டி. நான் தான் சொன்னேன், அலங்காநல்லூர்ல மெடல் வாங்குறவன் தான் அதை செய்யனும்னு. நமக்குனு ஒரு கெத்து வேண்டாம்? இவன் என்னடானா கிரிக்கெட்டு சொரிக்கெட்டுனு காஸ்ட்லி சமாச்சாரம்லாம் சொல்றான்”

எனக்கு வியப்பாக இருந்தது. மரணத்தை இவர்கள் இவ்வளவு எளிமையாக அனுகுகிறார்களே. எப்படி சாத்தியம்? அதனை ஒத்திப் போடும் அனைத்து முயற்சிகளுக்காகத் தானே நாம் படித்தது. ஊரில் சந்திரன் கூட அடிக்கடி ஒரு பாட்டு பாடுவானே….அது என்ன ? அதிலும் இப்படித் தானே வரும். வித விதமான எண்ணங்களும், அது தூண்டிய உணவுகளும் ஒரு சேர என்னைத் தாக்கின. ஆனால் அந்த தாக்குதல் இப்போது சுமையாகத் தெரியவில்லை. மெள்ள திரும்பி எரிவதைப் பார்த்தேன். அவ்வளவு தானா வாழ்க்கை???!!!

செல்வம் வந்து, “சரி கெளம்பலாம் ஸார்” என்றான்.

“எனக்கு பரவாயில்லை இன்னும் கொஞ்ச நேரம் வேணா இருக்கலாம்”

“இல்ல ஸார், இனிமே பெரியவர தனியா விடனும். சாராயத்த குடிச்சிட்டு, ஆசைப் பட்ட பாட்டையெல்லாம் பாடி, ஆக்ஸிடெண்ட்ல செத்துப் போன பொண்டாட்டியையும், மகளையும் நெனச்சபடியே படுத்து தூங்கிடுவாரு. நாம தொந்தரவ செய்ய வேண்டாம்”

“இங்கயா தூங்குவாரு? இந்த சூட்டுலியா”

“ஸார், நமக்கு தான் ஏசி வேணும். இவர மாதிரி ஆளுங்களுக்கு இந்த சூடு தான் சொர்க்கம். எலெக்ட்ரிக் வந்ததிலிருந்து இந்த வசதியில்ல. அனுபவிக்கட்டும்”

செல்வமும், கணேசனும் வண்டியை எடுத்தார்கள். நான் திரும்பி பெரியவரைப் பார்த்தேன் அவர் வேறு உலகத்துக்குள் சென்று கொண்டிருந்தார். அவர் உதவியாளர்களுள் ஒருவர் வந்து நின்றார்.

“காசு குடுங்க ஸார்” என்றான் செல்வம்.

நான் “எவ்வளவு என கேட்ட படியே, விகடர் கொடுத்த பணத்தையும், எனது பணத்தையும் முழுதாக எடுத்தேன்.

“குடுக்குறது குடுங்க”

நான் மொத்தத்தையும் நீட்டினேன். அவரோ பதறியபடி…

“ஸார், இவ்வளவு வேணாம் ஸார். பெருசு எங்ள பொங்க வச்சுடும். ஒரு வேள சாப்பாடுக்கு மட்டும் குடுங்க”

“இல்ல வச்சுக்கங்க. இந்த நாலாயிர ரூபாய் ஆபீஸர் இதுக்காக கொடுத்தது. அவர் சொந்தப் பணம். திரும்ப எடுத்து போவ முடியாது”

அவர் சற்று யோசித்தபடி, “சரி குடுங்க. பெருசு கிட்ட காலைல சொல்லிக்கிறேன். ரொம்ப தாங்க்ஸ் ஸார்.

சொல்லிவிட்டு வேகமாக நடந்தார். 

நான் வண்டியில் ஏறி அமர்ந்தேன்.

“ஏன் இப்படி?”

“ஸார், இவங்கள பொறுத்த வரை, இதெல்லாம் விரும்பி ஒரு கடமையா செய்யறாங்க. நோய்க் காலத்துல தங்களால முடிஞ்சது. எத்தனை பொணத்த கொண்டு வந்தாலும் சளைக்காம செய்வாங்க”

அப்போது தான் பட்டியல் காகிதம் நினைவுக்கு வந்தது.

“மறந்துட்டேன்…இந்த பேப்பர்”

“அது ஒன்னும் இல்ல ஸார். வழியில யாராவது நிறுத்தினா காட்ட. ஆர்டர் படி ஒரு டாக்டரும் போவணும். அதுக்கு தான் நீங்க. வழக்கமா எலெக்ட்ரிக் போவோம். அங்க இது தேவைப்படும். ஆனா, கொரொணா சாவெல்லாம் கணக்குல வரக்கூடாதுனு கவர்ன்மெண்ட் நெனைக்குது. அதுக்கு தான் இந்த மாதிரி ஏற்பாடெல்லாம். இதுக்கான செலவ விக்டர் ஸாரும், டீனும் எடுத்துகிட்டாங்க. நானும், கணேசன் அண்ணனும் எங்க பேட்டாவுல இருந்து கொஞ்சம் கொடுத்தோம். அது மாதிரி விஷயம் தெரிஞ்ச  மேரி சிஸ்டரும், இன்னும் ரெண்டு மூணு பேரும் அவங்களால ஆனத கொடுத்தாங்க. அவங்க தான் பாவம், பேஷண்ட்டையும் பாத்துகிட்டு, இது மாதிரி ஏதாச்சும் நடந்தா காசும் கொடுத்து….வேற என்ன பண்ண முடியும் ?”

எனக்கு சங்கடமாக இருந்தது. கையில் இருந்த எல்லா பணத்தையும் அங்கேயே குடுத்திருக்கலாமோ ? இப்ப வேணா, கணேசன் கிட்ட குடுக்கலாம். அப்படி எண்ணம் வந்த போதே வேறொரு குரல், ‘அது அவர்களை கொச்சைப் படுத்தும். வேண்டாம்.’ என்றது. வண்டி மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. மனம் லேசாகிவிட்டது. சுடுகாட்டில் தோன்றியதையெல்லாம் தூர எறிந்தேன். இது தான் ஆரம்பம். செல்ல வேண்டிய தூரம் அதிகம். நல்ல வேளையாக முதல் நாளே இந்த அனுபவம் கிடைத்தது. இனி பம்பரமாக சுழன்று நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். ஆனாலும் ஒரு சின்ன நெருடல்.

“விகடர் அஞ்சு பேர் இருக்காங்கனு சொன்னாரே….அவங்க…”

“இந்த இருவத்தி இரண்டுல, அஞ்சு தான் நம்ம ஆஸ்பத்திரியில இறந்தது. அவங்க சொந்தத்த தான் விக்டர் ஸார் சொன்னாரு”

“அப்ப மீதியெல்லாம்?”

“ஒரே நாள்ல எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணுமா?” என்றான் செல்வம் ஒரு நக்கல் சிரிப்போடு.

“மீதியெல்லாம் பிரைவேட் ஆஸ்பத்திரி ஸார். ஆனா என்ன, நம்மள மாதிரி இல்லாம, அவங்க சொந்தக்காரங்க கிட்ட இறந்து போனத சொல்லியிருப்பாங்க. அவங்களும், நீங்களே எல்லாத்தையும் பாத்துக்கங்கனு பணத்த மட்டும் குடுத்துடுவாங்க. நம்ம டீனும், விக்டர் ஸாரும் ஒத்தை பைசா வேணாம்னு சொல்லிட்டாங்க. நடுவுல இருக்கவுங்களுக்கு கொண்டாட்டம் தான். இப்ப கூட பதினேழு பொணம் வந்ததால தான் அவசர அவசரமா நம்ம ஆஸ்பத்திரி போணங்களயும் வண்டியில் ஏத்துனாங்க. மீடியா எல்லாம் கழுகு கண்ணோட சுத்தறாங்க. அவங்களுக்கு தெரியறதுகுள்ள க்ளியர் செய்யனும்”

நிஜமாகவே ஒரே நாளில் இவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டுமோ? வெட்டியான், அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரி இப்படி பல்வேறு உலகத்துக்குள் சென்று வந்தது சற்று அயர்ச்சியாக இருந்தது. ஆனால் மனம் தெளிவாக இருந்தது. நல்லவர்களின் சுமையை கூடும் மட்டும் குறைக்க வேண்டும். வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினான்.

“ஸார், டீ குடிக்கலாம் வாங்க”

“இல்லை எனக்கு வேணாம், நீங்க போயிட்டு வாங்க நான் வண்டியில இருக்கேன்”

அவர்கள் சென்றதும், ரேடியோவை துழாவினேன். அவன்தான் மனிதன் பாடல் பாடிக் கொண்டிருந்தது.

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்

அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்

உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா

இதை உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா

உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா

சீட்டில் சாய்ந்து, கண்ணை மூடி நினைத்துக் கொண்டேன்…ஆம், மயங்கவோ கலங்கவோ கூடாது.

இருவரும் திரும்பி வந்து வண்டியை வேகமாக ஆஸ்பத்திரி நோக்கி செலுத்தினார்கள். ஹவுஸ் சர்ஜன் ஆன எனது பணி இப்போது நிறைவாகவே தோன்றியது. வண்டி ஆஸ்பத்திரியில் நுழைந்ததும், எனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று, துணிகளை களைந்து குளித்து விட்டு வந்தேன். படுக்கையெல்லாம் சரி செய்த போது, கதவு தட்டும் சத்தம். கதவைத் திறந்தால் மேரி நின்று கொண்டிருந்தார். பொறுமையான செவிலி என்று பெயர் வாங்கியவர்.

“விகடர் ஸார் தான் பாத்துட்டு வரச் சொன்னார். இன்னிக்கு பொனது ஏதும் சங்கடமா இருந்துச்சானு கேக்க சொன்னார். அப்பப்ப உங்களுக்கு அசவுகரியம் வந்ததாக செல்வம் சொன்னான். எல்லாம் பரவாயில்லையா ? நாளைக்கும் போகணும். முடியுமா…இல்ல வேற ஏற்பாடு செய்யலாமானு கேக்க சொன்னார்”

நான் முகம் மலர “எந்த வேலை என்றாலும் தயார். வேணும்னா நானே அவர்கிட்ட சொல்றேன்”

“இல்ல ஸார், நானே சொல்றேன்” என்று திரும்பிச் சென்றார்.

நான் கதவை அடைத்து, தரையில் முழங்காலிட்டேன். பசியில்லை என்றாலும் விரதத்தை முடிக்க வேண்டும். மண்டியிட்டு இறைவனை வணங்கி தொழுகையை தொடங்கி முடித்தேன்.

அலமாரியில் வாப்பா அன்போடு கொடுத்த பெயர்ப் பலகை, மரத்ததிற்கு பதில் வைரத்தில் மின்னியதாக பட்டது. முகம்மது சலீம், MBBS.

‘நீங்க சொன்னது சரி வாப்பா, சேவைக்கு குலம், குணம், மதம், அந்தஸ்து எதுவும் கிடையாது. மனம் தான் முக்கியம்’

‘நிச்சயம் உங்களைப் பெருமைப் பட வைப்பேன் வாப்பா’!

Series Navigationஅப்படி இருக்கக் கூடாதுதோற்றம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *