தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 18 of 22 in the series 18 ஜூலை 2021

 

 

            வளவ. துரையன்

 

”எனக்கும் எவற்கும் இறைவன்

தனக்கும்  எவனோ தவறே?”                           301

 

”எனக்கும் மற்றுமுள்ள அனைத்து உயிர்களுக்கும் தலைவன் சிவபெருமான். அவர் உங்களைப் பணியவில்லை என்பது எப்படித் தவறாகும்?

                         ”இரை ஆசையால் வந்த யஞ்ஞா

                         உரையாய், உறுமோ நின்ஊணே”                [302]

[யஞ்ஞன்=அக்னிதேவன்; உறுதல்=அடைதல்]

     ”வேள்வியில்அவியாகிய உணவு கிடைக்கும் என்னும் ஆசையால் வந்துள்ள அக்னிதேவா! உன் எண்ணத்தை நீ அடைவாயோ சொல்”

                         வான்வந்த மண்வந்த வேள்விக்கு

யான்வந்த எளிவந்த வாறே.                      [303]

வானுலகத்தவரும், மண்ணுலகத்தவரும், வந்துள்ள இந்த வேள்விக்கு நான் வந்திருக்கக்கூடாதுதான். என்னை யாரும் அழைக்காமலே வந்துவிட்டேன். இது பெரிய இழிவுதான் எனக்கு.

                  தீக்குப் பிறந்தஇல் என்னும்                       

                  வேய்க்குச் சிறப்பு என்கொல் வேறே.        [304]

நானே நெருப்பு. என்பிறந்த அகம் மூங்கில்காடு; மூங்கிலில் தோன்றிய நெருப்பாலேயே மூங்கில் எரிந்துபோகும் என்பதைவிட மூங்கிலுக்கு வேறு என்ன சிறப்பு உள்ளது?

[நான்  பிறந்த அகம் என்னாலேயே அழியப் போகிறது என்பது இங்கு மறைபொருள்]

                    இவ்வாறு உரைத்து இங்கு நின்றும்

                    செவ்வாய் மடப்பாவை சென்றே.                      [305]        

                                                                                      இத்தகைய கோபம் மிகுந்த மொழிகளைக் கூறிவிட்டு சிவந்த வாயை உடைய தேவியானவர் அங்கிருந்து அகன்றார்.                      

                      விற்சாரும் மேருப் பொருப்பின்

                      பொற்சாரல் சாரப் புகவே.                     306                        

                                                                                       தேவியானவர் சிவபெருமான் திரிபுரம் எரிக்கப் புறப்பட்டபோது வில்லாக விளங்கிய பொன்போல் பொலியும் மேருமலைச் சாரல் பக்கம் செல்ல;

                விதிநன்கு அமைத்து வழிபாடு செய்து

                    மடஆயமாகி மிடையும்

                பதினெண் கணத்து மடவாரும் அன்னை

                    முனிவ ஆறுமாறு பகர்வார்.                       [307]              

 

[விதி=நடைமுறை; மடம்=இளமை; ஆயம்=கூட்டம்; முனிவு=கோபம்]

   

 நடைமுறைப்படி வழிபாட்டு முறைகளைச் சரியாக அமைத்துக் கொண்டு இளமையான தேவலோகத்துப் பெண்கள் பதினெண்மர், சினத்துடன் இருக்கும் தேவியின் சினம் தணியுமாறு பணிந்து கூறுவார்கள்.

                விழிவழி கருணைப் பச்சை விளக்கே! மின்னே!நின்

                 வழிவழி அடியேம் நீர்அர மகளிரோம் யாமே.         [308]

 

”கருணை மழைபொழியும் விழிகளை அழகாகக் கொண்டவரே! பச்சை மரகத ஒளிச்சுடரே! மின்னல் கொடியே! நாங்கள் பரம்பரை பரம்பரையாகத் தங்களிடம் அடிமையாக இருக்கும் நீர்க்கன்னியர்கள் ஆவோம்”

      இது திருமலை இது திருவடி மலர்நோய் மலர்வாவி

      இது துறை வரும் இவள் திருமகள்! இவள் பார்மகள் பாரே!            [309]

 

[வாவி=குளம்; துறை=இரங்கும் இடம்; பார்=பூமி]

  

இது அழகியமலை; இங்குள்ள மலர்கள் பூத்து இருக்கின்ற குளம்தான் தங்கள் திருவடி படியத்தக்க திருக்குளம்; இதுதான் இறங்கி நீராடும் நீர்த்துறை; வருகின்ற இவர்கள் திருமகளும்,  மண்மகளும் ஆவார்கள்.

 

  

 

           மேல்நிற்பன உலகம் பொதிவெள்ளம் பொதி கள்ளச்

          சேல்நிற்பன விடுநீர் புனைதெண்ணீர் படுசுனையே.         [310]

 

மேலே உள்ள வானுலகம் எட்டும் அளவு ஊழிவெள்ளம் பெருகி எழுந்தாலும், அதைத்தன் செதிலில் தேக்கி வைக்கும் அளவுப் பரந்துள்ளதாகும் இது. மேலும் மீன்கள் நிறைந்து நிற்கும் தெளிவான நீருள்ள சுனையாகும் இது.

=====================================================================================

 

 

 

Series Navigationகீறிக்கீறி உழுகிறோம் உண்கிறோம்என்னை பற்றி
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *