ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

0 minutes, 11 seconds Read
This entry is part 4 of 15 in the series 1 ஆகஸ்ட் 2021

 

ரிஷி

 

கதையின் கதை

 

1.அவர் கதை



அவராகப்பட்டவரின் கதை
அவராகவும் அவராகாமலும்
அவராக்கப்பட்டும் படாமலும்
அவராகு மவரின்
அவராகா அவரின்
அருங்கதையாகாப்
பெருங்கதையாக.

 

2.உன் கதை



திறந்த புத்தகம் என்றாய்
மூடிய உள்ளங்கை என்றாய்
முடியும் நாள் என்றாய்
முடியாத் தாள் என்றாய்
வாடும் இலை என்றாய்
வாடா மலர் என்றாய்
வெம்பனி என்றாய்
சிம்ஃபனி என்றாய்
ஊடாடும் ஒளி என்றாய்
நாடோடியின் வலி என்றாய்
தேடும் கனி யென்றாய்
’காடா’த் துணி யென்றாய்
கருத்த இரவு என்றாய்
வறுத்த வேர்க்கடலை என்றாய்.
பிறவற்றை ஓரளவு பொருள்
கொண்டாலும்
பொறுத்துக்கொண்டாலும்
வறுத்த வேர்க்கடலை
வெறுத்துப்போய்விட்டதெனக்கு

 

  1. என் கதை

    உன்கதையை எழுதி என்கதை யென்கிறாய்
    பாவி யென்கிறாய் பாவம் என்கிறாய்
    கோவித்துக்கொண்டு ஒரே தாவாய்த் தாவி
    ஓங்கியறைய வருகிறாய்.
    ஆவேசம் எதற்கு?.
    கூவிக்கூவிக் கடைவிரித்தாலும்
    கொள்வாரில்லாத ஊரில்
    தாவித்திரிந்தலைந்துகொண்டிருப்பது
    நீயுமல்லாத நானுமல்லாத
    ஆவி

 

  1. முன் கதை



முற்றும் போட்ட பின்பு
சற்றும் எதிர்பாராமல்
கதையின் நடுப்பகுதியிலிருந்து
எழுந்துவந்த சொல்லொன்று
என்னோடு முடித்திருந்தால்
எத்தனையோ நன்றாயிருந்திருக்குமே
எனக் கண்ணீர்மல்கச் சொன்னது
blurb ஆகாமல்
காற்றோடு கலந்துவிட்டது

 

  1. பின் கதை



முன்பின் உண்டோ இதுபோன்றதொரு இன்கதை

என்றவரிடம்
ஏற்கெனவே இந்தக்கதையைப் படித்திருக்கிறேன்

என்றொரு வாசகர் சொல்ல
உடனடியாக அதற்கு மறுப்புத் தெரிவிக்குமாறும்
அல்லது விடுபட்ட ’இதைப்போன்ற’ உடனடியாக சேர்க்கப்படவேண்டுமென்றும்
அன்பின் மிகுதியால் படைப்பாளி காட்டமாய்க் கேட்டுக்கொண்ட

ஆறாவது நிமிடத்தில்
குருதிவெள்ளம் உடைப்பெடுக்கும்படியாக
அந்த நல்வாசக நெஞ்சாங்கூட்டில்
அதிரடியாக நுழைந்து துளைத்தது

துருப்பிடித்த தோட்டாவொன்று

 

 

  1. நுண் கதை
     
    அடுத்திருந்த வீட்டை
    இடித்துக்கட்டிக்கொண்டிருந்ததால்
    திரட்டித் திங்க வாகாய்
    விரிந்து பரந்து குமிந்திருந்தது மண்.
    தினமும் குழந்தையைத் திங்கவிட்டு
    பின் அதன் வாயை வலிக்குமளவு
    அகல விரித்துப் பார்த்தாள்
    மண் கண்டாள் மண்ணே கண்டாள்
    பின்
    வயிற்றுவலியில் வீறிட்டழுத குழந்தையை
    இரண்டடி ஆத்திரம் தீர அடித்துவிட்டு
    இடுப்பில் தூக்கிக்கொண்டு
    மருத்துவமனைக்கு ஓடினாள்.

 

 

  1. வன்கதை

‘கன்’ வேண்டும் ‘கன்’ வேண்டும் என்று

கேட்டுக்கொண்டேயிருந்தது குழந்தை.

ஒன்றுக்கிரண்டு இருக்கிறதே கண் உனக்கு

என்று கொஞ்சினாள் தாய்

‘கன்’ வேண்டும் ‘கன்’ வேண்டும் என்று

கேட்டுக்கொண்டேயிருந்தது குழந்தை

‘ன்’ அல்ல ’ண்’ சொல்லு பார்க்கலாம்

என்று திருத்தினாள் குட்டி அக்கா

கன் வேண்டும் கன் வேண்டும் என்று

கேட்டுக்கொண்டேயிருந்தது குழந்தை

இன்னும் நன்றாகப் பழகவேண்டும் தமிழ்

என்றார் தாத்தா

சின்னப்பையன் தானே போகப்போகப் பழகும்

என்றார் தந்தை

கண்ணையுருட்டி புண்ணாகிப்போன மனதுடன் தொலைக்காட்சிப்பெட்டிக்குள் பாய்ந்த குழந்தை

அங்கு சுட்டுக்கொண்டிருந்த நாற்பது கதாநாயகர்களின்

இரண்டு துப்பாக்கிகளைப் பறித்து

கைக்கொன்றாய்ப் பிடித்துக்கொண்டு

வாயால்

சரமாரியாகச் சுட ஆரம்பித்தது.

 

 

  1. கால் கதை

 

கால் அரை முக்கால்

கணக்கிற்கப்பால்……..

சர்க்கரை யாக முடியுமா

உப்பால்?

நாக்காக முடியுமோ மூக்கால்?

ஆயின், கதையாகும் கதையாகாக் கதையும்

கதைகதையெனக் கதைக்குங்கால்!

 

 

 

  1. அரைக் கதை


ஆறே வார்த்தைகளில் அருமையான கதையை
என்று ஆரம்பித்தவர்
எட்டரை வார்த்தைகளில் எழுதி முடித்தார்
இரண்டு அதிகமானதைப் பற்றி
ஒருவர் அதிருப்தி தெரிவிக்க
இரண்டரை அதிகமானதே இக்கதையின்
பரிபூரணத்துவம் என்றார் இன்னொருவர்.
கேட்டுக்கொண்டிருந்த அரை
கரையத் தொடங்கியது.

 

 

  1. சுட்டிக் கதை

சுட்டி என்பது சின்னப்பையனைக் குறிக்கலாம்

நெத்திச்சுட்டியைக் குறிக்கலாம்

சட்டியிலேற்பட்ட அச்சுப்பிழையாக இருக்கலாம்

இந்தத் தலைப்பு ஒரு வரியானால்

அடுத்த வரியில் புட்டி துட்டி முட்டி

ஆகிய மூன்று சொற்களில் ஒன்று

இடம்பெறக்கூடும்

தொட்டி வட்டி மெட்டி

யென்பதாகவும் இடம்பெறலாம்….

வட்டநிலா சதுரமாகி விட்டத்தினூடாய்

இறங்கிவரக் கண்டு

Hamlet_இன் Nutshell வாழ்க்கை

அத்துப்படியானவர்கள்

கட்டங்கட்டி ஒளிரும் விளம்பரவாசகங்களை

கடந்துபோய்விடுகிறார்கள்.

 

 

11.பூதக்கண்ணாடிக்கதை

 

 

சின்னச்சின்ன எழுத்தெல்லாம்

என்னமாய் பெரிதாய்த் தெரிகிறது

பார் என்று

கண்ணை விரித்துக் கதைசொல்லும்

தகப்பனிடம்

இன்னும் பூதம் வரவில்லையே என்று

சலிப்போடு கேட்டு

கொட்டாவி விட்டுத் தூங்க ஆரம்பித்தான் குட்டிப்பையன்.

 

 

Series Navigationஇந்திய அணு மின்சக்தி உற்பத்தித் திறமை 2031 ஆண்டுக்குள் 22,480 MW ஆற்றலாய் விரிவு பெறும்.
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *