குடை   சொன்ன   கதை   !!!!!

author
0 minutes, 1 second Read
This entry is part 8 of 18 in the series 29 ஆகஸ்ட் 2021

 

 

சரசா சூரி

 

ஒரு குடைக்கு இருக்க வேண்டிய  குணாதிசயங்கள் எதுவுமே மருதநாயகத்தின் கையில் இருக்கும் குடைக்கு கிடையாது.கருப்பாக இருக்க வேண்டியது முக்கியமான முதல் தகுதிஆனால் இவரது குடை வெளுத்துப் போய்ஒரு மாதிரி சாம்பல் பூத்த நிறத்தில் இருக்கும்….

இரண்டாவது …   பூ மாதிரி நன்றாய் விரிந்து குடுக்க வேண்டும்.இதுவோ  ஒரு பக்கம் கோணிக்கொண்டு  காற்று இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கும்….

இரண்டு கம்பிகள் ஒடிந்து போய்விட்டாலும்  ஒரு மழைத்துளி உள்ளே விழாமல் இன்னும்  இந்த இருபது வருஷமும் எஜமான விசுவாசத்துடன் இருக்கிறதே…. அதனால் குடை என்ற தகுதியை இன்னும் இழக்காமல் இருக்கிறதுவேறு யார் தொட்டாலும் திறக்காதுயார் முதலில் அதை சீண்டப்போகிறார்கள்…???

வாசலில் உள்ள வராண்டாவில் ஒரு ஆணியில் தான் அதை மாட்டி வைப்பார்வெயில்..மழை இரண்டுக்கும் அந்த  குடைதான் ஆபத்பாந்தவன்ஒரு பத்து தடவையாவது குடை ரிப்பேர்காரனிடம் போய் வந்திருக்கும்அவனுக்கு என்ன….???கூலி கிடைக்கும் வரை நல்லது என்று வாயை மூடிக்கொண்டு வேலையை செய்து விடுவான்

ஆனால் மருதநாயகத்தின் மனைவி  செவ்வந்திக்கும்  , அவருடைய மூன்று குழந்தைகளுக்கும் அந்தக் குடையைப்பார்த்தாலே  எரிச்சல் வரும்அதுவும் மூத்தவன் நமச்சிவாயம்  இது விஷயமாக அவரிடம் நிறையவே சண்டை போட்டிருக்கிறான்..

நயினா.. இத எடுத்திட்டு போவாதீங்கபசங்கெல்லாம் ஒரு மாதிரி பேசுதாங்கவேற நல்ல குடையாக வாங்குங்க நயினா…!!!

”  ஏன்ல.. உமக்கு அவமானமா இருக்கா ..???
என்னுசிரு  போவட்டும் ..தூக்கி எறிஞ்சிடுங்கஅது முட்டும் இருந்துட்டு போவட்டும்ல…. பாவம்….”

என்று சிரித்துக்கொண்டே சொல்லுவார்..சிரிப்பு  பூடகமாகவே இருக்கும்நமச்சிவாயத்துக்குஏண்டா கேட்டோமென்றிருக்கும். குடையைச் சொல்கிறாரா…. தன்னைச் சொல்லிக் கொள்கிறாரா …????

மருதநாயகம்  ஒரு  தனியார் நிறுவனத்தில்  அக்கவுன்ட் செக்க்ஷனில்  கிளார்க்காக வேலை பார்க்கிறார்.. மூன்று குழந்தைகள்.

மூத்தவன் நமசிவாயம் ….  பதிமூன்று வயதாகிறது..

போலியோ  வந்து  ஒரு கால் விந்தி விந்தி நடப்பான்..மருதுவுக்கு அவன் மேல் கொஞ்சம் கூடுதல் பாசம் என்றே சொல்லலாம். அவனும் அப்பாவை எப்போதும் கிண்டல் பண்ணிக் கொண்டே இருப்பான்.

அடுத்தது குமரகுரு…வயது பதினொன்று… ரொம்பவே ரோஷக்காரன்.அப்பாவிடம் கொஞ்சம் தள்ளியே நிற்பான்….அம்மா பிள்ளை.. கோபத்தில் அவனது  அப்பாரைக் கொண்டு பிறந்திருப்பதாக செவ்வந்தி அடிக்கடி சொல்லுவாள்..

“எதுக்கும்மா அப்படி சொல்லுத.. அப்படி என்னதான் செஞ்சுபுட்டாரு  நயினாவோட அப்பா..??”

” அது ஒரு பெரிய கதை…நயினாவே உனக்கு ஒரு நாள் சொல்லுவாரு…”

கடைக்குட்டி வள்ளிநாயகி அப்பா செல்லம் .எட்டு வயதானாலும் அப்பா வந்தவுடன் மடிமேல் ஏறி உட்கார்ந்து கொள்வாள்…அப்பா மேல் காலைப்போட்டுக் கொண்டு தூங்கினால் தான் தூக்கம் வரும்…செவ்வந்திக்கு  அது மட்டும் பிடிப்பதில்லை…

” இதென்ன பழக்கம்.  ….
பொம்ளப்பிள்ளையா லட்சணமா அடங்கி ஒடுங்கி இருக்காம …???”

” அடி போடி…ஆக்கம் கெட்ட கூவ…அது குழந்தடி…..
பொம்பளப்பிள்ளையாமில்ல….
குமருவ நீ மடில போட்டுகிட்டு கொஞ்சுறியே…அதுக்கொரு ஞாயம்…இதுக்கொரு ஞாயமா ???”

குழந்தைகளிடம்  ரொம்பவே பாசம்.கண்டிப்பாரே தவிர ஒருவர் மேலும் கைவைத்ததில்லை.

செவ்வந்தி ஒரு வகையில் தூரத்து சொந்தம்.. ஆனாலும்  இரு குடும்பங்களும் ஒரே ஊரில் இருந்ததால் போக வர பழக்கம்..
செவ்வந்திக்கு மருதநாயகத்தை சிறு வயதிலிருந்தே நன்றாகத் தெரியும். இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் தான்.காதல்….கீதல்  ஒன்றும் இல்லை..

மருதநாயகத்தின் வீட்டில் நடக்கும்  எல்லா சமாசாரங்களும் செவ்வந்திக்கு அத்துப்படி..மதிய உணவு இடைவேளையில் மருது எல்லாம் ஒன்றுவிடாமல் அவளிடம் சொல்லிவிடுவான்.இருவரும் சேர்ந்துதான் சாப்பிடுவார்கள்.. நண்பர்களின் கேலி ..கிண்டலை…
பொருட்படுத்தியதே இல்லை…

மருதநாயகத்துக்கு ஊர்மக்கள் வைத்திருக்கும் பெயர்குடை நாயக்கர் ‘  குடையில்லாமல் அவரைப்பார்ப்பதே அரிதான விஷயம்.மற்றபடி நாயக்கருக்கும் அவருக்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லைமருதநாயகம்தான் மருவி நாயக்கரானது.

நயினாவும் அதுபோலத்தான்.

பக்கத்துவீட்டில் ஒரு ரெட்டியார் குடும்பம் இருந்தது.அந்த குழந்தைகள் கூப்பிடுவதைப் பார்த்து  இவரும் நயினாவானார்.

செவ்வந்தி அவருடன் கூட வரும் சமயங்களில் தனியாகவே பின்னால் நடந்து வருவாள். தூறினால் கூட அதில் ஒதுங்க மாட்டாள்.

வா பிள்ளமழையில நனஞ்சாலும் நனைவீககொடையில ஒதுங்க மாட்டீகளோ ??? நானு அவ்வளவு கேவலமாயிட்டேனோ…??”

நீங்க ஒரு பக்கம் பிடிச்சா..அது ஒரு பக்கம் சாயுது..ரண்டு பேரும் சேந்து நனயலாம்னு சொல்லுதீகளா…??”

அப்போ நீ பிடிச்சுக்க !!!”

ஐய்யோ வேண்டஞ்சாமி.
நாஞ்சொன்னா கேட்குமா உங்க குடபேசாம நடங்க…”

வள்ளி மட்டும் அவரோடு சேர்ந்து குடைக்குள் நடப்பாள்

நயினா..இந்த குட ரொம்ப பழசாயிட்டுதில்ல.. ஏன் வேற வாங்க மாட்டீங்கிறீங்க…. உங்களுக்கு இந்த குடதான் ரொம்ப பிடிக்குமா…???”

பிடிக்கும்..ஆனா பிடிக்காது…”

காசு கொட்டின மாதிரி கலகலவென்று சிரிப்பாள் வள்ளி

நயினா . என்ன ஜோக்கடிக்கிறீங்க…”

நெசமாத்தான் சொல்லுதேன் குட்டிஇப்போஉன்னோட கூடப் படிக்கிற  சரசு இருக்காளேஅந்த பிள்ளதானே  உன்னோட  பெஸ்ட் friend…..???”

ஆமாஎனக்கு அவதான் உசிரு…”

அவ உன்னோட ஒருநாள் பெரிசா சண்ட போட்டான்னு வைய்யி
அவள உனக்கு பிடிக்குமா….
பிடிக்காதா…???”

பிடிக்கும்….ஆனா பிடிக்காது….”

அதேதான்….”

குட உங்களோட சண்ட போட்டிச்சா…???”

ம்ம்.. அப்பிடித்தான் வச்சுக்கயேன்….”

நயினாப்ளீஸ்..ப்ளீஸ்அந்த கதய சொல்லு நயினா….”

இன்னிக்கு இல்லஒரு நாள் நிச்சயம் சொல்லுவேன்…. உனக்கு மட்டுமில்லஎல்லாத்துக்குமே….!!!”

மருதநாயகத்தின்  அப்பா அம்மையப்பன்  கண்டிப்பான ஆசாமி.. தனது இரண்டு பையன்களும் ஒழுக்கத்துடனும் ,  படிப்பில் சிறந்தும் விளங்கவேண்டும் என்பது மட்டுமே தன் வாழ்க்கையின் லட்சியம் போல நடந்து கொள்வார்.. ஏதாவது சின்ன தவறு செய்தால் கூட அடி பின்னி எடுத்துவிடுவார்…

மூத்தவன் தண்டபாணி  …..அவர் எள் என்பதற்கு முன்னால் எண்ணையாய் நிற்பான்.. இதுவரை  ஒரு வசவுகூட வாங்கியதில்லை…

மருதநாயகத்துக்கென்னவோ படிப்பு ஏறவில்லை..மறதியா அல்லது கவனக்குறைவாக … தெரியவில்லை…
அப்பா கோபத்தில் முறைத்தாலே டவுசரில் ஒண்ணுக்கு போய் விடுவான்.

பள்ளியில் அரைப்பரிட்சை முடிந்து progress card குடுத்து விட்டார்கள்… அப்பாவிடம் தான் கையெழுத்து வாங்க வேண்டுமென்பதில் பள்ளி நிர்வாகம் கண்டிப்பாய் இருந்தது.அப்போதெல்லாம் அம்மாக்கள் எங்கே படித்தார்கள்..?? அம்மாவை ஏய்த்து கையெழுத்து வாங்கி விடுவதால் இந்த தீர்மானம்…

பள்ளி விடுமுறை முடிந்தது.. ஒரு வாரமாக மருதைக் காணாமல் தவித்துப் போனாள் செவ்வந்தி…என்ன ஆயிருக்கும். ..??. வீட்டில் போய்ப் பார்க்க பயம்…

பத்து நாள் கழித்து வந்தான் மருது… முகமெல்லாம் வாடி இருந்தது…

” என்ன மருது…. என்ன ஆய்ட்டுது..?? முகமெல்லாம்  பாக்க  சகிக்கல…”

மருது அவள் கையைப் பிடித்துக் கொண்டு அழுது விட்டான்..

“சொல்ற விசயத்த ஆருகிட்டயும் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணு….!!”

” சத்தியம் டா…சொல்லு…!”

அரையாண்டு தேர்வில்  கணக்கு… தமிழ்… தவிர எல்லாமே பெயில் மார்க்குதான்.. அதுவும் ஒற்றைப்படை.
நிச்சயமாக பெல்ட்டை எடுத்து விடுவார் அப்பா…நினைப்பே நடுக்கத்தைக் குடுத்தது….

கிடுகிடுவென்று கொஞ்சம் கூட யோசிக்காமல்  பெயில் மார்க்குக்கு முன்னால் ஏழு…ஆறு …என்று இங்கால் எழுதி விட்டான்.

மேலும் கீழும் பார்த்தார்…
” நம்ப  முடியலியே….ஏலே..இது உன்னோட  கார்டு தானா..??”

திரும்பவும் பெயரைப் பார்த்தார்….
” ம்…பொழச்சிகிடுவ… அடுத்த வருசமும்  பெயிலாகாம படி…”

ஒரு வழியாக கையெழுத்து வாங்கி விட்டான்…

இப்போதுதான் அவன் செய்த தவறு பூதாகாரமாய் அவன் கண் முன் விசுவருபம் எடுத்து நின்றது..

ஆசிரியரிடம் அப்படியே கொடுக்க முடியாதே…. அங்குள்ள ரிஜிஸ்டரில் எல்லாமே பதிவாகியிருக்குமே…!

பிளேடால்  தான் மாற்றிய எண்களை பொறுமையாக சுரண்டினான்.இந்தப்  பொறுமையை  படிக்கும்போது காட்டியிருக்கலாம்…. மனதுக்குள் நினைத்துக் கொண்டான்…

அவனுடைய  போதாத காலம் லேசாக சுரண்டின இடத்தில் ஒரு ஓட்டை…வெலவெலத்துப்  போனது….

பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைத்து விட்டு ஆசிரியரிடம் குடுத்தான்….

” என்ன… மருது…அப்பா பின்னி பெடலெடுத்திருப்பாரே… அதான் ஒண்ணும் நான் எழுதல..!! அவரே பாத்துகிடட்டுமின்னு ….”

அப்படியே வாங்கி டிராயரில் போடப்போனவர் திரும்பவும் அதைக் கையிலெடுத்தார் ….

மருது கும்பிட்ட சாமியெல்லாம் அவனைக் கைவிட்டு விட்டது….

” ஏலே…. நாமெல்லாம் கோட்டின்னு நெனச்சுப்பிட்டீகளோ …??? களவாணிப்பயலே.உங்கப்பனுக்கு பொறந்த பிள்ளையாடா நீ…
அவரப்போய்  கையோட கூட்டிவாலே ….”

அப்புறமென்ன…. கையில் இருந்த குடையை வைத்து விளாசிவிட்டார் அப்பா.

பள்ளியிலிருந்து பத்து நாள் ஸஸ்பென்ஷன்…..
அதுக்கப்புறம் அப்பா அவனிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை….

மருதநாயகத்துக்கு ஒரு வாரம் விட்டுவிட்டு காய்ச்சல்சளி
இருமல்அறையை விட்டு வெளியே தலைகாட்டவில்லை

இரண்டு பையன்களும் எட்டியும் பார்க்கவில்லைஅவ்வப்போது அம்மாவிடம் வந்து விசாரிப்பதோடு சரி..

செவ்வந்தி அடிக்கடி சீரகத்தண்ணிமிளகுத்தண்ணிவெற்றிலை.கற்பூரவல்லிகஷாயம்சுக்குக் காப்பி..என்று ஒன்று மாற்றி ஒன்றைக் கொண்டு வந்து  தருவாள்.. அவரும் தட்டாமல் குடித்து வைப்பார்

வள்ளி நாயகி மட்டும் அடிக்கடி அப்பா பக்கத்தில் வந்து உட்காருவாள். நெற்றியைத் தொட்டுப்பார்த்து ,

காச்சலடிக்குது நயினா.. வாங்க..ஆஸ்பத்திரி போவலாம்…” என்பாள்..இல்லையென்றால்  ‘ அமிர்தாஞ்சனம் பொரட்டி விடவா…??? என்று கேட்பாள்

அவள் கேட்கையிலேயே அவர் உச்சி குளிர்ந்து விடும்
என்ன இருந்தாலும் பொட்டப்புள்ளக்கு இருக்கிற கரிசனத்துக்கு ஈடாகுமா …??? ‘ என்று மனதில் நினைத்துக் கொள்வார்

ஒரு வாரம் இப்படியே போனது.. ஒருநாள் செவ்வந்தி குமரகுருவைக் கூப்பிட்டாள்

குமருநயினாவோட மாத்தர ரண்டுதான்லே இருக்கு.. போயி ஒரு அட்ட வாங்கிவந்திடு அய்யாமானம் வேற கருக்கலா இருக்குஅப்பால மழ வந்தா  வெளியே  போவ கஷ்டமாயிரும்….சித்த போய்ட்டு வா ராசா….!!!

கிரிக்கெட் கடைசி ஓவர் பார்த்துக் கொண்டிருந்த குமருக்கு  எழுந்திருக்க மனமில்லை.. அதற்குள் அம்மா சொன்ன மாதிரி சடசட வென்று மழை வலுத்தது..

வேண்டா வெறுப்பாக குடையை எடுத்தான்அதை விரிக்க முடியவில்லைகுடை சண்டித்தனம் செய்தது..

இது ஒண்ணுகுடையாக இதுதூக்கி எறிஞ்தாத்தான் உருப்படும்…..!!!” என்று சொல்லிக் கொண்டே வாசலில் வீசி எறிந்துவிட்டு மழையில் நடக்க ஆரம்பித்தான்

குமருகுமருஎன்றும்… ” அண்ணா..என்ன செஞ்சுபுட்ட…..” என்றும் சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடி வந்தார் மருது

ஐய்யோ….எங்குடஅப்பா….” என்று கத்திக்கொண்டே மழையில் நனைந்தபடி ஓடிவந்து  கீழே விழுந்துகிடந்த குடையை ஒரு குழந்தையைத் தூக்குவதைப்போல் அள்ளி எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்…..

குடையை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு படுக்கையில் உட்கார்ந்தார்.

எல்லோரும் சுற்றி நின்று கொண்டனர்.

ஏங்கபயித்தியம் கியித்தியம் பிடிச்சுப் போச்சா.. முதல்ல தலயத் துவட்டுவீகளாஎன்னமோ குடய மடில வச்சு கொஞ்சுதீகளே. ஆளு படுத்து ஒரு வாரம் ஆகிட்டுது..
 மழயில நனஞ்சு ஒண்ணு கெடுக்க ஒண்ணு ஆனாக்ககுடயக் குடுங்கஅத பக்குவமா  வக்கிறது என் பொறுப்புநம்புங்க…..”

அப்பாமன்னிச்சிடுங்கஏதோ ஒரு கோவத்துல…..”

இந்த கோவந்தான் ….இதே கோவந்தான்.. எப்படித்தான் எங்கப்பாவ உரிச்சுவச்சாப்ல….சரி விடுல..பாத்து பொறுமையா ..
பதவிசா…….நடக்க கத்துக்கிடு
இந்த கோவம்  பிரியமான மனுசங்கள பிரிச்சுடும்ல….”

இது நடந்து  பத்து பதினைந்து நாளாகிவிட்டது

அன்றைக்கு பவுர்ணமி….நிலா வெளிச்சம் முற்றத்தை முழுமையாக நனைத்தது…. குழந்தைகள் ஆசைப்பட்டதால் அன்றைக்கு நிலாச்சோறு.. இரண்டு  ஏனத்தில் கதம்பசோறும்தயிர்சோறும்

வைத்துக் கொண்டு முற்றத்தில் உட்கார்ந்தாள் செவ்வந்தி

நேத்து வச்ச மீன்குழம்புமணத்தது ….

உருட்டி உருட்டி கைகளில் போட ஆரம்பித்தாள் செவ்வந்தி….

முதல் நாள் வைத்த மருதாணி மணமே இன்னும் கையிலிருந்து போகவில்லைஅதோடு சேர்ந்து கதம்பசாதம் மணம் எங்கேயோ இழுத்துச் சென்றதுவள்ளி  ரசித்து….ருசித்துவாயில் போட்டுக் கொண்டாள்

மருதுவும் கையை நீட்டினார்

அம்மா..நயினாவுக்கு பெரிய உருண்டையா வைக்கிறீங்க.. ஒரு சுத்து விட்டு ஒரு சுத்து தான்
குடுக்கணும்…”

நமசு..உனக்கு வச்சுப்போட்டுத்தான் அம்மா எனக்கு குடுப்பா….”

நயினாப்ளீஸ் நயினாகுட  சண்ட போட்ட கதை சொல்றேன்னு சொன்னீங்களே….இப்போ சொல்லுங்க….”

ம்ம்ம்குட கத வேணுமா…??? அதுல ரெண்டு பார்ட் இருக்குதுமுதல் பார்ட் அம்மா சொல்லுவா….”

என்னங்க….என்னிய கோத்துவிட்டுப் போட்டீகளே ….”

நீதான்அழகா சொல்லுவ…”

செவ்வந்திபள்ளிக்கூடத்தில் ரிப்போர்ட்டை  திருத்தி அடிவாங்கின கதையை  பொறுமையாகச் சொன்னாள்

நயினாநம்பவே முடியலபாவம் நயினாஉங்கப்பா இவ்வளவு கோவக்காரரா ???”

வள்ளி அப்பாவை அப்படியே கட்டிக் கொண்டாள்

ஆமாஎனக்குத் தெரியாம இன்னோரு பார்ட்டா ..??? சொல்லுங்கநானும் கேக்குறேன்….”

“நானும் அப்பாவும் முகத்த பாத்து பேசி வருஷம் நாலாகிப் போச்சுது. இடையில யாரையாவது வச்சிக்கிட்டு… இல்லைனா சாடமாடயா பேசிக்கிட்டே  பொழுது ஒடிப்போச்சுது.

பள்ளிக்கூடம் கடைசி வருஷம்.என்னோட  நாலஞ்சு சேக்காளிங்க  ஒரு மார்க்கமான பசங்க..  மங்காத்தா….ஆடுபுலி ஆட்டம்…எல்லாம் காசு வச்சுதான்..நடுவில பீடி…சுருட்டு வேற…அவுங்க பழக்கமெல்லாம் தெரிஞ்சுதான் நானும்  பரமசிவமும்  கூட்டா இருந்தோம்.ஆனாலும் நாங்க  அந்த விளையாட்டு பக்கம் கூட தலவச்சு படுத்ததில்ல.

ஒரு நாளு கம்மாக்கர பக்கத்தில் இருக்கிற பொட்டல்ல துணி விரிச்சு விளையாண்டுகிட்டு  இருக்கறத பாத்தோம்.

” டேய்… என்னதான் விளயாடுறாங்க பாத்துடலாம்….”னு பரமு சொன்னதும் எனக்கும் ஆர்வமாயிட்டுது…பக்கத்தில் நின்னு பாத்துகிட்டிருந்தோம்.

” இந்தா… மருது…பீடி பிடிச்சுப் பாரு” ன்னான் ஒருத்தன்.

நேரம் சரியில்லையானா  பானையிலையும் தேளிருக்கும்.

சரின்னு ஒரு இழுப்பு இழுக்கவும் … அந்தப்பக்கம் வந்த அப்பா கண்ணுல நானுபடவும்…

வீட்டு வாசல்ல ரெடியா காத்துகிட்டிருந்தாரு அப்பா….கையில குட…இதே குட..
வெச்சு விளாசிப்பட்டாரு…. என்ன ஏதுன்னு ஒரு வார்த்த கேக்கலியே…

வெக்கமும்… அவமானமும்… ஆத்திரமும்… வெறுப்பும்… அப்பிடியே பிடுங்கி தின்ன…அங்கனக்குள்ளயேநாண்டுகிட்டு சாகலாம் போல இருந்திச்சு..

குட பிஞ்சு போய் கம்பி குத்துது…

” போறும்… விடுங்க…பிள்ளய கொன்னுடாதிங்க….”

அம்மா தடுக்காம இருந்திச்சுன்னா  கொன்னே போட்டிருப்பாரு…

” இனிமே எனக்கு ஒரு மகன்தான்..மருதுவ தல முழுகிட்டேன்…”

தப்பு செஞ்ச அன்னிக்கு வாங்கின அடிக்கும்..இப்போ வாங்கின அடிக்கும் நிறைய  வித்தியாசம்..

இது நெஞ்சுல விழுந்த அடி..

வீட்ட விட்டு ஒடிடலாம்னு கூட தோணிச்சு…தப்பு பண்ணாதவன்  ஓடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்…

அப்பா அதிக நாள் இருக்கல..

நானும் அவர சுத்தமா வெறுத்துட்டேன்.. அப்பான்னு பேச்சு வந்தாலே  வெறி பிடிச்ச மாதிரி ஆயிடுவேன்….

அப்பா காலம் முடிஞ்சப்புறம் அந்தக் குடைய சீண்டுவாரில்ல…ஆனா நானு அதையத்தான் முதல்லே பத்திரப் படுத்திகிட்டேன்… ஏன் தெரியுமா….?

எனக்கு கோவம் வரும்போதெல்லாம்  என்னையும் என் அப்பாவையும் பிரிச்ச இந்த குடையப் பாத்தேன்னு வை..வந்த கோவமேல்லாம் ஓடியே போயிடும்..ஒருத்தர் மேலையும் கை வைக்கக்கூடாதுன்னு இது ஞாபகப்படுத்திகிட்டே இருக்கும்…

இரண்டாவது…. எனக்கும் என்னோட அப்பாவுக்கும் இடையில  நடந்த கடைசி பேச்சு வார்த்தைக்கே  இந்த குடதானே சாட்சி…..

அப்பாவ ஞாபகம் வச்சுக்கிட இத விட வேறென்ன வேணும் …???”

—–

Series Navigationவிடிந்த பிறகு தெரியும்மரங்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *