வளவ. துரையன்
ஐங்குறு நூற்றில் எருமைப் பத்து எனும் பெயரில் ஒரு பகுதி உள்ளது. அதில் உள்ள பத்துப் பாடல்களிலும் எருமை பயின்று வருவதால் அப்பெயர் பெற்றுள்ளது. அப்பாடல்களில் எருமையானது, “நெறி மருப்பு எருமை, கருங்கோட்டு எருமை, தடங்கோட்டு எருமை, அணிநடை எருமை, கருந்தாள் எருமை, கழனி எருமை, மணல் ஆடு சிமையத்து எருமை, எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது.
தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையர் இல்லம் சென்று இருக்கிறான். பின் தன் பிழை உணர்ந்து தலைவியை நாடி வருகிறான். அப்பொழுது தோழி அவனிடம் கூறுகிறாள். “இவள் ஊரின் கழனிகளில் நிறைய எருமைகள் உள்ளன. அவை வளைந்த கொம்புகளை உடையன. அந்த எருமைகள் பொய்கைகளில் இருக்கும் ஆம்பல் மலரின் நறுமணத்தை உணராமல் அம்மலர்களைச் சிதைக்கின்றன. அப்படிப்பட்ட கழனிகளை உடைய ஊரன் மகள் இவள்” என்று மொழியும் தோழி மேலும், ”இவள் இளம்பருவத்தாள், விளைவுகளை அறியாதவள் என்றெல்லாம் கூறுகிறாள்.
தலைவன் தலைவியின் பெருமையை உணராமல் இருப்பதை எருமைகள் ஆம்பலின் மணத்தை உணராமல் இருந்ததைக் காட்டிக் குறிப்பாக, உணர்த்தும் பாடல் இது. இப்பகுதியின் முதல் பாடல் இதுவாகும்.
”நெறிமருப்பு எருமை நீலஇரும் போத்து,
வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும்
கழனி ஊரன் மகள்இவள்;
பழன வெதிரின் கொடிப்பிணை யலளே”
தலைவனும் தலைவியும் மனம் ஒன்றிப் பழகுகின்றனர். தலைவியை அவளின் தந்தை முதலானோர் அவளை மணம் முடித்துத் தர அணியமாக உள்ளனர். ஆனால் அவன் சென்று அவர்களிடம் கேட்காததுதான் குறை என்று தோழி கூறுகிறாள். இதை அறிந்த தலைவன் தலைவியிடம் கூறுவதாக அமைந்த பாடல் இதுவாகும். இப்பகுதியின் இரண்டாம் பாடல்.
”கருங்கோட்டு எருமைச் செங்கண் புனிற்றுஆ
காதல் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும்
நுந்தை, நும்மூர் வருதும்
ஒண்தொடி மடந்தை! நின்னையாம் பெறினே.”
“கரிய கொம்புகளையும் சிவந்த கண்களையும் கொண்ட அண்மையில் கன்றை ஈன்ற எருமையானது தன் கன்றுக்குப் பால் சுரந்து கொடுக்கும் தன்மை உடையதாகும். அப்படிப்பட்ட எருமை வாழும் ஊர் உன் தந்தை வாழும் ஊர். வளையல்கள் அணிந்துள்ள உன்னை எனக்குத் தருவது உறுதியானதால் நான் உன் ஊருக்கு வந்து உன்னைப் பெண் கேட்பேன்” எனத் தலைவன் கூறுவது இப்பாடலின் பொருளாகும்.
இப்பாடலிலும் தாய் எருமை தன் கன்றுக்குப் பாலூட்டும் தன்மையைச் சொல்லி அதுபோல அவளின் பெற்றோர் அவளிடம் பாசம் கொண்டிருப்பர் எனத் தலைவன் மறைமுகமாக உரைக்கிறான்.
பெரும்பாலும் எருமைப் பத்தின் பாடல்களில் எருமையானது தலைவனுக்குக் குறியீடாகத்தான் காட்டப்பட்டுள்ளது. இப்பாடலில் ஓர் எருமை தன்னைக் கட்டி உள்ள கயிற்றை அறுத்துச் சென்று பகல் நேரத்தில் வயலில் உள்ள கதிர்களை மேய்கிறது. அதைக் காட்டித் தலைவன் அதுபோலப் பகல் நேரத்திலேயே தலைவியைத் தவிக்கவிட்டுப் பரத்தையர் இல்லம் செல்வதாகக் குறிப்பால் உணர்த்தும் பாடல் இது.
”கருங்கோட்டு எருமை கயிறு பரிந்து, அசைஇ
நெடுங்கதிர் நெல்லின் நாள்மேயல் ஆகும்
புனல்முற்று ஊரன், பகலும்,
படர்மலி அருநோய் செய்தனன் எமக்கே”
”கரிய கொம்புகளை உடைய எருமை தன் கயிற்றை அறுத்துச் சென்று நீண்ட கதிர்கள் உடைய நெல்லைப் பகலில் மேய்ந்து உண்ணும். அத்தன்மையை உடைய நீரால் சூழப்பட்ட ஊரை உடையவன் தலைவன், எனக்குப் பகல் பொழுதுகளிலும் அவன் நினைவு மிகுமாறு துன்பம் தந்தான்” என்பது பாடலின் பொருளாகும். எப்பொழுதும் இரவில் செல்பவன் பகலிலேயே தனக்கு படர்மலி அருநோய் தந்தானே என அவள் வருந்துகிறாள்.
தலைவியானவள் தன்னை அணுகவிடாததால் அவள் மிகவும் கொடுமையானவள் என்று அவன் கூறக் கேட்ட தோழி கூறும் ஆறாவது பாடல் இது. இப்பாடலில் தலைவனுக்கு ஓர் உவமை கூறப்படுகின்றது. அவன் பார்ப்பதற்கு, ஒரு படகுபோலத் தோன்றுகிறானாம், அப்படகில் குளிர்ந்த நீரில் ஆடுகின்ற பெரிய கொம்புகளை உடைய எருமை இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளதாம்.
தோழி தலைவியைக் கூறும்போது ஒளிபொருந்திய வளையல்களை அணிந்த மென்மையானவள் என்று காட்டுகிறாள். அப்படிப்பட்ட அவளைக் காட்டிலும் உன் தாய் தந்தையர் கொடுமையானவராக இருப்பார் அன்றோ? என்றும் தோழி கேட்கிறாள் படகு என்பது பலரும் பயணம் செய்யக் கூடியதாகும். அதுபோல அவன் பல மகளிர்க்கும் உரியவன் என்பதை அந்த உவமை குறிக்கிறது.
”தண்புனல் ஆடும் தடங்கோட்டு எருமை
திண்மிணி அம்பியின் தோன்றும் ஊர!
ஒண்தொடி மடமகள் இவளினும்
நுந்தையும் ஞாயுங் கடியரோ, நின்னே?”
இப்பத்தின் இறுதிப் பாடல் அருமையான ஓர் இயற்கைக் காட்சியைக் காட்டுகிறது.
மகளிர் நீர்நிலைகளை நாடி நீராட வருகின்றனர். தாம் நீராடும் முன்னர் அவர்கள் தம் அணிகலன்களை யாரும் அறியாவண்ணம் மணலில் புதைத்து வைப்பர். ஆனால் காற்று வீசுவதால் அந்த அணிகலன்கலைச் சற்று நேரத்தில் மணல் வந்து மூடிவிடும். அங்கு வரும் எருமைகள் அம்மணல் மேடுகளைத் தம் கொம்புகளால் மற்றும் குளம்புகளால் கிளறி வெளிப்படுத்துகின்றன. இது தலைவியின் பெருமையை அறியாதவன் ஆயினும் அவன் காலப் போக்கில் அவள் அருமையை அறிவான் என்று குறிப்பால் உணர்த்துகிறது.
அவன் தலைவியைப் பிரிந்து சென்றான். தன் தோழர்கள் மூலம் அவன் மீண்டும் வருவதற்கான விருப்பத்தைத் தெரிவிக்கிறான். அப்பொழுது தோழி இக்காட்சியைக் கூறி ”அப்படிப்பட்ட புது வருவாயை உடைய ஊரனின் மகள் இத்தலைவி. இவள் சொற்கள் பாணர்களின் யாழிசையை விட இனிமையானது” என்று கூறுகிறாள்.
”புனலாடு மகளிர் இட்ட ஒள்இழை
மணல்ஆடு சிமையத்து எருமை கிளைக்கும்
யானர் ஊரன் மகள்இவள்;
பாணர் நரம்பினும் இன்கிள வியளே” என்பது பாடலாகும்
இவ்வாறு ஐங்குறுநூற்றின் எருமைப் பத்தின் பாடல்கள் எருமைகளைக் காட்டி அக்கால வாழ்வினையும் காட்டுகின்றன எனக் கூறலாம்.
. . . . . . . . .
- உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை பன்னாட்டு கருத்தரங்கு அமர்வுகள்
- பாரதியின் மனிதநேயம்
- ஸ்பேஸ் X ஏவிய விண்சிமிழ் முதன்முதல் நான்கு சுற்றுலா பொதுநபரை ஏற்றிச் சென்று பூமியை மூன்று நாட்கள் சுற்றி மீண்டது.
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 254 ஆம் இதழ்
- கிண்டா
- ப.தனஞ்ஜெயன் கவிதைகள்
- குருட்ஷேத்திரம் 16 (தருமனால் ஏற்பட்ட தலைகுனிவு)
- குருட்ஷேத்திரம் 15 (சாத்வீக மனம் கொண்ட பாண்டு)
- கருங்கோட்டு எருமை
- பாரதியை நினைவுகூர்வோம் – பாரதியாரின் மூன்று கவிதைகளும் டாக்டர்.கே.எஸ். சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும்
- தற்கால சிறுகதை, புதினங்களில் காலத்தின் சுவடுகள்
- மதுர பாவம்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- கவியின் இருப்பும் இன்மையும்
- ஒரு கதை ஒரு கருத்து – கு.ப.ராவின் கனகாம்பரம்
- அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் நந்தினிசேவியர் விடைபெற்றார் !
- நெருடல்
- குருட்ஷேத்திரம் 13 (திருதராஷ்டிரன் என்ற யானைக்கு அங்குசமாக இருந்த காந்தாரி)
- குருட்ஷேத்திரம் 14 (யாதவ வம்சமும் கிருஷ்ணனும் துர்வாசரின் சாபத்தால் அழிந்தார்கள்)