அழகர்சாமி சக்திவேல்
உலகில் உள்ள ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், பற்பல கனவுகள் இருக்கலாம். அந்தக் கனவுகளுக்குள் ஒரு பெருங்கனவாய், நிச்சயம் ஒலிம்பிக் விளையாட்டும் இருக்கும். ஒரு வீரர், ஒலிம்பிக் விளையாட்டுக்குத் தகுதி ஆனாலே போதும். அதுவே, அவருக்கு ஒரு பெரிய சாதனை ஆகிப்போகிறது என்பதில் ஒரு உண்மை இருக்கிறது. அதிலும், அவர் கலந்துகொண்ட அந்த ஒலிம்பிக் விளையாட்டில், வெற்றியும் பெற்று விட்டால், அது அவரது மிகப் பெரிய வாழ்நாள் சாதனை ஆகி விடுகிறது அல்லவா? ஐயகோ… எத்தனை எத்தனை பரிசுகள் அவருக்காய்க் காத்து இருக்கின்றன? கார், வீடு, பணம் எனப் பரிசு மழையில், ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்கள், குளிப்பாட்டப் படுகிற காட்சியை, நாம், பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்? ஒரு விளையாட்டு வீரர், தனது வெற்றிபெறும் கனவை, தனது மனதுக்குள்ளே தேக்கி தேக்கி வைத்து, கடைசியில் ஒலிம்பிக் போட்டிக்களத்தில் வெற்றிவாகை சூடி, அவரது அந்தத் தேக்கி வைத்த கனவை நனவாக்கிக் கொள்ளும்போது, அணையை உடைத்துக்கொண்டு வரும் வெள்ளம் போல, அவருக்குள் எவ்வளவு மகிழ்ச்சி பொங்குகிறது? அவரது அந்த மகிழ்ச்சி கண்டு, நாமும் அல்லவா, பெருமகிழ்ச்சி அடைந்து விடுகிறோம்? வரலாறு என்ற பொன்னேடுகளில், சாதித்த அந்த விளையாட்டு வீரரின் பெயர் பொறிக்கப்படும் போது, அந்த வரலாற்றைப் படித்துப் படித்துப் பார்த்து, நாமும் அல்லவா உவகை கொள்கிறோம்? இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
ஆனால், அப்படி வெற்றி பெற்ற ஒரு ஒலிம்பிக் பெண் வீரர், பற்பல அறிவியல் பரிசோதனைகளுக்குப் பின்னால், “அந்த வீரர் ஒரு பெண்ணே அல்ல, அவர் ஒரு ஆண்” என்று உலகுக்குப் பிரகடனப்படுத்தி, அவர் பெற்ற ஒலிம்பிக் பதக்கம், அந்த பெண் வீரரிடம் இருந்து பறிக்கப்படும் போது, அவர் மனநிலை எப்படி இருந்து இருக்கும் என்று நாம், எத்தனை முறை நினைத்துப் பார்த்து இருக்கிறோம்? திடீரென்று அப்படிப் பெண்ணாய் உணரப்படாத, அந்த பதக்கம் பெற்ற பெண் வீரர், சோகத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்யும் செய்திகளுக்கு, நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறோம்? இன்னொரு பக்கம், கடினமாய் உழைத்து, ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற ஒரு ஆண், வெற்றிபெற்ற அதே நாளிலோ, அல்லது கொஞ்ச நாள் கழித்தோ, “தான் ஒரு ஆண்-ஆண் உடலுறவு விரும்பும் ஓரினச்சேர்க்கையாளர்” என்று, உலகிற்கு பிரகடனப்படுத்தி மகிழ்கையில், நாம் அவரது ஆண்மை குறித்தும், அவரது வீரம் குறித்தும் என்ன நினைக்கிறோம்? ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றி பெற்ற ஒரு பெண், “தான் ஒரு பெண்-பெண் உடலுறவை விரும்பும் லெஸ்பியன்” என்று, தான் ஒலிம்பிக் வெற்றி பெறுவதற்கு முன்னால், ஏன் இந்த உலகத்திற்குச் சொல்ல விரும்பவில்லை? மேற்சொன்ன அத்தனை கேள்விகளையும், அலசி ஆராய்வதே, இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.
“வீரம் என்பது ஆண்மையின் அடையாளம்” என்ற தவறான கண்ணோட்டம், ஒலிம்பிக் போட்டி தொடங்கிய, கிமு எட்டாம் நூற்றாண்டில் இருந்து கிபி நான்காம் நூற்றாண்டுவரை தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்தத் தவறான கண்ணோட்டத்தால், பெண்கள் யாரும், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்பது வரலாறு. இதே கண்ணோட்டம், நவீன ஒலிம்பிக் விளையாட்டு தொடங்கப்பட்ட, கிபி 1894-இலும் தொடர்ந்தது. கிபி 1900-இல் தான், முதன்முதலில், இந்தத் தவறான கண்ணோட்டம், தகர்க்கப்பட்டு, பெண்கள், ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அதுவும், தனிநபர் விளையாட்டுப் பிரிவுகளில், இரண்டே இரண்டு விளையாட்டுக்களில் மட்டுமே, பெண்கள் விளையாட அனுமதிக்கப்பட்டார்கள். அதன் பிறகு, சிற்சில விளையாட்டுக்களில் விளையாட, பெண்கள் அனுமதிக்கப்பட்டபோதும், தடகளப்போட்டிகளில், அன்றைய காலத்தில், பெண்கள் அனுமதிக்கப்படவே இல்லை. நவீன ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கக் காரணம் ஆக இருந்த, திரு கூபெர்டின் என்பவர் கூட, அன்றைய காலத்தில், பெண்களுக்கு எதிராகவே இருந்தார். பெண்களை ஒலிம்பிக்கில் சேர்த்துக்கொள்வது குறித்து, அவர் பேசியபோது, “பெண்கள், ஒலிம்பிக்கில், பொதுவெளியில் விளையாடுவதை நான் ஆதரிக்கவில்லை. ஒலிம்பிக்கில் பெண்களின் பணி, வெற்றி பெற்ற ஆண் வீரர்களுக்கு, முடிசூட்டிவிடுவது மட்டுமாகவே இருக்கவேண்டும்” என்று, திரு கூபெர்டின், தனது ஆணாதிக்கச் சிந்தனையை, நியாயப்படுத்திப் பேசியபோது, அதை எதிர்த்த சில பெண்கள், “பெண்கள் ஒலிம்பிக்” என்ற இன்னொரு மாற்று ஒலிம்பிக் கழகத்தை நிறுவி, அதன் மூலம், பெண்களுக்கு மட்டும், தடகளப்போட்டிகள் உள்ளிட்ட, விளையாட்டுப் போட்டிகள் நடத்தினார்கள், என்பது ஒரு வரலாற்றுச் செய்தி ஆகும். 1928 வரை தொடர்ந்த இந்தப் பெண்கள் பிரச்சினை, அதன் பின் ஒரு முடிவுக்கு வர, ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில், பெண்களும் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.
தடகளம் என்ற தனிநபர் விளையாட்டுக்களில், பெண்கள் சாதிக்க ஆரம்பித்த போதுதான், பற்பல பாலியல் பிரச்சினைகள், ஒலிம்பிக்கிற்குள் தலை தூக்க ஆரம்பித்தது. ஆண்மை ஹார்மோன்கள் அதிகம் நிரம்பிய பெண்கள், மற்றும் பிறக்கும்போதே, ஆண் பெண் என்ற இரண்டு பாலியல் உறுப்புக்களோடும் பிறந்து, பெண்ணாக வாழ்பவர்கள், இப்படிப் பலப் பாலியல் வடிவங்களில், பெண்கள் உள்ளே வந்து, ஒலிம்பிக் சாதனைகள் நிகழ்த்திய போது, பிரச்சினைகள் பெரிதாக ஆரம்பித்தது. ரஷ்யா போன்ற நாடுகள், வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில், இதுபோன்ற இனநீர்ப்புள்ள பெண்களை அடையாளம் கண்டு, அவர்களை மட்டுமே ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பி, வெற்றிகளைக் குவிக்கிறது என்ற குற்றச்சாட்டு, பல நாடுகளில் இருந்து, அன்றைய காலத்தில், பரவலாக எழுப்பப்பட்டது என்பதும் நாம் அறிந்ததே.
இதன் காரணமாக, “பெண் என்று யார் யாரைச் சொல்ல முடியும். பெண் என்று சொல்லிக்கொள்ளத் தகுதிகள் என்ன? அறிவியல் பூர்வமாக, ஒரு வீரரைப் பெண் என்று அடையாளப்படுத்த, என்னென்ன அறிவியல் ஆதாரங்கள் தேவை” போன்ற பல விசயங்களை, ஒலிம்பிக் வீரர்களைத் தேர்ந்து எடுக்கும் ஒலிம்பிக் கமிட்டி, கவனமாகக் கையாளவேண்டி இருந்தது. இது குறித்து, நாம் இன்னும் கொஞ்சம் ஆராய்வதற்கு முன்னர், இந்தப் பெண்மை இன நீர்ப்புப் பிரச்சினைகளால், தங்கள் மதிப்பை இழந்த, சில வீரர்களின், சோகக்கதையை, இங்கே கொஞ்சம் பார்ப்போம்.
ஜெர்மனியைச் சார்ந்த பெண் விளையாட்டு வீரரான டோரா ரத்சன், 1936இல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களில் கலந்து கொண்டு, உயரம் தாண்டும் போட்டியில், நான்காவதாக வந்த பெண்மணி ஆவார். அதன் பின் நடந்த, ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கப்பதக்கமும் வென்றவர். டோரா பிறக்கும்போதே, இருபாலியாகப்(hermaphrodite) பிறந்தவர். ஆண் பிறப்புறுப்பு, பெண் பிறப்புறுப்பு, இவை இரண்டும் கொண்ட அவரைப் பார்த்து அதிர்ச்சியான டோராவின் பெற்றோர்கள், டோரா குழந்தையாக இருக்கும்போதே, மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். இரண்டு பாலின உறுப்புகள் இருப்பது ஒரு பெரிய விஷயம் இல்லை என்றும், அதற்கென ஒரு தனிப்பட்ட மருத்துவம் எதுவும் இல்லை என்று மருத்துவர் கைவிரித்துவிட, பெற்றோர்கள், அந்தக் குழந்தைக்கு, டோரா எனப் பெயரிட்டு, பெண்ணாக வளர்க்க ஆரம்பித்தார்கள். பத்து வயது ஆன போது, டோராவிற்கு, தனது இருபால் நிலைமை புரிந்துபோனது. எனினும், தனது பெற்றோர்கள் விருப்பப்படியே, பெண் உடைகளுடன், பெண்ணாகவே வாழ ஆரம்பித்தார் டோரா ரத்சன். வெளிஉலகத்திற்கு, அவரது பாலின வேறுபாடு குறித்து, டோரா ஒரு போதும் பேசியதில்லை.
அப்போது ஜெர்மனி ஹிட்லர் வசம் இருந்தது. ஜெர்மனியில், அப்போது உயரம் தாண்டுதலில் சாதனை படைத்துக்கொண்டு இருந்த பெண்ணின் பெயர், கிரேட்டல் பெர்க்மான் என்பதாகும். இவர் பிறப்பில் ஒரு யூதப்பெண்மணி ஆவார். யூதர்களை, ஹிட்லர் அடியோடு வெறுத்ததால், 1936-இல் நடந்த ஒலிம்பிக்கில், யூதப்பெண்மணி கிரேட்டல் பெர்க்மானுக்குப் பதிலாக, அவர் கூடவே பயிற்சி செய்து கொண்டிருந்த, டோரா ரத்சனுக்கு, ஒலிம்பிக்கில் விளையாட சந்தர்ப்பம் தரப்பட்டது. ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட டோரா, உயரம் தாண்டும் போட்டியில் நான்காவதாக வந்தார். அதன்பிறகு, 1938-இல் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் கலந்து கொண்டு, தங்கப்பதக்கம் பெற்றார் டோரா. ஆனால், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி முடிந்து, டோரா, இரயிலில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது, இரயிலுக்குள் இருந்த டிக்கட் பரிசோதகர், டோராவின் ஆண்தன்மையைப் பார்த்து சந்தேகம் கொண்டு, ரயில்வே காவல்துறையை அழைத்தார். “ஒரு ஆண் ஒருவர், பெண் வேடமிட்டுக்கொண்டு, பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியில் பயணம் செய்துகொண்டு இருக்கிறார்” என்று டோரா குறித்து, ரயில்வே காவல்துறையில், டிக்கட் பரிசோதகர் புகார் செய்ய, காவல்துறை, டோராவை, வண்டியில் இருந்து இறக்கி, தீவிரமாக விசாரித்தது. விசாரணையின் கடுமையைத் தாக்குப்பிடிக்க முடியாத டோரா, “தான் ஒரு ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் கொண்டவர்” என்று ஒத்துக்கொண்டார். ஆனால், டோராவின் கூற்றை நம்பாமல், காவல்துறை, அவரை மருத்துவ விசாரணைக்கு உட்படுத்தியபோது, “டோரா ஒரு முழுமையான பெண் அல்ல” என்று உறுதிப்படுத்தப்பட்டது. வழக்கு நீதிமன்றம் சென்றது.
நீதிமன்றத்தில், டோராவுக்கு தண்டனை எதுவும் கொடுக்காத போதும், அவர் பெற்ற தங்கப்பதக்கம், டோராவிடம் இருந்து பறிக்கப்பட்டது. ஒலிம்பிக் விளையாட்டுக் குறிப்பேடுகளில் இருந்து, டோராவின் பெயர் நீக்கப்பட்டது. இத்தோடு டோராவை விட்டிருந்தால் பரவாயில்லை. டோரா, அதன்பிறகு, விளையாட்டுக்களில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. “ஹிட்லரின் நாசிப்படைகளால், திட்டமிட்டு ஒலிம்பிக்கில் நுழைக்கப்பட்ட ஆண்தான் டோரா” என்ற அவச்சொல்லால் பாதிக்கப்பட்ட டோரா, ஜெர்மனியில், மறைந்து மறைந்து வாழ வேண்டியதாயிற்று. ஒரு சிறந்த விளையாட்டு வீரராய், புகழ் உச்சியில் வாழ்ந்து இருக்கவேண்டிய டோரா, தனது இருபாலினப் பிரச்சினையால், கடைசியில், ஒரு மதுக்கூடத்தில் வேலை பார்ப்பவராக மாறிப் போனார். மேற்கத்திய நாடுகளால், மூன்றாம் பாலினம் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலம் வரும் வரை, டோரா, உலக விளையாட்டு சமூகத்திற்கு, ஒரு குற்றவாளியாகவே தெரிந்தார் என்பது எவ்வளவு பெரிய கொடுமை. தொண்ணூறு வயது வரை வாழ்ந்த டோரா, அதன் பிறகு, எந்தப் பத்திரிகைகளுக்கும், பேட்டி கொடுக்க மனமில்லாமல், இறந்து போனார் என்பதும், ஒரு துயரச் செய்திதானே?
ஒலிம்பிக் கனவுகளோடு போராடிய இன்னொரு மங்கைதான், தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி சௌந்தரராஜன். ஏழ்மையான சூழ்நிலையில் பிறந்த சாந்தி, தனது தாத்தா கொடுத்த ஊக்கத்தால், தடகளப்போட்டிகளில் வெற்றி பெற, அல்லும் பகலும், அயராது உழைத்தார். அவரது கடின உழைப்பின் பயனாய், 2006 ஆம் ஆண்டு, கத்தார் நாட்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், வெள்ளிப்பதக்கம் பெற்று, இந்தியாவிற்குப் புகழ் சேர்த்தார். ஆசியத் தடகளப்போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையோடு. மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் 15 இலட்சம் ரொக்கப்பரிசும், ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும், பரிசாகப் பெற்றார். இருப்பினும், அதன் பிறகு, சாந்தியின் வாழ்வில் நடந்த விசயங்கள், மிகத் துயரமானவை. “ஒரு பெண்ணின் ஆண்தன்மையைக் கட்டுப்படுத்தும் ஆண்ட்ரோஜென் என்ற ஹார்மோன், பழுதடைந்து போன நிலையில் இருக்கும் சாந்தி, ஒரு முழுமையான பெண் அல்ல” என்று, அகில உலக தடகளப்போட்டிக் கழகத்தால் நடத்தப்பட்ட ஹார்மோன் சோதனைக்குப் பின் அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக, இந்திய ஒலிம்பிக் சம்மேளனம், சாந்தியின் வெள்ளிப் பதக்கத்தைப் பறித்ததோடு நில்லாமல், சாந்தி, அதன் பின் தடகளப்போட்டிகளில் விளையாடத் தடையும் விதித்தது. பதக்கத்தை இழந்து, மனமொடிந்து போன சாந்தி, தற்கொலைக்கு முயற்சித்த சோகமான சம்பவமும், அதன்பின் நடந்தேறியது. சாந்தி, தற்போது, ஒரு நல்ல அரசுப்பணியில் வேலை பார்க்கிறார் என்றாலும், அவரது ஒலிம்பிக் கனவு கலைந்து போனது, கலைந்து போனதுதானே?
இவரைப் போலவே ஆண்ட்ரோஜென் ஹார்மோனால் பாதிக்கப்பட்ட இன்னொரு இந்திய வீராங்கனைதான் குமாரி டுட்டி சந்த். 2013-இல், ஆசிய இளையர் தடகளப்போட்டிகளில் வெற்றி வாகை சூடிய பின்னர், அதே வருடத்தில் நடந்த, உலக இளையர் சாம்பியன் தடகளப்போட்டிகளிலும் கலந்து, இறுதிச்சுற்று வரைக்கும் முன்னேறிய பெருமை பெற்றவர்தான் குமாரி டுட்டி சந்த். இருப்பினும், 2014-இல், அபரிதமான ஆண்ட்ரோஜென் ஹார்மோன் கொண்டவர் என்ற அடிப்படையில், டுட்டி சந்த், அந்த வருடம் நடந்த காமன்வெல்த் விளையாட்டுக்களில் விளையாடவும், அதன் பின் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடவும், அனுமதிக்கப்படவில்லை. மனம் தளராத, டுட்டி சந்த், இந்திய தடகள சம்மேளனம் மற்றும் உலகத் தடகள சம்மேளனம் ஆகிய இரண்டு நிறுவனங்களின் மீதும் வழக்குத் தொடுத்து, அந்த வழக்கில் வெற்றியும் பெற்றார். அதன் பின்னர், நிறைய ஆசிய மற்றும் ஒலிம்பிக் படியேறிய சாதனைகளை, குமாரி டுட்டி சந்த் படைத்தார் என்பது வரலாறு.
மேலே சொன்னவர்களைப் போல, பெண்தன்மை இல்லை என்ற காரணத்துக்காக, பெற்ற ஒலிம்பிக் பதக்கங்களை, பரிதாபமாக இழந்தவர்களும், ஒலிம்பிக் போட்டிகளுக்குள்ளேயே, நுழையமுடியாமல் போனவர்களும், தற்கொலைகளுக்கு முயன்ற வீரப்பெண்மணிகளும், எவ்வளவோ பேர், இந்த உலகத்தில் இருக்கிறார்கள். இந்தப் பரிதாபங்களை எல்லாம் பார்த்துக்கொண்டே இருந்த சமூக ஆர்வலர்களில் சிலர், “முழுமையான பெண் என்பவள் யார்? முழுமையான பெண்தன்மை என்பதன் அளவீடு என்ன? இனநீர்ப்பு உள்ள, பெண் விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் போன்ற உலக விளையாட்டுக் களங்களால் புறக்கணிக்கப்படத்தான் வேண்டுமா? போன்ற பல கேள்விகளை எழுப்ப, ஒலிம்பிக் கழகம், அந்தக் கேள்விகளுக்கான சரியான பதில் சொல்ல முடியாமல் திணறியது. அறிவியல் பூர்வமாக, இந்த பிரச்சினையை அணுகிய ஒலிம்பிக் கழகத்துக்கு, இன்னொரு புறம், பல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வேறு, அடிக்கடி ஏதாவது ஒரு வகையில், அறிவுரை சொல்கிறேன் என்ற பெயரில், குழப்பிக்கொண்டே இருந்தார்கள். இந்த அறிவியல் வரலாறு குறித்தும், நாம் இங்கே கொஞ்சம் விவாதிப்போம்.
நவீன ஒலிம்பிக் ஆரம்பித்த காலத்தில், ஆண், பெண் என்று ஒரு விளையாட்டு வீரரை அடையாளப்படுத்த, அவரது பிறப்புச்சான்றிதழ் மற்றும் அவரது பிறப்புறுப்பு குறித்த மேலோட்டமான சோதனை இவையிரண்டு மட்டுமே, பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் மூலம், ஆணுறுப்பு, மற்றும் பெண்ணுறுப்பு, இவையிரண்டும் ஒருசேரக் கொண்டுள்ள, இருபாலிகள் (hermaphrodite) அடையாளம் காணப்பட்டு, அவர்கள் ஒலிம்பிக்கில், பெண்ணாக விளையாடத் தடைவிதிக்கப் பட்டார்கள். இருப்பினும், அதற்கான அறுவைச்சிகிச்சைகள், நாளடைவில் வந்த போது, மறுபடியும், பெண் பாலினப் பிரச்சினை ஆரம்பித்தது. அத்தோடு மட்டுமின்றி, பிறப்புறுப்பு குறித்த மேலோட்டமான சோதனைக்கு உட்படுத்தபட்ட, பெண் விளையாட்டு வீராங்கனைகள், மருத்துவர்கள் முன்னால் நிர்வாணமாக்கப்பட்டு பரிசோதிக்கப்ட்டனர். இதற்கும் எதிர்ப்பு வலுக்கவே, அடுத்த கட்டமாய், குரோமோசோம் சோதனைகள் மூலம், பெண் விளையாட்டு வீராங்கனைகள், அடையாளம் காணப்பட்டனர்.
மனிதனின் குரோமோசோம்களில், இன அடையாளம் காண உதவும் குரோமோசோம்கள் இரண்டு. ஒன்று X குரோமோசோம். இன்னொன்று Y குரோமோசோம். பெண்களைப் பொறுத்தவரையில், X குரோமோசோம், இன்னொரு X குரோமோசோமோடு ஜோடி சேர்ந்து, XX என்று இருக்கும். அதேபோல், ஆண்களைப் பொறுத்தவரையில், X குரோமோசோம், Y குரோமோசோமோடு ஜோடி சேர்ந்து, XY என்று இருக்கும். ஆக, ஒரு ஆணுக்கு மட்டுமே Y குரோமோசோம் இருக்கும். இந்த, ஆண் என்று அடையாளபடுத்தக்கூடிய Y குரோமோசோம் அறிவியலை வைத்து, பெண் விளையாட்டு வீராங்கனைகள், எளிதில், அடையாளப்படுத்தப்பட்டனர். இருப்பினும், இந்த குரோமோசோம் பகுத்தறியும் அறிவியலிலும், நாளடைவில், குழப்பங்கள் தோன்றின. சில பெண் வீராங்கனைகளுக்கு, XXY என்று மூன்று குரோமோசோம்கள் இணைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டபோது, மறுபடியும் பிரச்சினைகள் எழுந்தன. இது குறித்து, பல ஒலிம்பிக் சம்மேளனத்துக்குள் இருந்த பெண்கள் எதிர்க்குரல் எழுப்ப, இந்த குரோமோசோம் சோதனை முறையும், பிறிதொருநாளில், ஒலிம்பிக் கழகத்தால் கைவிடப்பட்டது.
அதன்பின்னர், ஒலிம்பிக் கழகம், பெண் என்று ஒரு வீராங்கனையை அடையாளப்படுத்த, ஹார்மோன் பரிசோதனை முறையைத் தனது கையில் எடுத்துக்கொண்டது. மனிதனின், பாலின வளர்ச்சிக்கான ஹார்மோன்களில், மிக முக்கியமான ஹார்மோன்கள் என, ஆண்ட்ரோஜென் மற்றும் ஈஸ்ட்ரோஜென் என்ற இரண்டு ஹார்மோன்கள், அறிவியலால், சொல்லப்பட்டு இருக்கிறது. இதில், பெண்மைக்கான ஹார்மோன் என்று நாம் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனைச் சொல்லுகிறோம். ஆண்களின் செக்ஸ் வளர்ச்சிக்கு காரணமான டெஸ்டோஸ்டீரோன், ஆண்ட்ரோஜென் ஹார்மோனின் இன்னொரு வடிவம் ஆகும். பொதுவாய், டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன், பெண்களின் உடலில், குறைவான அளவிலேயே இருக்கும். மேற்கண்ட ஹார்மோன் அறிவியலைக் கையில் எடுத்துக்கொண்ட ஒலிம்பிக் கழகம், ஆண்கள் ஹார்மோன் ஆன என சொல்லப்படும், டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் அதிகம் உள்ள பெண்களை அடையாளம் கண்டு, அவர்களை ஒலிம்பிக்கிற்குள் நுழைவதைத் தடுத்தது. இந்த அறிவியல் முறையின்படி அடையாளம் காணப்பட்ட பெண்களில் முக்கியாமனவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த குமாரி சாந்தி சௌந்தரராஜன், குமாரி டுட்டி சந்த், மற்றும் தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த, குமாரி கேச்டர் செமன்யா ஆகியோர் ஆவர்.
ஆனால், இந்த ஆண்களின் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன், உண்மையிலே, பெண்களுக்குள் எந்த அளவிற்கு, அவர்தம் விளையாட்டுத் திறமையை அதிகப்படுத்தும் என்பதற்கான, சரியான அளவுகோல், மருத்துவ உலகத்தால் நிரூபிக்கப்படாமல் போக, இந்த சோதனை முறையிலும், காலப்போக்கில், ஒலிம்பிக் கழகம் பல மாற்றங்களைச் செய்தது. சிற்சில விளையாட்டுக்களில் விளையாட மட்டுமே, இப்போது டெஸ்டோஸ்டீரோன் சோதனை பெண்களுக்கு நடத்தப்படுகிறது. திருநங்கைகளும் இப்போது, ஒலிம்பிக் விளையாட்டில், பெண்கள் பிரிவில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதால், அவர்களது டெஸ்டோஸ்டீரோன் அளவு, ஒரு லிட்டருக்கு, 5 நானோமோல் அளவிற்கு மிகாமல் இருக்கவேண்டும் என்ற ஹார்மோன் விதி, இப்போது ஒலிம்பிக் கழகத்தால், கையாளப்பட்டு வருகிறது. எது எப்படியோ, இயற்கையான பிறப்பில், இனநீர்ப்புடன் பிறக்கும் பெண் வீராங்கனைகள், தத்தம் ஒலிம்பிக் கனவுகளை அடைய, பட்ட அவமானங்களும், சமூகப் புறக்கணிப்புக்களும், மனவேதனைகளும், தற்கொலைகளும், காலம் என்றைக்கும் பேசிக்கொண்டேதான் இருக்கும்.
இது ஒருபுறம் இருக்க, பெண்-பெண் உடலுறவை விரும்பும் லெஸ்பியன் மகிழ்விகளும், ஆண்-ஆண் உடலுறவை விரும்பும் ஓரினச்சேர்க்கை மகிழ்வன்களும், இன்னொரு புறம், தங்கள் ஒலிம்பிக் கனவுகள் ஏற்படுத்தும் துயரத்தால், வேதனைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது, மறுக்கமுடியாத உண்மை ஆகும். ஒரு ஓரினச்சேர்க்கை ஆண், ஒலிம்பிக் கனவுகளோடு விளையாடும் தனது பதின்மவயதில், தன்னை ஒரு ஓரினச்சேர்க்கையாளன் என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டால், அதன்பின்னர், அவருக்குத் திறமையும் தகுதியுமே இருந்தாலும், அவரை ஒலிம்பிக் வரை அழைத்துச்செல்ல, எத்தனை நாடுகளின் விளையாட்டு சம்மேளனங்கள் தயாராக இருக்கின்றன என்று ஒரு கணக்கெடுத்தால், அந்தக் கணக்கெடுப்பின் முடிவில், நாம் சொற்ப நாடுகளையே கணக்கிட முடிகிறது. லெஸ்பியன் விளையாட்டு வீராங்கனைகளுக்கும் இதே நிலைதான் நீடிக்கிறது என்பது, நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
உதாரணத்திற்கு, நாம் இந்திய தடகள வீராங்கனையான, குமாரி டுட்டி சந்த்தை எடுத்துக்கொள்வோம். பல்வேறு பாலினச் சிக்கல்களுடன் போராடிய குமாரி டுட்டி சந்த், மனம் தளராது போராடி, பல்வேறு உலக, ஆசியத் தடகள வெற்றிகளைக் குவித்தவர். ஒலிம்பிக் வரை சென்றவர். இருந்தாலும், இத்தனை வெற்றிகள் பெற்ற பின்னரே, “தான் ஒரு லெஸ்பியன் என்ற பெண்-பெண் உடலுறவு விரும்பி” என்று இந்த உலகிற்கு, வெளிப்படையாக அறிவிக்க முடிந்தது. அப்போதும் கூட, அவரது சொந்தத் தமக்கையாலும், சொந்த ஊர் மக்களாலும், புறக்கணிக்கப்பட்டார் என்பது எவ்வளவு ஒரு கொடுமையான விஷயம்? தான் ஒரு லெஸ்பியன் என்று, அவர் அவ்வளவு பதக்கங்கள் பெற்ற பின்னர் சொல்லியபோதே, இவ்வளவு சமூக எதிர்ப்புக்களை, அவர் சமாளிக்க வேண்டி இருந்தால், ஒரு வேளை, தனது பதின்மவயதில் லெஸ்பியன் என்று சொல்லி இருந்தால், அவர் அதன் பின், விளையாட அனுமதிக்கப்பட்டு இருப்பாரா? ஐயகோ, இந்த நிலை, அவருக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள, பல மூன்றாம் பாலின ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், டுட்டி சந்த் போலவே, தத்தம் விளையாட்டுக்களில் சாதித்த பின்னரே, வெளிஉலகிற்கு, தாங்கள் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று வெளிப்படையாகச் சொல்லமுடிகிறது என்பது ஒரு மாபெரும் சமூகக் கொடுமை அல்லவா?
இப்போது, மாற்றுத் திறனாளிகளுக்கென, பாரா ஒலிம்பிக் வந்து விட்டது. இளையர் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க, இளையர் ஒலிம்பிக் வந்து விட்டது. கோடைகால ஒலிம்பிக், குளிர்கால ஒலிம்பிக் வந்துவிட்டது. இந்த அத்தனை ஒலிம்பிக் வளையங்களுக்குள்ளும், மூன்றாம் பாலின வளையங்கள், கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஒளிந்துகொண்டு இருக்கின்றன என்பது நிதர்சனம். வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட மூன்றாம் பாலின ஒலிம்பிக் வீரர்கள், ஆரம்பத்தில், ஒன்று அல்லது இரண்டு என்று என்ற எண்ணிக்கையில்தான் இருந்தார்கள். ஆனால், சமீபத்தில் நடந்துமுடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில், சுமார் 185 வீரர் வீராங்கனைகள், வெளிப்படையாக தங்களை மூன்றாம் பாலினம் என்று அறிவித்துக்கொண்டவர்கள் என்பது ஒரு பெருமைக்குரிய விசயம்தான். உண்மையைச்சொன்னால், வெளிப்படையாக, தாங்கள் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று அறிவித்துக் கொள்ளாத ஒலிம்பிக் வீரர்கள் எண்ணிக்கையும், ஒரு கணிசமான அளவில் இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
இன்று உலகின் பல நாடுகள், தத்தம் நாட்டு, மூன்றாம் பாலின விளையாட்டு வீரர்கள், அவர்தம் நாட்டைப் பிரதிநிதித்து, ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கு, அனுமதிப்பதே கிடையாது. இனநீர்ப்பு உள்ளவர் என்ற ஒரே காரணத்துக்காக, ஒரு மனிதனது விளையாடும் உரிமை மறுக்கப்படுவது, எவ்வளவு பெரிய கொடுமை? இந்தக் கொடுமைக்கு எதிராக, பல வளர்ந்த நாடுகள் குரல் கொடுக்காமல் இல்லை. மூன்றாம் பாலினத்தை அங்கீகரித்த நாடுகள் மட்டுமே, ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும், அல்லது குறைந்தபட்சம், கொள்கை அளவிலாது, மூன்றாம் பாலினத்தை அங்கீகரித்த நாடுகள் மட்டுமே, ஒலிம்பிக்கில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், என்றெல்லாம், அங்கங்கே, இப்போது குரல்கள் ஒலிக்க ஆரம்பித்து இருக்கின்றன. இது ஒரு நல்ல சமூக வளர்ச்சியின் அறிகுறிதான் என்றாலும், மூன்றாம் பாலின வளர்ச்சிக்கு, முக்கியத்தடையாக இருப்பது, மதங்களே என்ற உண்மையாலும், உலகின் பல நாடுகள், அந்த மதங்களைத் தாங்கிப்பிடிக்கும், மதச்சார்புள்ள நாடுகளாக இருப்பதாலும், மேற்சொன்ன மூன்றாம் பாலின ஆதரவுக் குரல்களுக்கு, ஒலிம்பிக் சம்மேளனம், இப்போதைக்கு செவி சாய்க்காது என்பது வெள்ளிடைமலை.
ஒலிம்பிக் வளையங்கள் ஒவ்வொன்றும், ஒரு கண்டத்தைக் குறிப்பவை, என்பது நாம் அனைவருக்கும் தெரியும். என்னைக் கேட்டால், அதில் மூன்றாம் பாலின ஆதரவைக் குறிக்கும் வகையில், இன்னொரு வளையம் வரையப்பட வேண்டும் என்பது எனது ஆசை ஆகும்.
அழகர்சாமி சக்திவேல்
- இனிய நந்தவனம் – கனடா சிறப்பிதழ் வெளியீடு
- ஊரடங்குப் பூங்கா
- சீதைகளைக் காதலியுங்கள்
- எங்கே பச்சை எரிசக்தி ?
- பகல் கனவு
- விடியாதா
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 255 ஆம் இதழ்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- புரிதல்
- கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி
- தமிழ்க் கவிதைகள் தரமான ஆங்கிலத்தில்! – மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸாவின் ஆரவாரமில்லாத அரும்பணி!
- எழுத மறந்த குறிப்புகள்: “ மாலன் “ என்னும் பன்முக ஆளுமை !
- குருட்ஷேத்திரம் 20 (சத்தியர்களை கருவருத்த ரெளத்ர ரிஷி)
- குருட்ஷேத்திரம் 19 (பாஞ்சாலியின் பிறவிக்கு மூலகாரணமான துரோணர்)
- என்ன தர?
- ஒலிம்பிக் வளையங்களுக்குள் ஒளிந்திருக்கும் வளையங்கள்
- என்னவோ நடக்குது
- கனடா தேர்தல் முடிவுகள் – 2021 – லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது
- கோதையர் ஆடிய குளங்கள்