ஜனநேசன்
வெளிவாசல் இரும்புப்படலை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. மென்துயிலில் ஆழ்ந்திருந்த சுப்பிரமணியம் இலைத்துளி பட்ட தாய்ப்பறவை போல் சிலிர்த்து நெஞ்சில் விரித்திருந்த புத்தகத்தை மேஜையில் வைத்தார். ஜன்னல்வழி ஊடுருவினார். மீண்டும் தாழை அசைத்து “சார், பி.எஸ்.சார் “என்ற குரல் பழகியதாகவுமில்லை. புதியதாகவுமில்லை . “ உள்ளே வாங்க “ என்றபடி எழுந்தார்.
நாற்பத்தைந்துவயதர் ஒருவர் மிடுக்கும் பணிவும் கலந்த உடல்மொழி யில் வணங்கினார். வீட்டின் உள்ளே கூடத்தில் அமரச் செய்தார் . “கோவிச்சுக்காதீங்க; வயசாயிருச்சில்ல உங்களை யாருன்னு என் ஞாபகத்துக்கு வரலை. “
“சார் மன்னிக்கணும் “ என்றவாறு குனிந்தவர் , சுப்பிரமணியம் தடுக்குமுன் அவரது காலைத் தொட்டு வணங்கினார்.” விழக்கூடாது ,எழுந்திரிங்க “ . “சாரி,சார்; என்பேர் முத்துகிருஷ்ணன் ; 1980இல் நீங்கள் எனக்கு பத்தாம் வகுப்பு ஆசிரியர் ; அப்புறம் எனக்கு பதினொன்னு, பனிரெண்டாம் வகுப்பு களில் கணிதமும், இயற்பியலும் நடத்தினீர்கள்.
உங்கள் ஆசிர்வாதத்தால் மத்திய ரயில்வேயில் உயர் அதிகாரியாக வேலை பார்க்கிறேன் . எங்கள் செட் மாணவர்கள் இருபதுக்கு மேற்பட்டவர்கள் நல்லநிலையில் இருக்கிறோம். நாங்க நம்பள்ளி ஆசிரியர்களை கவுரவிக்கலாம் என்று யோசனை. நாங்கள் விசாரித்ததில் எங்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர்களுள் நீங்கள் ஒருவரே தற்போது நம்மூரில் இருப்பதாகத் தெரிந்தது. சார் ஒப்புதல் அறிந்தபிறகு, மதுரை, சென்னையில் இருக்கும் தமிழ்,ஆங்கில ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவித்து அக்டோபர் ரெண்டாவது சனிக்கிழமை விழா நடத்தலாம் என்ற யோசனை. உங்கள் சம்மதம் கேட்கவே வந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாரும் உங்கள் இசைவு பெற்றதும், உங்களை அழைக்க வருவோம் . “
“இந்தக்கிழவனை, என் மாணவன் ரயில்வே உயரதிகாரியாகத் தேடிவந்தது ரொம்ப சந்தோசம்.! வாங்கின சம்பளத்துக்கு எனது சமூகக் கடமையைச் செஞ்சேன்.இதுக்கு பாராட்டு கெளரவம் எதுக்கப்பா.? என்கிட்டே படிச்சாலும் உனது முயற்சியால் உயரதிகாரியாக வந்திருக்கே. நான்தான் உன்னைப் பாராட்டனும்.இதோ இந்த “சத்தியசோதனை “ புத்தகம். இதைப் பலர் முழுசா புரிஞ்சிக்கலை. நீங்க மத்திய அரசில வேலை பார்க்கிறீங்க உங்களுக்கு இது அவசியம். படிச்சு உங்க சமுகக் கடமையை செய்ங்க.என் ஆசிர்வாதமும், வாழ்த்துகளும் எப்போதும் உண்டு!”
“ரொம்ப நன்றி சார். உங்ககிட்ட படிச்ச நாங்க முப்பதுபேரில இருபது பேருக்குமேல் சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கிறோம் . ஏறக்குறைய முப்பது வருசத்துக்குப்பின் எல்லா நண்பர்களும் சந்திக்கிற சந்தோசத் தருணத்தில் உங்களைப் போன்ற பொறுப்புணர்வு ஊட்டிய ஆசிரியர்களால் உயர்ந்த நாங்க நன்றி தெரிவிக்கவும் வாழ்த்து பெறவும் விரும்புறோம். இது வெறும் நன்றி பாராட்டும் நிகழ்ச்சி மட்டுமல்ல;.இன்றைய ஆசிரியர் களுக்கும் , மாணவர்களுக்கும் நீங்கள் அடிக்கடி சொல்லும் சமுகப் பொறுப்பை உணர்த்தும் நிகழ்ச்சி என்று நாங்கள் கருதுகிறோம் . நீங்கள் அவசியம் குடும்பத்தோடு வரவேண்டும். அம்மா எங்கே காணலை.”
மனைவி இறந்ததும் பாதி உயிர் போனது. பிள்ளைகளுக்காக காத்திருக்கும் மீதிஉயிரும் அடிக்கடி கடலலைபோல எல்லைவரை போய் போய் திரும்பு வதை நினைத்தவாறு மனைவியின் போட்டோபக்கம் திரும்பினார்.மனைவி வாடிய மாலைக்கிடையில் வாடாத புன்னகையோடு மலந்திருந்தார்.
“சாரி சார். நீங்கள் அவசியம் இந்நிகழ்வில் கலந்து எங்களுக்கு புதிய தூண்டலையும் புத்துணர்ச்சியையும் தரவேண்டும். வர்றேன் சார்” கண்கள் பனிக்க சுப்ரமண்யம் வழியனுப்பினார்.
முத்துகிருஷ்ணனின் நண்பர்கள்! ஐந்துபேர் தங்களது கார்களில் பிற்பகல் நாலுமணிக்கே சுப்பிரமணியம் வீட்டுக்கு வந்துவிட்டனர். தம் வீட்டின்முன் விதவிதமான கார்கள் நிற்பது பேரப்பிள்ளைகளுக்கு குதூகலம் ஊட்டியது ; மகனுக்கு பெருமையாக இருந்தது; இப்படியான பெருமைமிக்க மாமனாரை பாராமுகமாக சம்பளமில்லா காவல்காரரைப் போல் நடத்தினோமே என்ற உறுத்தல் மருமகளுக்கு. அவள் வெளிக்காட்டாமல், சிரிப்பைப் படரவிட்டு , மாமனாரை விழாவுக்கு அழைக்க வந்தவர்களுக்கு பிஸ்கட், டீ கொடுத்து உபசரித்தாள். தனது மனதை மாற்றிக்கொண்டு விழாவுக்கு குடும்பத்தோடு கலந்துகொள்ள தயாரானாள்.மருமகளின் மாற்றம் உணர்ந்து மாமனாருக்கு மனம் பூரித்தது. இந்த மாற்றம் தொடரவேண்டும் என்று வந்தவர்களிடம் மகனையும், மருமகளையும், பேரப்பிள்ளைகளைப் பற்றி பெருமை பட்டார்.
சரியாக ஐந்துமணிக்கு தலைமை ஆசிரியர் தலைமையேற்க விழா தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது. முத்துகிருஷ்ணன் வந்தவர்களை பொருத்தமான சொற்பூக்களால் வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார் .மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ,” சுப்பிரமணியத்தின் முப்பதாண்டு ஆசிரியப்பணியில் ,அவரது சமுகப்பொறுப்பும் அர்பணிப்பும்மிக்க பணியின் விளைச்சலே அவரது மாணவர்கள் சமூகத்திலும், அரசுபணியிலும் உயர்நிலை வகிக்கிறார்கள். இம்முன்னாள் மாணவர்களின் செய்கைமூலம் இவ்வாசிரியர்களின் மேன்மையை உணரமுடிகிறது. சுப்ரமணியத்தையும் , அவரது சக ஆசிரியர்களையும் தேடி அழைத்து தாம் படித்த பள்ளியிலேயே பாராட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இப்பள்ளிக்குத் தேவையான கணினிகள், ஆய்வக உபகரணங்கள் வழங்க வசதிகளையும் மேம்படுத்த உதவ வேண்டும் “என்றார்.தனக்குவேறுநிகழ்ச்சி இருப்பதாகக் கூறி ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்திச் சென்றார் .
முன்னாள் மாணவர்கள் சார்பாக தெலுங்கானாமாநில ஐஏஎஸ்அதிகாரியாக இருப்பவர் ஒருவரும், டெல்லியில் காவல்துறை அதிகாரியாக இருப்பவர் ஒருவரும்,மராட்டிய சுங்கத்துறை அதிகாரியாக இருப்பவர் ஒருவரும் சுப்பிரமணியம் உள்ளிட்ட முன்னாள் ஆசிரியர்களின் சிறப்பான குணங்கள் தங்களை ஊக்கமளித்து முன்னேற்றியமை பற்றி நெகிழ்வாகப் பேசினர்.
அந்தவூர் ஒட்டல் அதிபராக இருக்கும் முன்னாள் மாணவர் முருகன் ; “எதைச் செய்தாலும் ஈடுப்பாட்டோடும் ,பிறருக்கு உதவும் வகையில் செய்ய வேண்டும் என்பதை பி.எஸ்.சாரிடம் கற்றேன் .எனது குடும்பச் சூழல் காரணமாக பத்தாம் வகுப்புக்கு மேலே படிக்க முடியவில்லை. எனக்கு வாழ்க்கைச்சூழல் நன்றாக அமைந்திருக்கும் பட்சத்தில் எனக்கு முன்னாள் பேசிய நண்பர்களைப் போல நானும் உயரதிகாரியாக இருந்திருப்பேன். ஆனாலும் எதிர்நீச்சல்போட்டு இன்று இந்த ஊரில் ஓட்டல் அதிபராகவும் மட்டுமல்ல , நகரின் முக்கிய பிரமுகராகவும் மதிக்கப்படுகிறேன்.ஏழை மாணவர்களுக்கு உதவுகிறேன் இதற்கு காரணம் இந்த ஆசிரியர்கள் ஊட்டிய கல்வியும், ஞானமும் தான்.” கூட்டம் நெகிழ்ந்து உருகியது .
முத்துகிருஷ்ணன்:” ஓட்டல் அதிபராக உள்ள நண்பர் முருகன் அளித்த அறுசுவை உணவே அவரது தரத்தை உணர்த்தும். இந்நிகழ்வுகளுக்கான அனைத்து செலவுகளோடு , நமது வெளியூர் நண்பர்கள் தங்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார். இவை அனைத்தும் !சுப்பிரமணியம் சாருக்கு தனது காணிக்கை என்று அவர் நெக்குருகினார் என்பதோடு இந்தப்பள்ளி மாணவர் மேம்பாட்டுக்கு , நாங்கள் பல திட்டங்கள் வைத்துள்ளோம் என்பதையும் கூறக் கடமைப்பட்டுள்ளேன். நிறைவாக முன்னாள் ஆசிரியர்கள் சார்பாக சுப்பிரமணியம் சார் பேசுவதற்கு முன் எங்களது நண்பர்கள் இருபதுபேரையும் இந்த பிரம்பால் ஓர் அடி அடித்து, ரீசார்ஜ் செய்ய வேண்டும்; பங்கேற்றவர்களுக்கும் பார்வையாளர்களாக இருந்து எங்களை கௌரவித்த ஆசிரியர்கள், மாணவர்களையும் ஆசீர்வதிக்க வேண்டும் “
சுப்பிரமணியம் ; “இப்படியோர் நெகிழ்வான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், இந்நிகழ்வில் பங்கேற்றும், பார்வையாளர்களாக இருந்தும் எங்களை கௌரவித்த அதிகாரிகளுக்கும் , சக ஆசிரியர்கள் மற்றும் சகக் குடும்பத்தார் சார்பாக நன்றியை தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன். எங்களது பள்ளிமாணவர்கள் சமூகத்தில் உயர்ந்தநிலையில் இருப்பது எங்களுக்கு பெருமிதம் தான் ! நான் 1983 லிருந்தே பிரம்பைப் பயன்படுத்துவதில்லை .அந்த ஜூலையில் ஒரு நாள் மதுரைக்கு போயிருந்தேன்.ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். எதிரில் சாப்பிட்டவர் இலையை எடுத்து துடைக்க ஒரு பையன் வாளியோடு வந்தவன்; என்னைப் பார்த்ததும் உள்ளே ஓடிவிட்டான். அவனைப் பார்த்த நொடியில் அந்தப்பையன் எனது வகுப்பு மாணவன்; புத்தகம் கொண்டு வராததற்கு அடிக்கடி என்னிடம் அடிபட்டவன் போலிருந்தது.னக்கு உறுத்தலாக இருந்தது. சாப்பிட மனம் ஒப்பவில்லை; எழுந்து பணத்தைக் கொடுத்துட்டு அவனைப்பார்க்க ஓரமாக உட்கார்ந்தேன். பத்துநிமிடமாக அவன் வரவில்லை. பரிமாறுனர் ‘ டேபிள் கிளீனிங் பாய் ‘ என்று சத்தமிட்டுக் கொண்டே இருந்தார். அவன் வரக்காணோம். எனக்கு பசிபோயி மனதைப் பிசைந்தது. வகுப்பிலிருந்து விரட்டியதுமில்லாமல் வயிற்றுப் பிழைப்பில் இருந்தும் விரட்டி விட்டுட்டோமோ என்ற குற்றவுணர்வு வறுத்தெடுத்தது. போனகாரியத்தை விட்டுட்டு ஆண்டிபட்டிக்கு பஸ் ஏறிட்டேன்.
அன்றுமுழுவதும் சாப்பிடவில்லை.அன்றிலிருந்து பிரம்பை நினைப்பது கூட இல்லை. அன்பால் அணைப்பது; இயலாதபட்சம் சொல்லால் கண்டிப்பது ; பாடத்தை இயன்றளவு எளிமையாகவும், ஈர்ப்பாகவும் புரியவைப்பது என்ற நடைமுறை வகுத்துக் கொண்டேன். இந்த ஞானத்தை தந்தவன் உருவம் இன்றும் வாளியோடு என்கண்முன் வந்து வழிநடத்துது. அவனிடம் மன்னிப்புக்கோரத் தேடுகிறேன். தென்படவில்லை.“என்ற உடைந்த குரலையும், கசிந்த கண்களையும் சரி செய்யும் விதமாக சிறிது உறைந்தார்.
“அந்தப்பையன் நான்தான் சார்! “ கண்ணீர் பொங்க ஓடிவந்த ஓட்டல் அதிபர் முருகன், ஆசிரியரை அணைத்து கைகளைப் பற்றினார்.
- கனடிய மக்களை ஆச்சரியப்படுத்திய பல வடிவப் பனிக்கட்டிகள்.
- ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- மீள்வதா ? மாள்வதா ?
- பாரதிமணியை மறக்க முடியாது
- ஜெயந்தி ஜெகதீஷ்ஷின் ‘ரெஜித்தர் ஆபிஸ் மசிக் குண்டு’
- காலவெளி ஒரு நூலகம்
- மாம்சம் – தரை –மார்புத்துணி
- கொடி மரம்…
- இலங்கை அரச இலக்கிய விருது விழாவில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இரண்டு நூல்களுக்கு இரண்டு சாகித்ய விருதுகள்
- பாரதி தரிசனம் : பாரதியின் கவிதையில் பொருள் மயக்கம்
- அன்பால் அணை…
- விநோதினி புதிய சரித்திர புதினம் – முன்னுரை
- பால்வெளிப் பாதையில்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 259 ஆம் இதழ்