ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 10 of 11 in the series 27 பெப்ருவரி 2022

 

 

 

  1. மெய்த்தோற்றங்கள்

பிறவி நடிகர் திலகங்களும்

நடிகையர் திலகங்களும்

தருவித்துக்கொண்ட நவரச முகபாவங்கள்

புகைப்படங்களை ஒரு திரைப்படத்தின் காட்சித்துணுக்குகளாக

நம் முன் வைத்தவாறே.

அழும்போதும் ஆத்திரப்படும்போதும்

அழகாகக் காட்சியளிக்கவேண்டும் என்ற கவனமாகவே

யிருக்கும் நடிகையர் திலகங்கள்

இயல்பாக நடப்பதாய்

இடுப்புவளைவை எடுப்பாக்கிக் காட்டியவாறே

ஒயிலாக நடந்துகொண்டிருக்கிறார்கள்

இணையப்பக்கங்களில்.

அவர்கள் வெட்டியொட்டும் வாசகங்களை

யெல்லாம்

அவர்களுடையதாக மாற்றிவிடும் வித்தையை

வெகு இயல்பாகக் கைக்கொண்டவர்கள்

இருகைகளிலுமான இருபதுவிரல்களால் எழுதிக்கொண்டே

யிருக்கிறார்கள்.

இருக்கையை விட்டு இம்மியும் நகராமல்

வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பவர்கள்

இந்தத் திரைப்படம் ‘ஆர்ட்’ படமா ‘மசாலா’ப் படமா

என்று தங்களைத்தாங்களே கேட்டுக்கொள்ளும் நாள்

தொலைவிலோ அருகிலோ

இருக்கிறதோ இல்லையோ….

 

  •  

 

  1. மதிப்புரைகளும் மாஜிக்கல் ரியலிஸமும்

 ‘மிகவும் அருமையான கதை யிது

இருக்கும் எட்டு பக்கங்களில் ஏழிலுள்ளவை

ஏற்கெனவே எழுதப்பட்டிருப்பதே யென்றாலும்’

என்கிறார் ஒரு விமர்சகர் _

‘ரேட்டிங்’குக்கான ஐந்து வட்டங்களை யடுத்து

இன்னும் ஐந்து வட்டங்களை யிட்டு

பத்தாவதில் ’டிக்’ கொடுத்து.

’பார்த்துக்கொண்டிருக்கும்போதே முளைத்த பரு

புதுமையான கதைக்கரு’

’முளைத்த’ என்பதற்கு பதில்

’இளைத்த’ என்று எழுதியிருக்கலாம்.

மற்றபடியெந்தக் குறையுமில்லை’

என்று இன்னும் ஐந்து வட்டங்களை யிட்டபடியே

வலிக்காமல் குட்டுகிறார் ஒரு திறனாய்வாளர்.

வலித்தாலும் பரவாயில்லை யென்று

எல்லா விரல்களிலும் வகைவகையாய்

மோதிரங்களை அணிந்தபடி.

ஒரு கதையை யொருவர் எழுதினால்

அது அருமையாவதும் புதுமையாவதும்

அதை யின்னொருவர் எழுதினால்

கழுதையின் பின்னங்காலால்

உதைக்கப்படவேண்டியதாவதும்

மதிப்புரைகளின் மாஜிக்கல் ரியலிஸமாக…..

 

  •  

 

 

 

 

 

 

 

 

 

  1. அறி வாளிஅறிவீலிஅரசியல்

தன்னை யறிவாளி யென்று சொல்கிறவரின் சொல்கேட்டு

சொல்லமுடியாத ஆனந்தத்தில் சொக்கிநிற்கிறார்கள்;

சுற்றிச் சுழல்கிறார்கள்;

சுடரொளி வீசுகிறார்கள்;

சுநாதமிசைக்கிறார்கள்….

சொல்பவர் அந்தச் சொல்லைச் சொல்லத் தகுதியானவரா

வென்றெண்ணத் தலைப்படாமல்

சொல்பவரின் சொல்படி தானே அறிவாளி யென்று

சுற்றுமுற்றுமுள்ளவர்க்கெலாம் தன்னைச்

சுட்டிக்காட்டும் முனைப்பில்

காரணகாரியங்களோடு மறுத்துப்பேசுவோரை

கோமாளிகளாகச் சித்தரித்து

சொந்த சகோதரர்களுக்கு முட்டாள் பட்டம்

கட்டப்படுவதை கைதட்டி ரசித்து _

சிறகசைத்துப் பறக்காத குறையாய்

சீக்கிரசீக்கிரமாய் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து

வரிசையில் நின்று

வாழ்நிலத்தைத் தன் வம்சாவளிச் சொத்தாக பாவிக்கும்

வெள்ளி ஸ்பூனோடு பிறந்தவர்க்கே

வாக்களித்துவிட்டு வந்தார் வெற்றிப்புன்னகையோடு.

அந்த வாக்காளரே அறிவாளி என்று அறைகூவலிட்டவாறே

அறிவாளிக்கெல்லாம் அறிவாளி

அரியணையில் அமர்ந்துகொள்ளுமோர் நாளில்

அடுத்தவர்களை முட்டாள்களாய் மட்டுமே

அடையாளங்காணப் பயிற்றுவிக்கப்பட்ட

பரிதாபத்துக்குரிய உண்மையான அறிவீலி

அடிமையாய் அந்த வேலியிட்ட திறந்தவெளியில்

அம்மணமாய் நின்றுகொண்டிருக்க

ஆயிரங்கால் ஜந்து ஒன்று

எங்கிருந்தோ சீறிப்பாய்ந்து

கடித்துக் குதறத் தொடங்கும்.

  •  
Series Navigationகாலமுரணில் முகிழ்த்த கதைகள் (நூல்மதிப்புரை)அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி முதன்முதல் அணுசக்தி கட்டுப்படுத்திய இத்தாலிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *