தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

13 ஜனவரி 2019

ஒரு விதையின் சாபம்

ரத்தினமூர்த்தி

ஆழத்தில் புதைந்த விதை ஒன்று
தனது வாழா வெட்டித்தனத்தை
எண்ணியபடி அழுகிறது
முளைக்கும் காலத்தில்
தூங்கிப் போனதால்
இறப்பதற்கும் பிழைக்கவும்
வழியற்றது புரிகிறது
தன்னோடு விதைக்கப்பட்ட
விதைகள் யாவும் முளைத்து
செடியாய் அவதரித்தது
கண்ணுக்குள் விரிகிறது
அந்தச் செடிகளின் வேர்கள்
தன்னை சூழ்ந்து நெருக்குவதாகவும்
அவமதிப்பதாகவும் தோன்ற
இன்னும் ஆழத்தில் புதைந்தது.

தானும் மீள்வேன்
மண் மீது முளைப்பேன் எனும்
நம்பிக்கையின் மீது ஒரு நாள்
மண் விழுந்தது
யுகங்களாய் நடந்த
விளைச்சலுக்கு முடிவெழுத
பாத்தி கட்டிய நிலத்தை
வீட்டு மனைக்கு வித்திட்டதால்
விதையுனுடைய கனவும்
காலாவதியானது
பயிர்கள் வளர்ந்த மண்ணில்
வளர்ந்த கட்டிடங்கள்
விதைக்கு கல்லறையாகிட
முளைப்பேன் எனும் சபதம்
முடிவுக்கு வந்தது.

தினமும் தோன்றும்
கெட்ட கனவிற்கும்
உளைச்சலுக்கும் காரணம்
அந்த விதையின் ஆவிதான் என
புது வீட்டுக் காரன்
அறிவானா என்ன ?

Series Navigationஎடை மேடைசந்திப்பு

One Comment for “ஒரு விதையின் சாபம்”


Leave a Comment

Archives