Posted in

மெலி இணர் நவிரல் ஒள் வீ  சிதற 

This entry is part 12 of 14 in the series 12 ஜூன் 2022

கல்லிடை  சொற்கீரன்.

மெலி இணர் நவிரல் ஒள் வீ  சிதற 

வான் அதிர் உடுக்கள் வெள் நிலம் 

வீழ்ந்து பரந்து விழி விழி  உறுத்து 

வியத்தல் அன்ன  நின்னைக்கண்டு 

நெடுவெளி ஊழ்க்கும் மணியிழாய்.

வெங்கல் அருங் கடம் சென்றான் ஆங்கு  

மீள்வழி நோக்கி னப்பரவை 

உன் விழி அம்பு கூர்த்த வடுக்கள் 

எண்ணி எண்ணி புள்ளியிட்டாய் .

அதனை அழித்திட வருவான் என்னே.

கலங்கல் மன்னே.காலையும் விரியும்.

———

பொழிப்புரை 

மெல்லிய பூங்கொத்து உடைய முருஙகை மரத்தின் ஒளிசிந்தும் சிறு பூக்கள் உதிர்ந்து தரையில் படர்ந்து கிடப்பது வானிலிருந்து விண்மீன்கள்  உதிர்ந்து  வெறும்   தரையில் கிடந்து கண்களைப்போல உன்னை வியந்து வியந்து பார்க்கின்றன. மணிகள் நிறைந்த அணிகலன்கள்  அணிந்த தலைவியே! உன் தலைவன் திரும்பி வரும் அந்த நெடிய  வழியை நீ காத்துக்கிடக்கும் காலத்தின் நீள்வாய்க் காண்கின்றாய்..வெயில் தகிக்கின்ற பாறைகள் நிறைந்த கடப்பதற்கு அரிய  பாதையைக்கடக்கும் உன் தலைவன் திரும்பி வருவதையே பார்த்துக்கொண்டு நிற்கிறாய்.பரந்த அந்த வானம் உன் கூரிய அம்பு விழி பட்டு பட்டு புண்ணான அந்த வடுக்களை ஒவ்வொன்றாய் புள்ளியிட்டு எண்ணிக் கொண்டிருக்கிறாய். அதை அழித்து விட உன் தலைவன் அந்த விடியல் வேளையில் வந்திடுவான்.ஏன் கலங்குகிறாய்?கலங்காதே.

தவிக்கும் தலைவியின் எதிர்பார்ப்பை சங்கத்தமிழ் நடை செய்யுட்கவிதையாக்கி  நான் எழுதியுள்ளேன்..

-கல்லிடை சொற்கீரன்

Series Navigationதிரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும்தெளிந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *