கபுக்கி என்றோர் நாடகக்கலை

author
0 minutes, 4 seconds Read
This entry is part 14 of 17 in the series 9 அக்டோபர் 2022

 

 

அழகர்சாமி சக்திவேல்

முத்தமிழை, நாம், இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கிறோம். அந்த நாடகத்தமிழை, வசன நடை குறைந்த, பாடல்கள் மற்றும் ஆடல்கள் நிறைந்த கூத்து என்றும், வசன நடை நிறைந்த நாடகம் என்றும், நாம் இன்னும் இரண்டாகப் பிரிக்கிறோம். இயலும், இசையும், இரண்டறக் கலந்த, நாடகங்களின் இயல்பு குறித்து, சங்ககால இலக்கியமான தொல்காப்பியம், பல விசயங்களை, நமக்குச் சொல்லுகிறது. நாடகங்களின் சிறப்பு குறித்து, ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள், சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையில், பாடி இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே. நாடகம் என்பது வெறும் நடிகர்களையும், அவர்கள் பேசும் வசனங்களையும் மட்டுமே முழுதும் சார்ந்தவை அல்ல. நாடக அரங்கின் அமைப்பு, மேடையில் தொங்கும் திரைச்சீலைகளின் அழகு, கட்டமைக்கப்பட்ட இசை, தாளம், தாளத்திற்கேற்ற ஆடல், கதை அமைப்பு, கதைக்கேற்ற முக ஒப்பனை, ஒப்பனை சார்ந்த அரிதாரப் பூச்சுக்கள், வண்ண வண்ண உடைகள், இப்படி, நாம் நாடகக்கலையின், பல வடிவங்களை, இந்தக் கட்டுரையில் அடுக்கிகொண்டே போகலாம்.

 

நாடகம் என்பது, நம் பண்டைய தமிழர் வாழ்வில் மட்டுமல்லாது, உலகம் முழுதும் தோன்றிய, அத்தனை நாகரிகங்களிலும், ஏதாவது ஒரு வடிவில் இருந்து வந்து இருக்கிறது என்பதும் நாம் அறிந்ததே. நாள் எல்லாம் உழைத்துக் களைக்கும் மனிதன், தனது களைப்பை மறக்க, பொது இடங்களில் கூடுவதும், அப்படிக் கூடும் கூட்டத்தின் களைப்பைப் போக்கும் கூத்தாடிகள், பல்வேறு வடிவங்களில், உலகம் முழுதும் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்ததே. சினிமா என்றொரு பிரமாண்டமான ஊடகம், கூத்தின் வடிவத்தை, இன்னொரு நிலைக்குக் கொண்டுபோய், உலகத்து மக்களை, தனது கட்டுக்குள் கொண்டுவந்த போதும், இன்றளவும் நாடகக்கலையை ரசிக்கும் ரசிகர்களும், உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள் என்பதும் ஒரு உண்மைதான். ஒபேரா (Opera) என்ற இசைவடிவ நாடகம், மேலை நாடுகளில், இன்றளவும், அதற்கென்ற ஒரு சிறப்போடு, தனது கலைப்படைப்புக்களை வழங்கிக்கொண்டுதான் இருக்கிறது. கபுக்கி என்ற இந்தக் கட்டுரை பேசும் நாடகக்கலையும், மேலே நாம் சொன்னது போன்ற ஒரு நாடகக்கலைதான் என்றாலும், மற்ற நாடகக்கலைகள், இலைமறைகாயாகச் சொல்லும் மூன்று விசயங்களை, கபுக்கி என்ற இந்த நாடகக்கலை, வெளிப்படையாகவே உலகுக்கு உணர்த்துகிறது என்ற வகையில், கபுக்கி என்ற இந்த நாடகக்கலை, தனியொரு சிறப்பைப் பெறுகிறது. மற்ற நாடகக்கலைகள் தெளிவாகப் பேசாத, கபுக்கி நாடகக்கலை பேசும் அந்த மூன்று விசயங்கள் என்ன?

  1. நாடகக்கலைக்குப் பின்னால் வளர்ந்த, பாலியல் தொழில்.
  2. அந்தப் பாலியல் தொழிலை, ஒரு கட்டமைப்போடு செய்த ஆண் நாடக நடிகர்கள்.
  3. நாடகக்கலைக்கு ஊடே, செக்ஸ் தொழில் செய்த அந்த ஆண் நாடக நடிகர்களில், பெண்மை ததும்பிய ஆண் நாடக நடிகர்களுக்கு இருந்த, எண்ணற்ற’ தீவிர ரசிகர்கள்.

மேற்சொன்ன மூன்று கபுக்கி நாடகக்கலையின் சிறப்புக்களையே, இந்தக் கட்டுரை, இன்னும் விரிவாக அலச நினைக்கிறது.

 

தமிழர் நாடகக்கலைக்குப் பின்னால், பாலியல் தொழில் என்ற ஒன்று இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. சிலப்பதிகாரத்தின் ஒரு நாயகியான மணிமேகலை, ஒரு கணிகையர் குல மாது என்பதும், இவ்வகைக் கணிகையர் குல ஆடல் மாதுக்களை, விலை கொடுத்து வாங்க நினைத்த நாயகன் கோவலன் போன்றோரையும், நாம் தமிழர் இலக்கியங்களில் படிக்கிறோம். சோழ மன்னர்கள் காலத்தில் வளர்க்கப்பட்ட தேவரடியார்களிடம் கூட, அவர் செய்த கோவில்பணி மற்றும் ஆடல் பாடல் பணிகளுக்குப் பின்னால், பாலியல் தொழிலும் வளர்க்கப்பட்டது என்பதும் நாம் அறிந்ததே. ஏன், இன்றைய தெருக்கூத்து நாடகங்களிலும், நடிக்கின்ற பெண்களின், இரட்டை வசனப் பேச்சுக்களையும், அவர்தம் காமம் நிறைந்த உடல் அசைவுகளையும், ரசிக்கும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும், அங்கே பாலியல் தொழில் சூடு பறக்க நடக்கிறது என்பதும், நமக்குத் தெரிந்ததுதான் என்றாலும் கூட, இந்த வகை, தமிழர் நாடகப் பாலியல் தொழில், கபுக்கி நாடகக்கலை போன்ற, ஒரு சமூகக் கட்டமைப்புக் கொண்டதாக இல்லாமல், ஒரு திரைமறைவு செக்ஸ் தொழிலாகவே, இன்றளவும் இருந்து வருகிறது என்பதே உண்மை. தவிர, கபுக்கி நாடகக்கலை போல, பல்வேறு ஆண்கள், பெண்கள் வேடமிட்டு நடித்து, அந்த பெண்வேட நடிப்புக்குப் பின்னால், ஒரு சமூகக் கட்டமைப்புக் கொண்ட, பாலியல் தொழில் இருப்பது போன்ற நிலை, தமிழர் நாடகக்கலையில் இல்லை என்றே நான் சொல்ல விழைகிறேன்.. நாம், கபுக்கி நாடகக்கலை தோன்றிய வரலாறு குறித்துச் சற்று விரிவாக இனி பேசுவோம்.

 

ஜப்பானின் கபுக்கி நாடகக்கலைக்கு முந்திய ஜப்பான் நாடகக்கலையாய், நாம் நோ(noh) என்ற நாடகக்கலையைச் சொல்லலாம். நோ என்ற இந்த ஜப்பானிய நாடகக்கலை புத்தமதக் கதைகள் சார்ந்த ஒரு நாடகக்கலை ஆகும். இது தவிர, இந்த நோ நாடகக்கலை, ஜப்பானின் உயர்குடிகளான சாமுராய் போன்றோர் ரசித்துப் பார்க்கும் கலையாக இருந்ததே தவிர, சாதாரண ஜப்பானிய பாமரமக்கள் பார்த்து மகிழும் நாடகக் கலையாக, இந்த நோ நாடகக்கலை இல்லை. கி,பி 1603 வரை தொடர்ந்த இந்த நிலையை, ஒகுண்ணி என்ற ஜப்பானியப் பெண்மணி மாற்றி அமைத்தார். ஜப்பானிய கோவில்களில், மேலே சொன்ன நோ நாடகக்கலையில் நடித்துக்கொண்டு இருந்த இந்த ஒகுண்ணி என்ற பெண்மணி, தன்னோடு இருந்த ஆண் நடிகர்களையும், பெண் நடிகர்களையும் சேர்த்து, கபுக்கி நாடகக்கலையை, முதன்முதலில் உருவாக்கினார். ஒகுண்ணி உருவாக்கிய இந்த நாடகக்குழுவில் இருந்த சில ஆண்கள் பெண்வேடமிட்டு நடித்தனர். அதே போலவே, சில பெண்கள், ஆண்கள் வேடமிட்டு நடித்தனர். இவ்வகைச் சிறப்புடன் உருவாக்கப்பட்ட ‘கேயிசேகை’ அதாவது, “விலைகொடுத்து வாங்கப்பட்ட விபச்சாரி” என்ற ஒகுண்ணியின் நாடகம், க்யோடா நகரின் காமோ ஆற்றங்கரையில் நடிக்கப்பட்டபோது, அது ஜப்பானிய பாமர மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது. அகமகிழ்ந்து போன, ஒகுண்ணி, இதே போன்ற நாடகங்களை உருவாக்கி, ஜப்பானின் பல இடங்களில் நடித்தபோது, கபுக்கி நாடகக்கலை, ஜப்பானில் பிரபலம் ஆகத் தொடங்கியது. இரட்டை வசனங்கள், பல்வேறு செக்ஸ் அசைவுகள், பாலியல் சார்ந்த கதைகள் போன்ற பல அம்சங்களைக் கொண்டு இருந்த இந்தக் கபுக்கி நாடகக்கலை, தொடக்கத்தில், ஜப்பானிய பாமர மக்களையே பெருமளவில் கவர்ந்த போதும், நாள் செல்ல, நாள் செல்ல, ஜப்பானிய உயர்குடிகளும், இந்தக் கபுக்கி நாடகக்கலைக்கு, ரசிகர்கள் ஆனார்கள்.

 

கபுக்கி நாடகக்கலை வளர வளர, பெண் நடிகைகளின் பாலியல் தொழிலும் வளர ஆரம்பித்தது. இக்காலக்கட்டத்தில், ஜப்பானில் ஆங்காங்கே இருந்த, பெரிய விபச்சார விடுதிகள், செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் கபுக்கி நாடகங்களைத் தேர்ந்தெடுத்து, அத்தகைய நாடகங்களை, தங்கள் விபச்சார விடுதிகளில் அரங்கேற்றி, தங்கள் பாலியல் தொழில் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள ஆரம்பித்தனர். கபுக்கி நாடகத்தில் நடித்த பெண்களின் இரட்டை அர்த்த வசனங்களால் கவரப்பட்ட பல ஜப்பானியப் பணக்காரர்கள், அவ்வகைப் பெண்களை, தங்களுக்கு வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். அப்படி, வைப்பாட்டிகளாக வைத்துக்கொள்ள முயன்ற, ஜப்பானிய ஆண்களிடையே ஏற்பட்ட போட்டி, பொறாமை போன்ற விளைவுகள், பெரும் கலகலப்புக்களிலும், சண்டைகளிலும் கொண்டுபோய் விட, அன்றைய ஜப்பானிய அரசாங்கம் விழித்துக்கொண்டது. இன்னொரு புறம், வகாசு என்ற, கபுக்கி நாடகத்தில் நடித்த சிறுவர்கள். 10 வயதில் இருந்து, 20 வயதுக்குள் இருந்த இந்த சிறுவர்கள் மீது ஆசை கொண்ட பல ஆண்கள் ஜப்பானில் பரவலாக இருந்தார்கள். ஜப்பானிய சமூகம், இத்தகைய சிறுவர் சிறுவர் ஆண்-ஆண் பாலியல் உறவுகளை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்ற போதும், புத்த கோவில்களில் வசித்து வந்த புத்த பிக்குகள், சத்திரியர்கள் என்று சொல்லக்கூடிய, ஜப்பான் உயர்குடி சாமுராய்கள் போன்றோர்களில் பலர், இந்த வகாசு சிறுவர் ஆண்-ஆண் பாலியல் உறவினை, பெரும்பணம் செலவழித்து பராமரித்து வந்தனர் என்று ஜப்பானிய வரலாறு கூறுகிறது. வகாசு சிறுவர்களும், கபுக்கி நாடகத்தில் நடித்த பெண்களும், பெரும் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாவதைக் கண்டுகொண்ட ஜப்பான் அரசாங்கம், இத்தகைய கேடுகெட்ட செயல்களைத் தடுக்க சட்டம் இயற்ற நினைத்தது. அதன் விளைவாய், கிபி 1629 இல், ஜப்பானியப் பெண்களும், சிறுவர் சிறுமியர்களும், கபுக்கி நாடகத்தில் நடிப்பதற்குத் தடை செய்யப்பட்டார்கள். அதாவது ஜப்பானிய கபுக்கி நாடகங்களில், பதின்ம வயதைக் கடந்த ஆண்கள் மட்டுமே நடிக்கலாம் என்ற கட்டுப்பாட்டை, ஜப்பானிய சோகன் அரசாங்கம் கொண்டு வந்தது. இந்த நாளில் இருந்து, கபுக்கி நாடக்கலையில் நடித்த, ககேமா என்ற ஆண் செக்ஸ் தொழிலாளர்கள், ஜப்பானில் பிரபலமானார்கள்.

 

ஜப்பானிய கபுக்கி நாடக நடிகைகளும், வகாசு சிறுவர் நடிகர்களும், கபுக்கியில் நடிப்பதை, ஜப்பானிய சோகன் அரசாங்கம் தடை செய்ததால், அவர்கள் நடித்த பெண்கள் மற்றும் சிறுவர் கதாபாத்திரங்களை, பெண்தன்மை கொண்ட ஆண் நடிகர்கள் எடுத்து, நடிக்க ஆரம்பிக்க, மறுபடியும் கபுக்கி நாடகக்கலை, இன்னொரு நிலைக்குச் சென்றது. பெண் தன்மையுடைய இத்தகைய ஆண் நடிகர்கள், ஒனகாட்டா என்று அழைக்கப்பட்டார்கள். ஆண்மை நிரம்பிய ஆண் நடிகர்கள், யாரோ என்று அழைக்கப்பட்டார்கள். ஜப்பானின் கலை வரலாற்றில், ஒனகாட்டா என்ற இந்த பெண்தன்மை நடிகர்கள், இன்றளவும் பெரும் புகழுடன் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மை.

 

ஜப்பானைப் பொறுத்தவரை, பாலியல் தொழில் என்பது எப்போதும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்து இருக்கிறது. ஆட்சிகள் மாறிய போதெல்லாம், பாலியல் தொழில் செய்வதற்கான விதிகள் மாறியபோதும், ஜப்பான் பாலியல் தொழில், ஒரு போதும், முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. இந்தப் பாலியல் தொழிலில், பெண்கள், ஆண்கள் என இருபாலாரும் ஈடுபடுத்தப்பட்டனர். அப்படி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட, ஆண் பாலியல் தொழிலாளர்களே, ககேமா என்று அழைக்கப்பட்டனர். பாலியல் தொழில் செய்வதற்கு ஏதுவாக, ஜப்பானில், பெரிய பெரிய, குளியல் விடுதிகள் மற்றும், தேநீர் அருந்தும் விடுதிகள் தொடங்கப்பட்டன. இத்தகைய தேநீர் விடுதிகளின் முதன்மைப் பணியாக, தேநீர் பரிமாறுவது போலத் தோன்றினாலும், உண்மையில் அதன் பினனணியில் நடப்பது பாலியல் தொழில்தான் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு பேசப்பட்ட விலையை விட, ஆண் பாலியல் தொழிலாளர்களுக்குப் பேசப்பட்ட விலை, கூடுதலாக இருந்தது என்ற உண்மைதான். அதுவும், அந்தப் பாலியல் தொழிலாளி, அழகிய பெண்மை ததும்பும் ஒரு ஆணாக இருந்தால், அவருக்குக் கொடுக்கப்படும் விலை, ஒரு பெருந்தொகையாக, எப்போதும் வழக்கத்தில் இருந்தது. சில, ஜப்பானியக் கோவில்களிலும் கூட, ககேமா ஆண், பெண் பாலியல் தொழிலாளிகள், தங்கவைக்கப்பட்டு, அங்கிருக்கும் கோவில் மேலதிகாரிகளுக்கு, செக்ஸ் விருந்தாக, பரிமாறப்பட்டனர். இத்தைகைய ககேமாக்கள் தங்கியிருந்த பெரும் விபச்சார விடுதிகள், ககேமா ஜெயா என்று அழைக்கப்பட்டன.

 

ககேமா ஜெயா என்ற இத்தகைய விடுதிகள், தேநீர் விடுதிகளாகவே வெளித்தோற்றத்தில் தெரியும் எனினும், இதன் உண்மையான தொழில், விபச்சாரமே. சிறு வயதிலேயே, பத்து வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ககேமா ஜெயா விடுதிக்குள் நுழையும் சிறுவர்களுக்கு, கபுக்கி நாடகக்கலையின் பல வடிவங்கள், அவரவர் திறமைக்கேற்பச் சொல்லிக் கொடுக்கப்படும். சிலருக்கு, கபுக்கி நாடகத்தில் வாசிக்கப்படும் சாமிசென் என்ற சீன யாழ் வாசிக்கக் கற்றுத் தரப்படும். சிலருக்குப் கபுக்கி பாடல்கள், பாடச் சொல்லிக் கொடுக்கப்படும். சிலருக்கு, கபுக்கி ஒப்பனை சொல்லிக் கொடுக்கப்படும். பலருக்கு கபுக்கி நடிப்புச் சொல்லிக் கொடுக்கப்படும். முக்கியமாய், பெண்மை ததும்பும் உடம்பும், பெண்களைப் போன்ற இனிய குரலும் உடைய வாலிபர்களுக்கு, ஒனகாட்டா என்ற நாயகி வேடங்களுக்குப் பயிற்சி கொடுக்கப்படும். இத்தகைய ஒனகாட்டா ஆண்கள், விடுதியில் உள்ள பெண்களுடனேயே தங்க வைக்கப்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஒனகாட்டாகள், பொதுவாய் நீல நிற கிமானோக்கள் என்ற ஜப்பானிய சேலை வடிவ உடைகளை அணிந்து வந்தனர். விடுதிக்கு வரும் ஆண்களைச் சுண்டி இழுக்கும், இவர்களது அழகே, ககேமா ஜெயா விடுதிகளுக்கு, பெரும் வருமானத்தை ஈட்டித் தந்தது.

 

ஜப்பானின் பல்வேறு மலைப்பகுதிகளிலும், மற்ற இடங்களிலும் இருந்த புத்தபிக்குகளில் சிலர், புத்தமதம் சம்பந்தமான விழாக்களில் கலந்துகொள்ள க்யோடோ போன்ற நகரங்களுக்கு வரும்போது, ஆண்-ஆண் ஓரினச்சேர்க்கைக்காய், ககேமா ஜெயா விடுதிகளில் தங்குவதை வழக்கமாகக் கொண்டு இருந்தனர். கூடவே, ஜப்பானின் உயர்குடிகளான சாமுராய் வீரர்களில் சிலரும், ஒனகாட்டா ஆண்களின் அழகில் மயங்கி, தங்கள் பெரும் பொருளை அவர்களுக்குச் செலவழித்து, ககேமா ஜெயா விடுதிகளில், நீண்ட நாட்கள் தங்குவதும் உண்டு. சில ஜப்பானிய அரசாங்க அதிகாரிகளும், ஆண்-ஆண் உடலுறவில் ஈடுபாடு கொண்டு, ககேமா ஜெயாக்களின் வாடிக்கையாளர்கள் ஆக இருந்து இருக்கிறார்கள். நடிக்கப்படும் கபுக்கி நாடகங்களில், ஒனகாட்டா பெண்மை நடிகர்களுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதுவும், பதின்ம வயது, பெண்மை நடிகர்களாக இருந்தால். அந்தப் பெண்மை கலந்த ஆணோடு படுத்து உறங்க, நிறையப் போட்டிகள், சச்சரவுகள், சில கபுக்கி ஆண் ரசிகர்களிடம் எழுந்தது. வசதி அதிகம் நிறைந்த ஆண்கள், அததகைய ஒனகாட்டா தங்கி இருக்கும் ககேமா ஜெயா விடுதிகளைத் தொடர்பு கொண்டு, ஒரு விலை பேசி, நிரந்தரமாக அந்த பெண்மை கலந்த ஒனகாட்டா ஆணை, தத்தம் வைப்பாட்டிகள் ஆக்கிக்கொண்டு, தங்கள் ஊருக்கே கூட்டிப்போனவர்களும் உண்டு. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ஜப்பான் அரசாங்கம், ஏதாவது செய்து ஒனகாட்டா கலாசாரத்தைத் தடை செய்ய நினைத்தது. அதன் விளைவாய் 1642-இல் ஒனகாட்டா தடைச்சட்டத்தை, ஜப்பான் அரசாங்கம், அமலுக்குக் கொண்டு வந்தது.

 

ஒனகாட்டா தடைச்சட்டம் அமலுக்கு வந்த பின்னர், கபுக்கி நாடகக்கலை வேறோர் வடிவத்திற்குச் சென்றது. இந்தத் தடைச்சட்டத்திற்கு முன்னால், கபுக்கி நாடகக்கலையின் கதைகள் அனைத்துமே, நாயகன்-நாயகி சார்ந்த கதைகள் ஆகவே வடிவமைக்கப்பட்டு இருந்தன. ஆனால், மேலே சொன்ன தடைச்சட்டம் அமலுக்கு வந்த பின்னர், நாயகன்-நாயகி கதைகளுக்குப் பதிலாக, நாயகன்-நாயகன் கதைகள் அரங்கேற்றப்பட்டன. இதுவரை மறைமுகமாக சொல்லப்பட்ட, ஆண்-ஆண் ஓரினச்சேர்க்கை கதை வடிவங்கள், இப்போது வெளிப்படையாக மேடைகளில் நடிக்க ஆரம்பிக்கப்பட்டது. இப்போதும், கபுக்கி நாடகக்கலையை ரசிக்கும், ஜப்பானியர் கூட்டம் குறையவே இல்லை. ஒனகாட்டா தடைச்சட்டத்தால், பயன் எதுவும் இல்லை என்று தெரிந்து கொண்ட ஜப்பானிய அரசாங்கம், 1644-இல் ஒனகாட்டா தடைச்சட்டத்தை நீக்கியது. அததோடு, 1652-இல் ஏற்கனவே அமலில் இருந்த வகாசு தடைச்சட்டத்தையும் நீக்கியது. அதாவது, பெண்மை கலந்த ஆண்கள், பெண்களாக, கபுக்கி நாடகங்களில் இனி நடிக்கலாம். அதே போல், வகாசு சிறுவர்களும் நடிக்கலாம். ஆனால், ஒரு புதிய விதி. இத்தகைய ஒனகாட்டாக்களும், வகாசுக்களும், தங்கள் தலையின் முன்பகுதி முடியை, சிரைத்துக் கொள்ளவேண்டும் என்பதே அந்த அரசாங்க விதி. இப்படி முன்பகுதியைச் சிரைத்துக் கொள்ளும் ஒனகாட்டாகளின் மற்றும் வகாசுக்களின் அழகு குறையும் என்றும், இதன் விளைவாய், ஜப்பான் ஆண்-ஆண் ஓரின ஆசையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதும், ஜப்பான் அரசாங்கத்தின் எண்ணமாக இருந்தது. கூடவே, பொதுவெளியில், ஒனகாட்டா மற்றும் வகாசுக்களை எளிதில் அடையாளப்படுத்த, இவ்வகை தலைச்சிரைப்பு அடையாளம் உதவியாக இருக்கும் என்பதும், ஜப்பான் அரசாங்கத்தின் எண்ணமாக இருந்தது.

 

ஆனால் நடந்ததோ வேறு. ஆரம்பத்தில், அரை முன் வழுக்கையுடன் தோன்றிய ஒனகாட்டாக்கள் மற்றும் வகாசுகள், கொஞ்ச காலம் கழித்து, முன்தலையை சிரைத்து, அதன்பின், அதன் மேல், வண்ண வண்ணக் கைக்குட்டைகள் போன்ற துணிகளைக் கட்டிக்கொண்டு, மேடையில் தோன்ற ஆரம்பித்தனர். அழகிய வண்ணத் துணிகளில், பெண்மை நிறைந்த ஆண்களைப் பார்த்த கபுக்கி நாடக ரசிகர்களுக்கு, இன்னும் உற்சாகம் கூட, கபுக்கி நாடகக்கலை வேறோர் வடிவம் பெற்றது. இன்னும் சிறிது காலம் கழித்து, முன்தலையை முற்றிலும் வழிக்காமல், முன்னே கொஞ்சம் முடி விட்டு, அதனைப் பின் கூந்தலோடு முடிச்சு போடும் ஒரு தந்திரத்தைக் கையாண்டனர ஒனகட்டாக்கள். இவ்வகைத் தலை அலங்காரம், ஜப்பானில் இன்றளவும், பிரபலம் ஆக இருக்கிறது. இன்றுவரை, ஒனகாட்டாக்கள், ஜப்பானில் பல இடங்களில் இருக்கிறார்கள். அவர்கள் வளர்த்த அந்த கபுக்கி நாடகக்கலையும், ஜப்பானில், இன்றளவும், அங்கங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது.

 

சில ககேமா ஜெயாக்கள் என்ற விபசாரத் தேநீர் விடுதிகள், கபுக்கி கலைகளில் தேர்ச்சி இல்லாத வாலிபர்களையும், தங்கள் ஆண் பாலியல் விபச்சாரத் தொழிலில் சேர்த்துக்கொண்டன. இத்தகைய ஆண் பாலியல் தொழிலாளர்கள் இரக்கோ என்று அழைக்கப்பட்டனர். இந்த இரக்கோ என்ற வாலிபர்கள், பெயர் அளவிற்கு, நாடக் மேடையில், சிறு சிறு வேடங்களில் தோன்றுவார்கள். ஆனால், அங்கே, அவர்களது உண்மையான பணி, கபுக்கி நாடகத்திற்கு வந்து இருக்கும், பார்வையாளர்களைக் கவர்வதுதான். இத்தகைய போலி கபுக்கி நாடகக்கலைஞர்களை அடையாளம் கண்டு கொண்ட, ஜப்பான் அரசு அதிகாரிகள், 1695 இல் ஒரு சட்டம் இயற்றி, “கபுக்கி நாடக மேடையில், தேர்ச்சியுற்றவர்கள் மட்டுமே ஏறி நடிக்க வேண்டும்” என, ஒரு சட்டம் இயற்றியது.

 

கபுக்கி நாடகக்கலை, இப்போது ஆஸ்திரேலியாவிலும் நடிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில், 1976-இல் உருவான, ஜா கபுக்கி என்ற நாடகக்குழு, கபுக்கி நாடகக்கலை வடிவத்தை, ஆஸ்திரேலியாவின் பல இடங்களுக்கு எடுத்துச் சென்று இருக்கிறது. கபுக்கி நாடகக்கலை குறித்து ஆராய்ந்து எழுதியவர்கள் பலர் இருந்தாலும், அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர், ஜப்பானில் பிறந்த அமெரிக்கரான, திரு டோனால்ட் ஹோவர்ட் ஷிவ்லே ஆவார். ஷிவ்லே, அமெரிக்காவின் கலிபோர்னியா பலகலைக்கழகத்தில் பேராசிரியர் ஆக இருந்தவர். இவர், ஜப்பானின் ஈடோ ஆட்சி காலம் குறித்தும், கபுக்கி நாடகக்கலை குறித்தும் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். கபுக்கி கலை பற்றி இவர் சொல்லும்போது,

 

“இந்த ஜப்பானிய வாலிபர்கள், தங்கள் தலையை அழகாக அலங்கரித்துக்கொண்டு, அழகிய கச்சைகளைச் சூடிக்கொண்டு, இனிய மென்மையான குரலில் பாடிக்கொண்டே, மெதுவாக மேடைக்குச் செல்லும் பாதையில், ஒய்யாரமாய் நடந்து போகையில், பார்வையாளர்கள் பலர், அவர்கள் பின்புறத்தைத் தட்டுவர். வாலிபர்களுக்கு நெருக்கமாக நிற்பவர்கள், அந்த வாலிபர்கள் காதருகே போய், எச்சில் ஜொள்ளு விடுவர். சிலர் “இதோ தேவதைகள்.. தேவலோகக் குதிரைகள்” என அந்த வாலிபர்களைப் பார்த்துச் சத்தமிடுவர். இருபுறமும் ஓரத்தில் நிற்பவர்கள், ‘ஆகா.. என்னவோர் புன்னகை.. இந்தப் புன்னகையில், மதுரம் பொங்கி வழிகிறது.. அருமை.. அருமை’ என உற்சாகத்தில் கூறுவர்“

 

என்று கபுக்கி கலை குறித்து, தனது கட்டுரை ஒன்றில் எழுதி இருக்கிறார். அத்தோடு, கபுக்கி நாடகங்களில், பிரபலமான ஒன்றான “அமிஜிமாவின் காதல் தற்கொலை” என்ற நாடகத்தை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருக்கிறார், அமெரிக்கப் பேராசிரியர் திரு டோனால்ட் ஹோவர்ட் ஷிவ்லே.

 

கபுக்கி ஒனகட்டாக்களின் அழகில் மயங்கிய எத்தனையோ புத்த பிக்குகள், தங்கள் தேவலாய நினைவுச் சின்னங்களை விற்று, ஒன்கட்டாக்களை, தங்கள் வைப்பாட்டிகளாக வைத்து இருக்கிறார்கள். எத்தனையோ, ஜப்பான் சாமுராய் உயர்குடிகள், தங்கள் பரம்பரை வீர வாட்களையும், தங்கள் பரம்பரைச் சொத்துக்களையும் விற்று, அந்தப் பணத்தை, ககேமாக்கள் என்ற கபுக்கி நாடக, ஆண் பாலியல் தொழில் வாலிபர்களின், காலடியில் கொட்டி இருக்கிறார்கள். இவையெல்லாம், ஜப்பானிய வரலாறுகள், நமக்குச் சொல்லும் உண்மைகள் ஆகும்.

 

ஆண்டாண்டுகாலமாய், தமிழர் கலையில், கரகாட்டம் ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அந்த கரகாட்டத்தின் ஒரு அங்கமாய் ஆடப்படும் குறவன் குறத்தி ஆட்டத்தில், பாலியல் உறவுகள் குறித்த பாடல்கள், பாலியல் உறவு சார்ந்த ஆட்டங்கள், குலுக்கல்கள், இன்றளவும் இடம் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. தமிழர் கலையாம் தெருக்கூத்து நாடகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். கூத்தில் நடிக்கும், வள்ளி, முருகன், நாரதர் என அனைவருமே, ஆங்காங்கே, பாலியல் சார்ந்த இரட்டை வசனங்கள் பேசத் தவறுவதில்லை. கரகாட்டம், தெருக்கூத்து போன்ற கலைகளை, இன்றைய படித்தவர்கள் விரும்பாமல் போகலாம். ஆனால், தமிழ் இனப் பாமர மக்களை, பெரிதும் கவர்வது, கரகாட்டம் போன்ற கலைகளே. இது போன்ற பாமரக்கலைதான், கபுக்கி என்ற நாடகக்கலை. கபுக்கி என்றால், ஜப்பானிய மொழியில், ‘சாய்வான, விதிகளை மீறிய’ என்று அர்த்தம். நோ என்ற விதிகள் நிரம்பிய ஜப்பானிய உயர்குடிகள் விரும்பிய கலையில் இருந்து, விலகி நின்று பாமர ஜப்பானிய மக்களை சந்தோசப்படுத்தியது, கபுக்கி கலை என்றால், அது மிகை ஆகாது.

 

ஒரு ஆண், இன்னொரு ஆணின் மீது கொள்ளும் ஆசை, ஆண்டாண்டு காலமாய் உலகெங்கும் இருந்து இருக்கிறது. அரபு நாடுகளிலும், பாரசீக நாடுகளிலும், அவர்தம் விருந்துகளில், ஒயின் பரிமாறும் வாலிபர்களின் மீது தீராக் காதல் கொண்ட பலரது ஓரினக் காதல் குறித்து, பல அரபு மற்றும் பாரசீகக் கவிதைகள் எழுதப்பட்டு இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அததகைய கவிதைகள், அரபு மற்றும் பாரசீக மேடைகளில், இசையாகப் பாடுவதும், வழக்கமாய் இருந்தது என்பதும், நமக்குத் தெரியும். தமிழர் கலையில் மட்டுமே, நம்மால், இவை போன்ற கவிதைகளை, எளிதில் அடையாளம் காண முடிவதில்லை. பழங்காலத் தமிழர் இலக்கியம், அந்தந்தக் காலத்தில், அவ்வப்போது தோன்றிய மூன்றாம் பாலின இலக்கியங்களை, வெறுத்து ஒதுக்கி, ஏதாவது ஒரு காரணம் சொல்லி, புறந்தள்ளி இருக்கலாம் என்பது எனது ஊகம்.

 

நேற்று நான் முகநூலில், ஒரு கரகாட்ட ஒலி, ஒளிக்காட்சி பார்த்தேன். அந்தக் காட்சியில், ஒரு பெண், இன்னொரு பெண்ணைக் கட்டிப்ப்பிடித்து பாலியல் உறவு அசைவுகளுடன் ஆடுகிறாள். இது வழக்கமான ஒன்றுதான் என்றாலும். அதன் பின்னர், ஒரு ஆண், இன்னொரு ஆணோடு, அதே மாதிரி பாலியல் உறவு அசைவுகளைக் கொடுக்கிறான். இது ஓர் புதிய ஆரம்பம். இத்தகைய மகிழ்வன் மற்றும் மகிழ்விகள் காட்சிகளையும், இப்போது, மக்கள் ரசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். மூன்றாம் பாலினத்தின் பாலியல் உணர்வுகள், தமிழர் கலையிலும், கபுக்கி நாடகக்கலைபோல், இனி வெளிப்படையாய்த் தெரிய ஆரம்பிக்கும் என்பது நிதர்சனம்.

 

அழகர்சாமி சக்திவேல்

Series Navigation2 கவிதைகள்அன்னம் நடராஜனும் ,இலக்கியா நடராஜனும் அவரின் நாகராஜன்கள் கதைகளும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *