ச. சிவபிரகாஷ்
(கதை களம் 1990 களில்)
நகரின் போக்குவரத்தால் சற்று, நெரிசல்மிகுந்த பிரதான பகுதியில் அமைந்துள்ள பல கட்டிடங்களுக்கிடேயே, தனியாருக்கு சொந்தமான ஒரு வணிக வளாக கட்டிடம், “கோல்டன் காம்ப்ளக்ஸ்”. இங்கு பாருடன் கூடிய உணவகம், புத்தக கடை, சலூன் கடை, வெளிநாட்டு பொருள்கள் விற்பனை செய்யும் கடை, கடிகார ஷோரும் முதல், சில அலுவலகங்களும் இயங்கி வருவதாலும் , தினம் இங்கு நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்வதாலும்,அனேக பிரபலம். இதே கட்டிடத்தில் இயங்கி வரும் ஒரு அலுவலகம் தான் “தமிழ் நாடு மார்க்கெட்டிங்”.
“கோல்டன் காம்ப்ளக்ஸ்”- வளாகத்தில் படியேறி வரும் போதே, , இந்த அலுவலக கண்ணாடி கதவுக்குள் தெரியும், அந்த அழகிய முகத்தை யாரும் பார்க்காமல் இருக்க முடியாது ., இந்த முகத்தை பார்த்து தினம் சைட் அடிக்கவே, வரும் சில இளைஞர்கள் கூட்டமும் உண்டு. அப்படி ஒரு அழகிய முகத்துக்கு சொந்தக்காரர் அந்த அலுவலகத்தின் டைப்பிஸ்ட் ‘மாலதி’ .
(‘மாலதி’ பி ஏ, டிகிரியும், டைப்பிங் பயிற்சியும், முடித்தவள். சொந்த ஊரை விட்டு, வெளியூர் வந்து , பெண்கள் விடுதியில் தங்கி வேலைக்கு செல்லும் இன்னும் திருமணம் ஆகாத இளம் பெண்)
பரபரப்பான ஒரு காலை அலுவல்கிடையே
மேனேஜர் அறையிலிருந்து அழைப்பு மணி ஒலிக்க, தன் இருக்கையை விட்டு எழுந்து, மேனேஜரிடம் சென்று
சார்… என அழைத்தான்., ஆபிஸ் பாய் ‘ சரவணன்’
சரவணன்… மாலதி மேடத்தை வர சொல். அவசரமாக லெட்டர் ஒன்னு டிக்டேட் செய்யனும். – என்றதும்,
சரி சார்… என திரும்பிய பின்னர்,
மாலதி மேடம்… சார் உங்களை கூப்பிடறார். ஏதோ லெட்டர் டைப் செய்யனுமாம். சொல்லிவிட்டு, அவனுடைய இருக்கையில் போய் அமர்ந்தான்.
…. ம்… சரியென, குறிப்பெழுதிக்கொள்ள, சிறு நோட்புக்கை எடுத்துக்கொண்டு எழுந்து மாலதி நகர.,
இதை கவனித்துக்கொண்டிருந்தனர், அடுத்தடுத்து இருக்கையில் அமர்ந்திருக்கும், உடன் பணியாற்றும் திருமணம் ஆன தோழிகளான விமலாவும், வேணியும்.
சாத்தியிருந்த மேனேஜர் அறை கதவை மெல்ல திறந்து.,
சார்… மே ஐ கம் இன் – என்றாள்
எஸ்…. கம்…. மாலதி, அழைத்த மாத்திரத்தில், தொலைபேசி மணி ஒலிக்க, எடுத்து பேசிக்கொண்டே, எதிரே நாற்காலியில் அமர சைகை காட்டினார். மேனேஜர் ‘ரவி’
சிறுது நேர தொலைபேசி உரையாடலுக்கு பின்னர்
மாலதி மேடம்… நம்ம நெல்லூர் கஷ்டமர்க்கிட்டே இருந்து, பில் பாக்கி ரொம்ப நாளா இருக்கு. விமலா மேடத்துக்கிட்ட, எவ்வளவு, என்னன்னு, விபரம் கேட்டு அவங்களுக்கு… ஒரு ரிமைண்டர் லெட்டர், ஒன்னு டைப் பண்ணி., அனுப்பிடுங்க. நான் டிக்டேட் பண்ணலாம்னு பார்த்தேன். வேண்டாம். பழைய பார்மட் ஏதாவது இருந்தால்., பெயரை மட்டும் மாத்தி அதையே பாலோ பண்ணிக்குங்க. அப்புறம்… பூனா டீலருக்கு நாம பேமண்ட் கொடுக்க வேண்டியிருக்கு, வேணி மேடத்திடம் எவ்வளவு அமவுண்ட்டுன்னு பார்த்து, செக் போட்டு கொண்டு வரசொல்லுங்க. – என்றதும்
ஒ. கே சார்…. என அறையை விட்டு மாலதி கிளம்ப
ஒரு நிமிஷம் மாலதி மேடம்., அப்புறம்… இன்னொரு முக்கியமான விஷயம்.
… ம்… சொல்லுங்க சார்.
ஒன்னுமில்லை… சாயங்காலம் டியூட்டி முடிஞ்சதும், எனக்காக! வெயிட் பண்ண முடியுமா?
ஏன்…? சார்.
கொஞ்சம் தனியா பேசணும்.
என்ன விஷயம், எதை பத்தி சார்? என இழுக்க
அதை பத்தி சாயங்காலமா சொல்றேன். ப்ளீஸ்…
(மேனேஜர் ரவி, இரண்டு டிகிரி முடித்தவர், சில மாதங்களுக்கு முன்பு தான் மேனேஜராக இங்கு பணியில் சேர்ந்தார். சொந்த ஊர் கும்பகோணம் இன்னும் திருமணம் ஆகாத அழகான வாலிபர்)
இதை கேட்டதும், தலையாட்டி விட்டு, தனது இருக்கைக்கு வந்து அமர்நதவள்.,ஏதோ யோசனையில் மூழ்கி அமைதியாக இருக்க
“விமலா” – மாலதியிடம்
என்ன மாலதி… என்னாச்சு?, மேனேஜர் ஏதாவது திட்டினாரா ? கேட்டதும்
ச்சே… ச்சே.. அதெல்லாம் ஒன்னுமில்லை.
அப்புறம் ஏன்? இப்படி… எதோ மந்திரிச்சு விட்டமாதிரி அமைதியாக உட்கார்ந்திருக்க – தொடர் கேள்விகளால், மேனேஜர் சொன்ன தகவல்களையும், விஷயத்தையும், இரண்டு பேரிடமும் தெரிவிக்கிறாள்.
ஒ… அதுதான் விஷயமா ? புரிஞ்சு போச்சு . என வேணி லந்து விட, புரியாத விமலாவும், மாலதியும்.
என்ன விஷயம்? என்ன சொல்ல வர? – கேட்க
கல்யாணம் ஆகாத பெண்ணை, கல்யாணம் ஆகாத ஒரு ஆண் தனியா பேசனும்- னு, சொன்னால் என்ன அர்த்தம்? பதில் தர
ஓ… அதுதான் விஷயமா ! இதை நான் நினைக்கவே இல்லையே? – என விமலாவும், வேணியுடன் சேர்ந்து மாலதியை கிண்டல் செய்ய.
“சற்று கோபத்துடன் மாலதி தொடர்கிறாள்”.
ஏய் கொஞ்சம் சும்மா இருங்கப்பா, அவர் எதை பத்தி, என்ன பேச போறார்-ன்னு, என்கிட்டேயே சொல்லலை, அது எனக்கும் தெரியாது. அதுக்குள்ள, உங்களுக்கு தெரிஞ்சிருச்சா? கல்யாணம் ஆகாத ஒரு பெண்ணும், ஆணும், பேசிக்கிட்டா அது காதல், கல்யாணம் தான் இருக்கணுமா? வேறு எதுவும் இருக்க கூடாதா?
ஆபிஸ் விஷயமாக இருந்து, ஏதாவது சொல்ல வேண்டிய விஷயமாக இருந்தால் அப்பவே சொல்ல வேண்டியது தானே ? அது எதுக்கு ஆபிஸ் முடிந்து, வயசு பொண்ணுக்கிட்ட தனியாக பேசணும்-னு, சொல்லணும். விமலா கேள்வியை தொடுக்க
“வேணி பதிலுக்கு”
நீ! வேற , நாம நினைக்கிறது மாதிரி, மேனேஜர் ரவி, நம்ம மாலதிக்கிட்ட விருப்பத்தை சொல்ல, அது பிடிக்காமல்… இவள் ஏதாவது கத்தி பேச, அது அசிங்கமாயிட போகுதுன்னு பயந்துட்டு தான், ஆபிஸ் நேரம் முடிந்ததும் தனியாக பேசலாம்ன்னு சொன்னாரா என்னவோ? – சொல்லிவிட்டு சிரித்தாள்.
விமலாவும் சிரிக்க, மாலதி கோபமாக முறைக்க.
கூல்…. கூல் என்கிறாள் வேணி.
“….. “
மதிய உணவு இடைவேளையில், மூவரும் ஒன்றாக உணவருந்தி கொண்டிருக்கையில், மேனேஜர் ரவி, , மாலதியை ஒர கண்ணால் பார்த்த படி இவர்களை கடந்து, எங்கோ வெளியே செல்வதை விமலா பார்த்து விடுகிறாள்.
மாலதி…. நான் சொல்றேன்னு தப்பா நெனனச்சுக்காதே. இப்போ கூட பார்… எங்கள் ரெண்டு பேரையும், விட்டுட்டு, அந்த மேனேஜர் உன்னை மட்டும் பார்த்துகிட்டே போறார். இதிலிருந்து என்ன தெரியுது?
வேணி குறுக்கிட்டு
ஏய் நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் ஆனவங்க., நம்மள பார்த்து என்ன ஆக போகுது? கேட்க
மாலதி…. நான் ச்சும்மா கேட்கறேன் பதில் சொல்லு, – விமலா வினவ
…. ம்… சொல்லுப்பா என்ன?
நாங்கள் சொல்றது மாதிரியே, மேனேஜர் உன்கிட்டே தனியா பேசி, தன் விருப்பத்தை சொல்லி, சம்மதம் கேட்டால் ஒத்துப்பீயா, மாட்டீயா?
மாட்டேன்…. சட்டென பதில் சொன்னாள்
ஏன்…?
அப்பா எங்களை விட்டு போனதுக்கப்புறம்,எனக்கு உடன் பிறப்புகள் யாரும் இல்லாம, உதவி செய்ய பெரிசா சொந்த பந்தமும் இல்லாமல் ,அப்பா இருக்கும் போது… வீட்டிற்கு முன்னால் ரெண்டு கடைகள் கட்டியிருந்தார். அதுல வரும் வாடகையை வெச்சு. தனியாக இருந்து, என்னை கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் படிக்க வெச்சு , ஆளாக்கி இருக்காங்க.
குடும்ப கஷ்டம், சம்பாதித்து தான் ஆகணும்னு, அப்படிங்கிறதுக்காக, என்னை வேலைக்கும் அனுப்பல. பொம்பள புள்ள படிச்சிருக்கா, படிக்க வெச்ச படிப்பும் வீணாக கூடாது. வாழ்க்கையை தைரியமாக போராடி ஜெயிக்கணும் – னு, நெனச்சு தான். நம்பிக்கையோடு தைரியமாக இருக்க, இங்க தனியாக அனுப்பி இருக்காங்க. அவங்களோட தைரியத்தையும், நம்பிக்கையையும், நான் கெடுக்க விரும்பலை.
அதுவும் மட்டும் இல்லாமல்… எனக்கு, காதல், கத்திரிக்காய் அப்படின்னு எந்த எண்ணமும் இதுவரை வந்ததே இல்லை. எங்கள் அம்மா பார்த்து வைக்கிற மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணிப்பேன். அது விஷயமாக தான் ஊருக்கு கிளம்ப, லீவு கேட்க இருப்பதாக கூட உங்க கிட்ட முன்னாடி சொன்னேன்.
நீங்க சொல்றீங்க…. மானேஜர் என்னை பார்த்திட்டு போறார்ன்னும், விருப்பத்தை சொல்லி சம்மதம் கேட்க போறார்ன்னும். ஆனால்… தினமும் எத்தனையோ பசங்களும், ஆண்களும், என்னைய பார்த்திட்டு ஜொள்ளு விட்டு தான் போறானுங்க, அது எனக்கும் தெரியும். என்ன செய்ய? ஏண்டா என்னை பார்க்கிறியேன்னு கேட்க தான் முடியுமா? அதுல பல பேர்… விரும்பறேன். சம்மதம் சொல்லுன்னு சொன்னால். நான் பல்லை இளிச்சிக்கிட்டு சரின்னு சொல்ல முடியுமா? அப்படி எத்தனை பேருக்கு சொல்ல முடியும்.
ஆண்கள் புத்தியே அவ்வளவு தான்னு, தொந்திரவு பண்ணாத வரையில் கண்டுக்காம போயிடனும். – என்றாள் மாலதி.
‘வேணி தொடர்கிறாள். ‘
விமலா…. மாலதி சொல்றதும் சரி தான். நாம… சின்ன பசங்கன்னு சொல்றோம், ஆனால் அவனுங்களும், ஆண்கள் தானே? , சில பேருக்கு சபல புத்தி தானாக வந்திடுது பாரு. நான் காலைல வேலைக்கு வரும்போது. படிக்கட்டு ஏறி, மேலே வரேன். எதிர்த்தாப்புல ரெண்டு வயசுபசங்க இறங்கி வரானுங்க, என்னை பார்த்திட்டு ஒருத்தன் “சூப்பர் ஆண்டி வராங்கன்னு” இன்னொருத்தன் கிட்ட என் காதுபடவே சொல்றான். பார்த்து முறைச்சதும், விறுவிறுன்னு இறங்கிட்டானுங்க. – என்னும் போதே.
‘விமலா குறுக்கிட்டு’
என்னப்பா…. பொத்தான் பொதுவாக, எல்லா ஆண்களையும், சேர்த்து சொல்றீங்க. எல்லா ஆண்களும் அப்படி இல்லை, சில பேர் செய்யுற தப்புக்காக எல்லோரையும் குற்றவாளி ஆக்க கூடாது.
அப்படின்னு பார்த்தால்… நம்ம அண்ணன், தம்பிங்க , எல்லோரையும் சேர்த்து சொல்ல வேண்டியதாக இருக்குமே. நல்ல வேளையாக என் அண்ணனும், தம்பியும், அப்படி இல்லைங்கிறது எனக்கு நிச்சயமாக தெரியும்.
என சொல்லிக்கொண்டு, சாப்பிட்டு முடித்து கை அலம்ப எழ, மற்ற இருவரும், இவளுடன் தொடர்கிறார்கள்.
“….. “
சற்று ஓய்விலும் தொடர்கிறது , இவர்களது விவாதங்கள்.
‘மாலதி ஆரம்பிக்கிறாள்’.
வெளியில யார், யாரோ பார்க்கிறாங்க ., ஆனால் யாரும் இதுவரைக்கும்… என்னிடம் பேச முற்பட்டதும் இல்லை, தொந்திரவும் செஞ்சதில்லை. தொடர்ச்சியாக ஒரே ஆள் யாரும் என்னை பார்க்கறதில்லை ., நீங்கள் சொல்றது மாதிரி, மேனேஜர் என்னிடம் சம்மதம் கேட்டு, நான் இல்லைன்னு தான் சொல்ல போறேன். அது வேறு விஷயம். அப்படி இல்லேன்னதும், ஏதாவது தொந்திரவு செய்தால் என்ன செய்வது.
தினம், தினம் இவரை பார்க்க வேண்டி இருக்குமே? மகளிர் மட்டும் படத்துல வருவது மாதிரி ரேவதி, ஊர்வசி, ரோகினியாக இருந்து மேனேஜர்க்கிட்ட நாம மூணு பேராக போராடலாம். ஆனால் நான் மட்டும் தனியாக மாட்டிக்கிட்டேன். என்ன செய்ய சொல்லி சிரிக்க.
அப்படி தொந்திரவு வந்தால் என்ன செய்வே ? வேணி குறும்பாக கேட்க,
என்ன செய்ய முடியும் ? வேலையை விடறதை விட வேறு வழியேயில்லை, மாலதி தர.
பாவம் அந்த மனுஷன்., எதுக்காக வெயிட் பண்ண சொன்னாரோ! என்ன சொல்ல போறாரோ? அதுக்குள்ள தேவையில்லாத கற்பனை எல்லாம் பண்ணிட்டு, டென்ஷன் ஆகிட்டு, விடுங்கப்பா. நல்ல மனுஷனாக தான் தெரியுறார். நாம நினைக்கிறது மாதிரி எதுவும் இருக்காது. எதுவாக இருந்தாலும்,அது காலைல எங்ககிட்டே நீயே ! சொல்ல தான் போற. அதுக்குள்ள என்ன அவசரம்.? வாங்க வேலையை பார்க்கலாம் டைம் ஆகுது . ஆமா…. ஊருக்கு போகனும், லீவு கேட்கணும்னு சொன்னீயே என்னாச்சு.? – என்றவாறே விமலா தன்னுடைய இருக்கையில் அமர.
லீவு கேட்கல, சாயங்காலம் தான் கேட்கனும் பதிலளித்தபடி மாலதியும் அவளுடைய இருக்கையில் அமர
அவரவர் வேலையை தொடர்கின்றனர்.
“……. “
‘அன்று மாலை ‘
பணி முடிந்து, வீட்டிற்கு கிளம்ப தயாரானார்கள், விமலாவும், வேணியும்
சரி… மாலதி நாங்க கிளம்புறோம், நீ மேனேஜர் கிட்ட பதட்டபடாம, கோபப்படாம, பேசிட்டு கிளம்பு . காலையில் பார்ப்போம். கையசைத்து கிளம்புகிறார்கள். மாலதி எழுந்து, மெல்ல மேனேஜர் அறையை தட்டி
உள்ளே வரலாமா? என்கிறாள்
வாங்க… வாங்க.. மாலதி மேடம். வந்துட்டீங்களா? சொன்னது மாதிரி வந்துட்டீங்களா? குட் தேங்க்ஸ் என்றார்
சார்… நீங்க இந்த ஆபிஸ்ஸூக்கு மேனேஜர். நான் ஒரு சாதாரண டைப்பிஸ்ட். நீங்க சொல்றதை கேட்டு தானே ஆகணும்.
உங்கள் கடமைக்கும், மரியாதைக்கும் மிக்க நன்றி. சரி… கிளம்பலாமா?
ஏதோ பேசணும்னு…! என இழுக்க,
அதுக்கு தான் கிளம்பலாமான்னு கேட்டேன்.
எங்கே?
வெளியே எங்காவது.
ஏன்… இங்கேயே பேசலாமே!
நோ… நோ… இது பெர்சனால விஷயம்., அதனால இங்கு பேசினால் அது நல்லா இருக்காது. ஆபிஸ் ன்னு ஒரு மரியாதை இருக்கணும் இல்ல. அதுக்கு தான். – என்றதும்.
பேசுவதற்கு வாய்ப்பில்லாமல், சம்மதிக்க, இருவரும் வெளியே வருகிறார்கள், ஆபிஸ் பாய் சரவணன் அலுவலக கதவை அடைத்துவிட்டு, அவனும் கிளம்புகிறான்.
“…..” அலுவலக வாசலில்
எங்கே போகலாம் மாலதி?
இங்கேயே பேசலாமே!
இந்த வாசலிலா..?
ஆமாம்..
ரவி. (புன் முறுவலுடன்) , வேண்டாம், வேண்டாம், நாம பக்கத்துல இருக்குற துர்கா பவன் ஹோட்டல் போயிட்டு, லைட்டா டிபன் சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்.
ஹோட்டலா.? (அலறுகிறாள்)
ஆமா … ஏன்?
நான் கல்யாணம் ஆகாத வயசு பொண்ணு, உங்களுக்கும் ஆகலை, யாராவது நம்மள பார்த்தால், தப்பா பேசுவாங்க.
பேசறவங்க, ஆயிரம் பேசட்டும்., ஒளிவு மறைவாகவா, நின்னு பேச போறோம். அதுவுமில்லாமல் நாம ரெண்டு பேரும் ஒரே ஆபிஸ் – ல, வேலை செய்யுறவங்க. வா போகலாம், – என வலுக்கட்டாயப்படுத்தி தனது ஸ்கூட்டரில் அழைத்து செல்கிறான்.
“….. “
என்ன சாப்பிடலாம் மாலதி ?
எனக்கு எதுவும் வேண்டாம் சார் – மறுக்கவே
சாரா…? அதெல்லாம் ஆபிஸ்-ல, மட்டும் தான். நானும் உன்னை ஆபிஸ்ல மேடம்னு தான் கூப்பிடறேன். ஆனா…. இங்கே! பேர் சொல்லி தானே கூப்பிட்டேன். வெளியே வந்திட்டால் நாமெல்லாம் நண்பர்கள். ஸோ…. ரவி ன்னே கூப்பிடு. ஏன் எதுவும் வேண்டாங்கிற,? காபியை யாவது சாப்பிடுவோம்.
இரண்டு காபியை மட்டும் ஆர்டர் செய்து விட்டு பேச்சை துவக்குகிறார்.
மாலதி… நான் உன் கிட்ட தனியாக பேசணும்னு சொன்ன போதே, எதுக்குன்னு ஒரளவுக்கு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.நான் சொல்ல போற விஷயத்தை கேட்டு, என் மேல் கோபப்படவோ, ஆத்திரப்படவோ கூடாது. எதுவானாலும் என் கிட்ட ஒபனாக சொல்லிடு. நான் ஏத்துக்கிறேன்.
சுத்தி வளைக்காமல் நேரடியாக விஷயத்தை சொல்லிடுறேன். நான் உன்னை மனப்பூர்வமாக விரும்புறேன். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். சம்மதமா ?
இந்த விஷயத்துக்காக தான் மேனேஜர் தனியாக பேச அழைத்திருப்பார் என ஒரளவு யூகித்து இருந்தாலும், சொன்னதை கேட்டதும், சற்று அதிர்ச்சியாகி தான் இருந்தது இவளுக்கு.
இல்லை ரவி, வேண்டாம், இதுக்கு மேல என்கிட்ட பதில் இல்லை.
ஏன் மாலதி, நான் அழகா இல்லையா ? நான் நல்லா படிச்சிருக்கேன், கைநிறைய சம்பளம் வாங்குறேன். உன்னை நல்லா பார்த்துப்பேன். இதுக்கு மேலே என்ன வேண்டும் ?
அதெல்லாம் சரி, எங்க அம்மா பார்த்து முடிவு பண்ற மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணிப்பேன். என்னை கஷ்டப்பட்டு வளர்த்து, படிக்க வெச்சிருக்காங்க. , இந்த மாதிரி தப்பெல்லாம் செய்ய மாட்டேன்னு நம்பிக்கையில தான் என்னை தனியாக இங்கு வேலைக்கு அனுப்பி இருக்காங்க. அவங்களோட நம்பிக்கையை நான் கெடுக்க விரும்பலை. – என்றவளிடம்
உங்கள் அம்மா நம்பிக்கையை நீ ! கெடுக்கவே வேண்டாம். அவசரப்பட்டு எனக்கு எந்த பதிலையும், முடிவையும் சொல்ல வேண்டாம். நேராக உங்கள் அம்மாக்கிட்ட போய் விஷயத்தை சொல்லு .
நானும் எங்கள் குடும்பத்தோடு வந்து முறைபடியாக பெண் கேட்கிறோம். சம்மதம் னா ஓ. கே. இல்லாவிட்டால் நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் விட்டு விடுகிறேன். என்ன சொல்லுறே ?
அதுக்கும் வாய்ப்பில்லை ரவி.
ஏன்…? – கேட்டதும்
தன்னுடைய ஹேண்ட் பேக்கிலிருந்து, அவள் அம்மா எழுதியதாக பதினைந்து தினங்களுக்கு முன்னர் தேதியிட்டு வந்திருந்த ஒரு கடிதத்தை நீட்டுகிறாள். “அக்கடிதத்தில் “
அன்புள்ள மாலதிக்கு, அம்மா எழுதி க்கொள்வது. நலமாக இருக்கிறாயா? நீயும், நானும் தனி, தனியாக இருந்து கஷ்ட படுகிறோம். ஒரு பெண் தனிமையில் இருப்பது எவ்வளவு கஷ்டம் என தெரிகிறது. நீயும் இல்லாமல், ஒத்தாசைக்கு கூட ஆள் இல்லாமல், சிரமமாக உள்ளது. மேலும் ! எனக்கும் வயதாகி கொண்டே போகிறது. நீயும் இங்கேயே வந்து விட்டால் சந்தோஷம் தான் என நினைத்த வேளையில்., ஒருவர் விஷயத்தை சொல்லி என்னிடம் கேட்டார். நானும் சம்மதித்து விட்டேன். உன்னை பற்றி சொல்லியுள்ளேன். உன்னுடைய சம்மதம் கிடைத்தால் மகிழ்ச்சி ஆவேன் உன்னை பார்க்க அவரும் விரும்புகிறார். எப்போது வருவாய். மற்றவை நேரில் – என இருந்தது.
கடிதத்தை படித்து முடித்த ரவி.
ஓ. கே! இருந்தாலும் என்னை பற்றி சொல்லி பாரு. கிடைக்கலையா. டேக் இட் ஈசி பாலிசியாக போக வேண்டியது தான். இதுல பாரு… எங்கள் வீட்லேயும், என்னை கல்யாணம் பண்ணிக்க, வற்புறுத்திக்கிட்டே இருந்தாங்க. நான் இப்ப வேணாம், வேணாம்னு சொல்லிட்டு இருப்பேன்.
அப்படீன்னா …. நீயாவது உனக்கு புடிச்ச மாதிரி ஒரு பெண்ணை கூட்டிட்டு வா, நாங்கள் கல்யாணம் செய்து வைக்கிறோம்ன்னாங்க. இவ்வளவு பெரிய இந்த சிட்டியில் நான் எந்த பெண்ணை தேடுவேன்.னு நினைக்கும் போது. தெய்வாதிசயமா உன்னை பார்த்தேன். உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு தெரிஞ்சதும் சந்தோஷமாக இருந்தது ., கூட்டிட்டு வீட்ல நிக்க வைக்கலாம்னு பார்த்தேன். அது இப்போ முடியல.
இருந்தாலும் உன்னோட கடைசி பதிலுக்காகவும், காத்திட்டிருப்பேன். நீ ! ஊருக்கு போய் அம்மாவிடம் பேசி பார். வேண்டுமானால்…. உன்னோடு ஊருக்கு வந்து அம்மாவிடம் பேசட்டுமா? – என்றதும்
வேண்டாம்….. என மறுக்க
சரி, ஊருக்கு எப்போ கிளம்ப போறே?
இதை பத்தி சொல்லி, காலைல தான் உங்ககிட்ட லீவு கேட்கலாம்னு நினைச்சிட்டிருக்கும்போது, நீங்கள் தனியாக பேசணும்னு சொன்னதும். லீவு கேட்கவே மறந்திட்டேன். பத்து நாட்கள் லீவு வேண்டும்.
ஒகே! ஊருக்கு போயிட்டு வந்து நல்ல விஷயமாக சொல்லு, எப்போ புறப்படுவதாக உத்தேசம்.?
நாளைக்கு காலைல ஆபிஸ் வந்து, தோழிகளிடம் சொல்லிவிட்டு, இரவு பிரயாணம். சரி , இப்போ… ரொம்ப நேரமாகுது கிளம்பலாமா?
.. ம்.. புறப்படலாம், ரூம்ல நான் கொண்டு விடட்டுமா?
நோ தேங்க்ஸ், நானே போயிடுவேன்.
“……”
மறுநாள் காலையில்.
சொன்னது போல் அலுவலகம் வந்து, தன் தோழிகளான, விமலாவிடமும், வேணியிடமும். முதல் நாள் மாலை நடந்த விஷயங்களை முழுவதும் சொல்லி விட்டு, அன்று இரவு பயணக்கிறாள் தன் சொந்த ஊருக்கு.
“…… “
தன் வயது ஒத்துடுடைய பெண்களான விமலாவும், வேணியும், கல்யாணம் ஆகி குழந்தை குட்டிகளோடு இருக்கிறார்கள். நமக்கு இன்னும் விடிவு காலம் பிறக்காமல் இருக்கிறது . இந்த பயணத்திலாவது விடிவு காலம் பிறக்குமா? என ஆயிரம் கேள்விகளோடும், சிந்தனையோடும், ஏக்கத்துடன் எதிர்ப்பார்த்து தொடர்கிறாள் . அப்படியே கண் அயர்கிறாள், பஸ் இருக்கையில் .
“….. “ காலை
ஊர் வந்ததும், இறங்கி, ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர, சாத்தியிருந்த கதவை தட்டுகிறாள். யாரோ இவர் யாரோ? என்பது போல் அம்மா வயதுக்கும் கொஞ்சம் கூடுதலான வயதுடைய ஒரு ஆண் கதவை திறந்து,
யாரு…?
நீங்க ….?
நான் இருக்கட்டும்…. உனக்கு யாரும்மா வேணும் ?
இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இது நம்ம வீடு தானே, மாறி வரவேயில்லை, நம்ம வீட்ல வந்து நம்மையே, யாருன்னு கேட்கிறார். யாராக இருக்கும் என்னும் பெருத்த சிந்தனையோடு, அம்மாவை அழைக்கிறாள்.
ஒ…. மாலதியா.. வாம்மா, வாம்மா, என முதியவர் தன்னை பெயர் சொல்லி அழைத்து கோவிச்சுக்காதம்மா., உன்னை பார்த்ததில்லை பாரு, அதான். என சொல்ல, எதுவும் யூகிக்க முடியுமால், வீட்டினுள் நுழைந்து, மன சுமையோடு, கொண்டு வந்த சுமைகளையும் இறக்கி, நாற்காலியில் அமர
அம்மா குளிக்கிறாங்க, நீ ! உட்காருமா, இதோ வந்திடறேன், என இந்த பெரியவரும் சட்டையை மாட்டிக் கொண்டு, வெளியே எங்கோ, கிளம்பினார். சிறிது நேரத்தில் குளியலறையில் இருந்து வெளியே வந்து.
மாலா…. வாடி, என்ன திடுதிப்பென்று சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கே? சொல்லி இருந்தால், நான் பஸ் ஸ்டாண்ட் வந்து, உன்னை கூட்டிட்டு வந்திருப்பேன். சரி எப்படி இருக்கே? என தொடர்ந்த பரஸ்பர விசாரிப்புக்கு பின்னர், அம்மாவிடம் இந்த நபரை பற்றி விசாரிக்கிறாள்.
ஓ…. அவரா ! , சொல்றேன், சொல்றேன். நீ இப்போ தான் வந்து இருக்கே, நைட் சரியா தூக்கம் இல்லாமல் இருக்கும், அதனால கொஞ்ச நேரம் தூங்கி, ரெஸ்ட் எடுத்திட்டு வா, சாவகாசமாக சொல்றேன். – என்றதும்,
சரியென வந்த களைப்பில், ஒரு பாயை விரித்து, படுத்துறங்க,
“…. “
அம்மா எழுப்புகிறாள்
மாலதி.. எழுந்திரு, நேரம் ரொம்ப நேரமாச்சு பார். சாப்பிட வேண்டாமா ? தட்டி எழுப்ப, எழுந்தாள்
“……”
குளித்து விட்டு வந்ததும், அம்மா தயார் செய்து பரிமாறிய இட்லியை உண்டு முடித்து, கைகழுவி விட்டு வெளியே எட்டிப் பார்க்க, அந்த பெரியவர் வெளியே அமர்ந்து யாரிடமோ, பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. இதை கண்ணுற்றவள், ஞாபகம் வரவே, அம்மாவிடம் மீண்டும் விசாரிக்கிறாள்.
“அதற்கு “
நான் தான் விவரமாக லெட்டர் போட்டிருந்தேனே. கிடைக்கலையா?
லெட்டர் கிடைச்சது , ஆனால்… என்ன விபரம், நீ ! சொல்றது ஒன்னும் புரியலையே.
தெரிந்தவர் ஒருத்தர் வந்து, நம்ம வீட்ல, எனக்கும் துணையாக இருக்கார். என் சம்மததோடு இருக்கார். ன்னு, விபரமாக லெட்டர் போட்டதை படிக்கலையா?
உனக்கு… துணையா ! சரி… யார் இவரு? இந்த வீட்ல, உனக்கு துணையாக இருக்கிறது மாதிரி, எனக்கு தெரிந்து ! நமக்கு நெருங்கிய சொந்தங்கள் யாரும் கிடையாது. அப்புறம் எப்படி?
அதுவா…. இவர் பேர் கதிரேசன், சின்ன வயசுல இருந்தே எனக்கு பழக்கம், எங்க வீடும், அவங்க வீடும், பக்கத்து, பக்கத்துல தான். இருந்துச்சு. இன்னும் கேட்டால் இவரு எனக்கு தூரத்து சொந்தம். இவங்க அம்மாவுக்கு என்னை மருமகளாக்கிக்கனும்-னு , ஆசை .
எங்க அம்மாவும், அதான்.. உங்க பாட்டிக்கும், அந்த ஆசை இருந்துச்சு., ஆனால்… எங்கள் அப்பா, (உனது தாத்தா) பிடிவாதமாக இவரை வேண்டாம்னு ட்டு, உங்க அப்பாவை கல்யாணம் வெச்சுட்டார். உன் அப்பாவும், நீ ! பத்து வயசு இருக்கும் போது, போய் சேர்ந்திட்டார்., அப்புறம் உன்னை கஷ்டபட்டு, படிக்க வெச்சு, ஆளாக்கின விஷயமெல்லாம் உனக்கும் ஞாபகம் இருக்கும்.
இவரும் கடைசி வரைக்கும், கல்யாணமே பண்ணிக்காம, நண்பரோடு சேர்ந்து, டிரைவர் வேலைக்காக வெளிநாடு போயிட்டு, இப்போ வயசாசுன்னும், முடியலைன்னு, திரும்ப ஊருக்கு வந்து, விஷயமெல்லாம் கேள்விப்பட்டு,விசாரித்து என்னைய கண்டு பிடித்து வந்து கேட்டார். நானும் சரின்னுட்டேன். இப்போ.. எனக்கு, துணையா, அவரும், அவருக்கு துணையாக நானும் இருக்கேன். – என சொன்னதை கேட்டு.
அறுப்பட்ட பல்லியின் வாலாய் துடித்து, ஆத்திரமும், அழுகையுமாக
சபாஷ்… ரொம்ப நல்லாயிருக்கு, இதை சொல்றதுக்கு உனக்கு வெட்கமா இல்லை? என்ன பெரிய துணை? , தனியாக இருக்கிறதுக்கு, உனக்கு கஷ்டமாக இருந்துச்சுன்னா, நான் வேலைக்கு தூரமாக போகாமல், இங்கேயே பக்கத்தில வேலையை தேடி இருந்திருப்பேன். இல்லைன்னா வேலைக்கு போகாமல் உனக்கு துணையா இங்கேயே இருந்திருப்பேன்.
அப்பவும்.. என்னோடு வந்திடு, நாம அங்க சின்னதாக வீடு எதையாவது, பார்த்து இருந்துக்கலாம் என்றேன். நீ ! கேட்காமல் … வீட்டை பார்த்துக்கணும், இடத்தை பார்த்துக்கணும். நான் தைரியமாக இங்கேயே இருந்துக்குறேன்னு சொன்னே. அது படியே! என்னை பத்தி, என் வாழ்க்கையை பத்தி எதுவும் யோசிக்காம, அதே தைரியத்துல, உன் வாழ்க்கைக்கு துணையை தேடிக்கிட்டே அப்படி தானே. வயசு பெண்ணை வீட்ல வச்சுக்கிட்டு,
இந்த மாதிரி…. இந்த வயசுல தனக்கு துணைக்கு ஆள் இல்லைன்னு சொல்றீயே நீ யெல்லாம்… பொம்பள தானா,? நல்ல பொம்பளைங்க இந்த மாதிரி செய்வாங்களா ? செய்யுறதையெல்லாம் செய்திட்டு சால்ஜாப்பா பேசுறே.
உன்னை பத்தி என்னென்னமோ நெனச்சேன், பெருமையாகவும் நிறைய பேர் க்கிட்டே சொல்லியிருக்கேன். ஆனால்… நீ இந்த மாதிரி இருப்பேன்னு கொஞ்சம் கூட நெனச்சுப்பார்க்கல.
உன்னை பத்தி ஒருத்தர்க்கிட்டே சொல்லியிருக்கேன். உன்னை பார்க்க ஆசைப்படுகிறார்னும், எனக்கும் தெரிந்தவர் தான் சம்மதம் சொல்லுன்னு நீ எழுதியிருந்ததை நான். எனக்கு மாப்பிள்ளை பார்த்து, சம்மதம் கேட்குறீயோன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டேன். என் ஆசையெல்லாம் தவிடு பொடியாக்கிட்டே,.
இனி ஒரு நிமிஷம் கூட இங்கு இருக்க எனக்கு பிடிக்கலை. உனக்கும், எனக்கும் உண்டான உறவு அறுந்து போச்சு. நான் கிளம்பறேன் உடமைகளை எடுக்க
மாலதி…. நான் சொல்றதை கொஞ்சம் கேளுமா, நல்ல மாப்பிள்ளையாக பார்த்து நான் உனக்கு கட்டி வைக்கிறேன் மா. இரு போகாதே. உன்னை விட்டால் வேறு யாரும்மா இருக்கா.?
அது தான் புது உறவை தேடிக்கிட்ட இல்ல, அப்புறம் நான் எதுக்கு?
நடந்தது நடந்து போச்சு, என்னை மன்னிச்சிடுமா!
இல்லவே இல்லை, இவ்வளவு நடந்ததுக்கப்புறம், நான் இங்கிருப்பது எனக்கு தான் அசிங்கம். என்னையும் உன்னை மாதிரி நெனச்சுட்டாங்கனா? எனக்குன்னு ஒரு வாழ்க்கைக்கிடைக்கிறது ரொம்பகஷ்டமாக போகும். என் வாழ்க்கையை நானே தேடிக்கிறேன். போறேன்.
போறதுக்கு முன்னாடி ஒரு விஷயம்., என்னைய பெத்து, வளர்த்து, இவ்வளவு தூரம் ஆளாக்கினதுக்கு ரொம்ப நன்றி. அந்த நன்றி கடனாக, எப்போதும் போல நான் வாங்குற சம்பளத்தில், எனக்கு தேவையானது போக, அனுப்பி வைக்கிறேன். எனக்கு ஒரு கல்யாணமன்னு ஒன்னு நடந்தால், நீ! தெரிஞ்சுக்க, பத்திரிக்கை அனுப்பறேன். பார்த்திட்டு……..!, வந்திடாதே.
என்றபடியே வீட்டை விட்டு நகர்கிறாள். இனி தனக்கு விடியல் வெகுதொலைவில் இருக்காது என்னும் நம்பிக்கையில்.
***** முற்றும் *****
- அகமும் புறமும் கவிதையும்
- குக்குறுங்கவிதைக்கதைகள் / சொல்லடி சிவசக்தி – 21 – 28
- நாரணோ ஜெயராமனின் கவிதைகளும், நாரணோ ஜெயராமனின் கதைகளும்….
- ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ
- பிரபஞ்ச மூலம் யாது ?
- குழந்தைகளை கொண்டாடுவோம்
- ரொறன்ரோவில் விவசாய, மின் அலங்காரக் கண்காட்சிகள்
- யாருக்கு மாப்பிள்ளை யாரோ…
- கோயில்களில் கைபேசி