நோயல் நடேசன்
கவிஞர் இந்திரனது ‘தமிழ் அழகியல்’ ‘புத்தகத்தைப் படிக்கும் வரை நான் தமிழில் அழகியலை முழுமையான ஒரு பகுதியாகச் சிந்திக்கவில்லை . ஆனால் , உலகத்தின் பல வசதியான நட்சத்திர விடுதிகளில் தங்கியிருந்தாலும் துபாயில் உள்ள நட்சத்திர விடுதிகள்தான் என்னைக் கவர்ந்தன.
அதற்கான காரணத்தை யோசித்தேன். அரேபியா இஸ்லாமியர்களிடம் எப்பொழுதும் இன்ரீரியரர் டிசையின் ( interior design) நன்றாக இருந்தது.
உருவங்கள் அற்று அவர்கள் சிந்திப்பதாலோ? தெரியவில்லை.
அதேபோல் லண்டனில் உள்ள கட்டிடங்களுக்கும் பாரிசில் உள்ள கட்டிடங்களுக்கும் வெளித்தோற்றத்தில் தென்படும் வித்தியாசம் சாமானியனுக்கும் புரியும் . ஒரு குளிர் காலத்தில் ஜேர்மனியில் நின்றபோது, பெரும்பாலான இளம் பெண்கள் ஓடுவதற்கான காலணிகளை அணிந்திருந்தார்கள். ஆனால், பாரிசில் எனது மனைவி கடையொன்றின் உள்ளே சென்றபோது நான் நடைபாதையில் நின்று அவதானித்தேன். 80 வயதான ஒரு கறுப்பு நிறப் பெண், அந்த வருடத்தின் மோஸ்தரான குதிக்காலுள்ள காலணியை அணிந்தவாறு சிரமப்பட்டு நடந்துவந்தார்.
இதேபோன்று இலங்கையிலும் கிராமத்திலுள்ள சிங்களப் பெண்கள் ஏழ்மை நிலையிலும் தங்கள் உடைகளில் கவனமெடுத்து அலங்கரிப்பதைக் கண்டிருக்கிறேன்.
அழகியல் என்றால் என்ன?
” Concerned with emotion and sensation as opposed to intellectuality.”
பாவனைக்கு அப்பால் எமது உணர்வுகளைக் கவர்பவையே. சாப்பிடும் உணவில், அது எங்கள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் தன்மை, அதனது மணம் , அதைத் தொடும்போது நாக்கில் பல்லில் ஏற்படும் உணர்வு இவையெல்லாம் ஒருவிதத்தில் அழகியலே.
தாஜ்மகால் மற்றும் சிட்னி ஓப்ரா கவுசில் நாம் பார்ப்பதும் பாவனைக்கு அப்பால் அங்கு தெரியும் அழகியலே.
இப்படியான பொதுவான அழகியல் சிந்தனை மட்டும் கொண்ட எனக்கு , எழுத்தாளர் இந்திரனின் தமிழ் அழகியல் புதிதான சிந்தனையைக் கொடுத்தது. இங்கு இதுவரை பெயரில் மட்டும் கேள்விப்பட்டிருந்த பல ஓவியர்கள், சிற்பிகளை மட்டுமன்றி, சிற்பங்கள் ஓவியங்களைப்பற்றியும் இந்த புத்தகத்தில் இந்திரன் எழுதி இருக்கிறார் . ஆனாலும் படித்தபின்பு ஏன் அந்த புத்தகத்திற்கு அவர் தமிழர் அழகியல் எனப்பெயரிடவில்லை என்ற கேள்வியும் எழுந்தது.
இந்திரன் விடைகளுக்கும் பதிலாகப் பல வினாக்களை வைக்கிறார் . அழகியல் மேற்குலகத்தில் ஒரு தத்துவமாகவும் கலை ஓவியம் இலக்கியத்தோடு இணைந்தும் வளர்ந்திருக்கிறது என்றும் அதைத் தமிழர்கள் எங்கள் பாரம்பரியமான பல விடயங்களில் காணத் தவறிவிட்டோம் எனவும் சொல்கிறார். உண்மையில் அழகியலைப் பற்றிய பண்பாட்டை நம்மத்தியில் உருவாக்க ஆழமான விமர்சன மரபு தேவை என்கிறார்.
தொல்காப்பியரைத் திணைக் கோட்பாட்டை முன்வைத்து தமிழுக்கான அழகியல் கோட்பாடு உருவாக வேண்டும் என்கிறார்.
இந்திரனது கேள்விகளுக்கு அப்பால் நான் ரசித்தது மாமல்லபுரத்துச் சிற்பங்கள் பற்றிய பதிவே. அதிலும் மகிஷாசுரர்த்தனியின் போர்களக்காட்சி . அதேபோல் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள சிம்மத்தில் அமர்த்திருக்கும் பெண் தெய்வமும் , அந்தப் பெண் தெய்வத்தில் தொடைமீதிருக்கும் கிளியும். இந்த இரண்டு காட்சிகளையும் சமீபத்தில் நான் நேரில் பார்த்து ரசித்திருக்கின்றேன்.
இதைப் போன்று கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை சம்பந்தமான விளக்கம் எனக்கு புதிதாக இருந்தது.
வியட்நாமில் சமீபத்தில் நீரில் நடக்கும் பாவைக் கூத்தைப் பார்த்து ரசித்தபோது, அது எனக்குத் தோற் பாவைக்கூத்தின் ஒரு வடிவமாகத் தெரிந்தது.
ஓவியர்கள் முத்துசாமி, மருது ஆதிமூலம், சந்துரு என்பவர்களது ஓவியங்களை விவரிப்பதோடு கீழை வாலை ஓவியம் சித்தனனவாசல் என்பன பற்றிய குறிப்பும் உள்ளது
அழகியல் பற்றிய முழுமையான புத்தகமாக இது இல்லாத போதிலும் அறிந்து கொள்ள விரும்பும் என் போன்ற ஆரம்ப நிலை வாசகர்களுக்கு ஒரு திறவுகோலைக் கொடுக்கும் இந்திரனது தமிழ் அழகியல் என்ற சிறிய புத்தகம்.
பதிப்பு : டிஸ்கவரி பப்பளிகேஷன்ஸ் 208 பக்கங்கள் .
—0—
- இரு கவிதைகள்
- ஓ மனிதா!
- அகழ்நானூறு 13
- மகாத்மா காந்தி மரண நினைவு நாள் [1869-1948]
- காங்கேசந்துறை குருநாதசுவாமி கோயில் குடமுழுக்கு
- இரண்டு ரூபாய்….
- இரவுகள் என்றும் கனவுகள்.
- கொங்குபகுதி சிற்றிதழ் ஆசிரியர்கள் ஓவியங்கள் கண்காட்சி
- இரண்டாம் தொப்பூழ்க் கொடி
- படித்தோம் சொல்கின்றோம்: மதுரையின் முழுமையான வரலாற்றை பேசும் அ. முத்துக்கிருஷ்ணனின் தூங்கா நகர் நினைவுகள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 287 ஆம் இதழ் வெளியீடு- அறிக்கை
- புத்தகம்: இந்திரனது தமிழ் அழகியல்
- பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ?
- முத்தப் பயணம்
- சருகு
- நித்தியகல்யாணி
- தேர் வீதியும் பொது வீதியும்…
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 4
- வேரில் பழுத்த பலா
- நெய்வேலி பாரதிக்குமாரின் மனித வலியுணர்த்தும் எழுத்துகள்