மீனாட்சி சுந்தரமூர்த்தி
நாங்கள் இரயில் நிலையம் வந்தபோது மணி 12.45 ஆகிவிட்டிருந்தது. அவசர அவசரமாக உடைமைகளை வண்டியிலிருந்து எடுத்துக் கொண்டு மூன்றாம் நடைமேடைக்கு விரைந்தோம்.பெண்கள் நாங்கள் கைப்பைகளை மட்டும் எடுத்துக் கொண்டு படியேறுவதற்கே சிரமப்பட்டோம். ஆடவர்கள் இரண்டு கைகளிலும் சூட்கேஸ்களை எடுத்துக் கொண்டு ஏறினார்கள். ஒரு வழியாக இரண்டாம் வகுப்பு ஏ.சி கோச்சில் ஏறி இருக்கைகளில் அமர்ந்த பத்து நிமிடத்தில் சரியாக. 1.20 க்கு இந்த ஜெஸித் -சென்னை விரைவு வண்டி புறப்பட்டு விட்டது.. 11 மணிக்கே வரச்சொன்ன ஓட்டுநர் இதோ இதோ என்று நேரம் கடத்தி விட்டான். அவன் விடுதிக்கு வந்தபோதே 12.15 ஆகிவிட்டது. விடுதியிலிருந்து. அதுவும் ஹாரன் அடித்துக் கொண்டே வேகம் கூட்டினதால்தான் .அரைமணி நேரத்தில் வர முடிந்தது என்னவர் அவனைக் கோபித்துக் கொண்டார் பொறுப்புணர்ச்சி சிறிதும் இல்லை என்று.
மூன்று நாட்களாக எங்களை எல்லா இடங்களுக்கும் சொன்ன நேரத்திற்கு வந்து அழைத்துச் சென்று நிதானமாகச் சுற்றிக் காட்டியவன், சிரித்த முகம். இனிய குணம். மரியாதையான பேச்சு, இன்று ஏதோ காரணம் என்று சொல்லி வருத்தம் தெரிவித்துக் கொண்டு வண்டியை விரட்டினான். இல்லையெனில் வண்டியைத் தவற விட்டிருப்போம். என்ன செய்ய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜெசித் சிறிய நகரம். நெரிசலும் அதிகம். பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. எந்த நாள்தான் கூட்டமில்லாமல் இருக்குமென்று சொல்வதற்கில்லை .வைத்தியநாத சுவாமியைத் தரிசிக்க எப்போதும் கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் இருக்குமாம்.
எங்களோடு என்னவரின் நண்பர்கள் இருவர் துணைவியரோடு வர ஆறு பேர் இங்கு வந்தோம்.இதோடு இந்த ஏழு ஆண்டுகளில் பத்து ஜோதிர்லிங்கங்கள் தரிசித்து விட்டோம் .. விடுபட்டிருப்பது.பீமாசங்கரும், கேதார் நாத்தும்தான். ஏற்கெனவே என்னவரின் நண்பர் ஒருவரின் தந்தை இந்த ஆலயத்தில் குருக்களாக இருக்கிறார். அவர்தான் எங்களுக்கு வண்டி ஏற்பாடு செய்து தங்கியிருந்த விடுதிக்கே ஒருவரை அனுப்பி எங்களை ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். மூன்று நாளும் அதிகாலையில் சென்று தரிசனம் செய்தோம். இருப்பினும் பணம்தான் பேசியது. நாம் விழுந்து வணங்காவிட்டாலும் கருவறையில் கூட்டம் நம்மைத் தள்ளி விழ வைத்துவிடும். மந்தரமலை, வாசுகி நாத் ஆலயம், தபோவனம் இப்படி சுற்றியிருந்த இடங்களையும் கண்டு வந்தோம்
அரைமணி நேரம் ஆகிவிட்டிருந்தது வண்டி புறப்பட்டு,. விடுதியில் கொடுத்திருந்த மதிய உணவு இப்போது அதிகமாகவே சுவைத்தது நான்கு இருக்கைகள் ஒரே இடத்திலிருந்தது, இரண்டு இருக்கைகள் அடுத்த பக்கத்திலிருந்தது. உண்ட களைப்பு மேலிட எல்லோரும் நான்கு மணி வரை தூங்கி எழுந்தோம். பெண்கள் நாங்கள் மூவரும் ஒருபக்கம் அமர்ந்து உலக மகா செய்திகளை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தோம். அப்போது தடதடவென ஓடிவந்த ஒரு சிறுமியை ஈஸ்வரி நில் என்று ஒரு பெண் அழைத்துக் கொண்டு போனாள்
எனக்குப் பளீரென நினைவு வர . ‘விஜயா ஈஸ்வரி எப்படி இருக்கா? இங்கே வருவது தெரியுமா? என்னைப் பற்றி கேட்டாளா?
பதிலேதும் சொல்லாமல் என்னைப் பார்த்தவள் மெல்லிய குரலில்
‘அவளா விருப்ப ஓய்வு வாங்கிட்டா ?
ஏன்? சேகர் என்ன செய்யறார்?
அவரில்லை …. நான்கு மாதமாகிறது ?
என்னதான் ஆச்சு சொல்’ என்று படபடத்தேன்.
அவள் விவரித்தது கேட்டு மூச்சே நின்று விடும் போல் ஆகிவிட்டது.
உன் கணவரிடம் சொல்லாதே நாங்களும் இதுவரை சொல்லவில்லை என்றாள் லதா.
விஜயா,’அவரவர் தலையெழுத்து நீ இதையே நெனச்சிட்டு இருக்காதே, ‘ என்றாள்.
என் மனம் பின்னோக்கி நகர்ந்தது, விழிகள் மூடித் திரை விரிந்தது. லதாவும், விஜயாவும் பேசிய எதுவும் எனக்கு கேட்கவில்லை.
கடலூரில் நான் பணிபுரிந்த அலுவலகத்திற்கு கணவனும் மனைவியும் ஒன்றாக மாறுதலில் வந்தார்கள். சேகரின் நண்பர்கள் முயற்சி செய்து இருவருக்கும் ஒரே இடத்திற்கு மாறுதல் வாங்கியிருந்தார்கள். ஒருவரை ஒருவர் விரும்பி இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவர்கள் சேகரும், ஈஸ்வரியும். ஆறேழு ஆண்டுகள் ரம்மியமான இல்லறம். மகனும் மகளும் வரவு. அதன் பின்னர் சிறு சிறு சச்சரவுகள்.இருவருக்கும் பிடிவாதம். அதிகம். ஒரு கட்டத்தில் சேகர் குடிக்க ஆரம்பித்தார். போதாதா? பெற்றோரின் சமாதானம் பலனளிக்கவில்லை. விழுப்புரத்திலிருந்து செஞ்சிக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு பிரிந்து சென்றார் சேகர். பத்து ஆண்டுகள் ஓடியது.
படிப்பில் படுசுட்டியாக இருந்த மகள் ஏஞ்சல் உண்மையில் அத்தனை அழகு ஏஞ்சலேதான் அவள், திடீரென பத்தாம் வகுப்பு பயிலும்போது நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டாள். பெற்றோரின் பிரிவால் ஏற்பட்ட மனஅழுத்தம்தான் காரணம் என்றனர் சிகிச்சையளித்த மருத்துவர்கள். மகன் பீட்டர் ஈஸ்வரியின் சொல் கேட்பதில்லை, பாதியில் படிப்பை நிறுத்தி ஊர் சுற்றினான். தகாத நட்பு வட்டம். இதனால்தான் சேகரின் நண்பர்கள் இருவரிடமும் பேசி ஒரே இடத்திற்கு மாறுதல் வாங்கித் தந்து ஒன்றாகச் சேர்த்து வைத்தனர்.
சேகரும்,ஈஸ்வரியும் எல்லோரிடமும் அன்பாகப் , பண்பாகப் பழகுவார்கள். ஈஸ்வரி எப்போதும் கலகலப்பாகப் பேசுவாள், பேச்சில் நகைச்சுவை கலந்திருக்கும். அவளுடைய அடர்ந்த நீண்ட கூந்தலில் மயங்கிதான் சேகர் விரும்பினாராம். முதல் நாள் திருமணம் முடிந்தவுடன் இதைச் சொன்னாராம்.
‘ ஓ அப்படியா இந்தாங்க வச்சிக்குங்க னு நான் சவுரி முடிப் பின்னல கையில தந்துட்டேன்’ என்று சொல்லிச் சிரித்தது மறக்கவே முடியாது.
என்னிடம் மனம் விட்டுப் பேசுவாள். நன்றாக இருந்தார்கள். ஏஞ்சல் படிப்படியாகத் தேறி வந்தாள். ஒரு வருடம் தடைபட்ட படிப்பு இலேசான பாடப்பிரவு எடுத்து தொடர்ந்தது. ஈஸ்வரியின் தம்பி பீட்டரை துபாய்க்கு அழைத்துச் சென்று ஒரு வேலையில் அமர்த்தினான்.
வெண்ணெய் திரண்டு வரும்போது கலயம் உடைந்தது போல் மறுபடியும் பூசல், அலுவலகத்தில் பேசிக் கொள்வதில்லை, ஒரே வண்டியில் வருபவர்கள் தனித்தனி ஸ்கூட்டிகளில் வரத் தொடங்கினார்கள். ஈஸ்வரி எங்களிடம் அவர் மீண்டும் குடிக்க ஆரம்பித்து விட்டதால் வம்பு வருகிறது என்று சொல்லிக் கலங்குவாள்.. அலுவலகம் மட்டும் ஒன்று ஆனால் சேகர் ஒரு வீட்டிலும், இவள் மகளோடு ஒரு வீட்டிலும் வசித்தார்கள். .
பன்னிரண்டாம் வகுப்பு பயின்று கொண்டிருந்த ஏஞ்சல். ஒரு நாள் தூக்க மாத்திரைகள் அதிகமாகப் போட்டுக் கொண்டாள் காப்பாற்ற இயலவில்லை.கதறி அழுத ஈஸ்வரியை என்ன சொல்லித் தேற்றுவது?
மனைவியின் மீது கருணை வரவேண்டிய நேரத்தில் சேகர் வெறுப்பு கொண்டு நாகைக்கு விருப்ப மாறுதல் வாங்கிச் சென்றார்.
பாறையாய் கனக்கும் துக்கத்திலிருந்து மீள ஈஸ்வரி ஒற்றை ஆளாய் வசித்துக் கொண்டிருந்த தன் பெரியம்மாவுடன் இருக்க காஞ்சிக்கு பணி மாற்றிக் கொண்டு சென்றாள்.
‘ஏய் என்னடி ஆச்சு?’ தோளைத் தட்டினாள் விஜயா,
நீ எதுக்கு இந்த விஷயத்தை இவகிட்ட சொன்னே? என்றாள் லதா.
விஜயா நீ சொன்னதெல்லாம் உண்மையா?
இந்த ரெண்டு வருஷத்தில அவ ஆளே மாறிட்டா தெரியுமா?
கார் வாங்கிட்டா?
அதனாலென்ன?
வந்த வெனையே இதுனாலதான்
ஒரு டிரைவர் ஏற்பாடு பண்ணிட்டுப் போனான் பையன்.
தெனமும் கார்லதான் வருவா, போவா,
ஆறு மாசத்துக்கு முன்னால ஒரு நாள் அதே காரில் தன்னோட . நகை, பணம், வங்கிக் கணக்கு, ஏடி எம் கார்டு எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாள், அதே காரில் ரெண்டு பேரும் புறப்பட்டு காணாம போயிட்டாங்க,
ரெண்டு நாள் பார்த்துட்டு பெரியம்மா கிழவி பீட்டருக்குச் சொல்லியிருக்கு,
அப்புறம்?
அலுவலகம் , வேலை என்னானது?
லீவெல்லாம் சொல்லாமலே தலைமறைவாயிட்டா
அப்புறம் என்ன’ சேகரும் வந்து பையனோடு சேர்ந்து வெளியில தெரிஞ்சா அசிங்கம்னு ஆள் போட்டு தேடினாங்க,
ஒரு மாசத்துக்குப் பிறகு ரெண்டு பேரையும் மூணாறுல பிடிச்சிருக்காங்க. போனது போக மிச்சமிருந்த ஒண்ணுரெண்டு நகையோட இவள கூட்டிட்டு வந்தாங்க. ,
மனைவியும் , கைக்குழந்தையும் பாவம்னு கேஸெல்லாம் போடாம முன்பல் ரெண்டு தெறிச்சு விழ அவன செமையா கவனிச்சி விட்டுட்டாங்க
அவள நாங்க யாரும் பாக்கவே இல்ல, சேகர் தனக்கும்,ஈஸ்வரிக்கும் விருப்ப ஓய்வு வாங்கிட்டார். .
‘இப்போ எங்கே இருக்கா ?’.
விழுப்புரத்தில் பார்த்துப் பார்த்துக் கட்டின வீட்டில் .சேகர் குடிபு்பதை விட்டுவிட்டார்,. சமையலுக்கும் வீட்டு வேலைகளுக்கும் ஆள் வைத்து விட்டார். இருவரும் ஒரே வீட்டில்தான் இருக்கிறார்கள் இருதுருவங்களாக ..பீட்டர் துபாய் போனான். இவளிடம் பேச்சே கிடையாது, தங்கை தம்பி யாரும் இவளோட பேசறது இல்ல, காரெல்லாம் வித்துட்டாங்க. ..
தேடவேண்டிய இடத்தில் விட்டுவிட்டு இல்லாத இடத்தில் தேடியதில் முகவரி தொலைந்ததுதான் மிச்சமோ?
- ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ அங்கம் -1 காட்சி -2 பாகம் -7
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 288 ஆம் இதழ்
- இது நியூட்டனின் பிரபஞ்சம்
- பாடம்
- பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ?
- கே. எஸ். சுதாகரின் “பால்வண்ணம்” சிறுகதைத்தொகுப்பு – ஒருகண்ணோட்டம்
- மழை
- இருப்பதும் இல்லாதிருப்பதும்
- நானே நானல்ல
- தமிழா! தமிழா!!
- அகழ்நானூறு 14
- காதல் ரேகை கையில் இல்லை!
- இல்லாத இடம் தேடி
- 33 வருடங்களாக அஞ்னாத வாசம் செய்த தமிழர்கள்
- நாவல் தினை அத்தியாயம் இரண்டு CE 300
- பொறாமையும் சமூகநீதியும்
- எங்கள் தீபாவளி