பிரதியைத் தொலைத்தவன்

This entry is part 15 of 45 in the series 2 அக்டோபர் 2011

———————————————-
அந்த எழுத்தாளர் மனமொடிந்து தன்னுடைய சோகக் கதையை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இது நடந்தது சுமார் நாற்பது ஐம்பது வருஷங்களுக்கு முன் ஒரு மழை மூட்டமான மாலையில் என்று நினைக்கிறேன்………

“எனக்கு தற்கொலை செஞ்சிக்கலாமான்னு இருக்குது..”

“ அய்யய்யோ…ஏன் ஸார் இப்படி நம்பி ஏமாந்து போனீங்க..”

“ என்ன செய்யறது? என்னுடைய கெட்ட நேரம்…..”

“ ஒங்க நாடகப் பிரதி எவ்வளவு பக்கம் இருக்கும்..?..”

“ மொத்தம் முன்னூத்தம்பது பக்கம் இருக்கும்…கையொடிய நெஞ்சொடிய நானே ராத்திரியெல்லாம் கண் முழிச்சி எழுதினது.. அப்போ என் மனைவிக்கு வேறெ உடம்பு சரியில்லே..ராவெல்லாம் வெளக்கைப் போட்டு அவ தூக்கத்தயும் கெடுத்துகிட்டு இருந்தேன்.. அவ பாவம்…”நீங்க எழுதுங்க.. எனக்கு ஒண்ணும் உபத்திரவம் இல்லைன்னு அடிக்கொரு தரம் இருமிகிட்டே சொல்லிகிட்டே இருப்பா…”

“ நேரா நீங்களே கொடுத்த பிரதிய எப்படி அந்தப் படுபாவி தொலைக்க்றான்?…. நடிகனா இருந்தா மனுஷத்தனமை இல்லாம போயிடுமா?..

“ இல்ல் ஸார்.. என் கெட்ட நேரம்னு தான் நெனைக்கிறேன் பெரிய நடிகர் மூலமா என் நாடகம் அரங்கேறினா எனக்கு பேரும் புகழும் வந்து பெரிய வசதிகள்ளாம் ஏற்படும்னு ஒரு பேராசை…..தெரியாத்தனமா கொடுத்துட்டேன்….”

” எப்போ கொடுத்தீங்க? “

“அவரை வீட்டுலெ பாத்து கொடுக்காலாம்னு ரொம்ப முயற்சி பண்ணினேன். எப்போ போனாலும் அவர் வீட்டுலே இல்லேன்னு சொல்லிட்டாங்க…பிறகு அவரு நாடகம் நடந்த அன்னிக்கு தியேட்டருக்கே போனேன்.. நாடக்ம் முடிஞ்சவுடனே அவரு ஒப்பனை அறைக்குப் போனேன். அவரு மீசையை எடுத்துட்டு மூஞ்சிலே எண்ணை பூசிகிட்டிருந்தாரு.. டோபாவை ஒருத்தன் தலையிலேருந்து கழட்டிக்கிட்டிருந்தான்..
“அய்யா நான் ஒரு நாடக ஆசிரியர்…ஒங்க நடிப்புன்னா எனக்கு உசுரு… உங்களையே மனசுலே வச்சு ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி
ஒரு நாடகத்தை எழுதியிருக்கேன்…நீங்க ஒரு முறை படிச்சுப் பாத்தீங்கன்னா நிச்சயம் இது உங்களுக்குப் புடிச்சிப் போகும்””ன்னேன்

நடிகர் ஒரு துண்டால் முகத்தை வழிச்சுகிட்டு ஒத்தைக் கண்ணால் என்னைப் பார்த்தார்…
“ஒங்க மாதிரி எழுத்தாளர்கள் இப்படி தேடி வந்து பாராட்டறது பெருமையாஇருக்கு.. நல்லா இருங்க…நல்லா இருங்க…என்று அடிக்குரலில் சொன்னார்..

நான் அழகாக பைண்டு செய்து வைத்திருந்த என் நாடகப் பிரதியைதயக்கத்துடன் நீட்டினேன்..

“டேய் இதை வாங்கி வைய்யிடான்னார்.. பக்கத்திலிருந்த பைய்யன் அதை வாங்கி மூலையில் வைத்தான்… “நான் பாத்துட்டு உங்களுக்கு சொல்லி அனுப்பறேங்க” என்று கை கூப்பினார்.

என் நாடகப் பிரதியை கடைசியாகப் பார்த்தது அப்போது தான்…..”

“அய்யயோ… அப்புறம் அவரைப் பாக்கவே இல்லையா? “

“ பிரதியைக் கொடுத்த பிறகு ஒரு மாசம் காத்திருந்து பாத்தேன்.. யாரும் என்னைத் தேடி வரலே.. நடிகர் வீட்டுக்கு நடையா நடந்தேன்.. எப்ப் போனாலும் ஏதாவது ஒரு கும்பல் நின்னுகிட்டு இருக்கும்.. வெளியிலெ காவல் காரன் கிட்டே சொன்னேன்.. “அய்யா ஷூட்டிங் போயிருக்காரு…அய்யா வெளியூரு போயிருகாரு… அய்யா டிஸ்கஷ்ன்லெ இருக்காருன்னு எதையாவது சொல்லிகிட்டே இருந்தான்…

ஒரு முறை காவல்காரன் இல்லாத சமயமா உள்ளே போய்ட்டேன்.. அங்கே உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் கிட்டே விஷ்யத்தை சொல்லிக் கண்ணீர் விட்டேன்… அவர் …”அடடா… தம்பி எதயும் கையிலே வச்சிக்க மாட்டானே!! நான் ஒரு விஷ்யம் சொல்லட்டுமா? தம்பி எதையுமே படிக்கற வழக்கமே இல்லே… வசனத்தக் கூட டைரக்டரை ஒரு தடவை சொல்லிக் காட்ட சொல்லுவான்…. அவ்வளவு தான் அப்ப்டியே மனசுலே ரெகார்டு ஆயிடும். திருப்பி உணர்ச்சி வசமா அப்ப்டியே பேசிடுவான் .ஆண்டவன் எல்லாருக்கும் அப்படி ஒரு திறமைய கொடுக்கறதில்லே…என் தம்பிக்கு அப்படி ஒரு அருள்!!..” என்று தனக்குள்ளெ நெகிழ்ந்து கொண்டார். கொஞ்சம் நெகிழ்ச்சிக்குப் பின் ..”ஒங்க பிரதியை அப்படி யாரும் களவாண்டு போயிடமாட்டாங்க.. இங்கே தான் எங்கயாவது இருக்கும் ..நான் பாத்து எடுத்து தம்பீ. கிட்டே என்ன செய்யலாம்னு கேக்கறேன்.. நாளைக்கி தம்பி சிங்கப்பூரு போவுது.. எதுக்கும் ஒரு பத்து நாளு கழிச்சி
வந்து பாருங்க…”

நான் பத்து நாள் கழித்து போனேன்..அந்தப் பெரியவர் அங்கே தென்படவில்லை… செத்துப் போயிருக்க மாட்டார் என்று சமாதானப்படுத்திக்
கொண்டேன்….என் கையில் இருந்த ஒரே ஒரு பிரதியை நான் தலைமுழுகி விட்டேன்….என்னுடைய ஆறு மாசத்து உழைப்புப் போய் விட்டது..
அதை நெனைச்சா அடிக்கடி தற்கொலை செஞ்சிக்கலாம்னு தோணுது!

**********

அந்த நாட்களில் பல எழுத்தாளர்களுக்கு மேற்சொன்னமாதிரி நிறைய அதிர்ச்சிகள் ஏற்பட்டிருக்கின்றன.. இன்று போல் அன்று நகலகங்கள் நடை முறையில் வரவில்லை. பெரிய நாவல்களோ நாடகங்களோ எழுது பவர்கள் இன்னொரு பிரதியை தன் கைவசம் எழுதி வைத்துக் கொள்ளுவது பெரிய வேலை. பெரிய உழைப்பு…கார்பன் வைத்துக் கொண்டு எழுதும் முன்னெச்சரிக்கையும் பலர் மேற்கொள்ளவில்லை.. தொழில்முறை தமிழ் தட்டச்சு செய்பவர்கள் இருந்தார்கள்.. ஆனால் உபயோகப் படுத்திக் கொள்ள பணச்செலவாகும்.. எதிர்கால அங்கீகாரமோ வருமான சாத்தியமோ உத்தரவாதமில்லாத சாதாரண எளிய எழுத்தாளனுக்கு இந்த செலவு சற்று பாரமாகத் தான் இருந்தது.
ஏதோ ஒரு அசட்டு நம்பிக்கையில் என் நண்பர் தன் நாடகப் பிரதியைக் கொடுத்துத் தொலைத்து விட்டார்.!

ஆனால் இன்று நிலைமை அடியோடு மாறி விட்டது..இப்போதைய கணணி ஊடக வசதிகளால் எழுத்தாளர்கள் தங்கள் ஒரே படைப்பை வெவ்வேறு தலைப்புகளில் நான்கு பத்திரிகைகளுக்கு அனுப்புகிறார்கள்!!.. எதிர்காலப் பிரயோகத்துக்கும் தங்கள் கைவசம் ஏகப்பட்ட பிரதிகளை வைத்துக் கொள்ளுகிறார்கள்..! அர்ஜுனன அம்புகள் மாதிரி இன்று ஒவ்வொருவரிடமும் ஏராளமான பிரதிகள் “தொலைக்க முடியாத அசாத்யத்தில்” அடுக்கி வைக்கப் பட்டுள்ளன!

இப்படித் தான் சுமார் அறு நூறு ஆண்டுகளுக்கு முன்பு கோபர்னிகஸுக்கும் ஒரு விபத்து ஏற்பட்டது. சற்று வேறு மாதிரியான விபத்து..

கோபர்னிகஸ் யார் என்று ஓரளவு படிப்பு ஞானமுள்ளவர்கள் கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்!. அவர் ஒரு மகா மேதை…கிரகங்களின் சுழற்சிகளைப் பற்றிய பேருண்மையைக் கண்டறிந்த போலந்து நாட்டை சேர்ந்த அபூர்வமான வானவியளாளர். தீர்க்கதரிசி

சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று அன்றுவரை நம்பிக்கொண்டு வந்த தவறான பைபிள் வேதக் கருத்தை மாற்றி பூமி தான் நிலையாக நிற்கும் சூரியனை சுற்றி வருகிறது என்கிற பௌதீகப்பேருண்மையை முதல் முதலாகக் கண்டறிந்தவர்..

இதைக் கண்ட்றிந்து இந்த ஆராய்ச்சியின் பின் பலமாக உள்ள ஏராளமான விஞ்ஞான பௌதீக கணக்கியல் தகவல்களை ஒரு பெரிய ஆவணமாகத் தயாரிப்பதற்கு அவருக்கு சுமார் 30 வருட காலம் ஆகிற்று.. அப்போது அவருக்கு வயது சுமார் எழுபது. ..மூப்பின் தள்ளாமை வேறு.. இந்த ஆவணத்தைப் பற்றி அறிந்த அவருடைய நெருங்கிய நண்பர்கள் அதை உடனடியாக அச்சில் கொண்டு வர வேண்டுமென்று அவசரப் படுத்தினார்கள்…

ஏராளமான ஆழமான சங்கேத தகவல்கள் அடங்கிய கையெழுத்துப் பிரதி அவரிடம் ஒன்றே ஒன்று தான் இருந்தது. அதை அச்சில் வடிக்கக் கூடிய நல்ல அச்சகம் Nuremburg என்ற ஒரே இடத்தில் தான் இருந்தது. வயதின் காரணமாக கோபர்னிகஸால் அங்கே நேரில் சென்று உட்கார்ந்து கொண்டு அச்சுப் பார்க்க இயலவில்லை.

இந்தப் பொறுப்பான பணியை மேற்கொண்டு செய்து முடிக்க அவரிடம் நேசமும் மரியாதையும் கொண்ட இளம் விஞ்ஞானி Rheticus என்பவரிடம் பிரதியை ஒப்படைத்தார்.

Rheticus நல்ல முறையில் செயல் பட்டு அச்சுப் பிழைகள் பார்த்து ஒவ்வொரு கட்டத்திலும் திருத்திய பிரதிகளை கோபர்னிகஸுக்கு அனுப்பி
ஒப்புதல் பெற்று ஒழுங்காக அச்சுப் படுத்திக் கொண்டு வந்தார்..

துரதிருஷ்டவசமாக அப்போது Rheticusகு கலாசாலையில் ஒரு பெரிய பேராசிரியர் பதவிக்காக அழைப்பு வரவே அந்த அரிய வாய்ப்பை தட்ட முடியவில்லை
அதனால் பாக்கியுள்ள கொஞ்ச வேலையை அவருடைய இன்னொரு நண்பரான Andrias Osiander என்பவரிடம் ஒப்படைத்து விட்டு கோபர்னிகஸிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்.

ஆண்ட்ரியாஸும் நன்றாகத் தான் காரியங்கள் செய்து வந்தார்.. ஆவணத்தையும் திருப்திகரமாக புத்தகவடிவில் செய்தார்..முன்னுரை ஒன்றுதான் பாக்கி இருந்தது..

அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்ல… கொபர்னிகஸ் எழுதிய கையெழுத்துப் பிரதியில் முன்னுரையின் முடிவில் ஆசிரியரின் கையொப்பத்துக்கு மேல் கொஞ்சம் இடை வெளி இருந்தது.. ஆண்ட்ரியாஸுக்கு அந்த இடைவெளியைப் பார்த்தவுடன் கை துருதுருத்தது.

கூடியவரை ஆசிரியரின் கையெழுத்தைப் போலி செய்து கீழ்க்கண்டவாறு
இடைச் செருகல் செய்தார்..

“ நீங்கள் வாசிக்கப் போகும் இந்த ஆவணம் ஒரு கையேடு தான் வருங்கால ஆய்வாளர்களுக்கு கிரகங்களின் சுழற்சிகளையும் வேகத்தையும் ஓரளவு சுலபமாக சரியாக அனுமானிக்க இது பயன் படும்.

மற்றபடிக்கி இதில் சொல்லியிருக்கும் தகவல்கள் என்னுடைய ஸ்வாரஸ்யமான கற்பனை.யே தவிர .உண்மையல்ல!!.

சந்தேகமில்லாமல் சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது “” ..

இந்த அதிர்ச்சிகரமான இடைச்செருகலுடன் புத்தகம் வெளிவந்த உண்மை சில நாட்களுக்குப் பிறகு தான் நண்பர்கள் மூலம் கோபர்னிகஸுக்கு தெரிய வந்தது..

இந்தத் தள்ளாத வயதில் அவருக்கு இந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியவில்லை.. நண்பர்கள் இதை எதிர்த்து ஆண்ட்ரியாஸின்
மேல் வழக்குத் தொடுக்க வேண்டுமென்று சொன்னார்கள்..

கோபர்னிகஸுக்கு கைகள் நடுங்கி மூளை பேதலித்து விட்டது..அவரால் செயல் பட முடியவில்லை.

முப்பது வருட காலம் இரவும் பகலுமாக வானத்தைப் பார்த்துக் கண்டறிந்த அரிய கண்டு பிடிப்பின் இந்த அவலமான வெளிப்பாட்டினால் அவர் ஜடமாகி உடல் விதிர்த்து சில மாதங்களிலேயே இறந்து போனார்..

ஆனால் கோபர்னிகஸ் ஸ்தாபித்த உண்மை இறந்து போகவில்லை சூரியனுக்கு நிகரான மேதை. அவர். . வருங்கால விஞ்ஞானிகள் அவர் ஆய்வை சோதித்துப் பார்த்து அதன் உண்மையை கண்டறிந்து அந்த மேதையின் பிரசுரத்தில் நடந்த சதியை அறிந்து கொண்டார்கள்.

அவருடைய கையெழுத்தில் உள்ள மூலப் பிரதி இப்போது போலந்து நாட்டில் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது .

இப்போதைய வசதிகள் இருந்திருந்தால் அசலைத் தன்னிடம் வைத்துக் கொண்டு நகலைத் தான் நண்பனிடம் கொடுத்திருப்பார் கோபர்னிகஸ்! நகலை வைத்துக் கொண்டு நண்பன் நயவஞ்சகம் செய்ய முடியாது!

வைதீஸ்வரன்

Series Navigationஜென் ஒரு புரிதல் – பகுதி 13கள்ளன் போலீஸ்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *