நாவல்  தினை              அத்தியாயம் இருபத்தேழு  CE 5000

This entry is part 4 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

  

மேசை மேல் தலையில்லாத குழலனின் உடல் அசைந்து கொண்டிருக்க தலை அறையை தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் சுற்றி வந்து கொண்டிருந்தது. 

அக்ரெலிக் பெயிண்ட் வாடை தூக்கலாக வந்து கொண்டிருந்த இடம் அது. எந்தத் தலைமுறையிலோ அக்ரெலிக் வண்ணம் தேள்க் கூட்டத்துக்கு ஒவ்வாமை தருவதாக குணம் கொண்டிருந்தது. தேளர்கள் நடமாட்டத்தைக் கிட்டத்தட்ட அறவே இல்லாமல் செய்யச் சுவர்களை தினமும் அக்ரலிக் வண்ணமடித்து அந்த வாடை நீங்காமலும் குறையாமலும் கவனம் வைத்திருப்பது வழக்கம். 

குயிலியின் நாசியில் பலமாக அறைவதாக வண்ணத்தின் நெடி இருந்தது. வானம்பாடி பேப்பர் நாப்கின்னை முகத்தைச் சுற்றி வைத்து செலபோன் டேப் வைத்து ஒட்டியிருந்தாள்.

 குழலன் உடல் குயிலியின் கையைப் பிடித்து அவள் உள்ளங்கையில் தன் விரல் கொண்டு எழுத, தனியாகப் பறந்த அவன் தலை ஜன்னலுக்கு வெளியே அசைவு இருக்கிறதா எனக் கண்காணித்தபடி நிலையாக மிதந்தது. 

மூன்று பேரும் மனதில் பேசிக் கொண்டிருந்தார்கள். அது பின்வருமாறு 

– பெருந்தேளரின் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் சஞ்சீவினியையும் நீலனையும் கோகர்மலைப் பிரதேசத்தில் ஜாக்கிரதையாக நிலைநிறுத்தியது, அதன் மூலம் பெருந்தேளரசுக்கு குடிமக்களிடையே ஆதரவு அதிகப்படுத்தத்தான். 

இந்தச் செயலால் அவருக்கு ஏற்கனவே இருந்த ஆதரவு அதிகப்படவில்லை என்று குழலன் கணித்திருந்தான். சிறு பறவைகளாகச் சிறிது நேரம் வடிவெடுக்க முடியும் குழலனுக்கு. ஷேப் ஷிப்டிங் என்ற உருமாற்றமடையும் ஆற்றல் இயல்பிலேயே அவனுக்கு உண்டு. நிரந்தரமாக இன்னொரு தேளாக அல்லது முழு மானுடனாக  உருமாற்ற முடியாதே தவிர வேறே  எந்த ஜீவராசியாகவும், கொம்பன் ஆனையாகக் கூட அவன் உருவம் மாறி பத்து நிமிட நேரம் அப்படியே செயல்படுவான்.

 அதே போல் ஒரு குழலன் மாறி ஒரு குருவி அல்லது ஒரு சிலந்தி வரும் என்றில்லை. ஒன்று பலவாக ஒரு குழலன் அதிகபட்சம் எட்டு அணில்களாக, எட்டு கொக்குகளாக உருமாறித் திரும்ப குழலனாக முடியும். ஆணாக மாறவேண்டும் என்பதும் கட்டாயம் இல்லை. பெண்பாலாக, நடுப் பாலாகவும் மாற வல்லமை உடையவன் அவன். 

குயிலியும் வானம்பாடியும் அவன் சொல்வதை சுவாரசியத்தோடு கேட்டபடி இருந்தார்கள். உருமாறும் ஆற்றலைச் சற்று நேரத்துக்காவது மற்றவர்களுக்கு இரவல் தர முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வானம்பாடி ஆதூரப்பட்டாள். 

அந்த ஒரு விஷயத்தை மட்டும் தான் இன்னும் சோதித்துப் பார்க்கவில்லை என்றான் குழலன். கொடுத்து ஏடாகூடமாக ஏதாவது நடந்து உருமாறும் ஆற்றல் திரும்ப வராமல் போனால் என்ன ஆகும் என்று யோசிக்கவே இயலவில்லை அவனுக்கு. 

எனினும் நல்ல நண்பர்களோடு ஐந்து பத்து நிமிடம் ஷேப் ஷிப்டிங் சோதித்துப் பார்கலாம் தான். 

சில மணி நேரம் முன்பு சஞ்சீவனி உலாவும் தேளரசர் பேருரையும் நிகழ்ந்து முடிந்தது. நீலன் வைத்தியர் என்ற மூன்றாம் நூற்றாண்டு மருத்துவர் அவருடைய அபூர்வமான மூலிகை மருத்துவக் கோட்பாடு கண்டுபிடிப்புக்காகவும் புலவர் நீலன் வைத்தியர் என்ற அந்தப் புலவரின் கவிப் புலமைக்கன்றி  அவரது மருத்துவப் புலமைக்காகப்  போற்றப் படுவதைத் தொடங்கி வைத்தார் பெருந்தேளர். 

எனிலென்? நீலன் வைத்தியர் கிட்டத்தட்டப் பெருந்துயிலிலிருந்த வண்ணம் கிடந்தபடி உலா வந்தார். முது தேள்களும், முதுமானுடரும் (அனைவரும் இல்லை எனினும் சிலராவது ) புலவரின் பிணத்தை ஏன் வினைகெட்டு இவ்வளவு நூறாண்டு சென்று சவ ஊர்வலம் எடுத்து வரணும் என்று தவறுதலாகப் புரிந்து கொண்டு கேட்டதை குயிலியே அறிவாள். 

குடிமக்களிடம் சஞ்சீவினி மூலிகை மருந்து பற்றிப் பிழையாக அறிவிக்கப்பட்டதை யாரும் பொருட்படுத்தவில்லை. மருந்து எல்லா ஜீவராசிகளுக்கும் ஆயுள் நீடிக்கும் என்று அறிவித்ததும் தவறானது. 

அதெப்படி ஐம்பத்திரண்டாவது நூற்றாண்டில் இருக்கும் குழலனாகிய உன்னை ஐம்பதாம் நூற்றாண்டில் இருக்கும் பெருந்தேளரசர் ஒழித்துக் கட்ட முயற்சி செய்ய முடியும்? 

குயிலி, பதவி தான் காரணம்.  அதுவும் மிக்க அதீதமான வலிமையோடு வரும் பதவி அவருக்குக் குறிக்கோள். எங்கள் சிறகுச் செந்தேள் வம்சத்தை அழிக்க, அதுவும் முழுவதும் அழிக்க அவருக்கும் அவருடைய செந்தேள் வம்சத்துக்கும் இறகுகள் இல்லை என்பதே அசூயைக்குக் காரணம். இவ்வளவுக்கும் உருவம் ஆகச் சிறுக்க வைக்கப்பட்ட இனம் எம்முடையது. சொல்லியிருப்பேனே.

பறக்கும் செந்தேள்கள். நாட்டுப் பாடலில் பாடிப்பாடி அஞ்ச வைத்திருக்கிறார்களே எங்கும். 

பறக்கும் செந்தேள்கள் பரவிய காலம். வெள்ளை நாகம் உலவிய காலம். 

சட்டென்று பாட்டை நிறுத்தி சூனியத்தை வெறித்தபடி குழலனின் தலை அறைச் சுவர்களில் இலக்கில்லாமல் மோதி விழுந்தது. 

மோகினி, அடி என் பாம்புப் பெண்ணே எனக் குரல் எழுப்பி ஒரு நிமிடம் அழுதான். அதற்குள் குயிலிக்கும் வானம்பாடிக்கும் அவன் தன் முன்கதை கடத்தினான். அவனுக்கும் அவனுடைய வெள்ளை நாகினி பாம்புப் பெண் காதலிக்கும் ஏற்பட்ட பிரியமும் அதன் விளைவாக அவள் இறந்து பட்டதும், இறக்கும்போது அவள் குழலனைச் சபித்துப் போனதும் இந்தப்படிக்கு முழுக்கக் கடத்தப்பட்டது. 

எல்லாம் முடிஞ்சுது அது ஒரு பாம்பு – தேள் காதல். இரு பக்கமும் எத்தனை சகிப்புத் தன்மை இருந்தாலும், எவ்வளவு அனுபவமும் அறிவும் இருந்தாலும் அடிப்படையிலேயே இணை சேர முடியாது என்று தெரிந்தே அவளோடு ஜோடி சேர்ந்தேன். 

எண்ணிக்கை வேணுமா வானம்பாடி? நான் விழைந்து கூடியது முன்னூற்று அறுபத்தேழு தடவை. அவள் விழைந்து என்னோடு கலந்தது நானூற்றுப் பதினேழு முறை. 

இதெல்லாம் ஓராண்டில் நடந்தேறிய விளையாட்டு. அந்த நாற்பது வயது பெரும் பெண்டிர் காதல்? 

அது தனியானது. என் உயிர் அந்தப் பெண்மணிகளின் உடல் நாற்றத்தோடும், வாய்ச் சுவையோடும் மற்றும் ஏதேதோ ஒவ்வொருத்திக்கும் ஒன்றாக, பலவாக, தனித்தன்மையாக அமைந்து மனம் கவர்கிறது. பாம்புப்பெண்ணா இளமுது பெண்ணா என்று தேர்வு செய்ய வேண்டி வந்தால் இளமுது அழகியரே தேர்வேன். 

கூறும்போதே உடல் சிலிர்க்குது பார் என்றான் கார்த்திகை நாயாக காமம் கொண்டு.

அவனுள் பசுதர்மம் மட்டற்று எழ, வானம்பாடியை நோக்கினான் –

வானம்பாடி உன்னை அணைத்துக் கிடக்கவா? நம் இரண்டு பேருக்கும் உறவு வருமா? எனக்கும் குயிலிக்கும் வராத இணை விழைதல் நம்மிருவர்க்கும் இயல்பாயெழுமோ. எனில்நம் இருவரையும் இப்போது அகற்றி வைத்திருப்பதெது? ஏனோ. 

அவன் சிரித்தான். 

அதெல்லாம் கவுரவமான செயல்பாடுதான் குழலா. நாங்கள் ரெண்டு பேரும் உனக்கு முப்பாட்டிக்கு முப்பாட்டியாக இருப்போம். இரண்டு நூற்றாண்டு இடைவெளி நமக்குள் உண்டு. அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் தான் கேட்கிறோம். சொல்லேன். 

நீங்கள் காலத்தால்  எனக்கு எவ்வளவு முற்பட்டவர்களாக இருந்தாலும் எனக்குள் அழகுணர்ச்சியை வர்த்திக்கும் அழகிப் பெண்கள். அழகிலே அணங்கு, மூதாட்டி, கால்கிழவி, முக்கால் கிழவி எல்லாம் இல்லை. 

அவன் சிரிக்க அவர்களும் தொடர்ந்தார்கள். 

நீலன் வைத்தியர் திடீரென்று ஏமப் பெருந்துயில் நீங்கி என்ன சொன்னார்? அவர் எப்படித் துயிலுணர்ந்தார்? மறுபடியும் உறங்கப் போனதால் அவரிடம் எதுவும் உரையாடவும் இயலவில்லை. 

குயிலி நீ துக்கம் கொப்பளிக்க இதைச் சொல்லி வானம்பாடி ஆமோதிப்பதப் பார்த்தால் என்ன தோன்றுகிறது தெரியுமா? 

குழலனின் தலை கேட்டது. உடலை நோக்கி அது சத்தமிட தலையும் உடலும் ஒரு நிமிடத்தில் இணைந்து சுந்தரனான இளைஞனாக மிதப்பு நிறுத்தி இறங்கி வந்தது. குயிலியும் வானம்பாடியும் ஆச்சர்யம் தீராமல் பார்த்துக் கொண்டிருக்க அவர்களுக்கு இடையில் புகுந்து   சிரித்தான். 

அவன் திரும்பும்போது தலை தனியாக மிதக்க, மறுபடி உடல் அதுபாட்டுக்கு மிதக்கத் தொடங்கியது. இது உனக்குப் பீடன்று என்று வானம்பாடி பின்னாலிருந்து குழலனை விளித்துச் சொன்னாள். 

நாங்கள் நாற்பது வயதுப் பெண்களில்லையே நீ காமுற என அங்கலாய்த்தாள் குயிலி.  நீங்களிருவரும் காதலர் என்பதே என்னை வசீகரிக்கிறதே பெண்களே எனக் கூர்மையாகப் பார்த்தபடி கூறினான்.

நீலன் வைத்தியர் பற்றிக்  கேட்டதற்கு என்ன பதில்? குயிலி விடாமல் வினவினாள்.

 அவன் சட்டென்று அமைதியடைந்து சொன்னான் – அது எப்படி நிகழ்ந்தது ஏன் நிகழ்ந்தது என்று தெரியவில்லை.   தெரிந்து கொள்ளத்தான் உங்களை இங்கே அழைத்தது. 

இல்லை நாங்கள் இந்த மாதிரி மந்திரவாதம் எல்லாம் செய்கிறவர்களில்லை. அதுவும் பெருந்தேளரின் முன்னிலையில் முக்கிய விருந்தினரை வைத்து நடத்தத் துணிச்சலும் கிடையாது. அதற்கான தொழில்நுட்ப அறிவும் இல்லை. 

அவர் என்ன பேசினார் ஒரு வினாடி துயில் எழுந்ததும்? களப்பிரர் காலத்துப் பேச்சுத்தமிழ் அது தெலுங்கு வடிவெடுத்து வந்து கொண்டிருந்த காலத்து மொழியில் நான் உறங்கப் போகிறேன் என்றார். அதற்கு அப்புறம் உறங்கத் தொடர்ந்தார் என்றாலும் அதற்கு முன்பும் அவருடைய துயில் எந்தக் குறைச்சலோடும் நிகழவில்லை. 

அவர் தெலுங்கில் சொன்னது நேனு நித்ரா போன்னிவண்டி நான் உறங்கட்டே. வானம்பாடி தெளிவாகக் கூறினாள்.  மாரடித்துக் கொண்டிருந்த இரு முது தேளர்கள் கேட்டது இப்படித்தானாம்.

இதை வானம்பாடி சொல்லியிருந்தால் அவளைக் கடத்திப்போய் மாளிகை உச்சியில் உடை களைந்து காற்றோட்டமாகக் கலந்திருப்பேன், நீலன் சொன்னதில் எனக்கிங்கே என்ன போச்சு.

வேறு ஏதோ நினைவு வந்ததாக அவன் நிறுத்தித் தொடர்தான் –

குயிலி வானம்பாடியிடம் நன்னு நீடோ படுகோனிவ்வ்வு  என்று சொன்னால்  கலந்து எவ்வளவு மகிழ்ச்சியடைவீர்களென கேட்க மாட்டேன். எனக்கு அதை நோக்கி இருக்கப் பெரு விருப்பமுண்டு தான். 

வானம்பாடிக்குக்  கோபம் வந்து குயிலி பார்த்ததில்லை. இப்போது பார்த்தாள். கேடுகெட்ட தலையே அதனினும் இழிந்த முண்டமே மந்திரவாத வாந்திகளே. அப்படி ஒரு ஆசை இருக்கா நரகல் பிறவிகளே. நரகம் செல்மின் நரகம் செல்மின். 

அவள் குரலுயர்த்திச் சொல்ல குழலன் புன்னகை பூத்தப்படி சும்மா இருந்தான்.  வீட்டில் கொடுந்தமிழ் பேசுகிறவரா நீலன் வைத்தியர்?  

குழலன் உடலுக்குள் தலை சேர்த்தபடி கேட்டான். 

உடுப்பை அணியும் லாகவம் அதிசயப்படத் தக்கதாக இருந்தது என்று குயிலி சொல்ல நினைத்து மூன்று பேரும் தொடர்பில் இருக்க அதில் இருவர் குலவிக் கொள்ளுதல் முறையன்று எனத் தோன்ற குழலன் இவர்களிடம் சொன்னான் – 

வாருங்கள். போய்ப் பார்த்து வருவோம். 

உனக்குக் காலப் படகு இல்லாமலேயே காலத்தின் முன்னும் பின்னும் பயணம் செய்ய ஆற்றல் இருக்கக் கூடும். ஆனால் நாங்கள் சாதாரண மானுடர்கள். படகெங்கே, துடுப்பெங்கே, கூறுகளெங்கே, அலகெங்கே என்று எல்லாம் சரியாக வந்து பயணம் புறப்பட்டு இறங்குமிடம் ஆயிரம் மைல் தள்ளி வந்தது தெரிய அவத்தைப்பட்டு பேருந்து ஓட்டுவதுபோல் ஜாக்கிரதையாக முன்னும் பின்னும் நகர்த்தி ஒரு மாதிரி இடம் சரியென்று இறங்க வேண்டும். 

குயிலி குழலனின் தலையை வருடிக் கொண்டு சொன்னாள். 

தலை வேணும்னா எடுத்துக்கோ குயிலி என்று தலையைக் கழற்றித் தரக் கையுயர்த்தினான் குழலன். 

ஐயோ வேண்டாம் மூன்றாம் நூற்றாண்டு போகாமல் நீலன் வைத்தியரின் இல்லம் போக முடியுமா? 

ஏன் முடியாது என்று குழலிக்குச் சொல்லி அந்த அறையை மூன்றாம் நூற்றாண்டில் அழுத்தமாக நிறுத்தினான் குழலன். பார்க்கலாம். எனின் பங்கெடுக்க முடியாது. பூடகமாகச் சிரித்தான். காணுக இருவரும்.

அதே மூலிகை அரைக்கும் அறை. ஆளோடி கோடியில் தோத்திர அறை.

நாமும் தான் இந்த இல்லத்தில் ஒரு மாதம் மருந்து அரைத்துக் கொண்டிருந்தோம் சீடர்களாக. நீலன் அண்ணார் காவேரி அண்ணியாரிடம் ஆசையோடு பேசிப் பார்த்ததுண்டா? பழச்சாறு கொண்டு வா, பால் கொண்டு வா, பகல் உணவு இப்போது வேணாம் என்றெல்லாம் தமிழில் ஒற்றை வாக்கியம் பேசினாரே தவிர. அதுவும் நம் மூலமாக.

அறைக் கோடியில் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றுதோறுமாடும் குமரன், எங்கெங்கு காணும் சக்தி, கண்ணபெருமான் ஓவியங்கள். அவை துல்லியமாகத் தெரிந்தன. 

காவேரி அண்ணி அரைமணி நேரம் பிரார்த்தனை செய்தபடி அறைச் சுவரைக் கையால் தடவினாள். மெல்ல அங்கே சுவர் மேலே போக உள்ளே சிறு மேடை. 

அட நாம் கொடுந்தமிழ்ப் பேச்சைத் தேடி வந்தோம். சுவர் பிளக்கக் கண்டோம் கண்டோம் என்றாள் குயிலி. சத்தம் போடாதே என்று வாயில் விரல் வைத்து பேச்சடக்கினான் குழலன். அம்மைக்குக் கேட்காதுதான். எனில் அதிர்வுகள் இருக்கக் கூடும்,

சுவர் பிளந்த இடத்தில் உள்ளே ஒரு சிறு யவன ஜாடி  இருக்கக் கண்டாள் குயிலி. பேசாமல் சைகை செய்தபடி இருந்தாள் குயிலி. 

சிரமப்பட வேணாம் குயிலி. சொன்னேனே நம்மை அண்ணார் மனைவிக்குப் பார்க்கவோ கேட்கவோ முடியாது காலப் படகு போலத்தான் என்றான் குழலன். காற்று மலர்களிடம் பேசுவது போல் பேசு. அவன் நேரம் காலம் பற்றிய போதமின்றிக் கவிதை நெய்தான்,

யவனஜாடியை ஜாக்கிரதையாகச் சரித்தாள் காவேரியம்மை. திராட்சை மது என்றாள் வானம்பாடி. சஞ்சீவனி என்றாள் குயிலி. நானும் அதைத்தான் நினைத்தேன். வேணுமென்றே மாற்றிச் சொன்னேன் என்றாள் வானம்பாடி. 

கலகலவென்று ஒலி எழுப்பிக் குளிகைகள் காவேரியம்மை உள்ளங்கையில் விழுந்து தரையில் சிதறின. திரும்ப அவற்றைப் பொறுக்கி எடுத்து யவன ஜாடியில் வைத்தாள்.

உலர்ந்த சஞ்சீவனி. குளிகை வடிவத்தில். வானம்பாடி சொன்னாள்.

தவழும் கண்ணபிரான் பளிங்குச் சிறு சிற்பத்தின் பின் காவேரி கைவைத்து சிறு உலோக அடுப்பை எடுத்தாள். தீபக்காலில் கற்பூரம் எடுத்து சிக்கிமுக்கிக் கல் கொண்டு தீப்பற்ற வைத்தாள். தீபம் எரியும்போது யவனஜாடியை தீபக்கால் தீபத்தில் வைத்துச் சுடப்பண்ணினாள். ஒரு நிமிடம் நின்று எரிந்த தீபத்தில் குளிகைகள் சூடுபட்டு மின்னின.

சீக்கிரம் வாங்க. தினம் ஜாடியைச் சுட்டுச் சுட்டு கட்டைவிரல் வழண்டு போச்சு. இன்னும் பத்து இருபது நாள்லே நீங்க வரல்லேன்னா நான் எங்க அம்மா வீட்டுக்குப் போயிடுவேன்

காவேரியம்மை சொல்ல, வந்துடறேண்டி சீக்கிரம் வந்துடறேண்டி என்று நீலன் மருத்துவர் குரல். குயிலியும் வானம்பாடியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். குழலன் அடக்கமாட்டாது நகைத்தான்.

மருந்து சக்தி இழக்காமல் இருக்கச் சுட்டு வைப்பது அந்தக் காலத்து வழக்கம் போல. குயிலி சொல்லியபடி இருக்க சுவரை இருந்தபடிக்கு எடுத்து வைத்து காவேரியம்மை வெளியேறினாள்.

தான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சஞ்சீவனி தொடர்ந்து தன் மனைவி மூலம் வீரியம் குறையாமல் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். அதைவிட முக்கியம் அவருக்கு நம்மோடு இப்போது ஐம்பதாம் நூற்றாண்டில் இருப்பது தற்காலிகமானது என்று தெரிந்திருக்கிறது. அப்படித்தான் அந்த வரேண்டி தொனிக்கிறது.

அந்த நம்பிக்கையை யார் கொடுத்தது? குயிலி கேட்க, வானம்பாடியும் அதுவே கேட்க, இருவர் குரலையும் போலி செய்தான் குழலன். 

ஓ நீதானா நீதானா என்று இரு பெண்களும் எதிர்பாராத இந்தத் திருப்பத்தில் தன்னை மறந்து கரவொலி செய்து அடங்கினர். 

நீலன் அண்ணார் என்ன சொன்னார்? குழலன் கேட்டான்.

 ‘வந்துடறேண்டி’ ஒரே குரலில் அந்தப் பெண்கள் கூவினார்கள். 

  திரும்பத் திரும்ப அதைச் சொல்லியபடி இருக்க, சிரிப்பு ஓய்ந்தது. 

எப்படி இவ்வளவு துல்லியமான செயல்பாடுகள் இருந்தும் நீலர் துயில் கலைந்தது? அதைவிட வியக்க வைக்கும்படி அவர் மறுபடி துயிலத் தொடங்கியது! 

குயிலி கேட்டபோது அறையில் வெளிச்சம் மறுபடி குறைந்து வந்தது. நான்கு பரிமாணங்களிலும் சற்றே கூறுகளை மாற்றி அலகிட்டு, நீங்கள் காலப்படகை கர்ப்பூரம் அகத்துக்கு அருகில் அல்லது உள்ளே நிறுத்தியோ அவதானித்திருந்தது போல. 

ஒரு பெரிய அரசு சார்ந்த அறிவியல் கூடம் செய்து நிறுத்தும் காலம் மற்றும் பரிணாமங்களும் தொடர்பான தற்காலிக மாற்றங்களை இங்கே ஒரு தனி மனிதன் செய்ய முனைகிறான். 

குயிலி பார்த்துக்கொண்டே இருக்க நாம் உன் காலத்துக்குப் போகப் போகிறோமா என வானம்பாடி கேட்டாள். இல்லை என்றான் குழலன்.

 நாம் வேறு பிரபஞ்சம், சரியாகச் சொன்னால் நமது பிரபஞ்சத்துக்கு மாற்றுப் பிரபஞ்சம் போய் எட்டிப் பார்த்துவிட்டு வருகிறோம் வாருங்கள் என்றான்.

ஆல்ட் ஸி பிரபஞ்சம் நம் பிரபஞ்சத்துக்கு மாற்றுப் பிரபஞ்சமாகும். நாம் இங்கிருந்து அங்கே போக இன்னும் தொழில்நுட்பம் இங்கே வளரவேண்டி இருக்கிறது. எனில் அவர்கள் நம்மை அங்கே அழைத்துப் போய்த் திருப்பிக்   கொண்டுவந்து விடத் தடையேதுமில்லை. அவர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். குழலன் சொன்னான்.

ஒரு ஐந்து நிமிடத்தில் உங்கள் நான்கு பரிமாணக் கூறுகள் தேவையான அளவு திருத்தப்படும். அடுத்து ஆல்ட் ஸி மாற்றுப் பிரபஞ்சப் பயணம்.

குழலன் கண்ணியமான குரலெடுத்துச் சொன்னான்.

 உச்சந்தலையில் சில்லென்று பனிக்கட்டி வைத்தது போலிருந்தது அந்த இரு பெண்களுக்கும். 

மூன்றாம் நூற்றாண்டு போனபோது மேகலா உருவில் வந்து போனவர்கள் மாற்றுப் பிரபஞ்சத்திலிருந்து வந்த மேகலாவின் பிரதிகள் என்பதோடு, அசல் எந்தப் பிரபஞ்சத்து மேகலா, பிரதிகள் எந்த வேறு பிரபஞ்சத்திலிருந்து வந்து போனவள் என்று புரியாது போனது. 

இப்போது யாரை இங்கே மாற்றுப் பிரபஞ்சத்திலிருந்து வந்து போக எதிர்பார்ப்பு ஏற்படும்? 

குழலனின் அந்தரத்தில் மிதக்கும் தலை கூறியது – நாம்  இனி பலரின் மாற்றுப் பிரபஞ்சப் பிரதியைச் சந்தித்து வரலாம். சுருக்கமாக இருக்கும் இந்தப் பயணம்.

அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இம்மாதிரி சூழல் மாறும்போதெல்லாம் வருவது போல் இருண்டு வந்தது.

 பனி பொழிந்து கொண்டிருக்கும் நிலப் பரப்பு வெளி முழுதுமானது. உறைந்திருந்த பனிப் பாளங்களை வெட்டிச் சிதைத்து தூவெண் பனிச் சிதறல்களாக்கி நடப்பவர்களும், ஊர்தியேறிப் போனவர்களும் வழிசெய்துதர எங்கும் பனியின் ஈரவாடை. 

கரகரவென்று காட்சி மாற பனிக்குவியலுக்குப் பாதி மறைந்து நீலன் வைத்தியரின் வீடு மாற்றுப் பிரபஞ்சத்திலும் இந்தப் பிரபஞ்ச இல்லம் போல, எனினும் பனி உறைந்து இருக்க, வெண்மை பூண்டிருந்தது. 

அந்த இல்லத்தின் முன்வசத்தில் நீலனின் மாறிய யார்யோரோ பிரதியெடுத்து வந்த சீடர்கள் மூலிகைச் செடி பனிக்கட்டியில் தீட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். 

பனிக் குளிர் தாங்க வைக்கும் கம்பளி உடுப்புகளோடு வந்த இருபெண்கள் குயிலியும் வானம்பாடியும்தான். 

வானம்பாடி குயிலி குயிலி என்று அந்த மாற்றுப் பிரபஞ்சக் குயிலியை அழைத்தது அவள் காதில் விழவில்லை. அவள் மாற்று வானம்பாடியை அடுத்து அவ்வண்ணமே அழைத்தாள். 

அந்தப் பிரதி வானம்பாடி ஒரு வினாடி நின்று அவளைப் பார்த்து நாமிருவர் அல்லர் ஒருவருமல்லர் என மனதில் சொல்லிப் போன கணத்தை வானம்பாடி மறக்க மாட்டாள் என்றும். 

குழலன் சொன்னான் – எல்லோரும் இங்கே ஜனித்த குயிலி, வானம்பாடி இத்யாதி. 

அவன் தொடர்ந்தான் –

 இந்த ஆல்ட் ஸி பிரபஞ்சத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் இங்கே அசல். மற்றவர்கள் நகல் பிரதிகள். நம் காஸ்மாஸ் பிரபஞ்சத்தில் ஜனித்தவர்கள் அங்கே அசல். நிகழ்வு எங்கே தொடங்குகிறதோ அந்தப் பிரபஞ்சம் அந்த நிகழ்வுக்கு அசலாகும். புரிந்ததா? 

வகுப்பில் பாடம் எடுக்கும் கவனத்தோடு குழலன் சொல்ல ஒரு கூட்டமாக நாற்பது கடந்த பெண்மணிகள் முளைப்பாரி விதைத்த மண்கலங்களைத் தலையில் சுமந்து நேரே நகர்வதால் கொங்கை நிமிர்ந்து நடந்து போனார்கள். 

குழலன் வேறு சிந்தனைகள் அவனைக் கடந்துபோக அந்தப் பெண்டிரோடு அவர்களுக்குப் பின்னர் சிருங்காரம் சொட்டும் பார்வையோடு மிதந்து போனான். 

இனி அவனைப் பேச வைக்க முடியாது வா போகலாம் என்று குயிலி வானம்பாடியைக் கூப்பிட்டபடி வெளியே போகும் முன் அறைக்குள் கவிந்திருந்த மாற்றுப் பிரபஞ்ச நீலன் இல்லத்துக்குள் நுழைந்து கம்பளி உடுத்து, தலையில் பனிச் சிதறலோடு வெளியே வந்து கொண்டிருந்த குயிலியின் பிரதியைக் கை குலுக்கி அடி பெண்ணே நீ அசலா நான் அசலா எனக் கேட்டபடி அவளது ஈரமான, குளிர்ந்து வழுவழுத்த தோள்களைப் ஸ்பர்சித்தாள். 

அசல் தசை தான். நகம் கொண்டு கீறினால் சின்னக் கீற்றாகக் குருதி சுவடு விட்டுப் போகும்.    ஹோலோகிராம் இல்லை என்று நிச்சயம் செய்து வெளியே நடந்தபோது பனி பெய்த நனைந்த கம்பளி உடுப்பு அணிந்திருந்த அந்தக் குயிலி ஒரு வினாடி நடப்பதை நிறுத்தி, நீ அசலா நான் அசலா தெரியாது இந்தப் பனி இன்னும் சற்று நேரம் பெய்தால் அது விழுந்து சிதறும் வரை நானும் நிஜம் நீயும் நிஜம் மற்றப்படி இருவரும் நகல் நகல். சிரித்தபடி குயிலி வெளியேறினாள்.

அசல் நீலன் என்னோடு தான் இருக்கார். இனி சில நாள் உன்னோடு இருக்கட்டும் – குழலன் குயிலியிடம் சொன்னான்.

தொடரும்

Series Navigationநாட்டுப்பற்று 2மழையுதிர் காலம்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *