நாவல்  தினை              அத்தியாயம்   முப்பத்தேழு  பொ.யு 5000

This entry is part 2 of 5 in the series 29 அக்டோபர் 2023

  

நான் வேணு.  பொது யுகம் ஐயாயிரத்தில் பிறந்து  சகல இனநல அரசில் குடிமகனாக உள்ளேன். அந்த சொற்றொடரை எடுத்து விடலாம். மீண்டும் முதலிலிருந்து தொடங்கலாம். நான் வேணு. இல்லை வாசு. அதுவும் இல்லை. நான் காசி. மாரி. ராஜு. சாமி. என்ன வேண்டுமானாலும்  வைத்துக் கொள்ளுங்கள். 

பெருந்தேளரசர் ஆட்சி செய்யும் கோகர்மலை சார்ந்த விரிந்து பரந்து நீளும் நிலப்பரப்பில் வசிக்கும் சாதாரண குடிமகன் நான். நான் இருக்கும் நையாண்டி ராஜ்ஜியத்தின் ஏறுமாறும், கோமாளித்தனமும், அராஜகமும் பற்றி உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். 

நான் பத்து ஒளியாண்டுகள் தூரம் தொடர்ந்து ஒலி எறியும் கருவி ஒன்றை உருவாக்கி, உருவாக்கினேன், இன்னும் பெயர் வைக்கவில்லை. ஒலி அலைகளை பத்திரமாக வெகுவெகு நீண்ட தொலைவு எடுத்துப்போய் அங்கே சாதாரண எஃப் எம் ரிசீவர் மூலம் சினிமா பாட்டு கேட்பது போல் என் கதையைக் கேட்க முடியும். கேட்கக் கூடும். கேட்க வேண்டும். கேளுங்கள். 

முதலிலேயே சொல்லி விடுகிறேன். ஐயாயிரம் வருடங்களுக்கு ஏற்பட வேண்டிய தொழில்நுட்ப முன்னேற்றம் இங்கே நடக்கவில்லை. நிறைய பிற்போக்காக பூவுலகம் போனதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 

பொது யுகம் 3824-இல் நடந்த மூன்றாம் உலக மகா யுத்தம் அணு ஆயுதப் போராக வடிவெடுத்து நாற்பத்தேழு நிமிடங்கள், முப்பத்தெட்டு வினாடிகளில் உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் அழித்தொழிக்கப்பட்டன. 

ஜெனெடிக் ம்யூடேஷன் ஏற்பட்டு மனிதர்கள் விலங்குகளுக்கு மட்டுமில்லாமல் பூச்சிகளுக்கும் அஞ்சி நடுங்குகிறவர்களாக அவர்களின் மனோபாவம் மாற்றப்பட்டது. 

யார் மாற்றியதா? அது யார், எது என்றெல்லாம் கேட்டு அலுத்துவிட்டோம் அணு ஆயுதப் போருக்குப் பின் பிறந்த நாங்களும். புது சமூக அமைப்பில் தலைமை வகிக்கும் இனமாக தேள்களும், சிலந்திகளும், பாம்புகளும், கரப்புகளும் தங்கள் மேலதிகார ஆதிக்க மேன்மையை நிலைநிறுத்த ஓரினத்தோடு மற்றவை என்று அவ்வப்போது கூட்டணி அமைத்துப் போராடி பாம்புகளையும், சிலந்திகளையும் தோற்க வைத்துவிட்டன.

 ஜெனடிக் எஞ்சீனியரிங்க் அற்புதங்களாக, கரப்புகள் பேச, யோசிக்க, வலிமையுள்ளதாக மாறின. மற்ற இனம் எதையும் விட ரெசிலியன்ஸ் அதிகமான இனம் கரப்பினம் என்பது மூன்று உலக மகாயுத்தங்கள் முடிந்தும் வீட்டு வாஷ் பேசினில் அழுக்குத் தின்று கொண்டிருக்கும் கரப்பைப் பார்த்தால் தெரியும். 

எனினும் பாம்புகள் தோற்ற ஆதிக்க வெளியில் விடம் என்ற கொடிய ஆயுதமும் அதைப் பிரயோகிக்க கொடுக்கு என்ற அங்கமும் கொண்ட தேள்கள் ஆளட்டும் என்று கரப்புகள் விட்டுக்கொடுத்தன.  இணைஆளுமையாக கரப்புகள் பதவியேற்றன. 

ரேடியேஷன் எதிரொலியாக மனிதர் ஐந்தடி வரை உயரம் இருக்க, தேள்கள் நாலடியும், கரப்பு மூன்றடி உயரமும் வாய்ந்தன. பறவைகள் பெயருக்கு குடியுரிமை பெற்றன. உருவம் சிறுத்த முயல்கள், கீரி இவையும் தாம். மானுடர் மேல் இயற்கை பொழிந்த வரம் அவர்களுக்கான ஐந்தடி உயரம் மற்றும் தொழில்நுட்பப் பழமை உணர்ந்து புதியதாக அதன் அடிப்படையில் உருவாக்குவது மனிதர்களுக்கு விதிக்கப்பட்டது. 

பொது யுகம் 3800இல் கிட்டத்தட்ட அதற்குப் பழங்காலமான பொது யுகம் 2100இல் நிலவிய தொழில்நுட்பம், பலதுறை அறிவு என மீட்டெடுக்கப் பட்டு மேம்பட்டது. 

மானுடருக்கு அப்போதே ஆளும் உரிமை தேள்களோடும் கரப்புகளோடும் சமமாக அளிக்கப் பட்டிருக்க வேண்டும். ஏனோ அது நடக்கவில்லை. 

பொது யுகம் 4300இல் நான்காம் உலக மகாயுத்தம் நடந்தது. அது அணு ஆயுதப் போராக மாறாமல் வேதியியல் போரானது. நிறைய இனங்கள் அழிந்துபட, இருப்பவற்றுக்கு இயற்கை பறக்கச் சக்தி அளித்தது. இரை தேட வேகமாகச் செயல்படவே இது. மானுடர்க்கு ஒரு வசதியும் வரவில்லை. இப்போது நாங்கள் பொது யுகம் 2100இல் தான் தொழில் நுட்பம், பல்துறை அறிவில் இருக்கிறோம்.

 பேசும், பறக்கும் இதர இனங்கள் முன்னேற்றத்தைப் பாதிக்கின்றதே அதிகம். முக்கியமாகத் தேள்களும். கரப்புகளும்.  கரப்புகள் மானுடரை மதிப்பதில்லை என்பது தவிர மானுடப் பெண்களின் அந்தரங்கம் நோக்கக் காலில் ஊருதலும் தாழப் பறந்து பயமுறுத்துவதும் செய்வதே அதிகம். 

ஆனால் தேள்களோ மனுஷர் போல் தேள்கள் அறிவும், உணர்ச்சியும்,பேசுதலும், அழகும் கம்பீரமுமாகத் திகழ்வது எல்லாம் செரிந்து தேள்களை மனிதராக்கி அசல் மனிதரை வெட்டுக்கிளி போல் ரசாயன மாற்றம் நேர வைத்து உருவம் குறுக்கி தேட்களுக்குக் கொத்தடிமை ஆக்கி விடுதலே குறிக்கோளாகச் செயல்பட்டார்கள்.

 முக்கியமாக தேள்ப் பெண்களை டிஎனே திருத்தி அழகான மானுடப் பெண்கள் ஆக்க நிறைவேற்றிய திட்டம் தோல்வியில் முடிந்தது. காலை முதல் மாலை வரை மனிதப் பெண்ணான தேள்ச்சி அப்புறம் மறுபடி தேளாகி விடுவதை மாற்ற முடியாமல் போனது. மாற்று மருந்து ஒரு அரைகுறை நிவாரணம் தான். 

டிஎனேவை மாற்றியமைத்து பசுவைப் பறக்க வைத்த பெரும் சக்தி முழுக்க மனிதனாக தேளை ஆக்க முடியாத ஏமாற்றத்தில் மனிதனை கரப்பாக்கலாமா என்று யோசித்தது. கரப்புகளிடமிருந்து இதற்கு எதிர்ப்பு வர திட்டம் கைவிடப்பட்டது. 

கரப்புகளின் நச்சரிப்பு தாங்காமல் கரப்பு ஆண்கள் பெண் தேள்களைக் கண்டு காமுற்று கலவி செய்திடவும், கரப்பு பெண்கள், ஆண் தேள்களைக் கவர்ந்து புணர வழிவகுக்கவுமான ஆராய்ச்சியும் தோல்வியில் முடிந்தது. 

பெருந்தேளர் எல்லா உண்மைகளையும் தன் நாட்டு மக்களிடம் சொல்வதில்லை. முக்கியமாக இந்த மாதிரி இன மாற்றம் சார்ந்த ஆய்வுகளின் தோல்வி குறித்து. அந்த நேரத்தில் தான், அதாவது போன ஆண்டு எப்படியோ பிரபஞ்ச ரகசியங்களில் ஒன்றாக சஞ்சீவனி பற்றிச் செய்தி எழுந்து பிரபஞ்சங்களூடே விரைந்து தீயாகப் பரவிற்று.

 மானுடருக்கு முன்னூறு நானூறு ஆண்டு ஆயுள் நீடிக்கும் அபூர்வ மருந்தான அதை பொது யுகம் 300இல் இருந்து வைத்தியரோடு நடப்பு பொது யுகம் 5000 கொண்டு வந்துவிட வேண்டும் என்று திட்டமிட்டார் பெருந்தேளர். 

தேளரசின் முக்கியமான மானுட அதிகாரிகளான குயிலி, வானம்பாடி என்ற அழகிய இளம்பெண்கள் இந்தக் காரியத்துக்காக அனுப்பப் பட்டனர். கால யந்திரம் பழுதான காரணத்தால் இந்தப் பெண்கள் அகால வெளியில் சிக்கிக் கொண்டனர் என்றும் மிகுந்த சிரமத்தின் பெயரில் வந்து சேர்ந்தனர் என்றும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. 

வந்து சேர்ந்ததும் ஒரு முக்கியமான கடமையை ஆற்றியதற்காக இவர்களுக்கு வெகுமதி எதுவும் தரவில்லை தேளன். மாறாக இந்தப் பெண்கள் நீலன் வைத்தியரோடு வந்து சேர்ந்தபோது மர்மமான ஒரு நபரையும் இவர்களோடு கூட்டிவரச் செய்தான். 

கர்ப்பூரம் என்ற இந்த மனுஷர் அல்லது ஹோலொகிராம் அல்லது ஹ்யூமனாய்ட் எப்படி கால இயந்திரத்தில் அந்தப் பெண்களோடு பயணம் செய்ய முடிந்தது, எங்கே பயணம் தொடங்கினார், யார் இவர் என்று எந்தச் செய்தியும் கர்ப்பூரம் பற்றித் தெரிவிக்கப்படவில்லை. 

தேளரசருக்கு சகல துறை ஆலோசகர் என்று நியமிக்கப்பட்டு சஞ்சீவினி செயலாக்கக் குழுவை நடத்திச் செல்ல நியமிக்கப்பட்டார் இந்த மர்ம நபர். 

சஞ்சீவனிக்கான காத்திருத்தல் சிறு கட்டணம், சஞ்சீவனி முன்பதிவு, சஞ்சீவனி ஒரே கட்டணத்தில் அனைத்து மருந்துகளும் என்றிப்படி கிட்டத்தட்ட ஏழு கட்டணங்களை சஞ்சீவனி பெயரில் வசூலிக்க ஆலோசனை செய்து செயல் திட்டம் வகுத்த இவர் ஹோலோகிராமாக இருப்பதாலேயே இதுவரை இவரை முடித்து வைக்க யாரும் முயன்றிடவில்லை என்று பொதுவாக கருத்து நிலவுகிறது. 

ஹோலோகிராம் என்றால் ரிமோட்டை இயக்கி இல்லாமல் போக்கலாமே என்றும் கேள்வி பெரும்பாலானவர்க்கிடையே உண்டு. அதற்குள் வைத்தியர் நீலன் சகிதம் தானே நீலன் வந்ததற்கு முழுமுதற்காரணம் என்று பெருந்தேளன் வீதி உலா கிளம்பிவிட்டார். 

பேழையில் படுத்த நிலையில் நீலனும், ரதத்தில் கைகூப்பி நின்றும், அமர்ந்தும் இருக்க ரதம் நகர்ந்து வர,  முன்னால் சகல இனமும் பெருந்தேளரைக் கொண்டாடி ஆடியும் பாடியும் வர ஒரு மாதிரி அந்த ஊர்வலம் நடந்தது. 

பலமான வதந்தி இப்போது பரவியுள்ளது என்ன என்றால் நீலன் வைத்தியர் உடல் நாற்பத்தேழு நூறாண்டுகளின் பயணத்தையும் பேழையில் துயின்றபடி தேளரசோடு உலாவந்ததும் அவர் உடல் நலத்தை சீரடைய விடாமல் செய்து விட்டது என்பதாம். 

நீலன் இறந்து விட்டார் என்றும் அவர் இடத்துக்கு அவர் போல் ஒருவரைக் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்றும் மிக வலுவான பேச்சு எழுந்திருக்கிறது. பேழையில் இருந்து விழித்ததுபோல் அவரை நடிக்க வைத்திருக்கிறார்களாம்.  டம்மி நீலன் மூலம் சஞ்சீவனி செய்ய கன்னாபின்னா என்று முயன்றார்கள். கிடைத்த மருந்து விசேஷமானது.  உடலில் பசு தர்மத்தை காம உணர்ச்சியை அதிகரிக்க இதனால் இயலும் என்று புரளி கிளப்பி விட்டு, அத்தனை பேரும் நம்பியதாலோ என்னமோ வீரியம் மிக்க சகல இன சஞ்சீவனிக்கு பலத்த வரவேற்பு. ஏற்றுமதிக்கு இந்த வீர்ய விருத்தி மருந்தை உருவாக்க நாடே இன்னும் ஒரு மாதம் வேறு வேலை செய்யாமல் மருந்து உருவாகத்தில் ஈடுபடுத்தப் பட்டிருக்கிறது. 

இவ்வளவுக்கும், இதை வாங்குவதில் எந்தப் பிரபஞ்சத்தில் எங்கும் எந்த அரசும் அக்கறை காட்டவில்லை. முதல் ஏற்றுமதி விலையற்றதாக இருக்கும் என்று தேளரசர் அறிவித்திருக்கிறார்.  

ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண், பெண் இருப்பைப் பொறுத்து தினம் பத்து லிட்டர் குறைந்தது காய்ச்சி சமர்ப்பிக்க வேண்டும் என்று அரச ஆணை. 

எவ்வளவு சிரமப்பட்டாலும், ஒரு குடும்பத்தில் ஐந்து லிட்டருக்கு மேல் உருவாக்கி தரம் உறுதி செய்து சீசாவில் அடைத்து அரசு மருந்தகத்தில் சேர்ப்பிக்க முடியாது. அற்ப சங்கைக்குக் கழிப்பறை போய் வருவது கூட ஒரு நாளைக்கு இரண்டு முறை, ஒவ்வொன்றும் ஒரு நிமிடம் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் இதற்கு மேல் நேரம் செலவழித்தால் இரண்டு பைனரிகாசுகள் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

கழிப்பறை போகாமல் ஆண்கள் காலி தண்ணீர் போத்தல்களில் மூத்திரம் நிரப்பி ஓரமாக வைத்து வேலையை தொடர்கின்றார்கள். சில போத்தல்கள் கைத்தவறு காரணம் ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்த சகல இன சஞ்சீவனி போத்தல்களோடு கலந்து விட்டதாகக் கூறப்படுகிறது. 

அதிஅதிவீர்ய குணநலம் கொண்டதாக அந்த போத்தல் ஏற்றுமதியாகலாம். இது ஆண்களுக்கு மட்டுமான தீர்வு. 

அவரவருக்கு நிர்ணயிக்கப்பட்ட சகல இன சஞ்சீவனி உற்பத்தி இலக்கை எட்டாதவர்கள் மின்சாரக் குச்சிகளால் முதுகில் கோடுபோடப்பட்டு மிதமான மின்சாரம் கொண்டு வலி ஏற்படத் தண்டிக்கப்படுகிறார்கள். 

சகல இன சஞ்சீவனி மருந்துதானா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லவேண்டி வரும். அந்த திரவத்தில் மாட்டு உன்னி என்ற பெரிய  ஈக்களும், அட்டைப் பூச்சிகளும், வெட்டுக்கிளிகளும் கத்தாழையும், மிண்ட் தைலமும், கொஞ்சம் பார்மால்டீஹைட் சாராயமும், சர்க்கரைப் பாகும் கலந்திருப்பதாகத் தெரிகிறது. 

மூலப் பொருட்களை அரசாங்க ஏற்றுமதி மையத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்று முதல் நாள் அறிவிக்கப்பட்டது குழப்பத்தில் முடிவடைந்தது. இத்தனை கச்சாப் பொருளையும் தனித்தனியாக எடுத்துப் போவதா, சேர்த்து எடுத்துப் போவதா என்ற குழப்பத்தை நீலன் வைத்தியர் அல்லது நீலனாக வேடம் போடுகிற அயோக்கியன் எல்லாத்தையும் ஒண்ணாப் போட்டு கலக்கி கொடு என்று ஆலோசனை சொல்ல அப்படியே அளிக்கப்பட்டதாம். 

அடுப்பு எரித்து மருந்து காய்ச்ச எரிபொருள் வீட்டுக்கு வீடு வந்து கொடுக்கப்படும் என்று அறிவித்ததும் முதல் நாளே சிக்கலில் முடிந்தது. ஸ்டவ் எரித்து மருந்து செய்ய மண்ணெண்ணய் எத்தனை லிட்டர் தருவது, வாயு எரிபொருள் அடுப்புக்கும் மின்சார அடுப்புக்கும் எப்படி எரிபொருள் தருவது என்பது பிரச்சனை ஆனது. 

எரிபொருளுக்குப் பதிலாக சகல இன சஞ்சீவனி எரிபொருள் விலை மதிப்புக்கு – அது மின் கட்டண மதிப்பாக இருக்கலாம்- வீடுகளுக்குக் கொடுக்கப்படும் என்று  கேடுகெட்ட கர்ப்பூரம் ஆலோசனை சொன்னது பெருந்தேளரால் நல்ல வேளையாக நிராகரிக்கப்பட்டது. 

மேலும் எரிபொருள் மதிப்புக்கு காசு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சகல இன சஞ்சீவனி உருவாக்கும் பணியில் ஈடுபடும் ஒவ்வொரு எண்பது வயதுக்கு உட்பட்ட ஆண், எழுபது வயதுக்கு உட்பட்ட பெண், மூன்று வயதிலிருந்து பத்து வயது வரையான சிறார் ஒவ்வொருவர் ஆகிய அனைவருக்கும் சகல இன சஞ்சீவனி அடையாள அட்டை வழங்கப்படும். அதைக் காட்டினாலே விலை இல்லாத உணவு வீடுகளுக்கும், பள்ளிக்கூடப் பணியிடங்களுக்கும் போய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

முதல் நாள் வேகாத அரிசியும், கொதிக்காத குழம்பும் வாங்க மாட்டோம் என்று திரும்ப அனுப்பப் பட்டது. எல்லா வீடுகளிலும் சஞ்சீவனி காய்ச்சும் சட்டியை அடுப்பை விட்டு இறக்கி, ஒரு மணி நேரம் சமையல், சாப்பாட்டுக்கு அவரவர்களே எடுத்துக் கொண்டார்கள்.  

மின்சார அதிர்ச்சி தரப்படும் என்று அரசு சஞ்சீவினி அமைப்பு, என்றால் அந்தக் கேடுகெட்ட பயல் கர்ப்பூரம் வாய்க்கு வந்த உத்தரவைப் பிறப்பிப்பது உடனடியாக நிறுத்தாவிட்டால் கர்ப்பூரத்தின் சந்தியில் மின்சார அதிர்ச்சிக் குச்சிகள் செருகப்பட்டு அதி அழுத்த ஹை டென்ஷன் மின்சாரம் செலுத்தப்படும் என சத்தமாகச் சொல்லப்பட்டது. அந்த குச்சிகளும் தண்டனையும் இரண்டாம் நாள் சகல இன சஞ்சீவனி உருவாக்கத்திலிருந்து ரத்து செய்யப்பட்டன. 

அசைவ உணவு தினசரி அளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் தினசரி நிறைவேற்ற முடியாமல் ஒரு மணி நேரம் சமைக்க, இன்னொரு மணி நேரம் உண்ண, பாத்திரம் துலக்க என்று ஒதுக்கப்பட்டது. தினசரி உழைப்பு பதினொன்று மணி நேரம் அதிகம் என்று குடிமக்கள் ஆத்திரம் கொள்வது இயல்பானது.  

சகல இன சஞ்சீவனி உருவாக்க தினக்கூலி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இது எவ்வளவு தரப்படும் என்று நிர்ணயித்திருந்ததை ஏற்றுக்கொள்ளாமல் அல்ல. கூலி என்று கூறுவது மரியாதைக் குறைவு என்று கிட்டத்தட்ட அனைவரும் குறைப்பட்டார்கள். கவுரவ ஊதியம் என்று பெயர் சூட்டி தினம் இருபது பைனரி நாணயங்கள் தரப்படும். முப்பது நாணயங்கள். கருவூலம் வெற்றிடமாகப் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தபடி மனமே இல்லாமல் சம்மதித்தார் பெருந்தேளர். 

நடுவில் கர்ப்பூரம் பாதி ஊதியம் மருந்து நிறைந்த சீசாவாகத் தரப்படும் என்று அறிவித்தது பெரும் போராட்டம் காரணம் பின்வாங்கப் பட்டது. 

சனி, ஞாயிறு மற்றப் பொது விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக பெருந்தேளர் அறிவித்து தேசிய அவசரநிலை காரணம் விடுமுறைகள் ரத்து ஆகியுள்ளதாகச் சொன்ன நாள், மணிக்குத்தான் கோகர்மலை நாட்டில் புரட்சி எழுந்தது.

(தொடரும்)

Series Navigationஓர் அமெரிக்கத் தமிழனின் சிந்தனைகள்தமிழக எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *