இலக்கிய முத்துகள்

This entry is part 1 of 4 in the series 24 மார்ச் 2024

                                    பாச்சுடர் வளவ. துரையன்

[திருமங்கை ஆழ்வார் அருளிய ‘பெரிய திருமொழி” இலக்கிய நோக்கில் எளிய உரை”-நூலாசிரியர் முனைவர் ஏ.வி. ரங்காச்சரியார்—வெளியீடு:அருள்மாரி அருளிச்செயல்  ஆய்வகம், ஸ்ரீ வேங்கடார்ய குருகுலம், 151, மேல வீதி, சிதம்பரம், ஸ்ரீமந் நாதமுனிகள் 1200 அவதார ஆண்டு திருநக்ஷத்திர வைபவ வெளியீடு—பக்-409—விலை குறிப்பிடப்படவில்லை] 

இந்நூலின் தோரண வாயிலில் திருமங்கையாழ்வார் பாடியுள்ள பல்வகை இலக்கணத்துறைகளை முனைவர் ஏ.வி. ரங்காச்சாரியார் அவர்கள் விரிவாக எடுத்து வியந்தோதி இருக்கிறார். மாலை, பிள்ளைத் தமிழ், ஊடல், சாழல். அந்தாதி, பூசல் போன்ற பல துறைகளை மங்கைமன்னன் எப்படிப் பயன்படுத்தி உள்ளார் எனக் காட்டுவதோடு ஒவ்வொன்றுக்கும் சான்றுகள் எடுத்துக் கூறியிருப்பது போற்றற்குரிய ஒன்றாகும்.

இந்நூலின் மையம் இலக்கிய நோக்கு என இருப்பதனால் திருமங்கையாழ்வார் குமுதவல்லியை மணம் புரிந்தமையையும், நாள்தோறும் அன்னதானக் கைங்கர்யம் செய்தமையையும் கூறாமல் விடுபட்டிருப்பது புலனாகிறது.

பாடப்படும் ஒவ்வொரு திருமொழியிலும் காட்டப்படும் திவ்யதேசம், அங்கே எழுந்தருளியிருக்கும் பெருமாள் மற்றும் தாயாரின் திருநாமங்கள், இருப்பிடம் ஆகியவையும் தேவையான அளவில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

ஏழாம் திருமொழியில் அகோபிலம் என்னும் சிங்கவேள்குன்றம் காட்டப்பட்டுள்ளது. அங்கே திருமால் நாசிம்ம அவதாரமாக எழுந்தருளி உள்ளார். அதற்கேற்றவகையில் நரசிம்மனைக் காட்டும் பரிபாடலின் பாடல் அடிகள் காட்டப்பட்டுள்ளன, மேலும் “மடங்கலாய் மாறட்டாய்” எனும் சிலம்பின் பாடலடியும், கம்பர், ”சிரித்தது செங்கட்சீயம்” எனக் கூறுவதும் பொருத்தமாகக் கூறப்பட்டிருப்பது நூலாசிரியரின் இலக்கியத் தேர்ச்சிக்குச் சான்றாக விளங்குகிறது.

இரண்டாம் பத்து நான்காம் திருமொழிக்கு விளக்கம் கூறும்போது 7-ஆம் பாசுரத்தில் “புகர் ஆர் உரு ஆகி முனிந்தவன்” என்பதற்குத் தெளிவான விளக்கம் கூறப்பட்டுள்ளது. இச்சொற்றொடர் இரண்யாட்சனையும் பவுண்டரக வாசுதேவனையும் குறிக்கும் என்று காட்டப்பட்டுள்ளது, மேலும் பவுண்டரவாசுதேவன் பற்றிய வரலாற்றையும் படிப்பவர்கள் உணரும்படிக்குச் சுருக்கமாக ஐந்தே வரிகளில் சுவாமிகள் எழுதி உள்ளார்.

ஏழாம் திருமொழி இரண்டாம் பத்தில் முதல் பாசுரத்தில் “குவளை அம் கண்ணி, கொல்லி அம்பாவை சொல்லு” எனும் அடி வருகிறது. இதில் வரும் கொல்லிப்பாவை என்பதென்ன என்பதைச் சரியாக இந்நூல் காட்டுகிறது. ”அது கொல்லி எனும் மலையில் உள்ள ஒரு பெண் சிலை; அது நகைத்தே கொல்லக்கூடியது; சிலப்பதிகாரம், கடலாடு காதையில, ”திருமகள் தன் மீது மோகம் கொண்ட அவுணர் விழும்படி இப்பாவை உரு எடுத்து ஆடினார் என்று கூறுவதையும், அப்பாவையின் அழகைத் தலைவியின் அழகுக்கு உவமையாக அகநானூறு, நற்றிணை, புறநானூறு, சீவகசிந்தாமணி போன்ற இலக்கியங்கள் காட்டுகின்றன” என்பதையும் நூல் காட்டுகிறது.

தன்மை நவிற்சி அணி என்பது உள்ளதை உள்ளபடியே காட்டுவதாகும். இதனை இயல்பு நவிற்சி என்றும் கூறுவர். அதாவது ஒரு காட்சியோ அல்லது ஒரு பொருளோ அதன் இயல்புக்கேற்றபடி இருப்பதை அப்படியே காட்டுவதாகும். இந்த அணியைத் திருமங்கையாழ்வார்  நான்காம் பத்தின் இரண்டாம் திருமொழியில் பயன்படுத்தி இருப்பதை  ஏ,வி.ஆர். சுவாமிகள் எடுத்துக் காட்டியிருப்பது அவர்களின் நுண்மாண் நுழைபுலத்திற்கு எடுத்துக் காட்டாகும்.

“குந்தி வாழையின் கொழுங்கனி நுகர்ந்து தன் குருளையைத் தழுவிப்போய்

 மந்தி மாம்பணை மேல்வைகும் நாங்கூர் வன் புருடோத்தமே”

என்னும் பாசுர அடிகள், “ தாய்க்குரங்கு வாழைப்பழத்தை உண்டு, தன் குட்டியை அணைத்துக் கொண்டு மாமரக்கிளையில் உறங்கும் திருநாங்கூரில் உள்ள வண்புருடோத்தமம்” என்று பொருள் தருகின்றன. குரங்கின் செயல்கள் இயல்பாக உள்ளதை உள்ளபடியே கூறி அழகான வருணனையைக் காட்டுவதால் இது தன்மை நவிற்சி அணி ஆயிற்று என்று நூல் காட்டுகிறது.

”தாது ஆடுவன மாலை தாரானோ” என்று எம்பெருமானின் மீது பற்று வைத்த தலைவி சொல்லிச் சொல்லிச் சோர்வு அடைந்தாள் என ஐந்தாம் பத்து, ஐந்தாம் திருமொழியின் ஆறாம் பாசுரத்தில் மங்கைமன்னன் அருளிச் செய்கிறார். இப்பாசுரத்தில் உள்ள வனமாலை என்பது திருமாலின் திருத்தோளிலிருந்து திருவடி அளவும் தொங்கும் மாலை என்று சுவாமிகள் வியாக்கியானம் கூறியிருக்கிறார். இச்செய்தி ஓர் அரிய செய்தியாகும்.

இந்நூலின் 246-ஆம் பக்கத்தில் நூலாசிரியர் பாலைப்பண் பற்றி அனைவரும் அறியவேண்டிய ஒரு குறிப்பைத் தந்துள்ளார். ”இப்பண் பாலை நிலத்துக்கு உரியதாகும்; நண்பகலில் இப்பண்ணினை இரண்டாம் சாமத்தில் அதாவது

9-லிருந்து 12 மணிக்குள் எழுப்புவர். இப்பண் மிகவும் இனிமை உடையதாகும். பொருநராற்றுப்படை இப்பண்ணானது தீயவரையும் நல்லவராக்கும் சிறப்பு கொண்டது என்று தெரிவிக்கிறது. பரிபாடல் 1 முதல் 11 பாடல் வரை இப்பண்ணிலேயே இசையமைக்கப்பட்டுள்ளது” என்று சுவாமிகள் ஏழாம் பத்தில் மூன்றாம் திருமொழியின் ஏழாம் பாசுரத்தில் உள்ள “பண்ணின் இன்மொழி யாழ்நரம்பில் பெற்ற பாலை ஆகி” என்பதற்கு வியாக்கியானம் எழுதும்போது கூறுகிறார். இக்குறிப்பு அவரின் சங்க இலக்கியப் புலமையோடு இசையறிவையும் நமக்குக் காட்டுகிறது.

சில அருஞ்சொற்களுக்குப் பொருளும் ஆங்காங்கே தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். “சோத்தம்” [பக்-31] என்பதற்கு “வணங்குவதற்கு ஏற்ற அடக்கத்தைத் தெரிவிக்கும் சொல் என்று காட்டியிருக்கிறார். இச்சொல் பக்-65-இல் ஆறாம் பாசுரத்திலும், பக்க-342-இல் முதல் பாசுரத்திலும் கூடக் காணப்படுகின்றது.

பத்தாம் பத்தின் ஒன்பதாம் திருமொழியில் உள்ள பழமொழிகளையும் நூலாசிரியர் நன்கு விளக்கி உள்ளார். “இடையன் எறிந்த மரம்” எனும் பழமொழி பழமொழி நானூறு எனும் நூலில் 224-ஆம் பாடலில் காட்டப்படுகிறது. இதை மங்கை மன்னன் [11-8-6] எடுத்தாண்டுள்ளார். இதைக் கிராமப்பகுதிகளில் ”இடையன் வெட்டு அராவெட்டு” என்று கூறுவர்.

இப்பழமொழிக்கு இடையன் நாள்தோறும் மரத்தைச் சிறிது சிறிதாகக் குறைப்பான் என்றும், இடையன் மரத்தை முழுதும் வெட்டாமல் அரைகுறையாக வெட்டிப் பாதி வெட்டாமல் விடுவான் என்றும் இரு பொருள்கள் கூறுவதை நூலாசிரியர் கூறுகிறார்.

திருமங்கையாழ்வார் அருளிச்செய்துள்ள “பெரிய திருமொழி” ஒரு பெரிய கடலாகும். முனைவர் ஏ.வி. அரங்காச்சாரியார் அக்கடலுள் மூழ்கி இலக்கிய முத்துகளை நமக்காக எடுத்துத் தந்துள்ளார். இத்தகைய அரும் தமிழ்த்தொண்டைத் தமிழ் கூறும் நல்லுலகம்  போற்றித் தொழல்வேண்டும்.

Series Navigationஜானி
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *