சாமியாரும் ஆயிரங்களும்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 31 of 45 in the series 9 அக்டோபர் 2011

 

                                                                                                            சித்தநாத பூபதி

ஒன்று மட்டும் நிச்சயம். நாம் கொஞ்சம் நெகிழ்வாக இருந்து விட்டால் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் இத்தகைய சூழ்நிலையச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் . மற்றவர்களுக்கு வரும் துன்பம் நமக்கு வரும்போது அது வெறும் தகவல் இல்லை. எனக்கு அப்படி ஒரு துன்பம் வந்தபோது துன்பமாகத்தான் இருந்த்து. அதைத் தனக்கு வந்த துன்பமாகவே கருதிய நண்பர் உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் பரவாயில்லை. எனக்காக வாருங்கள் என்று வழக்கமான மனைவி செண்டிமெண்ட்டைப் பிடித்துக் கொண்டு இங்கே கொண்டு வந்து விட்டார் இந்தச் சாமியாரிடம். நமக்கும் நாலுவிதமான சூழ்நிலைகளைப் பார்த்தால் தானே கதை எழுதமுடியும் என்ற சால்ஜாப்புடன் வந்துவிட்டேன்.

சும்மா சொல்லக்கூடாது சாமியார்களுக்கு மட்டும் எப்படித்தான் இப்படியான இடங்கள் அமைகின்றனவோ. மலையடிவாரத்தில்  நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் .எங்கும் பூந்தோட்டங்கள். மரங்கள். செயற்கைப் புல்வெளிகள். நீரூற்றுக்கள். எதுவும் திட்டமிட்டு அமைக்கப்பட்ட்து போல் தெரியவில்லை. சாமியாரின்  ‘அருளாசி’யால் புதுப்பணக்காரர்களின் அவ்வப்போதைய தயவு என்று தெரிந்தது. நாங்கள் ‘காத்திருப்பு’ மண்டபத்தில் காத்திருந்தோம். பலருக்கும் பலவிதமான துன்பங்கள். மும்பையில் இருந்த போது மராத்திய முரசு பேப்பரைப் பார்த்தால் மனிதனுக்கு எத்தனை விதமான துன்பங்கள் இருக்கின்றன என்று வசியமருந்துக்காரர்களின் விளம்பரங்களைப் பார்த்து தெரிந்து கொண்டேன்.  ‘சக்களத்தி தொல்லையா ’ எங்களிடம் வாருங்கள் என்பதும் அதில்  ஒரு வகை. இவ்வளவு ஸ்பஷ்டமாக தமிழ்நாட்டில் விளம்பரம் வருவதில்லை.

இந்தச் சாமியார் சக்தி கூடியவராம். அருளாசி கிடைப்பது அவரவர் புண்ணியம் என்றார்கள். அவ்வளவு புண்ணியம் இருந்தால் ஏன் அருளாசியைத் தேடி வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

“சார் சந்தேகப் பட்டா எதுவும் நடக்காது. முழுசா நம்பினாத்தான் நல்லது நடக்கும்” என்றார் நண்பர்.

நாம் சந்தேகப்படுவது இவருக்குத் எப்படித் தெரிந்தது. இவருக்கும் சில சக்திகள்-சித்திகள் இருக்கின்றனவா?  எல்லோரும் கூட்டா ? இருந்தாலும் அப்படிக் காண்பித்துக் கொள்ள முடியுமா !

“ நான் சந்தேகப்படாமல் இருக்க வைக்க அந்தச் சாமியால் முடியாதா.”

“ம்ம் . ஒங்களக் கூப்பிட்டு வந்ததற்கு சாமி என்ன என்ன செய்யப்போகுதோ ?.”

“ வேற என்ன செய்யும்..கண்ணக் குத்தும்.” எளிய கேள்விகளுக்கு கடினமான பதில் சொல்ல நான் என்ன அறிவுஜீவியா !

எங்கும் திடீர் பரபரப்பு. பரவசம்.

“ சாமி வந்துட்டார் ! சாமி வந்துட்டார் ! .”

நான் ரெம்பவே ஏமாந்தேன். ஏதோ காவி கட்டி , ஜடாமுடி தரித்து திருநீறு துலங்க , சீடர்கள் புடைசூழ காட்சியளிப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்யானது. டாடா சுமோவில் தானே டிரைவ் பண்ணிக் கொண்டு வந்திறங்கினார். கூலிங் கிளாஸ். செல்போன். நெற்றியில் சிறு கீற்றாகத் திருநீறு. நல்ல காலம் பேண்ட் சர்ட் போடாமல் வேட்டியிலிருந்தார். இறங்கினார். எங்கோ மறைந்தார்.

“ எல்லோரும் ஆசி மண்டபத்துக்கு வாங்க. செல்போனை சுச்சாப் பண்ணுங்க. எல்லாரும் அமைதியா ஒக்காந்திருக்கனும்.  சாமிக்குக் கோவம் வராமப் பாத்துக்கங்க.” பயிற்றுவிக்கப்பட்ட ஒருவர்.

திடுதிடுவென உள்ளே நுழைந்தோம்.அமர வைக்கப் பட்டோம். என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. பளபளப்பான அரண்மனை முற்றம் போலக் காட்சியளித்த்து அந்த மண்டபம். தொங்கும் சர விளக்குகள். வண்ணத் திரைச்சீலைகள். இரண்டு மூன்று பேர் உட்காரத் தக்க சிம்மாசனம். தகதகத்தது. இந்தக் கடும் மலையடிவாரக் கிராமத்தில் இத்தனை மினுமினுப்பா ? நடு நாயகமாக அவர் வீற்றிருந்தார். பக்கத்தில் விசிறிவிட இரு பெண்கள் தான் இல்லை. சாமியாரும் தூய பச்சை நிறப் பட்டாடை அணிந்து ( சூப்பரான குஜராத்தி சுடிதார் மெட்டீரியல். ஜிமிக்கி வைத்தது) , பலவித வாசனைத் திரவிய மணங்களுடன் அருமை ! அருமை !. எவ்வளவு தான் விவரித்தாலும் நேரில் பார்ப்பது நேரில் பார்ப்பது தான். எதற்கென்று தெரிய வில்லை. கண்பார்வையில் படும் படி இரண்டு குதிரைகள் கட்டப் பட்டிருந்தன.

அருளாசி நேரம் துவங்கியது. அவரது  பார்வையால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு மட்டும். எளிய துன்பங்கள். பொண்ணுக்கு எப்ப கல்யாணம் நடக்கும் ? பையனுக்கு வேலை கிடைக்குமா ? (ஆணாதிக்கம் ! ஆணாதிக்கம்!)

புருசன் திரும்பி வருவாரா ?  பங்காளி உருப்படாமப் போக என்ன வழி ? கொஞ்சம் வித்யாசமான கேள்விகள். ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது. சுற்றி வளைத்துப் புரிந்தும் புரியாமலும் இருந்த பதில்கள் எல்லோரையும் திருப்திப் படுத்தின.சிலர் பரவசம் அடைந்தார்கள்.  பதில் முடிந்தால் ஒரு கண்ணசைப்பு . மணி ஒலிக்கும். குதிரைகள் கனைத்தன. அதற்குப் பின் அவர் துணைக் கேள்வி ஏதும் கேட்க முடியாது. இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் எல்லா அருளாசி முடிவிலும்  “ஆத்தா சொன்ன படி நடந்தா ஆத்தாவுக்கு என்ன செய்வ ?” என்று முடித்தார். சிலருக்கு அவரே என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார்.

“  என் பிள்ளைக எல்லாம் இங்க வர ரெம்பக் கஷ்டப்படுறாங்க. நீங்க போக்குவரத்து துறைல தான் இருக்கீங்க . இன்னும் ஒரு டிரீப் கூட விட முடியுமான்னு ஆத்தா கேட்குறா ”

பலரிடம் விளையாட்டுப் போல . உலகமே அவளுக்கு விளையாட்டுத்தானே என்றார், நண்பர். பாட்டா எழுதினா காலங்கடந்து நிக்கும் இந்த தத்துவத்த.

“டேய் ஆத்தாவுக்கு ஆயிரம் தேன் மிட்டாய் வாங்கிக் கொடுப்பியா.  ! .”

“ஆத்தாவுக்கு ஆயிரம் சூடம் ஏத்துவியா .”

“ ஆயிரம் வெளக்கு ஏத்துவியா .”

சாமிக்கோ , சாமியாருக்கோ ஆயிரம் ரெம்பப் பிடித்த நம்பர் போல.

ஒரு பெண்மணி மட்டும் இவர் கேட்க கேட்கப் பேசாமலிருந்தார் ? . “ இங்க வந்துட்டுப் பேசாம இருந்தா என்ன அர்த்தம். வாய விட்டுச் சொன்னாத்தானெ சொல்லும் போதே இது உண்மைலயே துன்பமா ? துயரமான்னு தெரியும். மனசுக்குள்ளயே மறுகினா சாப்பாட்டுக்கு உப்பு இல்லாதது கூடத் துன்பம் தான். வெளிய சொல்லனும். வெளிய சொல்ற அளவுக்கு இருக்கிற அளவுக்குத் துன்பம்னாத் தான் வெளிய சொல்லனும். ஒனக்கு இன்னொரு மாத்து சொல்றேன். அந்த ரூமுக்குள்ள போ. ஆத்தாவ அங்க வெளக்கு உருவத்துல ஏத்தி வச்சிருக்கேன். எங்கிட்ட சொல்ல முடியலேன்னா அவகிட்ட சொல்லு. மூணு வாரத்துல ஒம் பிரச்சனை தீரும். ஆத்தாவுக்கு என்ன செய்வ. ஆயிரம் விசில் வாங்கிக் கொடுப்பியா ? ”

பெண் மறுபடியும் பேசாமல் மௌனம் சாதித்தார்.

“ சாமி அவளுக்கு பேச்சு வராது . பேச்சு நல்லபடியா வரணும்னு போகாத இடம் இல்லை. மூணு வாரத்துல பேச்சு வந்துட்டா ஆயிரம் என்ன பத்தாயிரம் விசில் வாங்கித்தாரேன் ” அவளுடன் கூட வந்தவர் – அண்ணனாக இருக்கலாம்.மனைவிக்கு பேச்சு வராவிட்டால் கணவன் ஏன் சாமியாரிடம் கூப்பிட்டு வருகிறான்.?  சாமியார் திகைத்துப் போனது கண்கூடாகத் தெரிந்தது. நல்ல காலம் கூட வந்தவர்  மெதுவாகப் பேசியதால் பலருக்கும் கேட்கவில்லை.  ஆயிரம் விசில் வரப்போவதில்லை என்று தெரிந்தது. மணி ஒலித்தது. குதிரைகள் கனைத்தன. திரை போடப்பட்டது. அடுத்தவர்.

என் முறை வந்தால் என்ன கேட்பது என்று நினைத்துப் பார்த்தேன். எனக்கு கொஞ்ச நாளாகவே முட்டி வலி. நடக்கும் போது கொஞ்சம் பிசகி , விழுந்து லேசான அடி . அவ்வப்பொழுது வலி விண் விண்னென்று தெறிக்கிறது. கை வைத்து முட்டியைத் தடவுவாறா! ச்சே . அப்படி இருக்காது. தைலம் கொடுக்கலாம் இல்லாட்டி சூடம் ஏத்தச்சொல்ல்லாம்.  ஒரு வேளை தீர்த்து வைத்துவிட்டால் என்ன கேட்பார் ? எதை எடுத்தாலும் ஆயிரம் ஆயிரமா இல்ல கேட்குறார்.  இன்னொரு திட்டமும் திடீரென்று தோன்றியது . என் மனைவி கோவிலுக்குப் போகையில் தனக்கு பிரச்சனைகள், துன்பங்கள் ஏதும் இல்லாத சமயத்தில் “சாமி பேருக்கே அர்ச்சனை பண்ணிருங்க” என்பாள். சில சமயம் எல்லோரையும் காப்பாத்து . மக்கள் நல்லா இருக்கனும் . மழை பெய்யனும் என்பாள். நாமும் அதே போல ஒலகத்துல எல்லாத் துன்பங்களும் தீரணும்னு சாமியார்கிட்ட கேட்கலாமா ? எல்லார் பிரச்சனையும் தீந்தா நம்ம பிரச்சனையும் தீந்த மாதிரித்தானே. பொதுநலவாதிங்குற நல்ல பேரும் கிடைக்கும். ஆனால் என்னைக் கூப்பிடவே இல்லை. சதி ! சதி! .

மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.  இனி சாட்சி நேரம். அதாவது பழைய அருளாசிகளால் நலம் பெற்றவர்கள் , வளம் பெற்றவர்கள் காணிக்கை செலுத்தும் நேரம். இது பலருக்கும் நம்பிக்கை ஊட்டும் விதமாக இருக்கும். என் நண்பர் அதற்கும் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்றார். எப்படியாவது ஏதாவது ஒன்றை ஆயிரத்தால் பெருக்கி இந்த மண்டபத்தில் வைத்து விடவேண்டும் என்று ஒன்று இண்ட்டு ஆயிரம் நண்பர்கள் முயல்வது போல இருந்தது.

இந்த நேரம் நான் எப்படி எதிர்பார்த்தேனோ அப்படியே இருந்தது. நல்ல திட்டமிடலில் ஏது சுவாரஸ்யம். சாமியார் கேலியும் கிண்டலும் திட்டுமாகப் பேசிக் கொண்டிருந்தார். அதற்கும்  ‘அருள்’பொருள் விளக்கம் கண்டு கொண்டிருந்தார்கள் பக்தர்கள். கடைசி நேரத்தில் வந்த பலனாளிகள் கொஞ்சம் சொதப்பினார்கள். இன்னும் கடைசியாக ஒருவர் பின்னால் ஒரு பெட்டியுடன் பதற்றத்துடன் காத்திருந்தார். அவர் முறையும் வந்தது.  அனேகமாக கடைசி நேரத்தாளாக இருக்க வேண்டும் . தயாரிக்கப்படாத விசாரிக்கப் படாத சாட்சி என்பது பதற்றத்தில் தெரிந்தது.

“ என்ன வெள்ளப் பாண்டி சௌக்கியாமா”

அவர் பரவசமானார். சாமியார் பேரை ஞாபகத்தில் வைத்திருக்கிறாரே .என்ன சக்தி ! என்ன சக்தி!

“ ஒங்க புண்ணியத்துல நல்லா இருக்கேன் சாமி ! .”

“ நாம் என்ன செய்யுறோம் . அவ சொல்றத நான் சொல்றேன் .”

“ இவருக்குப் போன தடவ என்ன சொன்னோம். ஞாபகம் இருக்கா கருப்பா ! .” பக்கத்தில் பார்த்தார்.

“ இருக்கு சாமி . இருக்கு. பஞ்சு யாவாரம் பண்ணட்டான்னு கேட்டார்.  நாம வேண்டாம் மர யாவரம் பண்ணுனா பத்துலெட்சம் ஒரு வாரத்துல வரும்னு சொன்னோம்.” – சீடர் கருப்பன் சொன்னார்.

“ என்ன வெள்ளப்பாண்டி லெச்சுமி சொகமா இருக்காளா ! .” இது சாமியார்.

“ புரியலியே சாமி ! .”

சுற்றி நின்றவர்கள் சிரித்தார்கள்.

“ லாபம் கெடச்சாதான்னு சாமி கேட்கிறார்.” யாரோ எடுத்துக் கொடுத்தார்கள்.

“ ஆமாஞ்சாமி. நல்ல காலம் பஞ்சு யாவாரம் பாத்து காத்துல பறக்காமப் போனேன்.”

சாமியார் முகத்தில் வெற்றிப் பெருமிதம்.

“ கருப்பா ! இவெருக்கு தெட்சனை என்ன சொன்னோம்! .”

அவர் ஒரு மாதிரியாச் சிரிச்சார்.

“சொல்லுலே . நான் சொன்னதச் சொல்ல ஒனக்கு என்ன வெக்கம் ! .”

“ சாமி அவருக்கு யாவாரத்துல லாபம் கெடச்சா ஆயிரம் பாட்டில் பிராந்தி கேட்டோம் .”

“ என்ன வெள்ளப்பாண்டி. கேட்டுச்சா . ஆத்தாளுக்கு இல்ல. அவளுக்கு தீத்தம் போதும் . வெளிய நிக்கானே எல்லக்கருப்பன். அவன் துடியான சாமி. காவக் காக்கனும்னா சாராயம் குடிப்பாம். தப்புச் செஞ்சா கொதவளையப் பிடிச்சு ரெத்தம் குடிப்பாம் தெரியுமாலே! .”

“ ஆட்டும் சாமி  ! .”

“ ஆயிரம் பாட்டில் பிராந்தி கொண்டு வந்திருக்கியா .”

“ ஆமாஞ்சாமி .” வந்தவர் தலையாட்டினார்.

“ வண்டி எங்க நிக்கி  .”

“ எந்த வண்டி சாமி ! .”

“ மூதி. ஆயிரம் பாட்டில் பிராந்தியக் கொண்டு வாந்த வண்டி  ! .”

அவர் கையில் வைத்திருந்த பெட்டியைத் திறந்தார். எல்லோரும் ஆவலுடன் பார்த்தார்கள். அவ்வளவு பெரிய காணிக்கை இந்தப் பெட்டியிலா ?.

அவர் அந்த வெள்ளைப்பேப்பரைத் கிழித்தவுடன் ஆயிரம் ‘தேன்’ பாட்டில்களில் பிராந்தி ஊற்றப் பட்டிருந்தது தெரிய வந்தது. ஒரு நிமிசம் நானே ஆடிபோய்விட்டேன். மண்டபத்தை மூழ்கடிக்கும் படி படுபயங்கர விசில் சத்தம் கேட்ட்து.

மணி ஒலித்தது. திரை போடப்பட்டது.  குதிரைகளும் சிரிப்பது போல் கனைத்தன.

Series Navigationகொக்கும் மீனும்..Strangers on a Car
author

Similar Posts

Comments

  1. Avatar
    Jacob says:

    சுவரஸ்யமான நடை.மெல்லிய நக்கல்.

    “ வேற என்ன செய்யும்..கண்ணக் குத்தும்.” எளிய கேள்விகளுக்கு கடினமான பதில் சொல்ல நான் என்ன அறிவுஜீவியா ! :)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *