வெங்கடேசன் நாராயணசுவாமி
(அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். உங்கள் Thinnai இதழின் வழியே இலக்கிய சிந்தனைகளையும் ஆன்மிக விழிப்புணர்வையும் பரப்பும் உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன்.
இணைக்கப்பட்டுள்ள என் சமீபத்திய பணி, “ஆய்ச்சியர் குரவை – பாகம் ஐந்து”, ஸ்ரீவேதவ்யாச மகாமுனிவரால் இயற்றப்பட்ட ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாம் ஸ்கந்தம் அடிப்படையில் தமிழ்ப் பாடல்களாக உருவாக்கப்பட்ட ஒரு தொகுப்பாகும். சம்ஸ்கிருத மூலத்திலிருந்து நேரடியாக எழுந்த பாடல்களாகும்.
இவ்வடிப்படையில், ராஸக்ரீடை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தெய்வீக லீலைகளை எடுத்துரைக்கிறது. இது மனித மனதின் காமம் எனும் விகாரமான உணர்ச்சியை வெல்லும் வழிகளை பக்தி மற்றும் சத்சங்கத்தின் வழியாக வெளிக்கொணர்கிறது. பக்தர்கள் ராஸக்ரீடை மூலம் பகவானின் பரிபூரண அன்பை உணர்ந்து, மனத்தை ஆழ்ந்த ஆன்மீக நோக்கிற்கு திருப்ப வைக்கும் தன்மை கொண்டது.
மேலும், இவ்வினோதமான ராஸக்ரீடை இயல்புகளை சித்தரிக்கும் அழகிய புகைப்படங்களையும் இணைத்துள்ளேன். இந்தப் பாடல்களையும் புகைப்படங்களையும் உங்கள் Thinnai இதழின் அடுத்த வாரப் பதிப்பில் வெளியிட தயவுசெய்து பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் வாசகர்களுக்கு பக்தி மிகுந்த உளவியல் திருப்பத்தை அளிக்க முடியும்.
நன்றி.
வெங்கடேசன் நாராயணசுவாமி)
[ஶ்ரீம.பா.10.33.1]
ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்:
இங்ஙனம் வஶீகரிக்கும் இன்சொற்கள் தன்னை
பகவான் திருவாக்கால் கேட்ட கோபிகைகள்
அவர்தம் இன்னுறவால் அங்க அணைப்பால்
விருப்பம் நிறைவுற ஒழித்தனரே விரஹ தாபம்!
[ஶ்ரீம.பா.10.33.2]
ஆங்கே, ஒருவரோடொருவர் அன்புடன்
கைகளைக் கோர்த்தும் பின்னிப் பிணைந்தும்
காதலில் தம்மையே தமர்க்கு நல்கி தன்னையே பணிந்தேத்தும் பெண்மணிகளாம் கோபியரோடு
கோவிந்தன் தொடங்கினான் குரவைக் கூத்தை.
[ஶ்ரீம.பா.10.33.3-4]
அலங்கரித்த மலர்வட்டமாய் வனிதையர் சூழ
யோகயிர்கோன் கோவிந்தன் நடு நாயகமாய் குழலூத
ஒவ்வோர் இணை நடுவும் ஒருவனாய் இயைந்து
தத்தம் கழுத்தில் கரமாலையிட்டு கோலாகலமாய்
கருமாணிக்க கடவுளாடக் கண்டனர் ஒவ்வோர் கோபியரும்.
விண்ணவர் தத்தம் பிணையுடன் பேரவாவுடனே
வானூர்தியில் வலம் வந்து
வாஸுதேவனின் பல்பிணை தழூவுக் கூத்து காண கூடினர்
நூறுநூறாய் வான்வெளி அரங்கில்.
[ஶ்ரீம.பா.10.33.5]
ஆங்கே பேரிகைகள் முழங்க பூமாரிப் பொழிய
தேவர்தம் அரம்பையரொடு
தேவர்கோன் கோமானின் தெவிட்டா
தெய்வப் புகழ் பாடினர்.
[ஶ்ரீம.பா.10.33.6]
சங்கங்கள் சிலம்ப சிலம்பங்கள் ஆர்ப்ப
அரைக்கிங்கிணிகள் அசைந்தார்ப்ப
கோலாகலமாய் குவலயம் அதிர
ஒருசேர உரக்க ஓங்கி முழங்கிற்று
ஆய்ச்சியர் குரவை.
[ஶ்ரீம.பா.10.33.7]
பொன்னாரமூடே பொதிந்தொளிரும் மரகதமாணிக்கச் சிவப்பாய்
பேரழகுப் பெண்ணாரமாம் கோபியரூடே பதிந்தொளிர்ந்தான்
தேவகீ தெய்வ மைந்தன்.
[ஶ்ரீம.பா.10.33.8]
தாள கதிக்கேற்ப பதம் எடுத்தாட
அபிநய முத்திரை பதிய கரங்கள் அசைந்தாட
புன்னகை முறுவலால் புருவம் நெரித்து நெளிய
இல்லாயிடை இருந்து இசைந்ததிர
கொங்கைகள் விம்ம மேலாடை நழுவ
காதார் குண்டலங்கள் கன்னம் மோதி குலுங்க
கொஞ்சுமெழில் முகம் வியர்வை முத்து சிந்த
பின்னல் ஜடை கழன்று அரையாடை முடிச்சவிழ
கண்ணன் கழற் போற்றிப் பாடியே ஆடியே
கருமுகிலிடை மின்னலாய் ஒளிர்ந்தனர் கோபியரே!
[ஶ்ரீம.பா.10.33.9]
கண்ணன் அணைக்க கள்வெறி கொண்டு காதலால்
உவகை பொங்க இனிய குரலில்
உரக்கப் பாடினர் ஆடினர் ஆய்ச்சியர்.
இனிய நாத வெள்ளமதில் மூழ்கிற்று இப்புவனமெலாம்.
[ஶ்ரீம.பா.10.33.10]
முகுந்தனின் மூர்ச்சனைகள் ஸ்வர-ஜதிகள் ஒன்றோடொன்று
கலக்காவண்ணம் கம்பீரமாய்ப் பாடினாள் ஒருத்தி.
“அருமை, நன்று, நன்று”, என அச்சுதன் அகமகிழ்ந்து போற்ற,
அச்சங்கதியை துருவ தாளத்தில் அவளே மேலும் அழகாய்ப் பாடிட
அண்ணலும் அவளைப் புகழ்ந்து வெகுமதியளித்தனன்.
[ஶ்ரீம.பா.10.33.11]
கூத்திற் களைத்த ஒருத்தி தன்
கர வளையல்கள் நழுவ,
கூந்தலில் அள்ளி முடிந்த
மல்லிகைச் சரங்கள் சிதற,
தன்னருகில் கதையுடன் நின்ற கண்ணன்
திருத்தோளை இறுகப் பற்றினாள் தன் கரத்தால்.
[ஶ்ரீம.பா.10.33.12]
கோவிந்தன் ஆங்கே மற்றோர் கோபிகையின் தோளில்
தன் மலர்க்கரம் வைத்தான்.
சந்தனக் குழம்பு பூசி குமுதப்பூ மணங்கமழும்
அவன்தன் கரம்பற்றி முகர்ந்து
மயிர்க்கூச்செறிந்து முத்தமிட்டாள் மங்கை அவளே!
[ஶ்ரீம.பா.10.33.13]
ஆடும்போது குண்டலங்கள் குலுங்க மின்னி
மிளிரும் மாதவனின் கன்னமொடு கன்னமிழைத்த
கோபிகையின் வாயில் தான்
சுண்ணம் வைத்துச் சுவைத்து மென்ற
தாம்பூலம் உமிழ்ந்தளித்தான் தாமோதரன்.
[ஶ்ரீம.பா.10.33.14]
காற் சிலம்பு சிலம்ப, அரையிடை மேகலை மணிகள் ஆர்ப்ப
ஆடிப்பாடி கூத்தில் களைத்த கோபிகை ஒருத்தி,
தன் பக்கமிருந்த அச்சுதனின்
(சித்தமலம் அறுத்து) ஶிவமாக்கும் செந்தாமரைத் திருக்கரங்களை
இறுக அணைத்தனள் தன் மார்போடு!
[ஶ்ரீம.பா.10.33.15]
திருமகளின் தனித்த அன்புக்கேள்வனாம் அச்சுதனைத்
தங்கள் காதலனாய் கோபிகைகள்
புகழ்ந்து பாடி உவகை பொங்க ஆடினர்.
கோவிந்தன் தன் திருக்கரங்களையே
மலர் மாலையாய் கோபிகைகள் கழுத்தில் சூட்டி ஆடினான்.
[ஶ்ரீம.பா.10.33.16]
அல்லிமலர்கள் சூடிய அழகிய கருங்கூந்தல், காதோர
சுருண்ட கேஶம் வருடும் அழகிய கன்னங்கள்,
வியர்வை முத்துக்கள் அரும்பிய முழுமதி வதனங்கள்,
கைவளைகள் காற்சிலம்பம் தாள கதியிலொலிக்க,
கூந்தலில் சூடிய பூமாலைகள் வீழ்ந்து சிதற,
கூத்தின் தாளத்தில் வண்டின் குழாம் பாட,
குரவைக் கூத்தாடினர் கோபியர் கோவிந்தனோடு.
[ஶ்ரீம.பா.10.33.17]
குழவி தன் பிரதிபிம்பம் கண்டு கைகொட்டிச் சிரித்து விளையாடுவதுபோல், திருமகள்கேள்வனாம்
கோவிந்தன் கோபிகைகளைத் தொட்டுக் கட்டியணைத்தும்,
அன்பு கனிய நோக்கியும், பரந்த குறும்புப் புன்னகை பூத்தும்,
உரக்கச் சிரித்தும் ஆனந்தமாய் ஆடினான்.
[ஶ்ரீம.பா.10.33.18]
ஹே! குரு குலத்திலகமே!
கண்ணன் திருமேனி தீண்டியதால்
பொறிபுலன்கள் புளகாங்கிதமடைந்து
பேரின்பப் பெருவெள்ளம் திளைத்த கோபிகைகள்,
தளர்ந்தவிழ்ந்த கூந்தலையும், ஆடை ஆபரணங்களையும்,
மார்புக் கச்சையையும் கழுத்தினின்று கழன்ற மலர்மாலையையும்
சரிசெய்ய இயலாது தவித்து நின்றனரே!
[ஶ்ரீம.பா.10.33.19]
திருமகள்கேள்வனின் திருவிளையாடல்களை
தேவ அரம்பையர் கண்ணுற்று
கிரங்கி நின்றனர் காம வஶத்தால்.
அசையாது வியந்து நின்றான்
முழுமதியும் விண்மீன்களுடன்.
[ஶ்ரீம.பா.10.33.20]
எத்தனை கோபியர் ஆங்கிருந்தனரோ
அத்தனை திருவுருவங்களேற்று
தன்னிலே மகிழ்ந்து தன்னிலே திருப்தனாய்
தனித்த ஆய்ச்சியர் குரவைக் கூத்தாடினான்
தன்னிகரில்லா விளையாட்டுடையான்!
[ஶ்ரீம.பா.10.33.21]
அரசே! அளவுமீறிய கேளிக்கையாடி
அயர்ந்து சோர்ந்த கோபியரின் அழகிய முகங்கள் தம்மை
அருளே வடிவான அச்சுதன்
அனைத்து மங்களம் நல்கும் தன் திருக்கரங்களால்
ஆதூரமாய் அன்புடன் துடைத்தான்.
[ஶ்ரீம.பா.10.33.22]
கண்ணனின் கை நகத் தீண்டலால்
களிப்படைந்த கோபிகைகள், தங்களழகிய
கன்னங்கள் மின்ன, ஸுவர்ண குண்டலங்கள் ஜ்வளிக்க,
கருங்கூந்தல் பளீரிட, அமுதெனும் முறுவலால்
கனிந்த காதற் பார்வையால் கண்ணனை மகிழ்வித்து,
போற்றிப் பாடினர் புண்ணியம் நல்கும்
புருஷோத்தமனின் திருக்கல்யாண குணங்களையே!
[ஶ்ரீம.பா.10.33.23]
களைத்த மதகளிறு கரையைப் பெயர்த்துத் தன்
பிடிகளோடு செழுநீர்ப் புனல் புகுவதுபோல்
உலகநெறி தகர்த்து உம்பர்கோன் கோமான் கோபியரோடு
களைப்பு நீங்க யமுனை நீர்ப்புக,
அப்பெண்டிரின் வனமுலை அணைப்பால் அவன் வனமாலை நசுங்கி
குங்குமம் அப்பி ஶிவந்து நிறம் மாறி,
மணங்கமழ் வண்துழாய்மாலைத் தேன் பருக
வண்டுகள் மொய்த்து ரீங்காரித்துப் பின்தொடர,
கந்தர்வராஜன் சித்ரரதன் கண்ணன் புகழ்பாடி
பின்சென்றது போல ஆயிற்றே!
[ஶ்ரீம.பா.10.33.24]
மன்னா! களிற்றரசன் கஜேந்திரனாய் யமுனையில் இறங்கி
தன்னிலே தானாய் நிறைவுற்று ஆத்மாராமனாய் விளையாடும்
கண்ணனை நாற்புறமும் கோபியர் புடைசூழ்ந்து
காதல் கனிந்த இனிய கண்ணாடலால் மகிழ்வித்து
அவன் திருமேனிமேல் யமுனைநீரை வாரியிறைத்து விளையாட,
வானூர்திகளில் செல்லும் தேவர்கள் பூமாரிப் பெய்து துதித்தனர்
இவ்வற்புதக் காட்சியை கண்டுகளித்தே!
[ஶ்ரீம.பா.10.33.25]
பின்னர் ஜலக்ரீடை முடிவில்,
நீர்-நிலமெலாம் பூத்துக்குலுங்கும் பூக்களின்
நறுமணம் நாற்புறமும் வீஶ,
வண்டினங்கள் கோபியர் புடைசூழ,
மத களிறு தன் பிடிகளோடு விளையாடுவதுபோல்
யமுனாதீர உய்யானவனத்தில்
ராஸலீலைகள் பல செய்தான் யமுனைத் துறைவனே!
[ஶ்ரீம.பா.10.33.26]
காவியம் புகழும் ஶரத்கால அழகிய நிலவொளிதனில்,
காதலால் தன்னுடன் இறுகப் பிணைந்த கோபியரோடு,
தன் விருப்பமதை தானே ஈடேற்றி,
தன்னிலே தானாய் நிறைந்து,
தன்னிலே தானாய் ஆத்மானந்தமதில் திளைத்து,
தன்னகத்தே காம மோஹ உணர்ச்சி செயல்களடக்கி,
இனிதே இரவு முழுதும் ராஸலீலை
செய்தான் காமேஶ்வரன் கண்ணபிரான்!
காமனை வென்ற காமராஜன் கழல்கள் போற்றி! போற்றி!
[ஶ்ரீம.பா.10.33.27]
அரசன் பரீக்ஷித் வினவினான்:
“அதர்மமழித்து அறத்தை நிலைநிறுத்தத்தானே
அச்சுதன் ஆதிஶேஷனாம் பலராமனுடன்
அவதரித்தார் யதுகுலத்தில்?
[ஶ்ரீம.பா.10.33.28]
பிரும்மரிஷியே! அறநெறி வகுத்து
அதைப்பேண அறவழி உபதேசித்து
அதனைக் காத்து வளர்த்து கண்காணிக்கும் முராரி,
அதற்கு முற்றிலும் முரணாய்
பிறன்மனை யாங்ஙனம் தீண்டினார்?
[ஶ்ரீம.பா.10.33.29]
தன்னிலே நிறைவுற்ற தாமோதரன்
அருவருப்பூட்டும் இச்செயல் ஆற்றியதன் பொருளென்ன?
அறநெறி அருளாளா! அறுப்பீரெமது ஐயம்.”
[ஶ்ரீம.பா.10.33.30]
ஶ்ரீ ஶுகர் கூறினார்:
“எப்பொருள் எரிப்பினும் அப்பொருளின் குணாகுணங்கள்
எரிதழல் தீயைத் தீண்டா.
அதுபோல, அறநெறி வரம்பு மீறி செயற்கரிய
ஸாஹஸச் செயல்களை இறையாண்மை மிக்க ஈஶ்வரர்கள் சிலசமயம் செய்தாலும், அது அவர்கட்கு குறையாகாமே.
[ஶ்ரீம.பா.10.33.31]
இறைவனைப் போல் பேராண்மையிலார்
ஒருபோதும் மனதாலும் இத்தகைய
செயலை நினைத்தலாகாது.
அவ்வாறன்றி, அறியாமையால்
அதைச் செய்வோன் அழிவது திண்ணம்.
பகவான் ஶ்ரீருத்ரன் அல்லாதோன்
ஆலகாலம் அருந்தலாமா?
அருந்தினால் அழிவுதானே!
[ஶ்ரீம.பா.10.33.32]
பகவானின் திருவாய்மொழிகளே பிரமாணம்!
அதன்படி ஒன்றி ஒழுகுதலே உத்தமம்!
பகவானின் லீலைகளைப் பின்பற்ற எண்ணுவது ஒவ்வாததாம்!
அறிவுடையோன் இறையின் திருவாக்கிற்குகந்த
செயலையே பின்பற்ற வண்டும்!
[ஶ்ரீம.பா.10.33.33]
பிரபோ! ஸர்வ வல்லமை படைத்த ஈஶ்வரர்கட்கு
தன்னலம் மற்றும் அஹங்காரம் இன்மையினால்
நற்செயலால் நன்மையோ, தீச்செயலால் தீமையோ உண்டாவதில்லை.
இரட்டை-மும்மைகளைக்
கடந்தவர்கள் அவர்கள்!
[ஶ்ரீம.பா.10.33.34]
‘நான்’ எனும் அபிமானமற்ற ‘பேராளுமை’
பெற்ற ஞானியர்க்கே இவ்வாறெனின்,
விலங்குகள், மனிதர்கள், மற்றும் தேவர்கள் ஆகிய
அனைவர்க்கும் ஒப்பற்ற ஒரே தலைவனாம்
இறைவன் ஶ்ரீ வாஸுதேவனைப் பற்றி என்ன சொல்ல?
எல்லாம் வல்ல இறைவனின் திருவிளையாடல்களில்
மனிதனுக்கான நன்மை-தீமை எங்ஙனம் ஒட்டும்?
[ஶ்ரீம.பா.10.33.35]
அறுத்தெறிகிறார்கள் ஞானியர் உலகியல் பற்றையும் தளைகளையும்
திருமகள்கேள்வனின் செம்மலரடித் தூளி போற்றி வணங்கி!
பற்றற்றான் பற்றினைப் பற்றி பற்றெலாமறுத்துத்
தன் விருப்பப்படி ஸர்வ ஸ்வதந்திரமாய் திரிகிறார்கள்
இப்புவியில் ஞானிகளும் தவஸிகளும்.
அப்படியிருக்க,
பத்தர்களின் விருப்பமேற்று இப்புவியில்
திருவவதாரம் செய்த பகவர்க்கு
உலகியல் கர்மவினைத் தளை என்பதுதான் ஏது?
[ஶ்ரீம.பா.10.33.36]
கோபியர், அவர்தம் பதிகள், மற்றும் அனைத்து ஜீவர்களின்
உள்ளமதில் அகண்ட ஏக உணர்வாய், ஆன்மாவாய், ஸர்வ ஸாக்ஷியாய் ஒளிர்வது இப்பகவானன்றோ?
அவனே இப்பூமியில் இத்திருவிளையாடல்கள் புரிந்தருள
ஆனந்தமே வடிவான தன் தெய்வத் திருமேனியுடன் திருவவதாரம் செய்துளான்!
[ஶ்ரீம.பா.10.33.37]
உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு
உயர்வருள் சுரந்து மானுட வடிவமேற்று
இறைவன் இத்திருவிளையாடல்கள் பல புரிந்துளான்.
இவற்றைக் கேட்பவன் இறையிடமே பக்தி பூண்டு ஆட்கொள்ளப் படுகின்றான்.
[ஶ்ரீம.பா.10.33.38]
கோகுலத்தின் கோபர்கள் ஶ்ரீ மாயோனின் யோகமாயையில் மயங்கி
தத்தம் துணைவியர் தமதருகே இருக்கக்கண்டு
எத்தவறும் காணவில்லை எவரிடமும்.
[ஶ்ரீம.பா.10.33.39]
அண்ணலாம் ஶ்ரீ வாஸுதேவனிடம் அளப்பரிய
அன்புகொண்ட அணங்குகள் அன்பால் திரும்பிச்செல்ல மனமற்று
அச்சுதனிடம் பிரியாவிடை பெற்று
அவரவர் இல்லம் திரும்பினர் விடிவோரைப் பொழுதில்.
[ஶ்ரீம.பா.10.33.40]
கோபியருடன் கோவிந்தன் புரிந்த ஆய்ச்சியர் குரவைக் கூத்தை
கோமள சித்தத்துடன் சொல்வோரும் கேட்போரும்
கோபாலனிடம் மேலான பத்தியுற்றுத் தீரர்களாய் சடுதியில்
கோரமான மன நோயாம் காமமனைத்தும் நீங்கப் பெறுவாரே!
இத்துடன் ராஸபஞ்சாத்யாயீ எனும் ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம் ஆய்ச்சியர் (ராஸக்ரீடை அல்லது ராஸலீலை) குரவைத் தொடர் முற்றிற்று.
- “ என்றும் காந்தியம் “
- ஆய்ச்சியர் குரவை – பாகம் ஐந்து
- நகுலன் பூனைகள்
- முத்தம்
- பரிதாபம்
- வெற்றியின் தோல்வி
- இழப்பு