குடைபிடி
ஞாபகங்களில்
எச்சரிக்கின்றது
வயோதிகம்.
குழந்தையின்
மழலைப்போல
போய்விடுகின்றது
கால்கள்.
குளிரில்
அணைத்தப்படி செல்லும்
இளசுகளின்
உரசலில்
என் வாலிபத்தின்
விலாச முத்திரை தெரியும்.
எங்கோ
போய்விட்ட
அறுந்த
காத்தாடியின்
நூலை பிடிக்க
அலையும்
மனசு.
பள்ளிக்கூட
மணி ஓசையில்
மகிழ்ந்து கொள்ளும்
மனம்.
தொலைதூர
ரயில்வண்டியின்
பயணிகளின்
இரைச்சல்களில்
எனது
பயணங்கள்.
ஞாபக மரங்கள்
எரியும் தெருக்களில்
கூடு கட்டி வாழும்
எனது
மிச்சமுள்ள
வாழ்க்கை.
– ஜெயானந்தன்.