நேரலை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 10 in the series 6 ஜனவரி 2025

ஆர் சீனிவாசன்

சில நாட்களாய் ப்ரசாத் கவனித்து வந்தான். அன்புமணி அவனுக்கு வீடியோ கால் செய்யும்போதெல்லாம் சரியாக பேசுவதில்லை. ஒரு விஷயத்தில் ஆரம்பித்து வேறு எங்கோ பேச்சு போய்விடும். அமேரிக்காவில் வசித்த ப்ரசாத் அன்புமணியிடம் ஒரு நாள் கூட தவறாமல் பேசுவான் ஆனால் சமீபகாலமாக அப்பாவின் பேச்சில் மாற்றங்கள் தெரிந்தன. அம்மாவின் மறைவுக்கு பின் அப்பாவிடம் “அமேரிக்கா வந்துவிடு” என எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. ப்ரசாதின் அம்மா காலமான பிறகும் சொந்தவீட்டில் தனிமையில் வசித்துவந்தார் அன்புமணி. பக்கத்தில் தெரிந்தவர்களும் உறவினர்களும் இருக்கிறார்கள் என்ற மூட நம்பிக்கையில் இருந்துவிட்டார். ஒரு நாள் ப்ரசாதிற்கு இரவு இரண்டு மணிக்கு பக்கத்து வீட்டுக்காரரின் ஃபோன் வந்தது,

“ப்ரசாத் நல்லாயிருக்கியாப்பா?. கேளு…உங்க அப்பா அடிக்கடி வாக்கிங் போய்ட்டு வீடு திரும்ப வழி தெரியாம எங்கேயாவது போய்டுறாருப்பா. போன வாரம் கூட இப்படித்தான் வழி தெரியாம ஒரு டீக் கடைல உட்கார்ந்திட்டாரு. அங்க இருந்தவன் ஒருத்தன் அவரை அடையாளம் கண்டுபிடிச்சி வீட்டுக்கு கூட்டிவந்தான். வீட்ல எல்லாமே போட்டது போட்டபடி இருக்கு” என்றார்.

பிரசாத் உடனே வீட்டிற்கு ஃபோன் செய்த போது அன்புமணி எடுக்கவில்லை. மூன்று – நான்கு முறை முயற்சித்தபின் தான் எடுத்தார். “அதெல்லாம் ஒன்னும்மில்லபா. அன்னிக்கு கொஞ்சம் பிரஷர் ஜாஸ்தி ஆயிடிச்சு அவ்வளவுதான். இப்ப செரியாயிடிச்சு..” என்று சொல்லி மழுப்பிவிட்டார் அன்புமணி. அதற்கு பின் ஃபோன் கால்களில் பேசும்போது அவன் சந்தேகம் வலுவடைய தொடங்கியது. ஒரு நாள் வீடியோ காலில் சொந்த மகனின் பெயரையே மறந்து போன போதுதான் பதறி அடித்துக்கொண்டு இந்தியா ஒத்தையாக ஓடிவந்தான். ப்ரசாத் வருவது வரை அன்புமணியை அவரது உறவினர்கள், நண்பர்கள் பார்த்துக்கொண்டார்கள். அவன் இந்தியா வந்திறங்கி விமானநிலையத்தில் ஃபோனை ஆன் செய்ததுமே வாட்ஸப்பில் செய்தி வந்துவிட்டது,

“உங்க அப்பாவுக்கு பேச்சு தடுமாறுதுப்பா. எங்களைக்கூட ஞாபகம் இல்லை” என்றார் உறவினர் ஒருவர். வீட்டிற்கு திரும்பி மிகவும் மெலிந்திருந்த அன்புமணியை பார்த்தவுடனேயே அவனுக்கு “திக்” என ஆனது. ஓடி வந்து அவரை அணைத்த ப்ரசாத்தை அடையாளம் தெரியாமல் திணறினார் அன்புமணி.

“எப்ப வந்தே?. பட்டினத்துக்கு போயிருந்தயா? உன் ஃரெண்ட் வீட்டுக்கு போனியா….” என்றதும் ப்ரசாதிற்கு தூக்கி வாரி போட்டது. பக்கத்தில் இருந்த அன்புமணியின் உறவுக்காரர் ஒருவர்,

“அன்பு, இது ப்ரசாத்…தெரியுதா? ப்ரசாத்..உன் மகன்” என்றார் ஒருவர்.

“ஆ தெரியும்..நீ …ப்ரதர்த்..தெரியும்” என்றார் மெதுவாக.

ப்ரசாதிற்கு மேலும் அதிர்ச்சிகள் காத்திருந்தன. வீடு அல்லோலகல்லோலமாய் இருந்தது. “நாங்க சுத்தம் செஞ்சதுக்கு அப்புறமும் இப்படி இருக்குன்னா பார்த்துக்கோ” என்றார் உறவினர் ஒருவர். அன்று மாலையே அக்கம் பக்கம் இருப்பவர்கள் உறவினர்கள் எல்லோரும் விடைபெற்றனர். நிலைமை இந்த அளவுக்கு போனதை கவனிக்காமல் விட்டதுதான் அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

அன்று மாலை முழுவதும் அப்பாவிடம் பேச்சுக் கொடுத்து பார்த்தான் ஆனால் பயனில்லை. கல்யாண போட்டோக்களை காட்டி நினைவூட்ட முயற்சித்தும் பயனில்லை. அன்புமணிக்கு அவன் யார் என்றே நினைவில்லை. சில சமையம் ப்ரசாத்தை வேற யாரோவென நினைத்து சில பழைய கதைகளை பேசினார் அதுவும் தொடர்ச்சியில்லாமல். அன்புமணியை அடுத்தநாள் காலையிலேயே தெரிந்த மருத்துவரிடம் கூட்டிச் சென்றான். பரிசோதனையில் விஷயம் வெளிவந்தது. அன்புமணிக்கு அல்ஸைமர்ஸ் நோய் இருப்பது உர்ஜிதம் ஆனது. மருத்துவர் சொன்னார்,

“பாருங்க ப்ரசாத், உங்கப்பாவுக்கு வந்திருக்கிற நோய்க்கு மருந்தே கிடையாது. மெல்ல மெல்ல நினைவு தப்பிடும் கடைசியில அன்றாட வேலைங்களைக்கூட செய்யமுடியாம போய்டும். நீங்க அவரு கூடவே இருந்து பார்த்துக்கணும். வெளியில எங்கேயும் அனுப்பாதீங்க.. சில மாத்திரை எழுதித்தர்றேன்…ஆனா பெரிசா முன்னேற்றம் இருக்காது. குடும்பத்தோட இருந்தா கொஞ்சம் நல்லா ஆகரத்துக்கு வாய்ப்புகள் உண்டு”.

ப்ரசாத் அமேரிக்கா குடியேறி இருபது வருடமாகிறது. வேலை விஷயமாக வந்தவன் அங்கேயே தங்கிவிட்டான். அம்மா இருக்கும் வரை அப்பாவைப்பற்றிய கவலையில்லாமல் இருந்தான். இருவரையும் இரண்டு முறை அமேரிக்காவிற்கு கூட்டிவந்து சுற்றிக்காண்பித்தான். அப்பொதெல்லாம் அப்பாவிற்கு உடல் நலம் நன்றாகத் தான் இருந்தது. அம்மா காலமானவுடன்தான் அப்பாவின் உடல்நலம் குறைய ஆரம்பித்திருக்கும் என தோன்றியது.

அப்பாவின் உடல் நிலை பற்றி தெரிந்தவுடன் முதல் வேலையாக மனைவிக்கு ஃபோன் செய்தான்.

“பாரு பிரசாத், அல்ஸைமர்ஸ் சாதாரணமான நோய் இல்ல. அப்பாவுக்கு இப்ப ரொம்பவும் கிரிட்டிகல் கேர் தேவைப்படும். அதனால பாத்துக்கோ” என்றாள் மனைவி.

“ஹே! என்ன சொல்லற?” என்றான்

“நீயும் வேலைக்கு போற நானும் வேலைல இருக்கேன். இப்படி இருக்கும்போது அவரை இங்க கூட்டிகிட்டு வந்தாலும் நம்மளால முழுநேரம் அவரை பார்த்துக்க முடியாது. அவருக்கு ஒரு கிரிட்டிகல் கேர் கொடுக்குற அட்டெண்டர் தேவைப்படும். அதெல்லலம் எவ்வளவு காஸ்ட்லி தெரியுமா?” என்றாள். மனைவி சொன்னது மனதிற்குள் அம்பு தேய்த்ததுபோல இருந்தது.

“அப்ப என்ன சொல்லறே? அப்பாவை இங்கேயே விட்டுடலாம்னா? வாட் ஆர் யு டாக்கிங்?” என்றான் கோபமாக.

“கோபப்படாம நான் சொல்றத கேளு… நாம கல்யாணமாகும்போதே இந்த விஷயத்தை பத்தி பேசினோம் ஞாபகம் இருக்கா? எங்க அப்பா அம்மாவும் சரி உன் அப்பா அம்மாவும் சரி யாருமே கூட இருக்க வேண்டாம்னுதானே பேசிக்கிட்டோம். நீயும் ஒத்துக்கிட்ட… டூ யு ரிமேம்பர்? எனக்கு தெரிஞ்ச ஒருத்திகூட ஆஸ்திரேலியாவுல இருக்கா. அவ அம்மா அப்பாவை ஒரு கேர் ஹோம்ல…”

“அடியேய் கேளு…எங்கப்பாவை நீ வெச்சுக்க முடியாதுன்னா நானும் அங்கே வரல” என்று கோபத்தில் ஃபோனை துண்டித்தான். விரத்தியில் இரவெல்லாம் தூக்கமில்லாமல் உட்கார்ந்திருந்தான். அவசரத்தில் அலுவலக மேலாளருக்கு சரியாக சொல்லாமல் வந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. அமேரிக்க மேலாளர் மிகவும் பணிவுடன் ப்ரசாத்தின் நிலைமையை கேட்ட பின் இரண்டு வாரம் துலைவிலிருந்து வேலை செய்ய அனுமதி கொடுத்தார் அதற்க்கு மேல் திட்டவட்டமாக அனுமதிகொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

அன்று முழு இரவும் ப்ரசாத் தூங்கவில்லை. அப்பா அடிக்கடி எழுந்து பாத்ரூமிற்கு போக தடுமாறுவார். கொஞ்ச நாட்களில் அதுகூட முடியாமல் போகலாம். அடுத்தநாள் மனைவிக்கு அவனே ஃபோன் செய்தான்.

“என்ன நேத்திக்கு ரொம்ப ஆவேசமா பேசின.. ” என்றாள்.

“நிலைமை அப்படி. என்ன செய்யறதுன்னே தெரியல. நேத்திக்கு பாஸ் கிட்ட பேசினேன். அவரு ரெண்டு வாரத்துக்குள்ள வந்து சேறுன்னுட்டாரு …அவரும் நீ சொன்னமாதிரி ஒரு கேர் ஹோம் பத்திதான் சொன்னாரு…”

“அப்புறம் என்ன யோசிக்கிற? நீ வரலேன்னா என்ன ஆகும் தெரியுமில்ல? உன் வேல போகும்…அத்தோட உன் வீசாவும் போகும். நீ உன் அப்பாவோட அங்கேயே இரு… நான் பையனோட இங்கே இருக்கேன். ஓகே வா?” என்று பட படவென பேசி ஃபோனை துண்டித்தாள்.

அன்று முழுவதும் யோசித்துக்கொண்டே இருந்தான். திரிசங்கு சொர்க்கத்தில் தவித்த ப்ரசாத் கடைசியில் அப்பாவை அதிகபட்சம் மூன்று மாதத்திற்குள் அமேரிக்கா அழைத்துவர வேண்டும் என முடிவெடுத்தான். அப்பாவின் டாக்டருக்கு ஃபோன் செய்தான்.

“டாக்டர் உங்களுக்கு தெரிஞ்ச கேர் ஹோம் ஏதாவது இருக்கா?…ஒரு மூணு மாசத்துக்கு தான்..அப்புறம் நான் அப்பாவைகூட்டிகிட்டு போய்டுவேன்…”. டாக்டருக்கு அவன் தயங்கும் சப்தமே கேட்டது. “நான் ஒரு நம்பர் அனுப்பறேன். அவரை காண்டாக்ட் பண்ணுங்க” என்றார். சில நிமிடங்களில் அவன் தொலைபேசியில் ஒரு எண் வந்தது.

தயக்கத்துடன் அந்த எண்னை டையல் செய்து பேசினான். ஃபோனில் பேசியவர் மிகுந்த அனுபவஸ்தவராக தோன்றியது. பல மேற்கோள்கள் கொடுத்தார். யாரிடம் வேண்டுமானாலும் பேசிப்பார்த்துவிட்டு அவர் நடத்தும் வயதானவர்கள் விடுதியை பற்றி கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்றார். விடுதியின் வசதிகள் பற்றியும் தினமும் நடக்கும் நிகழ்ச்சிகள் பற்றியும் சொன்னார். அவர் பேசியதிலிருந்து ப்ரசாத்தைப் போல நிறைய நபர்களிடம் அவர்களது பெற்றோர்களை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார் என தெரிந்தது. பிரசாத் உடனடியாக எந்த முடிவிற்கும் வரவில்லை. வேலையை விட்டுவிட்டு மீண்டும் ஒரு முறை விசாவுக்கு அப்ளை பண்ணலாமா என யோசித்தான். முடிவில் ஒரு மூன்று மாதத்திற்கு அன்புமணியை அந்த விடுதியில் சேர்த்துவிட்டு அமேரிக்கா திரும்பினான்.

முதல் மாதம் மிகக் கடினமாக போனது. நேரலையில் பொதுக் கூடத்தில் அப்பாவை தள்ளு நாற்காலியில் பார்க்கும் போது மனம் ஒடிந்து போனது. ராத்திரியில் எங்கிருந்தாலும் இந்திய நேரம் ஒன்பது மணிக்கு மறக்காமல் வீடியோ கால் செய்வான். சில சமையம் அன்புமணி பேசுவார் சில சமையம் எதுவும் பேசாமல் ஸ்க்ரீனையே பார்த்துக் கொண்டிருப்பார். வீடு திரும்பியதும் மனைவியை எப்படியோ சம்மதிக்க வைத்து, தன் நண்பர்கள் மூலமாக அப்பாவிற்கு விசா எடுக்கும் பணியில் மும்முரமாக இறங்கி வேலை செய்து கொண்டிருந்தான். எப்படியாவது கார்த்திகை மாதம் அப்பாவை தன்னுடன் அழைத்துக் கொண்டுவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.

அன்று தீபாவளி. விடுதியில் வழக்கம்போல பண்டிகையை கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். பொதுக் கூடத்தில் சுவற்றை ஒட்டி மண் தீபங்கள் வரிசையாக ஏற்றி வைத்திருந்தார்கள். கூடம் முழுவதும் தோரணங்கள் கட்டி மேடை அமைத்து அதில் இரண்டு குத்துவிளக்குகள் வைத்திருந்தார்கள். அந்த விடுதியின் வழக்கப்படி ஒரு மூதாட்டி, ஒரு பெரியவர் அந்த விளக்கை ஏற்றிய பின்னர் திறந்த வெளியில் எல்லோரும் பட்டாசு வெடித்து கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தனர். பெற்றோர்களுக்கு குழந்தைகள் வாங்கி அனுப்பிய புத்தாடைகளை உடுத்தியிருந்தனர். அந்த வருடம் அன்புமணிக்கு விளக்கேற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. கூடத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமேராக்களிலின் மூலம் உலகமெங்கும் வசிக்கும் பெரியவர்களின் பிள்ளைகளுக்கு அந்த நிகழ்ச்சியை நேரலையில் பார்க்க வசதி செய்துக் கொடுத்திருந்தனர். பிரசாத் தன் மனைவி மகனுடன் புத்தாடை அணிந்துகொண்டு முன்னமே தன் லேப்டாப்பின் மூலம் நிகழ்ச்சியில் சேர்ந்துவிட்டேன்.

அன்புமணியை அட்டெண்டர் ஒருவர் கையை பிடித்துக்கொண்டு மேடைக்கு அழைத்து வந்தார். அப்பா அவரே நடந்துவருவது பிரசாத்துக்கு சந்தோசமாய் இருந்தது. “…சி தட் ஐஸ் யுவர் கிரான்” என்று மகனிடம் தாத்தாவை காட்டினான். பேரன் தாத்தாவிற்கு டாடா காட்டினான். அன்புமணியின் கையில் ஒரு மெழுகு வத்தியை கொடுத்து ஒரு விளைக்கை ஏற்றச் சொன்னார்கள். தயங்கிய அன்புமணியின் கையை மெதுவாக பிடித்துக்கொண்டு அட்டெண்டர் முதல் திரியை ஏற்றினார். பிறகு அன்புமனியே மீதம் இருந்த மூன்று திரியையும் ஏற்றினார். கூடத்தில் இருந்தவர்கள் கைதட்டினார். ப்ரசாத் அமெரிக்காவில் மகிழ்ச்சியில் திளைத்து கண்கலங்கி கைதட்டினான். பிறகு அன்புமணியை அங்கேயே நிற்கவைத்துவிட்டு ஒரு மூதாட்டியை மேடைக்கு அழைத்து வந்தனர். அவர் புதுப் பட்டுச் சேலையும் காதில் அழகிய தொங்கட்டானும் அணிந்திருந்தார். கையில் மெழுகு வத்தியை கொடுத்தார் அட்டெண்டர். மூதாட்டி கண் தெரியாமல் தவித்தார். கைத் தடுமாறி முதல் திரியை சிரமப்பட்டு ஏற்றினார். பிறகு மெதுவாக ஒன்றொன்றாக இரண்டாம் மூன்றாம் திரியை ஏற்றும்போதுதான் ஏதோ புகைவது போல வாசனை வந்தது.

திடீரென யாரோ ஒரு பெண் குரல் “பத்திக்கிச்சு…முந்தானை பத்திக்கிச்சு பாருங்க” என கத்தியது கேட்டது . பார்த்துக் கொண்டிருக்கும் போதே குப்பென்று அந்த மூதாட்டியின் புடவை தீ பற்றிக்கொண்டது. புடவை தீ பற்றிக்கொண்டதுகூட தெரியாமல் நான்காவது திரியை ஏற்ற கையை தூக்கினார். அப்போதுதான் வலி உணர்ந்து மெழுகு வத்தியை உதறி “ஆ” வென அலறினாள். மூதாட்டி கால்லை உதறும்போது பாதம் விளக்கை தட்டி விளக்கு தரையில் விழுந்தது. சிந்திய எண்ணை கம்பளியின் மேல் பரவி கம்பளி பற்றிக்கொண்டது. சிலர் மேடைக்கு ஓடினர் சிலர் தீயணைப்பானை தேடினர்.

கூச்சல் குழப்பத்திற்கிடையே “தண்ணி….தன்னையே எடுத்தாண்டு வா ஓடு” என்ற குரல் கேட்டது. ப்ரசாதிற்கு என்ன நடக்கிறது என புரிய சில வினாடிகள் ஆனது. வாயின் மேல் கை வைத்துக்கொண்டு “ஆ அப்பா!” என அலறினான். விடுதிக்கு ஃபோன் செய்ய முயன்றான் யாரும் எடுக்க வில்லை. ” ஐயோ” என அலறினான். பார்த்துக் கொண்டிருந்த போதுதே ஓடிவந்து மேடைக்கு ஏறிய ஒரு அட்டெண்டர் தள்ளியத்தில் கீழே விழுந்தார் அன்புமணி. இப்போது ஸ்க்ரீனில் தீயின் ஜ்வாலைகளைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. “ஐயோ அப்பா ! அப்பா! அப்பா!” என கத்திக்கொண்டு ஸ்க்ரீனை பார்க்கமுடியாமல் தவிக்கையில் நேரலை துண்டிக்கப்பட்டது.

Series Navigationரொறன்ரோவில் பனிக்கால உள்ளக விளையாட்டுகள்அகழ்நானூறு‍  91
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *