சூரியக் குடும்பக் கிரகங்களின் அணிவகுப்பு

This entry is part 5 of 11 in the series 16 பிப்ரவரி 2025

குரு அரவிந்தன்

சோதிடம் மூலம்தான் நாங்கள் முதலில் கிரகங்கள் பற்றி அறிந்திருந்தோம். நவக்கிரகங்கள் என்று சொல்லி ஒன்பது கிரகங்களைக் குறிப்பிட்டார்கள். ஆனால் அறிவியல் சார்ந்து பார்த்தால், இன்று கிரகங்களின் நிலையை அறிய மட்டுமல்ல, நிஜமாகவே எங்களால் அவற்றைப் பார்க்கவும் முடிகின்றது. ‘சோலார் பமிலி’ என்று ஆங்கிலத்தில் அழைக்கின்ற எங்கள் சூரியக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்கள் இருந்தன. ஆனால் அதில் ஒரு கிரகத்திற்கு வேண்டிய தன்மைகள் இல்லாததால், ‘பு@ட்டோ’ என்ற அந்தக் கிரகத்தை வெளியே எடுத்து விட்டார்கள். இப்பொழுது எட்டுக் கிரகங்கள் மட்டுமே சூரியக்குடும்பத்தில் கணக்கிடப் படுகின்றன.

இப்போது இரவு வானில் சில அதிசயங்கள் நடப்பதை அறிந்திருப்பீர்கள். இந்த அதிசயங்களை ‘கிரகங்களின் அணிவகுப்பு’ என்று அழைக்கின்றார்கள். நவீன தொழில் நுட்ப வசதிகள் மூலம் சாதாணர மனிதர்களாலும் இப்போது நடக்கும் கிரகங்களின் அணிவகுப்பைப் பார்க்க முடிகின்றது. இரவு வானத்தைப் பார்த்தால் தெளிவான வானத்தில் ஏராளமான நட்சத்திரங்களைக் காணமுடியும். இதில் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த கிரகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தூரத்தில் இருப்பதால், எவை என்பதை அடையாளம் காண்பது கடினமானதாகும். இதைக் கருத்தில் கொண்டு இதற்காகக் கணனி மென்பெருளை வடிவமைத்திருக்கிறார்கள். உங்கள் செல்போனில் இதைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் வானத்தில் அவை இருக்கும் திசையை அறிந்து உங்களால் இலகுவாகப் பார்க்க முடியும்.

பொதுவாக ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களின் அணிவகுப்புகள் மிகவும் அரிதானவையாகும். 2025 ஜனவரி 21 ஆம் திகதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கிரகங்களும் இரவு வானத்தில் அணிவகுத்திருந்ததால், அவற்றைப் பார்ப்பதற்கு ஒரு அரிய சந்தர்ப்பம் அனேகருக்குக் கிடைத்திருந்தது. இந்த அணிவகுப்பில் உள்ள நான்கு கோள்களை சாதாரண கண்களால் பார்க்க முடியும். இவற்றில் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை மிகத் தூரத்தில் இருப்பதால் அவற்றைப்  பார்ப்பதற்கு தொலைநோக்கிகள் தேவைப்படுகின்றன.

இந்தக் கிரகங்களின் அணிவகுப்பை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகுதான் பார்க்க முடியும். செயற்கை ஒளி குறிப்பாகத் தெரு விளக்குகள் இல்லாத இருண்ட பகுதிகளில் இருந்து பார்த்தால் தெளிவாகத் தெரியும். தெளிவான வானம் இருந்தால், உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் இரவில் இந்தக் கிரகங்களின் அணிவகுப்பைப் பார்க்க முடியும், நேரமும் திசையும் மாறுபடலாம். இந்த அதிசய நிகழ்வு பெப்ரவரி பிற்பகுதி வரை அதாவது சுமார் ஒரு மாதம் வரை நீடிக்கும் என்று ஆய்வாளர் குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால் இந்தக் கிரகங்கள் இப்போது வானத்தில் இருக்கும் நிலைகளில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படலாம்.

ஒரே நாளில் 7 கிரகங்களும் காட்சி தரும் அதிசய நிகழ்வும் இந்த மாதம் நடக்க இருக்கிறது. பிப்ரவரி மாதம் 28 ஆம் திகதி, இரவு வானில் ஏற்கனவே காட்சி தரும் 6 கிரகங்களுடன் புதனும் இணைய இருக்கிறது. ஏழு கிரகங்கள் தானே தெரிகின்றன எட்டாவது கிரகம் எங்கே என்று நீங்கள் தேடலாம், அது எங்கும் போய்விடவில்லை உங்கள் காலடியில்தான் இருக்கின்றது. மீண்டும் இப்படியான ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களின் அணிவகுப்பு 2040 ஆண்டுதான் நடைபெறும் என குறிப்புகள் தெரிவிக்கின்றன.

நமது சூரிய குடும்பத்தின் பட்டியலில் 8 கோள்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் கோள்கள் எல்லாம் சூரியனைச் சுற்றி வந்தாலும், வெவ்வேறு வேகத்தில் இவை சுற்றி வருகின்றன. சூரியனுக்கு அருகே உள்ள புதன் கோளை எடுத்துக் கொண்டால் அது சூரியனைச் சுற்றி வர 88 நாட்கள் எடுக்கின்றது. அடுத்துள்ள வெள்ளியை எடுத்துக் கொண்டால் 225 நாட்கள், பூமி சுற்றிவர 365 நாட்கள், செவ்வாய் 687 நாட்கள், வியாழன் 4,333 நாட்கள், சனி 10,759 நாட்கள், யுரேனஸ் 30,687 நாட்கள், நெப்டியூன்: 60,190 நாட்கள் எடுக்கின்றன. பூமியில் இருந்து பார்க்கும் போது ஒரே கோட்டில் இவை இருப்பது போலத் தெரிந்தாலும், அவை வெவ்வேறு தூரங்களில் இருக்கின்றன.

Series Navigationஊடகவியலாளர் பாரதி இராசநாயகம் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்வெளியே நடந்தாள்
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *