கு. அழகர்சாமி
(1)
சொற்காட்டில்
அர்த்தங்களின்
பறவை
இரைச்சல்.
இரைச்சலின் புழுதியில்
வானுயரும்
ஒலிக் கோபுரம்.
மொழியின்
செங்கற்கள் உருவி
சொற்கள்
சரிகின்றன ஒலிகளில்.
அலற
பிரபஞ்சம்
எப்படி கேட்டது
ஒருவனுக்கு மட்டும்
அது-
அவன் ஓவியத்தில்
நிறங்களும்
அலற?*
ஒரு பூவைப் பறிக்கும் போது
உலகு குலுங்குவது
யாருக்கு கேட்கிறது?
நிலத்தினுள்
விதைக்கப்பட்ட பிணங்களெல்லாம்
முளைக்க
அன்றிரவைப் பொடிப்பொடியாக்கி
இடித்த இடி
என்ன கூறிற்று?**-
பிறந்த சிசுவின்
முதல் அலறலிடம்
கேட்க வேண்டும்
அதை.
*குறிப்பு: நார்வே ஓவியர் எட்வர்டு மன்ட்சின் ( Edvard Munch) புகழ் பெற்ற அலறல் ( Scream) ஓவியம் குறிப்பிடப்படுகிறது.
** டி.எஸ்.எலியட்டின் (T.S. Eliot) பாழ்நிலத்தில் முதற்பகுதியின் இறுதியிலும் மற்றும் ஐந்தாவது-கடைசிப்- பகுதியின் தலைப்பாயும் வருகின்ற வரிகள்- சென்ற ஆண்டு உன் தோட்டத்தில் நட்டுவைத்த பிணம் முளைக்கத் தொடங்கி விட்டதா?( That corpse you planted last year in your garden, Has it begun to sprout?), என்ன கூறிற்று இடி? ( What the thunder said?)- இவற்றின் எதிரொலிகளாய்-
(2)
வீதியில்
ஒரே இரைச்சல்-
ஒரு பட்டாம்பூச்சி
பறந்து அதைக்
கழுவி விட்டுப்
போகிறது.
நள்யாம நிலவொளியின்
நிசப்தத்தில்
வழவழப்பாகி விடுகின்றன
இருளின் கூர்ப்பாதைகள்.
மெளனத்தின் முன்
அலைக்கழியும் சொற்களைத்
திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.
தன்னந்தனியாய்
அமைதியாய்க் கடைசியாய்
எதிரெதிர் நான்
சந்திக்கப் போகும்
என் நிழலின் குரல்
யாருடையதாய்
இருக்கும்?
மரணத்தினுடையதாயில்லாமலா?
(3)
சூரியன்
உளி கொத்துகிறான்
ஒளி வீசி
வெண்பனிக் குன்றை-
பனியுருகி
ஒலி
சொட்டிச்
சொட்டி
உளி கொத்துகிறது
வெளி
உறைந்து
இறுகிய
அமைதியை-
வெண்பனிக் குன்று
உச்சரிக்க-
(4)
ஒரு குரல்
அடக்கமாயில்லை.
அதிகம்
சத்தம் போட்டால்
தன்னை
உண்மையென்று
நிறுவி விட முடியுமென்று
ஆணவம்
அதற்கு
சத்தத்தை
உயர்த்திக் கொண்டே போனது
குரல்.
சட்டென்று
சப்த
பலூன்
வெடித்தது.
குரலின்
கடைசி சப்தம்
நிசப்தம்-
(5)
ஒலி செத்த
பிணக் காடாய்
தொலைவில் பனிக்குன்று
தெரியும்
வனாந்திரம்-
வெட்டி வீழ்த்தப்பட்ட
ஒரு கரிந்த மரம் மீது
ஒரு காகம் அமர்கிறது
செத்த ஒலியை
எப்படி கொத்துவது
என்பது போல்
யோசித்தபடியே-
ஆனால்
குரலெடுக்காமலே-
குரலெடுத்தாலும்
குரலுக்கு
குரல்
குரலில்லை போல்
யோசித்தபடியே-
(6)
நீ நினைக்கிறாய்
முத்துப் பரலென்று-
உன் சொற்சிலம்பை எறி
மாணிக்கப் பரல் தெறிக்கும்.
உன் சொல்லில்
பதுங்கியிருக்கிறாய் நீ-
உன்னைக் காட்டிக் கொடுத்து விடும் அது.
மெளனத்தின் வெட்டவெளிக்கு
வந்து விடு.
ஓடை
கூழாங்கற்களுக்கு பிடிபடாத
அர்த்தமாய் வழிந்தோடுகிறது.
ஒடுங்கிய
ஒலி
மெளனம்-
ஓங்கிய
மலை
போல்-
(7)
சுருட்டி வைத்து விடு
சிலந்தி வலை கட்டும்
சொற்களை
சிந்தனையின் மூலையில்-
சொற்கள் போதும்-
மெளனம் தலைசாய்க்க
இடங் கொடு.
அதிகம் தேவையில்லை-
இதயத்தில் ஒரு மூலை போதும்.
அறையின் மூலையில் ஒரு சிறு தீபம் போல்-
உன்னருகே அமர்ந்து நீ
நெருக்கமாய் உரையாடியதில்லையா?
மொழியைப் போல்
பயில வேண்டியதில்லை அதற்கு.
மெளனம்
வரம்பில்லாத மொழி.
உச்சரிக்கத் தேவையில்லை
அதை.
ஒரு சொல்லுக்கும்-
உச்சரிக்கப்படும் வரை
சுவாசிக்க
மெளனம் போதும்.
கு. அழகர்சாமி
- சந்தி
- மெளனத்தின் முன் அலைக்கழியும் சொற்கள்
- ”வினை விளை காலம்”
- மீண்டும் ஓநாய்களின் ஊளைச்சத்தம்
- ஆறாம் நிலத்திணைப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
- சொல்வனம் 340 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை