முனைவர் ந.பாஸ்கரன்,
இணைப் பேராசிரியர்,
தமிழாய்வு துறை,
பெரியார் கலை கல்லூரி, கடலூர்-1.
ஏரெழுபது
கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்றாலே கம்பர் இயற்றிய கம்பராமாயணம் என்னும் நூல் தான் நினைவுக்கு வரும். ஆனால், கம்பர் தன் கவித் திறமையால் சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம், ஏர் எழுவது என்று பல நூல்களை இயற்றியுள்ளார். இவற்றுள் உழவர்களைப் பற்றியும் உழவுத்தொழிலைப் பற்றியும் மிக விரிவாகவும் அழகாகவும் எழுதியுள்ள ஏரெழுவது என்னும் நூலின் சிறப்புகளை இக்கட்டுரையில் காண்போம்.
ஏரெழுபது என்பது ஏரைப்பற்றி ஏர் கருவியைப் பயன்படுத்தும் உழவுத் தொழிலை பற்றியும் கூறுகின்ற எழுபது பாடல்களைக் கொண்ட கவிதைத்தொகுப்பு எனப்படுகிறது. உழவுத் தொழிலுக்கு முக்கிய கருவியாக உள்ள களப்பையைக் குறிப்பதாக ஏர் என்னும் சொல் உள்ளது. வேளாளரையும் இது குறிக்கிறது. “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் உழன்றும் உழவே தலை” என்னும் குறளுக்கேற்ப உழவுத் தொழில் சிறப்பைப்பல நிலைகளில் கம்பர் தொகுத்துள்ளார். ஏர்ப்பற்றிய கவிகள் தவிர பயிர் விளைவித்தலுக்குரியத் தொழில் முறைகளையும் விளக்குவதாக உள்ளது. ஏரெழுவது இயற்றுவதற்கு முன்பு இந்நூலுக்கு எந்த நூலும் முதல் நூலாக அமையவில்லை. ஏரெழுபதும் எந்நூலின் வழியும் தோன்றியதும் இல்லை. எனவே, முதல்நூல், வழிநூல், சார்பு நூல் என்னும் மூன்று வகையான நூல்களில் ஏரெழுபதே முதல் நூலாக உள்ளது. ஒரு செய்தியை எரெழுபதுநூல் நயமாகவும் விளக்கமாகவும் கூறுகிறது. .எழுபது செய்யுள்களில் ஒரு கருத்தை விளங்குவதால் இந்நூல் வித்தாரகவி என்னும் சிறப்புக்குரியதாக உள்ளது.
உலகை படைக்கின்ற பிரம்மா, காக்கின்ற திருமால், அழித்துக் காக்கின்ற சிவபெருமான் என்னும் முக்கடவுளரையும் விட வேளாண் மக்களே உலகை காக்கின்றவர்களாக பசிப்பிணி யைப் போக்குகின்றவர்களாக இருக்கின்றார்கள். வேளாளர்கள் அந்தணர்களை விட பசிப்போக்குகின்ற பயிர் விளைவிக்கும் வேளாளரே சிறந்தவர். படைப்புக் கடவுளான பிரம்மா முதலில் வேளாளரையேப் படைத்துள்ளார் இவர்கள் தாய்ப்போல அனைவரையும் காப்பவராக இருந்துள்ளனர். எனவே, இவர்களுக்கு நிகராக வேறு எவரும் இல்லை என்பதே பெருமைக்குரியது. உழவர்கள் உழவுத் தொழிலில் ஈடுபடும் ஒவ்வொரு நிகழ்வையும் விளக்கி விவரித்துப் போற்றுவதாக கம்பர் படைத்துள்ளார். வயலில் உழவுத்தொழிலை தொடங்குகின்ற நாள் ஒரு நல்ல நாளாக இருக்க வேண்டும் என்பதில் உழவர்கள் மிகவும் தெளிவாக இருந்துள்ளனர். நல்ல நாளையும் நல்ல நேரத்தையும் கணிக்கின்ற சோதிடர்களைக்கொண்டு நல்ல நாளைப் பார்த்துப் பொன்னேர்ப் பூட்டி உழவுத்தொல்லை நல்ல நாளில் தொடங்கியுள்ளனர். அரசரிடம் இருக்கின்ற யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை மற்றும் காலாட் படை என்னும் நான்கு வகை படைகளையும்விட சிறந்ததாக உழவுத் தொழிலை செய்யும் உழவர்ப்படை இருந்துள்ளது. வேளாளர்களின் ஏர்விழாவே உணவைத்தரும் திருநாளாகும். உழவர்கள் உணவை உழவுத் தொழிலில் உற்பத்தி செய்து தராவிட்டால் போர் வீரர்கள் போருக்குப் போகமாட்டார்கள். அந்தணர்கள் வேதம் ஓதுவதற்கும் போகமாட்டார்கள் என்று கம்பர் கூறுகிறார்.
ஏர்க்கலப்பைப் படுக்க வைத்தததுப் போன்ற தோற்றத்தில் இருக்கும் தொழில் கருவியாக உள்ளது. இதனைக் கம்பர் அலப்படை என்கிறார். அரசரின் போர்வாளுக்கு வேளாளரின் அலப்படைவாளே கூர்மையும் வலிமையும் தரக்கூடியதாக இருந்துள்ளது. உணவைத் தரும் விளைச்சலைத் தருவதாக உழவரின் அலப்படை என்னும் ஏர்க்கருவி இருந்துள்ளது. வேளாளரின் அலப்படை இல்லையேல் அரசரின் நான்கு வகைப் படையும் இல்லாத நிலையே நடந்திருக்கும் அரசரின் வலிமையும் குறைந்திருக்கும்.
உழவுத் தொழிலுக்குப் புகழ்ப் பெற்ற ஒரு நாடு சோழநாடு. இதனைப் பொன்னிவளநாடு என்று கம்பர் கூறுகிறார். ‘சோழநாடு சோறு உடைத்து’ என்னும் பழமொழியே உழவர்களால் அந்நாட்டிற்கு வந்தது. அலப்படையால் வடிவம் மட்டுமின்றி நிலத்தை அறுக்கும் தொழில் தன்மை உடையதாக உள்ளது. அதன் மூலம் விளைச்சலை உண்டாக்கியுள்ளனர். இதன் மூலம் பகைவரின் பகையை அளித்துள்ளனர். ஏர்கலப்பையை ‘மேழி’ என்று கூறுவர். கலப்பை யின் கூர்முனை நிலத்தில் அழுந்தும்படியாக ஏர்க் கலப்பை மேல் கொண்டைபோல் ஒரு அமைப்பு இருக்கும். அந்த உறுப்பிற்கு மேழி என்று பெயர். அதனை அழுத்திப் பிடித்துக் கொண்டே உழவுத் தொழிலை மேற்கொள்வார்கள் .அப்படி மேழியைப் பிடிக்காமல் உழவர்களின் கை வீணே இருந்து விட்டால் உழவுத் தொழில் நடைபெறாது. நாட்டிலும் உணவு வளம் சிறப்பாக இருந்திருக்காது.