Posted in

நேசம்

This entry is part 2 of 10 in the series 2 நவம்பர் 2025

அநாமிகா

கோவிட் சமயத்தில் வேலை போய்விட்டது. கொரோனவே எதிர்பாராத பேரதிர்ச்சி யாயிருந்தது. அதில் இது வேறு. கையில் ஏதோ தொகை கொடுத்தார்கள். அதை வைத்துக்கொண்டு சில மாதங்களை ஓட்ட முடிந்தது. வங்கி சேமிப்பு என்று பெரிதாக எப்போதுமே இருந்ததில்லை. ஹியர் அண்ட் நௌ என்ற வாழ்க்கைத்தத்துவத்தைப் பெரிதும் நம்பினாள். அதனால்தான் கல்லூரிப்படிப்பை முடித்து இருபது வருடங்கள் காணாமல் போயிருந்தவர்கள் திடீரென்று பழைய நண்பர்களோடு மீண்டும் இணையும் படலத்தைத் தொடங்கியபோது அதில் இணைய முடியாதென்று கண்டிப்பாக மறூத்துவிட்டாள். அதுவும், இப்போது யோசித்துப்பார்த்தால் கல்லூரி நட்பெல்லாம் நட்பா என்றிருந்தது. தினமும் சேர்ந்திருந்தோம், சிரித்தோம், பேசினோம் அவ்வளவு தான். அதைத்தவிர அவரவர் உலகங்கள் மிகவும் வேறானதாகவே இருந்தன. 

பிழைப்புக்காக நிறைய வேலை பார்த்தாள். நல்ல வேலை கிடைத்திருக்கிறது என்று நிம்மதிப் பெருமூச்சு விட நாசித்துவாரங்கள் விரிவதற்குள் முதலாளி அழைத்து, “ முடியலேம்மா – நானே அலுவலகத்தை மூடிடலாம்னு இருக்கேன். தப்பா நினைச்சுக்காதீம்மா – வேற வேலை பாத்துக்கங்க” என்று சொல்லிவிடுவார். அப்படி நாலைந்து வேலைகள் மாறவேண்டிய சூழல். க்ரெடிட் கார்டுகளில் கடன் பெற்று பின் மாதத்தவணையை உரிய நாளில் செலுத்தமுடியாமல் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி க்ரெடிட் கார்டு கடன் தொகையை செலுத்தி….

கொரோனா சமயம் மாரடைப்பு வந்து வேலையிழந்து ஊர் போய்விட்ட சிநேகிதிக்கு உதவி செய்யாமலிருப்பது மனதை அறுத்தது. அங்கேயிங்கே கடன் வாங்கி அனுப்பிய சிறுதொகை சிநேகிதியைக் காப்பாற்றுவதற்கான சிறு பங்காற்றியிருந்தால் கூட ஆறுதலாயிருந்திருக்கும்…..

தெரிந்தவர்களில் உதவக்கூடியவர்கள் என்ற கணக்கில் சிலரோடு தொலைபேசியில் தொடர்புகொண்டாள். 

“மேடம், என்னை நினைவிருக்கா?”

“அடடே! எப்படியிருக்கே?”

“நல்லாயிருக்கேன் மேடம்… நீங்க? வீட்டிலே எல்லாம் நல்லா இருக்காங்களா? ஸார் கிட்டே கேட்டதாச் சொல்லுங்க”

”ஸார் போயிட்டாரும்மா….”

குரல் கமற பதிலளித்த மறுமுனைக்குரல் தொடர்ந்தது. “கொரோனான்னு ஆஸ்பத்திரியிலே சேத்தோம். திரும்பி வரலை…..

“ஐயோ – கேக்கவே ரொம்பக் கஷ்டமாயிருக்கு மேடம்….

“என்ன பண்ண…. நான் வாங்கி வந்த வரம் அப்பிடி…”

”என்ன சொல்றதுன்னே தெரியலை மேடம்… ஏதாவது உதவி தேவைன்னா என்னைக் கூப்பிடுங்க. இதுதான் என் நம்பர்…. பத்திரமாயிருங்க மேடம்”

இவரிடம் எப்படி உதவி கேட்பது…எப்படிக் கேட்க வாய்வரும்…

பாரமேறிய மனதோடு படுத்துக்கொண்டபோது கண்களில் நீர் கசிந்தது.

ஒருவழியாக வேலை கிடைத்தது. சம்பளம் குறைவுதான். ஆனால், SOMETHING IS BETTER THAN NOTHING…

வேலைக்குப் போக ஆரம்பித்த பின் விரைவிலேயே வேலை பழகிவிட்டது. 

வேலை போய்விட்ட பின் அவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருவது குறைந்துபோய் சமீபகாலமாய் அறவே நின்றுபோய்விட்டதை நினைத்துப்பார்த்தாள். கொரோனாவால் அவனுக்கும் ஏதாவது இடர்ப்பாடுகள் ஏற்பட்டிருக்கலாம்.  அவர்கள் வீட்டில் யாராவது முக்கியமானவர் இறந்துபோயிருக்கக்கூடும்…. ஆனால்…. ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்… ”ஏதாவது உதவி வேண்டுமானால் தயங்காமல் கேள். என்னால் இயன்றதைக் கண்டிப்பாகச் செய்வேன்”… கேட்கவில்லை என்ற வருத்தம் மனதில் ஒரு மொண்ணை வலியாய்.. சமயங்களில் விண்விண்ணென்று தெறிக்கும் வலியாய்…. 

”எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் ஒரேவிதமாக யோசிக்கக் கூடாது. Lateral Thinking மிகவும் அவசியம் என்று சமயம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் சொல்வான் அவன்.

அப்படியென்றால் என்ன என்று அவனிடம் கேட்காமல் கூகுளில் பார்த்துத் தெரிந்துகொண்டாள்

“Lateral thinking என்பது ஒரு சிக்கலை நேரடியாக அணுகாமல், மாற்று வழிகளில் யோசித்துத் தீர்வு காணும் ஒரு மறைமுகமான மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை யாகும். இந்த முறை பாரம்பரியமான படிப்படியான தர்க்க முறைகளிலிருந்து விலகி, புதிய மற்றும் வித்தியாசமான யோசனைகளை உருவாக்க உதவுகிறது” என்று கூகுள் பொருள் தந்தது.  

அது உண்மைதான். கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லையென்றால் எதற்கெடுத் தாலும் முன்பெல்லாம் கம்ப்யூட்டர் சர்விஸிங் செண்டரிலிருந்து ஆளை வரவழைத்து ‘விஸிட்டிங் சார்ஜ்’ 300, 400 கொடுப்பதைத் தவிர்த்து இப்போதெல்லாம் ஏதாவது இணைப்புவயர் தளர்ந்திருக்கிறதா, அதன் முனை பிளந்திருக்கிறதா என்றெல்லாம் முதலில் பார்த்து தன்னால் முடிந்தால் அதை சரிசெய்யப் பழகினாள். பரிச்சயமான ஒருவர் எதிரே வந்தும் பார்க்காததுபோல் போனால் ‘எத்தனை திமிர் பார்’ என்று மனதிற்குள் சினங்கொள்வதற்கு பதிலாக ‘ஒருவேளை இன்றைக்கு அவர் கண்ணாடி போட மறந்திருக்கலாம், அல்லது வேறு ஏதோ யோசனையில் நடந்துவந்திருக்கலாம்’ என்று வெவ்வேறு சாத்தியப்பாடுகளை யோசித்துப்பார்க்க ஆரம்பித்தாள். ஒருவகையில் இந்த Lateral thinking நம் மனதைக் காப்பாற்றிக்கொள்ளப் பெரிதும் உதவுகிறது என்ற எண்ணம் வலுப்பெற்றது. 

வேலை கிடைத்த விவரம் தெரிவித்தவுடன் அவனிடமிருந்து வாட்ஸப்பில் வாழ்த்து வந்தது. 

பின், பூஸ்டரெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு, முகத்தில் மாஸ்க்குடன் மனிதர்கள் வீதிகளில் வலம் வரத்தொடங்கிய பின், தொலைபேசியில் அழைத்துப்பேசினான். சில நாட்கள் கழித்து அவர்கள் எப்போதாவது சந்திக்கும் அந்த சிற்றுண்டிசாலையில் சந்தித்தனர்.

“உன்னைப் பார்க்க சந்தோஷமாயிருக்கு”

”எனக்கும்”

“ நான்…. நான் _” சற்றுத் தயங்கித் தடுமாறி ஆரம்பித்தான் அவன்: “உனக்கு வேலை போயிடுத்துன்னு தெரிஞ்சும் உனக்கு உதவ முன்வரலை நான். என்னை நினைச்சா எனக்கே அசிங்கமாயிருக்கு…ஆனா….”

“எனக்குத் தெரியும். உதவி வேணுமான்னு நீ கேட்டா நான் உடைஞ்சுபோயிடுவே னோன்னு உனக்கு பயம். நான் ரோஷக்காரின்னு உனக்குத் தெரியாதா என்ன!”

சட்டென்று தனது கையை மேஜையின் குறுக்காக நீட்டி அவளுடைய கையைத் தொட்டான். ”தாங்க்யூ!”

அவனுடைய கண்களில் நீர்க்கசிவைப் பார்த்தபோது அது நேசத்தின் ஈரம் என்று அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அது குறித்த எந்தவிதமான ‘லேட்டரல் திங்க்கிங்’குக்கும் அங்கே தேவையிருக்கவில்லை!

*

Series Navigationகோபம்மெஹரூன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *