வளவ. துரையன்
”நன்றுடையானை ஈயதில்லானை நரைவெள்ளேறு ஒன்றுடையானை” எனும் திருஞானசம்பந்தரின் தேவாரத்தை உரக்கப்பாடி காலை பூஜையைச் செய்து கொண்டிருந்தார் சதாசிவ ஓதுவார் சுவாமிகள். பூஜை அறையே ஒரு சிவத்தலமாகத் திகழ்ந்தது. சமயக்குரவர்களின் படங்கள் சற்று பெரிய அளவிலும் மற்ற நாயன்மார்களின் படங்கள் எல்லாம் சேர்ந்த ஒரு படமும் காட்சியளித்தன்.
சிவபெருமான் உமையம்மை சமேதராய் முருகர் விநாயகருடன் வீற்றிருக்கும் ஒரு பெரிய படமும் இருந்தன. எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு செம்பருத்திப் பூ வைக்கப்பட்டிருந்தது. ஓதுவாருக்கு எதிரில் பெரிய தாம்பாளத்தில் அன்றைய நைவேத்தியத்துக்கான் பல்வகைப் பழங்கள் இருந்தன. அருச்சனைக்கான வில்வமும், உதிரிப் பூக்களும் சிறிய தட்டில் இருந்தன. சிறிய கிண்ணங்களில் சந்தனம், குங்குமம் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. ஒரு பித்தளைச் சம்படத்தில் விபூதியுமிருந்தது.
அவர் கவனத்தைக் கலைப்பதைப்போல் வாசல் பக்கம் ஏதோ சத்தம் கேட்டது ”சாமி, சாமி” என யாரோ அழைப்பது போலக் கேட்டது. உடனே ஓதுவார் “கற்பகம் அங்க வாசலில்ல யாரு பாரு” என்று குரல் கொடுத்தார். அவர் மனைவி கற்பகம் வாசலுக்குச் செல்லும் ஒலி கேட்டது.
கவனத்தைச் சிதறவிடக் கூடாது என முடிவெடுத்துத் தன் சிந்தையைச் சிவனிடம் செலுத்திய ஓதுவார் பத்து நிமிடங்கள் கழித்துப் பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்தார். வெளியே கூடத்தில் கற்பகம் கொடுத்த காப்பியைக் குடித்துக் கொண்டிருந்த முருகனும் வேலுவும் உடனே எழுந்தனர்.
“ஒக்காருங்கப்பா; என்ன இவ்ளோ தூரம்? என்று கேட்டார் ஓதுவார். குடித்து முடித்துக் குவளைகளை வைத்த பின்னரும் சிறிது நேரம் வந்தவர்கள் இருவரும் ஒன்றும் பேசவில்லை. அதற்குள் மனைவி காப்பி கொண்டுவர சதாசிவமும் ஆற்றிக் குடித்தார். பின் கேட்டார்.
“அப்பறம் என்னா? சொல்லுங்கப்பா; ஏன் பேசமாட்டேன்றீங்க”
வேலு முருகனைப் பார்க்க முருகன் வேலுவைப் பார்த்தான். மறுபடியும் ஓதுவார் வேலுவைப் பர்த்து, “வேலு நீ சொல்லு” என்றார்.
“நல்ல செய்திதாங்கய்யா; அப்பரடிகள் திருநெறி மன்றம்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்கோம்”
’அப்படியா? மகிழ்ச்சிதான்; எப்ப ஆரம்பிச்சீங்க?”
”ரெண்டு மாசம் இருக்குங்க ஐயா; சுருக்கமாத் தொடங்கிட்டோம். வெளில யாருக்கும் அதிகமாச் சொல்லல”
”ஏம்பா ஆறுமுகம் ஒண்ணு நடத்தறாரே! அது இப்பவும் நடக்குதில்ல”
“ஆமாங்க; சைவச் செந்தமிழ்க்கழகம் இன்னும் நடக்குதுங்க”
“அப்பறம் இன்னும் ஒண்ணு ஏம்பாத் தனியா?…” என்று இழுத்தார் ஓதுவார்.
உடனே முருகன் சொன்னான். “ஏங்க ஒண்ணுக்கு ரெண்டாத்தான் இருக்கட்டுமே”
“ரெண்டு என்னாப்பா. மூணு நாலு கூட இருக்கலாம். எல்லாருமே ஓம் நமசிவாயன்னுதான சொல்லப் போறோம்” என்று புன்சிரிப்புடன் சொன்னார் ஓதுவார். அவருக்கு ஓரளவிற்குப் புரிந்துவிட்டது. ஆறுமுகமும் இவர்களும் சேர்ந்து கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நடத்தி வரும் சைவநெறிக் கழகத்தில் ஏதோ இவர்களுக்குப் பிரச்சனை. அதுதான் தனியாகப் பிரிந்து ஆரம்பித்து விட்டார்கள்.
கூடத்தில் பெரிய அளவில் இருந்த திருச்செந்தூர் முருகனைப் பார்த்தார். ”முருகா எல்லாருக்கும் நல்ல புத்தி கொடு என்று மனத்தளவில் வேண்டிக் கொண்டார்.
“சரிங்கப்பா; ஒங்களுக்குள்ள ஏதோ பிரச்சனைன்னு தெரியுது. ஆனா சிவனடியார்களுக்குள் பகைமை கூடாது. வேடன் கண்ணப்பனுக்குக் கூட கண்ணைத் தோண்டி எடுத்துக் கடவுளுக்கு அப்பற அளவுக்கு அன்பு இருந்தது ஒங்களுக்குத் தெரியும்ல”
”ஆமாங்க; இப்பவும் எங்களுக்குள் ஒண்ணும் வேறுபாடு இல்லீங்க. ஆறுமுகம்தான் சரியான கணக்கு காட்ட மாட்டேன்றாருங்க” என்றான் வேலு.
”சரிப்பா: ஏன் நீங்க கேக்கலாம்ல; கூட்டத்துலப் படிக்கறதா சொல்றாரே“
”அதைக் கூட உடுங்கய்யா; சரியான மரியாதை தரமாட்டேன்றாருங்க. அவருக்கு வேண்டிய ரெண்டு மூணு பேரைத்தான் கலந்துக்கிட்டு எல்லாம் செய்யறாருங்க” என்று பதில் வந்தது.
சதாசிவத்திற்குப் புரிந்தது. இது தீர்க்க முடியாத சிக்கல். எதிரே இருந்த கைலாய பர்வதத்தைப் பார்த்து மனத்திற்குள் கையெடுத்துக் கும்பிட்டார்.”உலகெலாம் உணந்து ஓதற்கரியவா” எல்லாவற்றையும் நல்லபடி நடத்தி வை” என்றும் மனத்தில் தோன்றிய ஆலமுண்டானிடம் கேட்டுக்கொண்டார்.
அவர்களைப் பார்த்து, “சரிங்கப்பா நல்லா செய்யுங்க; நான் என்னா செய்யணுமோ சொல்லுங்க; செய்யறேன்”
உடனே முருகன் சொன்னான், “ஐயா, வழக்கமா நடத்தற மாதிரி திருமுறை மாநாட்டை எங்களுக்கு நீங்கதான் நடத்திக் கொடுக்கணும்”
“தாராளமா நடத்தித் தரேன். அது சரி, ஆறுமுகமும் செந்தமிழ்க் கழகம் சார்பா நடத்துவாரே” என்றார்.
”ஆமாங்க; அது அடுத்த மாசம் கடைசில. நம்மளது அதற்கு அடுத்த மாசம்; நீங்கதான் ஆரம்பத்திலேந்து கடைசிவரை இருந்து நடத்தி வைக்கணும்” என்றான் முருகன்.
“ஒங்களுக்காக இல்லப்பா” பாடலீஸ்வரனுக்காக நான் கண்டிப்பா நடத்தித் தரேன் என்று சிரிப்புடன் கூறி விடை கொடுத்தார் சதாசிவ ஓதுவார்.
இரவு முழுதும் உறக்கமின்றித் தவித்தார் ஓதுவார். ”பக்தியும் இப்பொழுது மரியாதைகள் எதிர்பார்க்கும் அரசியலாகிவிட்டதே; எல்லாரும் ஒன்று என்ற எண்ணமும் சற்று விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இல்லாமல் போய்விட்டதே. நீ பெரியவனா? இல்லை நான் பெரியவனா? என்று பார்க்கும் பேதம் வளர்ந்து விட்டதே! உமையொருபாகனிடம் பக்தி கொண்டவர்களிடத்தில் இப்படி வேற்றுமை இருக்கலாமா? பொன்னார் மேனியனுக்கு முன்னால் யார் பெரியவர்?” என்றெல்லாம் எண்ணிப் பார்த்தார். எப்பொழுது தூங்கினார் என்பது அவருக்குத் தெரியவில்லை.
அடுத்த வாரம் அவர் எதிர்பார்த்தது நடந்துவிட்டது. காலையில் பூஜைகள் மற்றும் சிற்றுண்டி முடித்து வாசலில் உட்கார்ந்துகொண்டிருந்தார். கோயிலில் கால பூஜைக்காக மணி ஒலிக்கும் சத்தம் கேட்டது. படித்துக்கொண்டிருந்த செய்தித்தாளில் கவனம் செல்லவில்லை. மனம் ஏதேதோ எண்ணித் தவித்துக் கொண்டிருந்தது. உள்ளம் அமைதி கொள்ள திருவாசகத்தை வாசிக்கலாம் என்றெண்ணி உள்ளே போகலாம் என்று எழுந்தார்.
அப்பொழுது இருசக்கர வாகனம் வரும் ’பட பட’ என்னும் ஒலி கேட்டது. இவர் வீட்டு வாசலில் வாகனம் வந்து நிற்க அதிலிருந்து ஆறுமுகம் இறங்கினார். வந்தவர் கையிலிருந்த பழங்களடங்கிய பையைக்கொடுத்து சதாசிவத்தைக் கை கூப்பி வணங்கினார்.
”வா ஆறுமுகம் உள்ள போகலாம்: என்று அழைத்து வந்த சதாசிவம் கற்பகம் ”யாரு வந்திருக்காருன்னு பாரு” என்று குரல் கொடுத்தார். வெளியே வந்த கற்பகம்.
”வாங்க தம்பி” என்றவர் “பேசிக்கிட்டிருங்க மோரு எடுத்தாறேன்” என்று உள்ளே சமையலறை நோக்கிச் சென்றார். “இப்படி ஒக்காருப்பா” என்று நாற்காலியைக் காட்ட ,”நீங்க மொதல்ல ஒக்காருங்கய்யா என்று கூறிவிட்டு ஆறுமுகம் உட்கார்ந்தார்.
“ம்ம்…சொல்லு ஆறுமுகம். என்னா விஷயம்?”
“அடுத்த மாசம் கடைசிலத் திருமுறை மாநாடு நடத்தணுங்க; நீங்கதான் வழக்கம் போல நடத்தித் தரணுங்க”
“நான் எங்கப்பா நடத்தறேன். அவன் என் மூலமா நடத்திக்கறான்” என்று கூறிச் சிரித்தார் ஓதுவார்.
“ஆமாங்கய்யா, எங்களுக்கு ஒங்க மூலமா பாடலீஸ்வரரு நடத்தராறுன்னு வச்சுக்குங்களேன்”
“சரி, நடத்திடுவோம். மண்டபத்துலப்போயித் தேதி வாங்கிடுங்க”
”அடுத்த மாசம் கடைசி ஞாயிறுதானுங்க; ஒத்துக்கிட்டாங்க” அப்பறம்….” என்று இழுத்தார் ஆறுமுகம்.
ஓதுவாருக்கு அவன் என்ன சொல்லப் போகிறான் என்று புரிந்துவிட்டது. அவன் வாயாலேயே வரட்டும் என்று காத்திருந்தார். ஆனால் ஆறுமுகம் ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் சும்மா இருந்தார். பிறகு எதுவும் தெரியாதது போலக் கேட்டார்.
”என்னாப்பா; ஏதோ சொல்ல ஆரம்பிச்சே?”
“ஆமாங்க. வேலுவும் முருகனும் ஒங்களப் பாக்க வந்ததாக் கேள்விப்பட்டேன். புதுசா அவங்க ஒரு மன்றம் ஆரம்பிச்சிருக்காங்களாம். அதன் மூலம் திருமுறை மாநாடு நடத்தப் போறாங்களாம். சொன்னாங்களா?”
“ஆமாம்பா; அதுக்காகத்தான் வந்தாங்க. நான்தான் மாநாட்டை நடத்தித் தரணும்னு கேட்டாங்க”
உடனே ஆறுமுகம் சற்று வேகமாகவே கேட்டார். “ஏன் சாமி, நாங்கதான் நடத்தறோம் அப்பறம் என் இன்னொன்னு? நீங்க சொல்லக்கூடாதா?”
”ஏம்பா? நான் சொல்லாம இருப்பனா? அவங்களுக்கு ஏதோ பிரச்சனை; அதாலத் தனியா நடத்தறோம்னு சொல்றாங்க”
ஆறுமுகம் சற்று நேரம் தலை குனிந்து சும்மா இருந்தார். நிமிர்ந்தார் .கற்பகம் கொண்டுவந்த மோரை வாங்கிக் குடித்தார். வாசலில் ஏதோ வண்டி போகும் சத்தம் கேட்டது. ஆறுமுகம் அந்தப் பக்கம் பார்த்துவிட்டுப்பேசத் தொடங்கினார்.
“ஏன் சாமி எதா இருந்தாலும் பேசித் தீக்கலாம்ல; அப்படி என்னா வாய்க்கா வரப்புத் தகராறா இது. இல்ல சொத்து பாகம் பிரிச்சுக்கறதா? அதெல்லாமெ விட்டுக்கொடுத்து சமாதானமாப் போயிடறாங்க”
“ஆறுமுகம். வீணா மனசைப் போட்டுக் குழப்பிக்காத. நடக்கறது நடக்கட்டும்”
“இல்லீங்க சாமி; இத்தனை நாளா ஒண்ணா இருந்தவங்கப் பிரிஞ்சு போயித் தனியா நடத்தினா ஊர்லப் பாக்கறவங்க என்னா நெனப்பாங்க? என்னமோ சண்டைன்னுதான? சரி, நீங்க என்னா சொல்லி அனுப்பினீங்க?”
“என்னா சொன்னேன்? அவங்க மாநாட்டையும் நடத்தித் தரேன்னு சொல்லியிருக்கேன்”
ஆறுமுகத்தின் முகம் வாடிப்போய் விட்டது. “அப்படிங்களா” என்று சுரத்தில்லாமல் மெதுவாகக் கேட்டார்.
“ஆமாம் ஆறுமுகம். அந்த மாநாட்டுலயும் சரி. நீ நடத்தப் போற ஒங்கத் திருமுறை மாநாட்டுலயும் சரி. இங்கிலீஷா பேசப்போறோம். தமிழ்தான? எல்லாருமே தேவாரம், திருவாசகம், அத்தோடு எம்பெருமானின் திருவிளையாடலும்தானே பேசப்போறாங்க? அதாலதான் அதையும் நடத்தி வைக்கறேன்னு ஒத்துக்கிட்டேன். எல்லாருமே எனக்கு ஒண்ணுதாம்பா; சிவனடியார் கூட்டம்தான?”
“இருந்தாலும்…..என்று ஆறுமுகம் இழுத்தார்.
“ஆறுமுகம் ஒண்ணும் கவலைப்படாதே. பாடலீசுவரன் ஒங்க ரெண்டு கூட்டம் மனசிலயும் புகுந்து என்னமோ வெளையாடறான் அது நல்லதாகத்தான் முடியும்? நடக்கட்டும்”
தளர்ந்த நடையுடன் ஆறுமுகம் கிளம்பிச்சென்றார். ஓதுவார் கண்களும் பனித்தன