This entry is part 9 of 11 in the series 5 ஏப்ரல் 2026

                            வளவ. துரையன்

எங்கள் அப்பா

ஏரியில் துணி துவைப்பதே

ஒரு கவிதைதான்.

பெரிய கவிதை எழுத

முயல்பவர் போல

அகலமான கல்லைத்தான்

அவர் தேர்ந்தெடுப்பார்.

வழக்கமாக அது அவருக்காகக் காத்திருக்கும்.

பணி ஓய்வு பெற்றபின்

இந்த இலாகா

அவர் முழுப்பொறுப்பில்.

எங்கள் ஊர் ஏரி

இருபது கிராமங்களுக்குத்

தண்ணீர் வார்க்கும்

தளரா வளர்கடலாம்.

துணி மூட்டையை

அவிழ்த்துவைத்து

புதுமை நவீனம் மரபு

என்று வகைமைக்கு

ஏற்பப் பிரிப்பார்.

பின்னவற்றைப்

படியவைத்துச் சீராக

சோப்பு தடவி சமாதானப்படுத்துவார்.

பின்னவற்றுக்கு அடி உதைதான்

அழுக்கை விட்டுவிட்டேன்

என்று சொல்லும்வரைக்கும்

யுத்தம்தான் நடக்கும்.

நான் ஆழத்துக்குப் போய்விடாமல்

தக்கையின்மீது கண் வைத்துள்ள

தூண்டில்காரனாக என்னையும்

கண்காணிப்பதில் கவிதையில்

பிழை நேராமல் தடுப்பதுபோல் 

அவர் மிகவும் தேர்ந்தவர்.

Series Navigationசமூகம் கொடுக்கும் அழுத்தம்…வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் கலந்துரையாடலில், அடுத்து ந. பிச்சமூர்த்தி எழுதிய “ஞானப்பால்” சிறுகதை