This entry is part 3 of 3 in the series 26 ஏப்ரல் 2026

மழை நேரம் காலையில் ஊட்டிரோஸ் விற்பவர்

                                     – பா.சத்தியமோகன்

மழை முடிந்து  மழைநீர் மட்டும் சொட்டும் 
சூரியன் குறைந்த இளம் காலை
பொது மக்கள் காலை நேர ஈசலாய் 
மொய்க்கும்  பேருந்து நிலையத்தில்
அவசரப் பள்ளிப் பெண் குழந்தைகள் 
தலை வாரி கருப்பு கிளிப் வாயில் வைத்து 
“தலைய நல்லா காட்றி”  
மகள் கருப்புத் தலைகளுக்கு 
ஊட்டி ரோஸ் கேட்பர் நடுத்தர வயது அன்னையர்.
வெள்ளைத்தாடி சிலாம்பு விரைத்த 
முண்டாசு முகத்தவர்
விலை ரூபாய் ஐந்துக்கு ஊட்டி ரோஸ்  விற்பார்
வியாபாரம் முடிவதற்காக
பிரம்புக்கூடையின் பூக்களைத் தொட்டுத் தொட்டுப் புரட்டி
“கட்டுப்படி ஆவாதும்மா ஆவாதும்மா” என்று சொல்வார்
பொறுமையிழந்த  சிறுமியரோ கூந்தல் பூவுக்கு அழுவர்
அவர்தம் அன்னையர்கள்
 ஊட்டி ரோஸ் விலை குறைத்தும்  விலை கேட்பர்
விற்பவர் காலைப்பசிக்கேற்ப  
விலையின் நிறம் சில ரூபாய் ஏறும் இறங்கும்
எங்கோ விற்கும் பூரி மசால் வாசத்தில்
கிள்ளும் பசியால் கட்டுப்படி ஆகாத விலை ரூபாய் மூன்றுக்கு 
விற்க ஒப்புவார் முண்டாசு அவிழ்த்து
முகம் ஒற்றி ஒற்றி எடுத்து
“சரி ! கொடுக்கறதை கொடுங்கம்மா” எனும்போது 
மழைச்சொட்டுகள் 
வியர்வை போல் அவர் முகத்தில்.
***

Series Navigationஅட ! செத்த சும்மா இருங்கப்பா !