சோம அழகு
[வாழ்வில் உடனடியாக மாற்றத்தைத் தரவல்ல(!) சுய முன்னேற்றப் புத்தகங்களை(self-help books)விரும்புவோர் இவ்வெழுத்தை வாசிக்காமல் கடப்பது கணையத்திற்கு நல்லது!]
“I am sad/depressed/feeling low”
“Don’t be”
“Okay…. Wow!!! Thank you so much. Am feeling much better, in fact awesome. What you just said really worked. It helps. I wanna be productive as hell now”
இப்படி நடக்க வாய்ப்பே இல்லைதானே?
மன எழுச்சியை எழுப்பிவிடும் புத்தகங்கள், தன்னம்பிக்கையைத் தாரை வார்க்கும் புத்தகங்கள்,உத்வேகத்தை ஊற வைக்கும் புத்தகங்கள், சுய முன்னேற்றத்திற்குச் சொறிந்து விட்டு வெறியேற்றும் புத்தகங்கள்,….., கேட்ட உடனே குடுகுடுவென ஓடிப் போய் ஒரு நூறு கிலோ கல்லைத் தூக்கி ஐம்பது situps செய்யச் சொல்லும் Ted Talks – இவ்வகையறாக்களுக்கு(genre) நான் வைத்திருக்கும் பெயர் ‘இதற்கெல்லாம் ஒரு புத்தகமா?’. இவையனைத்தும் அந்த “Don’t be” வேலையைத்தானே செய்கின்றன? என்ன ஒன்று, அவ்விரண்டு வார்த்தைகள் தாம் இருநூறு பக்கங்களாக உருமாற்றம் அடைந்திருக்கும். இவ்வகைப் புத்தகங்களைப் புரட்டுவது கூட ‘வாசிப்பு’ப் பழக்கத்தில் வந்து விடுவதாகச் சிலர் என் அறிவுக் கண்ணை மூடி வைத்தனர். இதையெல்லாம் பொதுவெளியில்(பேருந்து, பூங்கா, இரயில்) கொண்டு செல்லும்போது வெட்கமாக இருக்காதா? நிஜமாகவே என்னைக் குடைந்தெடுக்கும் கேள்வி இது.
“ஏதோ சூழலினால் மனம் திசை மாறிச் சென்றாலோ சோம்பிக் கிடந்தாலோ ஒழுங்காகவினையாற்றச் சொல்லி இயல்பாக நம்முள் ஒரு குரல் கேட்கும்தானே? பிறகு என்னத்துக்கு…..?” என்று கேட்கும் என்னைப் போன்றோரை மனநல ஆலோசனைக்கு அனுப்புங்கள். நிற்க. இங்கு சற்றே தடம் விலகி ஆனால் இக்கருப்பொருளுடன் சம்பந்தப்பட்டதொரு சந்தேகத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். உளவியல் சார்ந்த பிரச்சனைகளின் முக்கிய காரணங்கள் இரண்டு. சூழலினால் மனக்குழப்பம் எனில் அதற்கு மூன்றாவது ஆள் ஒருவர் எப்படித் தீர்வு காண முடியும்? சூழலைத் தாண்டிபெரும்பாலும் ஊக்கிகளின்(hormones) சமநிலையற்ற தன்மையே காரணியாக இருக்கும். Dopamine, Serotonin, Oxytocin,…. – இவற்றில் ஏதோ ஒன்று சரியாகச் சுரக்காத போது மன அமைதியும் இயக்க ஆற்றலும் பாதிக்கப்படும். அதற்குச் செயற்கையாக மாத்திரை வடிவில் தகுந்த ஊக்கிகளைக்குறிப்பிட்ட அளவில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எடுத்துக் கொள்ளப் பரிந்துரைக்கப் படுவது கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்த counselling, therapy போன்ற சடங்குகள்தாம் புரிபடவே மாட்டேன் என்கிறது. அதே ‘Don’t be!’தானே இவையும். ‘தன்னம்பிக்கையுடன் இருக்கவும்’ என்பதைப் புத்தக வடிவில் வாசித்தோ குரல் வடிவில் கேட்டோ எப்படி ஒருவருக்கு உற்சாகம் பிறக்கும்? அது போல மனநலத்தைப் பேண நடத்தப்படும் அமர்வுகள்(therapy sessions) எப்படி ஒருவரைக் குணப்படுத்தும்?Therapy only works if you have a lower IQ than the therapist என்று எங்கோ வாசித்த ஞாபகம். இது இவ்வகைப் புத்தகங்களுக்கும் பொருந்தும்தானே?
********************************
‘You can win’ விற்பனையில் சக்கைப் போடு போட்டதைப் பார்த்து இன்னும் உற்சாகமாகி நம்மையும் உற்சாகப் படுத்தும் பொருட்டு பத்து வருடங்கள் கழித்து ‘You can sell’ என்ற ஒன்றை வெளியிட்டார் அதே ஆசிரியர். இரண்டையுமே… ஏன்? இந்த genreல் எவற்றையுமே வாசித்ததில்லை. ஆனால் இந்த இரண்டு தலைப்புகளையும் பார்த்தவுடன் ‘இது அதுல்ல?’ என்று பார்த்திபன் – வடிவேலு நகைச்சுவை ஒன்று நினைவிற்கு வந்தது. ‘ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆவது எப்படி?’ என விளம்பரப் படுத்தி கூட்டத்தைக் கூட்டி “நான் எப்படி விளம்பரப்படுத்தி உங்கள் ஒவ்வொருவரிடமும் நூறு ரூபாய் வாங்கி பணக்காரன் ஆனேனோ நீங்களும் அவ்வாறே செய்து….” என்று கூறுவார். இந்த யோசனையை ஏதோ விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நிஜமாகவே எப்படி விற்க வேண்டும் எனக் கற்றுத் தந்ததும் பயங்கரமாக வெற்றி பெற்றதில் மீண்டும் எட்டு வருடங்கள் கழித்து ‘You can achieve more’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
இது நல்லாருக்கே! இவ்வகைப் புத்தகங்கள் யாருக்கு ஊக்கமளிக்கிறதோ இல்லையோ அதன் ஆசிரியருக்கு நல்ல லாபம் ஈட்டித் தந்து அவரை நல்ல உயரத்திற்குக் கொண்டு செல்ல உதவுகிறது. அது சரி! யாரோ ஒருவருக்கேனும்(ஓருவருக்கு மட்டும்!) உபயோகமாக இருக்கிறதே! ஆனால் இப்புத்தகங்கள் எல்லாமும் ஒன்று விடாமல் எப்படி அதிக விற்பனையாகிறது என்ற சூட்சமம்தான் பிடிபடவில்லை!
இதை யோசித்தவாறே இணையத்தை மேய்ந்தால் ‘A practical guide to Ignoring self-help books : Stop buying and start living’ என்று அதற்கும் ஒரு புத்தகம் இருப்பது தெரிந்தது. அதாவது a self-help book to avoid self help books! அடேய்களா! நானும் சரி சரின்னு போலாம்னு பாத்தா…. இனியும் பொறுமையைக் கடைபிடிக்க இயலாது.
‘நானும் கூட ஒன்று எழுதலாமோ?’ என மூளையை முடுக்கி விட்டேன். சொந்தமாக யோசித்து எழுதி படைப்பாற்றலை வெளிக்கொணருவதுதான் கடினம். ஒரே கருத்தை கும்பீபாகம், கபீம்குபாம், கும்பா கம்பீ என வெவ்வேறு சொற்கள் மற்றும் வாக்கிய அமைப்புகள் கொண்டு வகுந்தெடுப்பதுதான் எளிதாயிற்றே? ஏற்கெனவே அதற்கென்று ஒரு வடிவத்தைதான்(format) முன்னோர்கள் இயற்றி வைத்திருக்கிறார்களே? அதைக் கொஞ்சம் அலசி (அடுத்த வார்த்தை ‘ஆராய’ இல்லை! இதில் ஆராயவெல்லாம் என்ன இருக்கிறது?) புரட்டி வறுத்து பொரித்து எடுத்தால் தெரிந்துவிடப்போகிறது?
அதற்கு முதல் வேலையாக என் பெயரை ALOGLU என மற்றலாம் என்றிருக்கிறேன். நானும் கணிதப் புலத்தைச் சார்ந்தவள் என்பதால் அப்பெயருடைய கணிதவியலாளரின் வழி வந்தவளாக அடையாளப்படுத்தப்பட்டு இன்னும் வெளிச்சம் கிடைக்க வாய்ப்புண்டு. இந்த யோசனைக்கு வித்திட்ட Dale Carnegieக்கு இவ்விடத்தில் என் நன்றியை உரித்தாக்குகிறேன். Andrew Carnegie என்னும் மிகப்பெரிய தொழிலதிபரின் பெயரில் உள்ள எழுத்துக்கோர்வையை(spelling) தனதாக்கிக் கொண்டால் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர் என நினைக்கப்பட்டுத் தமக்கும் புகழ் வெளிச்சம் கிடைக்கும் என்று Carnagey என்னும் தமது உண்மையான பெயரில் உள்ள எழுத்துக் கோர்வையை மாற்றியது வியாபார உத்தி அல்லாமல் வேறென்ன? ‘தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?’ என எழுதியவருக்கே தமது பெயரை அப்படியே போட்டுப் புத்தகம் விற்கத் தன்னம்பிக்கை இல்லை!
*******************************
இனி அப்படிப்பட்ட ஒரு புத்தகம் சமைப்பதற்கான செய்முறைதான்(recipe) பார்க்கப் போகிறோம். ஜென் பௌத்த கோட்பாடுகளையும் தத்துவங்களையும் வெகுவாக நீட்டி முழக்கி நீர்த்துப் போகச் செய்து அனைவரும் உண்ணும் வகையில் பக்குவம் பார்த்துப் பரிமாறுவதே இப்புத்தகங்கள்.வெறுமனே பிரசங்கம் மட்டுமே செய்தால் அறுவையாக இருக்கும்(இல்லாட்டா மட்டும்?ம்க்கும்!) ஆதலால் இப்புத்தகங்களில் ஆங்காங்கு வேடிக்கையான (என நினைத்துக் கொண்டு!) சிறு குறு சம்பவங்களைச் சேர்க்கலாம். ஆனாலும் கூட அப்புத்தகம் சுவாரஸ்யமற்றதாகத்தான் இருக்கும்.
ஏதோ ஆழமாகக் கூற வருவதைப் போன்ற பம்மாத்துகள் பல்லிளித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களது எழுத்து பாணியில்…. It gets as shallow as they try to get deep! The more they strive to make it profound, the more superficial it sounds! பாத்தீங்களா? ‘கும்பீ பாகம் செய்வது எப்படி?’ என்று உதாரணத்தோடு விளக்கியிருக்கிறேன்.
சில வாசகங்களைப் பொறுக்கி எடுத்து முதலில் ஒரு பட்டியலைத் தயார் செய்வோம்.
“தைரியமாக இரு;
கனிவாக இரு;
நேர்மறையாகச் சிந்தி; எதிர்மறை எண்ணங்களைத் தூக்கி எறி;
டைரி எழுதுவது நல்லது;
இலக்கை நோக்கிய உழைப்பு வேண்டும்; சிந்தனைச் சிதறல்கள் கூடாது; மனதை ஒருமுகப்படுத்து;
கடந்த காலத்தை எண்ணி வருந்தாதே; எதிர் காலத்தை எண்ணி மருளாதே;
நள்ளிரவு (‘அதிகாலை’ 4/5 a.m என்பதற்கு இதுதான் பொருத்தமான பெயர்) துயிலெழு;(ஆட்டோ கண்ணாடிய திருப்புனா வண்டி எப்படி ஜீவா ஸ்டார்ட் ஆகும்?)
………………………….”
இவற்றை அம்மாவே தினமும் சொல்லிக் கேட்டிருப்போம்தான். ஆனால் அது முக்கியமல்ல. சம்பந்தமே இல்லாத ஒரு பின் நவீனத்துவ (‘பின் நவீனத்துவம்’ என்றாலே ‘சம்பந்தம் இல்லாத’என்றுதான் பொருள் என்பது ஒரு புறம் இருக்கட்டும்!) ஓவியத்துடன் கூடிய அட்டைப்படம் அல்லது புத்தகத் தலைப்பையே அட்டை முழுமையுமாகக் கொட்டை எழுத்துகளில் பதித்து கொண்டு மேற்கூறிய ஒவ்வொன்றையும் குறித்துத் தனித்தனியாக எழுதப்பட்ட புத்தகமாக வாசிப்பதுதான் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக துனிசியா நாட்டு விஞ்ஞானி ஒருவர் துளசி பறிக்கும் போது உணர்ந்ததாகக் கூறுகிறார்.
*****************************
நூல் தலைப்புதான் ரொம்ப முக்கியமானது. அவ்வாறு தலைப்பிடுவதிலேயே பல ரகங்கள் இருக்கின்றன.
உலகப் புகழ் பெற்ற ‘How to win friends and influence people?’ (ஆத்தாடி! அப்பட்டமாக நேரடியாக manipulate செய்யக் கற்றுத் தரப்படுகிறது!), ‘How to stop worrying and start living?’, ‘How to develop self-confidence and influence people by public speaking?’, ‘How to enjoy your life and your job?’ போன்ற ‘How to..’, அதாவது ‘….எப்படி?’ வகையறா. ‘How to’ போட்டு எதை வேண்டுமானாலும் பின்னால் சேர்த்துக் கொள்ளலாம்.
இத்தலைப்புகளில் உள்ள ‘How to’வை எடுத்து விட்டால் என்ன மிஞ்சுகிறதோ அதைச் செயல்படுத்த ஒவ்வொரும் தமக்கேற்ற வழிமுறைகளைத் தாமாகத் தானே கண்டறிய வேண்டும்? உள்ளுணர்வுகளையும் அடிப்படை நாகரிகங்களையும் ஒருவருக்குக் கற்றுத் தரும் அளவிற்குத்தான் அவரது தன்மை இருக்கிறது எனில் சொல்லிக் கொடுத்து மட்டும் அவை எப்படி வரும்? அய்யய்யோ! அப்பப்போ இந்த ஆழ்மனசு வேற எட்டிப் பாத்து எதையாவது சொல்லிகிட்டு…! உள்மனதை ஓரமாகத் தூங்கப் போட்டு விட்டு வேலையைப் பார்ப்போம்.
நானும் “How to talk?” என்று கடையை விரிப்போமா என்றெண்ணி சும்மா அதை google செய்து முக்குளித்துப் பார்த்தால் நிஜமாகவே “How to talk to anyone?” என்றொரு புத்தகம் இருக்கிறது. இது சரிபட்டு வராது. அன்றாட வாழ்வுடன் எளிதில் தொடர்பு படுத்திக் கொள்ளும் வகையில் இருக்கும் ஒரு பொருளை முதலில் பிடிப்போம்.
உதாரணமாக….‘தோசையைச் சாப்பிடுவது எப்படி?’. தோசையை உண்பதே ஒரு தியானத்தைப் போன்றது. மகிழ்ச்சி, துக்கம் என இரு பக்கங்களைக் கொண்ட வாழ்க்கை அன்ன தோசை, சுடப்படும் போது கூட ‘ஸ்ஸ்ஸ்’ என்ற சத்தத்துடன் அமைதியைக் கற்றுத் தருகிறது.சாம்பாருக்கு 4 இயல்கள்(chapters); சட்னிக்கு 2 இயல்கள், கார சட்னிக்கு ஓர் உப இயல்(sub chapter); பொடிக்கு 5 இயல்கள். சாம்பாரைத் தொட்டுச் சாப்பிடுதல் சாத்வீகத்தை வளர்க்க உதவும். சட்னியைத் தொட்டுக் கொள்ளுதல் இட்லியை நினைவிற்குக் கொண்டு வரும். பொடியை எடுத்துக் கொண்டால் வாழ்வின் இன்னல்கள் எல்லாம் தவிடுபொடியாகி போராட்ட குணம் வந்துவிடும். எங்கு மென்மையாக மடங்கிப் போக வேண்டும்? எங்கு முறுக்கிக் கொண்டு நிற்க வேண்டும்? என்பதை ருசிகரமாகக் கற்றுத் தரும் இந்த உணவைப் போலவே நாமும்………
இப்படியே எழுதி முடித்துவிடலாம் போலயே!
********************************
மொத்த வாழ்க்கையையும் அதன் விதிகளையும் ஏதோ ஓர் எண்ணில் அடைக்க முயற்சி செய்தல் வேண்டும்! ’12 rules for life’, ‘The 48 laws of Power’, ‘The 4 hour workweek’, ‘10% happier’, ‘The 5 AM club’, ‘7 strategies for Wealth and Happiness’, ‘The One thing’, ‘The 4 disciplines of Execution’, ‘10001 ways to live’, ‘The 21 irrefutable laws of leadership’, ‘The 7 habits of highly effective people’. எனவே “உருப்படுவதற்கான 1736 வழிகள்” என்று குத்துமத்திப்பாக ஒரு எண்ணைப் போட்டு எழுதி வைப்போம். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
ஏனெனில் அந்த ஏழு பழக்க புத்தகம் வெளி வந்த பிறகு எட்டாவது முக்கிய பழக்கத்தை மறந்துவிட்டது நினைவிற்கு வர, அந்த ஒரு பழக்கத்தை மட்டுமே ஒரு முழுப் புத்தகமாக்கி ‘The 8thHabit’ என்று வெளியிட்டிருக்கிறார் அதே ஆசிரியர்.
**********************************
“இப்படிப் பாரம்பரியமாகப் பெயரிடுவது அல்லாமல் வலிந்து வித்தியாசமாக வினோதமாகப்பெயரிடுவது மக்களைக் கயிறு போட்டு கவர்ந்து இழுக்கும்” எனப் பல இடங்களில் காத்திரமாகப் பதிவு செய்திருக்கிறார் கிருஷ்ணகாந்த். இல்லை! இவர் யாரென்று எனக்கும் தெரியாது. இவர்தான் இதைச் சொன்னாரா என்பதும் தெரியாது!
‘Never go with your gut’, ‘ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!’ … – எதிர்மறையான தலைப்புகள். Reverse Psyhologyயாம்! இத்தலைப்புகளைப் பார்த்ததும் மட்டும் என் மனம் அநியாயத்திற்குக் கீழ்ப்படிதல் மனநிலைக்குச் சென்று, தலைப்பை வாசித்ததும் ‘சரிங்க!’ என்று நகர்ந்து விடும்.
‘Girl, wash your face’, ‘Who moved my cheese?’, ‘Who moved my Turmeric Latte?’, ‘The you beyond you’,…. – சம்பந்தமே இல்லாத தலைப்புகள்.
முதலில் பொத்தாம் பொதுவாக ‘மனசே! தயவுசெய்து இளைப்பாறு’ என்று கெஞ்சலாம். ‘அச்சச்சோ அவசரப்பட்டுட்டேனே!’ என்று பின்னர் உணரும் போது ‘இளைஞனே! தயவுசெய்து இளைப்பாறு!’, ‘பெண்ணே! தயவுசெய்து இளைப்பாறு!’ என்று தனித்தனியாக கெஞ்சல் தொழிலை மேற்கொள்ளலாம்.
‘The subtle art of not giving a F’, ‘UnF Yourself’, ‘F Feelings’, ‘How to stop feeling like S?’,…. எனக் கெட்ட வார்த்தைகளைக் கொண்டு திரும்பிப் பார்க்க வைக்க முயலும் புத்தகங்கள். என்னைப் பொறுத்த வரை SWEARING IS INDOLENT WRITING!
[எனக்கு மிகவும் பிடித்த சமூக செயற்பாட்டாளரும் கவிஞரும் ஆன ஜாவேத் அக்தர் அவர்களிடம் “ஒரு நகைச்சுவையாளர் மேடை நிகழ்ச்சியின் போது கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா?” என்று ஒரு stand-up comedian கேட்டதற்கு இவ்வாறாகப் பதில் கூறினார்கள் – “ஒடிஷா, பீஹார், மெக்ஸிகோ போன்ற பல பகுதிகளிலும் விருந்தின்(party) போது ‘மிளகாய்’ உணவின் இன்றியமையாத பகுதியாக இருக்கும். ஏனெனில் அவர்களது உணவு கொஞ்சம் சப்பென்று(bland) இருக்கும். எனவே ஏதேனும் ஒரு சுவையை உணர வேண்டி மிளகாயை உட்கொள்வார்கள். வசவுச் சொற்கள் என்பவை மொழியின் மிளகாய். இனிய சொற்கள் பல இருக்கையில் ஏன் கெட்ட வார்த்தைகளை நோக்கிச் செல்ல வேண்டும்? (அட! நமது ‘இனிய உளவாக இன்னாத கூறல்…’) உங்கள் உரைக்கான உள்ளடக்கம் (content of the script) தரமானதாகவும் நல்ல நகைச்சுவை உணர்வையும் கொண்டு தயாரிக்கப்படிருக்குமானால் இழிவான சொற்கள் தேவைப்படாது. சப்பென்று இருக்கும் போதுதான் தன்னம்பிக்கையின்மையால் மிளகாய் கலக்கப்பட்ட வசவு மொழியைக் கையாள்கிறீர்கள்”]
****************************
அடேங்கப்பா! தினுசு தினுசான தலைப்புகளுடன் வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்ட ஒரே உள்ளடக்கத்தைக் கொண்ட பெருமை இப்புத்தகங்களுக்கு உண்டு. இது எவ்வளவு பெரிய அதிசயம்! இவ்வகைப் புத்தகங்கள் எழுதிய/எழுதும்/எழுதப்போகும் எல்லோரையும் போல் மீண்டும் அதேவிஷயத்தைக் ‘கூறியன கூறல்’ செய்து எல்லோருக்குமான புத்தகமாக இயற்ற(!) விருப்பமில்லை.
ஒரு மாறுதலுக்காக, சுய முன்னேற்றப் புத்தக ஆசிரியர்களுக்காக பிரத்யேகமாக அவர்களது உற்சாகத்தை மட்டுப்படுத்தும் உன்னத நோக்கில் விரைவில் வெளியாக இருக்கிறது எனது புத்தகம் –
“அட! செத்த சும்மா இருங்கப்பா!”
- கவிதை
- அட ! செத்த சும்மா இருங்கப்பா !
- மழை புராணம்: 29