—வளவ. துரையன்
இந்த உலகம் மண் நிறைந்தது. மேலும் இவ்வுலகில் எதுவுமே நிலைபெற்று நிற்கக் கூடியனவாக இல்லை. ஒருவர் பெறும் புகழே இம்மன்ணுலகில் நிலைத்து நிற்கக்கூடிய தன்மை உடையதாகும். அப்புகழை நாடியே நம் தலைவர் சென்றுள்ளார் எனத் தோழி தலைவிக்குக் கூறி ஆற்றுப்படுத்துகிறாள்.
”மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே” என்று புறநானூறு கூறும். மேலும் தலைவன் வருகின்றேன் என்று சொல்லிச் சென்ற கார்காலம் வந்துவிட்டதென்று பருவமும் காட்டுகிறாள் தோழி. காடு முழுதும் காயாஞ்செடிகள் பூத்திருக்கின்றன என்கிறாள். “மணியெனத் தேம்படு காயா மலர்ந்த” என்பது ஐங்குறுநூறு. அவை கண்ணிற்கு இடப்படும் மையில் தோய்ந்தவை போல உள்ளனவாம். அதைத்தான் ”கண்ணியல் அஞ்சனம் தோய்ந்த போல்” என்று குறிப்பிடுகிறாள். “செறியிலைக் காயா அஞ்சன மலர்” என்று முல்லைப்பாட்டிலும் காணப்படும்.
”மன் இயல் ஞாலத்து, மன்னும் புகழ்வேண்டி
பெண் இயல் நல்லாய்! பிரிந்தார் வரல் கூறும்
கண் இயல் அஞ்சனம் தோய்ந்த போல், காயாவும்
நுண் அரும்பு ஊழ்த்த புறவு”
பாடலின் பொருள்: பெண் தகைமை பொருந்தி உள்ள நல்லவளே! மண்ணாகும் இயல்பினைக் கொண்டதேயான இந்த உலகத்தில் நிலை பெறும் புகழை விரும்பி நம் தலைவர் பிரிந்து சென்றுள்ளார். அவர் வரவேண்டும் என்று நீ கண்ணில் மை தீட்டிக் கொள்கிறாய். அதைத் தெரிவிப்பது போலக் காயாமலர் அரும்பிப் பூத்திருக்கிறது. அவர் வந்துவிடுவார்.
9. வளை நழுவப் பிரிந்தவர் வருவார்
இப்பாடலிலும் தோழி தலைவியைத் தேற்றுகிறாள். தலைவர் வரும் காலமான கார்காலம் நெருங்கிவிட்டது. கருவிளைப் பூக்கள் தலைவியின் கண் போலப் பூத்துள்ளன. “கண்ணிற் கருவிளை மலர” என்று ஐங்குறு நூறு காட்டும். தலைவன் பிரிந்ததால் மெலிந்த தலைவியின் தோள் வளையல் முன்கைக்கு நழுவியதாம். இது, ’இறையிறந் திலங்கு வளை நெகிழ்ச்சாஅய்ப்புலம் பணிந்து “ என்று குறுந்தொகையில் கூறப்படுகிறது. “வருகிறேன் என இன் சொல் உரைத்துச் சென்ற தலைவர் வரப் போகிறார் எனத் தோழி கூறுகிறாள்.
”கருவிளை கண்மலர்போல் பூத்தன, கார்க்கு ஏற்று,
எரி வனப்பு உற்றன, தோன்றி, வரிவளை
முன்கை இறப்பத் துறந்தார் வரல் கூறும்
இன்சொல் பலவும் உரைத்து”
பாடலின் பொருள்: தலைவியே! உன் கண்களைப் போல கருவிளைப் பூக்கள் பூத்துவிட்டன. எனவே கார் காலம்வந்துவிட்டது. எரியும் தீயைப் போல அவை பூத்திருக்கின்றன. உன் தோள்வளையானது முன் கைக்கு நழுவும்படி உன்னை விட்டுப் பிரிந்து சென்றவர் வரப் போகிறார் என்பதை அவை சொல்லிக் காட்டுகின்றன.
10. இடிக்கு எதிர் முழக்கம்
தலைவி தலைவன் இன்னும் வரவில்லையே என்று வருந்துகிறாள். அப்போது தோழி அவளை ஆற்றுப் படுத்துகிறாள். “என் தோழியே! அதோ வானத்தில் இடி முழங்குகிறது. அதைக் கேட்ட ஆண் எருமை அதனோடு எதிர் முழக்கம் செய்கிறது.காட்டாற்றின் ஒலியும் கேட்கிறது. குதிரைகள் பூட்டப்பட்ட அவரின் தேர் வரும் ஒலியும் காட்டாற்றின் ஒலி போலக் கேட்கிறது. இவை எல்லாம் உன் தளிர்மேனியைத் தளிர்ப்பதற்காக வருகி9ன்றன” என்று கூறுகிறாள். எருமை பற்றி “வெண்ணெலரிநர் தண்ணுமை வெரீஇச் செங்கண் எருமையினம் பிரியொருத்தல்” என்று மலைபடுகடாத்தில் வருகிறது.
”வான் ஏறு வானத்து உரற, வய முரண்
ஆன் ஏற்று ஒருத்தல் அதனோடு எதிர் செறுப்பக்,
கான் யாற்று ஒலியின் கடுமான் தேர் என் தோழி
மேனி தளிர்ப்ப வரும்”
பாடலின் பொருள்: ”வானில் இடி முழங்குகிறது. ஆண் எருமை அதனுடன் எதிர் முழக்கம் செய்கிறது. காட்டாற்று ஒலி கேட்கிறது, குதிரை பூட்டிய தலைவன் தேர் ஒலி கேட்கிறது. இவை உன் மேனி தள்ர்ப்பதற்காக வருகின்றன” என்று தோழி தலைவிக்குக் கூறுகிறாள்.
- கொண்டாடும் தீ… கொல்லும் புகை…
- மரம் வைத்தவன்…
- அன்பைப் பரிமாறும் தினம்
- ஸ்பெஷல் வார்டு
- வேர்களின்றி வளரும் விருட்சங்கள்
- என் பெயர் முகுந்தன் C/o சினிமா
- எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது
- மழை புராணம் – 19
- கார் நாற்பது – 8. புகழே நிலையானது
- இனியவை நாற்பது காட்டும் வாழ்வியல் விழுமியங்கள்
- முகமெலாம் மத்தாப்பூ
- தி கேம்