மீனாட்சி சுந்தரமூர்த்தி.
அன்று காலையிலிருந்து விடாமல் மழைபெய்து கொண்டிருந்தது.
அலமு கணவன் தாமோதரனை அலுவலகத்திற்கு அனுப்ப வராண்டாவிற்கு வந்தாள். அங்கு முதல்நாள் மாலை மாடிப் படிக்கட்டின் முதல் வளைவில் கட்டியிருந்த பிளாஸ்டிக் ஒயர் கயிற்றில் உலரப் போட்டிருந்த நீல நிற மழைக் கோட்டை எடுத்துக்கொண்டு வந்து தந்தவள்.
‘ஏங்க நல்லா உதறிட்டுப் போடுங்க.”
”உனக்கு இதே பயந்தான் எதுவும் இருக்காது.”
என்று சொல்லிக்கொண்டே அணிந்து கொண்டான்.
”பார்த்து மெதுவாப் போங்க.”
”சரி.நீ நேரத்துக்கு சாப்பிடு.”
என்று சொல்லி ஸ்கூட்டரை இறக்கி ஏறிக்கொண்டு இவள் கிரில்கதவைப் பூட்டிச் சாவியை எடுத்துக் காட்டும் வரை காத்திருந்து விட்டு ஸ்டார்ட் செய்து தலைசைத்துச் சென்றான். உள்ளே வந்து சாவியை கதவில் தொங்கிய பெரிய பூட்டு வடிவ சாவிகள் மாட்டும் வளைவில் மாட்டிவிட்டு,
சமையலறைக்குச் சென்று மூன்று இட்டிலிகளைத் தட்டில் வைத்து தக்காளிச் சட்டினியை வைத்துக்கொண்டு வந்து டி.வியை ஓடவிட்டாள். பழைய பாடல்களைக் கேட்டுக்கொண்டே உண்டுமுடித்துவிட்டு வந்து ஊஞ்சலில் அமர்ந்தாள்.
கணவருக்கு மதிய உணவும் கேரியரில் தந்து அனுப்பி விட்டாள். இனி வீட்டு வேலைகள் இருக்கின்றன. ஒரு அரைமணிநேரம் கழித்து ஆரம்பித்தால் சரியாக இருக்கும்.
லைப்ரரியிலிருந்து கொண்டு வந்த புத்தகங்களை இன்னும் படித்து முடிக்கவில்லை. அதில் ஒன்றை எடுத்தாள் சிறிது நேரம் சென்றது
அலைபேசி சிணுங்கியது, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்து எடுத்தாள். மகள் சியாமளா பேசினாள்,
”அம்மா நான் ஏர்போர்ட்டிலிருக்கிறேன்.”
” வேணு நல்லா இருக்காரா? பத்திரமா போயிட்டு வாங்க”
”அம்மா எங்கே போகச் சொல்றே?”
”நியூயார்க் போகணும்னு சொன்னியேமா ?”
‘ஐயோ அம்மா நான் மட்டும் ஊருக்கு வரேன்.”
”ஓ. தீபாவளிக்கா ?அவர் வரலியா சியாமளா?”
”எல்லாம் வந்து சொல்றேன்.”
”வாட்ஸ் அப்பில் ப்ளைட் விவரம் தந்திருக்கேன்.”
”சரிடி அப்பா ஏர்போர்ட்டுக்கு வந்துடுவார்.”
என்று அலைபேசியை வைத்தவள் மனம் ஏனோ சரியில்லை.
‘இந்தப் பெண்ணுக்கு என்ன ஆனது?, வந்தா ரெண்டு பேரும் வரணும்,
மாப்பிள்ளையை விட்டுட்டு வராளே, ஒருவேளை அவர் ஒரு வாரம் பொறுத்து வருவாரோ?, லீவு கிடைக்கலையோ? ‘ இவளைத் தனியா அனுப்புவதை மருமகன் தெரிவித்து இருப்பாரே! இவருக்குச் சொல்லியிருப்பார். இவர் என்னிடம் சொல்ல மறந்துவிட்டாரோ?’ என்று
அலைபாய்ந்தது மனம். எதற்கும் இவரிடம் பேசினால் தெரிந்துவிடும். ஆனால் இப்போதுதான் அலுவலகம் சென்றிருக்கிறார். மதிய உணவு நேரத்தில் பேசலாம் என்று நினைத்துக் கொண்டு வேலைகளைக் கவனிக்கச் சென்றாள். ஆனால் அடுத்த பத்தே நிமிடங்களில் இவளுக்கு தாமுவின் அழைப்பு வந்தது,
” அலமு சியாமளா நாளைக்கு வராளாம் ”
”தெரியுங்க,எனக்கும் கொஞ்சநேரம் முன்னாடி சொன்னா..”
”வேற ஏதாவது சொன்னாளா?”
”இல்லை.”
”சரி, நீ வேலைகளைப் பாரு. பத்திரமா வருவா.” என்று சொல்லிவிட்டு அலுவலக வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார் அவர்.
ஆனால் அவருக்கும் வேலை ஓடவில்லை.
‘மகள் தனியாக வருவது பற்றி பயமில்லை,ஆனால் அவள் பேச்சில் சந்தோஷம் தெரியவில்லையே, என்னவாக இருக்கும்?வேணு இவள் வருகையைப் பற்றி ஏன் சொல்லவில்லை?’
என்று பலவாறாக நினைத்திருந்தார்.
அலமேலு,தாமோதரனின் ஒரே மகள் சியாமளா பொறியியல் பட்டதாரி. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறாள். மாப்பிள்ளை வேணுகோபாலன் இவரும் பொறியியல் பட்டதாரி, இவரும் அதே ஐ.டி. நிறுவனத்தில்தான் பணிபுரிகிறார்.
திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. மகளுக்கு பல இடங்களில் தேடி இந்த வரனைப் பிடித்திருந்தார் தாமோதரன். ஒரு வகையில் வெகு தூரத்துச் சொந்தம் என்றும் தெரிந்தது. வேணுகோபாலனின் பெற்றோரும் நல்லவர்கள். மகளுக்குத் திருமணம் செய்து விட்டிருந்தார்கள். அவள் கனடாவில் இருக்கிறாள்.மகனுக்கு சரியான பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தனர். சியாமளாவை அவர்களுக்கும் பிடித்துப் போனது. மற்றபடி இது வேண்டும்,அது வேண்டும் என்ற பேச்சுகள் எழவில்லை. திருமணத்தை தாமோதரன் விமரிசையாக நடத்தினார்.அவர்கள் நெல்லையில் வரவேற்பை பெரியதாக நடத்தினர். ஒரே பெண் என்பதால் எல்லாம் பார்த்துப் பார்த்துச் சேகரித்து வைத்திருந்தனர்.
திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் வேணுவும் ,சியாமளாவும் அமெரிக்கா சென்று விட்டனர். ஒரு வருடத்திற்குப் பிறகு வேணு பணிபுரியும் நிறுவனத்திலேயே சியாமளாவிற்கும் வேலை கிடைத்தது. தலை தீபாவளிக்கு ஊருக்கு வந்திருந்தனர். இங்கிருந்த பத்து நாட்களிலும் . காமாட்சியும், கச்சி ஏகம்பனும், குமரகோட்டமும், வரதராஜப் பெருமாளும் ,கைலாசநாதரும். வைகுண்டப் பெருமாளும் என்று தினம் ஒரு கோவிலுக்குச் செல்வது வேணுவிற்குப் பிடித்தமானதாக இருந்தது.
”சியாமளா வருஷத்துக்கு ஒரு தரம் இப்படி வந்து தரிசனம் பண்ணணும்.”
”வருவோம் அதனால் என்ன?”
என்றாள் அவள்.
சென்ற வருடம் ஏப்ரலில் வந்தார்கள்.இருபது நாட்களில் இங்கு பத்து நாட்கள் போனதே தெரியவில்லை. இந்த வருடம் வருவதற்கு நினைக்கவே இல்லை.
மறுநாள் சென்னை விமானநிலையத்திற்கு மகளை அழைத்து வரச் சென்றார் தாமோதரன். இரண்டு பெரிய பெட்டிகளைத் தள்ளிக்கொண்டு வந்தாள். அவற்றை வாங்கினார்,
” வாடாச் செல்லம்.” என்று மகளை அணைத்துக் கொண்டார்.
நெடுஞ்சாலையைத் தொட்டு விரைந்தது
கார் . விடிகாலை நான்கு மணிதான் ஆகிறது, ஆனால் எத்தனைப் போக்குவரத்து! வரிசையான சோடியம் விளக்குகளோடு பந்தயம் வைத்துக்கொண்டது போல் வாகனங்களின் எல்.இ.டி விளக்குகள் பளீரென ஒளி உமிழ்ந்து ஓடிக்கொண்டிருந்தன.பின்னிருக்கையில் சாய்ந்து உறங்கிவிட்டாள் சியாமா.
”திருநாவு நல்ல கடையா பார்த்து நிறுத்து.”
”அந்த பிரிட்ஜைத் தாண்டி நிறுத்தறேன் சார், அங்கே டீ நல்லா இருக்கும்.”
அங்கு நிறுத்தியதும் தான் குடித்துப் பார்த்துவிட்டு வந்து ,
”பாப்பு இந்தாடா, இதைக் குடிச்சிட்டுத் தூங்குமா.”
ஆறரை மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விட்டனர்.
”வாடா பட்டு,” என்று மகளை அணைத்துக் கொண்ட அலமு,
”வெந்நீர் போட்டிருக்கேன்,குளிச்சிட்டு வா.”
என்று மகளை அழைத்துச் சென்றாள்.
குளித்துவிட்டு வந்தாள்,அம்மாவின் கைமணம் எத்தனை நாளானது? இவளுக்குப் பிடித்த தோசை, தக்காளி சட்டினி.
”அம்மா போதும்,மூணுதான் சாப்பிட முடியும்.”
”சரி விடு அலமு,.”
அவளிடம் ஏதும் கேட்டவே பயமாக இருந்தது. என்ன சொல்லி விடுவாளோ?
உண்டு முடித்து வந்து மாடியறையில் உறங்கச் சென்றாள்.
அவளோடு கூடவே வந்த தாமோதரன்.
அவள் படுத்ததும், தலையை வருடி ,
”தூங்குடா செல்லம்.மத்தியானம் எழுப்பறேன்.”
”வேணாம் பா,நானே நல்லாத் தூங்கி எழுந்து வரேன்.”
சரி என்று சொல்லி அவளுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டு வந்தார்.
கணவரும்,மனைவியும் சாப்பிட உட்கார்ந்தனர்.
‘என்னங்க, தூங்கிட்டாளா?”
”ஆமாம், ஜெட்லாக் இருக்கும்.”
இந்த நேரத்தில் தாமுவின் அலைபேசி அழைத்தது. அவருடைய அக்கா மோகனாதான்,
”தம்பி நேத்து வரேன்னு சொன்னியே?”
”திடீர்னு சியாமா வரேன்னு சொன்னதால வரமுடியல.”
”வந்துட்டாங்களா.”
”ஆமாம், இன்னக்கி ஏர்போர்ட்டுக்குப் போய் அழைச்சிட்டு வந்தேன்.”
”சரி தம்பி. அப்புறமா வா, அவங்க ரெண்டுபேரையும் அழைச்சிகிட்டு.”
”அக்கா நான் ஒரு அரைமணிநேரத்துல வரேன்.”
என்று போனை வைத்தார்.
தாமோதரனின் அக்கா மோகனா. இதே ஊரில் மூன்று கி.மீ தூரத்தில் தனியாக இவர்களின் பரம்பரை வீட்டில் இருக்கிறார். மஞ்சுளா என்ற தூரத்து உறவுக்காரப் பெண்மணி உடன் இருக்கிறார். அகலம் குறைந்து நீளம் அதிகமாக இருந்த அந்த வீட்டின் அழைப்பு மணியை அடித்ததும் மஞ்சுளாம்மா வந்து பூட்டைத் திறந்தார்.
”வாங்க தம்பி,பாப்பா வந்துருக்குதுன்னு அக்கா சொன்னாங்க.”
‘ஆமாங்கா, ரெண்டு பேரும் சாப்பிட்டிங்களா?”
”உப்புமா செஞ்சேன் , சாப்பிட்டுவிட்டோம்.”
இவர் உள்ளே வந்ததும். ஒயர் கூடையை எடுத்துக் கொண்டு,
”அக்கா நான் பிடாரியம்மன் கோயிலுக்குப் போயிட்டு வரேன், வரேன் தம்பி.”
என்று மஞ்சுளாம்மா நகர்ந்தாள்.
அவளுக்குத் தெரியும், அக்காவும்,தம்பியும் மனம்விட்டுப் பேசிக் கொள்வார்கள் அதற்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று.
”வா தம்பி, சாப்பிட்டியா?”
”சாப்பிட்டேன்,நீ வா இங்க உக்காரு.”
”இதோ ஒரு நிமிஷம் காபி கலந்துட்டு வரேன்.”
கூடத்து ஊஞ்சலில் அமர்ந்தவரின் எதிரில் சுவரில் தொங்கிய படம் தெரிந்தது. இவருடைய அப்பாவின் பெரிய படம்.வெள்ளைச் சட்டை, அகலமான நெற்றி நிறையத் திருநீறு, அதில் சிறிய சந்தனப்பொட்டு, கழுத்தில் சுற்றித் தொங்க விட்டிருந்த பட்டு அங்கவஸ்திரம்.
ஒரு காலத்தில் வருமானவரி கட்டிக்கொண்டிருந்த பெரிய வணிகர். தானதருமங்கள் நிறையச் செய்தவர். அவர் கட்டிய ஆறு வீடுகளில் இந்தச் சிறிய வீடு மட்டுமே இன்று எஞ்சியுள்ளது.
”இந்தா தம்பி குடி,சக்கரை போதுமா பாரு.”
”போதுங்கா, உக்காரு என்று கையைப் பிடித்து ஊஞ்சலில் உட்கார வைத்தார்.
”சொல்லு தம்பி,உன் முகமே சரியில்ல.”
”அக்கா, சியாமளா தனியா வந்துருக்கா.”
”மாப்பிள்ளை பேசலையா உங்கிட்ட?”
”இல்ல, சியாமளாவை நாங்க எதுவும் கேக்கல.”
”சரி ஒண்ணும் கேக்காதீங்க, அவளா சொல்லட்டும்.”
”நான் மாப்பிள்ளை கிட்டப் பேசறேன்.”
”தம்பி, சியாமளா பத்திரமா வந்து சேர்ந்துட்டான்னு மட்டும் சொல்லு.”
”சரி க்கா”
”ரெண்டு மூணுநாளு போவட்டும், சியாமளாவை இங்க அழைச்சிட்டு வா.”
சரிக்கா என்று ஒருவாறு ஆறுதலடைந்து கிளம்பினார் தாமோதரன்.
ஊஞ்சலில் அப்படியே தலைவைத்துப் படுத்த மோகனாவின் மனம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது.
ஊரே பார்த்து வியக்கும்படி விமரிசையாகத் திருமணம். படகு போன்ற பிளைமவுத் காரில் மாப்பிள்ளை அழைப்பு.
மாப்பிள்ளை மணிமாறன் நல்ல நிறம், சரியான உயரம், அழகு. மோகனா மாநிறம்தான் ஆனாலும் அழகில் சளைத்தவளில்லை. அப்பாவும், அம்மாவும் பார்த்துப் பார்த்து நகைகள் ,சேலைகள் வாங்கியிருந்தார்கள்.அறுபது சவரன் மகளுக்கும்,மாப்பிள்ளைக்கு சங்கிலி, மோதிரங்கள் என்று பத்து சவரன் போட்டனர். திருமணம் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு இல்லை என்று சொல்லாத அளவிற்கு வெள்ளி,பித்தளை,சிலவ்ர் பாத்திரங்கள்,தேக்கு மரக்கட்டில், சிங்கப்பூர் கண்ணாடி பதித்த தேக்கு அலமாரி என்று அனைத்தையும் லாரியில் ஏற்றிச் சென்று மகளை புகுந்த வீட்டில் விட்டு வந்தனர்.
மணிமாறன் இரண்டாவது மகன், தம்பிகள் இருவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர். அப்பா இல்லாததால்அண்ணனும்,அண்ணியம் முன்னிருந்து திருமணத்தை நடத்தியிருந்தனர். அம்மா தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் வடிவு போன்ற சாயல், பேராசை கொண்டவள்.
ஒரே ஒரு மெடிக்கல் ஷாப். அதில் வரும் வருமானத்தில் குடும்பம் நடந்தது. வசதியான இடத்தில் பெண் எடுத்தால் வளமாக வாழலாம் என்று நினைத்து ஒற்றைக் காலில் நின்று இந்த சம்பந்தம் பேசி முடித்தவள். ஒரு வாரத்தில் மோகனாவின் நகைகள் இரண்டை விற்று விட்டாள், இது தெரிய வந்ததும் மோகனா,
”அத்தே எப்படி நீங்க என்ன கேக்காம என் நகைய விப்பீங்க?”
”உன்னை எதுக்குடி கேக்கணும்?.”
”என் அப்பா போட்டது, உங்க மகன் போட்டது இல்லை.”
”பெரியவ ஏழு வருஷமா இருக்கா, ஒரு வார்த்தை பேச மாட்டா.”
”அந்த மாதிரி நான் இருக்க மாட்டேன்.”
இந்த சமயத்தில் குளித்துவிட்டு வந்த மணிமாறன்,
”ஓ எங்கம்மாவை எதிர்த்துப் பேசறியா?” என்று ஓங்கி அறைந்தான் மோகனாவின் கன்னத்தில்.
தலை சுற்றி தூணில் சாய்ந்து நின்றாள்.
அன்று மாலை பெரிய மருமகளின் உதவியால் முகம் மறைத்துக் கொண்டு அமைந்த கரையிலிருந்து பேருந்து நிலையம் வந்து ஊருக்குப் பஸ் ஏறினாள் மோகனா.
அண்ணன்கள் மூவரும்,பெற்றவர்களும் அதிர்ந்தனர். அப்பா வழக்கு தொடுத்தார்.
மணிமாறனின் அண்ணனும்,அண்ணியும் வந்து சமாதானம் பேசினர், மாமியார் ஒரு முறை வந்தாள். மோகனாவிற்கு அவளைப் பார்க்கவே பிடிக்கவில்லை.
”எதுக்குங்க அண்ணே,கோர்ட்டு கேசுன்னு. வாபஸ் வாங்கிடுங்க.”
”அதெல்லாம் முடியாது, ஒண்ணுமில்லாத உனக்கு இவ்ளோ திமிரா?”
என்றார் அப்பா.
அதன் பின்னர் மணிமாறனை அழைத்துக்கொண்டு அண்ணன் வந்தார்.
”மாமா இனி இந்த மாதிரி நடக்காது, மோகனாவை அனுப்புங்க.”
”எப்போ எம் பொண்ணை அடிச்சியோ, அதோட எல்லாம் முடிஞ்சுது”
”ஒரு தரம் நான் மோகனாகிட்டப் பேசணும் மாமா.”
”அப்பா எனக்கு அவருகிட்டப் பேச ஒண்ணும் இல்லே.” என்று உள்ளே இருந்து சொல்லியனுப்பினாள் மோகனா.
ஏழு ஆண்டுகள் வழக்காடி செலவானதுதான் மிச்சம். மணிமாறன் மன்னிப்பு கேட்டு,
”நான் அவளோடு வாழ விரும்புகிறேன்.” என்றான் வழக்கு தள்ளுபடி ஆனது.
எவ்வளவு நேரமானதோ மஞ்சுளாவின் குரலில் நினைவுகள் கலைந்தன.
”அக்கா சமையல் முடிஞ்சிடுச்சி,சாப்பிட வா.”
”இல்லமா,எனக்குப் பசிக்கல,நீ சாப்பிடு.”
”ஒனக்காகதான் கேட்டேன்.எனக்கும் பசிக்கல, ரெண்டு மணிபோல சாப்பிடலாம்.”
ஒரு வாரத்திற்குப் பிறகு அத்தையைப் பார்க்க வந்திருந்தாள் சியாமளா,
”தம்பி ரெண்டு நாளு என்கூட இருக்கட்டும் சியாமளா.”
சரி என்று அலமுவோடு வீடு திரும்பினார் தாமோதரன்.
சியாமளாவை அழைத்துக் கொண்டு குமரகோட்டமும், கைலாசநாதர் கோவிலும் சென்று வந்தாள் மோகனா. இரண்டாவது நாள்,
”ஏன் அத்தே, நீங்க தனியா இருக்கீங்க,அம்மா,அப்பா கூட இருக்கலாமே.”
”இல்லமா, பழகிப் போச்சு,” என்று ஆரம்பித்தவள் தன் திருமணம், வழக்கு எல்லாம் சொல்லி முடித்தாள். இத்தனை விவரமாக இதுநாள் வரை தெரியாது சியாமளாவிற்கு.
”ஏன் அத்தே, நீங்க மாமாவை மன்னிக்கலை?”
”பிடிவாதம், என் தம்பியைத்தவிர. யாரும் நான் போவதை விரும்பலை.”
”மாமா வேற கல்யாணம் பண்ணிகிட்டாரா?”
”இல்லே, ரெண்டு வருஷம் முன்னாடி அவங்க அண்ணன் வந்து கூப்பிட்டாரு.”
”அப்படியா?”
”அவரு படுத்த படுக்கையா இருக்காரு,ஒரு தரம் வந்து பாருன்னாரு.”
”போனீங்களா?”
”எனக்கு அவர் முகமே மறந்து போச்சு, போக மனசில்ல,
அப்புறம் இறந்துட்டதா போன் பண்ணாங்க, போகலை.”
மோகனா தொடர்ந்தாள்.
”எல்லோருக்கும் குடும்பம் இருந்தது, நான் தனியானேன்.”
”நான் அவரையும்,அவர் என்னையும் புரிந்து கொள்ள நான் கால அவகாசம் தரவில்லை.”
என்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
சியாமளாவின் கண்களும் கலங்கியிருந்தது. அத்தையைக் கட்டிக்கொண்டாள். இப்போது அவள் மனம் முழுவதும் அன்பு மட்டுமே நிரம்பியிருந்தது.
அடுத்த ஒரு வாரத்தில் வேணு வந்திருந்தான் சியாமளாவை அழைத்துச் செல்ல. எல்லோர் முகமும் மத்தாப்பூவாய் மலர்ந்திருந்தது.
- கொண்டாடும் தீ… கொல்லும் புகை…
- மரம் வைத்தவன்…
- அன்பைப் பரிமாறும் தினம்
- ஸ்பெஷல் வார்டு
- வேர்களின்றி வளரும் விருட்சங்கள்
- என் பெயர் முகுந்தன் C/o சினிமா
- எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது
- மழை புராணம் – 19
- கார் நாற்பது – 8. புகழே நிலையானது
- இனியவை நாற்பது காட்டும் வாழ்வியல் விழுமியங்கள்
- முகமெலாம் மத்தாப்பூ
- தி கேம்