This entry is part 12 of 12 in the series 15 பிப்ரவரி 2026

பாலமுருகன்.லோ

“சோனம், மோனிகா, ரோசி… நீங்க கமலேஷ், மனீஷ் அப்புறம் மாலிக்கைப் பார்த்தீங்களா? அவனுங்களைப் பார்த்தா, பார்ட்டிக்கு க்ரீன் பார்க்ல பத்து மணிக்குன்னு சொல்லிடுங்க.”

“எப்போதும்போல அவனுங்க லேட்டா வரப்போறாங்க. இந்த பார்ட்டியில நம்ம பாஸும் கலந்துகிறாரு; ஒரே என்ஜாய்மென்ட்தான் போங்க!”

“என்ன, நீங்க மூணு பேரும் வர்றீங்க இல்ல?” என்றான் ஜான்.

அதற்கு ரோசி, சோனம், மோனிகா, “நாங்க இல்லாமலா பார்ட்டி?” எனப் பதிலளித்தனர்.

சிரித்தபடியே கம்பெனி காரிடாரிலிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இவர்கள் அனைவரும் கேமிங் சாப்ட்வேர் தயாரிக்கும் ‘தி கேம்’ (The Game) நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். அனைவரும் மென்பொருள் இன்ஜினியரிங் முடித்தவர்கள்; கூடுதலாக கேமிங் சாப்ட்வேர் தெரிந்தவர்கள் மற்றும் திறமையானவர்கள்.

இருபத்தி நான்கு வயது வரைக்கும் காசு பணத்தைத் தண்ணீர் மாதிரி செலவு செய்யாதவர்கள். திடீர் சம்பள உயர்வினால் ஆடம்பரத்தின் கைக்குள் அகப்பட்டுக்கொள்கிறார்கள். பந்தா காட்டுவது, சொகுசு வாகனங்கள் வாங்குவது, விலை உயர்ந்த துணிமணிகள் என்று அந்த ஆடம்பரமான வாழ்க்கை அவர்களைச் சிந்திக்க விடுவதில்லை; ஒரு போலியான கனவு உலகத்தில் மிதக்கத் தொடங்குகின்றனர். அதுமட்டுமல்லாமல் பார்ட்டி, கேர்ள்ஸ் எல்லாமே அவர்களுக்குப் புதிது என்பதால், அதன் மேல் இருக்கும் மோகத்தின் காரணமாக அந்த மாய வாழ்க்கை அவர்களிடம் உடனடியாகத் தொற்றிக்கொள்கிறது.

இவர்கள் பேசி வைத்தாற் போல் எல்லோரும் பத்து மணிக்கு ஹோட்டலில் ஆஜரானார்கள். எல்லாரிடத்திலும் “சரியா வந்துடுங்க” என்று சொன்ன ஜான்தான் லேட்டாக வந்தான்.

நண்பர்கள் ஜானின் வருகைக்காகக் காத்திருந்தனர். அப்போது ஒரு சொகுசு கார் வந்து ஹோட்டல் போர்டிகோவில் நின்றது.

அனைவரும், “சரி… பாஸ்தான் புதிய காரில் வந்திருக்கிறார்” என்று நினைத்தனர்.

ஆனால் காரிலிருந்து இறங்கி, வண்டியின் சாவியை மெய்காப்பாளனிடம் (Valet) கொடுத்து காரை உரிய இடத்தில் பார்க் செய்யச் சொன்னான் ஜான்.

ரோசி, மோனிகா, மாலிக் மற்றும் மற்ற நண்பர்களும், “அட, நம்ம ஜானோட வண்டியா?” என்று ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

சோனம் ஜானிடம் கேட்டாள்:

“என்ன ஜான், காரெல்லாம் பலமா இருக்கு? எவ்வளவுப்பா?”

“என்ன சோனம்… பதினெட்டு லட்சம் தான்.”

“அட, என்னப்பா சொல்ற ஜான்? பதினெட்டு லட்சமா!”

“ஆமாம் சோனம்.”

“எப்படி ஜான்?”

“மச்சி, அதான் நமக்கு ஒரு ஆபத்பாந்தவன் கிரெடிட் கார்டு கொடுத்திருக்கிறானே! அதான், கிரெடிட் கார்டைத்தான் சொன்னேன். என்ன… முன் பணம் மட்டும்தான் செலுத்தினேன், மத்ததெல்லாம் கடன் தான்!”

மாலிக் கேட்டான்:

“ஏண்டா ஜான், நமக்கு இப்ப கார்… அதிலும் இவ்வளவு விலை உயர்ந்த கார் தேவையாடா?”

“ஏண்டா மாலிக், கேட்கமாட்ட? நாம இப்ப இருக்கிற சொசைட்டிக்கு ஏற்றாற்போல் நாமும் மாறிடணும்டா. டேய், இப்பெல்லாம் கார் ஒரு ஸ்டேடஸ் சிம்பல்டா!”

“என்னமோ சொல்ற… சீனியர் புரோகிராமர் உன்னால வாங்க முடியும்; எங்களால முடியுமா?”

“அடப் போடா, உன்னாலேயும் வாங்க முடியும்! எல்லாமே கடன் தான்டா.”

ரோசி உடனே, “ஜான், இந்த வேலை இப்ப இருக்கு; நாளைக்கு வேலை இல்லை என்றால்…?” என்றாள்.

ஜான் பதிலளித்தான்: “வாயைக் கழுவு ரோசி! நல்லதா நாலு வார்த்தை சொல்ல முடியாதா?”

“இல்லடா… சும்மாதான் சொன்னேன், கோவிச்சுக்காத. சரி வா உள்ளே, உனக்காகத்தான் எல்லாரும் காத்திருந்தோம்.”

“டேய், பாஸ் வந்துட்டாரா?”

“இல்ல, வந்துடுவாரு; ‘on the way’ன்னு குறுஞ்செய்தி அனுப்பியிருக்காரு.”

“சரி வாங்க, உள்ளே போய் டேபிள் புக் செய்யலாம்” என்று சொல்லி அனைவரும் உள்ளே சென்றனர்.

சிறிது நேரத்தில் அவர்களுடைய பாஸ் பார்ட்டிக்கு வந்தார். வந்தவர் அனைவருக்கும் முதலில் வாழ்த்து தெரிவித்தார். அவர்கள் செய்த ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடிந்து, கஸ்டமருக்கு டெமோவும் போட்டுக் காட்டியாகிவிட்டது என்றும், அவர்களும் “ப்ராஜெக்ட் ரொம்ப நல்லபடியாக வந்திருக்கிறது” என்று பாராட்டியதையும் அனைவருடனும் பகிர்ந்துகொண்டார். அதுமட்டுமல்லாமல், இந்தப் பார்ட்டியே அதற்காகத்தான் என்றார்.

“இங்க பாருங்க கைஸ், இந்த இரவு உங்களுடையது; யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம், சாப்பிடலாம், எல்லா செலவும் கம்பெனியுடையது” என்றார்.

“இந்தாங்கப்பா, கவலைப்படாதீங்க, இரவு எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை; உங்களுக்காக வெளியே இரண்டு கார் உள்ளது. டிரைவர் நம்பரை அனைவரின் வாட்ஸ்அப் நம்பருக்கும் அனுப்பியிருக்கிறேன். அதனால் நல்லா என்ஜாய் பண்ணுங்க.”

“நாளைக்கு வேறு ஒரு புதிய ப்ராஜெக்ட் இருக்கு, அதற்கு அனைவரும் மத்தியானம் மூன்று மணிக்கு மீட்டிங் ஆர்கனைஸ் பண்ணியிருக்கேன். தவறாமல் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்.”

“ஏம்பா, மாலிக்… இந்தப் ப்ராஜெக்ட் முதன்மை புரோகிராமர் நீ தானப்பா?” என்றார் பாஸ்.

“சார், என்ன சொன்னீங்க?” என்றான் மாலிக், குழப்பத்துடன்.

“ஆமாம்பா, நீதான்! என்ன, எல்லோரும் மாலிக்கையே பார்க்கிறீங்க? ஏன், அவன் முதன்மைப் புரோகிராமரா இருக்கக் கூடாதா?” என்றார் அவர் மற்றவர்களைப் பார்த்தபடி.

“சார், அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல…” என்று தயக்கத்துடன் இழுத்தான் மாலிக்.

“இல்ல, போன ப்ராஜெக்ட்டுக்கு ஜான் இருந்தான்; அதான் இந்த ப்ராஜெக்ட்டுக்கும் அவன் இருப்பான்னு நினைச்சோம்.”

“ஜான் ப்ரொமோஷன் லிஸ்ட்ல இருக்கான். அவனை டீம் லீடரா போடலாம்னு இருக்கேன். யாருக்காவது ஏதாவது ஆட்சேபனை இருக்கா?”

“சார், அவன் டீம் லீடராகுறதுல எங்க எல்லாருக்கும் சந்தோஷம் தான்” என்றனர்.

ஆனால், இடையில் ஜானின் குரல் ஒலித்தது…

“சார், நான் கொஞ்சம் பேசலாமா?”

“பேசு ஜான், தாராளமா! உன்னோட கருத்தை நீ முன்வைக்கலாம்.”

“சார், அது வந்து… நேரம் தெரியாம பாடுபடுறோம். விடுப்பே இல்லாம கண்விழித்து ப்ராஜெக்ட்டை சொன்ன தேதிக்குக் கொடுக்கிறோம். மத்த எல்லாத்துலயும் சந்தோஷம் இருக்கு சார், ஆனா…”

“என்ன ஆனா ஜான்? சொல்ல வந்ததை முழுசா சொல்லு.”

“உடம்பு போயிடுது சார். இப்பெல்லாம் இரவுல படுத்தா தூக்கமே வர்றதில்ல. தூங்கும் முறையே மாறிவிட்டது; பகல் இரவாகவும், இரவு பகலாவும் மாறிக்கிட்டு வருது சார் இந்த ஃபீல்டுல. இந்த வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி நான் கண்ணாடி அணிவதில்லை. ஆனா இப்போது கண்ணாடி போட்டாதான் தெரியுது. ரெஸ்டே இல்லாம வேலை பார்க்கிறது தான் சார் காரணம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கூட வேலை, வேலைன்னு இங்கதான் வர்றோம். நல்ல சம்பளம் கிடைக்குது, இன்சென்டிவ்ஸ் எல்லாம் வருது, இல்லைன்னு சொல்லல. ஆனா, இந்த இரண்டு வருஷத்துல உடல் ரீதியா நிறைய மாற்றங்கள் தென்படுது சார்.”

“ஏம்பா, நம்ம டாக்டர் கிட்ட காண்பிச்சையா?”

“காண்பித்தேன் சார். அவரும் விட்டமின் டேப்லெட் எழுதித் தர்றாரு, நல்லா ரெஸ்ட் எடுக்கச் சொல்லுறாரு.”

“ஏம்பா, நம்ம கம்பெனி நல்ல நிலையில் இருக்குன்னா, அதுக்குக் காரணம் நாம சொன்ன தேதியில ப்ராஜெக்டை முடித்துக் கொடுக்கிறதுனாலதான். எப்ப நம்மால சொன்ன நேரத்துக்குப் ப்ராஜெக்டைக் கொடுக்க முடியலையோ, அப்பவே நாம பின்தங்கிடுவோம். வேணுமுன்னா இப்படி பண்ணலாம்; சொன்ன தேதிக்கு முன்னாடியே நாம முடிச்சிட்டோம்முன்னா, அடுத்த ப்ராஜெக்டை எடுக்கிறதுக்கு முன்னாடி ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்துக்கலாம்” என்றார் பாஸ்.

அனைவரும் ஆமோதித்தனர், ஜானைத் தவிர.

“என்ன ஜான், ஒண்ணும் பேசாம இருக்க? ஏதாவது சொல்லேன்.”

“சார், இப்பெல்லாம் எனக்கு ரொம்ப மன அழுத்தமா இருக்கு. பேசாம இந்தக் காரு, வீடு எல்லாத்தையும் வித்துட்டு ஊருக்குப் போகலாம்னு இருக்கேன்.”

“ஊருக்குப் போய் என்ன பண்ணப் போற? சோத்துக்கு என்ன வழி?”

“சார், நான் ஏன் சோத்துக்குக் கஷ்டப்படணும்? சொந்தமா பூமி இருக்கு. என்ன, ஏசியில உட்கார்ந்து வேலை செஞ்ச நான், இப்போ பூமியில இறங்கி வேலை செய்யணும்; செஞ்சுட்டா போச்சு. காலையில வந்தோமா, உழுதமா, நாத்து நட்டமா, தண்ணியைப் பாய்ச்சுனோமான்னு இருக்கலாம். வேணுங்கிற உரமெல்லாத்தையும் உரிய நேரத்துல போட்டோமுன்னா விளைச்சல் காலத்துல நல்ல மகசூல் கிடைக்கும். முதலில, நல்ல தூக்கம் இரவுல தூங்கலாம் சார்” என்றான்.

அனைவரும் அவனையே பார்த்தனர், ஏதும் பேசாமல். மௌனம் மட்டுமே குடிகொண்டது அந்தத் தருணத்தில்.

மௌனத்தை உடைக்கும் வகையில் வெயிட்டர் அவர்களிடம் வந்து, “சார், அடுத்த ரவுண்டு ரிப்பீட்டா?” என்றான்.

அனைவரின் பார்வையும் வெயிட்டர் மீது விழுந்தது.

  • பாலமுருகன்.லோ

Series Navigation  முகமெலாம் மத்தாப்பூ