”மாறிப் போன மாரி”

This entry is part 12 of 53 in the series 6 நவம்பர் 2011

எங்களோடு படித்தவர்களில் மாரிச்சாமி இப்போது அமைச்சராக இருக்கிறான். படிக்கும் காலங்களில் ரொம்பவும் விளையாட்டுத்தனமாக இருந்தவன். படிப்பில் விளையாட்டுத்தனமாக இருந்த அவன் விளையாட்டில் படு விளையாட்டுத்தனமாக இருந்தான் என்பதையும் கவனிக்கத்தான் வேண்டும். அவன் இப்போது மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர்.
வெறுமே விளையாடிட்டிருந்தவன்ட விளையாட்டா சேர்ந்து போச்சுறா காசு…என்றான் மாஞ்சா. ஏதோ அவனுக்குக் கிடைத்த சொத்து போல் சொல்லிக் கொண்டான். சொந்த ஊர் வரும்போதெல்லாம் மாரிச்சாமி அவன் செலவுக்குக் காசு கொடுத்து விட்டுப் போனான். அதென்ன அப்படியொரு தனி கவனிப்பு? மனதில் என்ன திட்டமோ? பின்னாலேயே கொடுக்காய் அலைந்தான் மாஞ்சா. மினிஸ்ட்ரே இப்ப எங்கைல என்று சொல்லிக் கொள்வான் இவன். மாஞ்சா காலில் சக்கரம்தான் இப்போது. எங்கள் ஊரும் சுற்றுவட்டார கிராமங்களும் மாரியின் கவனத்தில் எப்போதும். ஊரில் இப்போது நிறைய இடங்களை வாங்கிப் போட்டு விட்டான் அவன். இடமென்றால் வெறும் ப்ளாட்கள் அல்ல. கட்டடங்கள், கடைகள். இந்தோ இது, அந்தா அது, அதுக்கப்புறம் இருக்கே அது என்று கை நீட்டிச் சொல்லும் அளவு அவனது எல்லைகள் விரிந்திருந்தன.
மாஞ்சாவுக்குத் தொழில் என்று எதுவும் இல்லை. அவன்தான் படிக்கவில்லையே! ஊரில் சமையல் வேலைக்குச் செல்வோரோடு அவனும் சென்று கொண்டிருந்தான் கொஞ்ச நாளைக்கு. அந்தச் சமையல் வேலையிலாவது ஏதாவது உருப்படியாக அவனுக்குத் தெரியுமா என்றால் இல்லைதான். இங்கிருப்பதை அங்கு கொண்டு வைப்பது அங்கிருப்பதை இங்கு எடுத்து வருவது, பாத்திரங்களைக் கழுவுவது, தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, குப்பை அள்ளிக் கொட்டுவது, பெருக்குவது என்பதாக எடுபிடி வேலைகள்தான். கிடந்துட்டுப் போகட்டும் என்று அவனை எல்லோரும் கைவிடாமல் வைத்துக் கொண்டிருந்தார்கள். அவன் ராசியோ என்னவோ! யாரோடும் பசையாய் ஒட்டிக் கொள்வான்.
வேலைக்குப் போகுமிடத்தில் எல்லாவற்றிற்கும் பழகியிருந்தான் மாஞ்சா.. பல் ஈறுக்கு அடியில் எப்படி கஞ்சாவை உருட்டி அதக்குவது என்பது அவனுக்கு அத்துபடி.. கூடவே போதைப் பாக்குகளையும் அடிக்கடி போட்டுக் கொள்வான். புளிச் புளிச்சென்று துப்பிக் கொள்வான். அவன் பக்கத்தில் நின்றாலே வாடை குப்பென்று நம்மைத் தூக்கும்.
ஒரு நாளைக்கு திடீர்னு வாயில ஓட்டை விழப் போகுது…இல்லன்னா வாயே திறக்க முடியாம ஆவப் போகுது…என்றார்கள். அவன் கேட்டால்தானே. அவன்தான் படு குஷியில் இருக்கிறானே!
ஆனால் மாரியிடம் போய் நிற்கும் அன்று சுத்தமாய்ப் போவான். மரியாதை நாடகம் அது. இன்னிக்குக் கச்சேரி என்று அவன் சொன்னால் புரிந்து கொள்ள வேண்டும். பணிவு பணிவு அப்படி ஒரு பணிவு. முதுகே கூன் விழுந்து போச்சோ என்று சந்தேகம் வரும் நமக்கு. சும்மாவாச்சும் ஒருத்தன் அப்படி ஒட்ட முடியுமா? அந்தப் பணிவு மாரிக்குத் தேவையாயிருந்தது. ஊர் ஜனத்தின் முன் அவனின் செல்வாக்கை உயர்த்தியது.
ஏதாச்சும் வீட்டில் சாவு என்றால் முதலில் போய் நிற்பவன் மாஞ்சா தான். எங்கள் ஊரில் இன்ன ஜாதி இன்ன எழவு என்றெல்லாம் கிடையாது. எல்லாரும் எல்லாத்துக்கும் போவார்கள் வருவார்கள். அப்படித்தான் போய் வந்து கொணடிருந்தான் அவனும். பிணத்தைக் கொண்டு போய் எரித்துக் குளித்து முடித்துத் திரும்பி, வயிற்றை நிரப்பிக் கொண்டுதான் வீடு வருவான். முழு போதையையும் ஏற்றிக்கொண்டு மொத்த ஆட்டமும் போட்டுவிட்டு, உள்ளே இம்புட்டு சோத்தையும் திணிச்சிட்டு எப்படி? என்றிருக்கும் எங்களுக்கு. இப்பொழுது அதெல்லாம் நிறையக் குறைந்து போயிற்று. ஆனால் எல்லா விசேடங்களுக்கும் ஆஜராகிக் கொண்டிருந்தான். யார் சார்பாக? அவன் யாருக்கு தாசானு தாசனோ அந்த மாரியண்ணனுக்காக. இது அவனது ரகசிய உத்தரவோ என்னவோ? அங்கெல்லாம் போய் நிற்கும்போது அவன் தோரணையே தனியாய்த்தான் இருக்கும். அவனுக்கென்று ஒன்றிரண்டு ஜால்ராக்களைத் தயார்படுத்தியிருந்தான். ஆனால் செல்லும் இடங்களில் படு கண்ணியமாய நடந்து கொள்வான். இதுவும் இவனுக்குத் தெரியுமா என்பது போல் இருக்கும் அவன் நடத்தை. நுழைந்த இடத்தில் ஆன் பிகாஃப் ஆஃப் உறானரபிள் மினிஸ்டர் என்பான். சொல்லிச் சொல்லி மனப்பாடம் ஆகி விட்டதுதான். பலர் அவன் காணாமல் சிரித்துக் கொள்வார்கள். ஆனாலும் இத்தனை எழுத்தை எப்படிப் படித்தான் எங்கு படித்தான் என்று வியக்கும் எங்களுக்கு. வெறும் கூகையா இப்படிக் கூவுகிறது?
நாங்களெல்லாம் ஒழுங்காய்த்தான் படித்தோம். வேலைதான் இல்லாமல் இருக்கிறோம். கல்லூரிப் படிப்புக்கு வக்கில்லை. இருக்கும் பள்ளியிறுதிப் படிப்பை வைத்துக் கொண்டு என்ன வேலைக்குப் போவது என்று தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தோம். உள்ளுரில் என்னத்தையோ அவ்வப்போது கிடைக்கும் சில சில்லுண்டி வேலைகளைச் செய்து செலவுக்கு ஈட்டுகிறோம்.
நாங்கள் என்றால் நான் சேது, இன்னொருவன் தெற்குத்தெருக்காரன் சோதமன், இன்னொருத்தன் கொட்டாரப் பொட்டலைச் சேர்ந்த பரிமேலழகன். என்னைச் சேது சேது என்று அழைப்பார்கள். சோதமனை சோது சோது என்பார்கள். பரிமேலழகனைப் பரி, பரி. எங்களோடு படிக்கச் சேர்ந்து ஆரம்பத்திலேயே விட்டுவிட்ட மாஞ்சாவிருகனை நாங்கள் மாஞ்சா, மாஞ்சா என்று அழைப்போம். அது அவர்கள் குல தெய்வப் பெயர் என்று சொல்வான்.
இப்படி ஊரில் வெட்டியாய்ச் சுற்றிக் கொண்டிருந்த எங்களோடு படித்தவன்தான் மாரிச்சாமி. படிக்கும் காலத்திலேயே அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன் அவன். ஒரு டீக்கடை விடாமல் நின்று கட்சி விவகாரங்களை சத்தமாய் அலசுவான். அப்போதே டீக்கடை பெஞ்சில் அவனைச் சேர்த்துக் கொள்வார்கள். நினைப்பதைத் தைரியமாகச் சொல்கிறானே!. கட்சி ஆபீஸ் தேடிச் சென்று கட்சிப் பத்திரிகை படிப்பான். அரசியல்வாதியாகிவிட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு. படித்து வேலைக்குப் போகத்தான் பலரும் நினைப்பார்கள். ஆனால் இவன் இப்படி. படிப்பு வரணுமே! யாரிடமும் தன் பாலிட்டீஷியன் விருப்பத்தைச் சொல்ல மாட்டான். மேடையில் பேசுவது போல் நின்று கையையும் காலையும் ஆட்டி, எங்களிடம் பேசிக் காண்பிப்பான். அமைச்சராகக் கொஞ்சமாவது படிப்பு வேண்டும் என்று படிப்பில் அக்கறை காட்டியது என்னவோ உண்மை. உண்மையான அக்கறையா அல்லது வெறும் நடிப்பா? யார் கண்டது? . ஆனால் அதுதான் அவனை நெருங்கப் பயப்பட்டது.
பெரும்பாலும் பள்ளி நேரத்தில் அவன் சடுகுடு கிரவுன்ட்டில்தான் கிடப்பான். அந்தக் காலத்திலேயே அவனுக்குக் கபடி என்றால் உயிர். பி.டி. மாஸ்டர் பொம்மையன் அவனைப் பொட்டுப் பொட்டென்று புடணியில் ரெண்டு வைத்து தலைமையாசிரியரிடம் அழைத்து வந்து பள்ளிகளுக்கிடையிலான கபடிப் போட்டிக்கு அனுப்பலாம் என்று பரிந்துரை செய்தார். அதற்குத்தான் தேறுவான் என்பது அவரின் கணிப்போ என்னவோ! அன்றுதான் தெரிந்தது அவனுக்கே, சார் தன் மீது பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று. அந்த நிமிடத்திலிருந்து அவனுக்குப் படிப்பில் அக்கறை சுத்தமாய்ப் போயிற்று. விளையாட்டு, விளையாட்டு, விளையாட்டு.
ஞாயிற்றுக் கிழமைகளில் எங்கே ஆளைக் காணோம் என்றால் பள்ளி கபடி கிரவுன்டில் தனியாளாய் இருப்பான்.. அவனாகவே கபடிக் கபடி, கபடிக் கபடி என்று பாடிக் கொண்டு எதிர் வரிசையில் ஆட்கள் இருப்பதுபோல் கற்பனை செய்து கொண்டு, நன்றாகக் கோட்டுக்கு உள்ளே போயும், இடதும் வலதுமாகப் பாய்ந்தும், அவர்களின் பிடியிலிருந்து தப்பி வருவது போலவும், குப்புற விழுந்து இஞ்ச் பை இஞ்சாக நகர்ந்து கோட்டைத் தொடுவது போலவும் செய்து கொண்டிருப்பான். கேட்டால் அதுதாண்டா பயிற்சி என்பான். அசலாய் விளையாடுவது போலவே இருக்கும் அவனது முயற்சி. நாங்கள் அவனைத் தேடிக் கொண்டு போன வேளைகளில் எங்களை எதிர் வரிசையில் நிற்க வைத்து, கபடிக் கபடி என்று பாடிக் கொண்டு வந்து தன்னைப் பிடிக்கச் சொல்வான். விட்ராதீங்கடா என்று சொல்லிக் கொண்டே எங்களின் கடுமையான பிடியிலிருந்து நழுவி அவனாகவே கோட்டைத் தொடுவதற்கு முயற்சித்து முன்னேறுவான். இந்த அவனின் விடா முயற்சி அவனை உயர்த்தத்தான் செய்தது. முதலில் உள்ளுரில் பள்ளிக்குப் பள்ளி விளையாடியவன், பிறகு பக்கத்து ஊர் என்று போட்டிகளுக்கு விளையாட ஆரம்பித்தான். ஒரு முறை கோட்டைத் தொடுவதற்காக பேன்ட்டைக் கழற்றி விட்டு ஜட்டியோடு பாய்ந்து தொட்டு ஜெயித்து விட்டான்.
ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒரே சண்டை. பேன்ட்டோட சேர்த்து அவன் காலையும் கெட்டியா விடாமப் பிடிச்சிருக்க வேண்டியது நீங்கதானே…! ஏன் நழுவ விட்டீங்க…? என்று ரெஃப்ரி சொல்லி மறுத்து விட்டார். அந்தக் காலத்திலேயே பிளேடு போடும் பழக்கமெல்லாம் இருந்தது. அத்தனையையும் மீறித்தான் ஜெயித்திருக்கிறான் மாரி. பரிசைக் கையில் வாங்கிய பின்புதான் இம்மாதிரிக் கயவாளித்தனத்தையெல்லாம் வாய்விட்டுச் சொல்வான். காயங்கள் அவனுக்கு வீரத் தழும்புகள்.
ரெஜினா என்று ஒரு ஆசிரியை இருந்தார்கள் அப்போது. அந்த டீச்சர்தான் மாரிச்சாமி ஓரளவுக்குப் படிப்பில் தேறுவதற்கு உதவியவர்கள். விளையாட்டே கதியாய் அலைந்து கொண்டிருந்த அவனைப் பற்றிக் கவலைப்பட்ட அவனது பெற்றோர்கள் அதே தெருவில் குடியிருந்த அந்த டீச்சரிடம் சென்று முறையிட்டபோது, மாரிக்கு இலவசமாக டியூஷன் எடுத்து அவனைத் தேற்றி விட்டது அந்த டீச்சர்தான். ஆசிரியர்களுக்குத் தியாக உணர்வு இருந்த காலம் அது.
அடுத்தாற்போல் சூசை வாத்தியார். விளயாட்டில் ஆர்வம் அதிகமுள்ள ஆசிரியர். அவர்தான் ரயிலில் போகாதவரெல்லாம் யார் யாரென்று கேட்டு எங்களுக்கு முதல் ரயில் பயணத்தை அறிமுகப்படுத்தினார். இரக்க சிந்தை உள்ளவர். அவர் மாரிக்குப் பணம் கொடுத்து உதவினார். வெளியூர் பள்ளிகளில் நடக்கும் கபடிப் போட்டிகளுக்கு அவனைத் தவறாமல் அழைத்துச் சென்றவர் அவர்தான். அப்படியான சில போட்டிகளில் மாரியின் டீம் தோல்வியைத் தழுவியிருக்கிறது. அவன் சோர்ந்தாலும் சூசை சார் விடவில்லை அவனை. தோல்விதான் வெற்றிக்கு அறிகுறி என்று அவனிடம் சொல்லிச் சொல்லி ஊக்கப்படுத்துவார். உரமேற்றுவார். அவனுக்கென்று ஆட்கள் அமைந்தார்கள் பாருங்கள். அதுதான் அவனது அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும்.
போதுமான உடற்பயிற்சியின்மையே சில தோல்விகளுக்கும் காரணம் என்று உணர்த்தியவர் சூசை வாத்தியார்தான். பள்ளிக்கூடக் கிரவுன்டில் வேகு வேகு என்று வியர்வை கொப்பளிக்க, விடாமல் ஓட்டப் பயிற்சியும், உள்ளுர் சேத்தியாத்தோப்பு பீமா உடற்பயிற்சிக் கழகத்தில் கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டான் மாரிச்சாமி. மல்யுத்தம் கூடத் தெரியும் என்பார்கள்.
நாங்கள் அறிய அவன் சிலம்பம் கற்றுக் கொண்டதைப் பார்த்திருக்கிறோம். சிலம்பம்னா பயமுறுத்தல்னு அர்த்தம்டா…என்பான். . கழியின் உதவியால் எதிரியைப் பயமுறுத்துதல். . வேட்டியைத் தார்பாச்சி போட்டுக் கட்டிக் கொண்டு தலைப்பாகையோடு அவன் விளையாடுவதைப் பார்த்திருக்கிறோம். அழகுதான். எதிரியின் தலைப்பாகையைத் தட்டிவிட்டு அவன் பல முறை வெற்றி பெற்றிருக்கிறான். அதுதான் அதற்கான அடையாளம்.
அந்தக் காலத்துல காலுல சிலம்பு கட்டிக்கிட்டு விளையாடியிருக்காங்கடா…அதுனாலதான் இதுக்கு சிலம்பம்னு பேரு… என்று தகவல்களையும் அவ்வப்போது அவன் தருவதுண்டு.
இத்தனைக்கும் சூசை வாத்தியாரின் செல்வாக்குதான் அவனுக்கு உதவியது. அவர் சொல்லி யாரும் தட்டினார்கள் என்று கிடையாதாகையால் அவரின் பரிந்துரையில் மாரியின் புகழ் உள்ளுரில் பரவலாயிற்று. ஏதோ ஒரு வழில உருப்பட்டுருவான் போலிருக்கே என்றார்கள்.
சொந்த ஊரில் நிறைய விளையாடி அலுத்துப் போயாயிற்று என்ற ஒரு கட்டத்தில்தான் அவன் பார்வை விரிந்தது.
ஊருக்கு ஊர் பொங்கல் திருவிழா, மாரியம்மன் கோயில் திருவிழா என்று போட்டிகளுக்குச் செல்ல ஆரம்பித்த மாரி பரிசுகளை அள்ளிக் கொண்டு வருவான். ஆனால் ஒன்று. ஒரு போட்டிக்கும் அவன் தனியனாய்ச் சென்றதில்லை. எங்கள் நால்வரையும் அவன் செலவில் அழைத்துக் கொண்டுதான் செல்வான். அதற்கு மட்டும் என்னவோ எங்களைச் சேர்த்துக் கொண்டான். போட்டிகளுக்கு நடுவில் ஊய், ஊய் என்று கத்தியும், விசிலடித்தும், பலமாகக் கைதட்டியும் அவனை நாங்கள் உற்சாகப்படுத்துவோம். இடையிடையில் அவனுக்குத் தண்ணீர் கொடுப்பது நாங்கள்தான். வியர்வையைத் துடைத்துவிட்டு மீண்டும் களத்தில் இறக்கும் தோழமை எங்களுக்கு. ஸ்கோர் போர்டு ஏற ஏற எங்களை ஒரு முறை விழித்துப் பார்த்துக் கொள்வான் கம்பீரமாக. அவனுடன் போட்டிக்கு என்று போன நாட்களில் ராஜஉபசாரம்தான். படு குஷாலாகச் செலவழிப்பான் மாரி. நண்பர்களின் சந்தோஷம்தான் தன்னின் திருப்தி என்பான். அவன் உடமைகளைத் தூக்கிக்கொண்டு பின்னாடியே நடப்போம் நாங்கள். பரிவாரத்தோடதான்யா எப்பவும் வருவான் என்பர்.. டீம் ஆட்களைத் தனியே அனுப்பிவிட்டு அவன் எங்களோடு வருவதுதான் எங்களுக்குப் பிடிபடாத பெருமை.
அவனை மாவட்டம் விட்டு மாவட்டம் போட்டிகளுக்கு அனுப்பிய உந்துதல் பி.டி. மாஸ்டர் பொம்மையனைத்தான் சேரும். இவனுக்காக அவர் மேற்கொண்ட கடிதப் போக்குவரத்துக்கள் அநேகம். அது என்னவோ அவன் மீது அப்படி ஒரு பிரியம் அவருக்கு.
இவனத் தயார்படுத்தணும்னு நெனச்சேன். செய்திட்டுத்தான் ஓய்வேன்….என்பார்.
எங்கள் ஊரின் அந்தப் புகழ் மிகு பள்ளியை விளையாட்டில் முதலாவதாக நிறுத்திய பெருமை மாரிக்கு. பாஸ்கட் பாலிலும், வாலிபாலிலும் அவனைத் தேற்றினார் பொம்மையன். அதில்தான் அவர் சாம்பியன். அவர் சொன்னதற்கெல்லாம் உடன்பட்டான் மாரி. படிப்பு என்ற தொல்லையில்லையே! ஏதோ பாதகமில்லாமல் செய்தால் போதுமே!, அவன் கேட்காமலேயே வகுப்புக்கு வகுப்பு சுலபமாகத் தாவினான். ஓரளவுக்குப் படிக்கக் கூடியவன்தான் என்றாலும், ஐந்து மார்க், ஏழு மார்க் வரை, என்று எதிலும் நிறுத்தப்பட்டவன் அல்ல அவன். ஒன்றிரண்டு பாடங்களில் பார்டரில்தான் பாஸ் பண்ணியிருப்பான். அதெல்லாம் அவனுக்கான கிஃப்ட் என்று நாமாகப் புரிந்து கொள்ள வேண்டும். கலைகளிலும் அவனுக்கு ஈடுபாடிருந்தது. என்றுதான் சொல்ல வேண்டும். படிப்பைத் தவிர மற்றது என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
பள்ளி நாடகங்களில் நடிக்கும் பழக்கமும் அவனுக்கிருந்தது. மிக நீண்ட வசனங்களைத் தனக்குத் தரும்படி கேட்டுக் கொள்வான் மாரி. பெரும்பாலும் தனக்கு வில்லன் வேஷம்தான் பொருந்தும் என்று கெஞ்சிக் கேட்டு வாங்கிக் கொள்வான். ஒரு கருப்புக் கண்ணாடியையும் யாரிடமாவது கேட்டு வாங்கிப் போட்டுக் கொண்டு நடிப்பில் தூள் கிளப்புவான்.
அரசியல்வாதியாகவெல்லாம் கூட நடித்திருக்கிறான். அந்த வேஷம்தான் அவனுக்கு அப்பொழுதே அத்தனை பொருத்தமாய் இருந்தது.. அவனின் கறுப்பு நிறத்துக்கும் பளீர் வரிசைப் பற்களுக்கும், அந்த வெள்ளை வேட்டி, சட்டை பாந்தமாய்த்தான் இருந்தன. அசலாய் வாழ்ந்தான் அந்த வேடத்தில். அதனால்தானோ என்னவோ இப்பொழுது அமைச்சரும் ஆகி விட்டான். உயரே, உயரே என்று பிரதிக்ஞை செய்து கொண்டதுபோல் பணியாற்றுபவனுக்கு காலம் அங்கே கொண்டு சென்று உட்கார்த்திவிட்டுத்தான் ஓயும் போலும்.
பள்ளிப் படிப்பை முடித்த மாரிச்சாமி, உள்ளுர் அரசியல் கூட்டங்களில் பேச ஆரம்பித்தான். அதற்குப் பின் ஏனோ அவன் லைன் சுத்தமாய் மாறிப்போனது. ஒரு சிறந்த விளையாட்டு வீரனை நாடு இழந்து விட்டதோ என்று இப்பொழுதும் எங்களுக்குத் தோன்றிக்கொண்டுதான் இருக்கிறது. பொம்மையன் சாரும் ஓய்வு பெற்று விட்டார். திடீரென்று அரசியலில் ஆர்வம் காட்டக் காட்ட விளையாட்டுக்காரர்கள் அவனை விட்டு மெல்ல மெல்ல விலகிப் போக ஆரம்பித்தார்கள். இனி அவன் தேற மாட்டான்டா…அவனுக்கு துட்டு சம்பாதிக்கிற ஆசை வந்துடுச்சு…விட்ரு….என்று காணாமல் போய் விட்டார்கள். ஊரின் பெயர் சொல்லும் டீம்கள் மாறின. மாரிச்சாமியின் அடிமன ஆசையும் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
நாகரத்தினம்புதூர்தான் எங்கள் ஊர். பெரிய நகரமுமில்லை. ரொம்பச் சிறிய ஊரும் இல்லை. மிதமான டவுன்.. எங்கள் ஊரின் கருமேனி மேட்டில்தான் எப்பொழுதும் பொதுக் கூட்டங்கள் நடக்கும். சந்தைப் பக்கம்தான் பொதுக்கூட்டங்களுக்கான போஸ்டர்கள் தென்படும். அதைவிட்டால் மாரியம்மன் கோயில் லைட்டுக் கம்பம்தான். ஒரு தட்டி அங்கு வைக்கப்பட்டிருக்கும். வெளியூர் பஸ் ஸ்டாப்பும் அதுதான். இறங்கும் ஜனத்தின் பார்வை தவறாமல் அந்தப் போஸ்டரில் படும். சந்தைக்கு வரும் ஜனக் கூட்டம், சாயங்காலம் முதல் காட்சி சினிமாப் பார்க்கிறதோ இல்லையோ மாரியின் மேடைப் பேச்சைக் கேட்காமல் போகாது. கடைசி பஸ்ஸைத் தவறவிட்டு, பஸ் ஸ்டான்டில் முடங்கிக் கிடந்து, காலம்பற முதல் பஸ்ஸைப் பிடித்த ஜனக் கூட்டம் அநேகம்.
மாரியின் பொதுக் கூட்டம் இருக்கிறது என்று தெரிந்து அந்த வாரம் சோதாப் படம் போதும் என்று வெளியில் சொல்லாமல் ரெண்டு நாளைக்கு ஒரு பீத்தலை ஓட்டிவிட்டு படக்கென்று மறுநாள் படத்தை மாற்றி விடுவார்கள். மாரியின் கூட்டமிருப்பதாக ஜனங்கள் ஒருவருக்கொருவர் சந்தோஷமாகப் பகிர்ந்து கொண்டு திருவிழா போல் எதிர்கொள்வார்கள் அவன் பேசும் நாளை.
மழை மாரி என்றுதான் போடுவார்கள் அவன் பெயரை. பேச்சு மழையாய்த்தான் பொழியும் என்பது என்னவோ உண்மைதான். ஆனால் கெட்ட வார்த்தைகள் சரளமாய் இருக்கும். வேறே வழியில்லை, அப்படித்தான் பேசியாகணும்…தலைவர் கவனத்த அப்பத்தான் கவர முடியும் என்பான். எந்தத் தலைவர் அப்படிச் சொன்னாரோ? ஆனால் மறுக்கவில்லையே!
மழை பொழிந்து கொண்டிருப்பதுபோல் அவன் பெயரை அச்சடித்திருப்பார்கள். ஆனால் பெயர் சிவப்புக் கலரில் இருக்கும். மழைத்துளிகள் சிவப்பாய் விழும். பெய்யறது மழையில்லடா, நெருப்பாக்கும்….என்பான் மேடையில். மாதத்திற்கொருமுறையேனும் அந்த ஊரில் எங்காவது அவனுக்குக் கூட்டமிருக்கும்.
அவ்வப்போதைய அரசியல் நிகழ்வுகளுக்கு சாட்டையடி கொடுக்க அவன்தான் லாயக்கு. அது என்னவோ மாரியின் இடம் எப்பொழுதும் எதிர்க்கட்சி வரிசைதான். அவனுக்குத் தேவை மேடை. சாயங்காலம் ஆனால் ஏதாச்சும் ஒரு பொதுக்கூட்டம். தடாலடிப் பேச்சு. ரெண்டு மாலை.
தினசரி அவனுக்குக் கூட்டமிருந்தது. குறிப்பாக சனி, ஞாயிறுகளில் அவன் உள்ளுரில் இருப்பதில்லை. மறுநாள் அந்தக் கட்சிப் பத்திரிகையில் அவனின் வெளியூர்ப் பேச்சு பிரசுரமாகியிருக்கும். சூடாக ஏதாவது தலைப்பைப் போட்டு வெளியிட்டிருப்பார்கள். அதில் தவிர வேறு செய்திப் பத்திரிகைகளில் அவன் பேச்சு வெளி வந்ததாகச் சரித்திரமில்லை.
தரமில்லை என்பதுதான் அவைகளின் முடிவாக இருந்தது.
என் பேச்சையெல்லாம் போட மாட்டானுக…ஏன்னா நாந்தான் உண்மை பேசுறவன்…ஒருநாள் அவன் ஆபீஸ் வாசலிலேயே கூட்டம் போட்டுக் கத்துறனா இல்லையா பார் என்பான். தணிந்த பேச்சில்லை. தடாலடிதான். அதுவே அவன் ட்ரேட் மார்க். அதனாலேயே பேராகிப் போனான் மழை மாரி. கட்சிப் பேச்சாளர் தர வரிசையில் முதலிடத்தில் இருந்தான். . ம்ம்…நிறையக் கெட்ட வார்த்தை பேசக் கத்துக்கிட்டான்….மேலதான இருப்பான்…என்பார்கள் பலர்.
மக்களும் சாரி சாரியாய்த்தான் வந்தார்கள் அவன் கூட்டத்திற்கு. மாலை கூட்டமென்றால் காலையிலிருந்தே மைக் அலறும்.சைடு தெருக்கள் முழுக்க, கூட்டம் நடக்கும் வீதி முழுக்க என்று கணக்கு வழக்கில்லாமல் வொயரை இழுத்து குழாயைக் கட்டியிருப்பார்கள். போதாக்குறைக்கு அவனின் பழைய பேச்சு டேப் வேறு அலறும்.
மாரி எதில் வருவான் என்று யாராலும் சொல்லவே முடியாது. எப்பொழுது வருவான் என்றும் கணிக்க முடியாது. ஆனால் பெரும்பாலும் ஒன்பது மணிக்கு முதல் வரிசையில் டாண் என்று ஆஜராகிவிடுவான். பத்து மணிக்குத்தானே மைக்கை அவன் கையில் கொடுப்பார்கள். இடதும் வலதுமாக நின்ற வாக்கில் மைக்கை கையால் ஆட்டி ஆட்டிப் பேசுவான். அவன் திரும்பும் பக்கமெல்லாம் மாறிய கையோடு மைக்கும் திரும்பும்.
திடீரென்று ஆட்டோவில் வந்து இறங்குவான். யாரோட டூ வீலரிலாவது வரலாம். அந்த வழி டவுன் பஸ்ஸில் வந்து கூட இறங்குவான். தனக்கு அதிக ஆபத்து உண்டு என்பது அவனுக்குத் தெரியும்தான். ஆனாலும் எதற்கும் அஞ்சின ஆளில்லை நான் என்பதுபோல் இருக்கும் அவன் நடவடிக்கைகள்.
பள்ளியில் அவ்வளவு கட்டுப்பாட்டோடு ஜெயித்து வெற்றிகளைக் குவித்தவன் அடியோடு இப்படி மாறிப்போனானே என்று நாங்கள் வாய்பிளந்து நின்ற நாட்கள் எத்தனயோ! அத்தனைக்கும் காரணம் மாரியின் செல்வாக்கு. சொல்வாக்கு இருக்கு எனவே செல்வாக்கு தானா வருது என்பார்கள் அவன் கூட இருக்கும் ஜால்ராக்கள். அத்தனையும் அவனிடம் சேரும் காசுக்காகத் திரிபவர்கள். உண்மையான நண்பர்கள் வேண்டுமென்றால்தான் அவன் எங்களை அழைத்துக் கொண்டிருப்பானே…ஏன் இன்று வரை அவன் எங்களை நினைக்கவில்லை? நாங்கள் அடியோடு மறக்கப்பட்டவர்கள் ஆனோம். கடந்த தேர்தலில்தான் கட்சி மாறினான் அவன். வேண்டுமளவுக்கு இங்கே துட்டைச் சேர்த்துக் கொண்டு, தேர்தல் சமயத்தில் பதவி தருவதாகக் கூறி அவனை இழுத்து விட்டார்கள். அப்படி மாறுவதற்கே வாங்கிக் கொண்டுதான் போனான் என்றார்கள்.
அத்தனை ஆர்வமுள்ள விளையாட்டில் கில்லாடியாக இருந்த அவன் எப்படி இப்படி அரசியல் கில்லாடியானான்? எது அவனை இப்படி முற்றிலும் மாற்றியது? புரியாத புதிர்தான் எங்களுக்கு.
அவனின் அதிர்ஷ்டத்தை என்னவென்று சொல்வது? அபரிமிதமான வித்தியாசத்தில் ஜெயித்து, தன்னிச்சையாக ஆட்சி அமைத்தது அவன் சேர்ந்த கட்சி. அவன் யாரென்றே தெரியாத ஒரு தொகுதியில் முற்றிலும் புதிதாக மக்களைச் சந்தித்தான் அவன். காலில் விழுந்தானா, கீழே உருண்டானா தெரியாது. ஜெயித்து விட்டான். மற்ற பலரை ஒப்பிடும்போது அவனது ஓட்டு வித்தியாசம் சற்றுக் குறைவுதான். ஆனாலும் அவனுக்கு அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
யோகந்தான்யா மவனுக்கு என்றார்கள் உள்ளுர் பிரமுகர்கள். மாஞ்சாதான் அவனை மாறி மாறிப் புகழ்ந்தான். உடனே போய் ஒட்டியவன் அவன்தான். என்னாயிருந்தாலும் எங்கண்ணன் எங்கண்ணன்தான்யா….என்றான் வாயெல்லாம் பல்லாக. இப்பொழுதெல்லாம் அவன் சமையல் வேலைக்கே செல்வதில்லை. ஏற்கனவே அதில் கால் பதிக்காமல் இருந்தவன்தானே! கையில் இருக்கும் காசு செலவழியும்முன்தான் அவனைக் கூப்பிட்டு விடுகிறாரே விளையாட்டுத்துறை அமைச்சர். கல்யாணமோ, குடும்பமோ என்று எதுவுமேயில்லாத மாஞ்சாதான் உள்ளுரில் இப்போது ஆல் இன் ஆல் அந்த மாண்புமிகு அமைச்சருக்கு.
நன்றாகக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் இந்தச் செய்திகளை. சமீபத்தில் ரெஜினா டீச்சருக்கு புற்று நோய் மருத்துவத்திற்காக முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டவன் மாரிதான்.
அவனது ரெக்கமன்டேஷனில்தான் பொம்மையன் வாத்தியார் பையனுக்கு ஒரு நல்ல வேலை அமைந்திருப்பதாகவும் செய்தி வந்திருக்கிறது.
சூசை வாத்தியார் பெண்ணைக் கட்டியவன் இரண்டாம் திருமணத்திற்கு முயற்சித்ததாகவும், அந்தப் பெண் வீட்டுக்காரர்கள், மாரியின் மிரட்டிலில்தான் விலகிப் போனார்கள் என்று ஒரு செய்தியும் எங்களுரில் தற்போது பரவலாக நிலவுகிறது.
எல்லாம் சரி, அத்தனை பேரையும் வசமாய்க் கவனித்திருக்கும் அவன், எங்களை மட்டும் ஏன் இன்றுவரை கண்டு கொள்ளவேயில்லை? ஏனிப்படி எங்களைச் சுத்தமாய் மறந்து விட்டான்? என்ன தப்பு செய்தோம்? நாங்களென்ன அத்தனை கேவலமாகவா போய் விட்டோம்? உதவாக்கரைகள் என்று நினைத்து விட்டானோ எங்களை? வெறும் விசிலடிச்சான் குஞ்சுகள் என்று எண்ணி விட்டானோ? அட, இந்த மாஞ்சானை விடவா நாங்கள் மட்டமாய்ப் போனோம்? இதுதான் இன்றுவரை புரியாத புதிராய் எங்கள் மனதைப் போட்டு வாட்டும் கேள்விகள்.

யாராவது முடியுமானால் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன் ப்ரதர்….

ஆனா ஒண்ணு, தயவுசெஞ்சு அந்த மாஞ்சாப்பய மூலமா மட்டும் போயிராதீக…அவன் பக்கத்துல இல்லாதபோது மினிஸ்டர்ட்டச் சொல்ல முயற்சி பண்ணினா ஏதாச்சும் பலிக்கலாம்…ஏன்னா இந்தளவுக்கு எங்கள ஒதுக்கிறதுக்கு எந்த முகாந்திரமும் இல்ல. ஏன்னா எங்களுக்கு இன்னும் அவன் மேலதான் ஒரு சந்தேகம்! அந்த மாஞ்சாப்பய பெரிய குள்ள நரி சார்..!!

Series Navigation‘மூங்கில் மூச்சு’ சுகாவின் “தாயார் சன்னதி” கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வைதாலாட்டு
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *