கார்த்திக் பாலா
வீட்டிற்கு வெளியிலிருந்து வந்த அந்த அழுகைச் சத்தம் சுவர்களைப் பிளந்து வீட்டுக்குள் எதிரொலித்தது. அந்தி மங்கி இருள் வியாபிக்கத் தொடங்கியிருந்த அந்த வேளையில் அவ்வலறல் அம்பு துளைத்த ஒரு காட்டுப் பன்றியின் கதறலைப் போலிருந்தது.
அப்பா வீட்டின் நடுவில் நடுஞ்சாடையாகப் படுக்க வைப்பட்டிருந்தார். அம்மாவும், அத்தையும், சுற்றி அமர்ந்து அழுது கொண்டிருந்தார்கள். அழுது அழுது அவர்களின் கண்கள் இரத்தச் சிவப்பேறி வீங்கிப் போயிருந்தன. காலையிலிருந்து பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல் வறண்டு போயிருந்தது அவர்களின் அழுகையும் கூட. ஒரு பக்கம் சித்தப்பா ரம்யா அக்காவை போனில் தேற்றிக் கொண்டிருந்தார். அவளது வரவிற்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறோம் அனைவரும். அவளால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியுமோ? தெரியவில்லை.
அவளைத் தேற்றும் தைரியம் எனக்கில்லை. அப்பாதான் அவளுக்கு எல்லாமே. அவள் திருமணம் முடித்துச் சென்ற அந்த ஒரு நாளில்தான் அப்பா அழுது நான் பார்த்திருக்கிறேன். முதல் நாள் பள்ளிக்கூடம் செல்லும் ஒரு சிறுவனைப் போல விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார். அதைப் பார்த்து அம்மா சிரித்த ஒரு நமுட்டுச் சிரிப்பு இன்னும் என் கண்களுக்குள் மழைக்கால சேறைப் போல அப்பியிருக்கிறது.
என்னால் இன்னும் கூட நம்ப முடியவில்லை. நேற்று இரவு கூட அப்பா, நூலகத்திலிருந்து எடுத்திருந்த புத்தகங்களை மாற்றிவிட்டு வேறு புத்தகங்கள் எடுத்துத் தருமாறு கூறினார். அப்பாவிற்கு எந்த புத்தகத்தையும் விலைக்கு வாங்கி படிக்கப் பிடிக்காது. நான் அதற்கு நேர் எதிர். திருப்பிக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் படிப்பது எனக்குப் பிடிக்காது. புத்தங்களை மாற்றிக் கொடுக்கும் முன்னரே தன்னுலகை மாற்றிக் கொண்டுவிட்டார். இப்படியொரு சாவு எத்தனை பேருக்கு வாய்க்கும்?
எனக்கு அழத் தோன்றவேயில்லை. அம்மாவும் அத்தையும் அழும் போது, அப்பா இல்லாத நேரத்தில் நான் தான் ஆண்பிள்ளை. நானும் அழுதால் இவர்களை யார் தேற்றுவது. நடக்க வேண்டிய காரியங்களை யார் பார்ப்பது.
வெளியிலிருந்து வந்த அந்தக் கதறல் இன்னும் என்னை ஏதேதோ செய்தது. குப்பையைக் கிளரும் கோழியைப் போல நினைவுகளைக் கொத்திக் கிளறியது.
அன்றைக்கு நல்ல மழை. நான் தொப்பலாக நனைந்து போயிருந்தேன். அப்பத்தாவின் குரல் தெரு முக்கு வரை கேட்டது. அம்மாவையோ, யாரையோ அப்பத்தா திட்டிக் கொண்டிருந்தாள். அப்பத்தாவிற்கு நல்ல கட்டைக் குரல். அதுவும் கோபம் வந்தால் சொல்லவே வேண்டாம். உள்ளே நுழைந்ததும் அக்கா டி.வி. வைக்கப்பட்டிருந்த மேசைக்கு அருகில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். அக்கா அழுவதைப் பார்க்க பாவமாக இருந்தது. காலேஜிலிருந்து வந்து உடை கூட அவள் மாற்றவில்லை என்பது தெரிந்தது. அன்றைய நாளின் அழுப்பிலும், அழுகையிலும் அவள் வாடி வதங்கிப் போயிருந்தாள்.
” எல்லாம் உங்கப்பனச் சொல்லனும்.. பொட்டப்பிள்ளைக்கு இம்பூட்டு தைரியம் ஆகாதுடி அடியே..” என்ற அப்பத்தாவின் திட்டு அப்பாவிற்கும் சேர்த்தே விழுந்து கொண்டிருந்தது. அப்பா அங்கு இல்லை. அம்மா எதையும் கண்டு கொள்ளாமல் சமையல் அறையில் இரவுச் சமையலைக் கவனித்துக் கொண்டிருந்தாள். தாளிதம் வாசனை பசியைக் கிளப்பிப் போனது. அப்பத்தாவை யாரும் எதற்கும் எதிர்த்துப் பேச முடியாது. அப்பா ஒருவரின் சொல்தான் அவளிடம் செல்லுபடியாகும் ஒரே பிரம்மாஸ்திரம். அது பிரம்மாஸ்திரமாகையால் அவரும் அதை அடிக்கடி பயன்படுத்தவதில்லை.
அப்பாவின் அப்பா, அத்தை பிறந்த சில தினங்களிலேயே காச நோயில் இறந்து போய்விட, ஒற்றை ஆளாய் இருந்து அப்பா, சித்தப்பா, அத்தை என அத்தனை பேரையும் கரை சேர்த்திருக்கிறாள் அந்தப் பெரிய மனுசி. அப்பன் இல்லாத பிள்ளைகள் தப்பாய்ப் போய்விடக் கூடாதே என்று மிகுந்த கண்டிப்புடன் வளர்த்திருக்கிறாள். அந்தக் கண்டிப்பின் விளைவோ என்னவோ அப்பா எங்களுக்கு மிகவும் செல்லம் கொடுத்தே வளர்த்தார். அத்தையும் சித்தப்பாவும் கூட அப்படியே. ஆனால் அப்பத்தா எங்களிடம் கூட அதே கண்டிப்பு.
” பள்ளிக்கொடத்தோட படிச்சது போதும் நல்ல வரனாப் பாருடான்னே.. இந்த வீட்டுல யாராச்சும் சொன்னதக் கேட்டாதானே. பெருசுல இருந்து சிறுசு வரைக்கும் எல்லாம் ஒரே மாதிரிதான் வந்து வாய்ச்சுருக்கு ” என்று என்னை முறைத்தாள். நான் நனைந்த சட்டையைக் கழற்றிவிட்டு தலையைத் துவட்டும் மும்மரத்தில் அவளைக் கண்டு கொள்ளாதவாறு சமையல் கட்டுக்குள் சென்றேன்.
” எல்லாம் படிக்கிற திமிரு.. கண்டதும் கடியதும் பாத்துக்கிட்டு நல்லா அவுத்துவிட்ட கழுத மாதிரி அலையுதுங்க .. ”
அப்பாவின் எக்சல் ஸ்டாண்டு போடும் சத்தம் கேட்டதும் அக்கா இன்னும் கொஞ்சம் சத்தமாக அழ ஆரம்பித்தாள்.
மழைக்காக எங்காவது ஒதுங்கி வந்திருப்பார் போல, நனையாமல் வந்திருந்தார். வந்ததும், ” என்னாச்சு… ரம்யா மேடம் ஏன் அழறாங்க ?” என்று செல்லமாய்த் தேற்றும் குரலில் கூறியவாறு அக்காவை நோக்கிச் சென்றார்.
” எல்லாம்.. நீ கொடுக்கிற எடந்தான்… நல்லா கொழுப்பேறிப் போயி அலையிறா ”
” சும்மா திட்டாதமா.. என்னாச்சுனு விஷயத்தைச் சொல்லு ” அப்பாவிற்கு அவர் முன்னால் அக்காவை யார் திட்டினாலும் பிடிக்காது.
” பொம்பளப் பிள்ளைங்களுக்கெல்லாம் அது அதுக வீட்டுல இருக்கிற வரைக்குந்தாண்டா இந்த சந்தோஷம், சுதந்திரம், அதிகாரம் எல்லாம்.. இன்னொரு வீட்டுக்குப் போயிட்டா வளைஞ்சு, குனிஞ்சு, நெளிஞ்சு சில நேரங்கள்ல ஒடிஞ்சே போயிடுறாங்க. இங்க இருக்கிற வரைக்கும் அவ கஷ்டப்படாம சந்தோஷமா இருக்கட்டுமடா ” – இது அக்காவோடு நான் சண்டை போடும் ஒவ்வொரு முறையும் எனக்குச் சொல்லப்படும் மந்திரம்.
” என்னக் கேட்காத.. உம்பொண்ணையே கேளு ”
” என்னமா ரம்யா.. என்னாச்சு.. ஏன் ஆத்தா திட்டுது ”
அக்காவிடமிருந்து அழுகையைத் தவிர வேரொன்றும் பதிலாக வரவில்லை.
” அவ எப்படிச் சொல்லுவா… சாயந்தரம் நான் வெத்திலை சீவல் வாங்க ரத்தினம் கடைக்குப் போறேன். அங்க இவ அந்த ரொட்டிக்கடைக்காரன் மவன் பரமசிவம் இல்ல.. அவன் கூட நின்னு தெருவுல சிரிச்சு பேசிக்கிட்டு இருக்கா.. கேட்டா கூடப் படிக்கிறவங்கறா…”
” எம்மா.. அவனும் நம்ம ரம்யா படிக்கிற காலேஜ்ல படிக்கிறான்மா.. ஏதாவது படிப்பு விசயமா பேசியிருப்பா மா.. விடு.. ”
” படிப்பு சம்பந்தமா வேற எதாவது பொட்டச்சி கூட பேச வேண்டியதானே… கழுத மாறி நடுச்சந்தில நின்னுக்கிட்டு ஏன் அவன் கூட சிரிச்சு பேசணும்..”
அப்பாவின் முகம் கொஞ்சம் கடுப்படைந்தது போலானது. ” எம்பொண்ணப் பத்தி எனக்குத் தெரியும்… நீ பேசாம உள்ள போ”
” ஆமாண்டா.. பெரிய பொல்லாத பொண்ணப் பெத்துட்ட.. நானும் தான் ஒரு பொண்ண பெத்து வளர்த்துருக்கிறேன்… இப்படியா.. இவளப்பத்தி உனக்கு சரியாத் தெரியலடா… இவ மினுக்கிற மினுக்கு இருக்கே.. நம்ம வீட்டுல நானும் இப்படி ஒரு பொண்ண பாத்ததில்லடா சாமி..”
” அம்மா.. நீ பேசுற கொஞ்சம் நிறுத்து.. ” என்றவாறே அப்பா, அக்காவின் கண்ணீரைத் துடைத்துவிட்டு, கையிலிருந்த துண்டால் அவள் முகத்தைத் துடைத்துவிட்டு, உச்சி முடியைக் கோதிவிட்டார்.
” அழாதடாமா.. போய் மூஞ்ச கழுவிட்டு வா.. சாப்பிடலாம். ”
” இப்படியே கொஞ்சிகிட்டு இரு.. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் அவ எவனையாவது இழுத்துக்கிட்டுதான் வரப் போறா…”
அக்கா இப்போது வெடித்து அழ ஆரம்பித்தாள். அப்பாவால் அதுக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ” எம்பொண்ண குத்தம் சொல்ற யாரும் இந்த வீட்டுல இருக்க வேண்டாம்.. மரியாதையா இந்த வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லு ” என்று என்னிடம் வந்து எரிமலையாய்ச் சீறினார். அப்படி அவர் கோபப்பட்டு நான் அதுவரை பார்த்தில்லை. அப்பத்தாவின் குரலுக்கு சற்றும் சளைத்ததல்ல அப்பாவின் குரல். அதுவும் கோபத்தில் பத்து ஆள் குரலாய் ஒலித்தது.
அந்த வார்த்தையைக் கேட்டு அப்பத்தா உறைந்து போயிருந்தாள் . ஒரு வார்த்தை பேசவில்லை. விறு விறுவென்று உள்ளறைக்குச் சென்றவள், கம்புப்பையில் நாலு சேலையைத் திணித்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் களிமண்ணாய் இறுகிப் போயிருந்தது. எனக்கு ஏதோ போலானது. அப்பா அப்படி சொல்லியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. அம்மா அடுப்படியிலிருந்து அப்பத்தாவை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.
” அவுக கோபத்துல ஏதோ கத்தீட்டாக.. இதுக்கு போயி.. அத்த.. ” அம்மாவின் குரல் கிணற்றில் போட்ட கல்லானது. ஆனால் அப்பத்தாவிடம் சிறு சலனம் கூட இல்லை. வேறு எதையோ அவள் தேடிக் கொண்டிருந்தாள். அப்பா அங்கு எதுவுமே நடக்காதவர் போல், சமையல்கட்டிலிருந்து சாப்பாடு போட்டுச் சாப்பிடத் தொடங்கினார். என்னையும் அக்காவையும் சாப்பிட வருமாறு அழைத்தார். நானும் அக்காவும் செய்வதறியாது திகைத்துப் போயிருந்தோம்.
அன்று கிளம்பிய அப்பத்தா அதன் பிறகு இந்த வீட்டு வாசல்படி ஏறவே இல்லை. பக்கத்தில் முகவூரில் அத்தை வீட்டில் போய் இருந்து கொண்டாள். அதன் பிறகு நானும், அக்காவும், அம்மாவும் எவ்வளவோ சமாதானம் கூறியும் வீட்டுக்கு வர மறுத்துவிட்டாள். அப்பாவும் அவளைக் கூப்பிடவேயில்லை அக்காள் கல்யாணம் வரும் வரை. ஆனால் அப்பத்தா அப்பாவின் முகத்திலேயே விழிக்கவில்லை. அக்காவின் கல்யாணத்திற்கும் வரவில்லை. அத்தனை நெஞ்சலுத்தக்காரி அவள்.
” எங்கம்மா பாவம் டா.. சின்ன வயசுலயே புருசன நோவுக்கு காவு கொடுத்துட்டு.. பிள்ளைங்களுக்காகவே உழைச்சு உருகினவடா அவ.. தறி நெஞ்சு நெஞ்சு அவ பாதமெல்லாம் காய்ச்சுப் போச்சுடா… இப்போக்கூட அடிக்கடி சொல்லுவாளே மூட்டு வலின்னு.. எல்லாம் எதனால.. தோளுக்கு மேல வளர்ந்து பெரியவனா போனபின்னும் படிச்சது போதும் தறியில எறங்குடானு அவ சொல்லியிருந்தா நான் இன்னைக்கு அறநிலையத் துறைல ஆப்பிசரா இருந்திருக்க மாட்டேன். அவ மனசு பூப்போலடா.. நான் தான் பாவி அவளத் திட்டிட்டேன்.. கஞ்சிக்கு வழியில்லனாலும் கூட பத்து பைசா கடன் கேட்காத தன்மானச்சிடா அவ.. அதான் ஒத்த சொல்லு பொறுக்கல.. அழுத்தக்காரி ” அக்காவின் கல்யாணத்திற்கு கூட வராததற்கு அனைவரும் அப்பத்தாளைத் திட்டிக் கொண்டிருக்கும் போது அப்பா கூறியவை இவை.
என் நினைவுகளைக் களைத்தவாறு இப்போதும் அதே ஓலம் வீட்டிற்கு வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தது. அந்தச் சத்தம் பாசத்தை வென்ற தன்மானத்தின் கூக்குரலாகவே கேட்டது.
- வெண்வெளியில் ஒரு திருவாலங்காடு(ALAN GUTH’S INFLATION THEORY)
- வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்!
- கதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…
- தமிழ் மகனின் வெட்டுப்புலி- திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 14
- அக்கறை/ரையை யாசிப்பவள்
- முடியாத் தொலைவு
- காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!
- இரவுதோறும் கரும்பாறை வளர்கிறது
- தான் (EGO)
- ‘மூங்கில் மூச்சு’ சுகாவின் “தாயார் சன்னதி” கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை
- ”மாறிப் போன மாரி”
- தாலாட்டு
- ராசிப் பிரசவங்கள்
- நேர்மையின் காத்திருப்பு
- விலகா நினைவு
- நம்பிக்கையெனும் கச்சாப்பொருள்
- தீபாவளி நினைவுகள்
- நிரந்தரமாய்…
- என் பாட்டி
- சிலர்
- மீண்டும் முத்தத்திலிருந்து
- நீவிய பாதை
- தமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க.
- புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 .
- இதம் தரும் இனிய வங்கக்கதைகள்
- பழமொழிப் பதிகம்
- நிலத்தடி நெருடல்கள்
- இயலாமை
- நெகட்டிவ்கள் சேமிக்கப்படும்
- உறக்கமற்ற இரவு
- நானும் நம்பிராஜனும்
- அணையும் விளக்கு
- மூளையும் நாவும்
- குளம்
- தோற்றுப் போனவர்களின் பாடல்
- இதுவும் அதுவும் உதுவும் -3
- சரவணனும் மீன் குஞ்சுகளும்
- சனநாயகம்:
- அழகிய உலகம் – ஜப்பானிய நாடோடிக்கதை
- சற்றே நீடிக்கட்டும் இந்த இடைவேளை
- பிறவிக்குணம்
- நன்றி சொல்லும் நேரம்…
- மூன்று தேங்காய்கள்
- பெருநதிப் பயணம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -3)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -5)
- இந்தியா – குறைந்த விலை பூகோளம்
- பஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்
- முன்னணியின் பின்னணிகள் – 12 சாமர்செட் மாம்
- நம்பிக்கை
- பூபேன் ஹசாரிகா –
- தொலைந்து கொண்டிருக்கும் அடையாளங்கள்