யாருக்கும் பணியாத சிறுவன்

This entry is part 18 of 37 in the series 27 நவம்பர் 2011

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

தென் அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் சமூகத்தினர், மழைக்கடவுளாக சேக்கை நம்பினார்கள். அவர் மேகங்களுக்கு அப்பால், வானத்தின் மத்தியில், மிகவும் உயர்ந்த இடத்தில் அழகான தோட்டத்தின் நடுவே அமைந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்.

அவர் வீட்டில் அதிகம் தங்க மாட்டார். சூரியன் எங்கெல்லாம் தன் முழுச்சக்தியைக் காட்டி வரண்டு போகச் செய்கிறாரோ, அங்கெல்லாம் சென்று, தன் மழைக்குடுவையைத் திறந்து, மழை பெய்யச் செய்து, செடி கொடி, விலங்குகள் மனிதர்களுக்கு இதம் அளிப்பார்.

அதனால் இரக்கம் கொண்டவர் என்று எண்ணிவிட வேண்டாம். பொழுது போகவில்லையென்றால், தன் தோல் பையிலிருக்கும் காற்றை வெளியே செல்ல விட்டு, பயங்கரப் புயலை உருவாக்கி, மக்களின் வீடுகளை பறக்கச் செய்து பயமுறுத்துவார்.

தன்னுடைய கோடரியை வீசி மின்னலை உருவாக்குவார். தன்னிடம் உள்ள பெரிய மேளத்தை வாசித்து, இடி இடிக்கச் செய்வார்.
எல்லோருக்கும் சேக் என்றால் பயம். எல்லாக் கதைகளையும் அறிந்து மக்களுக்குச் சொல்லும் குரங்கிற்கும் கூட, சேக் என்றால் பயம் தான்.

ஒரு நாள் சேக், தனக்கு பணி செய்ய ஒரு ஆள் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினார். உடனே கரணம் அடித்து காட்டுக்குள் நுழைந்தார். அங்கு குரங்கிடம் கதைக் கேட்டுக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனைக் கண்டார்.
சேக் வருவதை இருவரும் உணரவில்லை. அங்கு வந்த சேக் சிறுவனை அப்படியே அலாக்காகத் தூக்கிக் கொண்டு வானத்தில் இருக்கும் தன் வீட்டிற்குச் சென்றார்.

“இப்போதிருந்து நீ என்னுடைய சேவகன். நான் சொல்வதைச் செய்ய வேண்டும்” என்று கர்ஜித்தார்.

துரதுர்ஷ்டவசமாக, தான் கொண்டு வந்த சிறுவன் யாருக்கும் பணியாதவன் என்பதை சேக் அறிந்திருக்கவில்லை. அன்று காலையில் கூட, அவன் தந்தை அவனிடம், இரவு உணவிற்கு மீன் பிடிக்க சகோதரனுக்கு உதவி செய்யச் சொல்லியிருந்தார். அதைச் செய்யாமல் சிறுவன் குரங்கிடம் கதை கேட்க வந்திருந்தான்.

சேக் சிறுவனிடம் தன்னுடைய கடப்பாறையை மட்டும் உபயோகிக்கக் கூடாது என்று சொல்லியதைக் கேளாமல், சேக் வெளியே போயிருந்த நேரத்தில், வானத்தில் ஒரு குழி தோண்டத் தொடங்கினான். தோண்டித் தோண்டி வானத்தில் ஓட்டையே போட்டு விட்டான். கீழே பார்த்தபோது, தந்தையும் சகோதரனும் வீட்டிற்கு வெளியே வேலை செய்து கொண்டிருந்ததைப் பார்த்தான். “நான் இங்கிருக்கிறேன்” என்று கத்தினான். ஆனால் அவர்களுக்கு அவன் குரல் எட்டவில்லை.

வருத்தினான். வீட்டிற்குச் செல்ல விரும்பினான். நீண்ட கயிற்றினைத் தேடிக் கண்டு பிடித்தான். தோட்டத்தில் இருந்த மரத்தில் அந்தக் கயிற்றைக் கட்டினான். அதைப் பிடித்துக் கொண்டே வான ஓட்டைக்குள் இறங்கினான். ஆனால் கயிற்றின் நீளம் போதவில்லை. பூமியை எட்டவேயில்லை.

சிறுவன் வானத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு சேக் கோபம் கொண்டார். அவர் தன் பையைத் திறந்து காற்றினை வெளியே விட்டார்.

காற்று வீசியதும், சிறுவன் சுற்றிச் சுற்றி, ஆடி ஆடி மயங்கும் நிலைக்கு வந்தான். கயிற்றை மேலும் பிடிக்கும் சக்தியின்றி, சேக்கிடம் காற்றை நிறுத்துமாறு கெஞ்சினான். ஆனால் சேக் காற்றோடு கூட, மேளத்தை வாசித்து இடியை இடிக்கவும் செய்தார். சிறுவன் தவிப்பதைக் கண்டு மகிழ்ந்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு சேக்கிற்கு பசித்தது. அதனால் காற்று வீசுவதை நிறுத்தச் சொல்லிவிட்டு, சிறுவனை வானத்தின் வழியே மேலே இழுத்து பயங்கரமாகத் திட்டினார். அவனை சோளத்தைப் பறிக்கச் செய்து, காய்கறிகளை வெட்டச் செய்து, சமைக்கச் சொன்னார். தனக்கு உணவினை பரிமாறிச் செய்து, வயிறு நிறைய உண்டார். பிறகு பாத்திரங்களைக் கழுவி வைக்கச் சொன்னார். இரவு உணவு எதுவும் அவனுக்கு கொடுக்காமல் தண்டித்தார்.

அடுத்த நாள் சிறுவனை முற்றிய சோளத்தை எடுத்து வந்து மாவு செய்து ரொட்டி தயாரிக்கச் சொன்னார். அவன் இரண்டு பேருக்குத் தகுந்த படி ரொட்டிகளைச் செய்தான். உணவு முழுவதையும் சேக் சாப்பிட்டு, அன்றும் சிறுவனைப் பட்டினி போட்டார்.
சிறுவன் அழுது புலம்பும் அளவிற்கு தண்டனை கொடுத்தார். இனி தவறு செய்யவே மாட்டேன் என்று சிறுவன் வாக்குக் கொடுத்தான்.

அன்றிலிருந்து அவன் அமைதியான பணியாளனாக மாறினான். எஜமானருக்குப் பிடிக்கும் வகையில் நடந்து கொண்டான். வெகு தொலைவில் இருக்கும் தன் குடும்பத்தினரைப் பற்றி கூட எண்ணவில்லை.

ஒரு நாள் சேக் அவனிடம், “வீட்டைச் சுத்தம் செய். சுவையான உணவு சமைத்து வை. எல்லாம் சரியாக இருக்க வேண்டும். இரவு உணவிற்கு விருந்தாளிகளை அழைத்துள்ளேன்” என்றார்.

சொன்னபடியே சிறுவன் பணி செய்ய ஆரம்பித்தான். வீட்டின் தரைகளைச் சுத்தம் செய்து, துடைத்து பளிச்சென்று இருக்கச் செய்தான். உண்ணும் மேஜை நாற்காலிகளை பளபளவென்று துடைத்து வைத்தான். நல்ல உணவினை சமைத்ததான்.

சமைத்ததை அழகாக மேஜை மேல் வைத்தான். மேலும் அழகூட்ட மலர்களைப் பறித்து வர வெளியே சென்றான்.

அவன் வீடு திரும்பியபோது, அங்கிருந்ததைக் கண்டு அதிர்ந்தான். சுத்தமான மேஜையில் பல தவளைகள் இருந்தன. எல்லாப் பக்கமும் சேறும் சகதியுமாக இருந்தது.

“போங்க.. போங்க..” என்று கத்தித் தவளைகளை விரட்டியடித்தான். சேற்றுக் கறைகளை சுத்தம் செய்தான். ஆனால் அவனது வேகம் போதவில்லை.

சேக் வீட்டிற்கு வந்து, சிறுவன் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு வெகுண்டார். “இன்னும் என்ன தரையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறாய்.. சோம்பேறி!” என்று கத்தினார்.

“நான் நாள் முழுக்க சுத்தம் செய்து அழகாகத் தான் வைத்தேன்” என்று மிகுந்த வருத்தத்துடன் முதலில் சொன்னான்.

பிறகு சற்றே கோபத்துடன், “ஆனால் நிறைய தவளைகள் உள்ளே வந்து சேற்றைச் சிந்திவிட்டன. ஆனால் கவலைப்படாதீர்கள் எஜமானரே! அவற்றைத் துரத்திவிட்டேன்” என்று ஆரம்பித்து பணிவுடன் கூறி முடித்தான்.

“முட்டாள் முட்டாள்.. என் விருந்தாளிகளே அவர்கள் தான். மழை பெய்யும் போது, தவளைகள் பாடுவதை நீ கேட்டதில்லையா? அவர்களுக்கு நன்றி கூறவே இந்த விருந்து” என்றாரே பார்க்கலாம்.

சிறுவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மறுபடியும் முன்பை விடவும் கடுமையான தண்டனை அவனுக்குக் காத்திருந்தது.

அன்று சிறுவனால் தூங்கவே முடியவில்லை. எப்படி அங்கிருந்து தப்பிச் செல்வது என்று யோசித்தான். சேக் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது காற்றடைத்த தோல் பை, மழைக்குடவை, மின்னல் கோடரி, இடி மேளம் நான்கையும் திருடிக் கொண்டான்.

“உனக்கு இவை வேண்டுமானால் என்னைச் சரியாக நடத்த வேண்டும்” என்று மனதிற்குள் கருவிக்கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்து ஓடினான்.

இறுக்கக் கட்டியிருந்த தோல் பையின் கயிற்றை அவிழ்த்தான். உடனே, காற்று சர்ரென்று வெளியேறி வேகமாக வீசத் தொடங்கியது.

“திரும்பி வா” என்று சேக் குரல் போன்று கூப்பிட்டுப் பார்த்தான். அவரது குரலில் இருந்த கம்பீரம் இவனது குரலில் இல்லை.
காற்று அவனது கட்டளைக்குப் பணியாது இன்னும் வேகமாக வீசியது.

உடனே, கோடரியை அதன் மேல் வீசினான். “போய் காற்றைக் கூட்டி வா..” என்று கூறினான்.

கோடரியும் அவனுக்கு பணியவில்லை. கோடரி சென்ற வழியெல்லாம் மின்னல் வெட்டியது.

கோடரியைத் தொடர்ந்து சிறுவன் ஓடினான். ஓடிய வேகத்தில் குடுவையிலிந்த மழை சிந்தியது. வெள்ளமாக நீர் வழிந்தோட ஆரம்பித்தது. மழை நிற்கவேயில்லை. குடுவை எப்போதும் நிரம்பியே இருக்கக் கூடியது. சேக்கிற்கு மட்டுமே அதை எப்படி நிறுத்த வேண்டும் என்று தெரியும்.

காற்று, மழை, மின்னல் பணியாதது கண்டு, அவற்றை அச்சுறுத்த மேளத்தை பலம் கொண்ட மட்டும் அடித்தான். அது இடியினை ஏற்படுத்தியது.

இசையைக் கேட்டு காற்று சுழன்று வீசியது. மழை புயலெனப் பெய்த்தது. கோடரி மகிழ்ச்சியுடன் நடனம் ஆடி மின்னலை வெட்டியது.

சிறுவன் வெலவெலத்துப் போனான். வானத்தில் இங்குமங்கும் ஓடினான். செய்வதறியாது திகைத்தான். காற்றையும், மழையையும், இடியையும், மின்னலையும் கெஞ்சினான். அவை பணியவில்லை.

மிகவும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தபோது, தவறி கடலிலே விழுந்தான்.

சேக் எழுந்து பார்த்தபோது, தன்னுடைய நான்கு உபகரணங்களையும், சிறுவனையும் காணாதது கண்டு என்ன நடந்திருக்குமென்று ஊகித்தார். காற்று, மழை, இடி, மின்னலை முதலில் நிறுத்தச் செய்தார். சிறுவன் கடல் அலைகளின் நடுவே தத்தளித்துக்கொண்டிருந்தான்.

“நீ காப்பாற்றச் சொல்லி என்னைக் கேட்பாய். ஆனால் நான் அதைச் செய்ய மாட்டேன். எனக்கு இதுபோன்ற பணியாள் தேவையில்லை. நீ எனக்கு பணியாது திருடினாய். அதனால் நீ இருந்த இடத்திற்கே போ..!” என்று கட்டளையிட்டார்.

இதைச் சொன்னதும், காற்று பலமாக வீசிச் சிறுவனை அவன் வாழ்ந்த வீடு இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்றது. அங்கு முந்தைய நாள் பெய்த மழையில் வேரோடு சாய்ந்திருந்த மரங்கைள அவனது தாய், தந்தை, சகோதரன் சுத்தம் செய்து கொண்டிருந்ததைச் சிறுவன் கண்டான்.

சிறுவனைக் கண்டதும் அனைவரும் மகிழ்ந்தனர்.

“இவ்வளவு நாள் நீ எங்கே போனாய்? நேற்று இரவு என்ன புயல் தெரியுமா? என்னைப் போல நீயும் பயந்திருப்பாய். நம் வீட்டையே தூக்கிச் சென்றுவிடும் போலிருந்தது. அப்படி அடைமழை..” என்றான் சகோதரன்.

சகோதரன் செய்யாததைத் தான் செய்து காட்ட வேண்டும் என்ற விருப்பம் கொண்ட சிறுவன், “ நான் தான் அந்தப் பயங்கரப் புயலை வரச் செய்தேன். நானே செய்தேன்” என்றான் பெருமையாக.

அதை சகோதரன் சிறிதும் நம்பவில்லை.

ஆனால் கதை சொல்லும் குரங்கு நம்பியது. குரங்கு நடந்ததனைத்தையும் கண்டதால், கதையை எழுதியும் வைத்தது. அதனால் தான் நமக்கும் இப்போது அந்தக் கதை தெரிந்தது.

Series Navigationஇந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா ? அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா ? கட்டுரை : 2வாழவைக்கும்[ஆ!]ஓவியக்கலை! (ஓவியர் தர்மேஷ் குறித்த ஒரு சிறு அறிமுகம்)
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *