மனக் குப்பை

This entry is part 30 of 37 in the series 27 நவம்பர் 2011

யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமில்லை. எதைச் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். சொல்லப்படும் விஷயம் மட்டுமே கவனிக்கப்படவேண்டும். சொல்லுகிற நபரல்ல. நல்லது எங்கிருந்து வந்தாலும், எவரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும். நியாயம் நியாயம்தானே? யார் சொன்னால் என்ன? எவர் வாயிலிருந்து வந்தால் என்ன? அவன் உயர்ந்தவன், தாழ்ந்தவன், மேல், கீழ் என்ற பிரிவினைப் பார்வையெல்லாம் எதற்கு? இப்படியே ஒவ்வொன்றையும் இடக்கு மடக்காகப் பார்த்துப் பார்த்துத்தானே எல்லாமும் கெட்டுச் சீரழிந்து பாழாய்ப் போய்க் கிடக்கிறது? எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை… பிறப்பொக்கும் எல்லாhhhh உயிர்க்கும்… -என்று சொல்லி வைத்ததெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காயா? வெறுமே படிப்பதற்கும், ரசிப்பதற்கும், வாய் கிழியப் பேசுவதற்கும் மட்டும்தானா? இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடவா? நடைமுறைக்கு ஒவ்வாததா? மனிதன் வளர வளர அவனோடு சேர்ந்து அறிவும் முதிர்ச்சியடைய வேண்டாமா? பக்குவம் பெற வேண்டாமா? இந்த அறிவு முதிர்ச்சியும், அனுபவ முதிர்ச்சியும் சேர்ந்து அவனை ஒரு சிறந்த விவேகியாக்க வேண்டாமா? வாழ்க்கை ப+ராவும் இப்படி எல்லாவற்றையும் ஏறுக்குமாறாகப் பார்த்துக் கொண்டும், பேசிக் கொண்டும் வெட்டியாய்த் திரிந்தால் போதுமா? ஏன் இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்க வேண்டும்? சாரதாவோடு இவற்றையெல்லாம் பகிர்ந்து கொள்வதில் ஒரு சுவாரஸ்யம். எல்லாவற்றிற்கும் அவளுக்கென்று ஒரு கருத்து உண்டு. கணவன் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அப்படியே எதிர்க்க வேண்டும் என்ற கண் மூடித்தனமெல்லாம் இல்லை. தனக்குத் தோன்றாத பல நல்ல கருத்துக்கள் அவளிடமிருந்து கிடைத்திருக்கின்றன அவனுக்கு. அவை உடனுக்குடன் தோன்றியவை அல்ல. அவைபற்றியெல்லாம் ஏற்கனவே தன்னிடம் ஒரு கருத்து உண்டு என்பதாகத்தான் வெளிப்படும். நல்ல வாசிப்புப் பழக்கம் உண்டு அவளிடம். அந்த ஆர்வத்திற்காகவே நிறையப் புத்தகங்களை வாங்கிப் போட்டான் அவன். தினசரியை முற்று முதலாக அலசியெடுத்து விடுவாள். இவையெல்லாம் அவளின் சிந்தனைத் தளத்தை விரிவுபடுத்தியிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். படிப்பவர்களெல்லாம் எத்தனை பேர் சிந்திக்கிறார்கள்? சாரதாவின் கருத்துக்கள் அத்தனை ஆணித்தரமானவை. ……………2……………………. – 2 – நம்மள வெறுக்கிறாங்களா அல்லது நம்மளோட நடவடிக்கைகளை வெறுக்கிறாங்களான்னு பகுத்துப் பார்க்கத் தெரியணும்…கண்ணை மூடிட்டுக் குற்றம் சொல்லக் கூடாது. நாமதான் அவுங்களைக் குற்றம் சொல்றோம். அவுங்க தெளிவாத்தான் இருக்காங்க. சொல்லப்போனா நம்மளோட நடவடிக்கைகளை நாமளேல்ல வெறுக்கணும். தப்புன்னு தெரியுது…தெரிஞ்சுமே அதைத் தொடர்ந்து செய்திட்டிருக்கிறதும், செய்றவங்களை ரசிக்கிறதும் அல்லது எதிர்ப்புத் தெரிவிக்காம மௌனம் காக்கிறதுமே தப்புதானே…? தப்புன்னு தெரியற ஒன்றை, மனசு உணர்ந்த ஒன்றை, அடுத்தவங்க சுட்டிக் காட்டித்தான் ஒதுக்கணுமா? அது நமக்கே தெரிய வேண்டாமா? அதுக்காக மனசு வெட்கப்படவேண்டாமா? நீ சொல்றதெல்லாம் சரிதான் சாரதா…ஒத்துக்கிறேன்…உன்னால சுட்டிக் காட்டப்படுற அந்த நடவடிக்கைகள்; இன்னைக்கு நம்ம கிட்ட மட்டும்தான் இருக்குன்னு நினைக்கிறியா? நாமெல்லாம் எவ்வளவோ திருந்திட்டோம். காலத்துக்கேத்த மாதிரி மாறிட்டோம். சொல்றதுல நியாயம் இருக்குங்கிறதை உணர்ந்து குறைச்சிக்கிட்டோம், அல்லது விட்டு ஒதுங்;கிட்டோம். ஆனா இந்த மாதிரி நடவடிக்கைகள் இன்னைக்குப் பரவலா, தீவிரமா மற்றவங்கள்ட்டத்தான் நிறைஞ்சு இருக்கு…அதையும் எல்லாரும் புரிஞ்சிக்கணும்… -ஆக காலந்தோறும் இது தொடரத்தான் செய்யுதுங்கிறதுதான் உண்மை. இப்படிச் சிலவிதமான வாதப் பிரதிவாதங்கள் தெளிவாகவும், மறைபொருளாகவும், அவர்களிடையே நேர்ந்து விடுவதுதான். ஆனால் எல்லாவற்றிலும் அவளிடம் ஒரு முற்போக்கான சிந்தனை படர்ந்திருப்பதை அவன் உணரத் தவறியதேயில்லை. தன்னைவிட அவளின் தீவிரம் பாராட்டப் பட வேண்டியதுதான். இப்பொழுதும் அதையேதான் வலியுறுத்துகிறாள் அவள். நான் கவனிச்சிருந்தேன்னா சுள்ளுன்னு உரைக்கிறமாதிரி பதில் சொல்லியிருப்பேன்…உங்களுக்குப் பேசத் தெரியல்லே.. நேரடித் தாக்குதல். சாரதா எப்பொழுதுமே அப்படித்தான். நாகராஜன் தனக்குள் சிரித்துக்கொண்டான். அது சரி, மனைவிக்கு இந்த உரிமையெல்லாம் இல்லாவிட்டால் எப்படி? தெரியலேன்னு இல்லை சாரதா…இப்போ பிரச்னை அவரோட பேச்சு முறையைப் பற்றி இல்லை…அவர் சொன்ன விஷயத்தைப் பத்தித்தான்… அதத்தாங்க நானும் சொல்றேன்…நம்ம வீட்டு ஆளைச் சொல்றதுக்கு அவர் யாரு? அதைக் கேட்க வேண்டாமா? – சாரதாவின் குரலில் ஒரு ஆக்ரோஷம். ஆண்டி நம்ப வீட்டு வேலைக்காரர். அவரை நாமளே ஒண்ணும் சொல்றதில்லை. இவர் யார் விரட்டறதுக்கு? – பக்கத்து வீட்டு ஆள் இருந்தால் நிச்சயம் அவருக்கு உஷ்ணம் தாங்காது. இந்தப் பக்கம் குப்பை போடாதீங்கன்னு சொல்லியிருக்காரு. அது தப்பா? அவுரு ரெகுலரா வந்து, இடத்தைக் கூட்டிச் சுத்தம் செய்றவரு…நம்ப வீட்டைச் சுற்றிலும் அசிங்கம் பண்ணக் கூடாதுன்னு சொல்றதுக்கு அவுருக்கு உரிமையிருக்கு. நாம அந்த உரிமையை அவுருக்குக் கொடுத்திருக்கோம்…நம்ப சார்பா பேசறார் அவர். பக்கத்து வீட்டுக்காரங்க அவுங்க குப்பையை அவுங்க காம்பவுண்டுக்குட்பட்ட பகுதில போட்டுக்க வேண்டிதானே? ஏன் அடுத்த வீட்டுப் பக்கம் எறியணும்? சிகரெட் துண்டு, காய்கறிச் சக்கை, பழத் தோலு, முட்டை ஓடு, பேப்பரு, சாணிச் சுருணை, தலைமுடிச் சுருட்டை, அது இதுன்னு இஷ்டத்துக்கு விட்டெறிஞ்சா அதை ஏன் சொல்லக் கூடாது? வழக்கமாக் கூட்டி அள்ற அவுரு, இதைச் சொல்றதுல என்ன தப்புங்கிறேன்? அதுக்காக அவரைத் தரமில்லாமத் திட்டுறதா? நம்ப ஆண்டி பேசாம வந்திட்டாருங்கிறதுக்காக நாம சும்மா இருக்க முடியாதுங்க…! ரெண்டு வார்த்தை கேட்டாத்தான் அடுத்தாப்ல நாக்கு மேல பல்லுப்போட்டு இப்டிப் பேச மாட்டாங்க…ஆண்டி பேசாம வந்தது அவரோட நல்ல குணம். அது நமக்காக அவர் காத்த அமைதி… அது சரி…அப்படி அவர் என்னதான் சொன்னாராம்? .ஏதாச்சும் ஜாதியச் சொல்லித் திட்டினாராமா? அப்டித்தான்னு வச்சிக்குங்களேன்…அதை நாம கேட்க வேண்டாமா? …………3………………. – 3 – வச்சிக்கெல்லாம் முடியாது…உள்ளதைச் சொல்லு… உள்ளதைச் சொல்லுன்னா? அவரைத்தான் சொல்லச் சொல்லணும். ..அவரே கண் கலங்கிட்டாரு சொல்றபோது…இத வேற திருப்பிக் கேட்கச் சொல்றீங்களாக்கும்… என்னது! அழுதுட்டாரா? – இவன் அழுத்தமாகக் கேட்டான். ஆமாங்கிறேன்…அதனாலதான் நான் இத்தனை வேகமாச் சொல்றேன் அவள் வேகத்துக்கு இவனால் ஈடுகொடுக்க முடியும் என்று தோன்றவில்லை. தானும் பதிலுக்கு ஆத்திரப்பட்டால் விஷயம் இன்னுமல்லவா மோசமடையும்…உடனே போய் மல்லுக்கு நிற்க முடியுமா? நிதானம் தேவை… – நினைத்துக் கொண்டான். வாசலில் ஏதோ பாட்டுச் சத்தம். சிப்ளாக் கட்டையும், கால் சலங்கையும் சேர்ந்து ஒலித்தன. இனம் புரியாத கோரஸ் குரல்கள். சத்தம் நெருங்கி வந்தது. புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த இவன் எழுந்து சென்றான். சாரதா அங்கே நின்றிருந்தாள். அவள் கண்களில் ஏக ஒளி. முகத்தில் சந்தோஷம். வாசல் கேட்டை அடைத்து நின்ற அங்கே ராமர், சீதை, அனுமன், பாலகன் கிருஷ்ணன் என நால்வர். முதல் மூவர் சரி…கிருஷ்ணன் எங்கேயிருந்து வந்தார் இங்கே? அவர்தானே ராமாவதாரம்? அரிசி கொண்டுவந்து போட்டாள் சாரதா. ஏய்…ஏய்…கிலோ நாற்பது ரூபாடீ…கட்டுபடியாகாதாக்கும்.. கடவுளர்களுக்குத் தமிழ் தெரியும் என்று தோன்றவில்லை. சாரதா பதிலே சொல்லாமல் உள்ளே போனாள். சற்று நேரத்தில் அவர்கள் நகர்ந்ததுமே சாரதா உள்ளேயிருந்த மேனிக்கே கேட்டாள். காசு போட்டீங்களா…? ஆமாம்… நல்லதாப் போச்சு…புண்ணியமுண்டு… புண்ணியத்துக்காகப் போடலை நா.. பின்னே எதுக்காம்? அரிதாரம் ப+சிட்டு, கலர் கலரா இந்த வேகாத வெயில்ல, வர்ண வியர்வை ஒழுக அலையறாங்களே…அதப்பார்க்கப் பரிதாபமா இருந்தது…அதனால போட்டேன்… ரொம்ப இரக்கம் பொத்துட்டு வந்திருச்சாக்கும் அய்யாவுக்கு…. மக்களோட இறை நம்பிக்கைல அவுங்களுக்கிருக்கிற நம்பிக்கையைப் பாரு… சுவாமி வேஷத்துல வந்தாலும், சினிமாவுல வந்த பக்திப் பாடல்களைப் பாடாம, ஸ்லோகங்களைச் சொல்றா பாருங்கோ…அதுக்காகவாவது நாம ஏதாச்சும் போடணும்…வாய் நல்லதை முணுமுணுக்கிறதே…! அதுதான் இந்த மக்களோட பக்தி மேலே வச்சிருக்கிற நம்பிக்கை…ஆனா இன்னொரு சின்ன சந்தேகம் இருக்கு …இடைல இடைல பாட்டு வேறே வருது…அது ஆந்திரா சைடு சினிமாப் பாட்டா இருந்தா? நமக்கென்ன தெரியும்? இவங்களே அந்த ஆளுகதானே…? ———– 4……………………….. – 4 – உங்களுக்குக் குசும்பு ஜாஸ்தி…போய் வேண்ணா கேட்டுட்டு வாங்கோ… என்னத்தைக் கேட்குறது…பாஷை தெரியாததுதானே ரெண்டு பேருக்கும் இடைல இருக்கிற பலமே….! அதை உடைக்கச் சொல்றியா? பாவம், அவுங்களே வயித்துப்பாட்டுக்கு அலையறவுங்க…அவுங்க நம்பிக்கையைக் கெடுப்பானேன்…? பேச்சு அத்தோடு முடிந்தது. ஒரே யோசனையாய் இருந்தது எனக்கு. தேவையில்லாமல் ஒரு பிரச்னை உருவாகிறதோ? எண்ணத் தலைப்பட்டேன். அவர் என்ன கேட்டார் என்று தெரியவில்லை. உண்மையிலேயே ஆண்டியைப் பட்டவர்த்தனமாகச் சொல்லித் திட்டினாரா? அல்லது மறைபொருளாக ஏதேனும் சொல்லி, அதை ஆண்டி அப்படிப் புரிந்து கொண்டாரா? இதென்ன வேண்டாத வம்பு என்றிருந்தது எனக்கு. எந்தமாதிரியெல்லாம் சண்டைகள் உருவாகும் இந்தக் காலத்தில் என்பதை ஊகிக்க முடியவில்லையே? ஆனால் ஒன்று. எல்லாவற்றிற்கும் மனிதர்களின் வக்கிர குணங்கள்தான் காரணமாகின்றன. ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வௌ;வேறு மதத்தை, பிரிவைச் சேர்ந்தவர்கள் குடியிருக்க, எல்லோரும் ஒற்றுமையாகவும், அன்புடனும், சகோதரத்துவத்துடனும் இருந்த காலமெல்லாம் போயிற்றோ? அவை இறந்த காலங்களா? எங்கிருந்து வந்தது இந்தமாதிரிப் பிரிவினைப் பார்வையும், மதம் சார்ந்த பார்வையும்? அவரவர் மதத்தை, பிரிவை, மற்றவர் மதிப்பதும், அவரவர் கடவுள்களைத் தங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் கும்பிடுவதுதானே பண்பாடு? வழி வழியாய் வந்த கலாச்சாரம் என்றும் சொல்லலாமே? இந்தப் பண்பாட்டுத்தளம் விரிவடையாமல் ஏன் விரிசலடைந்தது? ஒரே மதத்தினராயினும் நான் மேல், நீ கீழ் என்ற வேறுபாடு எங்கிருந்து முளைத்தது? ஏன் இன்னும் அழிந்துபடாமல் கிளைத்துக் கொண்டிருக்கிறது? சாமியே பிரத்யட்சமாகத் தோன்றி, ஏனய்யா இப்படியெல்லாம் பிரிந்துபட்டுக் கிடக்கிறீர்கள்? என்று கேட்டுவிடலாம் போலிருக்கிறதே! அப்படியே கேட்டாலும் அதெல்லாம் உங்களுக்கொண்ணும் தெரியாது…நீங்க பேசாமப் போங்க…நாங்க பார்த்துக்கிடுறோம் எங்க பிரச்னையை…. என்று சொல்லி அடக்கி அனுப்பி விடுவார்;களோ? பொழுது புலர்ந்த வேளையில் அந்தச் சத்தம்தான் அவனைத் திடீரென்று உசுப்பியது. பக்கத்து வீட்டில் ஏதோ வழிபாடு. ப்ளேயர் அலறிக் கொண்டிருந்தது. பக்கத்து வீடு, எதிர்வீடு என்று ஏழெட்டு வீடுகளின் காதுகளைத் துளைப்பது போல் ஒரே கோரஸ் குரல்கள். சாரதா விடுவிடுவென்று வந்து பட்பட்டென்று ஜன்னல் கதவுகளை மூடினாள். மெதுவா…மெதுவா…ஏனிப்படி முகத்திலறைஞ்ச மாதிரி சாத்தறே? அவுங்க நம்ம மென்னியைப் பிடிக்கிறாங்களே, அதுக்காகத்தான்.. – சூடான எதிர்வினை. இரைச்சல் குறைந்தபாடில்லை. இறைவனை அமைதி வழியிலும், ஆழ்ந்த தியானத்தின் மூலமாக மட்டுமே உணர முடியும் – எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. …..5………… – 5 – ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி. ஆனால் அவை மூலம் மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த என்ன உரிமை? இறைவனைத் தேடுபவர்கள், அவனை நாடுபவர்கள், சிறந்த பண்பாட்டு அடையாளங்களைத் தானே பின்பற்ற வேண்டும்? அவற்றை ஆதாரமாகக் கொண்டவைகளாகத்தானே அவையும் இருக்க வேண்டும்? அல்லாத வழிமுறைகள் எப்படிச் சிறந்தவையாக அமையும்? மனிதர்கள் அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட நடைமுறைகளுக்கு ஆதாரமும் அவைதானே? ஏதோவொரு விதத்தில் இந்த மதங்களும் அவற்றிற்கான சம்பிரதாயங்களும், நடைமுறைகளும் இந்த மனிதர்களை வௌ;வேறு வழிகளில் தொந்தரவு செய்துகொண்டும், பாடாய்ப் படுத்திக் கொண்டும்தான் இருக்கின்றன. வாழ்க்கை வசதிகள் பெருகிக் கிடப்பவன் அதை பக்தியாகவும், கடமையாகவும், சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றிக் கொள்கிறான். திருப்தி என்ற ஒன்றை அடையாமல் இருப்பதான மனநிலை கொண்டவனும், வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருப்பவனும், ஏதேனும் ஒரு வழி பிறக்காதா, விடிந்து விடாதா என்ற பலவீனப்பட்ட போக்கில் பக்தியைப் போற்றுகிறான். அன்றாட ஜீவிதத்திற்கே அல்லாடுபவனுக்கு இது எந்த வகையில் சாத்தியம்? அவனுக்கு அவனின் பிழைப்புதானே கடவுள்? பொழுது விடிந்ததும் காலை வீசிப்போட்டு ஓடினால்தானே அன்றைய பாடு ஓடி அடையும்? இங்கே இந்த மதமும், மாச்சரியங்களும் அவனை எப்படித் தூக்கி நிறுத்தும்? இப்படி ஒவ்வொரு சிறு சிறு செயல்பாடுகளிலும் பலரும் முரண்பட்டு நிற்பதற்கே, இந்தக் காரணிகள் காரணமாக அமைந்து விட்டனவோ? அவனவன் பிழைப்பைப் பார்த்துட்டுப் பேசாமல் போங்கய்யா…ஏன்யா இப்படி வெட்டித் தனமா பிணக்கிட்டும், முறுக்கிட்டும் அலையுறீங்க…? ஓங்கிக் குரலெடுத்து இந்த உலகத்துக்கே கேட்பதுபோல் கத்திப் பீறிட வேண்டும்போல் இருந்தது இவனுக்கு. மனிதத்துவம் என்பது இப்படியான பல்வேறு காரணிகளால் அழிந்து பட்டுக் கொண்டிருக்கிறதா? அல்லது அழிந்து விட்டதா? சாரதாவைப் பொறுத்தவரை அதைத்தான் அவள் சுட்டிக் காட்டியிருக்கிறாள். குப்பை கூட்டி அள்ளும் ஆளாய் இருந்தால் என்ன? அவரும் மனிதன்தானே? அதற்கான மரியாதையோடுதானே அவரை நடத்தியாக வேண்டும். அதை விடுத்து அவரைத் தரம் தாழ்த்திப் பேசுவதா? இதுதானே அவள் கேள்வி? இந்தப் பக்கம் குப்பையைப் போடாதீங்கய்யா…இடம் அசிங்கமாகுதுல்ல… ஆண்டியின் தன்னிலை வாக்கு மூலம் இது. அவர் குணத்திற்கு அதற்குமேல் நிச்சயம் ஒரு வார்த்தை பேசியிருக்கப் போவதில்லை. கற்ப+ரம் அடித்துச் சத்தியம் செய்ய முடியும் என்னால். அடுத்தாற்போல் ஆண்டி வேலைக்கு வருவாரா? இப்போதே அந்தச் சந்தேகம் வந்து வாட்ட ஆரம்பித்து விட்டது என்னை. கூட்டிய இடம் சுத்தமாகி விட்டது. ஆனால் இந்த மனிதர்களின் மனக் குப்பையை என்று, யார், எப்படிச் சுத்தமாக்கப் போகிறார்கள்? +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Series Navigationகாலெட் ஹொசைனியின் இரண்டு நாவல்கள்ஓய்வு தந்த ஆய்வு
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *